திருக்குறிப்புத் தொண்டர் நாயனார்

திருக்குறிப்புத் தொண்டர்

திருக்குறிப்புத் தொண்டர்


            காஞ்சிபுரத்தில் வண்ணார் குலத்தில் பிறந்தவர் இவர். சிவனடியார்கள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அடியவர்கள் ஏதும் கூறாமலேயே, அவர்கள் உடுத்திய ஆடையைப் பெற்று, அதைத் துவைத்துத் தந்தார். இவ்வாறு அடியவர்களின் திருக்குறிப்பை அறிந்து, திருத்தொண்டு புரிந்த இவரை மக்கள் திருக்குறிப்புத் தொண்டர் என்று அழைக்கலாயினர்.

            இவரது பெருமையை உலகிற்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டார் சிவபிரான். தானே ஒரு அடியவர் வேடத்தில், அழுக்கேறிய காவி உடுத்தி, நாயனாரின் முன் வந்தார். அது குளிர்காலம். நாயனாரும் வழக்கம்போல் அடியவரிடம் வந்தார். ஆடையைத் தரும்படியும், தான் துவைத்துத் தருவதாகவும் வேண்டினார்.

            அடியவரோ, தன்னிடம் இந்த ஒரு ஆடையே இருப்பதாகவும், மாலைக்குள் துவைத்துத் தருவதாக இருந்தால் மட்டுமே ஆடையைத் தருவேன் என்றும் கூறினார். இரவில் குளிரும் என்பதால் அதற்குள் ஆடையைத் தரவேண்டும் என்றும் கூறினார்.

            நாயனாரும் சம்மதித்தார். உடனே அடியவர் கோவணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தன் ஆடையை அவிழ்த்து நாயனாரிடம் தந்துவிட்டுச் சென்றுவிட்டார். நாயனாரும் மிக்க மகிழ்ச்சியோடு அடியவரின் துணியைத் துவைக்கச் சென்றார்.

நாயனாரைச் சோதிக்க விரும்பிய சிவபிரான் கருமேகங்களை உண்டாக்கினார். கடும் அவ்விடத்திலே மழையைப் பெய்வித்தார். ஆடையைத் துவைத்த நாயனார் அதை உலர வைக்க இயலாது தவித்தார். மாலைக்குள் அடியவருக்கு ஆடையைத் தரவேண்டுமே என்று பதைத்தார். ஆனால் மழை நின்றபாடில்லை. அடியவர் சொன்ன மாலை நேரமும் வந்தது.

திருக்குறிப்புத் தொண்டர், ‘அடியவர் வேண்டியபடி என்னால் துணியைத் துவைத்துத் தர இயலவில்லை. பாவம், அடியவர் என்னால், குளிர் தாங்காது துன்பம் அடைவாரே!’ என்ற எண்ணம் கொண்டு துடித்தார். துணி துவைக்கும் கல்லில் தன் தலையை மோதி உயிர்விடத் துணிந்தார். சிவபெருமான் தன் கையால், நாயனாரின் தலையைத் தடுத்துப் பிடித்தார்.

மறுகணமே சிவபெருமான், உமையன்னையுடன் இடப வாகனத்தில் தோன்றினார். திருக்குறிப்புத் தொண்டரிடம், “அடியவரே!  உமது பெருமையை உலகிற்கு அறிவிக்க நாம் செய்த சோதனையே இது!” என்று வாக்கருளினார். திருக்குறிப்புத் தொண்டரை சிவபதம் சேர்த்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

17.திருநாளைப்போவார் புராணம்

Leave a Reply