Mullai Nila Aayargalin Vazhviyal|Dr.A.Janarthali Begam

Abstract    
         
           Literature that is very old and therefore mature in terms of time is considered as classical literature. Sangha literature is considered to be the most ancient of Tamil literatures. It originated in ancient times when there was a system called Sangam. Tamil language is an ancient high-class classical language and this ancient and ancient literature is spoken in association with the Sangha. The subjunctive tradition found in Sangha literature is based on the quintessence tradition the first substantive epithet tradition the propositional tradition the general attribute  the field reference  the reference object. During the Sangam period, the lands were divided on the basis of tenancy. They are Kurinji, Mullai, Marutham, Weaving, Balai. The purpose of this article is to mention the life of Aayyars who are the people living in Mullai land.


“முல்லை நில ஆயர்களின் வாழ்வியல்”

ஆய்வுச்சுருக்கம்
                  
         காலத்தால் மிகவும் பழமையும் அதனால் முதிர்ச்சியுமுடைய இலக்கியங்கள் தொன்மை வாய்ந்த இலக்கியங்கள் என்று கருதப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களுள் காலத்தால் பழமை வாய்ந்தது என்று கருதப்படும் இலக்கியம் சங்க இலக்கியமாகும். இது சங்கம் என்ற அமைப்பு இருந்த பழங்காலத்தில் தோன்றியதாகும். தமிழ்மொழி தொன்மை வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாகும் இவ்வுயர்வும் பழமையும் புலப்படத் தழிழானது சங்கத்துடன் இணைந்துப் பேசப்படுகின்றது. சங்க இலக்கியத்தில் காணப்படும் அகப்பொருள் மரபானது ஐந்திணை மரபு, முதல் கரு உரிப்பொருள் மரபு, கூற்று முறை மரபு, பொதுமைப் பண்பு, துறைக் குறிப்பு, குறிப்புப் பொருள் என்ற பலவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சங்ககாலத்தில் திணை அடிப்படையில் நிலங்களைப் பிரித்து வைத்திருந்தனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பதாம். இதில் முல்லை நிலத்தில் வாழும் மக்களான ஆயர்களின் வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச்சொற்கள்: சங்கம்,  கழகம்,  இடையர், உறி,  கார்காலம்.

முன்னுரை                  
    சங்க இலக்கியத்தில் இடம்பெறும் அல்லது அக்கூற்றுக்களை நிகழ்த்தும் மாந்தர்கள் பெரிதும் நிலமக்களும் தலைமக்களுமே ஆவர். அரசர், அந்தணர் போன்ற உயர்ந்த மக்களைப் பாடும் பாடல்களும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. வணிகர், வேளாளர் பற்றி பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் தவிர அடியோர், வினைவலர்; முதலியோரும் பாடல்களில் ஏதேனும் ஒருவகையில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளனர். மேலும் கொல்லர், தச்சர், குயவர், நூல் நூற்போர், புலைத்தியர் போல்வாரும் சங்க இலக்கியப் பாடல்களில்  குறிப்பிடப்படுகின்றனர்.

“ கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசும் தமிழ்”  (திருவிளையாடற்புராணம், திருநாட்டு.57)
         
       என இறைவனே சங்கத் தலைவனாக அமர்ந்து வளர்த்த பெருமையுடையது தமிழ் என்று திருவிளையாடற்புராணம் எடுத்துரைக்கின்றது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மக்களின் வாழ்கை முறையில் ஒன்றுதான் முல்லை நில வாழ்வியல். முல்லை நிலத்தில் வாழும் மக்களை கோவினத்தர், கோட்டினத்தர், இடையர்கள், ஆயர்கள் என்றெல்லாம் அழைத்தனர். அத்தகைய ஆயர்களின் வாழ்கை முறையே இங்கு எடுத்துரைக்கப்படுகிறது.

முல்லை நில அமைப்பியல்
         
          முதற்பொருள் கார்காலம், மாலை, கருப்பொருள் பதினான்கும், உரிப்பொருள், இருத்தலும் இருத்தல் நிமித்தமும், இவற்றின் திணை அமைப்பு காடும் காடு சார்ந்த இடமும். வினையின் கண் சென்ற தலைவன் கார்காலம் வந்தவுடன் திரும்பிவிடுவேன் என்று கூறிச் செல்கிறான். அவன் குறித்த கார்காலம் வந்துவிட்டது தலைவன் வரவோ தாமதமாகிறது. இது என்றெண்ணி மீள்வானே என்பதனை,

“பெருந்தேன் மாரிப் பேதைப் பித்திக” (குறுந்தொகை 94)
       என்னும் பாடல் அடிகள் மூலம் தலைவியின் ஆற்றுதலை உணரமுடிகிறது. தலைவன் முல்லையிடமும் பாகனிடமும் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தவதாகவும், தலைமக்கள் இனிமையுடன் இருக்கும் இல்வாழ்க்கைச் செய்திகளைக் கூறுவதாகவும் முல்லைத்திணையில் காணமுடிகிறது. தொல்காப்பியரில் தொல்காப்பியத்தில் முல்லை நில ஆயர்கள் பற்றிய குறிப்பினை 

” ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணை பெயர் 
ஆவயின் கிழவரும் உளரே”  (தொல்காப்பியம்,பொருள்.அகம்.21) 
         
       ஆயர் முல்லை நில மக்கள் பெயர் என்று குறிப்பிடுகிறார். இதன் வழி தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் ஆயர் வேட்டுவர் போன்ற பிரிவினர் வாழ்ந்து வந்தனர் என்பது இதன் வழியாக நமக்கு கிடைக்கின்றன. மேலும் ஆயர் என்னும் சொல்லே தொல்காப்பியர் காலத்தில் முல்லை நில மக்களைக் குறிக்க வழங்கி வந்தது என்பதை உணரலாம். சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்த மக்களை ஒத்த மதுரை நகர வாழ்வையும் ஒருபுறமும் எளிய பழக்கவழக்கங்களை உடைய ஆயர் நாட்டுப்புற வாழ்வை மறுபுறமாக இளங்கோவடிகள் சித்தரிக்கின்றார் மதுரை நகரிலும் ஆயர்கள் நகரத்தை விட்டு ஒதுங்கி ஒரு சேரியிலேயே வாழ்கின்றனர் பாடி, சேரி, பள்ளி என முடியும் ஊர்களின் பெயர்கள் ஆயர் குடியிருப்பை குறிப்பை ஆகும் .இவ்வகையில் சிலப்பதிகாரம் மதுரை காண்டத்தில் புறஞ்சேரி இருத்த காதை என்ற ஒரு காதை இடம் பெறுகிறது. இதில் உள்ள சேரி என்னும் சொல் ஆயர் குடியிருப்பில் குறிக்கிறது கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி ஆகிய இருவரையும் மாதிரி என்னும் ஆயர் குல பெண்ணிடம் அடைக்கலப்படுத்துகிறார் அப்போது ஆயர் குடியிருப்பினை இளங்கோவடிகள் அழகாக வர்ணித்து இருப்பார். வருணக் கோட்பாடு வேரூன்றாத சங்க காலத்தில் ஆயர் தம்மை அரசரோடு ஒத்தவராக கூறிக் கொண்டனர் என்பதை முல்லைக்கலிப் பாடல் வழி உணர முடியும். 

” வீ வில் குடிப்பின் இருங்குடி ஆயிரம்”(முல்லைக் கலி 5:7) 
         
    சங்க கால ஆயர்கள் நகரத்தில் வாழ்ந்ததில்லை முல்லை என்ற காடு வாழ்விடமாகவே கிராமவாசிகளாகவே திகழ்ந்தனர். அவர்களின் மாடு காப்பார் என்றும் ஆடு மேய்ப்பார் என்றும் இரண்டு பிரிவுகள் இருந்தன. முன்னவர் கோவிந்த தாயார் என்றும் பின்னவர் புள்ளினத்தார் என்றும் வழங்கப்பட்டனர். முல்லையில் கார்காலத்தில் கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கொன்றை மலர்கள் குண்டு குண்டாக சதங்கைகள் போல் காட்சியளிக்கின்றன. குறவர்கள் கவலைக் கிழங்கு தோண்டுவதால் ஏற்படும் குழிகளில் கொன்றை மலர்கள் குவிந்து கிடக்கின்றன. மாலையில் முல்லைப் பூக்கள் எங்கும் நிறைந்து மணக்கின்றன. யானைகள் மேய்ப்புலத்தை நாடிச் செல்கின்றன. முல்லைக் கொடிகள் படந்த பகுதியில் அவை செல்லும் போது கொடிகள் அவற்றின் கொம்புகளில் சிக்கி அறுபடுகின்றன. அக்கொடிகள் யானைகளின் கொம்புகளில் கிடந்து அவற்றுக்கு அழகு சேர்க்கின்றன. மழையில்லாத காலத்தில்  காயா மரங்கள் பொலிவிடத்து நிற்கின்றன. மழை பெய்ததும் துளிர்த்துக் கிளைகள் தோறும் மயிற்கழுத்தின் நிறமொத்த பூக்கள் நிறைகின்றன.
         
      ஆடுகளை மேய்ப்பவர்கள் பட்டிகளில் ஆட்டின் திரளோடு தங்கி விடுகின்றனர். ஆடுகளிடம் கறந்த பாலை இடையர்கள் வீடு சேர்த்து, மேய்ச்சல் நிலத்தில் ஆடுகளோடு இருப்பவர்க்குச் சோறு கொண்டு மீளுகின்றனர். மழை பெய்யும்போது இடையர்கள் பனையோலையால் செய்யப்பட்ட பறியோலையால் தம்மை மறைத்துக் கொள்கின்றனர். உளுந்தின் காய்களையும் அறுகம்புல்லையும் உண்ணுகின்றன. மான் கூட்டங்கள் பரல் கற்களிடையே தேங்கி நிற்கும் நீரைக் குடித்து பூக்கள் மணம் வீசும் புதர்களின் நிழலில் படுத்துத் தூங்கும். முல்லை நிலச் செம்மண் நிலங்களில் வரகு செழித்து வளர்கிறது. பெருமழை பெய்யும் போது காட்டாறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அவற்றின் கரையிடத்தே அசைந்து செல்லும் தோகை மயில்கள் கார்மேகக் கூட்டங்களைக் கண்டு அகவுகின்றன. காட்டுக் கோழிகள் புதரருகே இரை தேடுகின்றன. காலையில் மேய்புலம் சென்ற மாடுகள் கழுத்து மணியசைய, மாலையில் வீடு திரும்புகின்றன. வயிறு நிறைய மேய்ந்த அவை மெதுவாக அசைந்து நடப்பதால் அதற்கேற்பக் கழுத்து மணிகளும் மெதுவாக அசைந்து அனிய ஒலியை எங்கும் நிறைக்கின்றன. இத்தைகைய அழகிய காட்சிகள் காணும் இடம் முல்லை நிலமாகும்.
         
     சங்க இலக்கியங்கள் தமிழரின் வாழ்வின் நிகழ்வுகளையும், பண்பாட்டுக் கூறுகளையும், பழக்கவழக்கங்களையும், நீதிநெறி முறைகளையும், வழிகாட்டும் முறைகளையும், இயற்கையோடு இயைந்த முல்லை நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையின் சூழலான காடுகளைச் சார்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆயர் எனப்படுவர். தயில், மோர், வெண்ணெய் போன்றவற்றை விற்று இயற்கையாக விளைந்த தினை அரிசியை உணவாக உண்டு வாழ்ந்தனர். தலைவன் தலைவியரிடையே கனிகின்ற அன்பே இன்பப்பாலமாக இருக்கும். இவர்கள் இணைந்து இன்புற்று பிரியாது வாழும் வாழ்க்கையே விரும்புவார்கள். இருப்பினும் சமூகத்தில் ஒருவராக இருக்கும் அவர்கள் சமூகக் கடமைகளை செய்தாக வேண்டும். இந்தக் காரணத்தால் பிரிவு நேரிடுகிறது. அந்நேரத்தில் தலைவி மிகவும் துன்பப்படுவாள். மாலை நேரங்களில் ஆநிரைகளை பராமரிப்பதும், வினைமேற் சென்ற தலைவனை எதிர் நோக்கியும் காத்திருப்பாள்.

