மாறிவரும் கொல்லிமலை |ஆய்வுக்கட்டுரை| முனைவர் க.கணியன்பூங்குன்றனார்

மாறிவரும் கொல்லிமலை - கணியன்பூங்குன்றனார்
ஐந்து நில பாகுபாட்டில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது குறிஞ்சித்திணையாகும். இந்நிலத்தலைவன் சேயோன் என தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். நாம் முருகன் என்கின்றோம். முருகு என்பதற்கு அழகு என்ற பொருள்படும். மலையும் அழகுதான் மலைகடவுளாகிய முருகனும் அழகன் தான் என்பதை யாவரும் அறிந்த ஒன்றாகும். இத்தகு அழகு மிகுந்த தமிழக மலைகளில் ஒன்று கொல்லிமலை ஆகும். அக்கொல்லிமலை மனித சமுதாயத்திற்குப் பல வளங்களையும், நலன்களையும் கொடையாக இன்றளவும் கொடுத்துக்கொண்டு வருகிறது. சங்கால புலவர்களால் புகழப்பட்ட வல்வில் ஓரியின் கொல்லிமலையின் தனிதன்மைகளை  எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

கொல்லிமலை
தமிழகத்தின் அரணாக மலைகள் விளங்குகின்றன. மேற்குதொடர்ச்சி மலைகள், கிழக்குத்தொடர்ச்சி மலைகள் எனப் பகுக்கப்படுகின்றன. இதில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வரிசையில் கொல்லிமலை, பச்சைமலை மற்றும் போதமலை போன்ற மலைகள் இடம்பெறுகின்றன. மேலும், சங்க காலத்தில் கொங்கு நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் எல்லையாக இருந்தது கொல்லிமலையாகும். இம்மலையின் சிறப்புப் பற்றி,

“தரை மீ என்னதெலா வளஞ்சொறிக்கொல்லி” 1 
“எனவும், அறப்பள்ளீசுவர சதகத்தில் சதுரகிரி” 2
எனவும் ,கூறப்பட்டுள்ளது. இதனால் கொங்கு நாட்டில் பல மலைகள் இருந்தாலும், அதிக வளம் மிக்க மலை கொல்லிமலையாகும் என்பதை இதன் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.
               
கொல்லிமலையின் இயற்கை அழகு, ரசிக்கின்ற மன எண்ணம் கொண்டவர்களுக்கு விருந்தாகும். இவ்வகையில் கொல்லிமலை ஏறத்தாழ நான்காயிரம் அடி உயரமுடையது. இந்த மலை நாட்டிற்கு 1961-62 -ஆம் ஆண்டிலேயே சுமார் 29 லட்சம் ரூபாய் செலவில், 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாதையின் நீளம் 22.4 கிலோ மீட்டர் ஆகும். இம்மலையின் இயற்கை அழகினை காண, இந்தக் கொண்டை ஊசி வளைவுகளில் நாம் பயணிக்க தொடங்கும் முன், கொல்லியை ஆட்சி செய்த வல்வில் ஓரியின் வீரத்தை பற்றி

“வில்லோர் வாழ்க்கை விழித்தொடை மறவர்”3
               
என்று அம்மூவனார் பாடியுள்ள திறத்தால் அறிய முடிகிறது. சிமெண்ட்டில் அவருக்காக வைக்கப்பட்டுள்ள சிலையின் அழகு காட்சியையும், இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அன்றைய மனிதனின் மன எண்ணங்களையும், எண்ணிப் பார்த்துக் கொண்டை ஊசி வளைவுகளில் பயணிக்கும் போது உண்டாகும் மன உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், மலைவாழ் விலங்கினங்களான யானை, புலி, கரடி, பன்றி, உடும்பு மற்றும் குரங்கு இனங்கள் வாழ்ந்த அழகு காட்சிகளைச் சங்கப் புலவர்களின் பாடல்கள் வழியே காண முடிகிறது.  அந்த அழகினை,

” அந்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனிஎறிமடமாற்கு வல்சியாகும்”
“களிறு சோர்வு மிருஞ்சென்னியமைந்து மலிந்த மழகளிறு”
“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் ப கழி”6
உருவக் குருவின் நாள் மேல் ஆரும்மாரி எண்களின் மலைச்சுர நீள் இடை”7

என்ற வரிகளோடு நினைவில் நிற்க, இன்றைய சூழ்நிலையில் குரங்கினங்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் உலாவுகின்ற சூழல் உருவாகி உள்ளதைக் காணமுடிகிறது.

விலை பொருட்கள்
கொல்லிமலையின் விலை பொருட்களாக இருந்த பலா, தேன், மலை வாழை, அன்னாசி, கொய்யா முதலிய பல வகைகளும், கிழங்கு வகைகளும் இருந்தன. ஆனால் தற்போது, இவை மட்டுமின்றி மிளகு, சோம்பு, கடுகு, காபி மற்றும் நெல் வகைகளும் விளைவிக்கப்படுகின்றன. இவை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நன்மை தருவனவாகும். ஆனால் சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புகளில் கொல்லிமலையின் பலாப்பழம் பற்றி, 

“சாரல் பலாவின் கொழுந்துனர் நறும்பும் 
இருங்கல் விட ரனை வீழ்ந்தெனை வெற்பில்
பொருந்தேன் இறாஅல் கீறும் நாடன்”8
               
என்ற கபிலரின் பாடல் வழியே உணரலாம். இச்சிறப்பினைப் பெற்ற பலா, அன்னாசி போன்ற பழம் பெருமை பெற்ற பொருட்களெல்லாம், தற்போது மலைவாழ் மக்களின் மன மாற்றம் காரணமாக, பணப்பயிர்களின் மோகம் அதிகரித்து, கொல்லிமலையின் பழம் சிறப்பானது மாறிவரும் சூழல் உருவாகி இருப்பதை அறியலாம்.

சோலைகளில் அழகு
கொல்லிமலைச் சாரலானது குறிஞ்சி நிலத்திற்குரிய முழு அழகையும் பெற்றிருந்தது என்பதனை,

“குருதி வேட்கை உருகிழு வயமான்
மரம் பயில் சோலை மலியப் பூழியர்”9
 
எனும் நற்றிணை பாடல் சிறப்பிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் பணப்பயிர்களுக்காக சோலைகள் உருமாற்றம் பெற்று, மனிதன் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நிலத்தின் வடிவத்தையே மாற்றியிருப்பதைக் காணமுடிகிறது.

மலர்களின் அழகும் நறுமணங்களும்
இனிய மணம் கமழுகின்ற 99- வகையான மலர்களைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டில் கபிலர் பட்டியலிட்டு உள்ளமை நாம் அறிந்ததே.  அவ்வகையில் கொல்லிமலையில் நடந்து செல்லும் இடமெல்லாம் வகை வகையான பூக்களும், திசை தோறும் திரும்புகையில் பல்வகை நறுமணங்களும் வீசுவதை அவ்விடம் சென்றவரே உணர்வர் .இம்மலையின் மலர் வளம் பற்றி, 
“உரைசால் உயர்வ ரைக்கொல்லிக் குடவயின
அகல்இலைக் காந்தள் அலங்குலைப்பாய்ந்து ” 10
“பைஞ்சுனைக் குவளைத் தன் தழை”11
———————— வந்தே ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக் 
கார் மலர் கடுப்ப நாறும் “12
               
எனும் சங்கப் புலவர்கள் பாடியுள்ளமையால் இன்றளவும் அறிய முடிகிறது மலைவாழ் மக்களின் இன்றைய வளர் நிலையில் இயற்கையாக மலரும் மலர்கள் மட்டுமல்லாது, பல் வகை உயிரினங்களும், மலர்களும் வாசனை இல்லாத அழகு மலர்களும் காட்சிக்காக இடம் பெற்றுள்ளன, என்பதையும் அறியலாம்.

மூங்கில் அழகு
கொல்லிமலைச் சாரலில் கூட்டம் கூட்டமாக மூங்கில் செழுமையுடன் வளர்ந்தோங்கி நிற்கும் காட்சி அழகு நிறைந்ததாகும். அதனுடைய இன்றியமையா பயன்பாட்டைக் கொண்டே மலை மக்களின் வாழ்க்கை முறையும் செழுமையுற்று இருந்தது. வீடுகளுக்கானக் கட்டுமான பொருட்களுக்கும், மாட்டுத் தொழுவம், ஆட்டுப்பட்டி ஆகிய இடங்களில் புழங்கு பொருட்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்காலத்தில் சிமெண்ட் மற்றும் கம்பிகளால் ஆன கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகின்றன. மேலும் புழங்கு பொருட்களுக்கு நெகிழி பயன்படுத்தப்படுகிறது. இந்த மூங்கில்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் நிரம்ப கிடைக்கின்றன என்பதை,
“கழை விரிந் தெழுந்தெரு மழை தவழ்  நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந கொடித் தேர்ப் பொறைய “13
என்று பாடல் குறிப்பிடுகிறது. கொண்டை ஊசி வளைவுகளில் இறங்கி வரும் நேரத்தில் இயற்கை அழகோடு மூங்கில் மரங்களின் காட்சியும், கண்ணிற்கு இனிய விருந்தாக அமைகிறது. இக்காட்சிகளை சங்ககாலப் புலவர் பெருமக்கள் தம் பாடல்களில் உவமை கொண்டு ஒப்புவித்த பாங்கு வியக்க வைக்கிறது.

மூலிகை வளம்
கொல்லிமலை மூலிகைகள் நிரம்பி இருக்கும் மலையாகும். சித்தர்கள் வாழும் மலை. பலவகையான நோய்களை நீக்கும் மலை. எல்லா வளமும் நிரம்பி இருக்கும் வரை இம்மலையை நாடிவரும் இரவலர்களும், இம்மலையிலேயே வசிப்பவர்களும் இங்கே நிறைந்திருக்கும் செவேர் பலாவின் தீஞ்சுளைகளைத் தேனில் தொட்டு உண்பர். வள்ளல் வல்வில் ஓரியின் உள்ளம் போல் இயற்கை அழகுடன் மூலிகை வளமும் உடல் நலமும் காக்கின்ற குளிர்ந்த சோலைகளும், நீர் வளமும், நில வளமும் மிக்கதாகவே இம்மலை உள்ளது. இச்சிறப்பினைப் பற்றி,

“கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா நீ 
முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்”14 
               
எனும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வரிகளால் நினைவு கூற முடிகிறது. அந்த அளவிற்கு மூலிகையின் சிறப்பைக் கொல்லிமலை  இன்றளவும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றதை அறிந்துகொள்ள முடிகின்றது.

இயற்கைப்பாவை, கொல்லிப்பாவை எனும் எட்டுக்கை அம்மன்
                கொல்லிமலையின் இயற்கை அழகு எவ்வகையில் வியக்கத்தக்கதோ, அதுபோல் அங்கே அமைந்திருக்கின்ற தெய்வங்களில் ஒன்றான கொல்லிப் பாவை பற்றிய செய்திகளும், அறிஞர்கள் இடையே பல கருத்து வேறுபாடுகளுடன் நிலவுகிறது.
 
1.இயற்கையாகவே கொல்லிமலையில்அமைந்திருக்கிறது.
2. தெய்வத்தால் உண்டாக்கப்பட்டது.
3.கொல்லிப்பாவை இயங்கும் தன்மை உடையது. 
4. கொல்லிப்பாவையைப் பற்றிய புராணக் கதை ஒன்று உண்டு.
5. சமகால மக்கள் கொல்லிமலையில் இருக்கின்ற காளி சிலையாகிய எட்டுக்கை அம்மனை கொல்லிப்பாவை என்கின்றனர். 
6. அருவிக்கு அருகில் கொல்லிப் பாவை இருக்கலாம்.
               
இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் பொது மக்களிடையேயும் நிலவி வருகின்றன. இன்றைய சூழலில் எட்டுக்கை அம்மனே கொல்லிப்பாவை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இருப்பினும் குறுந்தொகையில் கபிலர்,
 
“வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் 
பாவையின் மடவந்தனளே”15
               
என்ற அடிகள் இடம் பெற்று இருப்பதாலும், சங்க இலக்கியப் புலவர் பலரின் பாடல்களில் பாவை பற்றிய செய்திகள் இருப்பதாலும், அவை உண்மையானவை என்பதாலும், சங்க இலக்கியப் பாடல்கள் பொய் கலவாதன எனும் கூற்றாலும்  இச்செய்தியை நம்ப முடிகிறது.
 
கொல்லிமலையை பற்றி பல செய்திகள், பல தலைப்புகளால் ஆராயப்பட்டாலும் சங்க இலக்கியப் பாடல்கள் வழி அக்கால சூழலையும், இயற்கை அழகினையும் உணர முடிகிறது. அதுபோலவே இன்றைய சூழலில் கொல்லிமலைக்கு நேரில் சென்றால் அங்குச் சுட்டிக்காட்டப்பட்ட விலங்கினங்களில் குரங்கினங்கள் மட்டுமே பெரிதும் உள்ளன. அவை மகிழ்ந்தும் காண்போரை மகிழ்வித்தும் அழகியகாட்சியுடன் இயற்கை அழகை மெருகேற்றுகின்றன. கொல்லிமலையானது வரலாறு போற்றும் பெருமையுடனும், இயற்கை வளத்துடனும், உடல் நலம் காக்கும் மூலிகைகளுடனும், இயற்கைச் சூழலோடு அறிவியலும் இணைந்து முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு அங்கு வாழும் மக்கள் வளம் குறையாமலும், நாகரீகத்துடன் வளர்கின்ற சூழலும், மாறிவரும் மாற்றங்களும் மாண்புடையதாக காணப்படுகிறது. இம்மலையானது வள்ளல் வல்வில் ஓரியின் கொடை கொடுத்தல் பண்பு போலவே இன்றளவும் செல்வோருக்கெல்லாம் கொடையாக அமைகிறது.

சான்றெண் விளக்கம்
1. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர் – எஸ்.என் பி.குருக்கள்

2. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர்-.இ.செல்வராசு .மா.ஆ.
 
3. அகம்-பா.35 ‌-அம்மூவனார் 

4. நற்றிணை –பா.6- பரணர்

5. புறம்-பா.22- குறுங் கோழியூர்க்கிழார்

6. புறம் –பா. 152 வன்பரணர்

7. நற்றிணை –பா.192- பெயர் தெரியவில்லை.

8. ஐங்குறுநூறு –பா.214- கபிலர்.

9. நற்றிணை –பா.192- பெயர் தெரியவில்லை.

10. நற்றிணை –பா.185- பெயர் தெரியவில்லை.

11. குறுந்தொகை –பா.342- சுந்தரத்தனார்.

12. அகநானூறு –பா.208- பரணர்.

13. பதிற்றுப்பத்து –பா.73- அரிசில் கிழார் .

14. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர் வே.குருசாமி

15. குறுந்தொகை –பா.100- கபிலர்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.கணியன்பூங்குன்றனார்
தமிழ்த்துறைத்தலைவர்

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

இராசிபுரம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here