இயற்பகை நாயனார்
சோழநாட்டிலே காவிரிப்பூம்பட்டினம் என்னும் ஊரில், வணிகர் குலத்திலே பிறந்தவர் இயற்பகை நாயனார் ஆவார். இவர் இல்லறத்தில் ஈடுபட்டிருந்தார். சிவபெருமான் மீது பெரும்பக்தி கொண்டிருந்தார். சிவனடியார்கள் மீதும் பேரன்பு கொண்டிருந்த இவர், தன்னைத் தேடிவரும் அடியவர்கள் எதைக் கேட்பினும் அதைத் தயங்காது வழங்கி வந்தார்.
சிவபெருமான் இயற்பகையாரின் அடியார் பக்தியை உலதிற்குக் காட்ட திருவுள்ளம் கொண்டார். மறுகணமே திருநீறு அணிந்த வேதியர் கோலம் கொண்டார். இயற்பகையாரின் வீட்டிற்கு வந்தார். அவர், இயற்பகையாரிடம், “ஒரு பொருளை வேண்டியே இங்கே வந்துள்ளேன். அதைத் தருவீரோ?” என்று கேட்டார்.
இயற்பகையார், அவ்வேதியரை வணங்கி, “தாங்கள் கேட்ட பொருள் என்னிடம் உள்ளதென்றால், நிச்சயமாகத் தருவேன்!” என்றார்.
வேதியரும், “நான் உன் மனைவியைத்தான் வேண்டுகிறேன். அவளை எனக்குத் தருவீரோ?” என்று கேட்டார். அதைக்கேட்டதும், “அடியவரே! மிக்க மகிழ்ச்சி. தாங்கள் என்னிடம் உள்ள பொருளைக் கேட்டதற்கு நன்றி!” என்று கூறி தன் மனைவியாரை அழைத்தார். வேதியர் வேண்டியதை மனைவியாரிடமும் கூறினார். அப்பெண்மணியும் அடியவர் தொண்டே சிறந்தது என்று அதற்குச்சம்மதித்தார்.
அடியவருடன் புறப்படத் தயாரானார். உடனே அடியவர் இயற்பகையாரை நோக்கி, “நீர் உன் மனைவியை எனக்குத் தந்துவிட்டீர். ஆனால் உன் சுற்றத்தாரும் இவ்வூரிலுள்ளவர்களும் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் நான் உமது மனைவியுடன் இவ்வூர் எல்லையைக் கடக்கும்வரை எனக்குப் பாதுகாப்பு தர வேண்டும்!” என்று கூறினார்.
இயற்பகையாரும், “தாங்கள் இந்த ஊர் எல்லையைக் கடக்கும்வரை நானே உங்களுக்குத் துணையாக வாள் ஏந்தி வருகிறேன்!” என்று கூறியபடி, அடியவருடன் புறப்பட்டார்.
ஒரு சிவனடியார் இயற்பகையாரின் மனைவியை அழைத்துச் செல்வதையும், அவர்களுக்கு இயற்பகையாரே காவலுக்குச் செல்வதையும் கண்டு சுற்றத்தாரும் ஊராரும் கடுங்கோபம் கொண்டனர்.
அவர்கள் இயற்பகையாரிடம் வந்து, “உன் மனைவியை யாரோவொரு வேதியனுடன் அனுப்பத் துணிந்தது மட்டுமல்லாமல், அவர்களுக்குக் காவலாய் வேறு செல்கிறாயே! உனக்கு புத்தி கெட்டுப் போனதோ[” என்று கேட்டனர்.
இயற்பகையார் சுற்றத்தாரிடம், “ பேசாமல் விலகிப்போய்விடுங்கள். இல்லையென்றால் உங்கள் உயிர் உடலில் தரிக்காது” என்று கூறினார்.
சுற்றத்தாரும் நாயனாரை நோக்கி, “மனைவியை வேற்று மனிதருடன் அனுப்பிவிட்டு, வீரம் பேசுகிறாயே. உனக்கு நாணமாக இல்லையா? உனக்கு நாணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம்” என்று கூறி வேதியரை நோக்கி ஓடினார்கள். வேதியரைத் தாக்குவதற்குக் கை ஓங்கினார்கள்.
இதைக்கண்ட இயற்பகையாரின் கோபம் எல்லை கடந்தது, அவர் தன் கையிலிருந்த வாளால் வேதியரை நெருங்கியவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டி வீழ்த்தினார். வேதியரைத் தாக்க முயன்ற அனைவரும் உடல் துண்டாகி விழுந்தனர். பின் வேதியரையும் அவரோடு செல்லும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு திருச்சாய்க்காடு என்ற இடத்திற்கு வந்தார்.
அங்கு வந்ததும், வேதியர் இயற்பகையாரிடம், “இனி உன் துணை எனக்குத் தேவையில்லை. நீர் திரும்பிச் செல்லலாம்!” என்று கூறினார். இயற்பகையாரும் திரும்பி நடந்தார். சிறிது தூரம் நடந்த இயற்பகையார் காதில் “இயற்பகையே!அபயம்” என்ற வேதியரின் குரல் கேட்டது.
வேதியருக்கு மீண்டும் இவ்வூர் மக்களால் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று பதைபதைத்த இயற்பகையார் திரும்பி வேதியரை நோக்கி ஓடினார். என்னே ஆச்சரியம்! அங்கே வேதியரைக் காணவில்லை. மனைவியார் மட்டும் நின்று கொண்டிருந்தார்.
அக்கணமே சிவபெருமான் உமாதேவியாரோடு இடபவாகனத்தில் திருக்காட்சி நல்கினார். “இயற்பகையே! நீ அடியவர் மீது கொண்ட பேரன்பு என்னை மகிழ்ச்சியடையச் செய்தது. நீயும் உன் மனைவியும் சிவலோகம் வந்தடையுங்கள்!” என்று தருவாய் மலர்ந்தருளினார்.
இயற்பகை நாயனாரும், அவரது மனைவியாரும் பிறவிப் பெருங்கடல் கடந்தனர். சிவலோகம் சென்றடைந்தனர்.
மேலும் அறிய,