Silapathikarathil Marabu Valippatta Nambikkaikal|P.Thaneswari

சிலப்பதிகாரத்தில் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகள்
Abstrct
          Hope is the main source of human life. This hope is the impetus that makes a person move forward towards the next stage of development. A life without hope will become unstable and capsize like a boat without an oar. Good hopes create positive thoughts in the human mind and support the rise of life. The Tamil epic silappathikaram clearly show that various beliefs of the people and their manifestations. This study will reveal that although some of the beliefs included in it may seen like superstitions at first galance, they can be soothing to the mind and a psychological source of comfort to the soul in specific situation of human life.

“சிலப்பதிகாரத்தில் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகள்”

முன்னுரை
          மனித வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக விளங்குவது நம்பிக்கை. இந்த நம்பிக்கையே ஒரு மனிதனை அடுத்த கட்ட வளர்ச்சிநிலைகளை நோக்கி முன்னேறச் செய்யும் தூண்டுகோலாக அமைகின்றது. நம்பிக்கையற்ற வாழ்க்கை துடுப்பில்லாத படகைப் போன்று நிலைமாறிக் கவிழ்ந்து விடும். நல்ல நம்பிக்கைகள் மனித மனதில் நேர்மறைச் சிந்தனைகளை உருவாக்கி வாழ்க்கையின் உயர்வுக்குத் துணை நிற்கின்றன. முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் மக்களின் பல்வேறு வகையான நம்பிக்கைகளையும் அவற்றின் வெளிப்பாடுகளையும் தெளிவாகக் காட்டுகிறது. இதில் இடம் பெறும் சில நம்பிக்கைகள் மேலோட்டமாகப் பார்க்கும் போது மூட நம்பிக்கைகள் போல் தோன்றினாலும் அவை மனித வாழ்வின் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மனதை ஆற்றுப்படுத்தும் தன்மையுடையதாகவும், உள்ளத்துக்கு ஆறுதலளிக்கும் உளவியல் ஆதாரமாகவும் அமைகின்றன என்பதை இவ்வாய்வு உணர்த்தும்.
பிறப்பு பற்றிய நம்பிக்கை
          சமண சமயத்தின் அடிப்படையான நம்பிக்கைகளுள் முக்கியமானதாக விளங்குவது மறுபிறப்புக் கொள்கையாகும். அதன்படி ஒருவன் ஒரு பிறவியில் செய்யும் நன்மை தீமைகளின் அடிப்படையில் அடுத்த பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகும் என நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு என்ற கர்ம விதியை வலியுறுத்துகிறது.
கோவலன், கண்ணகியின் முற்பிறப்பு
          சிலப்பதிகாரத்தில் மறுபிறப்புக் கொள்கை தொடர்பான நம்பிக்கைகள் பல இடங்களில் வெளிப்படுகின்றன. கண்ணகி தன் முற்பிறப்பில் கணவனுக்காக மேற்கொள்ள வேண்டிய நோன்பினை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக இப்பிறவியில் கோவலனைப் பிரிய நேர்ந்ததாக, ‘பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க் கெடுக” என (சிலப்.9, காதை:56வரி) கண்ணகியின் தோழி தேவந்தி கூறுவது குறிப்பிடத்தக்கது.
          கோவலன் முற்பிறப்பில் பரதன் என்ற பெயரில் வாழ்ந்த போது சங்கமன் என்னும் வணிகனை அரசனிடம் ஒற்றன் எனக் குற்றம் சாட்டி கொலைத் தண்டனை வழங்கச் செய்த செய்தியை,
‘சங்கமன் என்னும் வணிகன் தன்னை
முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவன்” (காதை 23: வரி 151-152)
          என்ற வரிகளில் அறிகிறோம், கோவலன் கண்ணகி பற்றிய முற்பிறப்புக் கதைகளில் உண்மை என்ன என்பது விவாதத்திற்குரியதாக இருந்தாலும் அவை வெளிப்படுத்தும் அடிப்படைச் சிந்தனை மிக முக்கியமானதாகும். ஒருவன் இப்பிறவியில் செய்யும் செயல்களுக்கேற்ற பிரதிபலனை மறுபிறவியில் அனுபவிக்க நேரிடும் என்ற நம்பிக்கை மனிதனை ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்கத் தூண்டுகிறது.
நிமித்தங்கள்
          நிமித்தம் அல்லது சகுனம் என்பது  பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே அறிவிக்கும் அறிகுறியாகும். பழங்காலத்திருந்தே சகுனங்கள் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. ‘புறப்பொருள் வெண்பா மாலை” என்னும் நூலில் இத்தகைய நிமித்தம் அறிதல் ‘விரிச்சி” என்ற பெயரில் விளக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்து வரப் புறப்படுவதற்கு முன் விரிச்சி கேட்டல் மரபு வழக்கில் இருந்தமை அறியப்படுகிறது. இவ்வாறு நிமித்தம் அறிந்து கூறுவதற்கென்றே ‘நிமித்தகர்” இருந்தனர். வெற்றி பெற்ற அரசன் நிமித்தம் அறிந்து கூறிய நிமித்தகர்களுக்கு பெருமளவில் கொடைகள் வழங்கிய செய்தியும் அறியப்படுகின்றன. சிலம்பில்,
“குடப்பால் உறையா குவிஇமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் வருவதொன்று உண்டு
உறிநறு வெண்ணெய் உருகா உருகும்
மறிதெறித்து ஆடா வருவது ஒன்று உண்டு
நான் முலை ஆயம் நடுங்குடி நின்றிரங்கும்
மான் மணி வீழும் வருவது ஒன்று உண்டு”
          எனக் கூறுவதன் மூலம் பாற்குடத்தில் ஊற்றிய பால் உறையாமை, எருதுகளின் கண்களில் நீர் வழிதல், உரியல் வைத்த நெய்யை எடுத்து உருக்கினால் அது உருகாமை, பசுக்கள் நடுங்கி நிற்றல், பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகள் தானே அறுந்து விழுதல் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் தீ நிமித்தங்களாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. இத்தகைய தீ நிமித்தங்களையெல்லாம் கண்ட மாதரி குறவைக் கூத்தை நிகழ்த்துவதன் மூலம் துன்பம் நீங்கி நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில் குரவைக் கூத்து நிகழ்த்துகிறாள். இதன் வழியாக, வழிபாடு மற்றும் மரபுசார் சடங்குகளின் மூலம் தீமைகளைத் தணித்து நன்மையை உருவாக்கும் பண்பாட்டு நம்பிக்கை வெளிப்படுகிறது.
நல்ல நாள் பார்த்தல்
          நல்ல நாள் பார்த்தல் என்பது மக்களிடையே நிலவும் ஒரு பண்பாட்டு நம்பிக்கைகயாகக் கருதப்படுகிறது. சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் தருணங்களிலும், புதிய செயல்பாடுகளைத் தொடங்கும் நிலையிலும் அவை நன்மை பயக்கும்  வகையில் ஏற்ற நாளைத் தேர்ந்தெடுப்பது மரபாகும். இதற்காக சுப முகூர்த்தங்களையும், நல்ல நேரங்களையும் சோதிடர்களிடம் கேட்டறிந்து அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட நல்ல நாளிலேயே நற்செயல்களைத் தொடங்குவது வழக்கமாகும். இந்நடைமுறை தொன்று தொட்டு தமிழர் வாழ்வியல் மரபில் இடம்பிடித்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வரும் பழக்கமாக விளங்குகிறது.
          சிலப்பதிகாரத்தில் பன்னிரு ராசிகளின் கோள்களின் நிலைகளை ஆராய்ந்து உணர்ந்த நிமித்தகர் வட திசை நோக்கிப் படையெடுக்க இதுவே உகந்த காலம் என்கிறார். (25:26-31) வாளும் குடையும் முரசும் நிமித்தம் பார்த்த பின்னரே நிலைபெயர்க்கப்;பட்டன. புதிய செயல்களைத் தொடங்கும் முன்னர் நிமித்தம் பார்த்தமை இதன் மூலம் புலப்படுகிறது. மந்திரம் செய்தல், தெய்வ பூஜை செய்தல், மருந்திடுவது, சகுனம் பார்ப்பது சூழ்ச்சி செய்வது, தகுந்த இடமும் நேரமும் கருவியும் பார்பது என எட்டுக் கூறுகளையும் தமக்குத் துணையாகக் கொண்டு வாழ்பவர்கள் திருட்டைத் தொழிலாக் கொண்ட தீயவர்களாகும் என சிலப்பதகாரம் சுட்டிக் காட்டுகிறது. (16:178-179) இதன் மூலம் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டவர் கூட தகுந்த காலத்தையும் நேரத்தையும் ஆராய்ந்து செயல்பட்டனர் என்பது அறியப்படுகிறது.
கனவு நம்பிக்கை
          கனவுகள் என்பது நம் ஆழ் மனதின் எண்ண ஓட்டங்களே ஆகும். மனிதனின் ஆழ் மனதில் நிகழும் சிந்தனைகளின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. மனிதன் உறங்கும் நிலையிலும் மூளை முழுமையாகச் செயலிழக்காமல் விழிப்புணர்வுடன் இயக்குவதால் கனவுகள் தோன்றுகின்றன. குறிப்பாக ஒருவர் அதிக கவனம் செலுத்தும் அல்லது மனதில் ஆழமாகப் பதிந்த நினைவுகள் கனவுகளாக வெளிப்படுவது இயல்பானதாகும். இவ்வாறு தோன்றும் கனவுகள் முன்னறிவிப்பு உத்தியாகவும் கருதப்பட்டுள்ளன. மேலும் மனிதன் காணும் கனவுகளுக்கு நல் விளைவுகளும் தீய விளைவுகளும் உண்டு என்ற நம்பிக்கையும் சமூகத்தில் நிலவுகின்றது.
கண்ணகி கண்ட கனவு
        சிலப்பதிகாரத்தில் கண்ணகி தான் கண்ட கனவைத் தன் தோழி தேவந்தியிடம் கூறுகிறாள்,
“கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதி உள்பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடு தேள் இட்டு என் தன் மேல்
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டுக்
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்”
          என்று தான் கண்ட கனவை காற்சிலம்பை எடுத்துக் கொண்டு மதுரைக்குச் செல்வது முதற்கொண்டு மதுரையில் கோவலன் கொலை செய்யப்படுதல், கண்ணகி பாண்டிய மன்னனிடம் வாதாடுதல், இறுதியில் கணவனுடன் வானுலகம் செல்லுதல் வரை உள்ள நிகழ்வுகள் அனைத்தையும் கண்ணகி கனவாக விளக்குகிறாள். இவ்வாறு கூறப்படும் கனவும் பின்வருவனவற்றை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகளாக அமைகின்றன என்பதைக் காண முடிகிறது.
கோவலன் கண்ட கனவு
          கோவலன் தான் கண்ட கனவை தன் நண்பனான மாடலமறையனிடம் எடுத்துரைக்கின்றான். அதில் கண்ணகி மிகுந்த துயருறவும் தான் அணிந்திருந்த ஆடை பிறரால் பறிக்கப்பட்டு பன்றியின் மீது ஏறிச் செல்லவும், காமதேவன் தன் மலர் அம்புகளை வீசி எறிந்து விட்டு கண் கலங்கி நிற்கவும், புத்த துறவியிடத்தில் மாதவி தன் மகள் மணிமேகலையை ஒப்படைக்கவும் ஆகிய கனவுகள் நேரில் நிகழ்வதைப் போல் தமக்குத் தோன்றியதாக விளக்குகிறான். நள்ளிருள் கழிந்த பின் காலைப் பொழுதில் கண்ட கனவில் தோன்றிய தீமைகள் நிகழ்வாகி விடுமோ என்ற அச்சத்துடன் கூறுகிறான். (காதை 15: வரி 95-105) இதன் மூலம் அதிகாலையில் காணப்படும் கனவுகள் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடையே நிலவியிருந்ததை அறிய முடிகிறது.
கோப்பெருந்தேவியின் கனவு
          கோப்பெருந்தேவியின் கனவில், மன்னன் ஆட்சி செலுத்தும் செங்கோலும், வெண்கொற்றக்குடையும் தரையில் முறிந்து விழுவ போன்றும் அரண்மனை வாசலில் கட்டியிருந்த மணிகள் ஓயாது ஒலித்து உள்ளத்தை நடுங்கச் செய்யவும், இரவில் வானவில் தோன்றவும், பகலில் நட்சத்திரங்கள் தோன்றி எரிந்து விழவும், எட்டுத் திசைகளும் அதிரவும் கனவு தோன்றுகிறது. இந்நிகழ்வுகள் அனைத்தும் இயற்கைக்கு மாறானதாக இருப்பதால் அவை தீமையின் அறிகுறிகளாகப் புரிந்து கொள்ளப்பட்டன என்பது புலப்படுகிறது.
முடிவுரை
        சிலம்பின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே நிலவிய நம்பிக்கைகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக பிறப்பு பற்றிய நம்பிக்கைகள், சகுனம் பார்த்தல், நல்ல நாள் பார்த்தல், கனவுகளின் பொருள் பற்றிய எண்ணங்கள் ஆகியவை முக்கியமான நம்பிக்கைகளாகக் காணப்படுகின்றன. மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை மனிதனை ஒழுக்க நெறியில் நிலை நிறுத்துவதாய் உள்ளது. சகுனத்தின் மூலம் எதிர்வரும் தீமைகளை அறிந்து வழிபடுவதன் மூலமும் மரபுசார் சடங்குகளின் மூலமும் அதன் தீமையைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. திருடர்களும் கூட நல்லநாள் பார்த்துத் திருடச் சென்றுள்ளனர் என்பதன் மூலம் நல்ல நாள் பற்றிய மக்களின் நம்பிக்கை புலப்படுகிறது. கனவுகள் முன்னறிவிப்பு உத்தியாக மக்களால் நம்பப்பட்டதை அறிய முடிகிறது.
          இந்த நம்பிக்கைகள் அனைத்தும் மனித வாழ்வில் நன்மையும் தீமையும் மாறி மாறி நிகழ்வதை உணர்த்தி, தன்னிலைப் பரிசோதனை செய்து தவறுகளைச் சீர் செய்து நன்னெறியில் நிலைத்திருக்கவும் வாழ்வின் நிலையாமையை உணர்த்தவும் உதவுகின்றன என்ற புரிதலும் வெளிப்படுகின்றது.
பார்வை நூல்கள்
1.சுப்பரமணியன்,ச.வே., சிலப்பதிகாரம், கங்கை புத்தக நிலையம், 13,தீனதயாளு தெரு, சென்னை, முதற்பதிப்பு – 1998, விலை.90.00
2.சீனிச்சாமி.து., தமிழில் காப்பியக் கொள்கை (முதல் தொகுதி) எட்டாம் உலகத் தமிழ் மாநாடு, பதிப்புச் சுழல்நிதி வெளியீடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்காவூர், டிசம்பர் – 1994, விலை.100.00
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ப.தனேஸ்வரி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
கோபி கலை மற்றும் அறிவியில் கல்லூரி,
கோபி, தமிழ்நாடு.

 

சிலப்பதிகாரத்தில் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகள் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here