Friday, November 13, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home சிறுகதைகள் குடும்பச்சிறுகதைகள் அம்மாவிற்கு அடுத்தவள்|சிறுகதை|முனைவர் த.முத்துலட்சுமி

அம்மாவிற்கு அடுத்தவள்|சிறுகதை|முனைவர் த.முத்துலட்சுமி

Lost and Found_ A Family Reunion_iniyavaikatral
        எங்கு தேடுவது எவ்வாறு தேடுவது ? அம்மா காணாமல் சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது பக்கத்து வீட்டு விஜி அக்காவின் கேள்வி மண்டையில் ரீங்காரமிடுகிறது
என்னம்மா? அம்மா காணாம போயிடாங்கன்ணு சொல்லற?
நம்பர மாதிரி இல்லையே?
   அவங்களுக்கு டிமன்ஸியா அப்படின்னு சொன்னே; எல்லாம் மறந்துடுச்சுன்னு சொன்னே;  வீட்டுக்குள்ள பூட்டி வச்சுட்டு தான் போவீங்க, வேலைக்கு போனா கூட.
    ஆனா இப்ப காணும்ன்னு சொல்றே.   நீயா கொண்டு போய் எங்காயாவது   விட்டுட்டு வந்துட்டியா? என்ற பக்கத்து வீட்டு விஜி அக்காவின்  நக்கல் பேச்சே மண்டைக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
          ஆம்.  அம்மாவுக்கு ஒரு வருடமாக எல்லாம் மறந்து விட்டது. எண்பத்து மூன்று வயதாகின்றது. என்னுடைய  திருமண வாழ்வில் அம்மாவின் பங்கினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.   பண நெருக்கடியால் வேலைக்குச் சென்ற போது குழந்தைகளைப் பார்த்துக் கொண்டது அம்மாதான். கணவரோடு சண்டை வரும் போதெல்லாம் சமாதானப்படுத்தியது அம்மா தான். ஆனால் இன்று டிமன்ஸியாவால் பாதிக்கப்பட்டு எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
          அம்மாவை என் கணவர், என் இரு மகன்கள் என அனைவரும்  மாற்றி மாற்றி  பார்த்துக் கொள்வோம்.  ஆனாலும் சென்ற வாரம் ஒரு நாள் மட்டும் அனைவரும் வெளியே செல்ல வேண்டிய ஒரு கட்டாயம். மகனுக்கு செமஸ்டர் எக்ஸாம். கணவருக்கு மீட்டிங்,  பள்ளி ஆசிரியரான எனக்குப் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே.  அதனால் அம்மாவைப் பார்த்துக் கொள்ள முடியாத நிலை. காணாமல் போன  அன்று வீட்டு வேலைச் செய்கின்ற அக்காக் கூட வர முடியாத சூழ்நிலை. எவ்வாறு அம்மா வெளியே போயிருப்பார்கள்? என்பது சந்தேகமாக இருக்கின்றது.   ஒரு மாற்று சாவியை வைத்திருந்தோம். அதனைக் காணவில்லை. அதை வைத்து வெளியே திறந்து சென்று விட்டார்களா? போலீஸிடம் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டேன்.   தெரிந்தவர்கள் அறிந்தவர்களிடமும் கேட்டு விட்டேன்.  தெரு, தெருவாக அலைந்து கொண்டிருக்கின்றேன் வயதானவர்களை பார்க்கும் போதெல்லாம் அம்மாவின் ஞாபகம்.   பள்ளியில் என் தோழி  லதா
”என்னடி கிடைச்சிட்டாங்களா, எனி குட் நியுஸ் என்று கேட்டு விட்டு  ”வயசானவங்கல கடத்திட்டு போய் பிச்சை எடுக்க விடுவாங்கடி”  என்ற கூடுதல் தகவலைக் சொன்ன   போது வயிற்றைக் கலக்கியது. 
          நாங்கள் வசிக்கும் செய்யாரிலிருந்து சென்னை வரை போட்டோ கொடுத்து நோட்டீஸ் ஒட்டி விளம்பரமும் செய்துவிட்டாயிற்று.  அதில் என்னுடைய போன் நம்பர் தரப்பட்டுள்ளது. என் மகன்களும் போகின்ற எல்லா இடங்களிலும் அந்த நோட்டீசை எல்லா சுவர்களிலும் ஒட்டி வருகின்றார்கள்.  ஆனால் இன்று வரை எந்த ஒரு செய்தியும் வரவில்லை. 
”போன் அடித்தது ஹலோ யார்?  என்ன சொல்லுங்க.”
    நான்  அனகாபுத்தூரிலிருந்து பேசறேன்மா. முன்னாள்  கவுன்சிலர் தயாளன்.  உங்க நோட்டீஸ்ஸ பார்த்தேன்.   அந்த போட்டோல இருக்குற அம்மா எங்க வீட்ல தான் இருக்காங்க.  நீங்க …என்று கேட்ட போது சென்ற உயிர் மீண்டும் வந்தது.
    ஆமாங்க என் அம்மாதான். அவங்க நல்லாருக்காங்களா? என்பதை கேட்காமல் இடைமறித்தார் கவுன்சிலர்.
 சரிம்மா, வந்துருங்க நேர்ல பேசாலாம்.  வாட்ஸ் அப்பில் லொகேஷன் அனுப்பறேன்” என்ற போது சென்ற என்ற போது மனதில் நிம்மதி ஏற்பட்டது.
”சரிங்க ரொம்ப சந்தோஷம்.
          நான் கண்டிப்பா உடனடியாக வரேங்க ஐயா.  இப்பவே கிளம்பறேன் சாயந்திரம் ஆகும்.   நான் செய்யாறுல இருக்கிறேன்.   கால் டாக்ஸி பிடித்து வந்துடறேன், கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க அம்மாவ  நேரத்துக்குச்  சாப்பிட வைங்க.  அவங்க சுகர் பேசன்ட்” என்ற என்னை மீண்டும் இடைமறித்தார் கவுன்சிலர்.
          ”நான் ஒரு மாசமா  பாத்துட்டு இருக்கேம்மா.  எனக்கு தெரியும். எங்க வீட்டு வாசல்ல வந்து உட்கார்ந்து இருந்தாங்க.  அவங்களுக்கு ஒன்னும் தெரியல.  எதுவும் புரியல,   சரி வயசானவங்களா இருந்தாங்க, காதுல கழுத்துல நகை இருந்தது.
   வசதியான  குடும்பத்தச் சேர்ந்தவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன். இவங்கள விட்டுட்டா யாரவது கடத்திட்டு போக சான்ஸ் இருக்கு.  என்ன பிச்சை எடுக்க விடுவாங்க, ஏதாவது கொடுமை படுத்துவாங்க, அதனால வெளியே விடாம வச்சிருந்தேன்.  
  ஆனா எங்க வீட்டுக்குள்ள வரல.  கார் பார்க்கிங் இடத்திலேயே உட்கார்ந்து இருக்காங்க அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே இருக்கிறாங்க.
       பல்லாவரம் பக்கமா வந்தேன். பார்த்தா நோட்டிஸ் ஒட்டி இருக்கு.  அதான் உங்க நம்பருக்குப் போன் பண்றேன். நீங்க வாங்க. ஆனா உங்கள அடையாளம் கண்டுபிடிச்சா தான் உங்க கூட அனுப்புவேன்” என்ற கவுன்சிலர் எனக்குத் தெய்வமாகத் தெரிந்தார். என் பக்கத்து வீட்டு விஜி அக்காவிடம் செய்தியைக் கூறினேன்.
          ”நீங்களும் வேலைக்கு போறீங்க,  ஆள் வச்சும் பார்த்துக்குறீங்க,  ராக்கி நாய் கூட இருக்குது,  அதையும் மீறி அவங்க போயிருக்காங்கன்னா? கண்டுபிடிச்சிட்டு வந்தா மட்டும் இருந்துருவாங்களா?  திரும்பவும் காணாம போயிடா என்ன பண்ணுவீங்க?  ஏதாவது ஆசிரமத்துல இல்லாட்டி ஹாஸ்பிடல்  சேர்த்து பார்த்துக்கோங்க” என்ற விஜி அக்காவின் அறிவுரையை என்னால் ஏற்கமுடியவில்லை.
     பல நேரங்களில் எனக்காகக் கை கொடுத்த தெய்வம் அவர்களைப் பார்த்துக்கொள்வது என் கடமை.  அதனை எவ்வாறு அனைவரிடமும் எடுத்துரைப்பது.   
       சரிக்கா,  அம்மாவ கூட்டிட்டு  வந்த பிறகு இதப்பத்தி பேசிக்கலாம்.  ராக்கி இருக்கான். யாரும் இல்லனா கத்துவான்.   அவன பாத்துக்கோங்க. அவரும் பசங்களும் வர லேட் ஆகும்” என்று சாவி கொடுத்துவிட்டு நான் கிளம்பினேன்
          என் கணவர் வேலைக்குச் சென்றிருக்கிறார்.  மகன்கள் கல்லூரி சென்று இருக்கின்றார்கள் அதனால் அவர்களிடம் விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு நானே தனியாக கால் டாக்ஸி பிடித்து கிளம்பினேன் போகும்போது பழைய ஞாபகங்கள் தோன்றியது.
          திருமணம் முடிந்து என் மேற்படிப்பின் போது செய்த உதவிகள் பல.  இரவில் கண் விழித்துப் படிக்கும் போது என்னோடு அமர்ந்து அம்மா. திருப்புகழ் படிப்பது தனக்காக அல்ல எனக்காக. பகலில் வேலைக்குச் சென்று விட்டு மேற்படிப்பிற்காக  இரவில் படிக்கும் எனக்கு அம்மா தரும் தேனீரில் அன்பின் சுவைதான் மிகுந்திருக்கும்.  ஜுரத்தோடு படுத்திருக்கும் போது ரசம் சாதம் ஊட்டி விடும் அம்மாவின் பாசத்தினால் நலம் பெற்றது என் உடம்பு மட்டுமல்ல  மனதும். ஆனால்  டிமென்சியா வந்த பிறகு அம்மாவினால் பல பிரச்சனைகள்.
          மறதி என்ற பெரிய பிரச்சனை.  அனைவரையும் மறந்த பிறகு, என்னுடன் கோபித்துக் கொண்டு சண்டைப் போட்டு விட்டு மாமி வீட்டுக்கு சென்று விட்டார்கள். 
          ”யாரோ ஒரு வேலைக்காரி அங்க வந்து இருக்கா எனக்கு அவளை பார்த்தாலே புடிக்கல” என்று என்னை பக்கத்து வீட்டு மாமியிடம் கூறியதைப்   பின்னால் இருந்து வருத்தத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.
          மாமிக்கு மிகுந்த மகிழ்ச்சி.  ஒவரா திமிரா இருப்ப;  இரு  உன்ன வச்சு செய்யுறேன் என்று மாமியும்  தெருவையே அழைத்து சமாதானம் செய்வதுபோல் என் அம்மாவின் பலகீனத்தை உலகரியச் செய்தார்.  பிறகு என் கணவர் அழைத்த பிறகு தான் அம்மா,  வீட்டிற்குள் வந்தார்கள்.  என் மகன்களும் பல நேரங்களில் மருத்துவமனையில் சேர்த்து விடலாமா? என்றார்கள். அவர்கள் படிப்பிற்குக் கூட அம்மா தான் ஊரில் இருந்து நிலத்தை விற்று உதவினாள்.  நன்றியை எவ்வாறு  விடுவது?
  கால் டாக்ஸி இறுதியாக அனக்காபுத்தூரை அடைந்து. அரசியல்வாதியின் வீடு.  வீட்டிற்குள் செல்ல பயமாக இருந்தது, கவுன்சிலர் காரணமல்ல. பயத்திற்குக் காரணம் என் அம்மா தான் அம்மாவிற்கு என்னை அடையாளம் தெரியுமா? அல்லது மறந்து இருப்பார்களா?
          அங்கு என் அம்மா வாசலிலேயே உட்கார்ந்து இருந்தார்கள்.  என்னைப் பார்த்ததும்  ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டாள். அப்பொழுது கவுன்சிலர் வெளியே வந்தார்.  அவருக்குச் சொல்லாமலே எல்லாம் புரிந்தது. கவுன்சிலர் அம்மாவிடம்
”அம்மா இவங்க யாரு?  உங்களுக்கு தெரியுதா?  சொல்லுங்க” என்றார்.
”என் மருமக முத்து” என்ற என் மாமியாரை மகிழ்ச்சியோடு பார்த்தேன்.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் த. முத்துலட்சுமி
உதவிப்பேராசிரியர்,  
தமிழ்த்துறை, 
சுயநிதிப்பிரிவு,
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட்
மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை-44.

அம்மாவிற்கு அடுத்தவள் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »