இதற்கு மற்றொரு பெயர்களாக மெய்ம்மை இயல் / குறிக்கோள் நிலை (Idealism) என்றும் அழைப்பர்.
இலக்கியத் திறனாய்வாளர்கள் சிந்தனையில் நீண்ட காலமாக ஆய்வுக்குரிய ஒரு முக்கிய இலக்கியக் கோட்பாடாக இருந்து வருகின்றது. உலகெங்கும் உள்ள பல்வேறு இலக்கியங்களில் காணப்படும் செய்தியாக விளங்குவதுமாகிய நடப்பியல் இன்றைய நிலையில் பரவலான முறையில் விளக்கப்பட்டு வருகின்றது.
இலக்கிய இயக்கங்களுள் ஒன்றாகிய புனைவியல் என்பதற்கு எதிராக இவ்வியக்கம் எழுந்தது என்ற கருத்துடையாரும் உண்டு. இந்நடப்பியலும் குறிக்கோள் நிலையும் (Idealism) கவிதை, நாடகம், காவியம், புதினம் முதலிய பலவகை இலக்கிய வகைகளோடு தொடர்புடையன. ஓரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் படைப்பவனுடைய மன நிலைக்கும் உலகிற்கு அவன் வழங்க விரும்பும் கலைப்படைப்பின் தன்மைக்கும் ஏற்றபடி, நடப்பியலும் குறிக்கோள் நிலையும் மிகுந்தோ குறைந்தோ காணப்படுகின்றன. இவ்விரண்டையும் இலக்கியப் படைப்பாளர் எவ்வெவ்வகையில் கடைப்பிடிக்கின்றனர் என ஒருவாறு நாம் இலக்கியப் படைப்புகள் வாயிலாக அறிய முடியலாமே அன்றி இவற்றைத் தம்படைப்புகளில் பயன்படுத்தும் உரிமையை தாம்கட்டுப்படுத்த இயலாது. இனி, நடப்பியம் பற்றிய சில தனிச் செய்திகளையும் நடப்பியல் குறிக்கோள் நிலை ஆகியவற்றுக்கிடையே உள்ள வேற்றுமைகளையும் காண்போம்.
நடப்பியல் ஒரு வரையறை
நடப்பியல் பற்றிய பல செய்திகளை நோக்கும்போது, பொதுவாக நடப்பியல் என்பது சாதாரண மனித மனத்திற்குத் தோன்றும் வண்ணம் நடைமுறையிலே உள்ளதை உள்ளபடி காட்டுவதோடு தொடர்புடைய கலைக்கூறாகும். இங்ஙனம் ‘பிரின்ஸ்டன் கலைக் களஞ்சியம்’ கூறுவதைச் சற்று வேறுவகையாகச் சுருக்கமான முறையிலும் விளக்கலாம். நடைமுறையில் உள்ளதை உள்ளவாறு அழகுறச் சித்தரித்துக் காட்டுவது நடப்பியல் என்று கொள்ளலாம். நடப்பியல் பாங்கில் படைக்கப்படும் ஒருகுறிப்பிட்ட இலக்கிய வகையில் சாதாரண மனிதர் இடம் பெறுவர். சாதாரண சூழ்நிலைகள் இடம்பெறும். சாதாரண செயல்முறைகள் சுவையாக விளக்கப்படும். சாதாரண பின்னணிகள் சித்தரிக்கப்படும்.
ஒரு கடற்கரையில் நாம் காணும் காட்சிகள், ஒரு கல்லூரியில் நாள்தோறும் காணப்படும் நடைமுறைகள், ஒரு தொழிற்சாலையில் நாம் பார்க்கும் காட்சிகள், ஒரு சாலை ஓரத்தில் ஏழைமக்கள் மேற்கொள்ளும் எளிய வாழ்க்கை முறைகள், ஒரு பொது அலுவலகத்தில் காணப்படும் நடவடிக்கைகள், சமுதாய அளவில் பல்வேறு நிலையினரும் நாள்தோறும் இயங்கும் இயக்க நிலைகள், குடிசை வாழ்மக்கள் ஒவ்வொரு நாளும் வறுமைக்கிடையே போராடிக்கொண்டு வாழ்ந்து செல்லும் நிலைகள் முதலியன ஆங்காங்கே உள்ளபடி அழகுறச் சித்தரித்துக்காட்டப்படுவது நடப்பியலாகும்.
