‘சும்மா இருங்க. உங்களுக்குப் புரியாது’. நான் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறேன். அங்கே என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா? ஒரு சாரி கேட்டு மெசேஜ் அனுப்புறது ஒண்ணும் பெரிய தப்பில்லை. வேலை பார்க்கும் இடத்தில் இதையெல்லாம் ‘அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டுதான் வேலை பார்க்கணும்’. இவ்வாறு நீது தன் கணவன் வேதாவிடம் கூறினாள்.
நீது ஒரு தனியார் பள்ளியில் கடந்த சில வருடங்களாக படித்த படிப்பிற்கிணங்க, மாத ஊதியத்திற்கு வேலை பார்த்து வந்தாள். அன்று பள்ளி விடுமுறை தினம். அதாவது பள்ளி விடுமுறை தினத்தில் விடுப்பு அளித்து இருந்தது. பொதுவாக பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து விட்டு ஆசிரியர்களுக்கு ஏதாவது அலுவலக பணி செய்யும் விதமாக வரச்சொல்லி விடுவார்கள்.
அன்று விடுமுறையை முன்னிட்டு உறவினர்கள் சிலர் நீதுவின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அதனால் எப்போதும் போல் இல்லாமல் அன்று நாள் முழுவதும் கொஞ்சம் பிஸியாக தான் இருந்தாள். அதிலும் குறிப்பாக மாலை நேரம் வந்தவுடன் சொல்லவே தேவையில்லை. பிஸியோ பிஸி.
வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உபசரனை செய்யும் பொருட்டும், சிறுபிள்ளைகளுக்கு இரவு உணவு தயார் செய்து கொண்டு இருந்ததன் பொருட்டும் கடந்த சில மணி நேரங்களாக நீது கைபேசியை சற்றும் கவனிக்கவில்லை.
இரவு சுமார் 9.30 மணி இருக்கும். ஒரு புறம் பிள்ளைகள் உணவு உண்ட மயக்கத்தில் தூங்க ஆரம்பித்தனர். அதே சமயம் வீட்டிற்கு வந்த விருந்தினர்களையும் உபசரித்து வழியனுப்பியும் முடிந்தது. இப்போதுதான் நீது தன் கைபேசியை எடுத்துப் பார்த்தார்.
பள்ளியில் அவர்களுக்கு என்று வாட்ஸ் அப் குரூப் ஒன்று உள்ளது. அது பள்ளியின் ஏதேனும் அலுவல் சம்பந்தமான தகவல்களை பதிவிடப்படும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் உயர்திரு அட்மின் அவர்கள் அனுப்பிய செய்தி பின்வருமாறு.
“ஆசிரியர்கள் கவனத்திற்கு, கோடை விடுமுறை தினங்களில் ஓரிரு நாட்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டி இருக்கும்”. ‘Please acknowledge and confirm by phone or message me’ என்று மாலை 6.30 மணியளவில் வாட்ஸ் அப் குழுவில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்தக் குழுவில் இருந்த பலரும் ‘ok’, ‘yes mam’… என்று தங்கள் வெறுப்பை மறைத்து விருப்பத்தைத் தெரிவித்து இருந்தனர்.
நீது வீட்டின் அலுவலில் முழுவதும் மூழ்கியிருந்தபடியால் இது ஏதும் தெரியாமல் இருந்தாள். அவள் மட்டும் அதில் பதில் அளிக்காது இருந்திருந்தாள். அதனால் அட்மின் அவர்கள் ‘Neethu, what about you?’ என்று வினா கேட்கப்பட்டு அப்போது இரண்டு மணி நேரம் முடிந்தே போயிருந்தது.
இதை பார்த்தவுடன் நீதுவுக்கு, அவள் யாரும் செய்திடாத பெரிய தவறை இழைத்து விட்டதாக எண்ணி வருந்தினாள். ஒரு வேளை அடிமைகளில் சிறந்த அடிமையாக இருக்க தவறிவிட்டோமோ என்று கருதி துவண்டு போனாள்.
உடனே அவளுடைய பதிலை, ‘ok mam’ என்று எழுதினாள். அதே சமயம் அருகில் இருந்த கணவனிடம், ஏங்க வேதா, ‘sorry for the delay response’ அல்லது ‘sorry for the delay’ இவற்றில் ‘எது சரியாக இருக்கும்’ என்று கேட்டாள். திரு வேதா அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரது புராணத்தை பேச ஆரம்பித்தார்.
போனை கையில் வாங்கி மேலும் கீழுமாக இழுத்துப் பார்த்து படித்துவிட்டு வேதா, இந்த இடத்தில் ‘sorry’ ஒன்றும் கேட்க தேவையில்லை. ஆறு நாட்களுக்குப் பிறகு நடக்கப் போகும் ஒரு செயலுக்கு விருப்பு அளிக்கும் படியாகதானே இருக்கிறது. எப்படியும் ஒருவரும் மறுத்து பதில் சொல்லப்போவது இல்லையல்லவா?
அதனால் சொல்றத கேளு, ‘ok mam, Noted’. அல்லது ‘Sure. Will do’ என்று மட்டும் அனுப்பு போதும்; ‘sorry’ கேட்கக்கூடிய அளவுக்கு ‘இது அவ்வளவு முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை’ என்றான் வேதா.
உங்களிடம் ‘sorry’ கேட்கலாமா? வேண்டாமா? என்று நான் கேட்கவே இல்லையே. அந்த வாக்கியத்தில் எது சரி? எது தவறு? என்று மட்டும் தானே கேட்டேன் என்று சற்று கோபத்துடன் நீது சொன்னாள்.
இந்த நேரத்தில்தான் நீது தன் கணவனிடம், ‘உங்களுக்கு அங்கு என்ன நடக்குதுன்னு தெரியுமா? ஒரு இடத்துல வேலை பார்க்குறதுன்னா சும்மாயில்லை…’என்று கடுகடுத்த குரலில் ஆரம்பத்தில் மேலே சொல்லியது போல கூறினாள்.
இதைக் கேட்ட வேதாவின் கோபம் தலைக்கு ஏறியது. கண்கள் சிவந்தது; துக்கம் மார்பை அடைத்தது. எதற்கும் அஞ்சாத கலங்காத ஆண்மகன், ஏதோ பொறி தட்டியது போல் அப்படியே திகைத்து நின்றான். மறுவார்த்தை ஒன்றும் மறுத்து சொல்லாமல், அவ்விடம் விட்டு நகர்ந்தான். அன்று இரவு உணவு உண்ணாமல் நோன்போடு படுக்கை அறைக்குச் சென்று படுத்தான். அந்த வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. படுத்துக் கொண்டு தான் இருந்தான்; ஆனால் அவனுடைய பக்கத்தில் கூட தூக்கம் வந்து படுக்கவில்லை.
பலபல சிந்தனைகள் தோன்றி மறைந்து கொண்டே இருந்தது. அப்போது அவனுடைய வாழ்க்கையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துப் பதினான்கு வருடங்கள் முடிந்து விட்டது என்பதை நினைவுகூர்ந்தான்.
வீட்டில் இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் இருக்கின்ற வேதாவுக்கு இது போன்று ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டு போக தெரியவில்லையோ’. ஒருவேளை இப்படி செய்து இருந்தால் செய்த வேலையை எல்லாம் விட்டுவிட்டு இப்படி வீட்டில் வேலை இல்லாமல் இருந்திருக்க மாட்டேனோ? என்று நினைத்து வருந்தினான்.
“இறுதியாக வேலை செய்த பெரிய நிறுவனத்தில் ஒட்டுமொத்த வேலையையும் இழுத்துப் போட்டு ஓடி ஓடி செய்தோமே! எனக்கு தகுந்த மரியாதையும் சன்மானமும் கொஞ்சம்கூட கிடைக்கவில்லையே! ‘பொறுத்து இருங்கள்’ என்று நிர்வாகம் கூறியதற்கு எதிர்த்துக் கேள்விக் கேட்டதற்கு தண்டனையாக மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்; ‘இல்லையேல் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்து விடுவோம்’ என்று மிரட்டினார்கள். நீங்கள் வேலையில் இருந்து நீக்கியதாக இருக்கக் கூடாது, மாறாக நான் வேலையை விட்டு போனதாக இருக்க வேண்டும்.” என்று வேலையை விட்டு வந்த காரணத்தையும் சற்றுத் தியானித்துப் பார்த்தான்.
ஒரு வேளை ஏதாவது பணியில் இருந்து சொல்லி இருந்தால், சொல்லியதை உதாசினப்படுத்தாமல் கண்டிப்பாக நீது கேட்டு இருப்பாளோ என்னவோ? என்று நினைத்து வருந்தினான்.
வேலை ஒன்றுக்கும் போகாமல் வீட்டில் இருக்கும் கணவனை ‘*த்துடைத்தக் கல்லாகக் கருதி விட்டாளோ’ என்று நினைத்து வருந்தினான். அப்படி அவன் நினைத்து வருந்துவது சரியா? தவறா? என்று தெரியாமல் வேதனையில் மூழ்கினான். இது உள்ளூர உண்மையில்லை என்று தேற்றினாலும் வருந்தவே செய்தான். வேதாவின் ‘உயிர் உடலை வெறுத்து ஒதுக்கி சென்றது’ போல் வெறுக்க ஆரம்பித்தான். அப்போது படுக்கை அறையின் கதவை திறந்து மெல்ல நளினமாக உள்ளே வந்தாள் நீது.
’ஏங்க, சாப்பிடாம உங்களுக்கு தூக்கம் வராது! ஒழுங்கா எழுந்து வாங்க! சேர்ந்து சாப்பிடலாம்’, என்று நீது கொஞ்சும் கிளியின் குரலில் கெஞ்சினாள்.
‘Sorry’ங்க, sorry, sorry என்று சொல்லி வீண் வீம்பு பிடித்த வேதாவின் கையை இறுகப்பிடித்துச் சாப்பிட வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றாள். ‘உயிர் உடலை வெறுக்க நினைத்தாலும், உடல் உயிரை ஒருபோதும் வெறுத்து ஒதுக்காது’ என்பதை மெய்யாக்கிடுவது போல.
சிறுகதையின் ஆசிரியர்
பிரபுவ,
பல்லபுரம், இலால்குடி தாலுக்கா
திருச்சி – 621 712.
karpraba@gmail.com
எழுத்தாளர் பிரபுவ – வின் படைப்புகளைப் படிக்க…