“ கானம் காரெனக் கூறினும் யானோ
தேறேன் அவர்பொய் வழங்கலாரே” (குறுந்தொகை 21)
         
     தலைவன் குறித்த நேரத்தில் வருவேன் என்ற சொல்லை நம்பி தலைவி உறுதியுடன் காலம் பொய்த்தாலும் தலைவர் பொய் கூற மாட்டார் என்ற நம்பிக்கையோடு இருந்தாள் தோழி கார்காலத்தில் பூக்கும் கொன்றை மலர் பூத்துள்ளது தலைவன் வரவில்லையே என்ற சொல்லுக்குத் தலைவி மறுத்துரைக்கிறாள். தலைவன் மீது கொண்ட உறுதியும் நம்பிக்கையும் இங்கு வெளிப்படுத்துகிறாள் தலைவி பித்திகை மலர் பூத்ததுள்ளதை அறிந்த தலைவி கார்காலம் என்று அறியாமல் பூத்துள்ளது என்று மறுத்துக் கூறுகிறாள்.
” பெருந்தண் மாரிப் பேதைப் பித்தகத்து 
அரும்பே முன்னும் மிகச் சிவந்ததுவே” (குறுந்தொகை 94)       
        என்ற பாடல் வரிகளால் சங்க கால தலைவி தலைவன் மேல் வைத்துள்ள நம்பிக்கை உணர்வை அறிய முடிகிறது. மேலும் குறுந்தொகைப் பாடல் ஒன்றில் கார்காலப்  பித்திகை முகையின் தோற்றமே தலைவிக்கு வேதனை ஊட்டுகின்றது. மேலும் இடி முழக்கமிட்டுப்  பொழியும் மழை ஓசையினையும் அவள் கேட்கின்றாள். எங்கோ நெடுந்தொலைவான நாட்டில் உள்ள தலைவன் இதே ஓசையினை கேட்டால் அடையக்கூடிய வேதனை எத்தகையது என்று தோழியை வினவுகின்றாள். இதனை
” சென்ற நாட்டை கொன்றையும் பசுவீ
நம் போற் கசக்கும் காலைதம் போற்
சிறுதலைப் பிணையின் தீர்ந்த நெறிக்கோட்டு 
இரலை மானையும் காண்பர்கொள் நமரே” (குறுந்தொகை 183)
         
      பிரிவுத் துயரால் பசலை படரும் என் மேனி போல் பசந்து தோன்றும் கொன்றை மலர்கள் அவர் உள்ள நாட்டில் பசந்து தானே தோன்றும் அந்நேரத்தில் தம்மை போலவே பெண் துணையைப் பிரிந்து திரியும் ஆன்மானைத் தலைவர் காண்பாரோ என்பது தலைவியின் உள் அகம் தெளிவு உறுத்தும் குறிப்பு
” படர் சேண் நீங்க 
வருவேம் என்ற பருவம் உதுக்காண்… 
பல்லான் கோவலர் கண்ணிச்
சொல்லுப்ப அன்ன முல்லை வெண்முகையே”  (குறுந்தொகை 35) 
         
       ஆநிரை மேய்த்து மீளும் இடையர் தலையிலே சூடியுள்ள முல்லை முகைகளைத் தலைவிக்கு காட்டி தலைவர் வருவதாக கூறிய பருவம் வந்துவிட்டது. அவர் வருகையை வாய் திறந்து சொல்வனப்போல் உள்ளன இந்த முல்லைகள் என்று தோழி தேற்றுவதும் உண்டு.  தலைவனை நீங்கி தனிமை துயரில் இருக்கும் தலைவியின் மனநிலையை முல்லை மலரும் பொழுது தான் மாலை என்று பிறர் சொல்லுவது தலைவிக்கு விளங்கவில்லை. துணையின்றி பிரிந்திருக்கும் காதலருக்கு சேவல் கூவும் காலையாயினும் கதிரவன் காயும் கடும் பகலாயினும் எல்லாம் ஒரே மாலை நேரம்தான் என்கிறாள். இதனை 

” முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் வபெற்றி மேலிட்டு 
ஆஅ ஒல்லெனக் கூவி வேன் கொல் 
அலமரல் அசைவளி அலைப்ப என் 
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊருக்கே”( குறுந்தொகை 28) 
         
      பிரிவால் வாடும் தலைவிக்கு நள்ளிரவில் அமைதி தாங்க முடியவில்லை. இடுகாட்டு அமைதி கொழுவிற்கும் நள்ளிரவிலே ஊரே தூங்குகிறது. இவளுக்குத் தூக்கம் வரவில்லை துயரமும் தாங்க முடியவில்லை. சுவரிலே போய் முட்டினாள் என்ன நம்மை நாமே அடித்துக் கொண்டால் என்ன அல்லது ஏதேனும் ஒரு சாக்கிட்டு அ ஆ ஒஓ என்று கூவி கதறினால் என்ன என்றெல்லாம் நினைவுகள் எழுந்து பேய்க் கூத்தாடுகின்றன. தலைவியின் மனதிலே இவள் படும் பாடு சிறிதும் அறியாமல் ஊர் முழுவதும் தூங்குவதும் நள்ளிரவு மற்றவர்களுக்கு துணை புரிவதும் என்ன இவற்றையெல்லாம் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாமல் துன்புறுகிறாள் என்பதை மேற்கூறிய பாடல் விளக்குகிறது.
 சங்ககால ஆயர்களின் உணவு, உடை, அணிகலன்கள் ,இருப்பிடம், தொழில்கள், பண்டமாற்று, விருந்தோம்பல், நம்பிக்கைகள், வழிபாடு, திருமணம் ,விளையாட்டு போன்றவற்றைச் சங்க இலக்கியப் பாடல்களில் மூலம் அறிய முடிகிறது. ஆயர்கள் பலவித உணவு வகைகளை உண்டனர் பால் மற்றும் பால் பொருட்கள் தானிய வகைகள் அவர்களது உணவு பட்டியலில் சிறப்பிடம் பெற்றிருந்தன. அகநானூற்றுப் பாடலில் தயிரோடு வரகரிசி யுகடன் ஈசலைச் சேர்த்து ஆயர்கள் ஆக்கிய புலியம் சோற்றினை குறிப்பிடுகின்றது.
” களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு  
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,”(அகநானூறு 394 1 – 9)       
        திருமண விழாவில் உன் மனைவி பாற்சோறு ஊட்ட, நீ உண்ண, எங்களது இல்லத்துக்கு வருக, என்று தோழி தன் தலைவியின் காதலனை அழைக்கிறாள். களாப்பழம் புளித்து இனிக்கிறது. விளாம்பழம் பழுத்திருக்கிறது. சிறிய தலையை உடைய செம்மறி ஆட்டுப் பால் பழுப்பு நிறம் ஏறித் தயிராக விளைந்திருக்கிறது. இதமான புனத்தில் விளைந்த வரகரிசி அவலில் (அவைப்பு) கார் காலத்தில் புற்றிலிருந்து பறக்கும் ஈசலைப் பிடித்துப் போட்டுச் சமைத்த புளிப்பொங்கல் இருக்கிறது. பசுமாட்டு (சேதான்) வெண்ணெய் இருக்கிறது. அதனை உருக்கிய நெய்யை ஊற்றி உன் இளையர் (காவல்தோழர்) உண்ணலாம். அதன் பின்னர், நீயும் பாற்சோறு உண்ணலாம். இவ்வாரபக ஆக்கிய சோற்றில் வெண்ணெய் உருகி ஓடுமாறு விட்டு விலையருக்கு உண்ண தருகிறாள் ஆயமகள் என்பதை இப்பாடல் வழி உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஆயர்கள் தொழில் 
         
       கையில் தீக்கடை கோள் முதலான கருவிகளுடன் தோற்பையை வைத்திருக்கும் இடையன் ஒருவன் பால் விலை கூறி விட்டதை நற்றிணை காட்டுகிறது தம் ஆட்டுத்தொகுதியுடன் வயலிலேயே இடை அமர்த்தி தங்கிவிடும் இடையர் அவற்றின் பாலைக்கரந்து ஊருக்குள் எடுத்துச் சென்று விற்று தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களுடன் திரும்புவதை 

” பாரிடை கையர் மறியினத்து ஒழியப்
பாலோடு வந்து கூழ்வோடு பெயரும் 
ஆடுடை இடை மகன்” (குறுந்தொகை 222) 
         
     என்ற குறுந்தொகை பாடல் வரிகள் உணர்த்துகின்றன. உலகெங்கிலும் ஆ வானது அருமை போற்றப்படுவதாயினும் முல்லை நில மக்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் பசுக்களும் காளைகளும் வளர்த்து வந்தனர். மேலும் அவற்றுடன் ஆட்டையும் எருமைகளையும் விரும்பினர் இதனை 

” நாள் மோர் மாறும் நல்மா மேனி
சிறுகுழை துயல்வரும் காதில் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்”  (பெரும்பாணாற்றுப்படை 160 165) 
         
       இனிய தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்து, தயிர் புளியாகத் தெளித்த வாயையுடைய மோர்ப்பானையை தலைசும்மாட்டின் மீது வைத்துக் கொண்டு, புதிய மோரை விற்கும், மாமை நிறம் கொண்ட மேனியையும், சிறிய அணிகலங்கள் அசைகின்ற காதுகளையும், மூங்கில் போன்ற தோளினையும், குறியதான நெறிப்பு உடைய கூந்தலையும் உடைய இடையர்குலப் பெண், மோர் விற்றதனால் உண்டான நெல் முதலியவற்றால் சுற்றத்தார் எல்லோரையும் உண்ணும்படி செய்து, பின்னர் தான் நெய்யை விற்கும் விலைக்குக் கட்டியான பொன்னை வாங்காமல் அவ்விலைக்கு எருமையையும், நல்ல பசுக்களையும் அவற்றின் கருவாகிய கன்றுகளையும் வாங்குவாள். மடிந்த வாயையுடைய இடையர் . இந்நில மக்கள் ஆநிரைகளை அம்மை வந்தால் அப்பன் வந்தான் என்று உறவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர் ஆநிரைகளை தூய்மை மற்றும் தெய்வத்தன்மை பொருந்தியதாக கருதினார் போர்க்காலத்தில் ஆநிரைகளை கவர்தல் பேரிழப்பாக கருதப்பட்டது.  ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய திருப்பாவையில் காயாமரத்து உச்சியை தொட முயன்று அதன் மலர்களை உதிர்த்து தள்ளி துளசிகாடெல்லாம் நீர் பெருகி தேங்கசெய்து திருமாலுக்குறியா பாற்கடல் ஆக்கியது இத்தகைய சிறப்பை 

“வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் 
நீங்காத செல்வம் நிறைந்தே ஓர் என் பாவாய்”  (திருப்பாவை 3) 
எனப் பாடப் படுவதால் அறியலாம். மேலும் ,

“கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்
சோற நனைத்தில்லம் சேறாக்கும்”     (திருப்பாவை 12)        
      கன்றுகளை நினைத்து இரக்கம் கொண்டு கனைத்தபடி எருமைகள் மடியில் இருந்து பாலைச் சொறிந்து வீடு முழுதும் சேராகும்படியான செல்வங்களை உடையவர்கள் ஆயர்கள் என்பதால் முல்லை நில மக்களின் வளமான செழிப்பான வாழ்வை அறிந்து கொள்ள முடிகிறது.  முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலையும் அறிந்திருந்தனர். அவர்கள் வீட்டில் வெண்ணெய் வைக்கும் உறியானது மண் பாண்டத்தில் செய்யப்பட்டவையாகும்.  “மண் பாண்ட தொழில் செய்வோரை களஞ்சை கோ, வேட்கோவர்கள் என அழைத்தனர் .இதனை புறநானூற்றின் 228 ,256 ,238 ஆகிய பாடல்கள் எடுத்து மொழிகின்றன .வேட்கோவர் குடியிற் பிறந்த வென்னி குயத்தியாரின் பாடல் ஒன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளமையை உணரற் பாலதாகும்.” (சி. சேதுராமன், செவ்விளக்கிய புதுமைகள், பக் 90) என்பதிலிருந்து முல்லை நில மக்கள் மண் பாண்டத் தொழிலிலும் சிறந்தவர்களாக திகழ்ந்துள்ளனர்.

