Tuesday, October 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home சிறுகதைகள் செங்காந்தள் படை (பகுதி – 1)

செங்காந்தள் படை (பகுதி – 1)

செங்காந்தள் படை_ வீரத்தின் விடியல்
சூரியன் உச்சியில் நிலைபெற்றது. அதனுடைய ஒளி பலருக்கும் எரிச்சலைத் தந்தது. சோனா மலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் சூரியனைத் திட்டிக்கொண்டே வரிசையில் நிற்கத் தொடங்கினர். வெளிர்கருப்பு கலந்த இளநீல நிறத்தில் இருந்த அவர்களுடைய சீருடையில் வியர்வையும் அழுக்கும் சேர்ந்து மக்கிய தோற்றமளித்தன. அந்த நீண்ட வரிசையில் ராசு தன் நண்பன் மூக்கையனோடு நின்று கொண்டிருந்தான்.
“ஊரு நெனப்பாவே இருக்குடா” மூக்கையன் கவலை வடியக் கூறினான்.
“ஏன்டா ஊரு ஊருன்னு பெனாத்திட்டு இருக்க. ஊருல என்னதான் வச்சிருக்க? குட்டி ஏதும் போட்டு வந்துருக்கியா” ராசு கூறியதும் புரிந்தவர்கள் சிரித்தனர்.
“நான் என்ன உன்ன மாதிரியா? வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆவுது. உன் முகத்துலயோ பேச்சுலயோ ஊரப் பத்தின ஏக்கமே தெரியலயே”
ராசுவின் முகம் சிரிப்பிழந்தது “அங்க நமக்குன்னு என்னடா இருக்கு. பயங்குற பேரத் தவிர. ஆனா, இங்கப் பாரு” நெஞ்சில் கையால் தடவினான் “யூனிபாமு, அங்கப் பாரு” வரிசைக்கு முன்னால் கையை நீட்டினான் “நொய் வரகுக்கும், கம்புக்கும் ஆண்டை வீட்டுல கிடையா கெடப்பமோ, அந்த மாதிரிலாம் இல்லாம மூனு வேலயும் அரிசிச் சோறு. தினம், வேலை முடிஞ்சா சோப்புல முழுசா மூனு அணா. இந்தப் பாக்கியம் உன் ஊருல கிடைக்குமா?” மூக்கையனின் நெஞ்சில் செல்லமாகக் குத்தினான், முகத்தில் சிரிப்பேறியது.
“அடேய் பசங்களா, யூனிபார்ம் நம்ம காண்ட்ராக்டர் மட்டும் தான் தராரு. வேற இடத்துல இதே வேலப் பாக்குற என்னோட மச்சானுக்குலாம் யூனிபார்ம் கிடையாது” மாலிக் கூறினார்.
“எங்கள மாதிரியே தமிழ் பேசுறீங்களே!” ராசு வியந்தான்.
“ஆமா, வரவர இவரோட தமிழுக்கும் நம்ம தமிழுக்கும் வித்தியாசமே தெரியல” மூக்கையன் ஆமோதித்தான்.
“ஏன் நம்ம காண்ட்ராக்டர் மட்டும் யூனிபார்ம் தாராரு?” போலா மகதி கலந்த இந்தி மொழியில் வினவினான்.
“என்ன சொல்றாருன்னு சரியா புரியல” மூக்கையன் தடுமாறினான்.
“ஏன் நமக்கு மட்டும் யூனிபாமுன்னு கேக்குறான்” ராசு கூறினான்.
“நீயும் எங்க பாஷைய கத்துக்கிட்ட போலயே?” மாலிக் புன்னகைத்தார்.
“கொஞ்சம் கொஞ்சம் புரியுது. ஆனா, நான் சீக்கிரமே கத்துப்பேன் பாருங்க” ராசு கூறினான். மாலிக் சிரித்தார்.
“சரி, கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க” ராசு நினைவூட்டினான்.
“நம்மள மாதிரி வேலைப்பாக்குறவங்கள காண்ட்ராக்டர் நாய் மாதிரி நடத்துவானுங்க, ஆனா, நம்ம காண்ட்ராக்டர் மார்ட்டின் ரொம்ப நல்லவரு. நீங்களே பாத்துருப்பீங்களே”
“நான் எங்க பாத்தேன். அவரு எப்ப வராரு போராருன்னே தெரில” ராசு கூறினான்.
“இங்கிலீஷ்காரங்க அந்த மாதிரிதான் எல்லாருட்டயும் பழகுவாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்” மூக்கையன் யோசித்தவாறே கூறினான்.
பெருமாள் வரிசையில் இணைந்தார் “எவன்டா அப்டி சொன்னது? ஆயிரம் பேரு ஆயிரம் கதை சொல்லுவான். எல்லாத்தையும் நம்பிடுறதா?”
“என்ன பெருமாள் ஐயா கடைசியா வர்றீங்க?” மாலிக் வெளிப்படையாகக் கேட்டார்.
“இதோ நிக்கிறான்னே” ராசுவின் முதுகில் ஓர் அடி போட்டார் “இவன அந்த ஒரு கூடைய மட்டும் வண்டில எடுத்துக் கொட்டிட்டு போடான்னு சொல்லிட்டு ஒன்னுக்குப் போனேன். கொட்டாம சோத்துக்கு ஓடி வந்துருக்கான்”
“ஐய்ய தாத்தா, ரொம்ப பண்ணாத சாப்புட்டு போயி கொட்டுறேன்” ராசு வரிசையில் முன்னோக்கி நகர்ந்தவாறே கூறினான்.
“கிழிச்ச, ஒக்காலி அந்த எடுபட்ட எட்வட்டு வந்து எடுத்துக் கொட்டுன்னா தான் சாப்புட விடுவேன்னு சொல்லி என்ன புடிச்சிக்கிட்டான். அப்றம், நான் எடுத்துக்கொட்டிட்டு வரேன்” பெருமாள் தன்னுடைய சும்மாட்டைத் தளர்த்தினார்.
“இந்த எட்வட்ட பாத்தப்பறமும் இங்கிலீஸ்காரங்க நல்லவங்கன்னு நம்பியிருக்கனே” மூக்கயன் தன்னைத் தானே திட்டத் தொடங்கினான்.
“மாலிக் பாய், அந்த மார்ட்டின் இதயெல்லாம் கண்டுக்க மாட்டாரா?” ராசு கடுகடுத்தான்.
“முன்னலாம் அவரும் இந்த மாதிரிதான் வேலையாளுங்ககிட்ட ரொம்ப கோவப்படுவாரு. அவரு வீட்டம்மா செத்துப்போனதுக்கு அப்றம் அடியோட மாறிட்டாரு” மாலிக் கூறினார்
“வீட்டம்மா செத்தா கோவம்போயிடும்போல” மூக்கையன் தன்னுடைய மூளைக்குள் தரவுகளை ஏற்றினான்.
“அது எப்டி ஒன்னும் வெளங்கலயே” போலா கேட்டான். மூக்கையன் முழித்தான்.
“என்ன சொல்றான்னா…” மாலிக் தமிழில் கூற முனைந்தார். மூக்கையன் முகம் மலர்ந்தான்.
“ஆங், புரியுது புரியுது” ராசு மாலிக்கை இடைநிறுத்தியதும் மலர் வாடியது. மூக்கையன் ஏமாற்றமடைந்தான்.
மாலிக் தொடர்ந்தார் “ஒருநாள் காடி ரிப்பேர் பண்ண போன ஒருத்தன மார்ட்டின் எதுக்கோ திட்டி அனுப்பிச்சிருக்காரு. மார்ட்டினோட சம்சாரம் காடி ரிப்பேர் பண்ண ஆளு வந்தத மட்டும் பாத்துட்டு, காடி சரியாச்சுன்னு நெனச்சு அதுல போயி அரசமரத்துல முட்டி செத்துப்போயிட்டாங்க. நம்ம கோபம் தான் இதுக்குலாம் காரணமுன்னு மார்ட்டின் கோவப்படுறதயே விட்டுட்டாரு. அதுமட்டுமில்லாம இப்பலாம் வேலையாளுங்ககிட்ட பாசமா நடந்துகிறாரு”
“இந்த எட்வட்டு பயலும் அந்தக் கார்லயே போயிருக்கலாம்” ராசு புலம்பலாய் கூறினான்.
