தமிழ்  இலக்கியத்தில் மருத நில மக்களின் வாழ்வியல் |முனைவர் சி.ராஜலெட்சுமி

மருதநில மக்களின் வாழ்வியல் சி.ராஜலெட்சுமி
         சங்ககாலத்தில்    வாழ்ந்த   மக்கள்   நிலத்தினை     ஐந்தாகப்     பிரித்து      மலையும்  மலை  சார்ந்த  பகுதியை     குறிஞ்சி   எனவும், காடும்   காடு  சார்ந்த  பகுதியை   முல்லை  எனவும் ,வயலும் வயல் சார்ந்த பகுதியை    மருதம்  எனவும் ,கடலும்  கடல் சார்ந்த பகுதியை  நெய்தல்  எனவும் , பருவ காலங்களில் மழை பெய்யாமல்    வறட்சி  ஏற்பட்டு  நிலம்  பசுமை  இல்லாமல்  வறண்டு  போகும் பகுதியை  பாலை  எனவும்  பகுத்து  அம்மக்கள்  நிலத்தின்  தன்மைக்கேற்ப வாழ்வியலை  அமைத்து  மகிழ்ச்சியோடு  வாழ்ந்துள்ளனர்.
          
மருத   நில    மக்கள்    பிற    திணை      மக்களை    விட       நாகரிகத்தில் மேம்பட்டவர்களாக  இருந்தமை காண முடிகிறது . பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள்   எல்லாவற்றிலும்  சிறப்புற்றிருந்தனர்.    மன்னரின்     வெற்றியையும் ,   உழவரின் கலப்பையையும் நம்பியிருந்ததை

பொருபடை  தரூஉம்  கொற்றமும்  உழுபடை
ஊன்று  சால்  மருங்கின்  ஈன்றதன் பயனே;    (புறம். 35: 25-26)
என்ற புறநானூற்று வரிகளால் அறியலாம்.

மருத நில மக்களின் ஒழுக்கம்             
மருதத்தினை  மக்களின்  ஒழுக்கங்களான  பரத்தமை  ஒழுக்கம் ,வாயில் மறுத்தல்,  புதுப்புனல் ஆடல்,   ஊடல்   தணித்தல்,    பிள்ளை   தாலி   அணிதல்    ஆகியவற்றை  பற்றியும்    மருதத்தினை   பாடல்களில் காணப்படும்   இலக்கிய   நயங்களான    கற்பனை   சொல்லாட்சி   உவமை   உள்ளுறை   பற்றியும்   சங்க இலக்கியங்களில்  அறியலாம்.

மருத நிலத்தின் பொழுதுகள்           
கார்,   கூதிர்,  முன்பனி,   பின்பனி,  இளவேனில்,   முதுவேனில்   என்னும்  பெரும்   பொழுதுகளும் வைகறை,  விடியல்   என்னும்    சிறுபொழுதுகளும்     மருத    நிலத்திற்குரிய     பொழுதுகள்     ஆகும்.

மருத நில மக்கள்
               
மருத   நிலத்தின்    தலைவன்    பெயர்    மகிழ்நன்,   ஊரன்    எனவும்,தலைவியின் பெயர் மனைவி எனவும்,  அந்நில    மக்களின்    பெயர்    களமர்,   உழவர்,   கடையர், கடைச்சியர்,  உழத்தியர் எனவும்  இலக்கியங்களில்  வழங்குகின்றனர்.     
   இவர்களுக்குத்   தெய்வம்    இந்திரன்   வேந்தன்  மேய  தீம்புனல்    உலகம் என்பர் தொல்காப்பியர். (கலைக்களஞ்சியம்  தொகுதி 8 ,1962, பக்கம்.143 ) 
மருத நிலத்தின் கருப்பொருள்கள்
               
மருத நிலத்தின் தெய்வமாக இந்திரன், வேந்தன் இருந்துள்ளதை சங்க இலக்கியங்கள் வழி  அறிய முடிகிறது.      மருத      நிலத்தில்    வாழக்கூடிய   மக்கள் மள்ளர்,   மள்ளத்தியர்,   உழவர்,    உழத்தியர் கடையர்,  கடைசியர்    என்ற பெயரால்  அழைக்கப்பட்டுள்ளனர்.  அந்நிலத்தின் பறவைகளாக நாரை, குருகு,  அன்றில்,  கொக்கு,   வாத்து,போன்றவையும் விலங்குகளாக எருமை, நீர்நாய்,பசு,காளை, ஆடும் மலர்களாக   தாமரை,  கழுநீர்,  குவளை,  அல்லியும்  காணப்படுகின்றன.
                
மருத நிலத்தில் காணக்கூடிய    மரங்கள்  காஞ்சியும்   மருதமும் உணவாக செந்நெல், அரிசியும் உள்ளன.  அக்கால மக்களின்  பண்  மருத பண்ணாகவும்  யாழ் மருத  யாழாகவும்   பறை  நெல்லரியாகவும்  இருந்துள்ளன. மருத நில   மக்களின் தொழில்    களைகட்டுதல்,   களைபரித்தல்,   நெல்லறிதல்,    நாற்று நடுதல், கடாவிடல்,    ஏறுதழுவுதல்,   நெல்லரிதல்  போன்றவை  அவர்களின்     தொழில்கள்.  அம்மக்கள் பயன்படுத்திய  நீர்நிலை, பொய்கை, ஆறு, ஏரி, குளம் போன்றவைகள்.
மருதத்திணை உரிப்பொருள்
               
மருதத்திணையின்     உரிப்பொருள்    ஊடலும்     ஊடல்     தொடர்பான நிகழ்வுகளும்   ஆகும்.  பரத்தையை    நாடி   தலைவன்   செல்வதே   தலைவி தலைவனிடம் கொள்ளும் ஊடலுக்குக் காரணமாக அமைகிறது.

மருதத் திணையைப் பாடிய புலவர்கள்
               
மருத  நிலத்தினை  பற்றி  பல  புலவர்கள்   பாடியுள்ளனர்.  நற்றிணை, குறுந்தொகை,  அகநானூறு, ஐங்குறுநூறு,கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் மருத நிலம் பற்றி பாடப்பெற்றுள்ளன. மருதம் இளநாகனார்,  ஓரம் போகியார்,  ஆகிய  இரு  புலவர்களும்  மருதம்  பாடுவதில்  வல்லவர்கள். ஐங்குறுநூற்றில்   நூறுபாடல்கள்,  கலித்தொகையில் முப்பத்தைந்து பாடல்கள், அகநானூற்றில் நாற்பது பாடல்கள் மருதத் திணையைப் பற்றிய பாடல்களாகும்.

மருத நிலத்தில் கேட்ட ஓசைகள்
                 
மருத நிலத்தில்       பலவிதமான  ஓசைகள்  மக்கள் கேட்டது    கரும்பின் வெள்ளைக்கட்டியை  ஏற்றிச் சென்று  சேற்றில்   மாட்டிக்கொண்ட    வண்டி சக்கரத்தை  தூக்கி விட்டுக்கொண்டு    உழவர்  காளைகளை   அதட்டி    ஓட்டும் ஓசை   கேட்டது. மாலைக்குப்    பயன்படும் பகன்றை    வயல்வெளியில் தழைத்திருந்தது     அதனை     தொழிலாளர்    அரிக்கும்    போது    முழக்கும்    பறையின்   ஒலி    கேட்டது.   
         
மழை பொழியும்   மகிழ்ச்சியால்    மக்கள்     செய்த     ஆரவார    ஒலி    கேட்டது பகன்றை    மாலை  சூடிக்கொண்டு  மக்கள் கைகோர்த்து   ஆடும்   குரவை   தோல் தழுவியாடும்   துணங்கை ஆகியவற்றின்  பாட்டோசை  கேட்டது. இந்த   ஓசைகள்  வானளாவ      முழங்கியதால்      எங்கும்      இனிய   ஓசையை  எதிரொலித்தது.   மீன் தேடும்     குருகுகள்     நீர்     பரப்புகளுக்குச்    செல்லாமல்    மீன்   சீவும்   வீட்டு முற்றத்தில்   இருந்து   மரத்தில்  அமர்ந்து இரை தேட ஆரம்பித்தது  என்றுமதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

