Saturday, September 13, 2025
Home Blog Page 10

நாட்டார் மக்களின் வழிபாட்டுக் கதைகளில் தெய்வ வரலாறுகள்|முனைவர் சு. பால்பாண்டி

நாட்டார் மக்களின் வழிபாட்டுக் கதைகளில் தெய்வ வரலாறுகள் - முனைவர் சு. பால்பாண்டி
ஆய்வுச்சுருக்கம்
               
சிறுதெய்வங்களாக விளங்கும் நாட்டார் தெய்வங்கள் அனைத்தும், காட்சியுரு தந்து தோன்றி மறைந்தனவேயாகும். இதற்கு அடுத்தநிலையில் ‘கொலை, கொள்ளை, சத்தியம் காத்தல்’ என்ற  நிலைகளிலும் மனிதர்கள் தெய்வங்களாக வழிபடப் படுகின்றனர். மனிதர்கள் தெய்வங்களாக விளங்கும்போது.

1) தெய்வத்திற்குக் கட்டுப்பட்டு இருத்தல்
2) தெய்வத்தை விட்டு தனியே இருத்தல்
என்ற நிலைகளில் காணப்படுகின்றனர். நாளடைவில் பெருந்தெய்வ வழிபாட்டிற்கு வழி வகுக்கின்றது. இதை மக்களின் புராணக் கதைகளும், வாய்மொழிக் கதைகளும் உணர்த்துகின்றன.

முன்னுரை
               
நாட்டார் மக்களின் வழிபாட்டுத் தெய்வங்கள் எல்லாம் பெருந்தெய்வ, சிறுதெய்வ நோக்கில் அமைந்தாலும், இரண்டுக்கும் ஒரே நிலையில் தோற்றமும் அமைகின்றது. தெய்வங்கள் மக்களின் கனவு, எதிர்பாராத சம்பவம் என்ற செயல்களின் மூலம் தோன்றி மறைந்து விடுகின்றன. இவற்றை,  மெய்மைப்படுத்தும் காரணமாக ஆவி ஒன்றினை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அச்செயலே, ஆவியின் மேல் அச்சமுற்று தனக்குத் தீங்கு நிகழாமல் இருக்க வழிபடத் தொடங்கியது எனில், ஓர் இடத்தில் தெய்வ வழிபாடு தொடங்குவதற்கு முன், அங்கு ஆவியானது தோன்றி மனிதர்களுக்கு ஏதாவதொரு வடிவில் (குரலாகவோ, உருவமாகவோ) காட்சி அளித்து மறைந்துவிடும். அந்த இடத்தில் அங்கு வாழும் மக்கள் வழிபடத் தொடங்கினர் என்பது, விருதுநகர் நாட்டுப்புற மக்களின்  வாய்மொழிக் கதைகளினால் தெய்வ வரலாறுகளை அறிதல் ஆய்வின் கருதுகோளாக அமைகிறது.

கருத்திறச் சொற்கள்
நாட்டார்கள், நாட்டுப்புறம், தெய்வங்கள், வழிபாடுகள், கதைகள், தோற்றம், ஆவி, அச்சம் என்பன ஆய்வின் கருத்துச் சொற்களாக அமைந்துள்ளது.

ஆய்வின் பயன்கள்
நாட்டார்கள் உறவுமுறை போன்று தெய்வங்களும் தங்களுக்குள் உறவுமுறைகளை வைத்திருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

நாட்டுப்புறக் கதைகளில் வழிபாட்டுத் தெய்வங்கள்
சக்தி மாரியம்மா
               
சிவயோக ஞானசித்தர் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகத் தென்தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகிய சதுரகிரி மகாலிங்கம் மலையில் கடுந்தவம் மேற்கொண்டு அன்னை பராசக்தியிடம் ‘நான் யோக நிஷ்டையடையும் இடத்தில் என் அன்னை பராசக்தி – சிவசொரூபியாக பீடமிட்டு அமர்ந்து அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்ட, அதற்கு அன்னை ஐந்து நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் நான் ஐக்கியம் ‘ஆவேன்’ என்று பதில் கூறியது. அன்னை பராசக்தியின் வார்த்தைகளை ஏற்று அங்கிருந்து ஐந்து நதிகள் சங்கமம் ஆகின்ற ‘இருக்கன்குடி’ என்ற இடத்தைக் தேர்வு செய்தது. அந்த இடத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் ஞானசித்தர்.

                இந்த நிலையில், நாடெங்கும் ஊழிப்பிரளயம் ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தால் நாட்டின் பல கிராமங்கள் அழிந்தன. அந்தப் பெருவெள்ளத்தால் இழுத்து வரப்பட்ட அன்னை பராசக்தியின் உருவச்சிலை ‘சித்தர் ஐக்கியமாகிய இடத்தை அடைந்ததும் வெள்ளத்திலிருந்து விடுபட்டு சுழலெடுத்து  பூமிக்குள் புதைந்துக் கொண்டது”1 எனப்  புராணச் செய்தி கூறுகின்றது.

இன்னொரு புராணக்கதை பின்வருமாறு
               
அர்ச்சுனா நதியின் கரையில் இருக்கும் இருக்கன்குடி கிராமப் பெண்கள் சாணம் சேகரித்துவிட்டு சாணக்கூடையை மட்டும் தரையிலிருந்து எடுக்க முடியவில்லை. சாணத்தையெல்லாம் அகற்றிய பிறகும் எடுக்க முடியவில்லை. எனவே, பெண்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அவ்வழியே வந்த ‘சக்காபுக்க’ என்ற அரிசன சாதியைச் சார்ந்த முதியவர் பெண்களிடம் காரியத்தை வினவ பெண்கள் விசயத்தை முதியவரிடம் கூறுகின்றனர். அவர், அவ்வூரின் இல்லத்துபிள்ளைமாரிடம் விசயத்தை எடுத்துக்கூறுகின்றார். அதைத் தொடர்ந்து வந்து மண்வெட்டியால் அந்த இடத்தைத் தோண்டுகின்றனர். அவ்பொழுது திடீரென ‘ ரத்தக் கசிவு’ ஏற்பட்டதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி உற்றார்கள்.
இதைக் கண்ட எல்லோரும் பயந்து நிலைதவறிய போது, இல்லத்துபிள்ளை என்பவர் ‘இதை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்கின்றார்.  ஒருநாள் இல்லத்து பிள்ளையிடம் ரத்தக் கசிவு ஏற்பட்ட இடத்தில் தனக்கு ரத்தப்பலி தந்தால் உங்கள் குலத்தையும் தன்னை நாடிவரும் மக்களையும் வளமாக்கி வாழவைப்பேன் என்று இல்லத்து பிள்ளையிடம் அசரீரி ஒலி கேட்டது. இதைக் கேட்ட இல்லத்து பிள்ளை கருவுற்ற தன் மனைவியையே பலிகொடுத்து விடுகின்றார். பின் தன் மனைவியின் நினைவில் சக்தியை வளரச் செய்து சிறு பீடம் அமைத்து வழிபட்டார்”2 எனச் சுட்டுகின்றார்.
பல ஆண்டுகள் ஆனபோது பீடத்தின்மேல் சக்தியாக மாரியம்மனின் உருவச்சிலை அமைத்து தன் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு ஆபரணங்களை அணிவித்து  பூசைகள் செய்கின்றார். இத்தெய்வம் இன்றும் கருவுற்ற பெண்ணின் கோலத்துடன் காட்சியளிக்கின்றது. இத்தெய்வம் பெண்களுக்குப் பிள்ளை வரம் கொடுப்பதாக மக்கள் நம்புகின்றனர். இத்தெய்வம் குறித்த இன்னொரு கதை பின்வருமாறு காணப்படுகின்றது.
               
ஒரு நாள் அக்கோயில் பூசாரி அம்மனுக்குப் பூசை செய்வதற்காகப் பூசைப்பொருட்களைக் கொண்டு செல்கையில், ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அவர் அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பூசைப் பொருட்களை நினைத்து மூன்று நாட்களாக உணவருந்தாமல் கவலையுடன் இருக்கின்றபோது, அம்மன் ஆவியாக பூசாரியின் மனக்கண்ணில் தோன்றி கவலைப்படாமல் இரு; எல்லாப் பொருள்களும் பாதுகாப்பாக உள்ளன”17 என்று கூறியதாக அவ்வூர் மக்கள் இன்றும் நம்புகின்றனர். இக்கோயிலை இருக்கன்குடி மாரியம்மன்  அல்லது சக்தி மாரி அல்லது  பராசக்தி என்றெல்லாம் மக்கள் அழைக்கின்றனர்.

சங்கிலிக் கருப்பசாமி
பல வருடங்களுக்கு முன்பு அழகாபுரி என்ற ஊர்க்குக் கிழக்குத் திசையில் ஒரு கிராமம் இருந்ததாகக் கருதப்படுகிறது. அந்தக் கிராமத்தின் காவல்தெய்வம் சங்கிலிக் கருப்பன் ஆகும்.  அத்தெய்வத்திற்கு ‘ஆடு, மாடு, பன்றி’களைப் பலியிட வேண்டுமென்று, அத்தெய்வம் பூசாரியிடம் (வந்து) கேட்டது. இச்செய்திகளை அறிந்த கிராமத்திலுள்ள மக்கள் அதற்கு முடியாது என்று மறுத்துவிடுகின்றனர். சில ஆண்டுகள் கழித்து பஞ்சம் ஏற்படுகின்றது. எனவே, அவ்வூரிலுள்ள மக்கள் பஞ்சம் பிழைக்க வேறொரு இடத்திற்குச் செல்கின்றனர்.  ஆனால் அந்தக் கிராமத்தில் எங்கும் செல்லாமல் சில பள்ளர் இன மக்கள் வாழ்கின்றனர். அவ்வினத்தின் ஒரு குடும்பத்தில் தன்னை வழிபட வேண்டி சங்கிலி  கருப்பசாமி வேண்டுகின்றது. மேலும் குழந்தையில்லாத அக்குடும்பத்திற்குக் குழந்தை வரமும், அக்குடும்பம் வளம்பெற தேவையான பிறவரங்களையும் அத்தெய்வம் அளிக்கின்றது.
குழந்தைகள் பெரியவர்கள் ஆனபோது, தெய்வத்திற்கு வழிபாடு நடத்திய தந்தை இறந்துவிடுகின்றார். எனவே, அத்தெய்வத்தை வழிபடாது விட்டுவிட்டு அவர்கள் வேறுறொரு இடத்திற்குச் சென்று விடுகின்றனர். தொடர்ந்து சங்கிலி கருப்பன், ஆசாரி இனத்தைச் சார்ந்த ஒருவரின் கனவில் தோன்றி தன்னை வழிபடுமாறு வேண்டி மறைகின்றது. வழிபட்ட ஆசாரியும் இறந்துவிடுகின்றார். இதன் பின்னர் ஆசாரியின் வாரிசிடம் முன் (கனவு அல்லது நேரில்) தோன்றி தன்னை வழிபடுமாறு கேட்கின்றது.  அதற்கு ஆசாரி மகன் நீ எனக்கு என்ன தருவாய்?என்று கேட்க அதற்கு நீ கேட்டதைத்தருவேன்”3 என்று கூறிவிட்டு மறைகின்றது. பின்னர் தெய்வத்தின் அருள்பெற்று வழிபாடு நடத்தி வருகின்றனர் என்று வெள்ளையம்மாள் குறிப்பிடுகின்றார்.
நொண்டி முத்தையா
முத்தையா என்பவர் மதுரை மாவட்டத்திலுள்ள சுருளி என்ற ஊரில் குடியிருந்திருக்கின்றார். இவர் தேவர் சாதியைச் சோந்தவர். இவர் அவ்வூரைச் சார்ந்த ஆசாரி இனப்பெண்ணுடன் காதல் கொள்கிறார். அந்தப் பெண்ணிற்கு  ஐந்து சகோதரர்கள் இருந்தனர். இருகுடும்பத்தாரும்  இவ்விருவரின் காதலை விரும்பவில்லை. எனவே, பெண்ணின் குடும்பத்தார் இவர்களது காதலைப் பிரிக்க எண்ணினர். முத்தையா தன் காதலியை அழைத்துக் கொண்டு கூமாப்பட்டிக்கு வந்து சேர்கின்றார். ஆனால் ஊர் மக்கள் இருவரையும் அந்த ஊருக்குள் வாழ அனுமதிக்கவில்லை. எனவே, முத்தையா அவ்வூருக்கு அடுத்துள்ள கண்மாயில் வந்து ஒரு குடிசை அமைத்து; அங்கு வாழ்கின்றார். இக்குடிசையைச் சுற்றி ஒருவர் மட்டுமே வந்துபோகும் அளவிற்கு இடைவெளிவிட்டு, சங்கம்முள், இலந்தைமுள் ஆகியவற்றைச் சுற்றிலுமாக வைத்து அடைத்துவிடுகின்றார். முத்தையாவின் மனைவியின் உடன் பிறந்தவர் ஐவரும் தங்கள் தங்கை இவ்வாறு இழிவான செயலைச் செய்து விட்டாளே என வருத்தப்பட்டு, அவளை எவ்வாறெனும் கொலை  செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று தேடுகின்றனர்.
இறுதியாகக் கூமாப்பட்டியில் இருவரும் தங்கியிருப்பதாகச் செய்தி கிடைக்கவே, ஐவரும் கூமாப்பட்டி வந்தடைகின்றனர். முத்தையாவின் வீட்டிற்குள் ஐவரும் செல்ல இயலாத நிலையில் ஒவ்வொருவராகச் செல்லவேண்டும் என்ற முடிவின்படி, முதலில் மூத்த அண்ணன் அரிவாளுடன் வீட்டிற்குள்ளே செல்கின்றான். குடிசைக்குள் முத்தையாவும் தன் தங்கையும் அயர்ந்து  தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரிவாளால் தங்கையை வெட்டிக் கொலை செய்து விடுகின்றான்.
கண்விழித்த முத்தையாவிற்குத் தன் மனைவி வெட்டப்பட்டதைப் பார்த்ததும், தன் அரிவாளால் அவனை வெட்டிச் சாய்த்து விடுகின்றான். பின் ஒவ்வொருவராகக் குடிசைக்குள் வர நான்கு நபர்களையும், முத்தையா வெட்டி வீழ்த்துகின்றான். ஐந்தாவதாக வந்தவன்  திடீரென முத்தையாவின் காலை வெட்டிவிடுகின்றான். கால்வெட்டுப்பட்ட நிலையிலும முத்தையா ஐந்தாவது நபரையும் வெட்டிக் கொலை செய்து விடுகின்றான். இறுதியில் அங்கிருந்து  தப்பிச் செல்வது தான் நல்லது என எண்ணி குடிசையை விட்டு வெளியே வர  முயற்சிக்கிறான்.
அவனால் நடக்க முடியாத நிலையில் தடுமாறி சங்கம்முள்ளிற்குள் விழுந்து விடுகின்றான். அம்முள்ளிற்குள்ளிருந்து அவனால் வெளியே வர இயலவில்லை. இந்நிலையில் சிவகாசியிலிருந்து நாடார் இன மக்கள் மாட்டு வண்டியில் கூமாப்பட்டிக்கு வியாபாரத்திற்காக வருகின்றனர்.
வியாபாரம் முடிந்து திரும்புகையில், மாடுகள் கண்மாய் அருகே வந்ததும் நடக்க மறுத்து விடுகின்றன. அனைவரும் வண்டியை விட்டு இறங்கியபொழுது குடிசைக்குள்ளிருந்து முனங்கல் சத்தம் கேட்க அங்குச் சென்று பார்க்கின்றனர்.
இந்நிலைக்கான காரணத்தை; கேட்டபொழுது, முத்தையா தனது முழு வரலாற்றையும் அவர்களிடம் விளக்கியிருக்கிறான். மேலும், தன் காலில் செருப்பு இல்லாததால் தன்னால் தப்பிச் செல்ல இயலவில்லை என்றும் நான் இனி வாழ முடியாது, நான் இறந்துவிட்டால் என்னைத் தெய்வமாக வணங்குகள்; உங்களை காப்பாற்றுகிறேன் எனக் கூறிவிட்டு முத்தையா இறந்துவிடுகின்றான். அங்கு வந்த நாடார்கள் அவ்விடத்திலேயே முத்தையாவைப் புதைத்துவிட்டு, அந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று வைத்து வழிபட ஆரம்பிக்கின்றனர். நாளடைவில் சிவகாசி நாடார்கள் ஒன்றிணைந்து முத்தையாவை தெய்வமாக வழிபட்டனர்”4 என்பர்.
இன்றும், சிவகாசி நாடார்களின் குலதெய்வமாக முத்தையா விளங்குகின்றார். முத்தையா நாடார் மக்களின் மனதில் அல்லது கனவில் தோன்றி துன்பங்களை நீக்கி விடுவேன் என கூறி மறைந்துவிடுவதாகவும் இன்றும் மக்கள் நம்புகின்றனர்.
ஆலடிக் கருப்பசாமி
               
கேரளப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மறவர் இன மக்கள் சுமார்  நான்கு தலைமுறைக்கு முன்னர் பஞ்சத்தின் காரணமாக கிழக்கு நோக்கி சென்றனர். சென்றவர்கள் ‘பாப்பனம்’ என்ற கிராமத்தின் வனப்பகுதியை அடைந்தனர். அவர்கள் அங்குள்ள பனைமரத்தின் அடியில் குடிசை அமைத்து வாழத்தொடங்கினர். அவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள், அவ்வனத்தில் அச்சத்தைத் தரக்கூடிய தோற்றத்தில் கையில் அரிவாளுடன் ஒளிவடிவில் ஓர்ஆவி தோன்றி மறைந்தது. பின்னர் அந்த ஆவி அம்மக்களின் கனவில் தோன்றி தன்னை வணங்குமாறு வேண்டியது.  எனவே அவ்வூர்மக்கள் முன்னர் கேரளத்தில் அவர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்று கருப்பசாமி கோயிலிருந்து மண் எடுத்து வந்து பீடம்  அமைத்து வழிபடத்தொடங்கினர். அதைத் தொடர்ந்து அத்தெய்வத்தை அவர்களுடைய வாரிசுகளும் வணங்கத் தொடங்கினர். நாளவிடைவில் அத்தெய்வம் அவர்களின் குலதெய்வம் ஆனது”5 என்று சல்லிமுத்து குறிப்பிடுகின்றார்.

மானூர் கருப்பசாமி
               
சுப்புலாபுரத்திற்குத் தெற்குப் பகுதி பெரிய காடாக இருந்தது. சுமார் பத்து தலைமுறைக்கு முன்னர் ஒருவர் விறகு வெட்டும் பொருட்டு அக்காட்டிற்குச் சென்றார். அங்கே, ‘குரண்டி முள்’ செடியின் அடியில் திடீரென இரத்தம் பீறிட்டு வெளியே வர, அதைக் கண்ட அவர் பயத்தினால் நடுங்கினார். அந்நேரம் ஓர் அருவுருவமான ஆவி நிலையில் ‘கிருஷ்ணன்’ அங்கே தோன்றினார். அவர் தோன்றவே குரண்டி முள் செடியின் வேரானது பாறையாக மாறி வளர்ந்தது.  அதற்குள்ளே கிருஷ்ணன்  மறைந்துவிட்டார். அந்தப் பாறையானது தொடர்ந்து  வளர்ந்து கொண்டே இருந்தது.  அந்தப் பாறை வளர வளர மக்கள் பயபக்தியுடன் அப்பாறையை வழிபடத் தொடங்கினர். இது நாளடைவில் கிருஷ்ணன் கோயிலாக மாறியது.
               
மேலும், அவ்வனத்திற்கு அருகே தெற்காக மானூர் என்ற ஊர் இருந்ததாகக் கருதப்படுகிறது. அவ்வூர்க்குக் கிழக்கில் வாழ்ந்தவர்கள் மறவர்கள். கிழக்கில் வரக்கூடிய மக்களைக் கீகாட்டுக்காரர்கள் என்பர். இவர்கள் பல இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள், முத்தையா என்ற ஆவியை பச்சைக் குடத்தில் இட்டு மானூர் வனப்பகுதியில் கொண்டுவர, ஆவியானது திடீரென  குடத்தை வெடிக்கச் செய்து; அவ்வனத்தினுள் சென்று அலைந்து திரிந்தது. இது கிருஷ்ணன் இருக்கும் கோயில் எல்லையில் நுழைந்த போது, கிருஷ்ணன் அதனைத் துன்பம் செய்யவிடாமல் மக்களைக் காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அதனைத் தனக்கு நேரே உள்ள எல்லையில் இருந்துக்கொள் என்று கட்டளை இடுகின்றார். மீண்டும், உன்னை வழிபட நினைப்பவர்களுக்கு நீ அவர்கள் குலத்தைக் காத்துவர வேண்டும் என்றும் கட்டளை இட்டார். எனவே, மக்கள் முத்தையாவிற்கு மானூர் வனத்தில் பீடம் அமைத்து வழிபடத் தொடங்குகின்றனர்”6 என்று சுப்பையா சுட்டுகின்றார். பின்னர் அத்தெய்வத்தை வழிபட்ட  மக்களுக்கு கல தெய்வமாகவும்  காவல் தெய்வமாகவும்  முத்தையா காணப்படுகின்றார். நாளடைவில் கருப்பன் முன்னோடியாக அமைகின்றார்.

குருசாமி
சுமார் ஏழு தலைமுறைக்கு முன்னர் கோட்டையூர் என்ற கிராமத்தின் அருகே குளக்கரை ஒன்று இருந்தது. அக்குளத்தின் மேல்பகுதியில்’குரு’ என்றழைக்கப்படும் தவயோகி ஒருவர் வாழ்ந்து வந்தார். குருவின் சீடராகக் காசிக்கார செட்டியார் இனத்தைச் சார்ந்த சடைச்சாமி என்பவர் இருந்தார். இவர் குருவின் சொற்படி தன் வாழ்க்கையை  அமைத்துக் கொண்டார். ‘கருவுறா சித்தரின் மறுபிறவியே குரு’  என்று அனைவரும் நம்புகின்றனர். குருவை முதன்மை ஸ்தானத்தில் வைத்துச் செட்டியாரும் மற்றவர்களும் வழிபட்டனர்.
குருவின் மறைவிற்குப்பின் சடைச்சாமி குருவின் பூசைகளைச் செய்து முடித்த பின்னர் ஆசி வழங்கும்போது ‘ குருசாமியே காப்பார்’  என்று கூறுவது வழக்கம். முதுமையடைந்த சடைச்சாமி தன் சகோதரர்களிடம் குருவின் சன்னிதானத்தில் உள்ள ஒளி வடிவினை வணங்குமாறு வேண்டினார். குருவே தம் குலத்தைக் காப்பார் என்றும், சடைச்சாமி கூறுகின்றார். இதைத் தொடர்ந்து மக்களும் தம்  குலத்தைக் காப்பார் என நம்புகின்றனர். இதன் நிலையின் போது செட்டியார் மக்கள் குருசாமி என்ற பெயரில் விளக்கு கம்பத்தை அமைத்து பூசை செய்து தங்களது குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.
அவ்வாறு வழிபட்டு வரும் இடத்தில், “குருவே இரவில் வந்து தவம் செய்து விட்டு மறைந்து விடுகின்றார்”7 என்று சண்முகநாதன் செட்டியார் குறிப்பிடுகின்றார்.

கூடலிங்க அய்யனார்
பண்டைக்காலத்தில் அர்ச்சுனா நதியும் சரஸ்வதி நதியும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். இவ் இரு நதிகளும் சதுரகிரி மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. அர்ச்சுனா நதி, சரஸ்வதி நதி ஆகிய இரண்டு  நதிகளும் காளையார்குறிச்சியின்  தென்மேற்காக ஒன்று சேர்கின்றன.
 
               காளையார்குறிச்சி மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டுமானால் இரு நதிகளைக் கடந்தே செல்ல வேண்டும். இருநதி கூடும் இடத்தில்ஆலமரம் இருந்தது. பயணம் செய்யும் மக்கள் ஆலமரத்தின் நிழலில் தங்கிச் செல்வது வழக்கம். இம்மரத்தின் வேர்கள் பாதையில்  படர்ந்து காணப்பட்டன. இவ்வூர் மக்கள் இந்த வழியேதான் சிவகாசிக்கு பால்கொண்டு செல்வர். அவ்வாறு  செல்லும்போது, மக்கள் இந்த ஆலவிழுதினைத்  தாண்டியே செல்லவேண்டும். அவ்வாறு அவர்கள் தாண்டும் போது விழுந்தாலும் பால் கீழே சிந்துவது இல்லை என்பது நம்பிக்கை. ஆனால் அந்த ஆல விழுதினை ஒருவர் வெட்டியெடுக்க ‘ரத்த கசிவு’ ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சமுற்ற மக்கள் அவ்விடத்தை வழிபடத் தொடங்கினர் என்கின்றனர். அந்த இடத்தில் லிங்கம் சுயம்பாக வளர்ந்தது என மக்கள் நம்புகின்றனர். நதியின் கரையில் அய்யனார் இருக்கின்றார். இவர் காவல் தெய்வமாக காட்சியளிக்கின்றார். ஆதலால் அந்த இடத்தில் கூடலிங்க அய்யனார் அல்லது கூடமுடைய அய்யனார் என்றும் அழைக்கப்படுகின்றது.
               
முத்தையா என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னர், சேத்தூர் அரண்மனையில் செல்லப்பிள்ளையாக விளங்கினார். இவர் சேத்தூர் ராணி மீது மோகம் கொள்ளவே  ராஜா தன்னுடைய படையினர்  மூலமாக முத்தையாவைப் பிடித்து, சதுரகிரி மலைக்குக் கொண்டு சென்றதுடன் அங்கேயே அவரைச்சுட்டுக் கொல்லவும் செய்கின்றார்.
அதைத் தொடர்ந்து முத்தையா, ஆவியாக வந்து இராணியை இரவு நேரங்களில்  மலைக்கு அழைத்து செல்வது வழக்கம். பொழுது விடியும் வேளையில் திரும்ப அரண்மனையில் கொண்டு விடுவதும் வழக்கம். இதனால் கவலையடைந்த ராஜா, யார் இந்த ஆவியைப் பிடித்துப் போவார்களோ அவர்களுக்கு முந்நூறு  பொன் பரிசாகத் தரப்படும் என்று அறிவிக்கின்றார்.
வியாபாரத்திற்காகச் சேத்தூருக்குச் சென்றிருந்த முத்துக் கருப்பன் செட்டியார், ராஜாவின் அறிவிப்பைக் கேள்விப்பட்டு, மன்னரிடம் சென்று முத்தையாவின் ஆவியை தான் கூட்டிச் செல்கின்றேன் என்றார். பின்னர், செட்டியார் சேத்தூரின் மேற்கு எல்லைக்குச் சென்று முத்தையா என்ற ஆவியை அழைத்து ‘முத்தையா என்னுடைய கோயிலில் நடக்கும் கடைசிப் பூசையை உனக்குத் தருகிறேன். நீ என்னுடன் வந்துவிடு’ என்று வேண்ட அதற்கு அந்த ஆவி கட்டுப்பட்டு செட்டியாரின் பின்னால் சென்றது அந்த ஆவியைக் கொண்டு வந்து கூடமுடையார் கோயிலின் வாசலில் முத்துக்கருப்பன்  நிறுத்தினார்.
தொடர்ந்து மன்னர் அறிவித்த முந்நூறு பொன்னை வாங்க சேத்தூர் அரண்மனைக்குச்  சென்றார். தான் அறிவித்த படியே செட்டியார்ககு முந்நூறு பொன்னைக் கொடுத்தளிக்கின்றார். ராஜா,  செட்டியார் தம்மூர்க்குச் செல்லும் வழியிலேயே  அதைத் தட்டிப் பறிக்க ஆட்களையும்  அனுப்பி வைத்தார். மந்திர வித்தைகளை முறையாகக் கற்றிருந்த செட்டியார், தன்னை வழிமறித்த ராஜாவின் ஆட்களிடம் ‘உங்களில் ஐந்து பேர் இங்கு இருக்கும் செடிகொடிகளைப் பறித்து போட்டப்படி இருங்கள், ஒருவன் மட்டும் ராஜாவிடம் சென்று இந்தச் சேதியைக் கூறுங்கள் என்று சொல்லி அவர்களை  தன் வயப்படுத்தினார். ராஜாவின்  ஆட்களும் செட்டியார்  கூறியபடியே செய்தனர்.
தகவலறிந்த ராஜா குதிரையில் விரைந்து வந்து செட்டியாரின் காலில் விழுந்த தன்னை மன்னித்து அருளுமாறு வேண்டினார். அதைத் தொடர்ந்து இந்நாள் வரையிலும், சிவராத்திரி தினத்தன்று கூடமுடையார் கோயிலில், சேத்தூர் அரண்மனை பெயரில்தான் முதல் பூசை நடைபெறுகின்றது. அது மட்டுமல்லாமல் செட்டியார் கொடுத்த வாக்குப்படியே இன்றும் சேத்தூர் முத்தையாவுக்குத் தான் கடைசி பூசை நடக்கினற்து”8 எனக் குறிப்பிடுகின்றார். இக்கோயில், சேத்தூர் அரண்மனை குடும்பத்தார்க்கு மட்டுமின்றி நாட்டார் மக்களுக்கும் குலதெய்வமாக விளங்குகின்றது.

சுடலை மாடன்
ஞானப் பழத்தைத் தன் தமையனான ஐங்கரனுக்கு அம்மையப்பர் அளித்ததால், கோபம் கொண்ட முருகப்பெருமான், அம்மையப்பனைப் பிரிந்து குன்றின் மீதேறி நின்றார். ஐங்கரனான விநாயகர் தன் தாயைப் போலவே, தனக்கும் பெண் வேண்டும் என்று ஊர் ஊராய்ச் சென்று குளத்தங்கரையில் காத்துக்கிடந்தார். இதனால் உமையவளுக்குப் புத்திரசோகம் ஏற்பட்டது.  உடனே  அவள் தன் பதியான சிவனாரிடம் தனக்கு இன்னொரு பிள்ளை வேண்டும் என்று வேண்டினாள் அவளது வேண்டுதலுக்குச் செவி சாய்த்த ஈசனார்; உமையே!  கயிலையில் உள்ள முப்பத்திரண்டாம் மரகத்தூணில் ஒரு  தூண்டா மணிவிளக்கு உள்ளது.  அம்மணி விளக்கில் தீபம் ஏற்றி, நீ தவமியற்றினால் உன் வேண்டுதல் பலிக்கும் என்றருளினார்.
அதன்படி, சிவனை மனத்தில் துதித்து,  தூண்டா மணிவிளக்கை ஏற்றி உமையவள் கடுந்தவமியற்றினாள். ஒரு கட்டத்தில் விளக்கின் பிரகாசம் குறைந்தது. அப்போது சிவன் வந்து விளக்கின் திரியைத்  தூண்டினார்.
அவ்விளக்கிலிருந்து மூன்று சுடர்கள் அன்னை உமையவளின்  மடியில் விழுந்தன. கண் விழித்த  பார்வதி ஒழுங்கற்ற முண்டமாக உருவமற்ற குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு வருந்தினாள். அதற்குரிய நல்ல உருவத்தை தந்தருளுமாறு வேண்டினாள். அவரும் அவ்வாறே செய்து, அதற்கு உயிரையும் அளித்தருளினார். விளக்கின் சுடரிலிருந்து உருவானதால் அக்குழந்தைக்குச் ‘சுடலை’ என்ற பெயரிட்டு பின்னர் அன்னை அக்குழந்தையை வளர்த்து வந்தாள்.
மூன்று வயதான சுடலைக்கு அடக்க இயலாத பசியுண்டாகி அலைந்தான். தாய்ப்பாலால் பசி அடங்காத சுடலை, சாமத்தில் பூலோகத்திற்கு வந்து தில்லைவனத்துச் சுடுகாட்டில் எரியும் பிணங்களைக் கண்டு பசியாறினான். பின் தாயான  உமையவள் அறியாதபடி அவன் தொட்டிலில் படுத்துக் கொள்வான். ஒரு நாள் குழந்தையை அன்னை எடுத்துக் கொஞ்சினாள். அப்போது, குழந்தையின் மீது பிணவாடை வீசவே, தன் ஞான திருஷ்டியால் நடந்தவற்றை உணர்ந்தாள். இதனால் திடுக்கிட்ட அன்னை, சிவபெருமானிடம் நடந்ததைக் கூறி வருந்தினாள்.
அப்போது சிவபெருமான் உமையவளே! நரமாமிசம் உண்ணத் தொடங்கிய சுடலை இனி கயிலையில் இருக்கத் தகுதியற்றவனாவான். அதனால் உடனே அவனைப் பூவுலக்கு அனுப்பிவை என்று கட்டளையிட்டார்.
சிவனாரின் கட்டளைக்கு இணங்கி உமையவள் உயரமான பீடமொன்றில் கலசம் அமைத்து, அதில் சுடலையை அமரவைத்து, உண்பதற்கு  ஒரு கோட்டை அரிசிச் சாதமும், முருங்கைக்காய் சேர்த்து வைத்த குழம்பும் வைத்தாள். கூடவே வழித்துணைக்கு வனப்பேச்சியையும், (சொல்லியனுப்பி) சேர்த்து கண்ணீர் மல்க பூவுலகுக்கு அவனை அனுப்பி வைத்தாள்.
பூவுலகுக்கு வந்த சுடலைக்குத் தாமிரபரணி, கோதாண்ட நதி உள்ளிட்ட ஆறுகள் சங்கமாகும் சீவலப்பேரி கிராமம் பிடித்துப்போக அவர் அங்கு குடி அமர்கின்றார். ஆனால், அவருக்குப் பசி அதிகமாகவே; அவ்வழியே ஆடு மேய்த்து வந்த ‘மாசானம்’ என்ற சிறுவனிடம் அவனது ஆடுகளில் ஒன்றைக்காட்டி பாலைக்கறந்து தருமாறு வேண்டுகின்றார். அதைக் கேட்டு சிரித்த மாசானம், ஐயா! அது குட்டி போடாத மலட்டுஆடு. அதில் எப்படி நான் பாலைக் கறக்க முடியும்? என்ற வினாவினை எழுப்புகின்றான்.
               