நடப்பியலில் பின்பற்றப்படும் முறைகள்
எந்தவகை இலக்கியம் நடப்பியலின்படி படைக்கப்படுகிறதோ அந்தவகை இலக்கியத்தில் மிகையான கற்பனை கலந்த காட்சிகள், அளவுக்கு மீறிய உவமை, உருவகங்கள் முதலியன தவிர்க்கப்படுகின்றன.
கவிதை, நாடகம், காவியம், புதினம், புதுக்கவிதை முதலியவற்றுள் ஏதேனும் ஒரு வகையில் நடப்பியலை வெளிப்படுத்தலாம். ஆயின் நடப்பியல் என்பது பெரும்பாலும் வருணனை முறையில் அமையும் இலக்கியங்களில் (Descriptive Literature) மிகுதியாக வழங்கும். நடப்பியல் முறைமை கவிதையில் குறைவாக இடம்பெறும்; காவியத்தில் சற்று மிகுதியாகும்; சிறுகதை நாவல்களில் அதிகமாகும்; சமூகவியல் நாவல்களில் மிக அதிகமாகும்; நாடகத்திலும் அதிகம் ஆகும்; இன்று எழுந்து வளர்ந்து பெருகும் புதுக்கவிதையிலும் மிகுதியாக இடம்பெறத்தொடங்கியுள்ளன.
ஏதேனும் ஒன்று நடப்பியல் முறையில் சொல்லப்படுகிறது என்பதற்கு இரண்டு வகையான அடிப்படைகள் உள்ளன.
ஒன்று: மனித ஆற்றலுக்கும் செயலுக்கும் உட்பட்டதாக, நம்மால் முடியக் கூடியதாகத் தெரிய
வேண்டும். (it is Possible)
இரண்டாவது: பெரும்பாலும் நடக்கக் கூடியதாக இருக்க வேண்டும். (It is Probable)
நடப்பியலைக் கண்டு காட்டும் எழுத்தாளர் அல்லது இலக்கியப் படைப்பாளர் தாம் நடப்பியலில் காண்பதைச் சொல்லுவதோடு அந்நடப்பு தம் மனத்தே தோற்றுவிக்கும் சிந்தனை அல்லது உணர்ச்சிகளையும் இணைத்துச் சொல்லலாம். நடப்பியல் என்பது பொருளோடு (Content) தொடர்புடையதா அல்லது வழங்கும் முறையோடு (Form) தொடர்புடையதா என்ற ஒரு விவாதமும் எழுகின்றது. பொதுநிலையில், நடப்பியலைப் பொருளோடு வழங்கும் முறையோடும் தொடர்புடையதாகக் கொள்வதே தக்கதென்று தெரிகின்றது.
சோசலிச நடப்பியல் (Socialist Realism)
இன்றைய நிலையில் நடப்பியல் என்பதன் மிக முக்கிய வளர்ச்சியாக ‘சோசலிஸ நடப்பியல்’ கருதப்படுகின்றது. இதன் சில முக்கிய கோட்பாடுகளை டாக்டர் ந.பிச்சமுத்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
(1) பொது உடைமைத் தத்துவத்தில் பற்று
(2) மக்கள் தொண்டு
(3) சுரண்டப்பட்ட வர்க்கச் சார்பு
(4) தொழிலாளர்களின் போராட்டங்களில் நெருக்கமான பிணைப்பு
(5) சோசலிஸ்ட் மனிதாபிமானம்
(6) அனைத்துலகப் பார்வை
(7) சமுதாயம் முன்னோக்கித்தான் வளர முடியும் என்னும் நன்னம்பிக்கை
(8) சடங்கியல், அக நோக்குவாத இயற்பண்புவாத மறுப்பு, பழமை எதிர்ப்பு ஆகிய கூறுகள்.
நடப்பியலும் குறிக்கோள் நிலையும்
நடப்பியலைச் சுவையாகப் படைத்துக்காட்ட முடிவது போலவே குறிக்கோள் நிலையையும் சுவையாகப் படைத்து காட்டமுடியும். உள்ளபடி கூறுவதில் உண்மை வாழ்க்கையின் பிரதிபலிப்பு இருப்பதால் அனுபவவகையில் ஒருவகைச்சுவை ஏற்படுகிறது. குறிக்கோள் நிலையிலோ விழுமிய வாழ்க்கையின் பிரதிபலிப்பு இருப்பதால் மேலோங்கிய மனித உணர்வுக்கும் பண்பாட்டுக்கும் அடிப்படையான ஒருவகை விழுமிய மனஉணர்வு எழுகின்றது.
நடப்பியல் என்பது நடைமுறை வாழ்வின் பல பகுதிகளையும் சிறப்பாகக் கொண்டு இயங்குவது. குறிக்கோள் நிலையோ மனித சக்தியின் மிக உயர்ந்த எல்லைகளை எட்டிப்பிடிக்க முனையும் மிக அரிய வாழ்வு ஓவியங்களை நமக்குக் காட்டுவது. நடப்பியல் மனிதன் இன்னவனாக இருக்கின்றான் என்று காட்டுவதற்குத் துணைசெய்வது போலவே குறிக்கோள் நிலையும் அவள் இன்னவனாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி மிக மேலோங்கிய நிலைக்கு அழைத்துச் செல்வதற்குத் துணை செய்கின்றது.
நடப்பியல் தனக்குரிய சில பயன்களைக் கலை உலகில் விளைவிப்பதுபோலவே குறிக்கோள் நிலையும் கலை உலகில் சில பயன்களை விளைவிக்கின்றது. நடப்பியல், அன்றாட வாழ்வைச் சித்தரித்துக் காட்டும் புதினம், சிறுகதை போன்ற இலக்கிய வகைகளின் தோற்றத்திற்குக் காரணமாக அமைவது போலவே குறிக்கோள் நிலையும் இராமாயணம் போன்ற மிக அற்புதமான குறிக்கோள் நிலைக்காவியங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்றது. இவ்வாறு இவ்விரண்டையும் ஒருவகையாக அவ்வவற்றின் தன்மை நோக்கியும் பயன் நோக்கியும் பிரித்தறிய முடிகின்றது.
இன்றைய இலக்கியப் படைப்பாளர் பலரும் புதினம், சிறுகதை போன்ற இலக்கிய வகைகளில் நடப்பியலை மிகுதியாக அமைத்துக்காட்டுகின்றனர். குறிக்கோள் நிலையில் எழுதப்படும் நாடகங்கள் காவியங்கள் புதினங்களும் சிலரால் இயற்றப்படுகின்றன. கலையின் பொதுவான அமைப்பிற்கும் நீண்டகாலச் சுவை விருந்திற்கும் இந்த இரண்டும் இன்றியமையாதன. இலக்கியப் படைப்பில் நடப்பியல் மிகுந்து குறிக்கோள் நிலை இல்லாது போயின் கலையின் விழுமிய பயன் இல்லாது போய்விடும். இதனால் உண்மை வாழ்வினை நம்மால் அறிய முடியுமேயன்றி உயர்ந்த வாழ்வினை நம்மால் அறிந்து கொள்ள இயலாது. அவ்வாறே இலக்கியப் படைப்பில் குறிக்கோள் நிலை மிகுந்து நடப்பியல் இல்லாது போய்விடின் கலையின் சுவை கெட்டுவிடும். கலைஞன் படைத்த படைப்பு சாரமற்றுப் போய்விடும். எனவே, மனித வாழ்வில் உள்ளதைக் காட்டும் பாங்கும் உயர்ந்ததைக் காட்டும் பாங்கும் கலைஞரிடம் அமைவது இன்றியமையாதது. மொத்தத்தில் நடப்பியலும் குறிக்கோள் நிலையும் கூடிக் கலைவாழ்வின் முழுப்பயனையும் நமக்கு நல்குகின்றன.