அள்ளல் தங்கிய பகடுஉரு விழுமம்கள் ஆர்
களமர் பெயர்க்கும் ஆர்ப்பே,
ஒலிந்த பகன்றை  விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை, இன்குரல்
தளிமழை பொழியும் தண் பரங்குன்றில
கலி கொள் சும்மை ஒலிகொள் ஆயம்
தழைந்த கோதை  தாரொடு  பொலியப் 
புணர்ந்து உடன் ஆடும் இசையே:அனைத்தும்,
அகல் இரு வானத்து இமிழ்ந்து  இனிது இசைப்ப
குருகு நரல ,மனை மரத்தான் 
மீன் சீவும் பாண்சேரியொடு
மருதம் சான்ற தன்பணை சுற்றி ,ஒருசார்   (மதுரைக். 259-270 )                    
மருத நிலத்தின் சிறப்பு           
பெண்ணை   வேண்டி   வரும்   வேந்தன்   செந்நெல்லை   உண்ட   மயில்   மகளிர் ஓட்டுதலால்    பறந்து    சென்று     நீர்த்துறையின்   அருகில்   இருக்கும்   மருத மரத்தில்  வீற்றிருக்கும்  வளம்  பொருந்திய  ஊரோடு  நிறைந்த      பொருளைத் தருவான்.    அவ்வாறு   தர   வில்லையெனில்     அப்பெண்ணின்    தந்தையால் வெகுண்டு   போர்   தொடுக்கப்பட்டு     தன்     நாடு      ஏரியில்     மூழ்க  ஆண்மையை   இழக்க   நேரும் இவ்விரண்டினுள்    ஒன்று   உறுதியாக  நடக்கும் என கண்டோர் உரைப்பதாக புறநானூறு குறிப்பிடுகிறது.
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,
செறிவளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து,
துறைநணி   மருதத்து   இறுக்கும்   ஊரோடு
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ
இரண்டினுள்  ஒன்று ஆகாமையோ அரிதே, 
காஞ்சிப்   பனிமுறி    ஆரங்கண்ணி …
கணி    மேவந்தவள் அல்குல் அவ்வரியே.    (புறம் :344)
மருத நிலத்தின் வளம்
                 
மருத நிலத்தில்   வாழ்ந்த மக்கள்  ஆறுகளில்  உண்டான  வெள்ள   நீர் பெருக்கையும் மழைக்காலங்களில்   கிடைக்கும்   நீர்   பெருக்கினையும்    கண்டு    முதலில்    துன்புற்றனர்   பின்னர்  ஆறுகளில்   பெருகி  வந்த  வெள்ள நீரைக் கட்டுப்படுத்தியும் பள்ளமான இடங்களில் ஏரி  குளங்களை  அமைத்து  நீரை பாதுகாத்தும்  கிணறுகளை  அமைத்து   நிலத்தடி     நீரைப்   பயன்படுத்தியும் உழவுத்தொழிலை மேற்கொண்டு தங்கள் முயற்சியினாலும்      உழைப்பினாலும் உயர்வு   பெற்றனர்.   நீர்வளம்    நிறைந்த     இடங்கள்     சதுப்பு  நிலங்களாகவும் காடுகளாகவும்   இருந்தன.  இவற்றின் நன்னிலங்களாக   மாற்றுவதற்கு  காடு கொன்று   நாடாக்கியும் ,   குளந்தொட்டு    வளம்    பெருக்கியும்    மருத    நில நாகரீகத்தை   வளர்த்தனர்.   காடும்    மேடுமாய்  செடியும்   புதருமாய்    இருந்த பகுதியை வயலாக்கி   இங்கு   வாழ்ந்த    மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.   பசுமை நிறைந்த   வயல்வெளிகளைக்  கொண்ட    பகுதி   மருத நிலம்    ஆகும்.
               
நீர்  வற்றாது  வரும்  வையையின்  மிகுந்த  மணல்  பொருந்திய  அகன்ற துறையைச் சார்ந்த அழகிய மருதமரம்  ஓங்கிய  சோலை,    கடற்கரையினைக்    கரைத்திடும்    காவிரியாறு     தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய   நீர் மிகுந்த வயல்   ஆழ்ந்த  நீரை   உடைய   பொய்கையில்   ஆண்  சங்கானது   பெண் சங்கினொடு மணம்புணரும்  நீர்  நிறைந்த  அகன்ற  வயல் ,  அழகிய    உள் துளைகளையுடைய உடைய வள்ளைக்கொடி வண்டுகள்   உள்ளிருந்து    ஊதும்  தாமரையின்   குளிர்ந்த மலர்  பளிங்கு   மணியினைக்  கண்டாற்  போலும் தெளிந்த  குளம்  வயல்வெளியெங்கும்   பூத்துக்குலுங்கும்  ஆம்பல்,  குவளை மலர்கள் என மருத நிலம் வளம்  நிறைந்ததாய் உள்ளது.

வரு புனல் வையை வார்மணல் அகன் துறை,
திரு மருது ஓங்கிய விரி மலர்க்  காவில்,   (அகம்.36 :9-10)
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல்வார் நெடுங்கயத்துன் அருநிலை கலங்க, ( அகம்.126:5-6)
நாயுடை முதுநீர்க்  கழித்த   தாமரைத்
தாதின்    அல்லி    இதழ்    புரையும்  (அகம்.16:1-2)             
வயல்களில் நன்கு முற்றிய  செந்நெல் கதிர்களைத் தின்ற வயிற்றினையுடைய  எருமையின் முதல்கன்று நெற்கூடுகளின்  நிழலில் படுத்து உறங்கும்.கரும்பு,தென்னை ,வாழை, பாக்கு மரங்கள், மஞ்சள், மாமரங்கள், பனைமரங்கள். இஞ்சி ஆகியவற்றின் விளையுள் நீங்காத வயல்களைக் காணலாம் என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
 
கோல்  தெங்கின் ,குலை  வாழை, 
காய்க்  கமுகின்  கமழ்   மஞ்சள்,
இனமாவின்,   இணர்ப்    பெண்ணை,
முதற்   சேம்பின்,   முளை    இஞ்சி
அகல்  நகர்  வியன்  முற்றத்து, ( பட்டினப்.15-20) 
மருத   நிலத்தின்  அழகு
         
மருத நிலம்   இயற்கையோடு   கூடிய   அழகு    உடையது.   பசுமையான   புதர்களுக்கு    இடையே  ஓங்கி வளர்ந்த  வேழத்தின்   வெண்மலர்கள்  காற்றால் அசைந்து  வானவெளியில் பறக்கும் கொக்கு போல தோற்றமளிக்கும்   என்பதனை   ஐங்குறுநூறு   குறிப்பிடுகிறது.
 
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ       
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்   (ஐங்.17:1-2)
  
 பெண்யானையின்   காது   போல்   விரிந்து    இருக்கும் பச்சை   நிற   இலைகளையும் குளத்தில்  கூட்டமாக அமர்ந்திருக்கும் கொக்கு  போல்  கூம்பி  நிற்கும் மொட்டுகளையும்  பருத்த காம்புகளையும்  கொண்டிருக்கும்  ஆம்பல்    மலர்    அமிழ்தம் போல்    மணம்    வீசிக்கொண்டு இருக்கும் குளிர்ந்த மலர்    கிழக்கில் தோன்றும் வெள்ளியை      போல    இருள் கெட்டு விடியும் வேளையில்  விரிவதும், கயல்மீன்கள்   பிறழ்வதுமான  பொய்கையை   உடையது     மருத நிலம் .   இதனை

 முயப்  பிடிச் செவியின் அன்ன பாசடை
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை 
கணைக் கால் ,ஆம்பல் அமிழ்து நாறு தண் போது, 
குணக்குத் தோன்றும் வெள்ளியின் ,இருள் கெட விரியும்  
கயற்கணம் கலித்த பொய்கை ஊர!   (நற்றிணை.230:1-5)