சிறுவனின் பதிலைக்கேட்டுச் சிரித்த சுடலை, சிறுவனே நீ அந்த ஆட்டின் மடியில் உன் கைகளை வைத்துப்பாலைக் கறந்துபார் என்றார். அதன்படியே சிறுவன் பனை ஓலை ஒன்றை மடித்துப் பிடித்தவாறு அந்த ஆட்டின் மடியில் கை வைத்ததும், ஆட்டின் மடியிலிருந்து பால் சுரந்து வழிந்தோடியது. அதனைக் கண்ட சிறுவன் பிரமித்து போனான். அவன் கையிலிருந்த பாலை வாங்கிக் குடித்த சுடலை, ஏப்பம் விட்டதுடன். மாசானத்தின் நாக்கை நீட்டக் கூறி அதில் தன் கையால் சக்கரம் ஒன்றையும் வரைந்தார்.
மேலும், அவர் மாசானத்திடம், ‘மாசானமே நீ தினமும் இந்த இடத்தில் எனக்காக இருவேளை பூசை செய்ய வேண்டும்; நீ எங்கிருந்து அழைத்தாலும் உன் கஷ்டங்களைத் தீர்க்க நான் விரைந்து வருவேன் என்று கூறியருளி மறைந்தார். சுடலையின் சக்தியை உணர்ந்த மாசானம், அதன்பின் சிவகிரிக்குச் சென்றார். அங்குத் தவம் பெற்று வந்த ஞானிகளிடம் சாஸ்திரங்களைக் கற்றதுடன் பல ஆண்டுகளுக்குப் பின், தாடியும் மீசையுமாக சந்நியாசி கோலம் கொண்டு சீவலப்பேரிக்குத் திரும்பிவந்தார்.
இதற்குள், சிறுவன் மாசானத்திற்குச் சுடலை காட்சியளித்த இடத்தில் சுயம்பாக லிங்கம் ஒன்று முளைத்தது. அதனைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அதனை வழிபட்டு வரலாயினர். என்பது புராணச் செய்தி. இது சம்மந்தமான நாட்டார் மக்களின் வாய்மொழிக்கதை பின்வருமாறு,
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு குடும்பர் இனத்தைச் சார்ந்தவர்கள் பஞ்சம் காரணமாக பிழைப்புத்தேடி மேற்கு நோக்கி செல்ல எண்ணினர். எனவே,  தங்களது காவல் தெய்வமாக விளங்கிய சுடலைமாடனிடம் தங்கள் எண்ணத்தைக் கூறி வேண்டுகின்றனர். அதற்குச் சுடலைமாடன் நீங்கள் முன்பு செல்லுங்கள், நான் பின்தொடர்ந்து  வருகிறேன் என்றது.  அவ்வாறே,  அவர்கள் அழகிய பனஞ்சோலையைச் சென்றடைந்து அங்குத்தங்கி ஓய்வெடுத்தனர். பின்னர் மறுநாள் அவர்கள் கீழப்பொட்டல்பட்டி என்ற ஊரை வந்தடைந்தனர்.
பயணத்தின் போது தங்களைக் காத்த தெய்வத்தை வணங்க எண்ணியபோது, பனை மரங்கள் நிறைந்திருந்த இடுகாட்டையே தேர்வு செய்தனர். மேலும், அவர்கள், சுடலை மாடனை வழிபட எண்ணியபோது சுடலை மாடன், நான் எனக்கு பிடித்த பனை மரத்தில்தான் இருப்பேன் என்று ஒருவித அசரீய ஒலியால் அவர்களுக்குத் தெரிவிக்க அவர்கள் பனை மரத்தின் அடியில் சுத்தம் செய்து வழிபடத்தொடங்கினர் எனக் குறிப்பிடுகின்றார்”9 பால்ராஜ் என்பவர். “காவல் தெய்வமாக வழிபடப்படும்  சுடலைமாடன் கோயில்கள் சுடுகாட்டிற்கு அருகிலே அமைந்திருக்கும்”10 என்ற முத்தையாவின் கருத்து இதனுடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இராமலிங்க சௌடாம்பிகா
தேவல முனிவரின் வம்ச வழியான தேவதாசமைய்யன் வேண்டுதலுக்கு இணங்கி, இறைவன் ஊருக்கு வெளியே ஓர் இடத்தைப் புனிதப்படுத்தினால் அங்குச் சௌடாம்பிகை தோன்றுவாள் என்று என்றும், பின்னர் அம்மனைக் கோயிலுக்கு  அழைத்துச் செல்லுமாறும் உரைக்கின்றார்.
               
அதற்கு இணங்கி தேவதாசமைய்யன் ‘ஆமோத நகரம்’ என்னுமிடத்தில் ஒரு கோயிலைக் கட்டி முடிக்கின்றார். அங்கு அம்மன் சௌடாம்பிகையும் அருட்காட்சியளிக்கின்றார். தொடர்ந்து சௌடாம்பிகை, தேவாங்க குல மக்கள் அனைவரையும் முன்னே செல்லுமாறும், தான் அவர்களைப் பின் தொடர்ந்து வருவதாகவும்  கூறுகின்றான். ஆனால், முன்னே செல்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பிப் பார்க்கலாகாது என்றும், அப்படித் திரும்பிப் பார்த்துவிட்டால் தான் அவ்விடத்திலேயே நிலைகொண்டு விடுவதாகவும் அம்மன் தெரிவிக்கின்றது.
               
அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் முன்னே செல்ல, அன்னை சௌடாம்பிகை பின் தொடர்கின்றாள். அம்மனின் பாதச்சிலம்பின் ஒலியை கேட்டவண்ணமே மக்கள் பின் நடக்கின்றனர். அவர்கள், அம்மன் தங்களைப் பின் தொடர்ந்து வருவதாக எண்ணி முன்னே சென்று கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செல்லும் போது ஓர்  ஆற்றங்கரையை சென்றடைகின்றனர்.
               
அங்கு ஆற்றுமணலில் அம்மனின் பாதங்கள் பதிந்ததால், சிலம்பொலியின் ஓசை கேட்காமல் ஆகின்றது. எனவே, அம்மன் தங்களைத் தொடர்ந்து வரவில்லையோ என்று ஐயுற்ற மக்கள் திரும்பிப் பார்க்க, அம்மன் அங்கேயே, ஓர் ஆவாரஞ்செடிக்கு அருகில் நிலைகொண்டு விடுகின்றாள். இதைக் கண்ட தேவாங்க குல மக்கள் வேண்டியும், மன்றாடியும்,  அம்மன் அங்கிருந்து எழவில்லை. அம்மன் நிலைகொண்ட இடம் ‘நந்தவரம்’ என்னும் ஊராகும்.
               
வழிபாட்டின்போது மக்கள் ஆவாரஞ்செடிக்கு அருகில் திருமஞ்சன குடத்தில் ‘பாகு’ உடைவாளை வைத்துக், காப்புக் கட்டி, அம்மனை அழைத்து வழிபட்டனர். ஆனால் பாகு உள்ள திருமஞ்சனக் குடத்தை ஒரே நாளில் ஆமோத நகரக் கோயிலுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பது அம்மனின் கட்டளை. மேலும், அம்மன் பின்வருமாறு உரைக்கவும் செய்கின்றாள்.
               
நான் உங்களது முன்னோனும் குலமுதல்வனுமாகிய தேவலனுக்கு அளித்த கத்தி இது. இதனை பகைவர் மீது பயன்படுத்தினால் அவர்களை அழிக்கும். ஆனால், தனக்குத்தானே பயன்படுத்தினால் எவ்வித துன்பமும் விளைவிக்காது. திருமஞ்சனக் குடத்தை எடுத்து கோயிலுக்குச் செல்கையிலும், உங்கள் கைகளில் உள்ள கத்திகளை உங்கள் மீது பயன்படுத்தினாலும் அதனால் உங்களுக்கு எந்தவித கெடுதலும் வராது. காரணம்  நான்தான் உங்களோடு இருந்து உங்கள் எல்லோரையும் பாதுகாத்து வருகிறேன் என்று அம்மன் அருளியதாக மக்கள் நம்புகின்றனர்.
               
இதன் அடிப்படையில் தேவாங்க குலமக்கள் நல்லநாளில் குறிப்பிட்ட இடத்திலிருந்து முறைப்படித் திருமஞ்சனக் குடத்தில் பாகு வைத்து ஆவாரஞ்செடிக்கருகில் காப்புக்கட்டி, கலசம் அலங்கரித்து, அம்மனைக் கோயிலுக்கு அழைத்து வருகின்றனர். கூடவே, அம்மன் புகழ்மாலை, மற்றும் தாண்டகப் பாடல்களையும் பாடுகின்றனர். இவ்வாறு பாடி வணங்கும்போது இவர்கள் தங்களிடமுள்ள  கத்திகளால் மார்பிலும் தோளிலும் அலகு போட்டுக் கொள்கின்றனர். இவர்களது உடலிருந்து ரத்தம் வழிந்தாலும் சிறிதும் வேதனை ஏற்படுவதில்லை என இவர்கள் நம்புகின்றனர். இதற்குக்காரணம், அத்துன்பத்தையெல்லாம் அம்மனே தாங்கிக் கொள்கின்றாள் என மக்கள் நம்புவதே காரணம்”11 என்று வீரராஜன் சுட்டுகின்றார். இவ்வழிபாடு  ஆவி வழிபாட்டிற்கு  இட்டுச் செல்கின்றது.
பொங்கும்மாரியம்மன்
               
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நாடார் இனத்தைச் சார்ந்த சூரியன், சின்னு என்பவர்கள், பொதி மாட்டு வண்டியில் கருப்பட்டியைப் பொதியாக  ஏற்றிக் கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து வந்தனர். அவ்வாறு விற்றுவர ஒரு நாள், சில நாட்களுக்குத் தேவையான கட்டுச்சாதத்தையும் கருப்பட்டியையும்  வண்டியில் ஏற்றி வியாபாரதிற்குச்  சென்றனர்.
               
அவ்வாறு செல்லும்போது அவர்கள் இரவுக் காலங்களில் கிராமங்களில் தங்கி  வியாபாரத்தை நடத்தினர். ஒரு நாள் வழக்கம் போல்; சூரியனும், சின்னனும் வியாபாரம் செய்ய இலுப்பை ஊரிலிருந்து புறப்பட்டு வியாபாரம் செய்து கொண்டே விருதுநகரை கடந்து விட்டனர். கொண்டு வந்த கருப்பட்டியும் சரியாக அன்று விற்பனை ஆகவில்லை. அதனால் கவலையடைந்த அவர்கள் தாங்கள் எங்கே செல்கின்றோம் என்ற ஞாபகமில்லாமல் பயணம் செய்து கொண்டே இருந்தனர். இரவான போது மழை வந்து விட்டது. மாடுகளுக்கு கண்கள் தெரியவில்லை. இந்த நிலையில் சின்னு நாடார்க்குப் பசி ஏற்பட்டது அவர் சூரிய நாடாரிடம் பசிக்கிறது. சாப்பிடுவோமா! என்று கேட்கிறார். சூரிய நாடார்க்குத் தர்ம சங்கடமான நிலை, என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும் வேளையில் சற்று தொலைவில் கண்ணுக்கெட்டிய  தூரத்தில், ஒரு சிறிய  வெளிச்சம் தென்படுகிறது. முதலில் மின்மினிப் பூச்சியாக இருக்கலாம் என நினைத்த சூரிய நாடார்க்குச் சந்தேகம் தெளிகின்றது. சிறிது தொலைவில் ஒரு வீட்டைக் காண்கின்றார்.  இரவில் அங்குத் தங்கி உணவருந்தி, பின் காலையில் செல்லாம் என முடிவு செய்கின்றார். உடனே இருவரும் அங்குச் செல்வோம்  என முடிவு செய்கின்றனர். நல்ல அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொண்டு மாட்டையும் அழைத்துக் கொண்டு  அந்த வெளிச்சம் தெரிந்த வீட்டை அடைகின்றனர்.
               
அந்த வீட்டில் நடுத்தர வயதுடைய ஓர் அம்மையார் கையில் விளக்கேந்திக் நிற்பதனைக் காண்கின்றனர். உடனே!  சூரிய நாடார் ‘அம்மா தாயே, நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம். இருட்டானதால் சரியான பாதையைத் தவறவிட்டோம், மழை வேறு பெய்து கொண்டிருக்கிறது. எனவே, என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கின்றோம். இன்று இரவு மட்டும் உங்கள் வீட்டின் தாழ்வாரத்தில் தங்கி உணவு அருந்திச் செல்ல வசதி செய்து தர  வேண்டும் என வேண்டி நிற்கின்றனர். அதற்கு அம்மையாரும் ஒத்துக் கொள்கின்றார்.
               
மேலும்,  அவர்கள்  ஓட்டி வந்த மாடுகளை அந்த வீட்டிலே வேலைக்காரர்களான முனியனிடமும், முருகனிடமும் ஒரு கல்தூணில் மாடுகளை கட்டிப்போடுமாறு பணிக்கின்றார். பின், உணவருந்துகின்றனர். தொடர்ந்து வீட்டுத் தாழ்வாரத்தில் தூங்குகின்றனர். தூக்கத்திலிருந்து எழுந்தபோது கண்ட காட்சி அவர்களை ஆச்சரியத்திற்குள் ஆக்கியது.
               
அவர்கள் படுத்திருந்த இடம் ஒரு கோயிலாக காட்சி அளித்தது. அதன் தாழ்வாரத்தில்தான் அவர்கள் இரவு உண்டு உறங்கியது. அவர்களுக்குத்  தண்ணீர் தந்த தாய்தான் அங்கு அம்மனாக கையில் தீபம் ஏந்தி நின்றது. இந்தக் காட்சியைக் கண்ட சூரிய நாடார்க்கு உள்ளம் நடுங்கியது. அவர்தன் தம்பி சின்னு நாடாரை எழுப்பினார். அவரும் தடுமாற்றம் அடைந்தார். பின் இருவரும் ஒருநிலைப்பட்டு தங்கள் மாடுகள் இரண்டினையும் கல்தூணிலே கட்டப்பட்டிருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தனர். அந்த மாடுகள் கட்டப்பட்டிருந்த கல்தூண்கள் இரண்டும் முருகன், முனியாண்டி என்று வணங்கும் தெய்வங்கள் என்று கண்டனர்.
               
நிலைமையை ஒருவாறு உணர்ந்த அவர்கள் அந்தத் தெய்வத்தை வணங்கி தரையில் மண் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, பழையபடி மாட்டையும் ஓட்டிக்கொண்டு பக்கத்திலிருந்த சிறிய கிராமமாகிய எல்லிங்க நாயக்கன்பட்டியை வந்தடைந்தனர். முதல் நாள் நடந்த விபரங்களை அங்கு உள்ளோரிடம் கூறினார்கள். விபரத்தைக் கேட்ட அந்த ஊர் மக்கள் அந்தத் தாய் அன்னை காமாட்சிதான் என்று உறுதியாகக் கூறினார்கள்.
               
விபரம் அறிந்த இருவரும் மனதார போற்றி வணங்கினர். இரவில்  திசை தெரியாமல் தவித்த எங்களுக்குத் திசைகாட்டி தங்க இருப்பிடமும் தந்து, உணவும் தண்ணீரும் தந்து காப்பாற்றிய அந்தத் தாயிடம் எங்களையும் எங்கள் வம்சத்தினரையும் நிலம் உள்ளவரை, நீர் உள்ளவரை உன் நினைவு நீங்காதிருக்க அருள் செய்ய வேண்டும் என வேண்டினர்”12 என்று சாமி குறிப்பிடுகின்றார். இந்தக் கோயில் காமாட்சி அம்மன் கோயில் என்றும் பொங்கும் மாரியம்மன் கோயில் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது.

கப்பல் உடைத்த முனியாண்டி
               
சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து கடல் வணிகத்தின் பொருட்டு அகமுடையார் இனத்தைச் சார்ந்த ஒருவர் இலங்கைச் சென்று அங்கு வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்திலுள்ள கிராம மக்கள் முனியாண்டி என்ற தெய்வத்தைக் கோயில்கட்டி மக்கள் வழிபட்டு வந்தனர். நாளடைவில் அக்கோயிலில் வழிபாடு முடங்கியது. எனவே, மக்கள் அத்தெய்வத்தை மறக்கலாயினர். ஆனால் அகமுடையான் மட்டும் அத்தெய்வத்தை வழிபட்டு வந்தான்.
               
நாளடைவில் அக்கிராமம் அழிவுக்குட்பட்டபோது, அங்குள்ள மக்கள் வெளியேறி வேறு ஊர்களுக்குச் சென்றனர். அகமுடையானும் தனது சொந்த நாடான இந்தியாவுக்குத் திரும்பும் போது, முனியாண்டித் தெய்வம் அவர் முன் உருவமற்றநிலையில் தோன்றி தன்னையும அழைத்துப் போகும்படி வேண்டியது. அதற்கு அவன் சம்மதித்து முனியாண்டித் தெய்வத்தின் சிலையைப் பெட்டியில் வைத்து கப்பலில் பயணம் ஆனான்.
               
கடலில் பயணம் செய்யும் போது கூட, பிரிட்டிஷ் மாலுமியரும் இருந்தனர். அவர்கள் அகமுடையானிடம் இருந்த பெட்டியைக் கண்டு அதனைக் கொடுக்கும்படி அவனிடம் வேண்டினர். அவன் தரமறுக்கவே அவர்கள் அதனைப் பறிமுதல் செய்தனர்.
அகமுடையான் என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும்போது முனியன் தெய்வம் கப்பலின் அடிப்பகுதியில் துளையிட, கடல்நீர்கப்பலின் உள்ளே நிரம்பி, கப்பல் மூழ்கத் தொடங்கியது. மாலுமிகள் அறியாத வண்ணம் முனியன் தெய்வம் கப்பலை இரண்டாக உடைத்து அகமுடையானுடன் கடலின் கரையை வந்தடைந்தது. அகமுடையான், தனது சொந்த ஊரான திருச்சுழி அருகே வந்து முனியனுக்குக் கோயில்கட்டி வழிபடத்தொடங்கினான்.அவன் முனியனை வழிபட்டு வர அவனுடைய குடும்பம் பல்கிப் பெருகியது. நாளடைவில் ஓர் குழுவினராக முனியனைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்”13 என்கிறார் ஜீவானந்தம்.

தொகுப்புரை
               
தெய்வத்தின் கதைகள் எல்லாம் வெவ்வேறு  காலச் சூழலினால் தெய்வநிலைக்கு ஏற்றப்பட்டதைக் காணலாம்.  இத்தெய்வங்கள்  இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் ஏற்ப தெய்வநிலை எய்திய காரணத்தை அறியமுடிகின்றது.
               
இத்தெய்வங்கள், முதலில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய பின்னர் சாந்தநிலைக்கு மாறியவை. இந்நிலையே தெய்வ வழிபாட்டிற்கு வழிகோலியது எனலாம். இத்தெய்வ வழிபாடு முதலில் மனதில் சிந்தனை ஏற்படுத்திய உருவமற்ற வழிபாடாகவே காணப்பட்டன. நாளடைவில் அவற்றை ஆவியின் தோற்றம் என்று மக்கள் நம்பினர்.
               
இத்தொன்மைக் கதைகள் வாயிலாக சமயத்தை நிறுவனம் செய்யும் மனிதர்களின் செயற்பாடுகளை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், செயற்பாடானது வழிபாட்டு நோக்கில் எவ்வாறு பிரிந்து செல்கிறது என்பதனையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
               
ஒவ்வொரு தெய்வத்தோற்றமும் எவ்வாறு மக்களிடையே நிலவி வருகிறது என்பதையும் அறியமுடிகிறது. நாட்டார் தெய்வங்களின்  இத்தோற்றம், உலக சமயங்களின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது.  கடவுள்களை  உருவங்களையும்  இச்சமயங்களே நிர்ணயம் செய்வதாக அமைந்துள்ளன.
 
               சமயங்களை எல்லாம் கிராம தெய்வங்கள்தான் தோற்றுவிக்கின்றன எனலாம்.  ஒவ்வொரு தெய்வ தோற்றத்திற்கும் காரணம் தெய்வங்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகவும் காணமுடிகின்றது. ஆசைகள் மனிதர்களுக்கு மனிதர் மாறுபடுவதுபோன்று, தெய்வங்களுக்கும் ஆசைகள் மாறுபடுவதை இந்த வாய்மொழிக் கதைகள் மூலம் அறியமுடிகின்றது.
தெய்வங்களின் ஆசைகளைப் பின்வருமாறு பகுக்கலாம்.

1)             நன்மை மட்டும்  செய்தல்

2)            நன்மையும் தீமையும் செய்தல்

3)            காலம் கருதி செய்தல்
      மேற்கூறிய மூன்று நிலைகளும் தெய்வங்கள் மனிதர்களுக்கு நன்மையே அல்லது தீமையோ செய்வதன் அடிப்படையில் உருவானதாகக் காணமுடிகின்றது.
 இவற்றின் மூலம் வழிபாட்டுநிலைகளும் அமைந்துவிடுகின்றன. அம்மூன்று நிலைக்கூறுகளும் நாட்டார் மக்களின் தெய்வங்களிடமும் மட்டுமன்றி உலக சமய தெய்வங்களிடமும் காணப்படுகின்றன.

சான்றெண் விளக்கம்
1.  அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆடிப்பெருவிழா அழைப்பிதழ் 13.8.2010.

2.குருவம்மாள், இருக்கன்குடி.

3.மேலது.
4.வெள்ளையம்மாள், அழகாபுரி.

5.கண்ணன், திருச்செந்தூர்.

6.சல்லிமுத்து, புதுக்கோட்டை,

7.சுப்பையா, புதுக்கோட்டை.

8.சண்முகநாதன், கோட்டையூர்.

9.தர்மர், கிருஷ்ணமநாயக்கன்பட்டி.

10.பால்ராஜ், கீழப்பொட்டல்பட்டி.

11.ஓ.முத்தையா, பண்பாட்டு பதிவுகள், ப. 134.

12.வீரராஜன், சங்கரலிங்காபுரம்.

13.எஸ்.பி.சாமி, விருதுநகர்.

14.கே. ஜீவானந்தம், உடையனாம்பட்டி

பார்வை
1.சு. பால்பாண்டி, விருதுநகர் மாவட்டக் குலதெய்வ வழிபாடு, முனைவர் பட்ட ஆய்வேடு-2012, கேரளப் பல்கலைக்கழகம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. பால்பாண்டி
உதவிப் பேராசிரியர்
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
வடபழனி வளாகம், 
சென்னை – 600026.

 

 

சங்கஇலக்கியம் கூறும் பசி கட்டமைத்த வாழ்வியல் அறம் |முனைவர்ஆ.சாஜிதாபேகம்

சங்கஇலக்கியம் கூறும் பசி கட்டமைத்த வாழ்வியல் அறம்

ஆய்வுச்சுருக்கம்
                            

லக உயிர்கள் அனைத்திற்கும் பொதுப்பண்பாக அமைவது பசி. பசிக்கான தேவை உணவைப் புசிப்பதில் மட்டுமே நிறைவடையும்.வேறு எதைக்கொண்டும் பசியை நிறைவு செய்ய இயலாது என்பது உலகியல் உண்மை.உலகத்தோற்றம் முதலாக ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரையிலும் இரை தேடிப் பெறுவதே தொடர் பணியாகின்றது.உயிர்களிடம் இயற்கையாகவே அமைந்த இயல்பூக்கத்தின் அடிப்படையில் இம்முயற்சி தன் சார்ந்த உயிர்களுக்கு இரை தேடவும் கற்பித்திருக்கின்றது.சங்கிலித் தொடர் போன்ற இந்த அறமே இன்றும் நாளையும் உயிர்களைக் காக்கின்றது. ஆறறிவு கொண்ட மனித உயிரும் இதற்கு விதிவிலக்கல்ல.உயிரிலும் உடலிலும் பிணிக்கப்பட்ட பசியிலிருந்து விடுதலை பெற ஒவ்வொரு மனிதனும் உணவைத் தேடி அலைந்திருக்கின்றான். அவனது சிந்திக்கின்ற அறிவு உணவுசேகரிப்பையும் சேமிப்பையும் கற்றுத் தந்துள்ளது.இந்த விலக்க முடியாத வாழ்வியல் தேவையானது மனிதகுலப்பெருக்கத்தில் நடத்தை நெறிமுறைகள் உருவாக்கத்திற்கான அடித்தளமாகியிருக்கின்றது.அத்தகைய நெறிமுறைகள் அறமாக நம் முன்னோர்களால் வகுத்தளிக்கப்பட்டதன் காரணம் பசி என்பதை சங்க இலக்கியங்கள் வழி நிறுவுவதன் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


முன்னுரை          
                  

பசி உடலின் இயக்கத்திற்கான அடிப்படைச் செயல்பாடாகும்.உலகின் அனைத்து உயிர்களின் தேவையும் தேடுதலும் பசியைக் கொண்டே அமைகின்றது.மானுடச் சமூகத்தின் அறவியல் சிந்தனைகளைக் கட்டமைக்க பசி என்னும் உணர்வு காரணமாகியிருந்துள்ளதனை பழந்தமிழ் இலக்கியங்கள் வழி அறியலாகின்றது.பசி எனும் உயிர்த்தேவை உலக இயக்கத்திற்கான ஆதாரமாக இருந்துள்ளது. வேட்டைச்சமூக காலத்தில் மானுடத்தின் தேவை உடலையும் உயிரையும்   பசியே காரணமாகியுள்ளது. இன்று நாம் பின்பற்றி வாழும் அறங்களும் அது சார்ந்த நடத்தைகளும் பசியால் வடிவமைக்கப்பட்டவை என்ற உண்மையை சங்க இலக்கியங்கள் எடுத்துணர்த்துகின்றன. பகிர்ந்துண்ணும் உயிரினமாகிய மனிதனுக்கும் பசி என்பது பொதுமைப்பண்பாகியுள்ளது. தனிமனிதனுக்கான பசி தன்னைப் போன்று பிற உயிர்களின் பசியை உணரச்செய்து மனிதநேயத்தைக் கட்டமைத்திருக்கின்றது. ஓரறிவு முதலாக ஆறறிவு மனிதன் வரையிலும் அன்பு, தாய்மை, காதல், வீரம், அச்சம், போராடிப்பெறும் குணம் போன்ற நடத்தை வடிவங்கள் அந்தந்த புலனுணர்விற்கு ஏற்பப் புலப்படுகின்றன.
                இத்தகைய நடத்தை வடிவங்கள் பசி உண்டாகும் போது பல மாற்றங்களை அடைகின்றன. பசியை பிணியாகக் கூறி அப்பிணிக்கான மருந்தாக உணவைக் கூறியுள்ள நம் முன்னோரின் சிந்தனைகளை இன்றைய சமூகம் அறிந்துணரத் தலைப்பட வேண்டும்.உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழுவதற்கும் நம் முன்னோர்களால் அறங்கள் வகுக்கப்பட்டமைக்கும் பசி எனும் உணர்வு காரணியாகியிருந்துள்ளதனைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


பசியும் மனித நடத்தை வடிவங்களும்
                         

தனிமனிதனுக்கான பசி எனும் உணர்வு உணவுத்தேடலில் தொடங்கி அடுத்து என்ன என்ற தொடர் சிந்தனையை தோற்றுவித்துள்ளது.அதன் வெளிப்பாடே அடுத்த வேளை உணவுத்தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்ற தேவையின் உருவாக்கமாகும். பசி போராடிப் பெறும் குணத்தை அவனுக்குக் கற்பித்தது.விலங்குகளைப் போல தேவை நிறைவடைந்துடன் உணவை விட்டுச் செல்லாமல் சேகரித்துப் பயன்படுத்தும் ஆற்றலே நாகரீக வளர்ச்சியின் அடித்தளமாக இருந்திருப்பதனைக் காணமுடிகின்றது.
 
“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே”   (புறம்-18-21)
என்று உணவையும் நீரையும் தேடி  அலைந்த மனிதன் இயற்கையை உற்று  நோக்கினான் .தேடுதல் மிக்க அறிவு நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்டது.உணவு உற்பத்தியும் சேமித்தலும் அன்றாடத் தேவையாக மாற்றம் பெறத்துவங்கின.மனிதக் கூட்டம் பெருகிய பின் மலை, காடு, விளைநிலம், கடல், மணற்பாங்கான பாலை நிலம் என்ற ஐவகை நிலங்களில் பரவி தம்மைத் தகவமைத்துக் கொண்டுள்ளனர். குறிஞ்சிப்பகுதியில் வாழும் மக்கள் தினை, தேன், மலைநெல் முதலானவற்றையும், முல்லை நிலத்தில் வரகு,சாமை,முதிரை போன்றவற்றையும், மருதநில வயல்களில் செந்நெல்லரிசி, வெண்ணெல்லரிசி,போன்ற அரிசிவகைகளையும் கடல்புறவாழ் மக்கள்  மீன், உணக்கல், உப்பு முதலானவற்றையும் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகின்றது.        மேலும் ஒருவனின் பசி உணர்வு உடலை இயக்குவதற்கான மருந்தாக உணவைக் காண வைத்துள்ளது. உணவின் மீது பெருமதிப்பை உண்டாக்கியுள்ளது.
                          
“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றைவேந்தனில் ஔவையும் ,“உணவே மருந்து மருந்தே உணவு” என்று திருமூலரும் பசிக்கான மருந்தாகவே உணவைக் கண்டுள்ளனர்.பசித்தவர்க்குச் சோறிட்டு பிறகு தாம் உண்பதே சிறப்பாகும்.
“பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது”(குறள்-227)

என்று கூறுகிறது தமிழ்மறையாகிய திருக்குறள் .பசி என்பது பொது நோய்.இது அனைத்துயிர்களையும் பற்றியிருப்பது.உடலில் ஏற்படுகிற அனைத்து நோய்களுக்கும் பசியே மூல காரணம்.

“பெரும்பசி” (திரிகடுகம் பாடல் 60)        
“வயிற்றுத்தீ”(புறம் 74)         
“யானைத் தீ”
என்று மணிமேகலையிலும் தீராப்பசி தொடர்பான நோய்களாகக் கூறப்படுகின்றன. இயல்பாக மனிதனுக்கு எழும் பசிக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது நோயாக மாறுகின்றது.தணியாத பசி தீ போல வயிற்றில் எரிந்து துன்பப்படுத்தியிருக்கும் போது,மூளை சரியாக சிந்திக்காது.இதற்குத் தீர்வு உணவு மட்டுமே என்பது இயற்கை.
“பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ
சேய்த்தோ கூறுமின்”(புற-173)
என்று உணவு தருபவரை தேடிச் சென்று பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பை இப்பாடல் உணர்த்துகிறது. மேலும், உணவு தன்னிறைவு அடையாத காலத்தையும் அடையாளப்படுத்துகிறது.
 

தேவையும் தூண்டுதலும்
          

உணவு வகைகளைப் பாதுகாத்து சேமித்து வைக்க வேண்டிய அவசியத்தை பசித்துன்பத்தின் வழியாகப் பெற்ற அனுபவமே உருவாக்கியது.இதனை எட்டுத்தொகை நூல்களில் பாடப்பட்டுள்ள தினைப்புனம் காக்கும் பாடல்கள் பதிவு செய்கின்றன.

“சிறுகிளி கடிதல் தேற்றாள் இவளென” (அகம்)
“நறுகோட் சிறுதினைப் படுபுள் ஓப்பி” (குறிஞ்சி-38)
“தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும் கிளிகடி மரபின”  (குறிஞ்சி-43-44)
என்ற பாடல்களில் காணமுடிகின்றது.  விளைந்த நெல் தானியவகைகளை பருவங்காலங்களுக்கேற்ப சேமித்து வைத்துக் கொண்டனர்.வேளாண்மைத் தொழில் முதன்மைத் தொழிலாக உருவெடுத்தமையால் அதற்குத் துணையாக பல தொழில்கள் காலப்போக்கில் தோன்றின.தானியங்களைச்  சேமிப்பதற்கான பானைகள் கிடங்குகள் மரப்பொருட்கள் கண்டறியப்பட்டன.
 கணிப்பும் கவனமும்                      
                      
தன் பசியை உணர்ந்ததன் விளைவு தன்னைப்போல் பிறரின் பசியையும் உணர்த்தியது.அது பகிர்ந்துண்ணும் பண்பை மானுடகுலத்தில் பொதுமைப்படுத்தியுள்ளது. இதனை சங்கப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.

“படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும்”(புற-188)
“உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும்”(புற-95)
“சோறு ஆக்கிய கொழுங்கஞ்சிஆறு போலப் பரந்தொழுகி”(பட்-45-46)
என்ற பட்டினப்பாலைப் பாடலில் அனைத்து மக்களும் பசியாறும் வண்ணம் சோறு வடிக்கப்பட்டதைக் கூறுகின்றது.
             உணவு உற்பத்தியும் பகிரலும் பொதுவுடைமைச் சமூகத்தைக் கட்டமைத்தன. உணவைத் தேடி காடு மேடுகளில் திரிந்த மனிதன் தனக்கான நிலையான இருப்பிடத்தை அமைத்துக் கொள்வதற்கு வேளாண்மை காரணமாகியுள்ளது.நிலையாக வாழத் தொடங்கிய பின் பகிர்ந்துண்ணும் சிந்தை விருந்தோம்பல் பண்பாடாகவும் கொடைத்தன்மையாகவும் மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.இதற்கு ஆற்றுப்படைநூல்கள்  சான்று பகர்கின்றன.

“ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்  
பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றிப் பல்நாள்  
குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்”  (பெரும்-341-345)
என்ற பாடலில் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் தான் வயிறார உண்ட உணவைக் குறித்து பரிசில் பெற விழைகின்ற  பாணனுக்குக் கூறுவதால் நெடுநாள் நிறைவடையாத உணவின் ஏக்கமும் அதைப் புரிதலோடு உணர்ந்து கொண்ட மன்னனின் கொடைத் தன்மையும்  வெளிப்பட்டமைக்குப் பசி என்னும் தனிமனித உணர்வு காரணமாகியிருப்பதனை  உணரமுடிகின்றது.

                மேலும் கொடைத்தன்மையில் முதன்மையானதாக நாடி வருவோருக்கு  மனமும் வயிறும் நிறைய உணவளித்துப் பசியைப் போக்குதல் என்பது தலைமைப்பண்பின் அடையாளமாகியுள்ளது. பசியைப் போக்குவதன் மூலமே புலமையும் கலையும் நிலைத்து வாழும் என்ற உண்மையை உணர்ந்திருந்தனர்.


பகிர்தலும் புரிதலும் 
               

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்ற புலவர் மோசிகீரனார் நீண்ட தூரம் நடந்த களைப்பின் மிகுதியால் முரசுக்கட்டிலில் படுத்துறங்கினார்.அரசனுக்கான கட்டிலில் அரசனைத் தவிர  வேறு யாரும் அமர்வது தண்டனைக்குரியது.இருப்பினும் அரசனின் புரிதல் மோசிகீரனாரை தண்டிக்காமல் அவரது உறக்கத்தைக் கலைத்து விடாமல் கவரி எடுத்து விசிரிவிடச் செய்துள்ளது.கண் விழித்து பார்த்து அதிர்ந்தெழுந்த மோசிகீரனார்
“அறியாது ஏறிய என்னைத் தெறுவர  
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுது அறிதல்”  (புறம்-50-8-10)
என்ற அடிகளில் நற்றமிழ் முழுதறிந்த தன்மையுடையவன் இரும்பொறை என்று விதந்து கூறியிருப்பதன் மூலம் வறுமையுற்றோரிடம் வளமையாக இருந்த புலமையை மதிப்பளித்துப் பேணுவது என்பது காலம் கடந்தும் தமிழர் மரபை அழியாமல் நிலைபெற்றிருக்கச் செய்வதற்கான அறமாகக் காணலாம்.
பசி இந்த அறத்தைக் கொன்றுவிடும் என்பதாலேயே மன்னர்கள் பாணர்களையும் புலவர்களையும் ஆதரித்துப் போற்றியுள்ளனர்.பசியால் புலமை அழிந்து விடாது என்பதற்கும் அவர்தம் பாடல்களே சான்றாகும். ஓய்மா நாட்டு நல்லியக்கோடனை வாழ்த்திப் பாடிய நல்லூர் நத்தத்தனாரின் உயிர்த் தேவையாகிய உணவுத்தேவையை முதலில் நல்லியக்கோடன் நிறைவு செய்திருக்கிறான். பிறகு வாழ்வியல் தேவைக்கான பொன்னும் பொருளும் வழங்கியிருக்கிறான். சிறுபாணாற்றுப்படையில் புலவர்களின் வறுமையைக் கூறுமிடத்து அண்மையில் குட்டிகளை ஈன்ற நாய் அவைகளுக்குப் பாலூட்ட முடியாத வறுமுலை நாய் என்பதனால் அவ்வீட்டில் நிலவிய வறுமையை உணர வைத்தார் ஆசிரியர்.
                            
இதனை ஐம்பொறிகளும் தளர்தற்குக் காரணமாகிய “ஒல்குபசி”(சிறுபாண்-135) என்றும் “அழிபசி வருத்தம்” (சிறுபாண்-140)என்று பசி அனைத்து அறங்களையும் அழித்துவிடக்கூடியது என்று உண்மையைப் பாடலாகப் பாடியிருக்கிறார். மேலும்,ஒருவர் இறந்த பிறகும் அவ்வுயிர் பசியால் வாடக் கூடாது என்பதும் அவ்வுயிருக்குப் படையலாய் உணவு படைத்தலையும் ,அது இறந்த உயிரின் பசியை நிறைவு பெறச் செய்யும் என்பது இன்று வரை சமூகத்தில் நிகழ்ந்து வரும் நம்பிக்கையாகும்.அன்று களச்சாவு அடைந்த வீரர்களுக்கு நடுகல் வழிபாட்டில் கள் படைத்து இறந்த வீரனுடைய தாகத்தைத் தணிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை புறநானூற்றில் காணலாம்.

“இல்அடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாட்பலி ஊட்டி”(புற-329-1-2)
என்று பாடியிருப்பது பசியின் தொடர்நிலையையும்,இறப்பிற்குப் பின்னும் உணவளிக்க வேண்டிய மரபை உருவாக்கியிருப்பது  என்பது சகமனிதனுக்குப் பகிர்ந்துண்ணும் நெறியைக் கைவிடாதிருக்க வேண்டும் என்ற நற்சிந்தனையின் அடிப்படையாகக் காணலாம்.
 

அறங்களை அழித்து விடக்கூடிய பசி
        

பிற்காலத்தில் எழுந்த ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலை பசியைப் போக்குதலை அறமாகப் பாடியது.நிறைவடையாத பசி தனிமனித வாழ்வில் எத்தகைய இழிவுகளைத் தேடித்தரும் என்பதை,

“குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங்கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
புண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது”  (மணிமேகலை-11-9)
என்று சீத்தலைச்சாத்தனார் பாடியிருப்பதன் மூலம் மானுடத் தன்மையை சீர்குலைக்கும் பசியையும் அதற்கான தீர்வு மனிதர்களிடமே உள்ளது என்பதையும் உணரவேண்டும். உணவுத்தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை மலரச் செய்ய சகமனிதர்கள் முன்வர வேண்டும் என்று அவர் பாடியிருப்பதன் பொருண்மை புலனாகின்றது.
நல்வழி நூலில் ஔவை உணவு கிடைக்காத பசி எத்தகைய இழிவை நோக்கி மனிதர்களை வீழச் செய்யும் என்பதனை,
  
“மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை
தானம்,தவம்,உயர்ச்சி,தாளாண்மை தேனின்    
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்    
பசி வந்திடப் பறந்து போம்” (நல்வழி-26)

இவ்வடிகளில் இயம்பியுள்ளதன் வழியாக அறியமுடிகின்றது. இதனாலேயே தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று பெரியோர்கள் உரைத்துள்ளனர். பாரதியார் ”தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”என்று பாடினார்.மனிதப்பண்புகளையும் நல்லறங்களையும் வீழ்த்தி,மனிதனை விலங்கினும் கீழாக மாற்றிடும் ஆற்றல் கொண்டது பசி.பசியை ஒழிக்க முடியாது.ஆனால் பசிக்கான தீர்வைப் படைக்க மனிதனால் இயலும் என்பதையே நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

பகுத்துண்டு பல்லுயிர் காத்தல் மானுடக் கடமை
                      

காலந்தோறும் உயிர்களைப் பிணித்திருந்ததனால் பசிப்பிணி என்று இலக்கியங்கள் கூறுகின்றன.“உள் நின்று உடற்றும் பசி”(திருக்குறள்-2-13) என்று வள்ளுவம் உரைக்கின்றது.இத்துன்பம் தரும் பசியிலிருந்து விடுபட அனைத்து மக்களுக்கும் உணவு என்ற சமூகநிறைவை அடைய வள்ளுவர் பகுத்துண்ணும் சங்க காலமரபை வழிமொழிந்து அறமாகப் பாடியிருக்கின்றார். இதனை,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”  (திருக்குறள்-322)
என்று எல்லா உயாகளும் வாழ வேண்டும் என்ற வள்ளுவரின் சமநிலைக் கொள்கை தெள்ளிதின் புலனாகின்றது.  இதன்வழி ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள அனைத்து உயிர்களையும் காக்க வேண்டிய கடமை மனிதனுக்கானது என்பதையே “பல்லுயிர் ஓம்புதல்”என்ற சொற்களால் வள்ளுவர் தெளிவுறுத்துகின்றார்.


கூட்டுணவும் பெருஞ்சோற்று நிலையும்
                

மனிதர்கள் குழுவினமாக வாழ்ந்த  காலத்தில் ஒருவர் பசியை மற்றவர் புரிந்து கொண்டு பகிர்ந்து உண்ணுதல் என்பது கற்பிக்கப்பட்டதாக இருந்திருக்க முடியாது. பசியை இயல்பூக்கமாகவே அறிஞர்கள் சுட்டுகின்றனர்.
                “மனிதனுக்குப் பதினான்கு வகையான இயல்பூக்கங்கள் உண்டென்றும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உள்ளக்கிளர்ச்சிகளோடு இணைந்துள்ளன என்றும் மக்டூகல் கூறினார். (எ-டு) பசி உண்டானதும் உடலின் தேவையை அறிகின்றோம்.பிறகு உணவு உண்ண வேண்டுமென்ற உணர்ச்சி உண்டாகின்றது.பசியைப் போக்கிக் கொள்ள உணவுப் பொருளை எடுத்து உண்ணுகின்றோம்.இயல்பூக்கம் இவ்வாறு செயல்படுங்கால் அறிவு, உணர்ச்சி,முயற்சி என்ற முக்கூறுகள் காணப்பெறுகின்றன.இந்த மூன்று கூறுகளுள் உணர்ச்சிக்கூறே முக்கியமானது” என்று மக்டூகல் உரைத்திருப்பதாக பேரா.கி.நாகராஜன் தனது நூலில்(பக் 159)  குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஆயுமிடத்து,மக்டூகல் கூறியுள்ள உணர்ச்சிக்கூற்றின் அடிப்படையில் தன் பசியைப் போல மாற்றான் பசியையும்  உணர்ந்து கொள்ளுதல் மனிதநேய அறத்தின்பாற்பட்டதாகும்.இப்படி பசிக்குச் சோறிடுதல் என்பது சமூகக் கடமையாக மட்டுமே அக்காலத்தில் இருந்திருக்க வேண்டுமென்பதற்கு சங்கப்பாடல்களில் பயிலப்பட்ட “கூட்டுணவு” என்ற சொல்லே சான்றாகும்.

“வலி கூட்டுணவின் வாள்குடிப் பிறந்த”   (பெரும்-137)
என்றும்,

“நெடுஞ்செவிக் குறுமுயல் போக்குஅற வளைஇ,
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்அரும் சுரம்”(பெரும்-115-117)
என்றும் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.இப்பாடல்கள் பசுமையான புதர்களில் மறைந்திருக்கும் முயல்களை வளையில் மாட்டச் செய்து பிறகு அனைவரும் கூடியிருந்து உண்பர் என்று உரைத்திருப்பதன் வாயிலாகக் கூடியுண்ணும் தன்மையில் புரிதலையும் பகிர்தலையும் பசி என்னும் தனிமனித உணர்ச்சியானது கட்டமைத்திருக்கின்றது.இக்கூட்டுண்ணுதல் இனக்குழுவின் பண்பாட்டு எச்சம் என்பதை,அனைவரும் கூடியுண்ணும் பெருஞ்சோறு என்று,

“பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன்”(புற.235-4)
“வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம்”  ( புற-261-3)
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியர் வஞ்சித் திணையில் “பெருஞ்சோற்றுநிலை”எனும் துறையாகப் பாடியுள்ளார்.

“பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலை” (தொல்-1013-9)
என்ற தொல்காப்பிய  அடிகளிலும், “பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும்
கடுஞ்சின  வேந்தேநின் தழங்குகுரல் முரசே” (பதிற்-30-43-44)என்று பதிற்றுப்பத்திலும்,வேந்தன் தன் படைஞருக்கு  உணவு கொடுத்த செய்தியைக் காணமுடிகின்றது.மேலும்,சேரமன்னன் உதியன் சேரலாதன் இருபெரும் படைகளுக்கும் சோறிட்டமையால் “பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”(புற-2-16)என்று பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று இன்றளவும் வரலாற்றில் அம்மன்னன் அழைக்கப்படக் காரணம் பசியை உணரும் தலைமைப்பண்பே ஆகும்.தனியொரு மனிதனை மக்கள் தமது தலைவனாக ஏற்பதற்கு அடிப்படைக் காரணம் பகையிலிருந்து மட்டுமல்லாது பசியிலிருந்தும் தம்மைக் காக்க வேண்டும் என்பதேயாகும்.இதனை வள்ளுவர் வழிநின்று அறியலாம்.

“படைகுடி  கூழ்அமைச்சு  நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு” (திருக்குறள்-381)

இக்குறட்பாவில்  நாடாளும் மன்னன்  மாமன்னனாகத் திகழ வேண்டுமெனில்  மக்களின் உணவுத் தேவையையும் தன்னிறைவு அடையச் செய்ய வேண்டுமென வள்ளுவர் உரைக்கின்றார்.ஆக,பெருஞ்சோறு எனும் சொல் பழந்தமிழரின் மனவலிமைக்கும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பிற்கும் சான்றாக அமைவதைக் காணலாம்.இல்லாமைச் சூழலிலும் மக்களாயினும் தலைவனாயினும் தம்மை நாடி வந்தவரின் பசியைப் போக்கியுள்ளனர்.
                 “இல்லாமை உருவான போது சீறூர் தலைவர் கடன்பெறல்,பொருட்களைப் பணயம் வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.வேந்துவிடு தொழிலில் ஈடுபடல் என்பது மூன்றாவது செயல்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேந்துவிடு தொழில் பரிசுப்பொருட்களையும் நெல் போன்ற உணவுப் பொருட்களையும் சீறூர் மன்னர் பெறக் காரணமானது .இத்தொழில் வழி பெற்றவை சீறூர் மன்னர் சமுதாயப் பொதுத் துய்ப்புக்கு உரியவையாகக் கொள்ளப்பட்டுப் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.”என்று பெ.மாதையன் தனது நூலில் (ப.174) குறிப்பிட்டுள்ளார்.     வளமையான நால்வகை நிலத்தில் வாழ்ந்த மக்களைக்காட்டிலும் வறண்ட பாலை நிலத்தில் வாழும் எயினர்கள் ஒன்றாகக் கூடி உணவு சேகரித்ததையும் பாடல்களில் காணமுடிகின்றது.


தொகுப்புரை
              

பசி என்பது மானுட அறம் கட்டமைத்தலுக்கான காரணியாகியுள்ளது. உயிர்களின் உந்து சக்தியாக உலக இயக்கத்திற்குக் காரணமாகவும் பசி விளங்குகிறது. உயிர்களுள் மனிதப் பெருக்கமும் உணவுத்தேவை அதிகரிப்பும் மனிதக்கூட்டத்தை தன்னிறைவு பெற இயலாத வண்ணம் போராடிக்கொண்டே இருக்கச் செய்கிறது.இன்றளவும் உலகில் உணவின் தேவையும் தேடுதலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. உணவைத் தேடி பசியைப் போக்கிக் கொள்ள எத்தகைய போராட்டங்களை எதிர் கொண்டனர் என்பதற்குப் புலவர்களின் வாழ்வியலே சான்று.
           
வறுமையும் பசித்துன்பமும் தம்மை அணுகிய போதும் தம் புலமையைக் காத்து அறம் பாடிய புலவர்களின் தன்மான உணர்ச்சிக்கும் இப்பசியே வித்திட்டுள்ளது. பொறுமையும், சகிப்புத்தன்மையும், தன்னம்பிக்கையும், துணிவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், புரிதலும், பகிர்தலும் ஆகிய அனைத்தும் நம் முன்னோர்கள் சங்கப்பாடல்களின் வழியே நமக்குக் கற்பித்துள்ள வாழ்வியல் அறங்களாகும்.வேட்டைச்சமூகம் முதலாக பசியும் உணவுத் தேடலும் பிணிக்கப்பட்டுள்ள மனிதன் சார்ந்து வாழும் பண்பினால் இப் பரந்த நிலவுலகை அழியாமல் நிலைபெறச் செய்கின்றான் என்பதற்குப் பாடல்களே சான்று.
            
மூவாயிரம் ஆண்டுகாலப் பழமையான இலக்கியங்கள் மனித குலம் தழைப்பதற்கான அறத்தை காலங்கள் கடந்தும் கற்பித்துக் கொண்டேயிருக்கின்றன. சமூக்கட்டமைப்பிற்கும் அறச்சிந்தனைகளின் தோற்றத்திற்கும் பசி எனும் உணர்வு தலையாய காரணியாகியுள்ளது என்பதே மேற்கண்ட ஆய்வின் வழி கண்டறிந்த மெய்மையாகும்.
                           

முதன்மை நூல்கள்

1.எட்டுத்தொகை,கு.வெ.பாலசுப்பிரமணியன்,அ.மா.பரிமணம்(ப.ஆ),நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2007

2.பத்துப்பாட்டு,கு.வெ.பாலசுப்பிரமணியன்,அ.மா.பரிமணம்(ப.ஆ),நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2007


துணைமை நூல்கள்

1.தொல்காப்பியம்,தமிழண்ணல்(உ.ஆ), செல்லப்பா பதிப்பகம்,மதுரை,ஆறாம் பதிப்பு 2021

2.திருக்குறள் மற்றும் ஏழிளந்தமிழ், கரு.பேச்சிமுத்து, (தொ.ஆ), அகரூர் கல்வி அறக்கட்டளை வெளியீடு, திருச்சி,
ஐந்தாம் பதிப்பு, 2012

3.சிலப்பதிகாரம் மூலமும் உரையும், ந.மு.வேங்கடசாமி நாட்டார், (உ.ஆ), ராமையா பதிப்பகம், சென்னை,  ஐந்தாம் பதிப்பு,2011

4.மணிகேலை மூலமும் உரையும்,
ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ), சாரதா  பதிப்பகம், சென்னை,  இரண்டாம் பதிப்பு, 2009

5.கல்வி உளவியல், பேரா.கி.நாகராஜன், ஸ்ரீராம் பதிப்பகம், சென்னை,2022

6. சங்ககாலம் உணவும் சமுதாய மாற்றமும், பெ.மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2019

7.ஔவை, இன்குலாப், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், மூன்றாம் பதிப்பு, 2006

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஆ.சாஜிதா பேகம்,

இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,

காங்கேயம் வணிகவியல் கல்லூரி,
 
EBET அறிவுப்பூங்கா,நத்தக்காடையூர்,

காங்கேயம், திருப்பூர் மாவட்டம்.

 

எழுத்து|கவிதை|ச.கார்த்திக்

எழுத்து-கவிதை-ச.கார்த்திக்

📜 பத்து பேனா வாங்கினேன்

நான் ஒரு பேனா ஆகவில்லை

பத்து மயிலோடு பயணித்தேன்

நான் ஒரு மயில் ஆக வில்லை

பத்துப் புத்தகத்தைப் படித்தேன்

நான் ஒரு புத்தகத்தை எழுதினேன்!

📜 ஒவ்வொரு புல்லும்


ஒவ்வொரு கதை சொல்லும்

ஒவ்வொரு மழைத்துளியும்

வெவ்வேறு கதை சொல்லும்

நம் கதை யார் சொல்லுவார்!

📜 எழுதிய பக்கங்கள்


எழுதாத பக்கங்கள்

ஏதோஒரு கதை

மாந்தரை விட்டுச் செல்கிறது!

📜 நாள்தோறும்


கிழித்து போட்ட பேப்பர்

இழந்து கொண்டு செல்கிறது

என் வாழ்க்கையும்!

கவிதையின் ஆசிரியர்

ச.கார்த்திக்
முதுகலைத் தமிழ் முதலாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)  திருப்பத்தூர்

 

தாய்மை|கவிதை|வெ. கெளதம்

தாய்மை-கவிதை-வெ. கெளதம்

அ) தாய்மை  
 

📜 தன்னுள் உயிர் கொண்டு  
 

பிறப்பெடுக்க

மீண்டும் பிறக்கிறாள் 
 

 

📜 உடலை வீடாக்கி 
 

கருவறையை கவசமாக்கி
 

ரத்தத்தை நீராக்கி 
 

சதையை உணவாக்கி
 

என்னுயிர் காக்க

தன்னுயிரை 
 அரனாக வைத்து

காக்கும் தெய்வம் தாய்மை 


 

ஆ)
 என்னவள் 
 

📜 யார் என்று அறியாது 
 

ஒற்றை சொல்லை வைத்து 
 

பாசக் கயிற்றால்

முடிச்சு போட்டு

நம்பி வந்தவள்
 

 

📜 இனி எல்லாம்

அவனே என

முதல் அடி

எடுத்து வைத்து வந்தவள்

 


📜 எதுவாயினும் அவனே என்று

அனைத்தையும் இழந்தவள்  


புதிய உறவுவாக அல்ல

புதிய வரவாக வந்தவள் 


இளமையை கொடுத்து

முதுமை வரை உயிர்

எனக் கொண்டவள் 


என்னவள் !!!

 

கவிதையின் ஆசிரியர்
திரு. வெ. கெளதம் 
உதவிப் பேராசிரியர் & தமிழ்த் துறை தலைவர் 
சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 
விஜயமங்கலம் -638056
திருப்பூர் மாவட்டம்.
 

அழிந்து வரும் உலகம்| க.பாக்கியராஜ்

அழிந்து வரும் உலகம்- க.பாக்கியராஜ்

💧 நெகிழிப் பையில்

தேனீரும் குலம்பியும்


நேற்றுச் சுட்ட

எண்ணையில் – பொறித்த


மசால்வடையும்

நாகரிகமாய் போனதடா…

 

💧 நாளை நம்
,

ஆயுளுக்குத் தீமையடா

அன்புடன் கேட்டுக்கோட
 

அழகுமர மென்றுசொல்லி

ஆலமரம் சின்னதாச்சு
…

 

💧 விசமுள்ள கருவமரம்

விளைநிலத்தில்

வளர்ந்து 
பெரிதாச்சு

வெப்பங்களும் அதிகமாச்சு…

 

💧 இயற்கையின்


பருவநிலை மாறிப்போச்சு

விளைச்சலும்

வெறுமையாச்சு
…

 

💧 கதராடை கனிந்திருக்க

பாலிஸ்டராடை பளபளக்குதுப்


பாரினில் பார்த்துகோடா…

 

💧 பிணிகளை உண்டாக்கும்


மஞ்சப்பை போயாச்சு

நெகிழிப்பையும் நெருக்கமாச்சு…


 

💧 கண்ணில்பட்ட இடங்களெங்கும் 

மக்காத குப்பையாச்சு
 

குளிர்ந்தக் காற்றுடனும்

குளிர்சாதனப் பெட்டியுடனும்


குதுகுலமாக நாமிருக்க,

கார்பன் வெளியாச்சு


காற்றுமாசு அதிகமாச்சு…

 

💧 ஓசோனுக்குள் ஓட்டையடா


கதிரவ னொளியால்

உயிர்களுக்கது தீமையடா…


 

💧 மரங்களும் அழிந்துப்போச்சு  

ஆற்றுமணலும் காணப்போச்சு


மழைநீரும் ஓடிப்போச்சு

குடிநீரும் பாட்டிலாச்சு


மண்ணின் வளமும் கெட்டுப் போச்சு


மண்ணுக்கது தீமையாடா

மறக்காம தெரிச்சுகோடா
… 

 

💧 ஆளுக்கொரு அலைப்பேசி

அதில்மயங்கும் மனசாட்சி


மனநிலையும் மாறிப்போச்சு

மனிதநேயம் தூரப்போச்சு


பழையசோறு மறந்துப்போச்சு

பாஸ்புட் அதிகமாச்சு


ஆயுள்காலம் குறைவதற்கு

அத்துனையும் காரணமாச்சு..
.

 

கவிதையின் ஆசிரியர்

க.பாக்கியராஜ்
தமிழ்த்துறை,
உதவிப்பேராசிரியர்,
ஜெ.ஜெ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
செளடாம்பிகா குழு நிறுவனம்,
அம்மாப்பேட்டை,
திருச்சிராப்பள்ளி-620009.

 

கனவும்! நனவும்!!|கவிஞர் ச.நவநீதனா

கனவும்! நனவும்!-கவிஞர் ச.நவநீதனா

📍 திங்களொடு பிறந்தவளாய்,


தில்லையொடு நிலைத்தவளாய்..!


 

📍 செங்காந்தள் செம்பிராட்டி,


சீமையிலுமே அழகாய்ச்

சிரிக்கின்றாள்..!


 

📍 செந்தாமரைச் சிறுவாயினாலே,


ஒருகோடிக் கற்பனையாய்,


சிந்தாமணிகள் பாடுகின்றாள்!


சிந்துவெளி சொல்லிக் கொடுப்பவள்..

 

📍 அவளிடமே எங்கனவை,


எழிலுடனே கூறிடவே..

கண்சிமிட்டாச் சிலையாக,

தாரகையாள் பார்வையொன்று

பார்த்திட்டாள்..!

 

📍 ஒய்யார வெட்கங்கொண்டே

நோக்கினாளை,


என்னவென்று நாவுரைக்கும்?

எப்படித்தான் மனமுரைக்கும்?

 

📍 பெரும் பொருண்மைக்காகவே,

சிறுபொருளெனவே


உயிரிருக்க..!

 

📍 கனவுகளாய் நனவுகளாய்…

அவளேதான் நகைத்திடுவாள்!!

கவிதையின் ஆசிரியர்
நவநீதனா ச
இளங்கலை இரண்டாம் ஆண்டு 
வணிகவியல் துறை
கே.பி.ஆர்.கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கோவை.

என் அலமாறியில் |கவிதை |முனைவர் ஆ.சாஜிதாபேகம்

என் அலமாறியில் கவிதை முனைவர் ஆ.சாஜிதாபேகம்
📜 என் அலமாறியில்

அடுக்கி வைக்கப்பட்ட – புத்தகங்கள்

ஆயிரம் கதை சொல்கிறது….!


📜 சில புத்தகங்கள் படிப்பதற்கு…!
சில புத்தகங்கள் பார்வைக்கு…!
சில புத்தகங்கள் என்னைப் புரட்டும்…!
சிலவற்றை நான்புரட்டுகிறேன்.!

 

📜 வாங்கி வைத்த பிறகுதான் தெரிகிறது
வேண்டுவதும் வேண்டாததும்….!!!

ஆகாத புத்தகங்கள்

கழிக்கப்பட வேண்டியவை அல்லவா….

 
📜 இருந்தாலும் அவ்வப்போது கைகட்டி

அலமாரி முன் நிற்கிறேன்….
இருந்து விட்டுப் போகட்டும்

அவைகளும் புத்தகம்தானே என்று
விலக முடியாமல் கலைத்துப் போடுகிறேன்..!
நான் கலைந்து விடாமல்…..!!!
 
கவிதையின் ஆசிரியர்,
முனைவர் ஆ.சாஜிதாபேகம்,

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,

காங்கேயம் வணிகவியல் கல்லூரி,

EBET அறிவிப்புப் பூங்கா,
நத்தக்காடையூர்,காங்கேயம் 
,
திருப்பூர் மாவட்டம்.

 

இறந்தேன் வாளால் வெட்டுண்டே!| கவிஞர் அர. செல்வமணி

இறந்தேன் வாளால் வெட்டுண்டே! அர. செல்வமணி
📜 நீண்டு வளர்ந்த நெடும்பனைநான்
               
நிலையாய் நின்றேன் ஓரிடத்தில்

கண்டேன் என்றன் நிழல்தனிலே
               
கானில் வாழும் புள்பலவே

கொண்டேன் மகிழ்வே அதனாலே
               
கொடுத்தேன் இடமும் அவைகட்கே

உண்டே என்றன் பெயருடனே
               
உலவும் வண்ணப் புள்ளிரண்டே

 
📜 பண்டை மாந்தர் வாழ்வினிலே
               
பலவும் எழுதச் சுவடிதந்தேன்

கண்டார் தமிழர் மாநிலத்தின்
               
கனிந்த மரமாய் எனைக்கொண்டார்

உண்டார் என்றன் கள்தன்னை
               
ஊக்கம் மிகவும் பெற்றிடவே

கண்ட தில்லை கேடதனால்
               
கருத்தாய்த் தற்சார் பளித்தேனே

 
📜 பனையென் நுங்கை விஞ்சிடுமோ
               
பகட்டாய் இனிக்கும் பனிக்குழைவே

பனையென் வெல்லம், கற்கண்டைப்
               
பாரில் கரும்பும் வென்றிடுமோ

பனையென் கிழங்கும் பழங்களுமே
               
பசிக்கு விருந்தாய்க் கிடைத்திடுமே

பனையென் நுங்கை உண்டபின்னே
               
பலவும் மிஞ்சும் கால்நடைக்கே

 
📜 பனையென் நாரால் பலபொருள்கள்
               
படைத்தார் எளியோர் பட்டறிவால்

பனையென் தும்பும் பயனாகும்
               
பலவும் சொன்னால் மிகவிரியும்

பனைநான் சூழல் கெடுக்காமல்
               
பாழும் நெகிழிப் பயன்குறைப்பேன்

பனைநான் நீரைச் சுரண்டாமல்
               
பல்லாண் டுயிர்ப்பேன் வான்மழைக்கே
 
📜 வனைவார் என்றன் ஓலைகளை
               
வாழக் கூரை வேய்வதற்கே

வேனில் வெம்மை தணிப்பதற்கே
               
விரும்பும் நுங்கும் பதநீரும்

இன்னும் பலநான் கொடுத்தாலும்
               
ஏனோ மாந்தர் எனைமதியார்

இன்றோ அவர்கள் கையாலே
               
இறந்தேன் வாளால் வெட்டுண்டே!

 
இரண்டு பறவைகள்: பனங்காடை, பனை உழவாரன்.

பனிக் குழைவு: ice cream.
கவிதையின் ஆசிரியர்
அர. செல்வமணி
அஞ்சற்பெட்டி எண் : 21,
பாசக்குட்டைப் புதூர்,
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்: 638401.

 

திருத்தமாய்ப் பேசுங்கள்! | திருத்துறைக்கிழார்

திருத்தமாய்ப் பேசுங்கள்!_திருத்துறைக்கிழார்
    தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது.  அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும்.  இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும்.  பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது.  மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது.  தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது. 
               
       தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம், நாகரிகம், பண்பாடு முதலியவற்றையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர்.  அல்லாமலும், தம் நாட்டு மக்களையும் இங்கு குடியேற்றினர்.  அதனால், தமிழ் தன் செம்மை, சீர்மை கெட்டு நின்றது.
பிறமொழிக் கலப்பு 
               
அயலார் ஆட்சிக்குட்பட்ட தமிழகம் அவர்தம் மொழிகளையும் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது.  அப்பொழுது அம்மொழிச் சொற்கள் தமிழில் கலக்க வாய்ப்பு உண்டாயிற்று. ஏன்? இன்று ஆங்கிலம் கலக்காமல் பேசுகிற அல்லது எழுதுகிற தமிழரைக் காண்பது அரிதாகி விட்டதை நாம் அறிவோம்.  எனவே, எந்தெந்த மொழிக்காரர் தமிழ்நாட்டை  ஆண்டார்களோ,  அந்தந்த  மொழிச் சொற்கள் தமிழில் கலந்து வழங்கத் தலைப்பட்டன.  சொல்வளம், பொருள்வளம்   மிக்க  தமிழுந்  தன்  கன்னிமை  கெடாது நிலைத்திருப்பதற்குக் காரணம் அதன் தனித்தியங்கும் தன்மையேயாகும்.
 
தேவையற்ற சொற்கள் 
               
இன்றைய தமிழ் மக்கள் பேசும்போது, இடையிடையே தேவையில்லாத,  பொருளற்ற சொற்களையும் சேர்த்துப் பேசும் பழக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர்.  எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காண்போம்.
 
1.நான் என்ன சொல்றேன்னா, நீ வந்து இப்படிச் செய்வது வந்து சரியில்லை, நீ வந்துட்டு, என்ன நான் சொல்றது?, வந்து புரியுதா?

2.அவர் வந்தாப்லே, தம்பி சொன்னாப்லே, நாலு மணியைப் போல வந்து கேட்டாப்ல.
இப்படிப் பயனில்லாத சொற்களை இடையில் இணைத்துப் பேசுவோர் இன்று மிகுதியாகி வருகின்றனர்.
இத்தகையோரை மனத்தில் கொண்டுதான் திருவள்ளுவர்,
          
“பயனில்சொல் பாராட்டுவானை மகனெனல்          
மக்கட் பதடி எனல்” (எண் : 196)
                                        
என்ற குறளை யாத்தாரோ?

இழிபொருளும் இன்பொருளும் 
               
ஒரு காலத்தில் இழிந்த பொருளில் வழங்கப்பட்ட சொற்கள் இன்று  நல்ல  பொருளிலும்,  நல்ல  பொருளில்  வழங்கிய சொற்கள் இழிந்த பொருளிலும் வழங்குவதைக் காண்கின்றோம். களிப்பு என்னும் சொல் முன் கள்ளுண்டு மகிழ்வதைக் குறிக்கப் பயன்பட்டது.  ஆனால், இன்று மகிழ்ச்சியென்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. 
          
‘கள்ளுண்டு களித்தனர் களம்புகு மறவர்’   (புறப்பொருள்வெண்பாமாலை)  
               
என்ற அடி இதனை விளக்குகின்றது.  நாற்றம் என்னும் சொற்கு மணம் என்பது பொருள்.  இப்பொழுது நாற்றம் என்றால் எல்லோரும் மூக்கைப் பிடிப்பர்.  கெட்ட மணம் என்று பொருள் கொள்கின்றனர்.
         
“ முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் பேதை          
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு” (எண் :1274)
               
என்ற குறளிலும், நாற்றமுரைக்கும் மலருண்மை என்று நானமணிக்கடிகையிலும், நாற்றம் என்ற சொல் நறுமணம் என்னும் பொருளில் எடுத்தாளப்பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.  முன்பு, உரியவன், உடையவன் எனப் பொருள்பட்ட கிழவன் என்ற சொல் இன்று முதியவன் எனும் பொருளில் வழங்குகிறது.
 “கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்           
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
என்ற தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பாவிலும்,
          
“செல்லான் கிழவன் இருப்பின் நி
லம்புலந்து          
இல்லாளின் ஊடி விடும்” (எண் :1039)
என்ற திருக்குறளிலும் கிழவன் என்னும் சொல் உரியவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதறிக.

பிழையான பலுக்கல் 
               
சில தமிழ் எழுத்துகளையும், சொற்களையும் சிலர்க்குச் சரியாக பலுக்கக் கூடத் (உச்சரிக்கத்) தெரியவில்லை.  சிலர் ழகரத்தை லகரகமாகவும், யகரமாகவும்; லகரத்தை ளகரமாகவும், ளகரத்தை லகரமாகவும்; பலுக்குகின்றனர்.  பழக்கவழக்கம் என்பதைப் ‘பளக்க வளக்க’ மென்று சிலர் பலுக்குவதையும், கோழியைக் ‘கோளி’யென்றும், பள்ளத்தைப் ‘பல்லம்’ என்றும் உச்சரிப்பதையும் கேட்கின்றோம்.  சிலர் சொன்னேன் என்று சொல்வதற்குச் ‘சென்னேன்’ என்றும், கோழியை ‘கோயி’ என்றும் சொல்லுகின்றனர்.  இவற்றிற்குக் காரணம் என்ன? பொருள் உணர்ந்து  பேசாமையும், பலுக்கத் தெரியாமையுமேயாம்.

பிழையாக வழங்கும் சொற்கள்
பேச்சு வழக்கிலும், நூல் வழக்கிலும் பல தமிழ்ச்சொற்களைப் பொருளறியாமல் பிழையாகப் பேசுகின்றனர்;  எழுதுகின்றனர்.  அத்தகைய சொற்கள் நூற்றுக்குமேல் உள்ளன.  முதலில் ஏழ்மை என்ற சொல்லைப் பார்ப்போம்.  ஏழ்மை என்றால்  ஏழு  என்றே  பொருள்.  ஏழ்  தெங்க  நாடு;  ஏழ் முன்பாலை நாடு என்னும் வழக்குகளைக் காண்க.  ஏழ் என்பதனொடு மை என்னும் பண்புப் பெயர் விகுதி சேர்த்து ஏழ்மை என்றாகிறது.  இச்சொல்லைத் தமிழறிஞர்களும், மேடைப்  பேச்சாளர்களும்    வறுமையென்னும்   பொருளில் பயன்படுத்துவது   மிகவும்   வியப்பாகவும்,  வேதனையாகவும் இருக்கிறது.  ஏழை என்ற சொற்கு வறியவன்.  அறிவிலான் எனப் பொருளாம். ‘ஏழை’ என்பதனுடன் ‘மை’ யைச் சேர்த்தால் ஏழைமை என்றாகும். இதன் பொருள் வறுமை, அறியாமை என்பனவாகும்.  ‘ஏழ்’ என்றாலும் ஏழ்மை என்றாலும் ஏழு என்றே பொருளாகும். 
               
அடுத்துக் கண்ட்ராவியைக் காண்போம்.  இதைக் ‘கண்ட் + ராவி’ எனப்பிரிக்கலாம்.  பார்த்து ராவுதல் எனப் பொருள்படும்.  ஆனால் அத் தொடரை எப்பொருளில் பயன்படுத்துகிறீர்கள்? கண்ணை அராவுவது போன்ற துன்பம் தருவது என்ற பொருளிலன்றோ?  எனவே, அதன் சரியான வடிவம் கண்ணராவி என்பதாகும்.  ‘கண் + அராவி’ எனப் பிரித்தல் வேண்டும்.  இது எப்படி கண்ட்ராவி ஆயிற்று?  நல்ல பொருள் தர கண்ணராவி எனப் பயன்படுத்தலாம்?
               
காக்கைப்  பிடித்தலைக் காண்போம்.  காக்கைப் பிடித்தல் என்பதன் பொருள் வெளிப்படை.  ஆனால், எப்பொருளில் நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள்?  நயமாகப் பேசி ஒருவரைத் தன்வயமாக்கிக் காரியஞ்சாதித்தல் எனப் பொருள்பட வழங்குகின்றீர்கள்.  காக்கையைப் பிடிப்பதற்கும், இதற்கும் என்ன தொடர்பு? ஆகையால், அத்தொடர்பு கால் கைப்  பிடித்தல்  என்றே  இருத்தல்  வேண்டும்.   இதனைப் பலுக்கத் தெரியாமலோ என்னவோ காக்கைப் பிடித்தலாக்கிவிட்டீர்கள்?  ‘எப்பொருள் யார் யார் வாய்க்; கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ (எண்:423) என்ற வள்ளுவன் வாய்மொழியின் பொருளுக்கேற்ப நடந்தால், பொருள் புரிந்திருக்கும்.
               
காலைப் பிடித்தாவது, கையைப் பிடித்துக் கெஞ்சியாவது தன்  காரியத்தை  நிறைவு  செய்து  கொள்ள முயல்வதையே கால்கைப் பிடித்தல் என்கிறோம்.  இப்பொழுது சொல்லுங்கள்.  சரியான வடிவம் காக்கைப் பிடித்தலா?  கால் கைப் பிடித்தலா?
               
அடுத்து அருகாமைக்கு வருவோம்.  அருகாமையைப் பகுத்தால் அருகு+ஆ+மை எனவரும் .  அருகு முதனிலை. மை இறுதி நிலை. ஆ எதிர்மறை இடைநிலைப் பொருள். அருகில் இல்லாதது.  அதாவது சேய்மையிலுள்ளது என்பதாம்.  ஆனால், நீங்கள் அருகில், அண்மையில் என்ற பொருளில் பயன்படுத்தும் அருகாமை என்ற சொல், அப்பொருளுக்கு எதிரான பொருளைத் தருகின்றது. ஆகையால் அருகமை, அருகில் என்றே பயன்படுத்துவீர்களாக. 
               
அடுத்து இருப்பது மானாவாரி. மானா என்ற சொல்லுக்கு, அகர முதலி தரும் பொருள் பாட்டன் என்பது.  வாரி என்பதற்கு நீர், வருவாய், கடல் எனப்பொருள்.  எனவே மானாவாரி யின் திரண்ட பொருள் பாட்டன் நீர் என்பதும், பிறவுமாம்.  ஆனால், நீங்கள் மானாவாரியை வறண்ட நிலம், நீர்ப்பாய்ச்சல் இல்லாத நிலம் என்னும் பொருளில் பயன்படுத்துகின்றீர்கள்.  பொருந்துமா? அதன் உண்மையான உருவம் வானவாரி என்பதே வானம் – மழை, வாரி- நீர்,  இதன் திரள் பொருளாவது  மழை நீரால்  விளையும் பொருள்,  நீர்ப்பாய்ச்சலில்லாத நிலப்பகுதி என்பதாம்.  ஆகவே. மானாவாரிக்கு மாற்றாக இனிமேல் வானவாரியைக் கையாளுவீர்!
இறுதியாக இருப்பவர் வாத்தியார்.  இச்சொல் தமிழில் ஆசிரியரைக்   குறிப்பதாகும்.   ஆனால்,  அது  தமிழுமன்று. வடமொழியுமன்று.  வடமொழியில் உபாத்தியாயர் என்று ஒரு சொல்லுளது.  அது வாத்தியார் என மருவியிருக்கலாம்.
               
வாத்தியாரைப் பிரித்தெழுதினால் வாய்-தீ-ஆர் என்றாகும்.  தமிழில் வாயில் தீயுடையவர் என்றே பொருள்படும்.  ஆனால், ஆசிரியர் என்றோ, கற்றுச் சொல்லி என்றோ பொருள் தராது.  எனவே, கணக்காயர், ஆசான், ஆசிரியர் என்னும் இனிய தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது, பொருத்தமில்லாத வாத்தியார் ஏன்? ஆதலின், வாத்தியாரை விரட்டி ஆசிரியரை அழைப்பீர்களாக.
                இங்ஙனம் பல நல்ல தமிழ்ச்சொற்களை இழிபொருள் தருஞ்சொற்களாக்கித் தமிழில் இழிந்த கொச்சை வழக்கை உருவாக்காமல், பொருளறிந்து யாவரும் பயன்படுத்தச் செய்வதில் தமிழறிஞர் அனைவரும் கண்ணுங் கருத்துமாயிருக்க வேண்டியது  கடமையும், உரிமையுமாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
புனைபெயர் : திருத்துறைக்கிழார்.
முதனிலைத் தமிழாசிரியர் (பணி நிறைவு).
திருத்துறைப்பூண்டி

தொல்லியலின் வகைகள் (Kinds of Archaeology)

தொல்லியலின் வகைகள் (Kinds of Archaeology)
    தொல்லியல் என்பது பழங்காலப் பொருட்களைப் பற்றி படிக்கின்ற இயலாகும். இது பண்டைய மக்களின் கருவிகள், கலைப் பொருட்கள், மட்பாண்டங்கள் போன்ற பொருட்களின் மூலம் அம்மக்களின் வரலாற்றை  எடுத்துக்கூறுகிறது.


          தொல்லியலின் பரப்பும் எல்லையும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. தொல்லியல் வரலாற்றுக்கு முந்தைய காலமான தொல்பழங்காலத்தின் பல லட்சம் ஆண்டுகளைப் பற்றி விளக்குகின்றது. தொல்லியல் என்பது பல்வேறு கால மக்கள், பல்வேறு புவியியல் அமைப்பில் வாழ்ந்த மக்கள், பல்வேறு கருவிகளைக் கையாண்ட மக்கள் இப்படி பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்கின்ற இயலாகும். இப்படி பரந்து விரிந்துள்ள தொல்லியலின் ஆய்வுகளைக் குறிப்பிட்ட ஒர் அறிஞர் செய்திட முடியாது. எனவே தொல்லியலை வகைப்படுத்துவது அவசியமாயிற்று.

தொல்லியல் வகைகள் 
               
தொல்லியலைப் பகுதியின்  அடிப்படையிலும்,  காலத்தின் அடிப்படையிலும் பொருள் மற்றும் முறைகள் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.

1. பகுதித் தொல்லியல் (Regional Archaeology)

2. காலத்தொல்லியல் (Periodical Archaeology)

3. பொருள் மற்றும் முறைகள் சார்ந்த தொல்லியல் (Subjects and Methods Archaeology)
               
மேற்கண்ட தொல்லியலின் பிரிவுகளைத் தொல்லியல் அறிஞர்கள் கீழ்க்கண்டபடி விளக்குகின்றனர்.


1. பகுதித் தொல்லியல் 
               
தொல்லியல் அறிஞர்கள் புவியியல் பகுதி மற்றும் மண்டல அடிப்படையில் தொல்லியலைக் கீழ்க்கண்டவாறு  வகைப்படுத்துகின்றனர். அவையாவன;

அ. மத்திய தரைக்கடல் தொல்லியல் (Mediteranean Archaeology)
 
ஆ. கிரேக்கத் தொல்லியல் (Greek Archaeology)

இ.ரோமானியத் தொல்லியல் (Roman Archaeology)

ஈ.எகிப்து தொல்லியல் (Egypt Archaeology)

உ. அமெரிக்க தொல்லியல் (American Archaeology)

ஊ. இந்தியத் தொல்லியல் (Indian Archaeology)
               
இவ்வாறாகத் தொல்லியல் நிலப்பகுதியின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றது. மத்திய தரைக்கடல் தொல்லியல் என்பது அப்பகுதியில் அகழாய்வு செய்து அதன்மூலம் அறியப்படும் வரலாற்றுச் செய்திகளை விளக்குவதாகும். கிரேக்கத் தொல்லியல் கிரேக்க நாட்டின் தொல்லியலையும், ரோமானியத் தொல்லியல் ரோமானிய நாட்டின் தொல்லியலையும் விளக்குகின்றன. வரலாற்றைப் புவியியல் அடிப்படையில் ‘பிரிப்பதுபோல்தான் தொல்லியலும் நாடு. மண்டல புவிப்பிரிவின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றது.

2.கால அடிப்படையில் தொல்லியல்

காலத்தின் அடிப்படையில் தொல்லியலைப்   பின்வருமாறு பிரிக்கலாம்.

அ. வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல்

ஆ. உலோகக் காலத் தொல்லியல்
இ. வரலாற்றுக் காலத் தொல்லியல்

அ. வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல்
               
வரலாற்றுக்கு முந்தைய காலத் தொல்லியல் என்பது பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் ஆகிய காலங்களில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், கலைப்பொருட்கள், தாழிகள் ஆகியவற்றை ஆராய்ந்து அக்கால மக்களின் வரலாற்றை அறிய உதவும் தொல்லியலாகும். இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு (Art of writing) பெற்றிருக்கவில்லை. எனவே, இலக்கியச் சான்றுகள் அறவே இல்லாத மக்கள் வாழ்ந்த காலமாகும். இக்கால மக்களின் வரலாற்றை அறியத் தொல்லியல் மூலங்கள் மட்டுமே உதவுகின்றன. உதாரணமாக இந்தியாவில் சர் இராபர்ட் புரூஸ் பூட் ஆதிச்ச நல்லூர், பல்லாவரம், கடப்பா, கர்நூல் போன்ற இடங்களில் நடத்திய ஆய்வுகள் இவ்வகைத் தொல்லியலை விளக்குவதாகும். இந்தியாவில் பல்லாவரத்தில் ஆய்வு செய்த சர் இராபர்ட் புரூஸ் பூட் ‘சென்னைக் கைக்கோடரி’ (Madras Hand Axe) என்ற கற்கால மக்களின் முதல் கல் ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். இவரின் பல ஆய்வுகள் தென்னிந்திய வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி விவரிக்கின்றன. எனவே தான் இவர் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியத் தொல்லியலின் தந்தை (Father of Pre-historic Archaeology of India) என்று அழைக்கப்படுகிறார்.

ஆ.உலோகக் காலத் தொல்லியல்
               
“Proto-historic Period’ என்று அழைக்கப்படும் உலோகக் காலத்தொல்லியல், செம்பு கற்காலம், வெண்கல காலம், இரும்புக் காலம் ஆகியவற்றைக் குறிக்கும். இக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு எழுத்தறிவு (Art of Writing) தெரியும். ஆனால், அவர்கள் பயன்படுத்திய அவ்வெழுத்து முறையின் பொருளை நம்மால் அறியமுடியவில்லை. எனவே இலக்கிய மூலங்கள் இக்காலத்திற்கு கிடையாது. அக்கால மனிதர்கள் விட்டுச்சென்ற பொருள்கள், கருவிகள் போன்றவற்றை ஆய்வு செய்ய தொல்லியலார் மட்டுமே தகுதி பெறுகின்றனர். அவ்வியல் அறிஞர்களின் ஆய்வு முயற்சியால் இக்கால தொல்லியல் (Archacology) பேரா. முனைவர் நா. மாரிசாமி வரலாற்றை அறிகிறோம். இதனை விளக்குவதே உலோகக் (எ.கா.) ஹரப்பா காலத் தொல்லியல் ஆகும்.  மொகஞ்சதாரோ ஆய்வுகள். இதன் மூலமே சிந்து சமவெளி நாகரிகம் வெளிக்கொணரப்பட்டது.

இ. வரலாற்றுக்காலத் தொல்லியல் 
               
வரலாற்றுக்காலம் என்பது இலக்கியச் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ள காலத்தைக் குறிக்கும். இக்கால வரலாற்றை நிரப்ப இலக்கிய மூலங்கள் மட்டுமின்றித் தொல்லியல் மூலங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன எடுத்துக்காட்டாக, பாடலிபுத்திரம், சாஞ்சி, சாரநாத் பராபர் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள், மௌரியர் கால வரலாற்றை அறிய உதவுகின்றன. கல்வெட்டுகள் மௌரிய ஆட்சிமுறையை அன்றன. ஆகவே வரலாற்றுக்கால வரலாற்றை அறிய  உதவும் தொல்லியலை வரலாற்றுக் காலத் தொல்லியல் என்று அழைக்கின்றனர்.
   மேற்கண்டவை  மட்டுமின்றி தொல்லியலைக் காலத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட வகைகளாகவும் பிரிக்கலாம். அவை,


அ. பண்டைய காலத் தொல்லியல் (Ancient) Archaeology)

ஆ. இடைக்காலத் தொல்லியல் (Medieval Archaeology)

இ தற்காலத் தொல்லியல் (Modern Archaeology)
               
இவ்வாறு வகைப்படுத்துவதால் தொல்லியல் அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களின் கவனத்தைச் செலுத்தி ஆய்வு செய்யமுடியும்.


3. பொருள் மற்றும் முறைகள் தொல்லியல்
               
தொல்லியலைப் பொருள் அல்லது முறைகள் அடிப்படையில் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்.

அ. அரசியல் தொல்லியல் (Political Archaeology)

ஆ. சமூகத் தொல்லியல் (Social Archaeology)

இ.பொருளாதாரத் தொல்லியல் (Economic Archaeology)

ஈ. சமயத் தொல்லியல் (Religious Archaeology)

உ. இனத் தொல்லியல் (Ethno Archaeology)


மேற்கண்ட தொல்லியல்கள் பொருள் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.


அ. அரசியல் தொல்லியல்
இவ்வகைத் தொல்லியலில் அரசு, அரசியல் தொடர்பான பொருள்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அரண்மனைகள், போர்க்கருவிகள், கோட்டைகள், அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்து அரசியல் செய்திகளையும், ஆட்சி முறைகளையும் அறிவது அரசியல் தொல்லியலாகும்.


ஆ. சமூகத் தொல்லியல்
சமூகத்தின் அடிப்படை அங்கமான தனிமனிதனின் மட்பாண்டங்கள், தேவைகளுக்குப் பயன்பட்ட அணிகலன்கள், கலைப்பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்து சமூக நிலைகளை அறிவது சமூகத் தொல்லியல் ஆகும். 

இ.பொருளாதாரத் தொல்லியல்
               
பண்டைக் கால மனித சமுதாயத்தின் பொருளாதார நிலைகளை ஆய்வதே பொருளாதாரத் தொல்லியல் ஆகும். மக்களின் இத்துறை வரலாற்றுக்கு முற்பட்ட கால பொருளாதார முன்னேற்றத்தை ஆய்வதில் ஈடுபடுகின்றது. பொருட்களின் உற்பத்தி, பகிர்ந்தளிப்பு, பயன்பாடு, வணிகம், பரிமாற்றம், இயற்கைச் செல்வங்களின் பராமரிப்பு, மக்கட்தொகை, வேளாண்மை, நீர்ப்பாசனம், பொருளாதார வளர்ச்சி முதலான கால்நடை வளர்ப்பு,   பயிர் செய்த தானியங்கள் அவற்றைச் சேமித்தல் பொருளாதாரத் தொல்லியல் ஆய்வுகளில் அடங்கும் இயற்கையின் தாக்கத்திற்கேற்பத் தொல்பழங்கால மனிதன் எவ்வாறு பயிர்த்தொழில் மேற்கொண்டான் மற்றும் எவ்வாறு இடம் பெயர்ந்து வேட்டையாடும் தொழிலிருந்து போன்றவற்றில் எவ்வாறு ஈடுபட்டான் என்பதை விளக்குவது பொருளாதாரத் தொல்லியல். பொருளாதாரத் தொல்லியல் குறித்து ராபின் டேனியல், ஆண்ட்ரூ ஷெரட் (Andrea Sherrat) மற்றும் பலர் ஆய்ந்துள்ளனர். பொருளாதாரத் தொல்லியல் ஆய்வுகளால் தொல் பழங்காலத்தில் ஏற்பட்ட படிப்படியான வேளாண்மை வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், நாகரிக வளர்ச்சி, தானிய சேமிப்பு முதலான செய்திகள் அறியப்படுகின்றன.

ஈ. சமயத் தொல்லியல்           
சமயத் தொல்லியலைச் சமயங்களின் அடிப்படையில் இந்து சமயத் தொல்லியல், புத்த சமயத் தொல்லியல், சமண சமயத் தொல்லியல், கோயில் தொல்லியல் என்றெல்லாம் பிரிக்கலாம். பண்டைய கால மக்களின் வழிபாட்டு முறைகள், சிலைகள், உருவங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து விளக்குவது சமயத் தொல்லியல் ஆகும். இதன் மூலம் கடந்த கால மக்களின் கலை, கட்டிடக்கலை, சமய நம்பிக்கை போன்றவற்றை அறியலாம்.
 
உ. இனத் தொல்லியல்
       
         சமூக-மானிடவியல் (Social Anthropology) தொடர்பான செய்திகளையும் தொல்லியலார் சேகரித்து, ஆய்ந்து கணித்துள்ளார்கள். இதில் பண்டைய மக்களின் சமூகப் பண்பாட்டு நிலைகளை பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைத் தொல் பொருட்கள் மூலம் ஆய்வு செய்து அறிய முடிகிறது. எஸ்கிமோக்களைப் பற்றி லெவிஸ் பென்போர்ட் அவர்களது ஆய்வு இன மரபுத் தொல்லியல் ஆய்வுகளில் ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கின்றது. H.D. சங்காலியா முதலான தொல்லியல் அறிஞர்கள் இந்தியத் தொல்பழங்கால மற்றும் வரலாற்றிற்கு முந்தய கால மக்களின் வாழ்விடங்கள் சிலவற்றை ஆய்வு செய்துள்ளனர். இத்தகைய இனத்தொல்லியல், பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்களின் இனங்களை எவ்வகையில் அடையாளம் காண்பது என்பதையும் விளக்குகிறது. வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் இனங்களை ஆய்ந்து குறிப்பாகச் சுமேரியர்கள், ஆரியர்கள், திராவிடர்கள் போன்ற இனங்களின் தொன்மையை விளக்குவது இவ்வியல் ஆகும். எனவே மனித இனங்களைப் பற்றி ஆய்வதே இனத் தொல்லியல் ஆகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா. முனைவர் நா. மாரிசாமி

நூல் – தொல்லியல் (Archaeology)

வாங்க தேடலாம்|கவிதை| அர. செல்வமணி

வாங்க தேடலாம்கவிதை அர. செல்வமணி

📜 எங்கே எங்கே எங்கே காடுகள்


வாங்க தேடலாம் வந்து சேருங்க


காடுக ளில்லெ மரங்களு மில்லெ


வாடுது உலகம் வைரசு னாலே


மூச்சுக் காத்தும் மோச மானதே


பொசுக்குது நல்லா பூமியில் சூடே


கடலுல ஆறுல கழிவுக கூடி


வாட்டுது மக்கள நோவு களாலே


 

📜 வளங்களை யெல்லாம் எடுத்தது யாரு


வம்புல மக்கள விட்டது யாரு


பருவந் தவறுது பயிர்கள் போகுது


வறட்சியும் வெள்ளமும் வாட்டுது பாரு


ஏழைகள் மேலும் ஏழை களாக


எடுப்பதி லெல்லாம் கொழுப்பது யாரு


கொரோனா வந்து கொன்னது ஏழையெ


கோடி கோடியாக் குவிச்சது சிலரே


 

📜 சாதி மதத்துல மக்களத் தள்ளி


குடியில கூத்துல கொடுமய மறச்சி


பட்டினி போட்டுப் பலரையும் அழிச்சுப்


படிப்பைக் கெடுக்கப் பலதும் பண்ணி


இயற்கய அழிச்சி எல்லாஞ் சுரண்டி


எடுக்கற முதலால் எல்லாம் போகுதே


முதலே முதலே முதலே எங்கும்


மோதி அழித்து மூட்டுது போரே


 

📜 தேடுக தேடுக தேடுக படிப்பை


தெரியும் அதனால் தெளிவாய்ப் பலவும்


சூழலை மொழியை இனத்தை அழித்து


ஏழையை வாட்டுவ தெதுவெனத் தேடுக


ஒருசிலர் வாழ மிகப்பலர் வாடி


உருகிச் சாவது ஏனெனத் தேடுக


தேடுக தேடுக தேடுக வளம்பெறத்


தீர்வு கிடைக்கத் தேடுக நன்றே!


கவிதையின் ஆசிரியர்

அர. செல்வமணி,


அஞ்சற்பெட்டி எண்- 21,


பாசக்குட்டைப் புதூர்,


சத்தியமங்கலம்,


ஈரோடு மாவட்டம் – 638401.

 

பழங்கதைகள் சொல்லும் சிறுமலை பாறை ஓவியங்கள்| மூ.செல்வம்

பழங்கதைகள் சொல்லும் சிறுமலை பாறை ஓவியங்கள்
ரலாற்றுக்கு உட்படும் காலத்தின் ஆண்டுகளை விடப் பலமடங்கு அதிகமான ஆண்டுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் உள்ளன.  பொதுவாக பழங்கால மக்கள் சுமார் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கக்கூடும் என்ற கருத்து ஆய்வுலகில் முன்வைக்கப்படுகின்றன.  ஆதிமனிதர்கள் தொடக்க காலத்தில் மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்களிடமிருந்தும், கொடுமையான காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இயற்கையான குகைகள், பாறையின் தாழ்வான இடங்கள் போன்றவற்றை தங்களின் வாழ்விடங்களாக தேர்வு செய்து வாழ்ந்துள்ளனர். 
               
தொல்மனிதர்கள் தங்களின் உணவுத் தேவைக்காக நடத்திய வேட்டையின் போது விலங்கினைக் கொன்ற தங்களின் வீரதீரச் செயல்களையும்,   எதிர் இனக்குழுவினருடன் நடத்திய சண்டைகளையும் நினைவு படுத்தும் விதமாக, தாங்கள் வாழ்ந்த வாழ்விடங்களில் ஓவியங்களாக வரைந்து ஆவணப்படுத்தினர்.  இத்தகைய ஓவியங்களே குகை ஓவியங்கள், பாறை ஓவியங்கள் என அழைக்கப்படுகின்றன.
     
பழங்கதைகள் சொல்லும் சிறுமலை பாறை ஓவியங்கள்          
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசத்தலம் சிறுமலை. இம்மலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் அமைய பெற்றிருக்கிறது மூலிகைகள் நீண்டு உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுகளுடன் ரம்யமாக காட்சி தரும் சிறுமலை மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து விழுந்த சிறு துண்டு தான் என்று ராமாயண கதையோடு தொடர்பு உடையது.
               
சிறுமலையில் விளையும் வாழைப்பழங்கள் அதிக மருத்துவ குணம் கொண்டிருப்பதால் தென் தமிழகப் பகுதியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சிறுமலையில் பழையூர் புதூர் அகஸ்தியர் புறம் பசிலிக்காடு தென்மலை உட்பட பத்திர்க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. தென்மலை கன்றுக்குட்டி பாறை பகுதியில் மீன் முட்டிப்பாறை அருவி அருகில் உள்ள பொம்மை பாறை என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் பாறை ஒதுக்கில் பல காலகட்டங்களில் வாழ்ந்த பழங்கால மக்கள் வரைந்த ஓவியங்கள் பல தொகுதிகளாக காணப்படுகின்றன. நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதர்கள் குழுவாக சேர்ந்து குழு தலைவனின் கீழ் அமைப்பாக செயல்பட்ட காட்சிகள் வியக்கும் வண்ணம் பல இடங்களில் வரையப்பட்டுள்ளன.
   
பழங்கதைகள் சொல்லும் சிறுமலை பாறை ஓவியங்கள் 1            
முதலில் மிக பழங்காலத்ததாக கருதப்படும் கருஞ்சவப்பு வண்ணத்தில்ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் தொகுப்பாக இருப்பதால் சரியாக அடையாளம் காண முடியாதவாறு உள்ளது.இதற்கு மேல் வெள்ளை நிறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.அந்த வெள்ளை ஓவியங்களுக்கு மேல் மெல்லிய தூரிகையால் சிவப்பு நிறத்தில் வெளி கோடுகள் அலங்காரத்திற்காக போடப்பட்டுள்ளன.
               
மனித உருவங்கள் விலங்கின உருவங்கள் விலங்கின் மீது பயணம் செய்யும் மனிதர்கள் சண்டை காட்சிகள் வேட்டை காட்சிகள் சடங்கு நிகழ்வுகள் என பாறை ஓவியங்களின் அனைத்து கூறுகளையும் ஒருங்கி இங்கு காண முடிகிறது. மனிதர்களின் தலைக்கு மேல் தலைப்பாகை அணிந்திருப்பதை சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. விலங்குகளில் யானைகளின் உருவம் பெரிதாகவும் நேர்த்தியாகவும் வரையப்பட்டுள்ளன. கைகளை தூக்கியவாரும் கைகளில் ஆயுதம் ஏந்தியும் நிற்கும் மனிதர்கள் காட்டப்பட்டுள்ளன. ஒரு மனிதனுக்கு இருபுறமும் இரு நாய்கள் நிற்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது. இது வேட்டைக்கு நாய்களை தயார்படுத்தும் காட்சியாக இருக்கலாம்.
               
கையில் ஆயுதம் ஒன்றை வைத்திருக்கும் மனித உருவத்திற்கு கீழ் கோழியும் அருகில் ஆடும் காட்டப்பட்டுள்ளன இவை பலி கொடுக்கும் சடங்கு நிகழ்வை குறிப்பதாகும். இருவர் சண்டையிட்டு அதில் ஒருவர் கீழே விழுந்து கிடக்கும் காட்சியும் அருகில் நால்வர் வேடிக்கை பார்ப்பது போன்று வரையப்பட்டிருக்கிறது. உடற் சேர்க்கை ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.இப்பாறையில் உள்ள ஓவியங்கள் யாவும் இங்கு வாழ்ந்தவர்களின் செயல்பாடுகளையும் சடங்கு முறைகளையும் காட்டுவதாக உள்ளன. குதிரையின் மீது ஏறிச் செல்வது, கோழி, ஆடு போன்றவற்றை பலியிடுவது போன்ற காட்சிகள் தற்போதும் இப்பகுதியில் காண முடிகிறது.
               
அண்மை காலங்களில் தமிழ்நாட்டில் பரவலாக கண்டுபிடிக்கப்படும் பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டின் தொன்மையைக் குறிக்கும் சான்றுகளாக அமைகின்றன தொல்பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலை ஈடுபாடு சமூக வாழ்க்கை போன்றவற்றை அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக ஓவியங்கள் உள்ளன. கால வெள்ளத்தில் இவைகள் சிதைந்து விடாமல் பாதுகாத்திட வேண்டும் என்பதுஅனைவரின் விருப்பமாக உள்ளது.
கட்டுரையின் ஆசிரியர்
மூ.செல்வம்,
முதுகலை ஆசிரியர்,
தொல்லியல் ஆய்வாளர்,
அரசு மேல்நிலைப்பள்ளி
கடமலைக்குண்டு, தேனி மாவட்டம்.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »