Tuesday, October 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் Seethalai Sathanarin Samugam Sar Arak Karuthukkal|Dr.G.Poongavanam

Seethalai Sathanarin Samugam Sar Arak Karuthukkal|Dr.G.Poongavanam

Seethalai Sathanarin Samugam Sar Arak Karuthukkal - Dr.G.Poongavanam

Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :

Abstract
        Based on the noble idea that a society should serve as a role model for future generations through its way of life, Seethalai Sathanar highlights social reformative ideas such as the eradication of hunger, the abolition of prostitution, and the prohibition of alcohol in his epic Manimekalai. Through these ideas, he emphasizes that individual morality is essential for the well-being of society. The epic also explores significant ethical principles, such as alleviating the suffering of others, controlling one’s mind and living without causing harm to others, and respecting women’s spiritual thoughts and aspirations. This article examines how Seethalai Sathanar presents these ethical and social values in the epic Manimekalai. This article elucidates the continued relevance and applicability of Seethalai Sathanar’s ethical and social thought in the context of contemporary society.

“சீத்தலைச்சாத்தனாரின் சமூகம் சார் அறக்கருத்துகள்”

ஆய்வுச் சுருக்கம்
        ஒரு சமூகம் அடுத்து வரும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற மேலான சிந்தனையின் அடிப்படையில் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் பசியொழிப்பு, பரத்தமை ஒழிப்பு, மது ஒழிப்பு போன்றவற்றை எடுத்துரைத்துள்ளார். இதன் மூலம் தனிமனித ஒழுக்கம் இருந்தால்தான் ஒரு சமுதாயம் நலமுடன் இருக்கும் என்ற கருத்தை சீத்தலைச் சாத்தனார் முன் வைக்கின்றார். பிறருடைய துன்பத்தைப் போக்குதல், மனதைக் கட்டுப்படுத்திப் பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் வாழ்தல், ஆன்மீகத்தில் பெண்ணின் ஆன்மீக சிந்தனைக்கு மதிப்புக் கொடுத்தல் போன்ற அறக்கருத்துக்களை சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை காப்பியத்தில் எடுத்துள்ளமையை இக்கட்டுரை ஆய்வுக்கு உட்படுத்துகின்றது. சீத்தலைச்சாத்தனாரின் கருத்தாக்கங்கள் இன்றைய சமூகச் சூழலுக்கும் ஏற்புடையதாக விளங்குகின்ற தன்மையை இக்கட்டுரை புலப்படுத்துகின்றது.
முன்னுரை
     ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை, முற்றிலும் அறக்கருத்துக்களை வலியுறுத்துவதற்காகவே படைக்கப்பட்ட ஒரு சீர்திருத்தக் காப்பியமாகும். “அறம்” என்ற சொல்லிற்கு மிக உன்னதமான இலக்கணத்தை இந்நூல் வழங்குகிறது. மணிமேகலையில் கூறப்பட்டுள்ள முதன்மையான அறக் கருத்துக்களையும் குற்றம் செய்து சிறையில் இருக்கும் மனிதர்களின் மனநிலையை உளவியல் சிக்கல்களுக்கு உட்படுத்தாமல் அவர்களும் தன் தவறை உணர்ந்து தம் வாழ்க்கையை செம்மையாக்கிக்  கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கும் வகையில் சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்ற வேண்டிய அவசியத்தைக் காப்பியத் தலைவி மணிமேகலையின் மூலம் சீத்தலைச்சாத்தனார் அறிவுறுத்துகின்றார். மனித மாண்பை சிதைக்கும் மது பழக்கத்தையும் தனிமனித ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கும் பரத்தை ஒழிப்பையும் அடியோடு ஒழித்து நற்சமுதாயத்தை உருவாக்கும் கருத்துக்களை   மணிமேகலை வழி சீத்தலைச்சாத்தனார் பதிவு செய்ததை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பசிப்பிணி போக்கல்
   மணிமேகலைக் காப்பியத்தின் மிக முக்கிய அறம் பசித்திருக்கும் உயிர்களுக்கு உணவளிப்பதாகும். உணவு கொடுப்பதே உயிர் கொடுப்பதற்குச் சமம்  என்பதைப் புறநானூறும்,
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்”  – புறநானூறு:பா,எ:18
    என்று கூறுகிறது. பசியை ஒரு கொடிய நோய் என்னும் பொருளில் “பசிப்பிணி” என்று சீத்தலைச்சாத்தனார் குறிப்பிடுகிறார். அதனை,
“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே”
                          மணிமேகலை: பாத்திரம் பெற்ற காதை: பா.எ:11
      என்ற பாடல் வழி சுட்டிக்காட்டியுள்ளார். கைம்மாறு செய்யக்கூடிய வலிமையும் வசதியும் உடைய செல்வந்தர்களுக்குப் பொருள் கொடுப்பது, பயன் கருதிச் செய்வதாகும். அச்செயல் அறத்தை விற்று வணிகம் செய்வதற்கு நிகராகும். வறுமையால் வாடி, பசியைப் போக்க இயலாதவர்களின் துயரத்தையும் பசியையும் போக்குபவர்களிடத்தில் தான் உலகின் உண்மையான அறநெறி வாழ்வு  இருக்கிறது. இந்தப் பரந்த உலகில் வாழ்வோருக்கு உணவளித்தவர்கள் உண்மையில் அவர்களுக்கு உயிரையே கொடுத்தவர்களாவர். பசியால் வாடும் மக்களின் அரும்பசியைப் போக்குபவர்களே உண்மையான அறத்தைச் செய்பவர்களாக சீத்தலைச்சாத்தனார் தனது பாடல் வழி விளக்கியுள்ளார்.
பசியின் பேராற்றல்
        ஒரு மனிதனை பசி எத்தகைய அல்லல்களுக்கு ஆட்படுத்தும் என்பதைச் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில்,
“குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவிஅது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது”
-மணிமேகலை: பாத்திரம் பெற்ற காதை: பா.எ:11
          என்ற பாடல் வழி எடுத்தியம்பியுள்ளார். பசிப்பிணி உயர்ந்த குடிப்பிறப்பின் பெருமையைக் கெடுக்கும். அவனிடம் உள்ள நல்ல சிறப்புகளை அழிக்கும். அவன் கற்ற கல்வியாகிய பெரிய தெப்பத்தைக் கவிழ்த்துவிடும். அவனிடமுள்ள வெட்கம், மானம் என்ற அணிகலனைப் போக்கிவிடும். அவனது மேன்மையான அழகைக் குலைக்கும். தன் குடும்பத்தினருடன் பிறர் வீடுகளின் வாசல் முன்பு நிற்க வைக்கும் என்று பசியின் அவலநிலையைச் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் விளக்கியுள்ளார்.
பல்லுயிர் ஓம்பும் பரந்த மனப்பாங்கு
      பகிர்ந்து உண்ணுவதே அறங்களின் தலைசிறந்தது என்று வள்ளுவரும் கூறுகிறார். . அதனை,
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை”  (திருக்குறள்:322)
          என்ற  திருக்குறள்  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை மெய்ப்பிக்கின்றது. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதையில் ஆபுத்திரன் இயலாத மனிதர்களான குருடர், செவிடர், ஊனமுற்றோர் ஆதரவற்றோர், நோய்வாய்ப்பட்டோர் போன்றோரின் பசியைப் போக்குவதற்காக பிறரிடம் கையேந்தி பெற்ற உணவை அனைவருக்கும் கொடுத்துப் பசிப்பிணி நீக்கினான் என்பதை,
“ஐயக் கடிஞை கையின் ஏந்தி
 மையறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்
 காணார் கேளார் கால்முடப் பட்டோர்
 பேணுநர் இல்லோர் பிணிநடுக்குற்றோர்
 யாவரும் வருகஎன்று இசைத்துஉடன் ஊட்டி
 உண்டுஒழி மிச்சில்உண்டு ஓடுதலை மடுத்துக்
 கண்படை கொள்ளும் காவலன்”
             மணிமேகலை:ஆபுத்திரன்திறம் அறிவித்த காதை:பா.எ:11
என்ற பாடல் மெய்ப்பிக்கின்றது.
“ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை   
மாற்றுவார் ஆற்றலின் பின்” (திருக்குறள்:225)
          என்னும் திருக்குறளில் கடுமையாகத் தவம் இருப்பவர்களின் வலிமை என்பது தங்களின் பசியைப் பொறுத்துக் கொள்வதாகும். ஆனால், அந்தப் பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளித்து அவர்களின் பசியைப் போக்குபவர்களின் வலிமை அதனைக் காட்டிலும் உயர்ந்தது என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப ஆபுத்திரனின்  பசியாற்றும்  செயல்திறன்  சமூகத்தில் பின்பற்றப்பட வேண்டிய மனிதநேய மாண்பாக உணரமுடிகிறது. இத்தகைய மாண்பு முரண்பாடு  அடைந்ததால் தான் பாரதியார்,
“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
 ஜகத்தினை அழித்திடுவோம்”
பாரதியார் கவிதைகள்: பாரத சமுதாயம்:பா:எ:17
          என்று பாடியுள்ளார். இத்தகைய பசிப்பிணிப் போக்கும்  சமுதாய அறச்சிந்தனையைச் சீத்தலைச் சாத்தனார் தமது காப்பியம் வழி முன் வைக்கின்றார்.
சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றுதல்
     குற்றவாளிகளைத் தண்டிப்பதை விட, அவர்களின் மனதை மாற்றி நல்வழிப்படுத்துவதே அரசின் கடமை என்ற உன்னத அரசியல் அறத்தை மணிமேகலை சோழ மன்னனிடம் வலியுறுத்துகிறாள். மன்னன் கைதிகளை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலையை, மணிமேகலை தனது அமுதசுரபியைக் கொண்டு பசி போக்கி, அரசனிடம் பேசி அதனை அறங்கள் செய்யும் “அறச்சாலையாக” மாற்றினாள். குற்றவாளிகளைத் தண்டிப்பதைவிட அவர்களைத் திருத்துவதே அறம் என்கிறது மணிமேகலைக் காப்பியம். அதனை,
“சிறைக்கோட்டம் ஆகிச் சீரழிந்து நின்ற
 அறைக்கோட்டம் மாற்றி அறக்கோட்டம் ஆக்குக”
                                மணிமேகலை. சிறைக்கோட்டம் அறக்கோட்டம்.14
          என்ற வரிகள் உணர்த்தி  நிற்கின்றன. தீமை செய்தவர்க்கும் நன்மை செய்வதே சான்றோர் கடன் என்ற கருத்து சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றிய மணிமேகலையின் அறப்பண்பிற்கு சான்றாக அமைகின்றது.
மது ஒழிப்பு
       சங்க இலக்கியங்கள் பலவற்றில் “கள்” (மது) அருந்துவது வீரத்தோடும், விருந்தோம்பலோடும் இயல்பான ஒன்றாகப் பேசப்பட்டது. ஆனால், சீத்தலைச்சாத்தனார் அதை முற்றிலும் மறுத்து ஒரு புது தத்துவத்தை முன்வைக்கிறார். மது அருந்துதல் ஐந்து பஞ்சமா பாதகங்களில் ஒன்றாகும். பௌத்த அறத்தின்படி ஐந்து மிக முக்கியக் குற்றங்களை மணிமேகலை பட்டியலிடுகிறது. அதில் மது அருந்துவதை மிக முக்கியமான குற்றமாகச் சேர்க்கிறது.
  1. பொய் பேசுதல்
  2. கொலை செய்தல்
  3. களவு (திருட்டு) செய்தல்
  4. காமக் கள்ளம் (நெறிபிறழ்ந்த உறவு)
  5. கள் (மது) உண்ணுதல்
          இங்கு வியப்பிற்குரிய புதுமை என்னவென்றால், “மது அருந்துதல் என்னும் ஒரேயொரு தீய பழக்கம், மற்ற நான்கு குற்றங்களையும் ஒரு மனிதனைச் செய்யத் தூண்டிவிடும்” என்று மூலக் காரணமாக மதுவை இனம் காட்டுகிறது. குடிப்பவனுடைய உடலை மட்டுமன்றி, அவனது நற்பெயர், குலம், சுற்றம், செல்வம் ஆகிய அனைத்தையும் அது அழித்துவிடும். மணிமேகலை மது அருந்துவதைக் கடுமையான பாவமாகக் கருதுகிறது. கள் உண்பவர்கள் பகுத்தறிவை இழந்து விலங்குகளைப் போலாவார்கள் என்று எச்சரிக்கிறது. மது அருந்துபவர்கள் நஞ்சு உண்பவருக்குச் சமமானவர்கள் என்று திருக்குறள் சாடுகிறது. இதையே சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையின் ஆதிரை பிச்சையிட்ட காதையில்,
“மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்
 கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்”
-மணிமேகலை: ஆதிரை பிச்சையிட்ட காதை:84-85
          என்ற பாடல் வழி கள் அருந்துதல் மற்றும் உயிர்களைக் கொல்வது போன்ற தீய செயல்களை அறிவுடைய சான்றோர்கள் விலக்கியதை குறிப்பிட்டுள்ளார்.
பரத்தை ஒழிப்பு
       சீத்தலைச்சாத்தனார் பரத்தையர் குலத்தில் பிறந்த மணிமேகலையைத் துறவியாக்கி, அவளைப் பௌத்த அறநெறிக்கு ஆற்றுப்படுத்துகிறார். ஆடவரை மயக்கிப் பொருள் பறிக்கும் பரத்தமைத் தொழிலை ஒழித்து, பெண்களுக்கு உயரிய சமூக மதிப்பைப் பெற்றுத் தருவதே சாத்தனாரின் முதன்மை நோக்கமாக இருந்தது. மணிமேகலையின் பாட்டியான சித்திராபதி என்ற பாத்திரத்தின் மூலமாகவே பரத்தமையின் இழிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் சீத்தலைச்சாத்தனார் சித்திராபதி சோழ மன்னனிடம் வாதிடும்போது, யாழும் குழலும் போன்ற இனிய இசையையும், ஆடலையும் காட்டி, ஆண்களின் பொருளையும் மனத்தையும் கொள்ளையடித்து, அவர்களைக் கானல் வரிப் பாட்டுப் பாடிப் பிரிப்பதே பரத்தையர் குலம் என்று கூறுகிறாள். ஆண்கள் அழியக் காரணமான இந்தக் குலத்தொழிலை மணிமேகலை துறந்துவிட்டாள் என்று அவள் முறையிடுவதன் மூலம், பரத்தமை என்பது பிறரை ஏமாற்றும் ஒரு சுரண்டல் முறை என்பதைச் சீத்தலைச்சாத்தனார் வெளிப்படுத்துகிறார்.  சாதுவன் என்ற வணிகன், தாரகை என்ற பரத்தையின் பின்னால் சென்று தன் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறான். இதனால் அவனது மனைவி ஆதிரை பெரும் துன்பத்திற்கு ஆளாகிறாள். பரத்தமை ஒரு குடும்பத்தை, குறிப்பாக ஒரு பெண்ணின் வாழ்வை எவ்வாறு சீரழிக்கிறது என்பதைச் சாதுவன் கதையின் மூலம் சீத்தலைச் சாத்தனார் அறிவுறுத்துகிறார். இவற்றின் வழி சீத்தலைச் சாத்தனார் பசி ஒழிப்பு, மது ஒழிப்பு, பரத்தமை ஒழிப்பு போன்ற அறக்கருத்துக்களைத் தனது மணிமேகலைக் காப்பியத்தின் வழி பதிவு செய்து சமூக மக்களின் நல்லொழுக்கம் சார் அறச்சிந்தனையை வலியுறுத்தியுள்ளார்.
முடிவுரை
🌻 சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை, வெறும் மதக் கோட்பாடுகளைப் பேசும் காப்பியமாக இல்லாமல், சிறை ஒழிப்பு, மது ஒழிப்பு, பரத்தை ஒழிப்பு, போன்ற முற்போக்கான கருத்துக்களை முன்வைத்த முதல் “சமுதாய சீர்திருத்தக் காப்பியம்” என்னும் கருத்தை இக் கட்டுரை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகின்றது.
🌻 பசித்தவருக்கு உணவு தருவதே உயிரைக் காக்கும் பேரறம்.   என்பதை மேலான சிந்தனையாகப் போற்றுகிறது.   
🌻 அரசியல் அறம்  என்பது குற்றம் செய்து  சிறைச்சாலைக்கு வருவோரைத்  தண்டிக்கும் இடமாக இல்லாமல், தவறு செய்வோர் தம் தவறை உணர்ந்து திருந்தும் அறச்சாலையாக மாற்ற வேண்டியது அரசின் கடமை என்ற மனிதநேய மாண்பை மணிமேகலை பரிந்துரைக்கின்றது.
🌻 பரத்தையர் அன்பினால் இணைபவர்கள் அல்ல, பொருளுக்காக மட்டுமே ஆடவரை நெருங்குபவர்கள்.  ஆடவரின் செல்வம் அழியும் போது அவர்களது உறவும் முடிவுக்கு வரும். பரத்தையிடம் சென்றுவிட்டு வரும் கணவனின் இந்த கூடாஒழுக்கம் அவன் மனைவிக்குப் பெரும் மனவேதனையையும், சமூகத்தில் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது என்ற பெண்ணின் உளவியல் சிக்கல்களை உரக்க உரைக்கின்றார்  சீத்தலைச் சாத்தனார்.
🌻 குற்றவாளிகள் உருவாவதற்குக் காரணமே வறுமையும், மது போன்ற போதைப் பழக்கங்களும்தான் என்பதற்கான அடிப்படைச் சான்றாதாரங்களை மணிமேகலைக் காப்பியம் முன் வைக்கின்றது. தனிமனித ஒழுக்கத்தோடு நின்றுவிடாமல், மது இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்னும் சமுதாயப் பார்வையை மணிமேகலை வழி சீத்தலைச் சாத்தனார் எடுத்துரைத்துள்ளார்  என்ற கூற்றை முன் வைப்பதோடு இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.
துணைநூல் பட்டியல்
1.புலியூர் கேசிகன், (தொகுப்பாசிரியர்),  மணிமேகலை, சாரதா பதிப்பகம், சென்னை, பதிப்பு : 2007.
2.பேராசிரியர் சாலமன் பாப்பையா, திருக்குறள் உரை, கவிதா பதிப்பகம், சென்னை, பதிப்பு-2022.
3.பாரதியார் கவிதைகள், காளீஸ்வரி பதிப்பகம், சென்னை, பதிப்பு-2018.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கோ. பூங்காவனம்,
உதவிப்பேராசிரியர்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
                             ஶ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), 
சேலம் – 16.

 

சீத்தலைச்சாத்தனாரின் சமூகம் சார் அறக்கருத்துகள் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »