அன்று தீபாவளி, காலை விடியலில் காரிருளை, இளஞ்சூரியன் கதிர்களை வீசி கண்களைக் கூச செய்தான். எல்லா திசைகளில் இருந்தும் இடி முழக்கம் போன்ற பட்டாசு சத்தம் அதனிடையே அம்மாவின் குரல் எப்போதும் போல, தித்திக்கும் தீபாவளியிலும் திட்டிக்கொண்டே என்னையும் தம்பியையும் எழுப்பினாள். ’எந்திரிங்க மணி 6 ஆச்சி இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க, சீக்கிரம் எந்திரிங்க சாமி கும்பிடணும்.’ என அம்மா திட்ட எங்களுக்கு அது இசைஞானியின் தாலாட்டுப் போல இன்னும் தூக்கம் சொக்கிக் கொண்டு வந்தது.
எப்போதும் இப்படிதான், ஒரு முறை அம்மா ஊருக்கு சென்று இருந்தாள். ஏதோ அவள் அண்ணன் மகனின் கல்யாணம் என்று நினைக்கிறேன். அன்று எப்போதும் 6 மணிக்கு மேல் எந்திருக்கும் நான் 4 மணிக்கே எந்திரித்து விட்டேன். எல்லாம் அவள் திட்டுகின்ற தாலாட்டு இல்லாமல்தான். சரி அப்பா என்ன செய்கிறார் என்று எந்திரித்து பார்த்தேன். அப்பா, அம்மா தந்த காபியைக் குடித்துக்கொண்டே செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார். மெதுவாக நானும் தம்பியும் எந்திரித்து எண்ணெய் வைத்து குளித்துவிட்டு. மிகவும் ஆசையுடன் வாங்கிய புத்தாடையை அணிந்து கொண்டு. தீபாவளி நாளில் எங்களுக்கு பிடித்த இனிப்பு செய்ய இருவரும் அம்மாவிற்கு உதவி செய்தோம்.
அப்பா பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். நான் அப்பாவிற்கு உதவி செய்வதாகக் கூறி இனிப்பு செய்யும் வேலையில் இருந்து தப்பித்து அவர் அருகே அமர்ந்து கொண்டேன். தம்பி, நீண்ட நேரம் அப்பா தீபாவளிக்காக வாங்கி வந்த பொருட்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அதில் குறிப்பாக தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அவன் அழுது அடம்பிடித்து வாங்கிய பட்டாசு பெட்டியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக தெரிந்தது. அம்மா! நான் போய் பட்டாசு வெடிக்கட்டுமா?’ என்று கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தான். சாமி கும்பிட்ட பிறகு வெடிக்கலா முதல்ல இருக்கிற வேலையை செய் என அம்மா கோவமாக பேசினாள். அம்மாவின் கோபத்தை பார்த்ததும். வேலை முடிந்தால் பட்டாசு வெடிக்காலம் என எண்ணி வாடிய முகத்துடன் விரைந்து அம்மாவிற்கு உதவிகள் செய்ய விழைந்தான்.
பட்டாசு வெடிக்க என்னலாம் செய்கிறான், பாருங்க! என தம்பியை கேலி செய்து கொண்டே நானும் அப்பாவும் பூஜைக்கு தேவையான வேலைகளை செய்தோம். அப்பா சிறுவயதில் இருக்கும்போது தீபாவளி நாளிற்காக காத்திருந்த அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து தீபாவளி நாளை எண்ணிக்கொண்டு புத்தாடைகளை எடுத்துக்கொண்டு விடிய விடிய கால் கடுக்க டெய்லர் கடையின் முன் நின்று தைத்து அணியும் ஆனந்தம் இன்று இல்லாமல் போனது. இன்று நாம் நினைத்தால் நினைத்த நேரம் காரணம் இல்லாமல் புத்தாடை எடுக்கிறோம். பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட புலனத்தின்(Whatsapp) வழியாகவே வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அன்று கொண்டாட்ட நாட்களில் மட்டுமே இட்லி சாப்பிட முடியும் என தந்தை கூறியதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
இன்று நவீனத்துவம் பெருகி உள்ளது. இட்லி தினந்தோறும் நம் காலை உணவாக உள்ளது. இது இந்த தலைமுறைக்கு சாபமா? சந்தோஷமா? என தெரியவில்லை என்று அப்பா கூறிக் கொண்டிருந்தார். திடீரென தம்பியின் முணுகள் சத்தம் கேட்டது. இல்லை, அது அவனது புலம்பல். நானும் அப்பாவும் அவன் புலம்பலை கவனித்தோம். ‘என்ன பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்புங்க, நானே பட்டாசு செஞ்சு வெடிச்சிக்கீறே’ நான் மட்டும் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு போயிருந்தா எனக்கு எவ்வளவு பட்டாசு கிடைச்சிருக்கும். பள்ளிக்கு செல்ல வேண்டாம். வீட்டுப்பாடம் செய்ய வேண்டாம். எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று முணங்கி கொண்டிருந்தான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அப்பா ஒன்றும் சொல்ல இயலாமல் மௌனமாக இருந்தார். அவன் சிந்தனை சரிதானா என சிந்திக்கத் தொடங்கினேன். பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுவர்கள் ஒருபோதும் பட்டாசு வெடிப்பதில்லை என்பது அவனுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவன் இவ்வாறு பேசி இருக்க மாட்டான். பள்ளிக்குச் சென்று படித்துக்கொண்டு, நண்பர்களுடன் விளையாடும் பாக்கியம் ஒருபோதும் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் அவன் அறிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் இனிப்புகளுடன் பூஜை முடிந்தது. தம்பியின் முகத்தில் அத்தனை ஆனந்தம். ஒரு மாத காலமாக அவன் காத்திருந்த கனவு நினைவாக போகிறது.
இதோ பட்டாசு பெட்டியை எடுத்துக்கொண்டு தெரு பக்கம் ஓடினான். அப்பா மீண்டும் தொடங்கினார்.தம்பி ஆசையாக வாங்கிய பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு பட்டாசு வெடிக்கும் போதும் அவன் முகத்தில் அத்தனை ஆனந்தம். உலகத்தில் உள்ள மொத்த ஆனந்தத்தையும் ஒன்றாக பெற்றவனை போல குதூகலமாக இருந்தான். கிருஷ்ண பகவான் நரகாசுரனை கொன்ற போது மக்களும் தேவர்களும் அடைந்த ஆனந்தத்தை விட பன் மடங்கு ஆனந்தத்தை பட்டாசு வெடிக்கும்போது பெற்றிருந்தான். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் ஏன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது? எப்பொழுதில் இருந்து கொண்டாடப்படுகிறது? சிலர் கிருஷ்ண பகவான் நரகாசுரனை கொன்றதால் தீபாவளி பண்டிகை தோன்றியது என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் விஷ்ணு பகவான், ராம அவதாரத்தில் சீதையைத் தூக்கி சென்ற ராவணனை கொன்றதால் தீபாவளி பண்டிகை தோன்றியது எனக் கூறுகின்றனர்.