“நீ கூடைய எடுத்துக்கொட்டாததுக்கு எட்வட்ட சாவடிக்க பாக்குறியா” மூக்கையன் நக்கலடித்தான். பெருமாள் உட்பட அனைவரும் சிரித்தனர். ராசு நாக்கைக் கடித்துக் குத்திவிடுவேன் என்பது போல கையால் சைகை செய்தான்.
மாலிக் சிரிப்பை நிறுத்தியவாறே “அவன் தான் அப்போலாம் இங்க இல்லயே. அக்கா செத்ததுக்கு அப்றம் தான் இங்க வந்துருக்கான். சடங்குக்கு வந்தவன் நம்ம எல்லாருக்கும் சச்சரவா மாறிட்டான்”
அனைவரும் உணவை முடித்து வேலையைத் தொடர்ந்தனர். மாலிக் போன்ற வேலை அனுபவம் உடையவர்கள் சுத்தியால் மலையை அடித்துப் பெருங்கற்களாய் பிரித்தெடுத்தனர். பெருமாள் போன்றவர்கள் அந்தப் பெருங்கற்களைத் தேவைக்கேற்ற வடிவில் பிளந்தெடுத்தனர். அதில் எஞ்சிய குறுஞ்சிறு கற்களைக் கூடையில் சுமந்து மூக்கையன், போலா, ராசு போன்றவர்கள் மாட்டுவண்டி, மோட்டார் வண்டி போன்ற லோடு வண்டிகளில் நிரப்பினர். குறைந்த தூரத்தை மாட்டுவண்டியும், நீண்ட தூரத்தை மோட்டார் வண்டியும் இணைத்தன. அந்த வண்டிகள் கற்களை அங்கு இறக்கியப்பிறகு ரயில்வே தொழிலாளர்கள் அந்தக் கற்களை ஜெத்தியன் இருப்புப்பாதை அமைக்கப் பயன்படுத்தினர்.
சூரியன் மறைந்ததும் அனைவரும் கலைந்து தங்களுடைய தங்கும் முகாமிற்குச் சென்றனர். நடுவில் தூண்போல மரத்தை நட்டு அந்த மரத்தைச் சுற்றித் தார்ப்பாயால் விளிம்பில் இழுத்துக் கட்டிய கூம்பு வடிவக் கூடாரங்களால் முகாம் நிறைந்திருந்தது. நான்கு முதல் ஐந்து நபர்கள் தங்குமளவிற்கு வசதியான கூடாரங்கள். குடும்பமாய் வேலை செய்பவர்கள் தனி கூடாரங்களிலும் குடும்பமல்லாத நாலைந்து நபர்கள் சேர்ந்து ஒரு கூடாரத்திலும் தங்கினர். வரிசையில் நின்று இரவு உணவு உண்டபிறகு, முகாமிலிருந்த அரசமரத்திற்கு முன்பாக இளைஞர்கள் கூடினர்.
“வெவரந்தெரியாம பேசாதீங்க கதைச்சொல்லி” மூக்கையன் சினந்தான்.
“என்ன விவரம் தெரியாம பேசிட்டேன்?” கதைச்சொல்லி திடுக்குடன் கேட்டார்.
“நல்லா பாருங்க, அத பாத்தா மரம் மாதிரியா இருக்கு? அது கன்னு, அதுக்கு ஒம்போது வயசு தான் ஆவுது”
“ஓ! அப்படியா… ஆமா, நீ வந்தே ஆறு மாசம் தான் ஆகுது. உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?” கதைச்சொல்லியின் கேள்விக்கு மூக்கையன் முழித்தான் “சொல்லு மூக்கையா…”
“அந்த மரத்துக்குச் சரியா ஒம்போது வயசாவுது, சாட்சி பெருமாள் தாத்தா” மூக்கையன் கூறிவிட்டு ஓடிவிட்டான்.
மூக்கையன் பெரும்பாலான நேரங்களில் சரியான விசயங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்பவன். எனவே, அவனுடைய பேச்சை நம்ப முடியாது. இருந்தாலும், உறுதிப்படுத்திக் கொள்ள சற்று அருகில் சென்று பார்க்கலாம். தண்டு சிறியதாகத் தான் உள்ளது. மூக்கையன் கூறியது சரிதான். சரி! அந்த மரத்திற்கு, இல்லை, கன்றுக்கு சரியாக ஒன்பது வயதாகிறது, சாட்சி பெருமாள் தாத்தா என்று முகாமிலிருக்கும் அனைவருக்கும் தெரியும் என்று வைத்துக் கொள்வோம். பெருமாளுக்குத் தெரிந்த பல விசயங்கள் அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. அதைத் தெரிந்து கொள்வதில் எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. அத்தி பூத்தாற்போல எதாவது ஒரு சில விசயங்களுக்குப் பெருமாள் தாத்தாவை மொய்ப்பார்கள். மற்றபடி அவரும் அவருடைய அறிவும் கசப்புக்கட்டி தான். ஒன்பது வயதாகும் அரசங்கன்றுக்குக் கல்லறைக் கட்டுவது போல அதன் தண்டைச் சுற்றிலும் இளைஞர் கூட்டம் பெருங்கற்களை அடுக்கி வைத்துள்ளது. அது அவர்களுக்கு இரவு உணவிற்குப் பிறகு இளைபாறும் இடமாகத் திகழ்ந்தது. அந்த இடத்தைத் தற்போது புறம்பேசும் மேடை என்று அறிவிக்கிறேன்.
          புறம்பேசும் மேடை, காட்சி 1: இன்று உணவு பரிமாறும் பொறுப்பு போலா மற்றும் ராசுவுடையது. எனவே, வேலையை முடித்த பிறகு உணவு உண்டுவிட்டு போலாவும் ராசுவும் மேடைக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் உணவருந்தி அதிலும் தாமதமேற்பட்டு அவர்களுக்குப் பின்னால் மூக்கையன் ஓடிவந்தான். மேடை நிரம்பி வழிந்தது. போலா தன் மொழி நண்பர்களோடு சேர்ந்து கொண்டான். ராசுவும் மூக்கையனும் ஒரு இடத்தைப் பிடித்து அமர்ந்தனர். இருவரும் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
“என்ன, யோசிச்சிட்டு இருக்க” ராசு கேட்டான்.
“ஒன்னுமில்லையே, ஆமா, நீ என்ன யோசிக்கிற? மூக்கையன் எதிர்க்கேள்வி கேட்டான். ராசு புன்னகைத்தான்.
“அந்த இந்திக்காரியா? அவ அந்த அளவுக்கு ஒன்னும் வாட்டமா இல்லடா. உனக்கெதுக்கு அவள புடிச்சிருக்குன்னே தெரியல”
“டேய் பேரக் கேளுடா. வைஷ்ணவி. தமிழ் பேரு மாதிரியே இருக்குல்ல” கண்ணடித்தான் “பெருமாள் தாத்தாகிட்ட மரியாதையா நடந்துப்பா. அது மட்டுமில்லாம நம்ம கலாச்சாரம் அவளுக்கும் புடிக்கும்னு நினைக்கிறேன்” என்று கூறிக்கொண்டே மூக்கையனைப் பார்த்தான். அவன் வேறு ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் முதுகில் ஒரு அடிப்போட்டு “உன் மாமன் மொவ மூக்கியை விட வைஷ்ணவி எந்த விதத்துல குறஞ்சிப் போயிட்டா? ராசு கேட்டான்.
