மலையதிகாரம் |கவிதை |ச. குமரேசன்

மலையதிகாரம்

மலையதிகாரம்

 

வைகறையில்

வியாழன் உறங்கி

வெள்ளி உதிக்கும்..

எங்கள் மலை மன்னருக்கு

அது சியமந்தகமணி…! 

 

கிழக்கு வெளுக்கும்,

பின் சிவக்கும்

மலை முகடுகளுக்கிடையே

வெய்யோன் வெட்டொளி வீசும்..

தங்க கிரீடத்தை

தலையில் கவிழ்த்தவாறு

தகதகக்கும்…

மகாராசராய்

மரகத வண்ண மலை வீற்றிருக்கும்…! 

 

தொலைவிலிருந்தால்

நீலவான நீட்சியாய்

நீலநிறமாகும்…

பக்கத்திலிருந்தால்

பச்சை நிறத்தில் பளபளக்கும்…! 

 

அது மலையல்ல

மன்னர்களின் கருவூலம்.. 

அழகு கொஞ்சும்

அட்சய பாத்திரம்.. 

கர்ணனின் கருணை கைகள்.. 

கடையெழு வள்ளல்களின்

கரும்பச்சை பிம்பம்…! 

 

உயிர்களின் உன்னத உறைவிடம்.. 

ஊராரின் ஒட்டுமொத்த தேவை.. 

சிற்றோடைகளில்

சிலுசிலுத்து ஓயாமல் ஓடிவரும்

 ஊற்றுகளின் உற்பத்தி கூடம்…! 

 

தந்தை மேய்த்த ஆடுகள்.. 

மந்தை மந்தையாய் மாடுகள்.. 

குதித்தோடும் குரங்குகள்… 

மருண்டு நோக்கும் மான்கள்.. 

பள்ளம் தோண்டும் பன்றிகள்.. 

கடகடக்கும் காட்டெருமைகள்.. 

முந்தியோடும் முயலினங்கள்.. 

முள் தெறிக்கும் முள்ளம்பன்றிகள்.. 

சிலுசிலுக்கும் சில்வண்டுகள்… 

பளபளக்கும் பொன்வண்டுகள்.. 

அனைத்துக்கும்

அருள் சுரந்து உணவூட்டும்

இது என் அமுத சுரபி…! 

 

விக்க வைக்கும் விளாங்காய்கள்.. 

திகட்டச்செய்யும் தெரட்டிப்பழங்கள்..

எச்சிலூறும் இலந்தைப் பழங்கள்.. 

கருப்பு திராட்சையாய் கலாப்பழங்கள்..

புத்துணர்வளிக்கும் புளியம்பழங்கள்.. 

அருமையான அன்னம் பழங்கள்.. 

ஆகாரமாகும் ஆனாப்பழங்கள்.. 

சட்டையில் முள்ளேறும் சப்பாத்தி பழங்கள்.. 

சத்தான சர்க்கரை பழங்கள்.. 

பல்லுயிர்க்கும் பகிர்ந்தளிக்கும்

இது என் பழமுதிர்சோலை…!

 

முடையும் கூடைக்கும்

மோட்டு வளைக்கும் மூங்கில்கள்.. 

நெடுங்கால்களுக்கு நெக்கினி.. 

பூட்டுக்கைக்கு புரசு.. 

பக்கவளைக்கு பரம்பை.. 

கட்டைக்காலுக்கு கருங்காலி.. 

வளைச்சு குச்சிக்கு தெரணி.. 

வளைத்துக்கட்ட கட்டுக்கொடி.. 

கூரைவேய கிணாங்கு புல்.. 

கம்பங் கொள்ளைக்கு உண்டி வில்.. 

வரைமுறையின்றி வாரி வழங்கும்

வீடுகட்ட வித்திடும்

இது என் விஸ்வகர்மா…! 

 

பாறைக்குழியில் இருந்தால் பாழி.. 

ஓடையில் ஊறி வந்தால் ஊற்று..

குடிக்குமளவு தேங்கினால் குட்டை.. 

ஒவ்வொரு உயிரும் இளைப்பாறும்

நீரும் அதன் பேரும்

இடம் தோறும் மாறும்…

தேவர்களும் பருக

எண்ணும் இது என் தேவாமிர்தம்…! 

 

மழைக்கால மண்புழுக்கள்.. 

மலையட்டைகள்.. 

மரப்பள்ளிகள்.. 

மலைப்பாம்புகள்.. 

கல் ஆமைகள்.. 

கருந்தேள்கள்.. 

உடும்புகள்.. 

ஊர்ந்து வரும்

இவை யாவும்

வாழ்வில் ஊர்ந்து வர

கற்றுக் கொடுத்த

எனது தட்சணை இல்லா

 தாராள குருக்கள்…! 

 

காடைகள்..கவுதாரிகள்..

காட்டுக்கோழிகள்… 

காக்கைகள்.. கழுகுகள்.. 

கரிச்சான் குருவிகள்… 

மயில்கள்.. மைனாக்கள்..

மணிப்புறாக்கள்…

பருந்துகள்.. பச்சைக்கிளிகள்.. 

சிட்டுக்குருவிகள்..

செம்போத்துகள்..

கூகைகள்.. குயிலினங்கள்.. 

ஆந்தைகள்.. ஆட்காட்டி குருவிகள்… 

ஆயிரமாயிரம் பறவைகள்

ஆசையாய் பறந்து வரும்

இது என் வேடந்தாங்கல்…!

 

கண்ணைப் பறிக்கும் செங்காந்தள்.. 

கமகமக்கும் காட்டுமல்லி.. 

கார்காலத்து காரிண்டம்பூ.. 

கொத்துக் கொத்தாய் கொரக்கம்பூ.. 

கற்களுக்கிடையே கள்ளிப்பூ..

இது பூவின் புதையலை

புறம் வைக்க புறப்படும்..

இசைபாடும் தேனீக்களின்

இன்பமான இருப்பிடம்…!

 

உச்சி மரக்கிளையில்

ஒய்யாரமாய் கொம்புத்தேன்..

உயர்ந்த பாறைகளில்

ஒட்டியிருக்கும் மலைத்தேன்.. 

கல்லிடுக்கில் கட்டிவைக்கும்..

மரப்பொந்தில் மறைத்து வைக்கும்..

புற்றுகளில் புதைந்திருக்கும்..

அடுக்கடுக்காய் அள்ளித்தரும்

அடுக்குத் தேன்.. 

அது அவ்வளவும்

அசுவினி குமாரர்களின் ஒளடதம்…! 

 

ஊறுகாய்க்கு உன்னதம்

மகத்துவமான

மாவிலியங் கிழங்கு.. 

அரவம் அடக்கி அருமருந்தாகும்

ஆகாச கருடன் கிழங்கு.. 

இன்னல் இருளகற்றி

இன்பம் தரும் இருளங்கிழங்கு.. 

நிலை மாற்ற நீண்டிருக்கும்

நிலப்பனைங் கிழங்கு.. 

மண்ணுக்குள்ளே மறைந்திருக்கும்

இது என் புனித புதையல்கள்…! 

 

இவை

என் எண்ணத்துள் எழுந்தவை அல்ல.. 

என்னில் இரண்டறக் கலந்து

உணர்வோடு ஊறியவை.. 

மலையை மலைத்து பார்ப்பேன்.. 

ஒன்றல்ல இரண்டல்ல

ஓராயிரம் எண்ணங்கள் உதிக்கும்..

அதில் ஒரு சில ஓடிவந்து

இப்படி உட்கார்ந்து கொள்ளும்..! 

 

மாமலைப் போற்றுதும்.. 

மாமலைப் போற்றுதும்.. 

இது என் மலையதிகாரம்…!

 

கவிதையின் ஆசிரியர்

கவிஞர் பேரா ச. குமரேசன். 

தமிழ் உதவிப் பேராசிரியர், 

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம். 

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

4.மணம் வீசும் மனம் (கவிதை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here