♣ விதை விதைத்தவன்
உறங்கும் போதும்
விதைகள் உறங்குவதில்லை..!
♣ பறவையின் கண்களுக்கு
மனிதன் எல்லாம்
சிறிது ஊனமுற்றவர்கள் தான்..!
♣ இலையுதிர் காலத்தில்
மரத்தின் நிலை
எலும்புக்கூடு போல்..!
♣ நான் எங்குச் சென்றாலும்
என்னை பின் தொடர்கிறது
இந்த நிலவு..!
♣ மழை பெய்து முடிந்தும்
பட்டாம்பூச்சி சாயம்
அழியவில்லை..!
♣ இயற்கை அழகே
மலையின் நடுவே
நத்தை போல்
ஊர்ந்துச் செல்கிறது
இந்த காட்டாறு..!
♣ இரவு நேரத்தில்
நிலவைச் சுற்றி
எத்தனையோ
முகப்பருக்கள்
காணப்படுகிறது..!
♣ இருளில் இருந்தே
தாய்மொழி அறிந்தேன்
அது என் தாயின்
கருவறையோடு
ஒட்டியே இருந்தது..!
♣ வாழ்வதும் தண்ணீரில்
இறப்பதும் தண்ணீரில்
ஒருபோதும்
கரையை பார்க்கவில்லை
எந்த மீன்களும்..!
♣ கடல் ஆழத்தைக்
காண முடியாது
என் நண்பனின்
சேட்டைகளை
எண்ணவே முடியாது..!
♣ பொம்மைகள் அழுவதில்லை,
கடையை விட்டுச் செல்லும்
குழந்தைகள் அழுந்துக்கொண்டே
செல்கிறது..!
♣ மழையின் ஓசையும்
இடியின் ஓசையும்
முடிந்துவிட்டது
அதன் பிறகு
தவளையின் ஓசை
தொடங்கிவிட்டது..!
♣ மரத்தில் இலைகள்
இருந்த போதும் – அது
உதிர்ந்திட்ட போதும்
கிளையில் சிறிது
நேரம் அமர்ந்துச் செல்லும் கிளி..!
♣ எந்தப் பறவை யாமந்ததோ
இந்தச் சிறுவன் கையில்
பின்னால் கூரைகள்..!
♣ இரவு நேரத்தில்
நிலவை பார்க்க முடியும்
அதே நிலவை சுற்றியிருக்கும்
நட்சத்திரங்களை
எண்ண முடியவில்லை..!
♣ ஏதோ ஒரு காகிதத்தில்
என்றோ வரைந்த ஓவியம்
இன்று ஒரு கதை சொல்கிறது..!
♣ பெயர் தெரியாத புல்லையும்
பெயர் தெரியாத கல்லையும்
நாம் கடந்தேச் செல்கிறோம்..!
♣நான் எழுதாத கவிதை
மற்றவர்கள் எழுதுகிறார்
கவிஞராகிறார்!
நான் படிக்கிறேன்..!
♣ ஏதோ எழுதினேன்
ஏதோ கிறுக்கினேன்
என் மீது
கோவம் அடையவில்லை
எனது காகிதம்..!
♣ வானம் நீல நிறம்
கடல் நீல நிறம்
எந்த ஓவியன் கையில்
அமைந்தது அது..!
அழகு
♣ மழைக்கே அழகு இடிகள்
மலைக்கே அழகு மரங்கள்
கடலுக்கே அழகு மீன்கள்
ஓடைக்கே அழகு நீர்
செடிக்கே அழகு பூக்கள்
காட்டிற்கே அழகு விலங்கு
வீட்டிற்கே அழகு வாசல்
தெருவுக்கே அழகு குழந்தைகள்
மைதானத்திற்கு(கே) அழகு வீரர்கள்
கோவிலுக்கே அழகு சாமி
பேருந்துக்கே அழகு பயணிகள்
கல்லூரிக்கே அழகு மாணவர்கள்
காகிதத்திற்கே அழகு எழுத்துகள்
வாகனத்திற்கே அழகு வேகம்
வானிற்கே அழகு மேகம்
விடுமுறைக்கே அழகு பயணம்
மரத்திற்கே அழகு இலைகள்
அவளுக்கே அழகு புருவம்
எனக்கே அழகு புத்தகம்.
கவிதையின் ஆசியியர்
ச. கார்த்திக்
முதுகலைத் தமிழ் முதலாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர்