சிலப்பதிகாரத்தில் ஐந்திணை மக்களின் வாழ்வியல்|ப.தனேஸ்வரி

சிலப்பதிகாரத்தில் ஐந்திணை மக்களின் வாழ்வியல்-ப.தனேஸ்வரி
ஆய்வுச்சுருக்கம்
               
சிலப்பதிகாரம் முத்தமிழ்க்காப்பியம் குடிமக்களைக் காப்பியத் தலைமையாகக் கொண்டதால் குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலம்பில் ஐந்திணைகளின் அமைப்பு முறை சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் ஆய்வுக்களமாக ஐந்திணை மக்களின் வாழ்வு எடுத்து ஆராயப்பட்டுள்ளது.
               
சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாக இருந்தவர்கள் குறிஞ்சி நில மக்களே. குறிஞ்சி நில மக்கள் முருகனைத் தெய்வாக வழிபட்டனர். அவர்கள் மலையில் கிடைக்கும் தானியங்கள், தேன் ஆகியவற்றை உண்டு வாழ்ந்ததையும் விலங்குகளை வேட்டையாடினர் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. பிற மக்களைக் காட்டிலும் முல்லை மற்றும் மருத நில மக்கள் மேம்பட்ட வாழ்வு வாழ்ந்தனர் என்பதையும் நகரங்களில் அவர்கள் செல்வச் செழிப்பான வாழ்வு வாழ்ந்ததையும் மாதரி, ஐயை பாத்திரங்கள் மூலம் அறியப்படுகிறது. மக்கள் மன்னர் மீது கொண்டிருந்த அன்பும் மரியாதையும் மலைவாழ் குறவர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
               
சங்ககாலத்தில் தோன்றிய திணைநில மக்களின் பெயர்கள் பிற்காலத்திலும் தொடர்ந்த நிலை அறியப்படுகிறது. குறவர்கள் அருவிகள், சுனைகள் நிறைந்த பகுதியில் வளமையான வாழ்வு வாழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்களை அரசனுக்கு இணையானவராகக் கருதிக் கொண்டனர். நகரத்தில் வசதியான வாழ்வு வாழ்ந்ததும் கண்டறியப்பட்டது. இவர்களின் வளமான வாழ்விற்கு ஆதாரமாக கால்நடைகள் இருந்துள்ளதும் அறியப்பட்டது.
               
முல்லை நிலத்தில் ஏறு தழுவுதல் சிறப்பாக நடைபெற்றது. ஏழு தழுவிய ஆடவனையே மகளிர் விரும்பியதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் கூத்து நடத்துவது வழக்கமாக இருந்துள்ளது. ஐந்திணை மக்களும் மன்னரிடத்தில் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப வாழ்விற்காகப் பெண்களும் பணி செய்துள்ளனர். களை பறித்தல், நாற்று நடுதல், மீன் உலர வைத்தல், திணைப்புனம் காத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தமை ஆராயப்பட்டுள்ளது. பெண்கள் கள் விற்றனர் என்பதும் கள் அருந்தினர் என்பதும் கண்டறிப்பட்டுள்ளது. கணிகையர், பரத்தையர் பற்றிக் கூறும் போது பரத்தமையொழுக்கம் பெரும் குற்றமாகக் கருதப்படவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. ஒழுக்கம் தவறிய ஆண் மகனை பரத்தர் என்ற சொல்லால் இளங்கோ குறித்துள்ளது ஆண் பெண் சமநிலையைக் குறிக்கிறது. ஐந்திணைகளையும் இலக்கண முறைமை பிறழாமல் இளங்கோ சிலம்பில் கையாண்டுள்ளார்.

முன்னுரை
               
தமிழர்கள் தாம் வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பகுத்துக் கொண்டனர். குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடுவதும், முல்லை நிலத்தில் ஆடு மாடுகளை மேய்ப்பதும், மருத நிலத்தில் வேளாண்மை செய்தும் நெய்தல் நிலத்தில் கடல் சார்ந்த மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்கள் செய்தும் வாழ்வது மக்களின் வாழ்வியல் முறைகளாகும்.
               