நற்றிணை    மூலமும்    அறிய முடிகிறது.
          நீலமணி   போன்ற   நீரினையும், மலர்களையும் உடைய பொய்கையில் சேவலோடு விளையாடும் அன்னப்பெடை  தனது  அழகுமிக்க சேவலன்னத்தை   அகன்ற  தாமரை இலை மறைத்ததாக அதனைக் காணாது  விரையக்   கலங்கியது  அறியாமையுடைய  அப்பெடை முழுமதியின்   நிழலை நீருட் கண்டது அதனை  சேவல்  என்று  கருதி  உவந்து  ஓடிச் சென்றது. அந்நிலையில்  தன்னைச்  சேருவதற்கு எதிரே வருகின்ற சேவலைக்கண்டு  மிகவும்  நாணி பல  மலர்கள்  சேர்ந்து  இருக்கும்  இடத்தில் போய் ஒளிந்து கொண்டது. இத்தகைய  அழகு  உடையது  மருத  நிலம்  என்று கலித்தொகையில்  காண முடிகிறது.
 
மணி நிற மலர்ப்பொய்கை , மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் 
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென   
கதுமென  காணாது  கலங்கி, அம்மடப் பெடை 
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி,  
துன்னத்  தன்  எதிர்  வரூவும்  துணை  கண்டு  மிக  நாணி 
 பல் மலரிடை புகூஉம்   பழனம்   சேர்   ஊர!   கேள்: ( கலி.70:1-6)           
அரக்கினைப்  போல சிவந்த  நிறமுடைய செங்குமுத மலர்களும், தாமரை மலர்களும் செங்கழுநீர் மலர்களும், அல்லி மலர்களும் இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று கூடி இணைந்து குத்திக்கொள்ளும்  தன்மையுடைய வளமான வயல்கள் சூழ்ந்த  அழகிய  மருத நிலம் என்று  பின்வருமாறு  கைந்நிலை குறிப்பிடுகிறது.

 அரக்கு    ஆம்பல், தாமரை,   அம்   செங்கழுநீர் 
ஒருக்கு   ஆர்ந்த  வல்லி, ஒலித்து ஆரக் குத்தும் 
செருக்கு   ஆர்  வள   வயல்  ஊரன்   பொய்  பாண!  ( கைந்நிலை 47:1-3)
மருத நில பாகுபாடு
         
சங்ககால     புலவர்கள்    மருத நிலத்தை    ஆறு வகையாக    பிரித்து  காட்டுவர்.  பண்படுத்தப்பட்ட விளைநிலமாக    அமையும்    கழனி     வயல்    என்றும்,   வயல் புலத்தை     அடுத்தமையும்    நீர்    தேங்கிய பழனம்    என்றும்,    ஓடும்    புனலைக் காட்டும்  யாறு  என்றும், புனல் தங்கும் பொய்கை என்றினைய நீர் நிலைகள் என்றும் , மரம் ,  செடி,  கொடிகள்   அடர்ந்த   பொழில்   என்றும் ,   மக்கள் உறைத்தற்குரிதாகப்   பொருந்தும்  ஊர்  என்பன.  இவற்றுடன் நெடுங்கொடி நுடங்கும்  கடிநகர்,  பரத்தை  உறையும்  சேரி என்ற பிரிவுகளையும்    சேர்த்துக்    காண  வேண்டி  உள்ளது.   மருத நிலத்திற்கே    முதன்மையாய்     அமைவது வயல்    இதனையே  கழனி  என்பர்.

மருதநில மக்களின் உணவு
     
மருத  நிலத்தில்  செந்நெல்லும், வெண்ணில்லும்   மிகுதியாக  விளைந்தன.  அவற்றால் ஆன சோற்றை மிதவை என்றும் அழைத்தனர்.  உளுந்து, அவரை  முதலிய   பருப்பு   வகைகளுடன்   நெய்யையும்  கலந்து  விருந்து  படைக்கும்  முறைமையை   மருத  நிலப்  பாடல்கள்  வழி  அறிகிறோம் .  புலி  சோற்றில் பசுவின்  வெண்ணெயை    உருக்கி    இட்டு    உண்டனர்       என்பதையும்     அறிகிறோம்.

உழுந்து தலைப்பெய்த கொழுங்  களி மிதவை 
பெருஞ்  சோற்று அமலை  நிற்ப, நிரை கால்  (அகம்.86:1-2) 
ஆம்பல்    அகல்இலை,   அமலை  வெண்சோறு 
தீம்புளிப் பரம்பின் திறள்கனி  பெய்து, 
விடியல்    வைகறை   இடூஉம் ஊர!   (அகம்.196 :5-7)
               
என   வரும்   தொடர்களால்    பண்டைய   தமிழரின்   உணவுப் பழக்கத்தை அறிய முடிகிறது.
மருத நில விழாக்கள்           
மருத    நில     மக்கள்     மழையை   நம்பி வாழ்க்கையை    நடத்துபவர்கள்    மலைவளம்     வேண்டி   வானோர்  தலைவனான    இந்திரனுக்குரிய     விழாவை    நடத்தினர்   இச்செய்தியை

இந்திர விழாவிற் பூவின் அன்ன         ( ஐங்.62:1)
பரத்தையர் ஆடும் துணங்கை விழா பற்றி  குறுந்தொகை குறிப்பிடுகிறது.
வணங்குஇறைப்    பணைத்தோள்    எல்வளை    மகளிர்
துணங்கை    நாளும்    வந்தன:   அல்வரைக்   ( குறுந்.364:5-6)  
மருத நிலத்தின் விளையாட்டுகள்
               
ஆறுகளில்    பெருக்கெடுத்து   ஓடும்     புதுப்புனலில்     பாய்ந்து     நீந்தி     விளையாடுவதைப்   புனல்    விளையாட்டு    என்பர்.  
                        
கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்                        
அந்திப் பராஅய புதுப்புனல் ,நெருநை   (அகம். 266 :1-2)  
               
நிலங்களைப்     பாகுபடுத்திய    கழனி,    பழனம்,     ஆறு ,    பொய்கை,       பொழில் என்று     வளம் மிக்கதான    மருத நிலத்தில்       ஊர் , நகர், சேரி   முதலிய  வாழிடங்களை  அமைத்துக் கொண்டு  களமர் ,  உழவர் , கடையர் , கடைசியர் , உழத்தியர்   முதலான   குல   மக்களும்  ஊரன் ,நாடன், மகிழ்நன் முதலான தலைமக்களும்  தனது வாழ்வை மேற்கொண்டிருந்தனர்.   மருதநில   மக்கள்  செந்நெல்,      வெண்ணல்    அரிசியிலான      சோற்றையும் ,    உழுந்து ,    அவரை ,  பருப்பு     வகைகள்  ஆகியவற்றால் செய்யப்பட்ட     உணவினையும்     உணவாகக் உட்கொண்டனர்  . விழாக்கள்   மற்றும்   விளையாட்டுகள்     மூலமாகவும்    மகிழ்ச்சியான    வாழ்வினை      வாழ்ந்துள்ளனர்.  இயற்கையோடு    கூடிய     அழகோடும்,  பசுமை   வளம்    கொண்ட     நிலமாகவும்  இருந்துள்ளது என்பதையும்  தமிழ் இலக்கியங்கள்வழி   காணமுடிகிறது.  

துணைநின்ற நூல்கள்
1.அகநானூறு -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2004

2.ஐங்குறுநூறு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் சென்னை.பதிப்பு-  2004

3. கலைக்களஞ்சியம்  தொகுதி 8 ,1962, பக்கம்-143

4. பத்துப்பாட்டு -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் சென்னை.பதிப்பு-  2004

5.புறநானூறு மூலமும் உரையும்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2004

6.கலித்தொகை  – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2017

7.குறுந்தொகை  – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2014

8.தமிழ் இலக்கிய வரலாறு பேரா. மது.ச.விமலானந்தம் ,முல்லை நிலையம்,பாரதி நகர்
         சென்னை-600017.

9.நற்றிணை- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2004

10.பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும்  தெளிவுரையும் ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர்   பதிப்பகம், சென்னை 600108, பதிப்பு-2017

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சி.ராஜலெட்சுமி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி),
பெரம்பலூர்.
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here