Medicine in folk literature|M.Seethala devi

Aim of Research
      
            Folk medicine is an medicine which has come through man’s real-world wisdom or practical knowledge. Each and every house has a spices-box in which each box contains an Indian long pepper, cumin, fenugreek and coriander seeds. Those seeds were then used by the villagers   as an medical properties. They used the natural herbs, seeds, roots, plants, vine flowers and cinnamons that were available either in wilderness or in farm lands.  Such kinds of excellent medicinal procedures were learnt either by hereditary by hereditary or by hearsay or by Tamil literatures by the Tamil people.  The folk medicine in the life of Tamils was evident in the Tamil literature and also suggesting the ways of the protecting the folk medicine.  Thus, this article’s aim is to throw some light on the research on the procedures and the benefits of the folk medicines found in the folklores.


“நாட்டுப்புற இலக்கியங்களில் மருத்துவம்”

ஆய்வின் நோக்கம் (Objectives of the Study)                              
         நாட்டுப்புற மருத்துவம் என்பது மனிதனின் பட்டறிவு வாயிலாக வந்த மருத்துவ முறையாகும். வீட்டில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், வெந்தயம், கொத்தமல்லி போன்ற பொருட்களையே கிராமத்து மக்கள் மருந்தாக பயன்படுத்தி உள்ளனர். மேலும் காட்டு வெளியிலும், வயல்வெளிகளிலும், இயற்கையில் கிடைக்கும் விதைகள், வேர்கள், மரச்செடி, கொடிகளின் பூக்கள், பட்டைகள், பச்சிலைகள், போன்றவற்றை மருந்தாக மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இத்தகு சிறப்பு பெற்ற மருத்துவ முறைகளைத் தமிழகத்தில் உள்ள கிராம மக்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாகவும் ,செவி வழி செய்தியாகவும், இலக்கியங்கள் வாயிலாகவும், தமிழர் வாழ்க்கையில் நாட்டுப்புற மருத்துவத்தின் பங்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதையும், மக்கள் அறிவு (Folk Knowledge) எனும் கருத்தை மருத்துவத்தின்வாயிலாக ஆராய்வதையும், நாட்டுப்புற மருத்துவம் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும், நாட்டுப்புற மருத்துவத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பரிந்துரைத்தல் பற்றியும், அறிந்தும் பயன் பெறுகின்றோம்.எனவே நாட்டுப்புற மருத்துவ முறைகளும் அவற்றின் பயன்பாடுகளும் நாட்டுப்புற இலக்கியங்களில் இடம்பெறுமாறு ஆராய்வதே இவ்வாய்வு கட்டுரையின் நோக்கமாகும்.

முன்னுரை         
       நாட்டுப்புற இலக்கியம் என்பது நாட்டுப்புற மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் இலக்கியம் ஆகும் இது ஒரு வாய்வழி இலக்கியம் என்றும் கூறலாம். நாட்டுப்புறக்கலைகளின் ஒரு கூறாக நாட்டுப்புற மருத்துவம் அமைகிறது. நாட்டுப்புறங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நாட்டு மருத்துவம் சித்த மருத்துவத்துடன் தொடர்புடையதாக உள்ளது. நாட்டுப்புற இலக்கியங்களின் மூலம் பல மருத்துவ செய்திகளை நாட்டுப்புற மக்கள் கூறுகின்றனர்“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நாமெல்லாம் நன்கு அறிந்த பழமொழி. செல்வம் உள்ளவர்களிடம் நோய்கள் அதிகமாக இருப்பது இன்றைய வாழ்க்கை முறைக்கு உண்மையாகும். நோயற்ற வாழ்வு பெற மனிதனிடம் தோன்றிய சிந்தனை வெளிப்பாடே நாட்டுப்புற மருத்துவமாகச் செழித்து வளர்ந்து வந்துள்ளது. மனித நாகரிகத்தின் தொடக்கமே நாட்டுப்புறவியலில் தான் உள்ளது. அந்த வகையில், பழங்கால மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த மருத்துவ முறைகள் மற்றும் நம்பிக்கைகளை அறிந்து கொள்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.

நாட்டுப்புற இலக்கியம்   
     இயற்கை நம்பி இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த ஆதிகால மனிதர்கள் நோய் ஏற்பட்டபோது நோயைப் போக்கி தங்கள் உடல்நலம் காக்க மருத்துவ குணம் உடைய செடி, கொடிகள், மரங்களை நாடி இருக்கின்றார்கள். பரவலாக பயன்படுத்தப்படுகின்ற பழமொழி“உடம்பை முறித்து கடம்புக்கு கொடு” என்பதாகும் அதாவது கடம்பு என்பது ஒரு மரம் நன்றாக வேலை செய்து களைப்பு நீங்க கடம்பு மரத்தினால் செய்த கட்டிலில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அனுபவ பழ மொழி கூறுகிறது. இயற்கையாக கிடைத்த பச்சிலைகளை மருந்தாக சாப்பிட்டு எந்தவித ஆபத்துகளும் இல்லை என்று தெரிந்ததும். அவற்றையே தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார்கள் இவ்வாறு தோன்றிய வாய்மொழி முறையை மக்கள் தொடர்ந்து வழி வழியாக பயன்படுத்தும் வகையில் செவிவழிச் செய்தி யாகப் பரப்பினார்கள் இவ்வாறு மருத்துவம் தோற்றம் பெற்றன.
                 
       மருத்துவம் தோன்றிய காலத்தை வரையறுத்து கூற இயலாவிட்டாலும் மனிதன் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கிய காலமே மருத்துவம் தோன்றிய காலம் என்று கூறலாம்.  நாட்டுப்புற மருத்துவம் நாட்டுப்புறவியலை போலவே விவசாயிகள் பண்பாட்டிலிருந்து (Peasant Culture) தோன்றியதாகும். என்பார் சண்முகசுந்தரம் (1997:192) உயிர்கள் தோன்றியபோதே நோய்களும் தோன்றியுள்ளன. மனிதன் அந் நோயைப் போக்கிக் கொள்ள வழியைக் கண்டறிந்த போது மருத்துவம் தோன்றலாயிற்று. மனித சமுதாயம் இயற்கை நிலையிலிருந்து உற்பத்தி சேகரிப்பு என்ற நிலைக்கு மாற காட்டுமிராண்டித்தனம், அநாகரிகம் போன்றவற்றிலிருந்து வளர்ந்து நாகரீகம் அடைந்தது. இக்காலகட்டத்தில் மருத்துவமும் வளர்ச்சி அடைந்தது

மருத்துவம் தோன்ற காரணம்           
       ஆதிகால மக்கள் ஓரிடத்தில் நிலையாக இருக்காமல் நாடோடிகளாக வாழ்ந்தனர். தங்களுக்கென ஒரு இருப்பிடம் எதுவும் இல்லாமல் புல் தரைகளிலும், புதர் மறைவிலும், குகைகளிலும், மரங்களின் நிழல்களிலும், தங்கி இளைப்பாறினர். அவ்வாறு இருக்கும் போது உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டிருக்கலாம் அதிகம் நோயுற்று இருந்தபோது அதனை குணமாக்கும் நோக்கில் பல முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டதன் விளைவே இயற்கை மருத்துவம் ஆகும். விலங்குகள் கூட உடல்நல குறைவாக இருக்கின்றபோது மருத்துவ செடிகளைத் தேடி உண்பதும் உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். நாயானது தனது உணவு கோளாறு காரணமாகப் புற்களை உட்கொண்டு வாந்தி பண்ணி விடுவதைப் பார்த்து இருக்கின்றோம். ஆகவே எல்லா உயிர்களும் ஒருவகையில் இயற்கை மருத்துவ முறையை வழி வழியாக கடைபிடித்து வந்துள்ளன. விலங்குகளின் தலைமை விலங்காகிய மனிதனிடம் இவ்வகை மருத்துவம் மிக வளர்ந்த நிலையில் காணப்படுகிறது.
          
       நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுபுற மருத்துவம் என்பர். அதாவது ‘தமிழக கிராமப் புறங்களில் நாட்டு வைத்தியம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை வைத்தியம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்” கூறுவார்.     (ETHNOLOGY MEDICINE, FOLK MEDICINE, POPULAR MEDICINE, POPULAR HEALTH CULTURE, ETHNOIATRY, ETHNOATRICS) நோய் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது இயற்கையும், காலநிலையும் என்றே கூறலாம். நாடோடி மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒவ்வாமைகளும் சுற்றுச்சூழல் மாசுகளும் அவனை நோய்வாய்ப் பட வைக்கிறது அதனை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே மருத்துவம் தோன்ற காரணமாக இருக்கிறது.

நாட்டுப்புற மருத்துவத்தின் பெயர்கள்               
        நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine) என்பது நாட்டுப்புற மக்களால் மரம் செடி, கொடி, இலை, பூ காய் கறி, பட்டை வேர் கிழங்கு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுவதால் இப்பெயர் வழங்கல் ஆயிற்று. நாட்டுப்புற மருத்துவத்தை இனம் சார் மருத்துவம், மக்கள் சார் மருத்துவம், மக்கள் நல பண்பாட்டு, இனவியல், என பல பெயர்களால் அழைப்பர் என்கிறார் சக்திவேல் (1992:253) நாட்டுப்புற மருத்துவத்தை வீட்டு வைத்தியம்,நாட்டு வைத்தியம், செய்முறை வைத்தியம், கை மருந்து வைத்தியம், பாட்டி வைத்தியம், சிடுகா மருந்து, என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.
        நாட்டுப்புற மருத்துவமானது நாட்டுப்புறங்களில் கிடைக்கும் மருந்து பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதால் நாட்டு வைத்தியம், என்றும் வீட்டில் வைத்து மருந்து தயாரிக்கப்படுவதால் வீட்டு வைத்தியம், என்றும் கையினால் மூலிகைகளை நசுக்கி, கசக்கி, சாறு எடுத்து நோயின் மருந்தாக உபயோகப்படுத்துவதால் கைமுறையை மருத்துவம், என்றும் கைதேர்ந்தவர்களால் செய்யப்படுவதால் கை மருத்துவம், என்றும் வீட்டு பெரியோர்களால் செய்யப்படுவதால் பாட்டி வைத்தியம், என்றும் மக்கள் பயன்படுத்தும் மருந்து செடி, கொடிகளைப் பச்சிலை என்பர்  என்று சண்முகசுந்தரம்(1994:140) கூறுகிறார். இம்மருத்துவமானது பச்சிலை எனப்படும் மூலிகைச் செடி கொடிகளைக் கொண்டு செய்யப்படுவதால் பச்சிலை மருத்துவம் அல்லது மூலிகை மருத்துவம், என்றும் இம்மருந்துகளைப் பாமர மக்கள் அதிகமாக பயன்படுத்துவதால் பாமரர் மருத்துவம், என்றும் பாமர மக்களால் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருவதால் பாமர மக்களின் பரம்பரை மருத்துவம் என்றும், மருந்துப் பொருட்களின் துகள்களைக் (பொடி) கொண்டு செய்யப்படுவதால் சிடுகா மருந்து என்றும், பல்வேறு பெயர்களைப்பெற்றுள்ளன. மேலும் நாட்டுப்புற மக்களால் நாட்டுப்புற மருத்துவம் இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்பு
                  
         நாட்டுப்புற மருத்துவம் நோய்களை நிரந்தரமாக குணமாக்கும் ஆற்றல் படைத்தது இதனால் எதிர் விளைவும் ஆபத்தும் இல்லை அறிவியல் ரீதியாக மருந்து கண்டுபிடிக்கப்படுகின்ற சில மருந்துகளும் இந்த இயற்கை மருத்துவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலைக்கு கொடுக்கப்படுகின்ற Liv.52 என்ற மருந்தைக் கூறலாம் இது  கிழகாய்நெல்லி என்று சொல்லப்படுகின்ற கீழாநெல்லி அரைத்து பாலில் கலந்து தொடர்ந்து நோயாளிக்கு கொடுத்து வர மஞ்சள் காமாலை குணமாகும் என்பது நாட்டுப்புற பாட்டி மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
                
       உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்திற்கு அடிப்படை உந்துதலாக அமைந்துள்ளது. அரேபியா, சீனா, மலேசியா, எகிப்து, நாடுகளில் பரவலாகப் பாமர மக்களால் பல்வேறு நோய்களுக்கு நாட்டுப்புற மருத்துவ முறைகளைப் பின் பற்றி தீர்வு கண்டுள்ளார்கள்.  என்பதை உலக மருத்துவ ஆய்வாளர்கள் பல அறிவியல் முறையில் சோதனை செய்து வெற்றி கண்டனர் என்பார் வெங்கடேசன் (1976:140). ஆனால் ஆங்கில மருத்துவ மருந்துகளை உட்கொண்டால் ஒரு நோய் குணமாகி வேறு ஒரு நோயை உண்டாக்கும் அம்மருத்துவம் பக்க விளைவுகள் கொண்டது. எனவே நாட்டுப்புற மருத்துவம் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதை அறியமுடிகின்றது.

நாட்டுப்புற மருத்துவத்தின் வகைகள்                         
      நாட்டுப்புற மருத்துவத்தை பற்றி பல அறிஞர்கள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அவ்வகையில் நாட்டுப்புற மருத்துவத்தைப் பற்றி பல வகைகளாகப் பாகுபடுத்தி உள்ளனர். டான் யோடர் (Don Yoder) நாட்டுப்புற மருத்துவத்தை1. இயற்கை மருத்துவம் (2. மத மாந்திரீக மருத்துவம் (Magico Religious Medicine) என இரண்டாக பகுக்கின்றார். நாட்டுப்புற மருத்துவம் காலந்தோறும் தன்நிலையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. தன்னிகரில்லாத் தமிழ் மருத்துவம் நாட்டுப்புற மருத்துவமாகும். இவரது பாகுபாடு அமெரிக்க நாட்டுப் புற மருத்துவ முறையை ஒட்டியதாகும் தமிழக நாட்டுப்புற மருத்துவ முறையில் சில தனித்தன்மைகளும் இடம் பெற்றுள்ளன. நாட்டுப்புற மருத்துவத்தை சண்முகசுந்தரம் (1994:143) அவர்கள் இயற்கை மருத்துவம் *மதமாந்தரீக மருத்துவம் *நம்பிக்கை மருத்துவம் *திட்டமிட்ட மருத்துவம் *முரட்டு மருத்துவம் என ஐந்தாக வகுத்துள்ளார். மேற்கூறிய கருத்துகளின் வழி ‘இயற்கை சார்ந்த பட்டறிவின் துணை கொண்டு நாட்டுப்புற மக்களால் எளிய முறையில் மரபு வழியாகப் பின்பற்றப்பட்டு வரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் என விளங்கிக் கொள்ளலாம்.  இவ்வாறு நாட்டுப்புற மருத்துவ முறைகளை வகைப்படுத்தலாம்.

இயற்கை மருத்துவம் – சித்த மருத்துவம் – மந்திர மருத்துவம் – கை மருத்துவம் – குழந்தை மருத்துவம்
இயற்கை மருத்துவம்
               
      இயற்கை மருத்துவம் ஆனது மனிதனின் நோய்களுக்கு இயற்கையில் கிடைக்கின்ற மூலிகைகளும், தாவரங்களிலும், தாதுக்களிலும், விலங்கு பொருட்களிலும், உள்ள குணங்களை அறிந்து பயன்படுத்துவதாகும். இது இயற்கை பொருட்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாக உட்கொள்வதே சிறந்ததாகும். மேலும் வீட்டு மருத்துவம், நம்பிக்கை மருத்துவம், என்றும் பகுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற மருத்துவத்திற்கு இயற்கைப் பொருள்களே ஆதாரமாகக் கொள்ளப் படுகின்றன. இந்த இயற்கைப் பொருள்களைக் கொண்டு மருந்துகள் தயாரித்து உட்கொள்வதன் மூலமும், பூசிக்கொள்வதன் வாயிலாகவும் நோய்கள் போக்கப்படும் முறையே இயற்கை மருத்துவ முறையாகும். என்று கூறுகின்றனர்.
 
உணவு
           
      நாட்டுப்புற மருத்துவத்தை உன்னிப்பாகக் கவனித்தால் இயற்கைப் பொருள்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாகவே உட்கொள்வதைக் காணலாம். கீரை வகைகள், தண்டுகள், கசப்புக் காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, சுக்கு, வெந்தயம் போன்ற பொருட்களை இயல்பாகவே அம்மா தினசரி சமையலில் பயன்படுத்துவதை நீங்கள் கண்டிருக்கலாம். இவையெல்லாம் நோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்குமே பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை நாட்டுப்புற மருத்துவத்திற்கு சான்றாக

மஞ்சள் காமாலை நோய்
🎯 கீழாநெல்லி மஞ்சள் கரிசலாங்கண்ணியை அரைத்து மோரில் கலந்து 9 நாள் சாப்பிட வேண்டும்.

🎯 உப்பில்லாத பால் சோறு சாப்பிட வேண்டும் சித்திரமூலம் மஞ்சள் காமாலையைக் குணமாக்கும். கரிசலாங்கண்ணி இலையைக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து நான்கு நாள் சாப்பிட வேண்டும்,

நெஞ்சு வலி              
மான் கொம்பினை, வெண்கடுகு, பெருங்காயம், முதலியவற்றை சேர்த்து அரைத்து மார்பில் பூச வலி குறையும்.

உடம்பு வலி
🎯 ஏலம், இஞ்சிசாறு, எலுமிச்சம் பழச்சாறு, மிளகுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

வயிற்று வலி
🎯 சுக்கு பொடி ஒரு சிட்டிகை சிலாத்து பற்பம் சேர்த்து சுடு தண்ணீரில் சாப்பிடவும்

பல் வலி
🎯 நாயுருவியால் பல் விளக்கவும்

🎯 கருவப்பட்டை தூள், படிகார பஸ்பம், கல்நார் பஸ்பம், முதலியவற்றை சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் அசைவு, பல் வலி, பல்லில் ரத்தம் ஒழுகல், முதலியவற்றை குணப்படுத்தும்.

மார்பு வலி
         
    தாமரைப்பூ, ரோஜா மொட்டு, பூமி சர்க்கரை கிழங்கு, கோரைக்கிழங்கு செம்பருத்தி பூ, கொத்தமல்லி, அரைக்கீரை விதை, சம எடை எடுத்து அரைப்படி தண்ணீரில் வட்ட காய்ச்சி பால், மிளகுத்தூள், சித்தரத்தத்தோடு, கோழி முட்டை வெள்ளை கரு, கலந்து காலை, மாலை கொடுக்கவும் பத்தியவார சாரம் நீக்கவும்.

முகப்பொலிவு
🎯 ரோஜா இதழ்களைப் பயன்படுத்தவும் 

🎯 பப்பாளி இலை சாறுடன் கடலை மாவு தேன் கலந்து பயன்படுத்தவும்

🎯 தயிருடன் எலுமிச்சை சாறு பயன்படுத்தவும் 
         
     இவ்வாறாக பண்டைய காலம் தொட்டே மனிதன் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்கினான். என்பதை இயற்கை மருத்துவ அறிவையும் அதன் மீது அவன் கொண்ட நம்பிக்கையையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வீட்டு மருத்துவம் (Home Medicine)            
      வீட்டு மருத்துவம் என்பது வீட்டில் உள்ள பெரியவர்கள் கையாளும் மருத்துவ முறையானது தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படுகிறது. இதனை வீட்டு சிகிச்சை முறை (Home. Remedies) எனலாம். நாட்டுப்புற மக்கள் தம் நாகரிகமும் பண்பாடும் மரபு மீறாமல் பழங்காலம் தொட்டு போற்றுப்படுவதாகும். பண்டைய பண்பாட்டுடன் கலந்த மருத்துவ முறையைப் பாட்டி வைத்தியம் எனச் சொல்வதும் உண்டு இயற்கை பொருட்களை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டது. மூலிகைகளின் இலைகள், வேர், பட்டை, தண்டு, போன்ற இயற்கையான தாவரங்களிலிருந்து மருத்துவ முறையை அமைத்துக் கொள்வதாகும். இதனை மூலிகை மருத்துவம் அல்லது பச்சிலை மருத்துவம் என்று நம் முன்னோர்கள் கூறுவதும் உண்டு.

பாட்டி வைத்தியம்
          
     வயது முதிர்ந்த பெரியவர்களால் மேற்கொள்ளப்படும் மருத்துவ முறையை பாட்டி வைத்தியம் எனப்படும். இது வாய் வழியாக கூறப்படுகின்ற எளிய மருத்துவ முறையாகும். இம்மருத்துவம் மக்களின் பட்டறிவில் தோன்றி அனுபவத்தில் வாழ்ந்து வருவதால் இதன் மீது மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டுப்புற மருத்துவம் பல நாட்டுப்புற நம்பிக்கைகளுக்கு தாய் ஆகும் என்பது சக்திவேலின் (1992:173) கருத்தாகும். இதனை மருத்துவத்தின் தாய் என்று கூறுவதும் பொருத்தமாக உள்ளது. குழந்தைகளுக்காக செய்யப்படும் மருத்துவ முறைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பாட்டி மருத்துவம் ஆகும்.

ஒடிவு முறிவு மருத்துவம்             
         குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்கும் போதோ அல்லது ஓடும் போது திடிரென்று கீழே விழுந்து விட்டாலோ அதனால் ஏற்படுகின்ற ஒடிவு முறிவுகளை மருத்துவர்கள் பலமாக நிமிர்த்தி, நேராக கட்டி, மருத்துவம் செய்யும் முறை ஒடிவு முறிவு மருத்துவம் ஆகும். இம் மருத்துவத்தைப் பரம்பரை பரம்பரையாக வைத்தியக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே செய்து வருகின்றனர். மருத்துவர்கள் தனது கல்வியை ஆசான் எனப்படும் குருவிடம் முறையாக கற்று வருகின்றனர். குரு தன் மாணவர்களுக்கு உடலில் காணப்படும் வர்மங்களையும், நோய் ஏற்பட்டால் அதனை நீக்கும் மருத்துவ முறைகளையும், எண்ணெய், கசாயம், குளிகை, தைலம், போன்ற மருந்து பொருட்களை தயாரிக்கவும் குருகுலக் கல்வி முறையில் கற்பிக்கின்றனர். இவர்கள் இதனை குலத் தொழிலாகவே கொண்டிருக்கின்றனர். ஒடிவு முறிவு கொண்ட நோயாளிக்கு நோயின் தன்மையைப் பொறுத்து எண்ணெயில் மூழ்கச் செய்தும், தடவியும் உள் மருந்தாக தைலம் கசாயம்முதலியவற்றைக் கொடுத்தும் நிவாரணம் அளிக்கின்றனர். சான்றாக கேரளா, பாபநாசம், புத்தூர், போன்ற ஊர்களில் இம்மருத்துவ முறை செயல்பட்டு வருகிறது.

நம்பிக்கை மருத்துவம்
            
        நாட்டுப்புற மக்கள் சில நோய்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மருத்துவத்தைச் செய்கின்றனர். இச்செயல் மூடத்தனமாக இருந்தாலும், நம்பினவர் கைவிடப்படார் என்ற பழமொழிக்கு ஏற்ப மருத்துவம் செய்து நோயைக் குணப்படுத்துகின்றனர். நம்பிக்கை மருத்துவ முறையானது. மத-மாந்திரீக மருத்துவம், முன்னெச்சரிக்கை மருத்துவம், முரட்டு மருத்துவம், அதிர்ச்சி மருத்துவம், பிற நம்பிக்கை மருத்துவம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மத மாந்திரீக மருத்துவம் என்பது தனக்கு ஏற்பட்ட நோயைத் தீர்ப்பதற்கு மதத்தையும், மந்திரவாதத்தையும், மாந்திரீகத்தையும், நம்புகின்றனர். பொதுவாக உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, உள்ளம்(மனம்) போன்ற பல காரணங்களால் நோய்கள் ஏற்படுகின்றன. அந் நோய்களைத் தீர்ப்பதற்கு மாந்திரீக மருத்துவத்தை மக்கள் நாடுகின்றனர்.

முன்னெச்சரிக்கை மருத்துவம்
               
       முன்னெச்சரிக்கை மருத்துவம் என்பது நோய் வருவதற்கு முன்பே  உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்  குறிப்பாக சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகற்காயை உணவில்  சேர்த்துக் கொள்ள வேண்டும்

திட்டமிட்ட மருத்துவம்
            
     திட்டமிட்ட மருத்துவம் என்பது நோய் வருவதற்கு முன் அவை ஏற்படாமல் இருக்க உணவுப் பொருட்களுடன் சிலவற்றை சேர்த்து பயன்படுத்துதல் திட்டமிட்ட மருத்துவ முறையாகும். என்கிறார்கள்.

முரட்டு மருத்துவம்       
      முரட்டு மருத்துவம் என்பது சில மருத்துவ முறைகளை முரட்டுத்தனமாக கையாண்டு வருவது உண்டு இதனை முரட்டு மருத்துவம் என்று அழைப்பர். சான்றாக: பேய் ஓட்டுதல், சூடு வைத்தல், இரும்பு கம்பியால் அடித்தல், போன்றவற்றைக் கூறலாம்.
அதிர்ச்சி மருத்துவம் 
           
     அதிர்ச்சி மருத்துவம் என்பது அதிர்ச்சி கொடுத்து நோயைக் குணப்படுத்துவதாகும்.அதிர்ச்சி மருத்துவமாக தலையில் தட்டுதல், காதில் ஊதுதல், போன்றவற்றை சான்றாக கூறலாம்.

இலக்கியங்களில் நாட்டுப்புற மருத்துவம்                
   இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி, உண்மைகளையும், உணர்ச்சிகளையும், வெளிப்படுத்துவதாகும். இயற்கையோடு இணைந்து வாழும் பாமர மக்களின் வாழ்க்கை அனுபவங்களைப் படம் பிடித்து காட்டுவது தான் இலக்கியம் என்கிறார்கள். அரசனுக்காகப் போரிடச் சென்று போரில் விழுப் புண்களைப் பெற்ற அரசனின் காயங்களுக்கு அத்தி மரத்தின் பாலை எடுத்துப் போட்டனர். இதனை புறநானூற்றுப் பாடலில் கூறுகிறது.

இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ! முதுவாய் இரவல! (புறம் 180 3 -6 )        
         இறைவனின் கண்ணில் இருந்து குருதி வருவதைப் பார்த்த கண்ணப்ப நாயனார் வனங்கள் எங்கும் சென்று வனத்திடை வளர்ந்த மூலிகைகளைப் பறித்து வந்து மருந்து பிசைந்து வார்த்தார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இதனை

“கைச்சிலை விழுந்த தோரார் காளையார் மீள விந்தப்
பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ?” வென்றலு மருங்கு நின்ற
வச்சிலை நாணன் றானு “நானிது வறிந்தே” னென்பான்,  (பாடல் 108)       
       என்ற பாடல் எடுத்து இயம்புகிறது மேலும் வள்ளுவர் திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் பழந் தமிழரின் மருத்துவம் பற்றி தெளிவாகக் கூறியுள்ளார். திருக்குறள் 942 மற்றும் 945 ஆகியவை ‘மருந்து’ (பொருட்பால்) அதிகாரத்தில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வலியுறுத்துகின்றன. முந்தைய உணவு செரித்ததை அறிந்து உண்டால் மருந்து தேவையில்லை (942) எனவும், உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்து அளவோடு உண்டால் நோயற்ற வாழ்வு அமையும் (945) எனவும் வள்ளுவர் கூறுகிறார்.

முடிவுரை
     
     நாட்டுப்புற மக்கள் நாட்டுப்புற மருத்துவத்தின் மீது நம்பிக்கைகள் வைத்துள்ளனர். அந்த நம்பிக்கைகளே நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகளையும் அவற்றின் வகைகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.  எனவே மனிதனுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நாட்டுப்புற மருத்துவமே சிறந்தது என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகின்றது.

துணைநூல் பட்டியல்
1.நாட்டுப்புற இயல் ஆய்வு – டாக்டர் சு.சக்திவேல் மணிவாசகர் பதிப்பகம் நூல் வெளியீடு சென்னை 600108

2.டாக்டர். ச. சண்முகம், சித்த மருத்துவ வரலாறு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2005.

3.இரா. இராசமாணிக்கனார், தமிழ் இலக்கியமும் மருத்துவமும், சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 1978.

4.திருக்குறள் புலியூர் தேசிகன் உரை -பாரதி பதிப்பகம் சென்னை

5.க. நாகராசன், சித்த மருத்துவம் – கோட்பாடும் பயனும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் வெளியீடு, 2009.

6.மா. இராமமூர்த்தி – தமிழ் நாட்டுப்புற மருத்துவம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2008.

7.சி. சுந்தரராமன் – நாட்டுப்புற பண்பாடு மற்றும் மரபு மருத்துவம், மணிவாசகர் பதிப்பகம், மதுரை, 2010.

8.இரா. சண்முகசுந்தரம் – நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பு, சென்னைப் பல்கலைக்கழகம், 2001.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

மு.சீதளாதேவி 
முதுகலை இரண்டாமாண்டு
Iniyavaikatral_Article_Publishedதமிழ்த்துறை
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி
திருவாரூர்
நெறியாளர்
இ.அமுதா
உதவிப்பேராசிரியர்  
தமிழ்த்துறை
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி
திருவாரூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here