ஐந்திணை மக்களுள் முல்லை மற்றும் மருத நில மக்கள் அறிவாற்றலாலும் நாகரீக மேம்பாட்டாலும் மற்ற திணை மக்களிடமிருந்து மாறுபட்டு மதுரைப் புறஞ்சேரிப் பகுதியில் வாழ்ந்தனர். இது ‘பதியெழு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்” (15:15-6) என்பதால் அறியப்படுகிறது.  குன்றக்குறவை குறிஞ்சி நில மக்களின் வாழ்வியலையும் ‘ஆய்ச்சியர் குறவை” முல்லை நில மக்களின் வாழ்வியலையும், இந்திர விழாவூரெடுத்த காதை” மருத நில மக்களின் பண்பு நலனையும் ‘கானல் வரி” நெய்தல் நில மக்களையும் ‘வேட்டுவ வரி” பாலை நில மக்களின் இயல்புகளையும் விவரித்துள்ளன.

குறிஞ்சி நில மக்கள்
               
குறிஞ்சி நில மக்களின் வழிபடு தெய்வம் முருகன். இவர்கள் மலையில் கிடைக்கும் தேன், மூங்கிலரிசி, கிழங்குகள் போன்றவற்றை உண்டு வாழ்ந்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதி ‘சிறுகுடி” என்பதை ‘மழை விளையாடுங் குன்று சேர் சிறுகுடி” (108) எனக் குறுந்தொகை காட்டும்.

குறிஞ்சி நிலத்தலைவன்
               
‘வெற்பன்” (24:12:2) ‘சிலம்பன்” (24:11:2) ‘குறவன்” (25:27) எனச் சிலப்பதிகாரத்தில் குறிஞ்சித் திணைத் தலைவனின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க காலத்தில் வழங்கப்பட்ட திணை நில மக்களின் பெயர்கள் பிற்காலத்திலும் தொடர்ந்த நிலையை அறிய முடிகிறது.

தொழில்
               
குறவர்களின் பொதுவான தொழில் தேனெடுத்தலும், வேட்டையாடுதலுமாகும். கொடிச்சியர் தினைப்புனம் காத்தனர்.

‘குருவி ஓம்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி
அருவி ஆடியும் சுனை குடைந்தும்” (24:1:1-2)
குறிஞ்சி நில மக்கள் பொழுது போக்கியதை சிலம்பு குறிப்பிடுகிறது.
 குறவர்கள் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதை ‘குல மலை உறைதரு குறவர்” (24:17:2) என்ற அடிகளில் சிலம்பு குறித்துள்ளது. அருவியும் சோலையும் சூழ்ந்த மலைப்பகுதியில் குறவர்கள் வாழ்ந்தனர். அதனால் குறவர்கள் வாழ்வு வளமிக்கதாக இருந்தமை அறியப்படுகிறது.

குரவைக் கூத்து
               
கூத்து வகைகளில் ஒன்று குரவைக் கூத்து இது ஏழு முதல் ஒன்பது மகளிர் வட்டமாக நின்று கைகோர்த்து ஆடுவது குரவைக் கூத்து குன்றக் குறவை, ஆய்ச்சியர் குறவை என இரு வகைப்படும். குறிஞ்சிப் பெண்கள் முருகனுக்காக ஆடுவது குன்றக் குறவை ஆகும். குறவர்கள் குறிஞ்சிப் பண் பாடவும், இசைக் கருவிகளை இசைக்கவும் குரவைக் கூத்தாடவும் (24:7) வெறியாட்டு நிகழ்த்தவும் (14.11) அறிந்திருந்தனர். குறவைக் கூத்தின் ஒலியும், குறிஞ்சிப் பண்ணின் ஒலியும், திணைக் குற்றும் மங்கையரின் வள்ளைப் பாட்டின் ஒலியும் மலை வளம் காண வந்த செங்குட்டுவனை வரவேற்றதாக சிலம்பு குறிப்பிடுகிறது. இதனால் குறவர்களின் கலையுணர்வு புலனாகிறது.

                அரசனைக் காண வந்த குறவர்கள் ‘ஏழ்பிறப்பு அடியேம்” (25:56) என்று கூறுவதன் மூலம் தன் மன்னனிடம் கொண்ட அன்பும் பற்றும் வெளிப்படுகின்றன.
‘பல்நூறு ஆயிரத்தாண்டு வாழி” (25:63) எனவும், ‘ஊழி ஊழி வழி வழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம்” (25:91:92) எனவும் வாழ்த்தியமை மலை மக்களின் வாழ்த்தும் பண்பைக் காட்டுகிறது.

முல்லை நில மக்கள்
               
சங்க காலத்தில் ஆயர்கள் தம்மை அரசனுக்கு இனையானவராகக் கருதிக் கொண்டனர்.
               
‘நட்ட குடியொடு தோன்றிய           
நல்லினத்து ஆயர்”
               
கலித்தொகைப் பாடல் இதற்குச் சான்றாகும். இவர்கள் ஆயர், கோவலர், இடையர் என்றும் வழங்கப்பட்டனர். இவர்கள் பிற்காலத்தில் இடம் பெயர்ந்து நகரங்களில் வாழ்ந்தனர் என்பதை மாதரி, ஐயை போன்ற ஆயர்களின் வாழ்வு மூலம் அறியப்படுகிறது. முல்லை நில மக்களின் வழிபடு தெய்வம் திருமால் வரகு, சாமை, முதிரை போன்றவை இவர்களின் உணவாகும். கால்நடைகளை மேய்த்து வாழும் இடையர்களுள் ஆடு மேய்ப்பவர் ‘புல்லினத்தார்” என்றும் மாடு மேய்ப்பவர் கோவினத்தார் என்றும் வழங்கப்பட்டனர். இவ்விரு ஆயரும் ‘ஏறு தழுவல்” போட்டியில் வென்று ஒரு குல மகளிரை மணம் புரிதற்குரியர் என்பதை முல்லைக் கலி தெளிவுறுத்தும்.

‘ஆ காத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை” (15:120-121)
               
என்ற வரிகள் ஆயரின் சிறப்பை உணர்த்தும் இவர்களின் வளமான வாழ்விற்கு ஆதாரமாகக் கால்நடைகள் இருந்தன. பெண்கள் மோர் விற்றுப் பொருள் சேர்த்துள்ளனர். ‘அளை விலை உணவின் ஆய்ச்சியர்” (16:3)  என்ற வரிகள் மூலம் ஆண் பெண் இருவரும் இணைந்து தொழில் செய்து குடும்பத்தை நடத்தியமை புலனாகிறது.

ஏறு தழுவுதல்              
சங்க காலத்தில் இருந்து வந்த ஏறு தழுவுதல் சிலம்பிலும் தொடர்ந்தது ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் தலையாய கடமையாகக் கருதப்பட்டது. ஏறு தழுவிய வீரனையே ஆயர் மகள் மணந்துள்ளாள். பருவமடைந்த ஒவ்வொரு பெண்ணும் ஒரு காளையை வளர்ப்பாள். அக்காளையை அடக்கிய இளைஞனையே அப்பெண் மணம் புரிவாள் என்பதை சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை விளக்கும். (17:6-13) காரி எருத்தின் சினத்திற்கு அஞ்சாமல் பாய்ந்து சென்று அடக்கியவனை ஆயமகள் விரும்புவாள் என்பதை,
  
‘காரிகதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ்           
வேரி மலர்க் கோதையாள்”  (17:6)
என்ற கொளு விளக்கும். காளைகளைப் பெண்கள் தொழுவில் வளர்த்தமையினை,
               
‘தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்           
எழுவர் இளங்கோதை யார்” (17:13:2-3)
               
என்ற வரிகள் சுட்டுகின்றன.

குரவைக் கூத்து
               
இன்பத்திலும் துன்பத்திலும் கூத்து நடத்துதல் மக்களின் மரபாக இருந்துள்ளது. திருமாலுக்காக ஆடும் கூத்து ஆய்ச்சியர் குரவை எனப்படும். இது இசையும் கூத்தும் இணைந்து ஆடப்படும். கண்ணகியின் துயர் நீங்க ஆயமகளிர் குரவைக் கூத்து நிகழ்த்தினர்.

‘வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடாடிய
குரவையாடுதும் யாமென்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே”  (17:5:10-12)
என்ற வரிகளில் கண்ணகிக்குத் துன்பம் நேரப் போவதைக் கன்றுக்கு ஏற்படும் துயரென குறிப்பாக உணர்த்தி, அத்துயர் நீங்க குரவைக் கூத்தை நிகழ்த்தியது ஆய்ச்சியரின் உளப்பாங்கினை உணர்த்துகிறது.
ஆயரால் அடக்குவதற்குரிய ஏறுகள் காரி, வெள்ளை, சேய், குரால் என நிறத்தால் பெயர் பெற்றிருந்தன. காரியும் வெள்ளையும் மாயவன,; பலதேவன் ஆகிய கடவுள்களை ஒத்தமையால் ஆய்ச்சியர் குரவையுள் அவை இடம் பெற்றுள்ளன. ஆயர்கள் காடுகளில் ஆக்களை மேய்ப்பவர் அவர்கள் கோடாலி, சூட்டுக்கோல், கறவைக் கலங்கள், புல்லாங்குழல் ஆகியவைகளை உறியில் தொங்கவிட்டு உடன் வைத்திருந்தனர்.
               
‘குழல் வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு           
மழலைத் தும்பி வாய்வைத் தூத”
               
என்று சிலப்பதிகாரம் வண்டுடன் ஆயரை இணைத்துக் கூறுகிறது. ஆயர் குல தெய்வமாகிய மாயோனும் குழலிசை வல்லோன். அவன் குழலில் எழும் முல்லைப் பண்ணின் இசையை ஆய மகளிர் கேட்க விரும்பி யதனை,

‘கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன           
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்           
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழி”
               
என்னும் வரிகளில் அறியலாம். ஆயர்களிடையே இசையும் கூத்தும் ஆகிய கலைகள் சிறப்புற்றமைக்கு சிலம்பு சான்றாகும். குரவைக் கூத்து முடிவில் மன்னனையும் அவன் வெற்றி முரசையும் வாழ்த்தியதை அறிய முடிகிறது. இறைவனை ஆடிப் பாடி வணங்கும் முறைமை நாயன்மார் ஆழ்வார்களின் பக்திப் பாசுரங்களில் நிலைத்த இடத்தைப் பெற்றது. இம்மரபு பழந்தமிழகத்திலேயே உண்டு என்பதற்கு ஆய்ச்சியர் குறவை சான்றாகும்.

மருத நில மக்கள்
               
நதிகளில் ஓடி வரும் நீரை வாய்க்கால்களின் வழியாக ஏரி, குளங்களில் நிரப்பி கரும்பு, மஞ்சள், நெல் போன்றவற்றை பயிர் செய்யும் நீர் வளம் மிக்க  நிலம் மருதம் எனப்பட்டது. அங்கு வாழும் மக்கள் உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர் ஆவர். இவர்களின் வாழிடம் ஊர், பேரூர் எனப்பட்டது. அரிசி, பால் கரும்பு போன்ற உணவுகளை உண்டனர். ஏனைய மக்களை விட மருத நில மக்கள் நாகரீகத்தில் மேம்பட்டவர்கள். சங்க காலத்திலிருந்தே தமிழகம் உழவுத் தொழிலில்  சிறந்திருந்தது. மன்னரின் வெற்றி உழவரின் கலப்பையை நம்பியிருந்ததனை
               
‘பொருபடை தரூஉம் கொற்றம் உழவர்           
ஊன்று சால் மருங்கின், இன்றதன் பயனே”  (புறம் 35)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள் வெளிப்படுத்தும் திருவள்ளுவர் உழவுக்குத் தனி அதிகாரம் அமைத்துள்ளார். உழுதொழிலால் உணவும் பிறவும் நிறையப் பெற்று ஓய்வும் வாய்க்கப் பெற்றவர் மருத நில மக்கள் இவர்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்ததைக் காண முடிகிறது.

ஆடவர் தொழில்
               
உழவர்கள் செந்நெற்கதிர் அறுகு, குவளை போன்ற மலர்களைக் கலந்து தொடுத்த மாலையை மேழிக்குச் சூட்டி உழுதனர். நெற்பயிரை அறுத்துப் போரடிக்கும் போதும் கடா விடும் போதும் பாடல்களைப் பாடினர் வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடல் பாடித் தொழில் செய்வது, தமிழகக் கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ளது. உழத்தியர் நெல் நாற்றுக்களைப் பிரித்து நடும் போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு எனப்பட்டது.

ஏர்மங்கலப்பாடல்
               
கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தியடிகள் ஆகிய மூவரும் புகார் நகரத்திலிருந்து மதுரையை நோக்கிச் சென்றனர். அப்போது அவர்கள் வழியில் கண்ட உழவர்களின் செயல்களை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தியுள்ளார். அருகம்புல்லையும், குவளை மலர்களையும், நெற்கதிர்களையும் கலந்து கட்டிய மாலையை அணிந்து ஏரொடு நின்ற உழவர்கள் ஏர் மங்கலப் பாடலைப் பாடியுள்ளனர். (10:132-135) வயல்களில் வேலை செய்யும் உழவர்கள் பாடல்கள் பாடி உழைப்பின் கடுமையை எளிதாக்கிக் கொள்கின்றனர். கதிரை அரிந்து குவிக்கும் போதும், கடா விடும் போதும், நெல்லை முகந்து கொடுக்கும் போதும் முகவைப் பாட்டுப் பாடினர் (10:136-137)

பெண்களின் தொழில்
               
நாற்று நடுதல், களையெடுத்தல், விளை நிலங்களைக் காவல் செய்தல் போன்றன மருத நிலப் பெண்களின் தொழில்களாகும். தினைப் புனங்களில் பரண் கட்டித் தட்டை என்னும் கருவியால் ஒலியெழுப்பிக் கிளியை விரட்டினர் எனக் குறிஞ்சிப்பாட்டு (43-44 வரிகள்) குறிப்பிடுகிறது. நடவு நடும் பெண்கள் கள்ளுண்டு களித்துப் பாடிய குறிப்பு சிலம்பில் இடம் பெற்றுள்ளது (10:130-131) சங்க காலத்தில் பெண்கள் கள்ளுண்ட நிலை பிற்காலத்திலும் தொடர்ந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்.

கணிகையர்
               
சங்க இலக்கியங்களில் கணிகை பற்றிய செய்தியோ சொல்லோ இடம் பெறவில்லை. பரிபாடல் ‘மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை” (16) என்று கூறுகிறது. ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய பெண் கணிகை எனப்பட்டாள் சிலப்பதிகாரத்தில் ‘கணிகையர்” (5:50) ‘காவற்கணிகையர் (5:50) ஆடற்கூத்தியர் (5:50) ஆடல் மகள் (8:109) பூவிலை மடந்தையர் (5:51) மங்கலத்தாசியர் (6:125) வம்பப்பரத்தை (10:219) கடைகழி மகளிர் (14:71) நாடக மடந்தையர் (22:142) பண் இயல் மடந்தையர் (22:139) என்று கணிகையர் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதில் எவ்விடத்திலும் மாதவியைப் பரத்தை என்ற பொருளில் இளங்கோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                பரத்தையர் இருந்த வீதி இருபெரு வீதி (14:167) எனப்பட்டது. தவம் செய்பவராயினும், காமவயப்பட்ட காமுகராயினும் கணிகையர் வீதியைக் கண்ணுற்றால் அங்கு தங்கிச் செல்லத் தூண்டும் வன்மையுடையவர் பரத்தையர் (14:160:165) பரத்தையர் பிறரைக் கவர்ந்திழுக்கும் தன்மையுடையவர் என்பது புலனாகிறது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஆடவர்கள் கணிகையரை நாடிச் சென்றதற்குக் காரணம் அவர்களின் அழகும் ஆடல் பாடல் போன்ற கலைகளுமே ஆகும். கோவலன் மாதவியை நாடிச் சென்றமைக்கு முதற் காரணம் கலையே என்பது மு.வ.வின் கருத்து (டாக்டர் மு.வரதராஜன் மாதவி ப.26)

பரத்தர்
               
குடும்ப அமைப்பு முறையில் ஓர் ஆணைக் கணவனாக மணந்து வாழ்நாள் முழுவதும் அவனை மட்டும் சார்ந்து வாழ்வது கற்புடை மகளிரின் நெறி. அவ்வாறன்றிப் பல்வேறு ஆண்களுடன் உறவு கொண்டுள்ள பெண்களைக் குறிக்கப் ‘பரத்தை” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பரத்தமைக் குற்றமிழைத்த ஆடவனை வம்பப் பரத்தர் (16:63) என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

நெய்தல் திணை மக்கள்
               
ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு அந்நாட்டு மக்களின் நாகரிகம், பண்பாடு ஆகியன அமையும். கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் நிலம். எனவே நெய்தல் நிலத்தில் கடல் வணிகம் சிறப்புற்றிருந்தது. சேரி, பட்டினம், பாக்கம் ஆகியன நெய்தல் நில மக்களின் இருப்பிடங்களாகும். குடிசைப் பகுதிகள் நிறைந்த குடியிருப்புகள் பாக்கம் எனப்பட்டன. மாட மாளிகைகள் நிறைந்த குடியிருப்புப் பகுதி பட்டினம் எனப்பட்டன. மக்கள் கூடி வாழும் இடம் குடிகள் எனப்பட்டது.
               
கடலுக்குப் பரவை என்ற பெயருமுண்டு. எனவே கடல்வாழ் மக்கள் பரதவர் என்றழைக்கப்பட்டனர். இவர்களை பரதர், பரத்தியர், நுழையர், நுழைச்சியர் சேர்ப்பன் என்றும் வழங்குவர். ‘நுழைமகள்” என்னும் சொல் சிறுபாணாற்றுப் படையில் இடம் பெற்றுள்ளது. (சிறுபாண் 158) மழைக் கடவுளைத் தெய்வமாகக் கொண்ட இவர்கள் வலை வீசி கடலில் மீன் பிடித்த செய்தியை,
               
‘வள்ளை நீக்கி வயமின் முகந்து           
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்”        (மதுரைக் காஞ்சி (255-56)

என்ற மதுரைக்காஞ்சி அடிகளால் அறியப்படுகிறது.