“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,                       
இன்னே வருகுவர், தாயர்”    (முல்லைப்பாட்டு 13- 17) 
         
       சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தன் தாயினைக் காணாது துயருற்று அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருந்தது. அதனைப்  பார்த்துக் குளிரால் நடுங்கிக்கொண்டு, தோளில் குறுக்கும் நெடுக்குமாகக் கைகளைக் கட்டியுள்ள  இடையர் குலப்பெண்,  “வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே நின்று செலுத்த, உன்னுடைய  தாய் இப்பொழுதே வருவர். என்றெல்லாம் கன்றினை தேற்றுவது போல் முதுபெண்டிர் தலைவிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நற்சொல் கேட்டதாக கூறுவதூக அமைகிறது.. 

ஏறு தழுவுதல்        
      முல்லை நிலத்தில் வாழக்கூடிய கொடிய புலி போன்ற விலங்குகளிடமிருந்து பசு கூட்டங்களை காப்பதற்கு வீரம் மிகுந்த ஆண்களை கண்டறிவதற்கு உருவாக்கப்பட்டது ஏறு தழுவுதல் ஆகும் ஏறு தழுவும் நிகழ்வினை முல்லை கலி

” சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒ
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாகை
ஈன்றன ஆய மகள் தோள்
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்”             (முல்லைக்கலி 101)
         
       சிவனின் கூரிய ஆயுதம்போல் , சீவிக் கூர்த்தீட்டப்பட்ட கொம்புடைய ஏறு தழுவப்  புகுந்தனர் இணைந்து திடலில் இடிபோல் முழக்கம் எழச்  சவால்  ஏற்றுமணத்தோடு மண்புழுதியும் எழ பெண்கள் வரிசையாகச் சுற்றி நிற்க துறையும் ஆலும் தொன்மை வலுவுடைக்  கடம்பமும் முறையாகத் தொழுதுப் பாய்ந்தனர் . மதம்பிடித்த யானையைவிடச் சீறும் காளையை விடாமல் அடக்குவீரானால்  வெற்றிப் பதாகையோடு  வெல்வீர் ஆயர் மகள் கரம்கொல்லும் எருதை அடக்குபவர்க்கு அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட எம்பெண்டிரைக் கொடுப்போம் யாம் முல்லை நில பெண்கள் வீரமிக்கவர்கள் என்பதை ஏறு தழுவுதல் வாயிலாக அறிய முடியும்.
” கொள்ளேற்றுக் கோடு அஞ்சு வானை
மறுமையும் ஃபுல்லான ஆய மக்கள்”      (முல்லைக்கலி 103)       
    என்றும் மகளிர் வீரத்தை புலப்படுத்துகிறது. ஆயர் குடும்பத்தில் பெண் குழந்தை பருவம் எழுதியவுடன் வீட்டில் காலையும் வளர்க்கத் தொடங்கி விடுவார்கள் கூறிய கொம்புடைய காளையை அடக்குபவனுக்கே அப்பெண் மனம் செய்து கொடுக்கப்படுவாள் இன்று ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு எருது கட்டு போன்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இடையர்கள் வாழும் பகுதி பாதுகாப்பு உடையது என்பதை அகநானூற்று பாடல்

” கடைக் கோல் சிறு தீ அடைய மாட்டி 
திண்கால் உறியன் பானையன்  
அதளன் நுண்பல் துவலை ஒரு திறம் நனைப்ப  
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்
மடிவிடு வீளை கடிது சென்று இசைப்ப 
தெறிமறி பார்க்கும் குறுநரி வெரிஇ “(அகநானூறு 174)       
      ஆட்டுக் குட்டியினைக் காப்பதற்காகக் குள்ளநரியினை விரட்டுவதற்கு வாயினை மடித்துச் சீல்க்கை என்னும் ஒலி எழுப்பி குள்ளநரி அஞ்சி ஓடும் படி செய்வார்கள் இடையர்கள். 