இவ்வாறு ராம அவதாரத்தில் தான் தீபாவளி பண்டிகை தோன்றியது என்பதனை நிறுவுவதற்காக வால்மீகி ராமாயணத்தின் குறிப்புகளை சான்றாக காட்டுகின்றனர். இதில் எது உண்மை, இதில் நாம் எதை ஏற்றுக் கொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் தம்பியின் அழுகுரல் கேட்டு எல்லோரும் தெருவிற்கு சென்று பார்த்தோம். கையில் தீக்காயம் ஏற்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தான். அப்பா, தம்பிக்கு முதலுதவி செய்தார். அம்மா தம்பியை அணைத்து கொண்டு அழுதாள். திடீரென தம்பியை திட்ட ஆரம்பித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அடிக்கடி என் அம்மா இவ்வாறு நடந்து கொள்வது உண்டு. ஒரு நாள் அப்பா இப்படி தான், ‘ஆபீசுக்கு நேரமாச்சு நா ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்’ என்று வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். மறுநாள் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்தவரை அம்மா மருத்துவரிடம் கூட்டி சென்றார். பின் வீட்டிற்கு வந்ததும் ‘நேத்தே சொன்னேன் ஹோட்டல்ல எல்லாம் சாப்பிட வேண்டாம்னு கேட்டீங்களா‘ இப்போ பாருங்க வயிறு வலிக்குதுனு கஷ்டப்பட்டு இருக்கீங்க என அப்பாவை திட்ட தொடங்கினாள். அன்பின் உருவமாய் சில நொடி, அடுத்த நொடியே அக்கறையின் வடிவமகிறாள் அம்மா. தம்பி, அம்மா திட்டியதால் மேலும் அழுதான். ‘இங்க தானே இருந்தீங்க, குழந்தையை பத்திரமா பாத்துக்க மாட்டீங்களா. நீங்க இருக்கீங்கனு தானே நான் உள்ள இருக்கிற வேலையை பார்க்க போனேன்‘ என அனல் வாதத்தை அப்பாவை நோக்கி திருப்பினாள் அம்மா.
இத்தனை நேரம் மௌனமாக இருந்த அப்பா டிவில புதுப்படம் பாக்குறது முக்கியமான வேலையா? என வினாவினார். உடனே அம்மா விடையாக அப்பாவின் மௌனம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார். தம்பி சிறிது நேரம் பட்டாசு வெடிப்பதை வெறுத்தான் முழுமையாக அல்ல. இரவு தூங்கப்போகும் வரை ஊதுவத்தியால் ஏற்பட்ட காயத்தை ஊதிக்கொண்டே இருந்தான். இரவெல்லாம் பட்டாசு வெடிக்கும் இரைச்சல் சத்தம். இவ்வாறு தித்திக்கும் தீபாவளியானது எங்கள் வீட்டில் தீக்காயத்துடன் நிறைவடைந்தது. மறுநாள் காலை விடியல் 9 மணி வரை புகை மூட்டமாக காணப்பட்டது. செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த அப்பா சோகமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். என்ன சோகமா இருக்கீங்க? காபில சக்கரை இல்லையா? எனக்கேட்ட அம்மாவிடம் செய்தித்தாளை காட்டி அப்பா சொல்லத் தொடங்கினார். நேற்று நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பலர் தீக்காயம் அடைந்துள்ளனர்.
குடிசை வீட்டில் இருந்த பலர் இருப்பிடத்தை இழந்துள்ளனர். பட்டாசு வெடித்ததில் பறவைகளும் பாதிப்படைந்துள்ளன என அப்பா வருத்தத்துடன் கூறினார். உடனே அம்மா தீபாவளி பண்டிகை கொண்டாடவே கூடாதுனு சொல்றீங்களா? இல்ல(லை) இல்ல தீபாவளி பண்டிகையே வேணாம்னு சொல்லல ஆயிரம், இரண்டாயிரம்னு காசு செலவு பண்ணி பட்டாசு வாங்குறோம். அதனால யாருக்காச்சும் ஏதாவது ஒரு நன்மை இருக்கா? என அப்பா கேட்டு முடித்ததும். படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து சென்ற தம்பி அப்பாவிடம் பட்டாசு வெடிப்பதால் நம் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பறவைகள் எல்லாம் பாதிப்படைகின்றனர். பலர் தீக்காயம் அடைகின்றனர். ஒரு நாள் பட்டாசு வெடித்த எனக்கே காயம் ஏற்பட்டதே என சோகமாக கூறினான். ஒரு நாள் ஆசையாக பட்டாசு வெடித்த தம்பிக்கு தீக்காயம் ஏற்பட்டதே அதே போல பட்டாசு தொழிற்சாலையில் தினம்தோறும் என் தம்பியைப் போன்ற சிறுவர்களுக்கு எத்தனை காயங்கள் ஏற்பட்டிருக்கும். எத்தனை வெடி விபத்துகளை அவர்கள் சந்தித்து இருப்பார்கள் பசி காரணமாகவும், குடும்ப சூழல் காரணமாகவும் குழந்தைகள் நாளெல்லாம் தன் சந்தோஷத்தை மறந்து, சுதந்திரத்தை இழந்து, உயிரை பணையம் வைத்து பணியாற்றுகின்றனர் என சிந்தனையில் ஆழ்ந்து இருந்த என்னை அப்பாவின் குரல் தட்டி எழுப்பியது.
பலர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் வாழ்வை தொலைத்து விடுகின்றனர். அவர்கள் தீபாவளியின் போது புத்தாடை அணிவதில்லை, பட்டாசுகள் வெடிப்பதில்லை, இனிப்புகள் சாப்பிடுவதில்லை என அப்பா கூறியதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் ஒரு உலகம் நமக்கு தெரியாமல் இருக்கிறதா? அதில் நம்மைப் போன்ற மக்கள் இன்னல்கள் பல அனுபவிக்கின்றானரா? என தம்பியும் கேட்டுக் கொண்டிருந்தான். அப்பா சொல்லி முடித்த உடனே தம்பி சொன்னான் அடுத்த தீபாவளிக்கு நாம் பட்டாசுகளை வாங்க வேண்டாம். வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம், மேலும் தம்பி தொடர்ந்தான். பட்டாசு வெடிப்பதால் காயம் ஏற்படுகிறது. பறவைகள் பாதிப்படைகின்றன. எனவே இனி பட்டாசு வாங்கும் பணத்தில் இனிப்பு, புத்தாடை வாங்கி ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கும், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் என்றான். இவ்ளோ மக்கள் கஷ்டப்படுறாங்களே இந்த அரசாங்கம் பட்டாசு வெடிப்பதை தடை செஞ்சா என்ன? என வில்லம்பை போல அப்பாவை நோக்கி அம்மாவின் கேள்வி வந்து கொண்டிருந்தது. நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் வருடந்தோறும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமே அந்த காரணத்தினால் தான் அரசு பட்டாசு தொழிற்சாலைகளின் வளர்ச்சியை தடை செய்யாமல் இருக்கிறது. அரசாங்கம் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே பட்டாசு தொழிற்சாலைக்கான விழிப்புணர்வு முகாம்கள், மக்கள் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், பட்டாசு வெடிப்பதற்கான நேரம் போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செய்து வருகிறது. எல்லா தொழிற்சாலைகளிலும் இயந்திரங்களின் உதவியுடன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.ஆனால் இன்றும் கூட பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்கள் வெடி மருந்துகளை கைகளாலேயே எடுத்து பட்டாசுகளை தயாரிக்கின்றனர். இது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். எத்தனை குழந்தைகள் தனது அப்பா அம்மாவை வெடி விபத்தில் இழந்திருப்பார்கள். எத்தனை பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை இழந்திருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்திரவாதம் என்பதே இல்லாமல் நம் ஒருநாள் சந்தோஷத்திற்காக தினந்தோறும் அவர்கள் தங்கள் சந்தோஷத்தை இழக்கின்றனர்.
இவ்வாறு அப்பா கூறிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது. காரணம் அவர் வெடிவிபத்தில் உயிர் இழந்த பெற்றோர்களின் செல்லப்பிள்ளை என்பதே. அன்று, முதல் முதலில் உணர்ந்தோம் தித்திக்கும் தீபாவளி பலருக்கு தத்தளிக்கும் தீபாவளியாக உள்ளதை. இனி தத்தளிக்கும் மக்களின் தீபாவளியை தித்திக்க செய்ய வருடந்தோறும் நாம் ஒரு நாள் சந்தோஷத்திற்காக பாடுபடும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் மக்களுக்கு புத்தாடை, இனிப்பு வகைகள், நம்மால் முடிந்த அளவு நிதி உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்தோம்.
சிறுகதையின் ஆசிரியர்
இரா.சுபாஷினி MA.,NET
உதவிப்பேராசிரியர்,
ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகம்,
காஞ்சிபுரம் – 631 501.