நடப்பியல் வகைப்படி இலக்கியங்கள்
நடப்பியலின்படி, மனித மனத்தின் சாதாரண எல்லைக்கு உட்பட்ட அளவிற்கே கலையுலகக் காட்சியானது அமைத்துக் காட்டப்படுகின்றது. இவ்வுண்மை நிலைப்படி, பொருளாசையால் போகும் ஒருவனின் மனநிலைகளைச் சித்தரித்துக் காட்டி அவன் வாழ்வில் அடையும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு புதினத்தை இயற்றலாம். அரசியல் உலகில் தன்னிகரில்லாத செல்வாக்கைப் பெற்று உடனிருந்தவரின் சூழ்ச்சியால் வீழ்ந்துபோன தலைவன் ஒருவனின் அரசியல் வரலாற்றைக் குறித்து ஒரு புதினத்தைப் படைத்துக் காட்டலாம்.
இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியினாலும் பொதுவாழ்க்கைச் சிக்கலினாலும் எழுத்துள்ள புதிய வாழ்க்கை நிலைகளை எடுத்துக் காட்டும் வகையில் ஒரு புதினத்தைப் படைக்கலாம். நடப்பியல் பற்றி இவ்வகையில் நாடகங்களையும் இயற்றலாம். ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலரிடையே உள்ள நட்பு, பகைமை ஆகிய உணர்வுகளையும் அவ்வுணர்வுகளால் எழும் அலுவலகப் போராட்டங்களையும் நன்கு புலப்படுத்தும் வகையில் ஒரு நாடகத்தை இயற்றலாம். உளவியல் முறையில் ஒருவனுக்கு நிகழும் சிக்கல்களைச் சித்தரித்துக் காட்டும் நடப்பியல் நாடகத்தை இயற்றலாம்.
இவ்வாறே இன்றைய பொது வாழ்க்கையில் அன்றாடம் காணப்படும் சிச்கல்களை எடுத்துக் காட்டும் முறையில் ஒரு காவியத்தை இயற்றலாம்.
புதினத்தில் பெயர்களையும் நாட்களையும் தவிர ஏனைய ஒவ்வொன்றும் உண்மையாகும். வரலாற்றில் பெயர்களையும் நாட்களையும் தவிர வேறு எதுவும் உண்மை யில்லை எனக் கூறப்படுவது, நடப்பியலைப் புதினமானது எந்த அளவுக்கு மிகுதியாகக் கொண்டிருக்கின்றது என்பதை நமக்குக் காட்டவல்லதாகும். இவ்வகையில் புதின ஆசிரியர் தனது புதினத்திற்கு எடுத்துக்கொண்ட பொருளை கலையாகப் படைந்து வழங்குவதில் மிக்க உரிமைகளை எடுத்துக் கொள்ளலாம். தனக்குக் கிடைத்த செய்திகளைப் புதுமையாகவும் வியக்கத்தக்க முறையிலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அவர் புதியதாகவே சிலவற்றைக் கண்டுபிடிக்கலாம்.
ஆயினும் வாழ்வு பற்றிய அடிப்படையான பெரிய நிகழ்ச்சிகளையும் வாழ்வின் ஆற்றல்களையும் மறவாது போற்றி ஓரளவு குறிக்கோள்நிலை உடையவராக இருப்பது நல்லது. இவ்வகையில் கலைஞனின் படைப்பு பிழையுடையதாய் இருப்பின் அது சிறந்ததன்று என்று நாம் தயக்கமின்றிக் கூறலாம்.
நடப்பியலைப் படைத்துக் காட்டவேண்டும் என்பதற்காகத் தனிமனிதனிடத்தும் சமுதாயத்திலும் உள்ள குறைகளை மிகுதிப்படுத்தி அளவுகடந்த மனவிகற்பங்களுக்கு பு இடமளித்துப் படைக்க வேண்டும் என்பதில்லை. உள்ள குறைகளையே கலை வண்ணம் தோன்றும்படி அழகுறச் சித்தரித்து, அக்குறைகளை எடுத்துக்காட்டுவதன் நோக்கம் திருத்தமுனையும் கோட்பாடு என்பதைப் புலப்படுத்தி, குறைகளைக் கடந்து கலைஞனின் நல்ல நோக்கம் வெளிப்படுமாறு செய்யவேண்டும். அழுக்கடைத்த சமுதாயத்தைக் காட்டுவது நடப்பியலுக்கு ஒத்ததே ஆகும். ஆயின் சமுதாயத்தின் அழுக்கு மட்டுமே தெரியும்படியாகக் காட்டிவிட்டுச் சமுதாயச் சீர்திருத்தம் என்பதையே புறக்கணித்துவிடக்கூடாது. இவ்வுண்மை புதினத்திற்கு மட்டும் அன்றிச் சிறுகதை, கவிதை போன்ற ஏனைய இலக்கிய வகைகளுக்கும் பொருந்துவதாகும்.
இருவகையான நடப்பியலார்
இங்கு ராபர்ட் ஃப்ராஸ்ட்(Robert Frost) இருவகையான நடப்பியலார் (Realists) பற்றிக் கூறுவதைக் காண்போம். பொதுவாக இரண்டு வகையான நடப்பியல்வாதிகள் இருக்கிறார்கள்.
ஒருவகையினர், இதுவே உண்மையான உருளைக்கிழங்கு என்பதைக் காட்டுவதற்காக அந்த உருளைக்கிழங்கில் உள்ள ஏராளமான அழுக்கை மட்டுமே காட்டுகின்றனர்.
மற்றொரு வகையினர், அழுக்குள்ள உருளைக்கிழங்கைக் காட்டிச் சுத்தம் செய்வதிலும் மன நிறைவு பெறுகின்றனர். நானோ இரண்டாம் வகையினரைச் சாரவே விரும்புகிறேன். என்னைப் பொறுத்தஅளவில் கலையானது வாழ்வுக்குச் செய்வதெல்லாம் அதைச் சுத்தப்படுத்துவதே ஆகும். அழுக்கைத் துடைத்து அதற்கு ஒருநல்ல வடிவம் கொடுப்பதேயாகும்.
நடப்பியலோடும் குறிக்கோள் நிலையோடும் விளங்கும் தமிழ் இலக்கியங்கள்
இந்தியாவின் இருபேர் இதிகாசங்கள் என்று கருதப்படும் இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டினுள் பாரதம் நடைமுறை வாழ்வை மிகுதியாகக் காட்டுவதாகவும், இராமாயணம் விழுமிய வாழ்வின் உயரிய நிலைகளைக் காட்டுவதாகவும் அறிஞர் கூறுவர். பாரதத்தில் சமுதாய அரசியல் பொருளாதாரத் துறைகளோடு தொடர்புடைய பல செய்திகள் நடப்பியலின்படி காட்டப்படுகின்றன. நடைமுறைச் சமுதாய அரசியல் வாழ்வில் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் பழகி வெவ்வேறு வகையான உள்தோக்கத்தால் இயக்கப்பட்டு ஒவ்வொரு வகையாகச் செயல்படும் முறைமையானது நடப்பியலின் பண்பினைப் பெரிதும் பெற்றுள்ளது.
இராமாயணத்திலோ கதை மாந்தர் பலரும் பல் உயரிய மனநிலைகளோடு வாழ்ந்து உயரிய மனிதப் பண்பாட்டின் உச்சநிலையை எடுத்துக்காட்டும் வண்ணம் சித்தரிக்கப்படுகின்றனர். சான்றாக இராமாயணத்தில் வரும் கம்ப நாயகனாகிய இராமன் சாதாரண மனிதரின் இயல்புடையவனாக, சாதாரண வாழ்க்கை வாழ்பவனாக விளங்கவில்லை. மானிடம் முழுமைக்கும் ஒரு மாபெரும் வழிகாட்டியாய் விளங்குதற்குரிய மிகஅரிய மனநிலைகளோடு வாழ்ந்து, காவியம் படிப்பாரை மிக விழுமிய குறிக்கோள் ஒன்றுக்கு அழைத்துச் செல்லும் அற்புதத் தலைமகனாக விளங்குகின்றான். இராமனுக்குத் தம்பியாக வரும் பரதனும் இலக்குவனும் மனித உலகில் நாம் சாதாரணமாகக் காணக்கூடிய தம்பியரல்லர். தம்பியர் என்னும் இலக்கணத்திற்கே மிக விழுமிய இலக்கியமாக விளங்குவோராவர். தாயின் உரை கேட்டுத் தந்தையால் வழங்கப்பட்ட நாட்டைத் தனக்கு உரியதன்று என்ற காரணத்தால் தீவினை என்று துறந்து, சிந்தனையை முகத்தில் தேக்கித் தன் அண்ணனாகிய இராமனைத் தேடிச் சென்ற பரதனைப் பார்த்துக் குகன்
“ஆயிரம் இராமர்கள் நின்கேழ் ஆவரோ தெரியினம்மா” எனப் பாராட்டுவது பரதனைக் குறிக்கோள் நிலையில் கம்பநாடர் படைத்துக் காட்டியதால் அன்றோ! இராமன்பால் சேர்ந்துகொண்ட விபீடணன் கும்பகர்ணனைப் பார்த்து அவனையும் அறமூர்த்தியாகிய இராமனோடு சேர்ந்து கொள்ளுமாறு சொல்லும்போது,
“நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்
போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடா தங்குப் போகேன்
தார்க்கோல மேனிமைந்த என்குறை தவிர்திஆகில்
கார்க்கோல மேனி யானைக் கூடுதி விரைவின்”
என்று கூறுவதும் கும்பகர்ணன் என்னும் கதாபாத்திரம் ‘செஞ்சோற்றுக் கடன் கழிப்பது’ என்னும் பண்பாட்டுக்கு ஓர் உறைவிடமாய்த் தனக்கென்று அமைந்த ஒரு மாபெரும் குறிக்கோளுடன் வாழ்ந்ததால் அன்றோ!
சிலப்பதிகாரத்தில் கண்ணகி என்னும் கதைப்பாத்திரம் கற்பின் கொழுந்தாய்ப் பெண்ணின் பெருமைக்கு ஓர் அரிய மணிவிளக்காய் விளங்குவதும் இளங்கோவடிகள் கண்ணகியைக் குறிக்கோள் நிலையில் வைத்துக் காட்டியதால் அன்றோ!
திருக்குறளில் குறிக்கோள் நிலையில் அமைந்த பலப்பல குறட்பாக்களைக் காணலாம். சாதாரண மனிதனால் எளிதிற் கடைப்பிடிக்க முடியாததும் மிக உயர்ந்த பண்பாடு படைத்தவராலேயே கடைக்கொள்ளப்படுவதுமான மிக விழுமிய அறநெறிகளைக் காண்கின்றோம். சான்றாக சில வற்றைக் காண்போம்.
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. (குறள்.308)
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. (குறள்.235)
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. (குறள்-222)
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார் (குறள்-989)
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின். (குறள் – 217)
குறிக்கோள் நிலையில் அன்பு, அருள், வீரம், காதல், மானஉணர்ச்சி போன்ற பலப்பல பண்புகளை அவற்றின் உச்சநிலைக்கு வளர்த்துச்சென்று காட்டலாம். சான்றாக மனோன்மணிய நாடகத்தில் வரும் புருடோத்தமன் வாய்மை, வீரம், காதல் ஆகிய உணர்வுகளின் முழுமையையும் முழுவளர்ச்சியினையும் காட்டவரும் கதைநாயகன் ஆவான். குறிக்கோள் நிலைப்படுத்துவது என்பது ஒன்றை மிகச்சிறந்ததாகக் காட்டுவது மட்டும் அன்று. ஒன்றினை அதன் முழுமை தோன்றப் பலவற்றிற்கும் சான்றாய் விளங்கும் வண்ணம், நிலையான உதாரணமாய் எடுத்துக் காட்டக் கூடிய வகையில் படைத்துக் காட்டுவதும் ஆகும்.