முடிவுரை        
    சங்ககால மக்கள் நிலங்களை ஐவகையாகப் பிரித்து அவரவருக்கான வாழ்க்கையினை தனித்தனியே வகுத்து வைத்திருந்தனர். குறிஞ்சி குறிஞ்சி நிலத்தை அடுத்த முல்லை நிலக்காட்டில் வாழும் மக்கள் இனமே ஆயரின மக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுடைய தொழிலான ஆடு மாடு மேய்த்தல் அவற்றில் வரக்கூடிய பொருட்களை விற்று தங்களுடைய வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொண்டனர். முல்லை நிலத்திற்குரிய இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகிய உரிப்பொருளை தன்னகத்தை கொண்டு சிறப்பான முறையில் முல்லை நில மக்கள் வாழ்ந்ததை நாம் மேற்கூறிய கட்டுரையின் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்த சங்ககால மக்களின் வாழ்க்கை முறையினை இன்றளவும் பின்பற்றிய அவர்கள் சென்று கொண்டிருந்தாலும் அவற்றினை அனைத்தும் மக்களுக்கும் தெரிவிக்கும் நோக்கோடே இக்கட்டுரை அமைகிறது என்ற எண்ணத்துடன் நிறைவு நிறைவு செய்யப்படுகிறது.

துணைநூற்பட்டியல்
1.செ. சாரதாம்பாள், சங்க செவ்வியல் சங்க கிரேக்க ஒப்பீடு, மீனாட்சி   புத்தக நிலையம், முதலி தெரு, மதுரை -625001, முதற்பதிப்பு 2010.

2.சி.சேதுராமன், செவ்வியலக்கியப் புதுமைகள், பாவை  பப்ளிகேசன்ஸ், இராயப்பேட்டை, சென்னை -600014. பதிப்பு 2021.

3. ஞா மாணிக்கவாசகன், உரையாசிரியர், சிலப்பதிகாரம், உமா பதிப்பகம், சென்னை 60001, ஏழாம் பதிப்பு 2014.

4.கா கோவிந்தன், முல்லைக்கொடி, தமிழ் தாய் பதிப்பகம், சென்னை 64 , முதல் பதிப்பு 2001.

5.கு.வெ. பாலசுப்ரமணியன், குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,        சென்னை – 600098,  மூன்றாம் பதிப்பு 2007.

6.கு.வெ. பாலசுப்ரமணியன், கலித்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,சென்னை -600098. மூன்றாம் பதிப்பு 2007.

7. கு.வெ. பாலசுப்ரமணியன், பத்துப்பாட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை –        600098, மூன்றாம் பதிப்பு 2007.

8. தி.மகாலட்சுமி, குறுந்தொகையில் இயற்கை, உலகத்      தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை -600113, முதல்        பதிப்பு –        2015.

9.ஞா.மாணிக்க வாசகன், பத்துப்பாட்டு மூலமும் விளக்கமும், உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை-600001,  மூன்றாம் பதிப்பு 2016.

10.கு.வெ. பாலசுப்ரமணியன், அகநானூறு,  நியூ செஞ்சுரி புக்   ஹவுஸ் (பி) லிட், சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை -600098, மூன்றாம் பதிப்பு 2007.

11.ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு, முதற்பதிப்பு 2020.

12.சாமி சிதம்பரனார், பத்துப்பாட்டும் பண்டையத் தமிழரும், சாமி     சிதம்பரனார் இலக்கிய நிலையம்,  சென்னை-600094, 1986.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ.ஜனார்த்தலி பேகம்
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சி-20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here