நட்பு – எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இல்லாத ஒன்று. ஒருவரிடம் இந்தப் புனிதமான நட்பைப் பெற நாம் தவம் செய்திருக்கவேண்டும். எனக்கு அவ்வாறு என் மனங்கவர்ந்த வகையில் தொடங்கிய நட்பு, கவிதாவுடன். அவள்தான் என் நெருங்கிய தோழி. தேசியப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆண்டின் முதல் ஆங்கில வகுப்பில் நான் தனியாக அமர்ந்திருந்தபோது, ‘‘டூ யூ ஹேவ் எ பாட்னர்?’’ என்று என்னிடம் கேட்டாள். ஓர் இணையாளரைக் கண்டுபிடித்து அவருடன் செயல்படும்படி எங்கள் பேராசிரியர் ஒரு பணியைக் கொடுத்திருந்தார். புதுப் பள்ளியின் முதல் வாரம் என்பதால் எனக்கு யாரையும் தெரியவில்லை. மாணவர்கள் நிறைந்த விரிவுரை அரங்கத்தில் கூச்சத்தோடு அமைதியாக அமர்ந்திருந்த என்னைக் கவிதா அணுகியபோதுதான் அவளை முதலில் பார்த்தேன்.
எனக்கு அவளிடம் அதிகம் பிடித்ததே அவளுடைய இந்தத் தன்னம்பிக்கைதான். எதற்கும் தயங்க மாட்டாள். எனக்கு அப்படியே எதிர்மறை. கூச்சமேயின்றி ஆடுவாள். பாடுவாள். கல்வியில் சிறப்பாகச் செய்வாள். வாய்ப்புகளைத் தேடி ஓடி தானாகச் செயற்படுவாள். போட்டித் தன்மை மிக்கவள் என்பதால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ஏதாவது ஒரு பரிசைத் தட்டிவிடுவாள். கெட்டிக்காரி. எனக்குப் போட்டி, பரிசு, பங்கெடுப்பு இவற்றில் எதிலும் ஆர்வம் இல்லை. ஆர்வம் இருந்தாலும் அனைவருக்கும் முன் சென்று படைப்பது என்பது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. போட்டியைவிட போட்டி நடைபெறவிருக்கும் நாளை நினைத்து நினைத்து என்னால் சரியாகச் சாப்பிட முடியாது. தூங்க முடியாது. எதற்கு இந்த மனவுளைச்சல்? ‘‘இந்தப் போட்டியில் கலந்துகொண்டு நான் என்ன சாதிக்கப் போகிறேன்?’’ என்று நான் பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள முன்செல்வதில்லை. ஆனால் கவிதா, எந்தப் போட்டி அல்லது நிகழ்ச்சிக்குச் செல்வதாக இருந்தாலும் அவளுக்கு உதவி செய்ய முன் நிற்பேன். அவள் வெற்றி பெறுவது நான் வெற்றிப் பெறுவது போன்று எனக்குத் தோன்றும். அவள் பயிற்சி செய்யும் அழகைப் பார்த்துப் பிரமிப்படைவேன். ஓரிரு முறை வாசித்தவுடனே எப்படித்தான் மனனம் செய்துகொள்வாளோ தெரியவில்லை. நீண்ட வசனத்தையும் ‘டக்’கென்று சொல்லிவிடுவாள்.
ஒருநாள், பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் கவிதைப் போட்டியைப் பற்றி பேராசிரியர் அறிவிப்பு செய்தார். சுற்றுப்புறத்தைப் பற்றி கொடுக்கப்படும் கருப்பொருளுக்கு எழுதவேண்டும் என்று பேராசிரியர் விளக்கியது மிகவும் சுவாரசியமாக இருந்தது. ‘‘அட, உனக்கு ரொம்ப பிடித்த கருப்பொருள்! நீயும் கலந்து கொள்ளேன். ரெண்டு பேரும் ஒன்னா போயி பேரைக் குடுப்போம்’’ என்று கவிதா கூறினாள். ‘‘எனக்கு இதுலேயெல்லாம் இன்டரஸ்ட் இல்லை. பட், நல்ல கருப்பொருள்! நெறைய எழுதலாம்’’ என்று அவளுடன் கலந்து பேச ஆர்வமாக இருந்தேன். ‘‘சும்மா வா. உன் பேரைக் குடு’’ என்று என்னை வர்புறுத்தி என் பெயரையும் பதிவு செய்தாள். உடனே எனக்கு மனவுளைச்சல் தொடங்கிவிட்டது. போட்டியின் நாளை நினைத்துப் பதற்றப்பட ஆரம்பித்துவிட்டேன். கவிதாவுடன் நிறைய கலந்துரையாடினாலும் ‘இவ்வளவு கேவளமாக எழுதுவாங்களா?’’ என்று நடுவர்கள் நினைத்துவிடக்கூடாதே என்பதற்காக சுற்றுப்புறத்தைப் பற்றிய நூல்களைக்கூட வாசிக்கத் தொடங்கினேன். தேவையா இது?
போட்டி நாள் வந்தது. சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டைப் பற்றிய தலைப்பு. அப்பாடா நல்லது. எனக்குத் தோன்றிய எண்ணங்களைக் கவிதையாக அமைத்து எழுதியிருந்தேன். கடலின் தூய்மைக் கேட்டைப் பற்றியும் அதனால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியும் ஏதோ எழுதி வைத்தேன். கவிதா, நாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி அழகாக எழுதியிருந்தாள். எப்படியோ இரண்டு பேரும் ஒன்றாகக் கலந்துகொண்டதைக் கொண்டாட சில ‘செல்ஃபி’ புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். இரண்டு வாரங்கள் கழித்து, பல்கலைக்கழக்க கூட்டத்தில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட இருந்தது. நாங்கள் இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தோம். கவிதா ஆர்வமாக இருந்தாள். அவளை அப்படிப் பார்க்கவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவள் எப்படியும் ஏதாவது ஒரு பரிசு வாங்கிவிடுவாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.
பேராசிரியர் ஒவ்வொரு பரிசாக அறிவித்துக்கொண்டு வந்தார். நினைத்ததுபோலவே கவிதாவுக்குப் பரிசு கிடைத்தது. ‘‘மூன்றாவது பரிசு – கவிதா சங்கரன்’’ என்று அறிவிக்கப்பட்டதும் ஒரே ஆரவாரம். அவள் பரிசை வாங்க மேடைக்குச் சென்றாள். ‘‘இரண்டாவது பரிசு – ஷரின் ஃபிரான்சிஸ்கா’’ என்று பேராசிரியர் என் பெயரை அழைத்ததை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கவிதா வேறு என் அருகில் இல்லை. கற்சிலையாய் ஆனேன். சுற்றியிருந்த நண்பர்கள் கைதட்டி ‘‘நீதான்! நீதான்! போ! போ!’’ என்று உற்சாகப்படுத்தினர். ‘‘நானா?’’ என்ற தயக்கத்தில் மெதுவாக எழுந்தேன். இதயம் படபடத்தது. கைகள் நடுங்கின. ‘‘என் கவிதைக்குப் பரிசா? பரவாலேயே. அதுவும் கவிதாவும் நானும் ஒரே போட்டியில் பரிசு பெற்றிருக்கிறோமா? வரலாற்று நிகழ்வுதான்’’ என்று சிரித்தப்படி பரிசை வாங்க சென்றேன். முதல் முறையாகப் பரிசைப் பெற்றிருக்கிறோம் என்ற பூரிப்போடு கவிதா அருகில் வந்தமர்ந்தேன். அவள் அமைதியாக இருந்தாள். என்னைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஏதோ சரியில்லை என்பதைக் குறிப்பால் உணர முடிந்தது. ஆனால் என்ன, ஏன் என்றுதான் சொல்லமுடியவில்லை. அவ்வளவு சத்தத்திற்கு மத்தியில் நாங்கள் அமைதியாக இருந்தோம். ‘‘இவ்வளவு நேரம் நன்றாகத் தானே இருந்தாள். என்ன ஆயிற்று?’’ என்று எனக்குள் பல கேள்விகள் எழுந்தன.
மெதுவான குரலில், ‘‘கவிதா?’’ என்றழைத்தேன். ‘‘ஒன் கவிதை என்னோடதவிட நல்லா இருந்ததா?’’ என்று கோபமாகக் கேட்டாள். என் கவிதை நன்றாக இருந்ததா தெரியவில்லை. ஆனால், இந்தச் சின்ன விஷயம் நம் நட்பைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்று தெரிந்தது. அவளைச் சமாதானப்படுத்துவதற்கானச் சொற்கள் ஏதுமின்றி அன்று ஏன் கல்போலிருந்தேன் என்று புரியவில்லை.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் உமையாளம்பிகை இராமகிருஷ்ணன்,
கற்பித்தல் புலமையாளர்,
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுகள் துறை,
தேசியக் கல்விக்கழகம், சிங்கப்பூர்
சிறுகதை : நட்பு என்னும் நூல்கண்டு PDF