“அவப் பேரு ஒன்னும் மூக்கி இல்ல வளர்மதி”
“அதுக்கு என்ன இப்போ ஆரத்தி எடுக்கணுமா? இங்க இருக்கவனுங்க எல்லாத்துக்குமே தெரியும். இந்தக் கேம்புலயே வைஷ்ணவி ஒருத்தி தான் உசத்தின்னு. அவள போயி வாட்டமில்லாதவன்னு சொல்ற, அறிவு கெட்டவனே”
மூக்கையனுக்குச் சந்தேகம் கூடுதலாகியது.
தன்னுடைய பேச்சை மூக்கையன் கவனிக்கவில்லை என்ற கோபத்தில் “நான் இங்க பேசிட்டு இருக்கேன். என்னத்த டா யோசிட்டு இருக்க?” ராசு கேட்டான்.
“இந்த மரத்துக்கு எத்தன வயசு இருக்கும்னு நெனக்கிற?” மூக்கையன் எதிர்க்கேள்வி கேட்டான். ராசுவின் கோபம் அதிகரித்தது.
“போய் அந்த மரத்துக்கிட்டயே கேளு” ராசு அங்கிருந்து எழுந்து நடந்தான். மூக்கையன் அமர்ந்துகொண்டு வேறு யாரிடம் கேட்கலாம் என்று சுற்றும்முற்றும் பார்த்தான்.
ராசு தன்னுடைய கூடாரத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தான். செல்லும்வழியில் தான் வைஷ்ணவியின் கூடாரம் இருக்கிறது என்று உணர்ந்ததும் கோபம் தணியத் தொடங்கியது. அவளுடைய கூடாரத்தை நெருங்கி கடக்கக் கால்கள் விரையும் போதே அவனுடைய தலை பக்கவாட்டில் கூடாரத்தை நோக்கித் திரும்பியது. சிம்னி விளக்கு அணையும் தறுவாயில் எரிந்துக் கொண்டிருப்பது, அவளுடைய அப்பா, அம்மா, இறுதியில் வைஷ்ணவி என்ற வரிசை முறையில் படுத்திருப்பது, அவள் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்து, இடதுகாலை மடக்கி அம்மாவின் மீது சாய்த்து உறங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளுடைய சிறிதளவு தெரிந்த நீல உடையின் குறிப்பால் உணர்ந்தது ஆகிய அனைத்தும் ராசு கூடாரத்தைக் கடந்த அந்த இரண்டு மணித்துளிகளில் அவனுடைய மூளையில் பதிவாகின. அந்த பதிவாகிய காட்சிகளில் திளைத்த ராசு தன்னுடைய கூடாரத்தில் சென்று மல்லாக்காய்ப் படுத்தான். பெருமாள் இருமினார்.
“என்ன பண்ணுது?” ராசுக் கேட்டான்.
“எனக்கு ஒன்னுமில்ல. எங்க அவனக் காணோம்?” பெருமாள் தூங்கியவாறே கேட்டார்.
“எதாச்சும் சண்ட போட்டுருப்பானுங்க” மாலிக் புரண்டுபடுத்தவாறே கூறினார்.  மூக்கையன் சரியாக உள்ளே நுழைந்து ராசுவின் அருகில் படுத்தான்.
“தூங்காம சும்மா படுத்துருக்குறத்துக்கு, எங்களாட வந்து காத்தோட்டமா குந்தலாம்ல மாலிக் பாய்” மூக்கையன் பரிந்தான்.
“வெளியே ஒரே குளிருப்பா, வயசாகுதுல ஒடம்புக்கு ஒத்துக்காது” மாலிக் பாய் சலிப்புடன் கூறினார்.
“அப்டினா இங்கயே எதாச்சும் பேசிட்டு இருக்கலாம்ல. எதுக்கு தூக்கம் வராம கண்ண மூடி படுத்துருக்கிங்க” மூக்கையன் கேட்டான்.
“ராத்திரி முழுக்கப் பேசிட்டு இருந்தா, காலையில வேலைக்கு எப்டி போறது?” பெருமாள் கேட்டார்.
“நாங்க என்ன விடியவிடியவா பேச சொல்றோம். ஏதோ கொஞ்ச நேரம் கண்ணுக்குத் தூக்கம் வர வரைக்கும்” ராசு கூறினான். மூக்கையன் புன்னகைத்தான்.
“படுத்த உடனே தூக்கம் வரதுலாம் வரம். அதுக்கு ஒரு வயசு வேணும். அந்த வயசு எங்களுக்கு எப்பவோ கடந்துடுச்சு. இப்டி கண்ண மூடி ரெண்டு மணிநேரமாச்சும் படுத்தா தான் தூக்கம் வரும்” தாத்தா கூறினார்.
“ஆமா, தாத்தா அந்த முச்சந்தியில ஒரு மரம் நிக்கிதே அதுக்கு எத்தனை வயசு இருக்கும்?” ராசு கேட்டான். மூக்கையன் அறிந்துகொள்ள ஆவலானான்.
“இந்தக் கேம்பு இங்க வந்து ஒன்பது வருசமாகுது. வந்த புதுசுல நானு மாலிக்குல்லாம் சேர்ந்து தான் அந்த மரத்தை நட்டோம்” தாத்தா கூறினார்.
“இந்தக் கேம்பு வரதுக்கு முன்னாடியே, உங்களுக்கு மாலிக்கத் தெரியுமா?” இருவரும் வியப்புடன் கேட்டனர்.
“ஆமா, நானு, பெருமாள் ஐயா எல்லாரும் முன்ன ஒரு கேம்புல ஒன்னாதான் வேலைப் பாத்தோம். அப்றோம் கேம்புக்காரங்க அண்ணந்தம்பிக்குள்ள பிரச்சினைன்னு ரெண்டா பிரிஞ்சிட்டாங்க. அப்பதான் அண்ணங்காரர் மார்ட்டின் கேம்பு ஜெத்தியனுக்கு வந்துச்சு” மாலிக் கூறினார்.
“பெருமாள் தாத்தா நீங்க எப்டி அந்தக் காலத்துலயே வடநாட்டுக்கு வேலைக்கு வந்தீங்க?” மூக்கையன் கேட்டான்.
“நாடோடி மாதிரி அலைஞ்சு தான்” இதற்குமேல் பேசமாட்டேன் என்பது போல கூறிவிட்டுப் பெருமாள் புரண்டு படுத்தார்.
எல்லோரும் அமைதியாகி மௌனம் அதிகாலை வரை நீடித்தது. பறவைகள் சத்தங்கேட்டு ராசு மெல்ல கண் விழித்தான். அவன் கண்முன்னே ஓர் உருவம், கரிய உருவம் அமர்ந்திருந்தது. பயத்தில் ராசு “தாத்தாஅஅஅஅ!” கத்தினான்.
மூக்கையன், தாத்தா இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர். மாலிக் சிம்னியை ஏற்றினார்.
மூக்கையன் சலிப்புடன் கூறினான் “ இவனுக்கு இதே வேலையா போச்சு” பெருமாள் சிரித்தார்.
“மாலிக் பாய், விளக்க ஏத்திட்டு தொழுங்கன்னு எத்தன தடவ சொல்றேன்” ராசு மறுபடியும் கத்தினான்.
சிம்னி ஒளியில் மாலிக் முகத்தில் சிரிப்பு வழிவது, தெரிந்தது. ராசு பெருமூச்செறிந்தான்.
          அன்றைய நாள் தொடங்கியது தொழிலாளர்கள் தங்களுடைய சுத்தி, கடப்பாரை, மண்வெட்டி முதலானவற்றைத் தோளில் சுமந்துகொண்டு மலையை நோக்கி நடந்துகொண்டிருந்தனர். ராசுவும் அதிலொருவனாய் நடந்துகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் வந்த மூக்கையன் திடீரென நின்றான். கண்ணை மூடி கதைச்சொல்லியை அழைத்தான். மனக் கண்ணில் ஒரு திரை தோன்றியது. அதில் பல கதைச்சொல்லிகளின் சுயவிவரம் தெரிந்தது (பெயரும் படைப்பும் மட்டுமே). அதில் யார் தன்னுடைய கதைச்சொல்லி என்று மூக்கையனுக்குத் தெரியவில்லை.
