Sanga Ilakkiyathil Vaniyalum Suriyanum|G. Salammal

சங்க இலக்கியத்தில் வானியலும் சூரியனும்
Abstract
        Astronomy and the Sun occupy a central place in early human understanding of nature and time, as reflected in classical Tamil (Sangam) literature. The Sun is portrayed not only as a celestial body but also as a vital force governing daily life, agricultural cycles, seasonal changes, and directional awareness. Astronomical knowledge in these texts reveals an awareness of natural rhythms and their practical applications in organizing human activities. The relationship between astronomy and the Sun highlights the integration of scientific observation with cultural expression in ancient Tamil society. Thus, the Sun emerges as both a symbolic and functional element within the broader framework of early astronomical thought.


“சங்க இலக்கியத்தில் வானியலும் சூரியனும்”

முன்னுரை
       வானின் கண் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலை வானியல் என்று வானியலாளர்கள் அழைக்கின்றனர்.  பூமிக்கும், அதன்காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளைக் குறிக்கும் நிலையே வானியல் ஆகும். “நாம் வாழும் பூமியைச் சுற்றிலும், ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. பூமியின் மேற்பரப்பிற்கு அருகிலுள்ள காற்று மண்டலம் அடர்த்தி அதிகமானதாக இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் காற்று மண்டலத்தில் அடர்த்தி குறைந்து காணப்படுகிறது.  காற்று மண்டலம் முழுவதையும் கடந்து சென்றால், காற்றே இல்லாத மண்டலம் இருக்கிறது. அதுவே விண்வெளி என்றழைக்கப்படுகிறது.” (இராஜேஸ்வரி இரவீந்திரன், விஞ்ஞான உலகம், 2001, ப.72) என்ற கருத்து வானியல் எது என்பதைப் பதிவு செய்துள்ளது. இத்தகு வானின்கண் இருக்கும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவற்றின் செயல்பாட்டை ஆராய்ந்து அதனால் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது வானியலாக அமைகிறது.

வானியல் ஆராய்ச்சி
     அறிவியல் பிரிவுகளில் முதன் முதல் தோன்றியதில் வானியலும் ஒன்று. மனிதன் வானத்தைக் கண்ணால் உற்று நோக்கி மேலே நிகழ்கின்ற செயல்பாட்டை என்று கூர்ந்து நோக்கி ஆராய ஆரம்பித்தானோ அன்றே வானியல் பற்றிய அறிவு தோன்றிவிட்டது. மனிதன் ஆரம்ப காலகட்டத்தில், வானின் செயல்பாட்டினை ஒட்டிதான் நாட்களையும் மாதங்களையும் நேரங்களையும் வகுத்துக்கொண்டான் என்பது யாவரும் அறிந்த ஒன்று.  மனிதனின் பல்வேறு செயல்களில் வானியலின் பங்கு இன்றியமையாததாக இடம்பிடித்துள்ளது.  இதனை.
“எப்பொழுது உழ வேண்டும், எத்திசையில் கப்பல் செலுத்த வேண்டும் என்பதை நட்சத்திரங்கள் மற்றும் நிலாவைக் கொண்டு கணித்தார்கள். சூரியன் மற்றும் நிலா வானத்தில் வலம் வருவதை வைத்துதான் அன்றைய மனிதர்கள் கால அட்டவணைகளைத் தயாரித்துக் கொள்ள வேண்டியிருந்தது.” (கே.ஆர்.பாலாஜி, அறிவியல் என்றால் என்ன?, 2006,ப.26) என்ற கருத்தின் வழி அறியமுடிகிறது. படிப்படியாக வளர்ந்த வானியல் வளர்ச்சியானது, தொலைநோக்கிக் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் மேலும் துரித நிலையில் வளர்ந்தது. தொலைநோக்கியின் வழி, வானத்து நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணிக்க ஆரம்பித்தனர். சூரியன் மற்றும் அதன் கோள்களின் தன்மை, நிலா தேய்ந்து வளர்தல், நட்சத்திரத்தின் தூரம், அதன் ஒளியின் தன்மை, இது போன்ற பேரண்ட நிகழ்வுகளைக் கணித்தனர். 
         
        மேலும், விண்வெளிக்குச் செயற்கை கோள்கள் ஏவிய காலம் வளர்ந்த நிலையில் அங்கே பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அங்கே எந்தெந்த கிரகங்களில் மனிதன் வாழலாம், சூரியன் போன்று வேறுகோள்கள் இருப்பதும், இதுபோன்ற துல்லியமான ஆய்வுகள், செலுத்துகின்ற செயற்கைக்கோள்கள் படம் எடுத்து அனுப்பி வானியல் வளர்ச்சியை மேலும் துரிதமாக்கியுள்ளது.
“தொலைநோக்கினைக் கண்டுபிடித்தபின், தொலைநோக்கியின் உதவி கொண்டு வான மண்டலத்திலுள்ள கிரகங்களைப் பற்றி அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர். அதன் பயனால் வானமண்டலத்தில் பல சூரியன்களும், பல நிலவுகளும், பற்பல கிரகங்களும் இருக்கின்றன என்பதும், நமது சூரியக் குடும்பத்தைப் போல பல சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன என்பதும் நமக்குத் தெரிய வந்தது.” (இராஜேஸ்வரி இரவீந்திரன், விஞ்ஞான உலகம், 2001, ப.72) என்ற கருத்து அதனைக் குறிப்பிட்டுள்ளது. அவ்வகையில் வானின்கண் சூரியன் செயல்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

சூரியனின் தன்மை
      சூரியனின் இயக்கமே மக்கள் உயிர்வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. சூரிய ஒளி இல்லையென்றால் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்காது. தாவரத்திற்குப் பச்சையம், ஒளிச்சேர்க்கை இல்லை,உணவு உற்பத்தி இல்லை, மனிதனுக்குப் பசி ஏற்படாது. ஆதலால் தான் சூரிய ஒளி இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. சூரியனைச் சுற்றி ஒன்பது துணைக்கோள்களும், துணைக்கோள்களைச் சுற்றி சிறு கோள்களும் உள்ளன. எரிசக்திகள், பெட்ரோலியம் போன்றன சூரிய ஆற்றலால்தான் நமக்குக் கிடைக்கின்றன. சூரியனுக்குப் காந்தப்புலம் இருக்கிறது.  சூரியனில் தோன்றும் கரும்புள்ளி மற்ற பகுதிகளைக்காட்டிலும் குளிர்ச்சியானது என்பது அறிஞர்களின் முடிவு.  சூரியனில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. அதுவே சூரியனின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  இன்றைய அறிவியலாளர்கள் சூரியனின்உள்பகுதியை ஆராய்ந்து பலவாறு எடுத்துக் கூறியுள்ளனர். அதில் ஒரு கருத்தான “கொரனா, சுடர்க் கொழுந்துகள், குரோமோஸ்பியர் என்னும் நிறவட்டம், போட்டோஸ்பியர் என்னும் ஒளிவட்டம்.  இந்த நான்கினுள் உள்ளே இருக்கும் அடுக்கு போட்டோஸ்பியர் என்னும் ஒளிக்கோளம் இதன் பின்தான் வாயுக்கள் நிரம்பிய நெருப்பு உலையாக சூரியனின் உட்பரப்பு உள்ளது. இந்த ஒளி அடுக்கிற்குக் அடுத்தது பின்புற அடுக்கு ஒன்று இதற்கு அடுத்தது நிறஅடுக்கு எனும் குரோமோஸ்பியர்.  இதற்கு அடுத்ததாக அமைந்திருப்பது ‘கொரனா’ எனும் ஒளிவட்டம்.  இவைகள் எல்லாம் சேர்ந்ததுதான் சூரியனின் வளிமண்டலம் ஆகிறது.” (வி.எஸ். நாராயணன், மக்கள் விஞ்ஞானம்.10, 1985, பக் 194,195)  என்பதாகும்.

சூரியனின் இயக்கம்
       பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது சூரியன்.  பூமிக்கு மிகஅருகில் இருக்கும் கோள் இதுவே. சூரியனே இப்புவியில் உயிர்வாழக் காரணமாக இருக்கின்றான். சூரியனுக்கு ஈர்ப்பு ஆற்றல் உண்டு. ஆதலால்தான் தனது ஈர்ப்பு ஆற்றலால் எட்டுக் கோள்களையும், அவற்றின் துணைக்கோள்களையும், குறுங்கோள்களையும், வால் நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்தி இயக்கச் செய்கிறது என்பது வானியல் அறிஞர்களின் கருத்து.  ஆனால் அன்றே இதனை அறிந்து கூறிய வானியல் அறிஞர்கள் இருந்துள்ளதை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் தன்னுடைய பாடலில் குறிப்பிடுவதை,

“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்று
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரி நிலைஇய காயமும் என்றிவை
சென்றிளந் தறிந்தோர் போல வென்றும்
சினைத்தென் பாரும் உளரே’’   (புறம். 30)
         
       என்ற பாடல் அடிகள் குறிப்பிட்டுள்ளன.சோழ நாட்டின் அறிவு வளத்தைப் பாராட்ட விழைந்த புலவர், சூரியன் செல்லுகின்ற திசையையும், அதன் இயக்கத்தையும் அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்விட்டமும், காற்று இயங்கும் திசையும் காற்றின்றி வெற்றிடமாக உள்ள வானத்தையும் நேரில் சென்று அறிந்து சொல்லும் அறிஞர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுவதின் வழி, காற்று இருக்கும் அல்லது வெற்றிடம் பற்றி அறிந்திருந்த பழந்தமிழரின் வானியல் நுட்பத்தை அறியமுடிகிறது.

சூரியனின் வெண்ணிறம்
         
     சூரியனின் ஒளியையும் நிறத்தையும் வெண்மை என்று கூறுவர்.  வெண்மை என்பது தனிநிறமன்று, ஏழு  நிறங்களின் கலவை என்பது நியூட்டனின் கருத்து.  சூரியனில் “ஏஐடீபுலுழுசு” என்ற ஏழு வண்ணங்களின் கலவை உண்டு என்பதை இன்றைய வானியல் அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். இதனை அன்றே கூறிய வானியல் அறிஞனான தமிழனின் சிறப்பை,

“எல்லை செல்ல ஏழுர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கால்சேர்வு மறைய” (குறிஞ்சி.215-216)
         
       என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன. இதில் வரும் ஏழுர்பு என்பது ஏழு வண்ணங்களைக் குறிக்கின்றது.  அதாவது கதிரவன் ஏழு குதிரை பூட்டிய தேரில் வருதல் என்பது ஏழு வண்ணமாகிய ஊதா, நீலம், கருப்பு, பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.

கதிரின் தன்மை         
      சூரியனில் பல்வேறு கதிர் வீச்சுகள் இருப்பதை மேலே கண்டோம்.  இக்திர்வீச்சாலே பூமிக்கு வெப்பம் கிடைக்கின்றது என்பதையும் பார்த்தோம்.  சூரியக்கதிரானது நீண்ட அலைநீளம்கொண்ட அகச் சிவப்புக் கதிர் முதல் குறைந்த அலைநீளம் கொண்ட புறஊதாக் கதிர் வரையிலான கதிர்வீச்சுகளைக் கொண்டது.  இக்கதிர் வீச்சில் சில தீங்கு விளைவிக்கக்கூடியது..  இக்கதிர்வீச்சே அல்லது சூரியனின் கதிரே, சூரிய மையத்தில் உண்டாகும் வெப்பத்தை வானவெளி முழுவதும் பரவச்செய்கிறது. “சூரியனின் உட்புறத்திலிருந்து வெளியாகும் ஆற்றலை விண்வெளி எங்கும் பரப்புவது இதுதான். பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் குறுக்களவு உடையது.’’ (வி.எஸ்.  நாராயணன், மக்கள் விஞ்ஞானம்-10. 1985, ப.105)
என்ற கருத்து அதனை மெய்ப்பிக்கிறது.  சூரியக் கதிர்வீச்சுக் காரணமாகவே நிலமும் வளிமண்டலமும் சூடாகிற வானியல் அறிவை ஆதியிலே பழந்தமிழர்கள் அறிந்திருந்ததை,
 
“வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று” (நற்.163:9-10)என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன.

சூரியினின் தெற்கு நோக்கிய செலவு
         
      வடக்கு அரைக்கோளத்தில் நண்பகலில் சூரியன் தெற்கு திசையில் உச்சநிலை அடைகிறது. குளிர் காலத்தில் (டிசம்பர்) சூரியனின் பாதை தெற்கு நோக்கி சாய்ந்து காணப்படுகிறது. மேலும், குளிர்கால சங்கிராந்தியின் போது (டிசம்பர் 21-22), சூரியன் அதன் தெற்கே மிகத் தொலைதூரப் பாதையில் (தட்சிணாயனம்) பயணிக்கிறது. சூரியன் தென்கிழக்கில் உதித்து, தெற்கு வானில் உயர்ந்து, தென்மேற்கில் மறையும் இந்தக் காலம் குளிர்காலமாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் காலம் மழையும் பொழியும் காலமாக அமைகிறது. அந்த அறிவியல் நிகழ்வைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
 
“விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து” (அகம்.13:12-13)
         
என்ற அடிகள் அதனைக் குறிப்பிட்டுள்ளன.

வெப்பம் அதிகரிக்கக் காரணம்(அ) பசுமை இல்ல விளைவு மாற்றம்
         
       பூமிகிக்குத் தேவையான வெப்பத்தையும் ஒளியையும் சூரியனே அளிக்கிறது.  சூரியனே பூமிக்கருகில் இருக்கும் மிகப்பெரிய விண்மீனாகும்.  பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு தோராயமாக 149,600,000 கிலோமீட்டர்கள் ஆகும்.  இத்தொலைவைச் சூரிய ஒளி சுமார் 8 நிமிடங்கள் 19 வினாடிகளில் கடக்கிறது.  இவ்வாறு செயல்படும் வெப்பம் சில நேரங்களில் அதிகரித்துப் பூமியை அதிக வெப்பநிலைக்கு உள்ளாக்குகிறது.  இதற்கு மனிதனே காரணமாகிறான்.  பசுமை இல்ல விளைவு பாதிக்கப்படும் போது சூரியனின் வெப்பம் அதிகரித்து வாட்டுகிறது. பசுமை இல்ல விளைவு என்பது சூரியன் பல்வேறு வெப்ப ஆற்றலை வெளியிடுகிறது.  அகச் சிவப்பு கதிர்கள், புறஊதாக்கதிர்கள், காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் ஆகியவற்றோடு நாம் காணும் ஒளிக்கதிர்களையும் சூரியன் வெளியிடுகிறது. சூரியனின் இவ்வெப்பக்கதிர்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது ஏறத்தாழ 25ரூ வெப்பக் கதிர்கள் விண்வெளிக்கே திருப்பி அனுப்பப்படுகின்றது.
         
       பூமியின் மேற்பரப்பில் உள்ள மேகங்களும் வளிமண்டலத் துகள்களுமே இதற்குக் காரணம்.  ஏறக்குறைய 20ரூ வளிமண்டலத்தால் ஈர்க்கப்படுவதால் எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், புறஊதாக் கதிர்கள் பூமியைத் தொடுவதில்லை.  பூமியின் பல்வேறு வளிமண்டல அடுக்குகளைத் தாண்டி ஊடுருவி 50ரூ வெப்பம் பூமியின் தரையைத் தொடுகிறது. அதன் பெரும்பகுதியை(85ரூ)மரம், செடி, மண், கல் போன்றவை ஈர்க்கின்றன. மீதமுள்ள 15ரூ வெப்ப ஆற்றல் வளிமண்டலத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறது.  அதனை விண்வெளிக்குப் போகாமல் தடுக்கும் நிகழ்வே பசுமை இல்ல விளைவு.  இதனை, “வெப்பக் கதிர்கள் விண்வெளிக்குப் போகாமல் தடுப்புச்சுவர்கள் போல் நீராவி, கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை செயல்படுகின்றன. அதனால் மீண்டும் வெப்பக்கதிர்கள் பூமிக்கே திருப்பிவிடப்படுகின்றன. இப்படியாக வெப்பம் ஒரு வகையில் பூமியில் தங்குகிறது. இதனையே பசுங்குடில் விளைவு என்பார்கள்’’ (க. பலராமன், பழந்தமிழில் அறிவியல், 2009, ப.14) என்ற கருத்தின் வழி அறியலாம். இந்தப் பசுமை குடில் விளைவு மனித சக்தியால் பாதிப்படைந்து வெப்பம் அதிகரிக்கிறது. அதாவது பல்வேறு எரிப்பொருள்களை எரிப்பதில் வெளியாகும் கரியமிலவாயு, மரத்தை அழித்தல், தொழிற்சாலைக் கழிவு, மோட்டார் வாகன புகை ஓசோனை அதிகரிக்கச் செய்தல், இதனால் ஏற்படும் தூசி துகள்கள் போன்றன அதற்குக் காரணமாகிறது. இதனை தான் உலக வெப்பநிலையாதல் என்கின்றனர். பாலைவனக் கொடுமையைக் கூற வந்த புலவர் பசுங்குடில் பாதிப்பைச் கூறிய வானியல் சிந்தனையை

“வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ் சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று” (நற்.163:9-10)
         
என்ற அடிகள் வெளிப்படுத்தியுள்ளன. அக்காலத்தில் பாலைவனமே மிகுந்த வெப்பமாக இருந்தது. அங்கே வீசும் காற்று அதன் புழுதிகளை, மண் துகள்களை மேலே கொண்டு சென்று சூரியனின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கச் செய்தது மட்டுமின்றி, வானத்தையே கொதிக்கச் செய்தது என்பது பசுங்குடில் பாதிப்பு பற்றிய சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

கிரகணம்   
         
         சூரியனும் நிலவும் பகல்-இரவு நேரங்களில் ஒளியைத் தந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது.  இந்த ஒளி சில நேரங்களில் பூமியிலிருந்து முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ தொலைந்து விடுகிறது.  அதனை ‘கிரகணம்’ என்று அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ‘கிரகணம்’ என்றால் ‘மறைக்கப்படுதல்’ என்று பொருளாகும். “விண்வெளியில் உள்ள ஒரு பருப்பொருளின் தோற்றத்தை இடையில் வரும் மற்றொரு பொருள் முழுவதுமாகவோ பகுதியாகவோ தடுப்பது அல்லது ஒளியைக் குறைப்பது கிரணம் என்றழைக்கபடுகிறது’’ (ப.ஐயம்பெருமாள், தமிழக வானவியல் சிந்தனைகள், 2006, ப.92) என்ற கருத்து கிரகணம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே கிரகணம் பற்றிய வானவியல் அறிவைப் பெற்றிருந்தனர். அதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள்  குறிப்பிட்டுள்ளன.
 
“என்று ஊழ் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்”  (பரி.19:48-49)
         
         என்ற பரிபாடல் அடிகள் சந்திரன், சூரியன் என்ற இரண்டும் வானின் கண் இல்லாமல் போன கிரகணக் குறிப்பை கேள்வி கேட்கும் தன்மையில் குறிப்பிட்டுள்ளன. இக்கிரகணம் சூரியன், சந்திரன் என்ற இரண்டு வகையில் அமைவதையும் அறியமுடிகிறது.

சூரிய கிரகணம்
         
     சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சூரிய ஒளி மறைக்கப்படுகிறது.  இந்நிலையே சூரியகிரகணம் ஏற்படக் காரணமாகிறது.  சூரிய கிரகணம் அமாவாசை நாளன்றுதான் ஏற்படும். எல்லா அமாவாசை நாளன்றும் சூரிய கிரகணம் ஏன் ஏற்படுவதில்லையென்றால், புவியைச் சந்திரன் சுற்றிவரும் வழியும் சூரியனைப் புவிச் சுற்றி வரும் வழியும் ஒன்று போல இல்லாததே ஆகும்.  புவியைச் சந்திரன் 29 நாட்களில் சுற்றி வருகிறது.  அது சில சமயங்களில் புவியின் வழிக்கு மேற்புறத்திலும் சில சமயங்களில் புவியின் வழிக்குக் கீழேயும் செல்கிறது என்பது காரணமாக அமைகிறது. சூரியன் முழுவதும் மறைக்கப்பட்டால் முழுசூரியகிரகணம் என்றும், பகுதி மறைக்கப்பட்டால் பகுதி சூரியகிரகணம் என்றும் கூறுவர்.  புவியைப் பொறுத்தவரையில் ஓர் ஆண்டில் இரண்டு முதல் ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படுவதுண்டு. “கிரகணம் ஏற்படும்போது சந்திரன் இருண்ட வட்டமாகத் தென்படுகிறது.  அது சூரியன் முழுவதையும் மறைத்து விடுகிறது.  ஆனால், சூரியன் விளிம்பைச் சுற்றி மட்டும் ஒரு குறுகிய வளையம் காணப்படுகிறது. இந்த மெல்லிய ஒளிவளையம் ‘அன்னுலஸ்’ என்று அழைக்கப்படுகிறது.  சந்திரனின் வட்டத்தின் ஒரு பகுதி மட்டும் சூரியனுக்கும் புவிக்குமிடையே வரும்போது அரை குறையாகக் கிரகணம் ஏற்படுகிறது’’. (வி.எஸ்.  நாராயணன், மக்கள் விஞ்ஞானம்-2, 1985, ப.107) என்ற கருத்து கிரகணத்தின் தன்மையைக் குறிப்பிட்டுள்ளது.  இத்தகைய சூரிய கிரகண நிகழ்வைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளதை,

“அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து” (புறம்.174:1-3)
என்ற அடிகள் வெளிப்படுத்தியுள்ளன.

தொகுப்புரை
🔔அறிவியல் துறைகளில் மிகப் பழமையானது, வானியல் துறை.  இந்த வானியல்துறைக்கும், அதன் அறிவியல் சிந்தனைக்கும் அதன் ஆராய்ச்சிக்கும் வித்திட்டவன் பழந்தமிழன்.

🔔சூரியனின் செயல்பாட்டால் பருவநிலையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்திருந்தனர்.

🔔சூரியன் திடப்பொருள் இல்லை திரவம் என்றும், சூரிய சந்திர கிரகணம் பற்றியும் அறிந்திருந்ததை உணரமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.இராஜேஸ்வரி இரவீந்திரன், விஞ்ஞான உலகம், அஸ்வினி புக் கம்பெனி, சென்னை- 600 014, முதற்பதிப்பு – 2001.

2.பாலாஜி.கே.ஆர்,   அறிவியல் என்றால் என்ன?,சாருலதா பப்ளிகேஷன்ஸ், சென்னை- 600 014, முதல் பதிப்பு- 2006.

3.நாராயணன், வி.எஸ்.     மக்கள் விஞ்ஞானம், இருவர்  ஸ்டார் பிரசுரம், சென்னை-600 005, முதற்பதிப்பு, டிசம்பர்-1984.

4.சுப்ரமணியன்.ச.வே, எட்டுத்தொகை மூலமும் தெளிவுரையும், தொகுதி-1,2,3
மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 108.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

கோ.சாலம்மாள் ,

பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்(தமிழ்) ,

வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) ,

திண்டல், ஈரோடு மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here