தொழில்
               
மீன் விலைப் பரதவர் என்றும் வெள்ளுப்புப் பகருநர் என்றும் சிலப்பதிகாரம் மொழியும் இவர்கள் தினம் தோறும் கடல் அலைகளுடன் போராடி வாழ்க்கை நடத்துபவர். அரசருக்கு இணையான செல்வத்தையுடைய வணிகரைப் பரதர்; எனக் குறிப்பிட்டுள்ளனர். (2:1-2) இவர்கள் அரசர் தெருவை அடுத்துப் பட்டினப்பாக்கத்தில் வாழ்ந்தனர். கடல் தரும் பொருள்களால் பெரு வணிகம் செய்த செல்வந்தர் வணிகர் படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து சீரிய வாழ்க்கை வாழ்ந்தனர்.
                மீன் பிடித்தலுடன் வலை பின்னல், படகு கட்டுதல் போன்றவையும் பரதவரின் துணைத் தொழில்களாகும். நெய்தல் நில மக்களில் ஆடவரே தலைமைப் பொறுப்பேற்றனர். இவர்கள் மீன்களைக் கொல்லும் தொழிலினர் என்பதைக் ‘கொடுங்கண் வலையால் உயிர் கொள்வான் நுந்தை” (7.18)’ஓடும்  திமில் கொண்டு உயிர் கொல்வான் நின் ஐயர்” (7:19) என்ற பாடல் வரிகளில் பதிவு செய்துள்ளார் இளங்கோ

பெண்டிர் தொழில்
               
ஆடவர் பிடித்து வந்த மீன்களை உலர்த்தி விற்கும் வேலையைப் பெண்கள் செய்தனர். பவள உலக்கையால் முத்துக்களை அரியாகப் போட்டுக் குத்தியமை (7:20:1-2) பரதவரின் செல்வச் செழிப்பைக் காட்டுகிறது. மகளிர் கடற்கரையில் கட்டிய வீட்டை அழிக்கும் சங்குகள் மீது நெருப்தல் நில மகளிர் பொய்க்கோபம் கொண்டு குவளை மலரினை எறிந்து பொழுது போக்கினர்.

கலங்கள்
               
தமிழர்கள் கடலில் செல்வதற்கும் வெளிநாட்டு வணிகத்திற்கும் பெரிய நாவாய்களை பயன்படுத்தினர். உள்நாட்டு ஓடம் பறி எனப்பட்டது. குதிரை முக அம்பி, யானை முக அம்பி, சிங்க முக அம்பி என்பன சிலப்பதிகாரக் காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது. (13:176-178) சிறிய அளவிலான மரக்கலங்கள் தோணி அம்பி என்றும் பெற்றன. மரத்தோணிகள், நாவாய்கள் மற்றும் ஓடங்களும் நீர்த்துறைகளைக் கடக்கப் பயன்பட்டன. கடல் வணிகத்திலும் உள்நாட்டு வணிகத்திலும் மிகுந்த பொருள் ஈட்டி பரதவர் செல்வச் செழிப்பாக வாழ்ந்ததை,
               
‘கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட           
குலத்தில் குன்றாக கொழுங்குடிச் செல்வர்”      (2:7-8)

என்ற  வரிகள் உணர்த்தும்
.
பாலை நில மக்கள்
               
தொல்காப்பியத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நானிலமே குறிக்கப் பெற்றுள்ளது. தமிழகத்தில் பாலை என்ற நிலம் இல்லை. முல்லையும் குறிஞ்சியும் தட்ப வெப்ப வேறுபாடுகளால் வேறுபட்டு பாலை நிலமாக மாறியது.
               
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து           
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்து           
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்”
               
எனச் சிலப்பதிகாரம் பாலை நிலத்திற்கான இலக்கணத்தைச் சுட்டியுள்ளது. ‘கடுங்கதிர் வேனில”; (13:3) ‘கடுங்கதிர் திருகலின்” (12:1) என வேனிலின் வெம்மையும் கொடுமையும் சிலப்பதிகாரத்தில் வருணிக்கப் பெற்றுள்ளன. பாலைத் திணைக்குரிய மக்கள் எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், மீளி, விடலை, காளை எனவும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

தொழில்
               
பாலை நிலம் கொடுமையான வெம்மையை உடையது அங்கு வாழும் எயினர் வழிச் செல்வோரை வருத்தும் உழவைச் செய்து பொருள் ஈட்டுவர். ஆதலால் இவர்கள் வில்லேருழவர் (11:2:10) எனப்பட்டனர். இவர்கள் நாகரிகமில்லாதவராக வில் ஏந்தித் திரிந்த செய்தியை சிலம்பு இயம்பும். ஆனால் பகைநாட்டு வெற்றிக்கு துணையாக இருந்துள்ளனர் என்பதை
‘வேற்றுப்புலம் போகி, நல்வெற்றம் கொடுத்துக்
கழிபேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்”
என்ற அடிகள் மூலம் அறியலாகிறது.

கலைச் சிறப்பு
               
இவர்கள் துடி போன்ற இசைக் கருவிகளை இசைக்கவும் அறிந்திருந்தனர். வேடுவர்கள் வழிப்போக்கர்களிடம் பொருளைக் கவர வரும் போது பறையைக் கொட்டினர். கொற்றவையை வணங்கும் போது இசைக் கருவிகளை இசைத்தனர்.

பெண்கள் தொழில்
               
பாலை நிலத்தில் பெண்களுக்கெனத் தனியாக தொழில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. வேட்டுவவரியில்  ‘கள் விளையாட்டி” (12:16) என்ற சொல் மூலம் பெண்கள் கள் விற்கும் தொழிலில் ஈடுபட்டமையை அறிய முடிகிறது.

வாழிடம்
               
எயினர்களின் வாழிடம் ஊர் மன்றத்தில் இருந்தது. எயினர்கள் கூடி வாழும் இயல்பை உடையவர்கள் அவர்கள் தாங்கள் வாழும் இடத்தை முள்வேலியிட்டுப் பாதுகாத்தமையை
               
‘இடுமுள் வேலி எயினர்” (12:10)
என்ற தொடர் மூலம் அறியலாம். ஐ வகை நிலங்களில் வாழ்ந்த மனிதர்களையும் அவர்கள் தாம் நிலத் தன்மைக்கேற்ப தொழில் புரிந்ததையும் கூடி வாழ்ந்ததையும் சிலம்பு விரிவாகக் காட்டியுள்ளது.

முடிவுரை
               
பழந்தமிழர் நிலப் பகுதியை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பகுத்து அதற்கு இலக்கணங்களையும் வகுத்தனர். அவ்விலக்கண முறை மாறாமல் முதல், கரு, உரிப்பொருள்களை இளங்கோ காப்பியக்; கதையோடு இணைத்து இலக்கியச்சுவை குன்றாமல் இப்பெருங்காப்பியத்தைப் படைத்துள்ளது நினைத்து இன்புறத்தக்கது.

தொகுப்புரை
🌻 ஐவகை நில மக்களுள் குறிஞ்சி நில மக்களே கண்ணகியை தெய்வமாகப் போற்றுவதற்கு காரணமாய் இருந்தனர்.

🌻 முல்லை நிலத்தில் ஆயர்கள் ‘ஏறு தழுவுதல்” சிலப்பதிகாரக் காலத்திலும் நிகழ்ந்துள்ளது.

🌻 இவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் கூத்து நடத்தி மகிழ்ந்துள்ளனர்
.
🌻 மருத நில உழவர்கள் வேலைப் பளு தெரியாமல் இருக்க முகவைப் பாட்டைப் பாடி மகிழ்ச்சியுடன் தொழில் செய்துள்ளனர்.

🌻 பரத்தமை ஒழுக்கமுடைய ஆணைக் குறிக்க பரத்தர் என்ற சொல்லை இளங்கோ கையாண்டுள்ளார்.

🌻 நெய்தல் நில மக்கள் கடற்பகுதியை நம்பியே வாழ்ந்துள்ளனர்
.
பாலை நில மக்கள் துடியும் யாழும் இசைப்பதில் திறம் பெற்றிருந்தனர். ஆகியன ஆய்வில் கண்டறியப்பட்டன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ப.தனேஸ்வரி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோபி, தமிழ்நாடு, இந்தியா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here