“எதுக்கு மூக்கையா கூப்ட?”
“எனக்கு ஒரு சந்தேகம் அதக் கேக்கதான்”
“இந்த மாதிரி நினைச்ச நேரத்துக்குக் கூப்டுகிட்டு இருக்காத. அதுவும் குறிப்பா காலைல. சரி என்ன விசயம் சொல்லு”
“அவசரமான விசயம் அதான் இப்பவே கூப்டேன்”
“சரி, நேரத்த வீணடிக்காம என்னன்னு சொல்லு”
“இந்தக் கேம்புலயே உசத்தி வைஷ்ணவி தான்னு ராசு சொல்றான். அது உண்மையா?”
“இது தான் நீ சொன்ன அந்த அவசரமான விசயமா?” கதைச்சொல்லி கோபத்தொனியில் கேட்டார்.
“ஆமா, ஒரு விசயத்தைத் தெரிஞ்சிகிட்டா தெளிவா தெரிஞ்சிக்கனும்ல அதான்”
“இங்கப்பாரு, உங்க உலகம் புனையத்துல நேரம் அப்டிங்கறது ஒரு விசயமே கிடையாது. ஆனா, எங்க உலகத்துக்கு நேரம் தான் எல்லாமே. என்னால தாராளமா நேரத்தைச் செலவு பண்ண முடியாது. இனி இந்த மாதிரி விசயங்களுக்குலாம் என்ன கூப்டாத”
“மன்னிச்சுடுங்க, கதைச்சொல்லி”
“சரி, நான் கிளம்புறேன்”
“கொஞ்சம் இருங்க ஒரேயொரு சந்தேகம் அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. இதைக் கேக்கலாமா வேணாமா தெரியல”
“பரவால்ல சொல்லு”
“நம்ம ரெண்டு பேரும் வேறவேற உலகத்துல இருக்கோம்னு சொல்லுறீங்க. அப்றம் எப்டி நம்மால பேசிக்க முடியுது … … … தப்பா எதாச்சும் கேட்டுருந்தா விட்டுடுங்க”
“இல்ல சரியாத்தான் கேக்குற. இந்த மாதிரி விசயத்ததான் நீ கேட்கனும். ஏன்னா, நம்ம யாரு என்னன்னு தெரிஞ்சிக்கிறதுதான் எல்லாத்த விடவும் ரொம்ப முக்கியம். எங்க உலகம் கோள வடிவத்துல இருக்கும். உங்களோடது தாள் மாதிரி தட்டையானது. ஆனா, உங்க வாழ்க்கை எங்களோடத விடவும் விறுவிறுப்பா, வியப்பளிக்கிற மாதிரி இருக்கும். என்ன மாதிரி ஒருத்தர் உங்களோட கதையச் சொல்லும்போதுதான் நீங்க உருவாகுறிங்க”
“அப்டினா, எங்கள உருவாக்குனது நீங்க தானா? எங்கள எதுக்கு இந்த இடத்துல வேலை பாக்க வைக்கிறீங்க. எங்க ஊருக்கே எங்கள திருப்பி அனுப்பிடுங்க”
“ஒரு நிமிசம் என்ன பேசி முடிக்கவிடு” அவன் அமைதி காத்தான்.
“நீ இங்க இருக்குறதுக்குக் காரணம் இருக்கு. அது தான் உன் இருத்தலுக்கான குறிக்கோள். இன்னும் சில நாள்ல உன்னைத் தேடி ‘செங்காந்தள்’ உலகத்துல இருந்து ஆட்கள் வரப் போறாங்க. உங்க ரெண்டு பேரையும் இணைக்கிற ஒரு சாதாரண கருவி நான் அவ்வளவு தான். வேற எந்த அதிகாரமும் எங்கிட்ட இல்ல”
“எதுக்கு, எதுக்கு என்ன தேடி வராங்க?” மூக்கையன் கேட்டு முடிப்பதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »