Ancient literature in the context of Tamil literature|Dr P.Gokulnath

Abstract
      In traditional, ancient stories, mythological literature was composed with a rich poetic structure, incorporating truths essential to society. Myths serve as a powerful means to convey that upholding righteousness in human life is the foremost principle. The incorporation of theological elements as the central theme can be said to have contributed to the enhancement of religious devotion among the people. Myths greatly helped in the flourishing of divinity, equality, and humanism. The mythological literature, composed with profound themes, has emerged in three categories: the glory of God, the sacred places where God resides, and the history of devotees. Among these three categories, myths about the sacred places where God graciously resides were the ones that arose in greater numbers in later periods. The local legends that arose in connection with sacred sites describe the glories of the deity, the place, and the sacred waters, as well as worship philosophies, moral principles, ways for beings to attain spiritual elevation, grammatical richness, the supremacy of the Supreme Being, and extraordinary valor. This article aims to examine and explain the initial stages and developmental trends of these ancient literary works, which are rich in literary merit, inspire a sense of morality in people’s lives, and guide them towards righteousness.

Key Words : Myths – Puranas – Deity – Sacred site – Holy water – Virtues – Fundamental principles – Tradition – Upanishad – Scripture – Group – Logic. 
 

“தமிழிலக்கியப் பரப்பில் தொன்ம இலக்கியங்கள்”

ஆய்வுச் சுருக்கம் 
       மரபு வழிவந்த பழமையான கதைகளில் சமூகத்திற்குத் தேவையான மெய்மைகளைப் புகுத்தி செறிவான யாப்புக் கட்டமைப்போடு தொன்ம இலக்கியங்கள் பாடப்பட்டன. மானுட வாழ்வில் அறத்தைப் பேணுவதே தலையாய நெறி என்பதை உணர்த்திட தொன்மங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இறையியல் சார்ந்த கூறுகளைக் கருவாக அமைத்தமை மக்களிடையே பக்தியுணர்வு மேம்படக் காரணமாகவும் அமைந்தது எனலாம். இறையாண்மை, சமத்துவம், மானுடப்பண்பு எனும் மூன்றும் சிறக்க தொன்மங்கள் பெரிதும் உதவின. உறுதிப் பொருள்கள் அமையப் பாடப் பெற்ற தொன்ம இலக்கியங்கள் இறைமாண்பு, இறைவன் வீற்றிருக்கும் தலங்கள், அடியார் வரலாறு என்ற மூவகைப் பகுப்பில் தோன்றியுள்ளன. இம்மூ வகைப் பகுப்பினுள் இறைவன் அருளார்ந்து வீற்றிருக்கும் தலங்கள் மீதான தொன்மங்களே பிற்காலத்தில் அதிக அளவில் எழுந்தன. தலம் சார்ந்து எழுந்த தலபுராணங்களில் மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்புகள் வழிபாட்டுத் தத்துவங்கள், அறநெறிகள், உயிர்கள் மேன்மை அடைவதற்கு உண்டான வழிவகைகள், இலக்கணச் செறிவு, பரம்பொருளின் பரத்துவம், செயற்கரிய பராக்கிரமம் முதலியவை கூறப்பட்டுள்ளன. அத்தகைய இலக்கியச் செழுமையுடன் திகழ்ந்து மக்களின் வாழ்வில் ஒழுக்கவுணர்வைத் தூண்டுவதோடு அறநெறிக்கு இட்டுச் செல்லும் இத்தொன்ம இலக்கியங்களின் தொடக்க நிலை வளர்ச்சிப் போக்கு முதலியவற்றை ஆராய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. 

திறவுச் சொற்கள் :
தொன்மங்கள் – புராணம் – மூர்த்தி – தலம் – தீர்த்தம் – அறங்கள் – உறுதிப்பொருள்கள் – மரபு – உபநிடதம் – சாத்திரம் – குழு – தருக்கம்.

தொன்மம் விளக்கம் 
     தொன்மம் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இணையாக ஆங்கிலத்தில் ’மித்’ (Myth) என்ற சொல் வழங்கப்படுகிறது. இச்சொல் தொடக்க காலத்தில் செய்தி, மொழி, உபதேசம் எனும் பல பொருள்களில் வழங்கி வந்தவுடன் நிகழ்ச்சி, வரலாறு என்ற பொருள்களையும் அது தந்தது. அரிஸ்டாட்டில் தமது கவிதையியலில், மிதாசு (Mythos) என்ற சொல்லை, ’கதைக்கரு’ என்னும் பொருளில் அதற்கு எதிர்ப்பதமாக லோகோசு (Logos) என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார். இப்பொழுது தொன்மம் எனும் சொல் பல துறைகளில் வேறுபட்ட பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. மனிதவியல், உளவியல், மத ஒப்பியல், சமூகவியல், இலக்கியம், நாட்டுப்புறக்கலை, நுண்கலைகள் ஆகிய துறைகள் எல்லாவற்றிலும் தொன்மம் பேசப்படுகின்றன. (பேரா.க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு – பக் .5) என்பர் அறிஞர்.   ”தொன்மம் எனில் அது மிகப்பழைய மரபு வழி வந்த கதை; இக்கதையின் ஆசிரியர் யார் என்பதை அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல இயலாது என்றும்; இயற்கை இயைந்த ஆற்றல்களுக்கு உட்பட்டு இவ்வுலகம் ஏன் இங்கனம் இயங்குகிறது; இந்நிலவுலகில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஏன் இவ்வாறு நடக்கின்றன என்பதை இச்சொல் விளக்குகின்றது” (கதிர், மகாதேவன், தொன்மம் பக்.34-35) என்பது தொன்மம் குறித்து ஆராய்ந்த அறிஞரின் கருத்தாகும். 

தொன்மத்திற்கு அகராதிகள் தரும் விளக்கம் 
      தொன்மம் என்பதன் வேர்ச்சொல் தொன்மை. இச்சொல் பழமை எனும் பொருளை தருகிறது. இதற்குப் பழமை, பாவின் எண்வகை வனப்பின் ஒன்று (கழகத்தமிழகராதி, பக்.581) என்றும்; பழைமைத்தாய் நிகழ்ந்த பெற்றி உரைக்கப்படுவது (அபிதான சிந்தாமணி, பக்.902) என்றும்; பழங்கதை, புராணம் ( தமிழ் – தமிழ் அகரமுதலி , பக். 627) என்றும்; பழமை, உரைவிரவி வரப் பழைய கதைப் பொருளாகச் செய்யப்படுவது ( செந்தமிழ் அகராதி, பக்.391) என்றும் அகராதிகள் பொருள் விளக்கம் தந்துள்ளன. மேற்கண்ட விளக்கங்கள் தொன்மம் பழங்கதை என்பதையும் பழங்காலம் தொட்டு வழங்கும் புகழ்பெற்ற கதைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும் இலக்கியங்கள் என்பதையும் அறிய முடிகிறது.  

தொன்மமும் புராணமும் 
       புராணம் என்ற பெயராலும் தொன்மம் வழங்கப்படுகிறது. புராணம் என்பது வடசொல். இது ’புரா – நவ’ என்ற இரு அடிச்சொற்களில் இருந்து தோன்றியது. இதன் பொருள் பழமைக்கும் பழமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய்த் திகழ்வது என்பதாகும். ”நம்ப முடியாத கூறுகள் அடங்கிய பழங்கதைகளின் தொகுதியே புராண மரபுக் கதைகள். நடப்பியல் அற்புத நவிற்சியாக மாறி இயற்கையிகந்தக் கூறுகளைப் பெற்றுச் சமய நம்பிக்கையில் கால்கொண்டு சடங்குமுறைகளில் வெளிப்பட்டுத் தொன்மை வடிவெடுக்கிறது” (வையை மலர், மலர்-3, பக்.412) என்ற கருத்தின் வாயிலாகத் தொன்மையும் புராணமும் சொல்லடிப்படையில் வேறுபட்டாலும் பொருளால் ஒன்றாவது புலனாகிறது.

தொல்காப்பியம் கூறும் தொன்மம் 
       செய்யுளுக்குரிய எண்வகை வனப்புகளுள் ஒன்றாகத் தொன்மை என்பதனை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 

”தொன்மை தானே சொல்லுங் காலை
உரையோடு புணர்ந்த பழமை மேற்றே”. ( தொல்.பொ.நூ.எ.538) 
         
          என்ற நூற்பாவின் மூலமாக தொன்மையாவது உரையோடு பொருந்தி வந்த பழமையாகிய பொருள் மேல் வருவது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்மொழியில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தொன்மக்கதைகள் வழங்கி வந்ததையும் அவை இலக்கியங்களாகப் படைக்கப்பட்டிருந்ததையும் உணரமுடிகிறது. 

இலக்கியமும் துன்பமும் 
    இலக்கியத்தில் தொன்மங்கள் பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளன. தொன்மங்கள் இலக்கியத்திற்குப் பாடுபொருளாகவும் கருத்து விளக்க உத்தி முறைகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளன. சங்கம், அறம், பக்தி, காப்பியம், சிற்றிலக்கியம், புதுக்கவிதை என எவ்வகை இலக்கியமாக இருப்பினும் அவற்றுள் தொன்மத்தின் பங்களிப்பைக் காணமுடிகிறது. புராணக்கதைகளில் உள்ள பெயர்களைக் குறியீடுகள் போல இக்கால கவிஞர்களும் தங்கள் படைப்புகளில் கையாண்டு வருகின்றனர். 

புராணம் பொருள் விளக்கம் 
      புராணம் என்பது வடமொழிச் சொல். இச்சொல்லிற்குப் பழமை, பழங்கதை, வியாசரால் சொல்லப்பட்ட புனித நூல்கள் எனும் பொருளில் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.  ( தமிழ் லெக்சிகன்- தொகுதி-5, பக். 2772) சதுரகராதி ’புராணம்’ என்ற சொல்லுக்கு ’கதை, காந்தம் முதலிய புராண பழமை’ என்று விளக்கம் தருகின்றது.  ( வீரமாமுனிவர் – சதுரகராதி, பக்.161) என்பது புராணம் பற்றி அகராதிகள் தரும் விளக்கமாகும். 

புராணத்தின் பழமை 
      அதர்வண வேதகாலத்திலேயே புராண நூல்கள் சிறந்த இலக்கியங்களாக விளங்கியது. புராணம் என்னும் சொல் உபநிடதங்களிலும் சாத்திரங்களிலும் காணப்படுகின்றன. மகாபாரதத்தில் புராண செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது புராணத்தின் பழமை நன்கு புலனாகிறது. 

வேத காலத்தில் புராணம் 
    புராணம் நான்கு வேதங்களுக்கு அடுத்த நிலையாக ஐந்தாவது வேதமாகக் கருதப்படுகிறது வேத காலத்தில் புராணம் பழைய கதைகளாக இருந்தனவேயன்றி நூல்களாக இருக்கவில்லை. இந்திய நாட்டுப் பண்டை இலக்கியம் வேதநூல் எனவும் இதிகாசப் புராண நூல் எனவும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. கி.மு நான்காம் நூற்றாண்டில் கௌடிலியர் தமது அர்த்த சாத்திரத்தில் ’அரசகுமாரர்கள் முக்கியமாகக் கற்க வேண்டிய நூல்களுள் புராணமும் ஒன்று’ என கூறியுள்ளார். ( கலைக்களஞ்சியம், புராணம் தொகுதி -7, பக்.436)

புராணங்கள் தோன்றி வளர்ந்த நிலை
      புராணங்கள் பல்வேறு படிநிலை வளர்ச்சிகளை கடந்து வந்துள்ளன. பழங்காலத்திலிருந்தே தெய்வ வணக்கப் பாடல்களும் இயற்கையைத் தம் வயப்படுத்தும் மந்திரங்களும் இனக்குழுக்களின் வரலாறுகளும் மக்களிடையே வாய்மொழியாக வழங்கி வந்தன. தொடக்க காலத்தில் சமுதாய உணர்வுகளைப் பிரதிபலித்த கதைகள் காலப்போக்கில் குழு தலைவர்களின் கதைகளாக மாறி வளர்ந்தன. பிற்காலத்தில் குழுக்களில் பிரிவு ஏற்பட்டுச் செல்வம் காரணமாக மக்களிடையே உயர்வு தாழ்வுகள் தோன்றின. இந்நிலையில் குலங்கள் ஒன்று சேரும்போது, வென்று அடைக்கப்பட்டு அரசுகளோடு இணையும் போதும் பழங்காலம் பற்றிய புராணங்கள் தோன்றின. தெய்வங்களைப் பற்றியும் வமிசங்களைப் பற்றியும் பல கதைகளைக் குழுத் தலைவர்களாகவும் அரசர்களாகவும் பௌராணியர்கள் படைத்தார்கள் இக்கருத்துப் புராணங்கள் தோன்றிய சூழலை விளக்குவதாக அமைகிறது.

புராணங்களில் காணப்படும் இலக்கியக் கொள்கை
     புராணங்கள் என்பன உலகின் தோற்றமும் அதன் அழிவும் புதுப்பித்தலும் தெய்வ மரபும் முனிவர் குலமும் மனுவந்தரம் எனும் மனுக்களின் ஆட்சியும் சூரிய சந்திர அரச குலங்களின் தோற்றமும் (வமிசாமரபு) ஆகிய ஐந்தையும் விளக்கிக் கூற வேண்டும் என்பது வடநூற் கருத்தாகும்.  சிருட்டி, மனுவந்தரம், அரசமரபு, தலம், தீர்த்தம், விரதம், மந்தரம், யோகம், நியமம், பக்தி, ஞானம், கர்மம், துதி, அர்ச்சனைக்குரிய அட்டோத்திர சகத்திரளாமம், தருமம், சிவன், திருமால் முதலிய தேவன் அவதார லீலை (திருவிளையாடல்) முதலியவை எல்லாப் புராணங்களிலும் பொதுவாகக் காணப்படும். (கலைக்களஞ்சியம் – புராணம் தொகுதி-7, பக் – 436,437) என்பர்.

புராண இலக்கணம் 
     
புராணம் என்பது கதை, காந்தம் முதலிய புராணம், இது கலைஞானம், அறுபத்து நான்கில் ஒன்று, பழங்கதை, பூருவம், உலகத்தின் தோற்றக் கேடுகளும் பாரம்பரியங்களும் மந்வத்ந்தரங்களும் பரம்பரைக் கதைகளும் ஆகிய இவைந்தையும் கூறலால் பஞ்சலட்சணம் எனப்படுவது. (தமிழ் மொழி அகராதி – பக்.1064) என்று அகராதிகள் விளக்கம் அளிக்கின்றன. 

புராணங்களின் வகைகள் 
 
     வடமொழியில் புராணங்கள் மூன்று பிரிவுகளாய் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

1.மகா புராணங்கள்
2.உப புராணங்கள்
3.அதி புராணங்கள்
         
    என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் பதினெட்டு எனும் எண்ணிக்கையில் உள்ளன. இவையனைத்தும் வியாசரால் தொகுக்கப்பட்டன என்பர்.  மகா புராணங்கள் பதினெட்டு என்பதை திவாகர நிகண்டு, 

”மச்சம் கூர்மம் வராகம் வாமனம்
மற்பம் வைணவம் பாகவதம் சைவம்
இலிங்கப் பௌடிகம் நாரதம் காருடம்
பிரம கைவர்த்தம் மார்க்கண்டேயம் காந்தம்
பிரம்மாண்டம் ஆக்கிநேயம் பிரம்மம் என்றிவை
பாற்படு பதினென்  புராணமாகும்.” ( தி.நி.2453,பக்.189)
      எனவரும் நூற்பாவில் உரைக்கிறது. 

புராணக் கதைகள் 
      ஒரு கருத்தைச் சொல்லுகின்ற போது அதை எளிமையாகக் கதை வடிவில் கூறுவது பழங்கால மரபு. அவ்வாறு கூறினால் அக்கருத்தை அனைவரும் எளிமையாக விளங்கிக் கொள்ள இயலும். புராணக் கதைகள் கடவுளரையும் அடியவரையும் அவர்கள் செயல்களையும் பொருளாக உடைய பழங்கதைகளையே கூறுகின்றன. புராணக் கதைகள் இடம், காலம் முதலிய எல்லைகளைக் கடந்தும் விரிந்தும் வரும். கதை நிகழ்ச்சிகள் தொடர்ந்து விரிவு அடைந்தாலும் ஒரு கதைக்கு மறுகதை பிறப்பதாலும் புராணக் கதைகள் விரிந்து பெருகும் இயல்புடையன. 
 
புராணத்தினால் ஏற்படும் நன்மை 
     புராணம் படித்ததால் மக்களிடையே நல்லொழுக்கம், ஆசாரம், தெய்வபக்தி, கூட்டுறவு, நாகரீகம், வாழ்க்கையில் நிறைவு, இன்பம், பொதுஅமைதி, தன்னலமின்மை, தன்னம்பிக்கை முதலியன வளர்ந்து வந்தன என்று (கலைக்களஞ்சியம் தொகுதி 7 பக்.438) மு.அருணாசலம் குறிப்பிடுகிறார். பாமர மக்களுக்கு புராணங்கள் எளிய முறையில் சமய உண்மைகளை எடுத்துரைக்கின்றன என்பது இதனால் அறியப்படுகிறது. 

தமிழ் புராணங்களின் தொன்மை 
      தமிழ் இலக்கணங்களில் புராணம் என்பதற்கு நேர்முகமாக இலக்கணம் கூறப்படவில்லை. அதனால், வடமொழியிலுள்ள புராண இலக்கணங்களையே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் தமிழில் புராணங்களுக்குத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பியத்தில்,

“…………..
அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு எனப்
பொருந்தக் கூறிய…….” ( தொல்.பொ.செய்யுளியல் நூ.எ.310)
         
      எனக் கூறப்பட்ட எண்வகை வனப்புகளுள் ’தொன்மை’ என்னும் ’வனப்பு’ நூலே பிற்காலத்தில் புராணங்கள் எனப்பட்டன. ’தொன்மை’ எனினும் ’புராணம்’ எனினும் ஒக்கும். தொன்மை தூய தமிழ்ச்சொல் புராணம் வடசொல் இத்துனையே வேற்றுமை இரண்டிற்கும் பொருள் ஒன்றேயாம் 

”அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணிய தாளமும்
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருமால்” 
                           (சிலம்பு. இந்திரவிழா ஊரெடுத்த காதை, பா.அ.179-181)
         
     எனும் அடிகளுக்கு அடியார்க்கு நல்லார், ’அறவோர் பள்ளி முதலிய எல்லாவற்றிலும் தர்மம் போதித்தலும் புராணம் படித்தலும் பிறவுமாகிய செயல்கள் நடந்தன என்று விளக்கம் அளிக்கிறார். மேலும், புராணம் என்பது தகைமை சான்ற வரலாறு என்பதைத் திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் தசபுராணம், லிங்க புராணம் ஆகிய பதிகப் பாடல்களின் வழி எடுத்துரைக்கிறார்.  தசபுராணம், சிவபெருமான் ஆலகால விடமுண்ட வரலாற்றையும், லிங்கபுராணம் திருமாலும், பிரம்மனும் இறைவனது அடிமுடி தேடிய வரலாற்றையும் கூறுகின்றன. திருமூலர் இலிங்க புராணம் என்ற ஒரு பகுதியை அமைத்துள்ளார். அதில் சிவபெருமானின் ஐந்து பெருமைகளைக் குறிப்பிட்டுள்ளார்..  மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் சிவபுராணம் குறிப்பிடத்தக்கது. இது சிவனது அனாதி முறைமையாகிய பழமை எனப்படுகிறது. 

”சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை” ( திருவாசகம் – பா.எ.19)
         
      என்ற அடியும் சுட்டதக்கது.  எனவே, தமிழிலும் மிகப் பழங்காலந்தொட்டே புராணம் என்று சொல்லத்தக்க வகையில் நூல்கள் இருந்துள்ளன என்பது புலனாகிறது.

தமிழ் புராணங்கள் 
     பழைய புராணங்கள் கால மாற்றத்தில் கிடைக்காமல் அழிந்துவிட்டன. சிலவற்றின் பெயர்கள் மட்டுமே தெரிய வருகின்றன 12 ஆம் நூற்றாண்டில் அட்டாதசபுராணம் கன்னிவன புராணம் என்று இரண்டு புராணங்கள் எழுந்தன என்பதைச் சாசனங்கள் காட்டுகின்றன. கிடைக்கின்ற புராணங்களில் சேக்கிழார் பாடிய ’பெரியபுராணமே’ முதல் புராணமும் மிகவும் பழமையானதுவும் ஆகும்.( மு அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாறு 14ஆம் நூற்றாண்டு பக்கம் 61)  கட்சியப்ப முனிவரால் கந்தபுராணம் பதினான்காம் நூற்றாண்டில் பாடப்பெற்றது. பதினாறாம் நூற்றாண்டில் வடமொழியில் உள்ள புராணங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. உமாபதி சிவாச்சாரியார் பாடிய கோயில் புராணமே முதல் தலபுராணமாகும். அதிவீரராம பாண்டியரால் கூர்ம புராணம், லிங்க புராணம், கந்தபுராணத்தில் ஒரு பகுதியான காசிக்காண்டம் ஆகியன மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருடைய அண்ணனாக வரதுங்க பாண்டியன் பிரம்மொத்திர காண்டத்தைத் தமிழாக்கினார். இதே காலத்தில் வடமலையப்பன் என்பவர் மச்ச புராணத்தையும் செவ்வைச் சூடுவார் பாகவத புராணத்தையும் பாடினார்.  பதினெட்டாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனப் புலவரான கச்சியப்ப முனிவர் ’விநாயக புராணம்’ (பார்க்கவ புராணம்) என்னும் உப புராணத்தைத் தமிழில் செய்யுள் வடிவில் பாடினார். மேலும், இவர் திருவானைக்காப் புராணம், தணிகைப் புராணம், பேரூர்ப் புராணம், பூவாளூர்ப் புராணம் முதலிய தலபுராணங்களையும் காஞ்சிப் புராணத்தின் ஒரு பகுதியையும் பாடினார். இவரது ஆசிரியரான சிவஞான முனிவர் இதே காலத்தில் காஞ்சிப் புராணம் பாடினார். 
         
      பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சூத சங்கிதையைத் தமிழில் பாடினார்.  மேலும், திருநாகைக்காரோணப் புராணம், அம்பர்ப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம், குடந்தைப் புராணம், மாயூரர்ப் புராணம், திருத்துருத்திப் புராணம் முதலிய ஏராளமான தலபுராணங்கள் படைத்தார். இருபதாம் நூற்றாண்டில் தமிழில் செய்யுள் வடிவில் தாராபுரத்தைச் சேர்ந்த வேலாயுதபண்டிதர் என்பவரால் ’சிவமகா புராணம்’ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பெரியோர்களின் வரலாற்றைப் புராணமாக பாடும் மரபு உண்டு.  இதையொட்டி கடவுள் மாமுனிவர் என்பவரால் மாணிக்கவாசகர் உடைய வரலாற்றினை கூறும் ’திருவாதவூரடிகள் புராணம் பாடப்பட்டது. இதே நூற்றாண்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ’புலவர் புராணம்’ பாடினார். அசலாம்பிகை அம்மையார் காந்தியடிகள் வரலாற்றைக் ’காந்தி புராணம்’ என்று பாடியுள்ளார். தமிழில் பிற சமயத்தவர்களும் புராணம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய உமறுப்புலவர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை ’சீறாப்புராணம்’ என்ற புராணமாகப் பாடியுள்ளார். பத்தொன்மதாம் நூற்றாண்டில் ’முகைதீன் ஆண்டவர் புராணம்’ என்ற ஒரு புராணமும் எழுந்துள்ளது.  பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை சொல்லும் தேம்பாவணி என்னும் நூலை புராண நடையில் பாடியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் சிரவையாதீனம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் காரமடை தலபுராணம், அன்னியூர்ப் புராணம், கெளசைப் புராணம் முதலிய நூல்களை பாடியுள்ளார். அடிகளாசிரியர் இதே நூற்றாண்டில் அரசிலிக்காதை என்னும் தலபுராணம் பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழில் புராணம் என்ற அமைப்பில் பழங்காலம் தொட்டு பல வகையான புராணங்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளன. 

புராணம் சொல்லாட்சி 
    புராணம் என்னும் சொல்லாட்சி சங்கச் சான்றோர் இலக்கியங்களில் இல்லை எனினும் தொல்காப்பியர் கூறும் தொன்மை என்னும் இலக்கிய வகை புராணங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் களவியில் உரையில் மாபுராணம், பூதபுராணம் என்னும் புராணங்கள் குறிக்கப்பட்டுள்ளன. மணிமேகலை சமயக்கணக்கர்  தம் திறங்கேட்ட காதையில், 

”காதல் கொண்டு கடல் வணன் பூராணம்” 
            ( மணி.சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை – பா.அ 98)
       எனக் குறிக்கப்படுகிறது. மணிமேகலா தெய்வம் உலகத்தில் உள்ள பெண்களின் வடிவத்தை ஏற்று மனியறைப் பீடிகையை வளம் வந்து புத்த தேவனை வணங்கும் பொழுது, 

”புலவன் தீர்த்த புண்ணியன் புராணம்”
                    ( மணி. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை பா.அ.98)
         
      எனப் பாடுகிறார். புராணம் என்னும் சொல் பழமை என்னும் பொருளையும் புராணன் என்னும் சொல் பழமையானவன் என்பதையும் குறிக்கின்றன ‌. சமய உணர்வுடைய பெருமக்கள் புராணங்களை உயர்வாக கருதுகின்றனர். வேதக்கல்விக்கு அங்கமாகப் புராணம் ஓதுதல் கருதப்படுகிறது. புராணத்தினை, 

சிறப்புடைய புராணங்களுணர்த்தும் வேதச்
சிரப் பொருளை மிகத் தெளிந்துஞ் சென்றால் சைவத்திறத்தவர் ”
       என்று புராணங்கள் பெருமை ஆன்றோரால் பேசப்படுகின்றது. 

புராணங்களின் பயன் 
     மக்களின் உள்ளத்தை அறிவுப்பகுதி, உணர்வுப்பகுதி என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். இலக்கணம், தர்க்கம், அறிவியல், கலைகள், மெய்ப்பொருள், ஆய்வு ஆகியவற்றால் அறிவிப்பகுதி வளம் பெறும். உணர்வுப் பகுதியே அறிவைக் காட்டிலும் பேணிக்காத்தற்கு உரியது. உணர்வே செயல்களாகப் பரிணமிக்கும். செயல்களே நன்மை  தீமைகளாக இன்ப துன்பங்களையும் புண்ணிய பாவங்களையும் கொடுக்கும். எனவே உணர்வை வெளிப்படுத்தல் இன்றியமையாதது. உணர்வு இலக்கியப் பயிற்சியால் தான் வளம் பெறும். தொன்றுதொட்டு புராணங்கள் சிறந்த பகுதியாக இருந்து வருகின்றன. ஆதலால், புராணங்களுக்கு இலக்கியத்திலும் சரித்திரத்திலும் சிறந்த இடமுண்டு என எண்ணலாம்.

புராணம் என்னும் தமிழ் இலக்கியப் பாகுபாடு 
     தமிழ் இலக்கியங்களில் மூவகையான புராணங்கள் காணப்படுகின்றது.  முதலாவது,  இலக்கியங்களில் தெய்வத்தின் அருளை ஒரு தலச் சார்பின்றி புனைந்து கூறும் புராணங்கள். இவ்வகைக்கு உதாரணம் மச்ச புராணம், கூர்ம புராணம், சிவமகா புராணம், கந்தபுராணம் முதலியன. இவை, வடமொழி புராணங்களைத் தழுவி செய்யப்பட்டன. வடமொழியில் இவ்வகைப் புராணங்களைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட சில நூல்கள் வடமொழி மூலநூலின் பகுதிகள் ஆயினமையின் காண்டங்கள் எனப் பெயர் பெற்றன. உபதேச காண்டம், காசிக்காண்டம் என்பன இவ்வகைக்கு சான்றுகள் ஆகும்.  இரண்டாவது, இறைவன் புகழை ஒரு தலத்துடன் சார்ந்து கூறும் புராணங்கள். இவையே தலபுராணங்கள் எனப்பட்டன. இவை அத்தலத்தின் பெருமையோடு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றின் பெருமைகளைக் கூறுவன. திருவிளையாடற்புராணம், காஞ்சிப்புராணம், பேரூர்ப் புராணம் முதலியன இவ்வகைக்குச் சான்றுகள் ஆகும்.  மூன்றாவது இறையடியார்களின் வரலாற்றைப் பாடும் புராணங்கள். திருத்தொண்டர் புராணம், சேக்கிழார் புராணம், திருவாதவூர் அடிகள் புராணம் என்பன இவ்வகையில் அடங்கும்.  இவ்வாறு புராணங்கள் தமிழில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தோன்றி வளர்ந்து வந்துள்ளது. அதற்கு முன்பும் அவை இருந்துள்ளன என்றாலும் தற்போது கிடைக்காத காரணத்தால் அவை பற்றி விளக்கமாக எதுவும் கூற இயலவில்லை. அவை சமய உணர்வையும் அறவுணர்வையும் சமுதாயத்தில் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளன என்பதில் மட்டுமே இரு வேறு கருத்துக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவுரை
     மனித வாழ்வை நன்னெறியில் செலுத்துவதற்கு ஏற்புடைய இலக்கிய வகையாகத் தொன்ம இலக்கியங்கள் திகழ்கின்றன. தொன்மை எனும் சொல்லே பழமையின் சாரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. முன்னோர் பேணிய நெறிகளை தலைமுறை கடந்தும் கொண்டு செலுத்தும் இலக்கியமாகத் தொன்மங்கள் விளங்குகின்றன. பரம்பொருளின் அருட்திறத்தை உணர்த்தி அறநெறியில் வாழ்வியலை அமைத்துக் கொள்ளக் காலந்தோறும் எழுந்த தொன்ம இலக்கியங்களே காரணமாக அமைகின்றதெனலாம். அறத்தோடு சேர்ந்து பிற்காலத்தில் புதிய பல இலக்கிய வடிவங்கள் தோன்றவும் தொன்மை இலக்கியங்கள் வழியமைத்துள்ளன. இலக்கியச் செறிவும் யாப்பு நெறியும் சிறந்த தொன்ம இலக்கியத்தின் சில கூறுகளை முதன்மையாகக் கொண்டு பிற்காலப் புலவர்கள் தம் மனவுணர்விற்கு ஏற்ப புதிய இலக்கியங்களை உருவாக்கினர். இறைவனின் பரத்துவத்தை விளக்குவதோடு, சமுதாய மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட தொன்ம நூல்கள் காலந்தோறும் இலக்கிய வகைகள் பல தோன்றவும் காரணமாக அமைந்துள்ளன என்பது இவ்வாய்வில் கண்ட மெய்மையாகும்.

துணைநூற்பட்டியல்
🎯அருணாசலம். மு – தமிழ் இலக்கிய வரலாறு, பதிப்பு – தி பார்க்கர், சென்னை, முதற்பதிப்பு – 2005

🎯இதழ் – வையை மலர், மலர் – 3, மதுரைப் பல்கலைக்கழக வெளியீடு, மதுரை, முதற்பதிப்பு- 1976.

🎯கந்தையா, ந.சி. – செந்தமிழ் அகராதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, திருத்திய பதிப்பு – 1999.

🎯கலைக்களஞ்சியம் தொகுதி – 7 , தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, முதற்பதிப்பு – 1974.

🎯கழகப் புலவர் குழுவினர் – கழகத் தமிழகராதி, கழக வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு – 1974.

🎯கெளமாரீஸ்வரி, எஸ். (ப.ஆ) – தமிழ் மொழி அகராதி, சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2003.

🎯கெளமாரீஸ்வரி, எஸ். (ப.ஆ) – தொல்காப்பியம் – பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு – 2011.

🎯சண்முகம் பிள்ளை, மு. (தொ.ஆ) – தமிழ் – தமிழ் அகர முதலி, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு – 1985.

🎯சிங்காரவேலு முதலியார், ஆ, (நூ.ஆ) – அபிதான சிந்தாமணி, ஏசியன் எஜீகேசனல் சர்வீஸஸ், புதுதில்லி, மறுபதிப்பு – 1982.

🎯சுப்பிரமணியன், ச.வே. (ப.ஆ) – தமிழ் நிகண்டுகள் தொகுதி – 1, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதற்பதிப்பு – 2008.

🎯பஞ்சாங்கம், க. பேரா. (நூ.ஆ)  – தொன்மத் திறனாய்வு, வெளியீடு: அன்னம், சென்னை,இரண்டாம் பதிப்பு – நவம்பர் 2014.

🎯மகாதேவன், கதிர் – தொன்மம், செல்லப்பா பதிப்பகம், மதுரை, முதற்பதிப்பு – 2008.

🎯மாணிக்கவாசகர் – திருவாசகம், சைவநூல் அறக்கட்டளை, சென்னை, ஐந்தாம் பதிப்பு – 2011.

🎯வீரமாமுனிவர், (நூ.ஆ), இன்னாசி, சூ. டாக்டர் (ப.ஆ) – சதுரகராதி, சந்தியா பதிப்பகம், சென்னை, பதிப்பு – 2005.

🎯வேங்கடசாமி நாட்டார்,ந.மு. (உ.ஆ) –  சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு –  2008.

🎯வேங்கடசாமி நாட்டார்,ந.மு. (உ.ஆ) –  மணிமேகலை, சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2007.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப.கோகுல்நாத்,

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,

கோயம்புத்தூர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here