Portrayal of Women Characters in the novel Anjalai by Kanmani Gunasekaran|S. VIJI

Abstract
         
       The creator draws inspiration from various aspects of what they see, the experiences they face, and the thoughts shaped by their imagination, and transforms them into characters in the novel. They often get a special place in the mind of readers and they also play an important role in making the characters lively. They drive the progress of the story and ensure its continuity. The novels which have women as lead of the story depict the livelihood of the women. Kanmani Gunasekaran’s women characters also lead a life that depicts these lines. These characters are often weak and lead a low-life. Anjalai Novel explains the livelihood of the women’s life, how it relates with the real life, is the society changed or the old traditions binding the women and this essay analyses the above aspects and gives the findings.


“கண்மணி குணசேகரனின் அஞ்சலை நாவலில் பெண்பாத்திரப்படைப்பு”

முன்னுரை
            
        படைப்பாளர் தான் பார்க்கும் பல காட்சிகள் மூலமாகவும் தனக்குள்ளாகவும் தோன்றும் பலவித எண்ணங்கள் கற்பனைகள் ஆகியவற்றின் வெளிப்பாட்டை  கதைமாந்தர்களாக உருவாக்கம் செய்கிறார். நாவல்களில்  கதை மாந்தர்கள் நீங்காத இடத்தை பிடிக்கின்றனர்.கதையின் உயிரோட்டத்திற்கு உதவுகின்றனர்.நாவலின் வளர்ச்சிப்போக்கு  அவர்களை கொண்டே  முன்னேறி செல்கிறது. பெண் கதை மாந்தர்களை தலைமை மாந்தர்களாக வைத்து எழுதப்படும் நாவல்கள் அவர்களின் வாழ்வியலை  எடுத்துரைக்கிறது. இவ்வரிசையில் எழுத்தாளர் கண்மணிகுணசேகரன் அவர்கள் எழுதிய அஞ்சலை நாவலில் இடம்பெறும்  பெண் கதை மாந்தர்களின் வாழ்க்கை முறைகள்  நம் வாழ்வியலோடு எவ்விதம் தொடர்பு கொண்டுள்ளது என்பது பற்றியும் பெண்களின் வாழ்வு இக்காலத்தில் மாற்றம் பெற்றுள்ளதா இல்லை இன்னும் பழைய மரபுகளின் முறையே உள்ளதா என்பது பற்றியும்  ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அஞ்சலை
       
       அஞ்சலை  நாவலின் கதை நாயகி.  உழைக்க அஞ்சாதவள் வயல் வேலைகளில் பந்தயம் வைத்து எப்போதும் முந்துவாள். நாற்று நட, களைபறிக்க ,நெல்அடிக்க என அனைத்து வேலைகளையும்  ஆண்களுக்குச் சமமாக செய்பவள். வேலை செய்யும் இடத்தில் ஆண்களிடம் பதமாய் நடந்து கொள்வாள். எல்லா வயல்களின் நடவிலும் இவளின் விரல் நுழைந்து பயிர்களை ஊனியிருக்கிறது.எல்லா பயிர்களுக்கும் குனிந்து களை எடுத்திருக்கிறாள். விளைந்த எல்லா வயல்களிலும் அரிவாள் பாய்ந்திருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பல கனவுகளோடு காத்திருந்த    பருவப்பெண். ஆனால் அவளுடைய வாழ்வை  ஆண் பெண் அனைவரும்  காயப்படுத்துபவர்களாக  அமைந்தனர்.  அக்காவின் கணவன்  அஞ்சலையின் மீது ஆசைப்படுகிறான். அதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே மாமா சின்னசாமி அனைவரையும் ஏமாற்றி  மாப்பிள்ளையை மாற்றி காண்பித்து  திருமணம் செய்து  வைக்கிறான். தாலி கட்டியவனைப்  பார்த்ததும்  அஞ்சலைக்கு மயக்கமே வந்துவிடுகிறது. அவளுடைய  திருமணக்கனவுகள்  அனைத்தும்  சிலநொடிப் பொழுதில்  தூளாகிப்போனதை எண்ணி நெஞ்சம் குமுறுகிறாள்.”என்ன ஏமாத்திட்டிங்கடா என்ன ஏமாத்திட்டிங்கடா ஆள்மாறாட்டம் பண்ணி என்னக் கொன்னுட்டிங்கடா”-என அழுது புலம்பினாள். (அஞ்-ப-55)        
          பெண்ணுக்கு அச்சம், நாணம், மடம் ,பயிர்ப்பு  எனும் நான்கு பண்புகளை விதித்தது சமூகம். (அச்சம் –பயம்,நாணம்-வெட்கம்,மடம் – நெறிப்படி நடத்தல், பயிர்ப்பு- அருவருப்பு) பெண்கள் அவளாகச் சிந்தித்து பார்க்கக்கூடாது  பெற்றோர் முடிவு செய்யும் ஆணுக்கு கழுத்தை நீட்ட வேண்டும் ஆமையாகப் புலனடக்கி வாழவேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தியது.  இது போன்ற அறியாமைக் கருத்துகளை அடியோடு அழித்திட துடித்த பாரதிதாசன்

”தனித்துக் கிடந்திடும் லாயம் –அதில்
தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும்
கணைத்திட உத்தரவுண்டு-வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்”  (35:பெண்ணுக்கு நீதி தொகுதி)
         
         எனப் பெண் அடிமைத்தனத்தைச்  சாடுகிறார். இந்நூல்களையெல்லாம்  படித்திராத அஞ்சலை இயல்பாகவே அச்சம் என்பதை அறியாதவள்  உழைக்க  அஞ்சாதவள் அதனால் யாருக்கும் நாம் அடிமையில்லை  என்பதை உணர்ந்தவள். பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக இல்லாமலிருந்தாலும்  பாரதிதாசன் காண விரும்பும் தமிழ்ப்பெண்ணாக  விளங்குகிறாள். கணவனின் அண்ணனை மாப்பிள்ளை என காண்பித்து ஏமாற்றியதை  தாங்கிக் கொள்ள முடியாமல் தக்காளிச் செடியாய் வதங்கினாள்.மணக்கொல்லையை பார்க்கும் ஆவல் தலைகீழாகி விட்டது.  திருமணம் முடிந்து விட்டது இனிமேல் அவனோடுதான் வாழ்ந்தாக வேண்டும்  என்று  மற்ற பெண்களைப் போல் எண்ணாமல்  பிடிக்காதவனோடு  வாழ்வதில்லை என முடிவு செய்யும் இடத்தில் அச்சமற்ற பெண்ணாக விளங்குகிறாள்.
        
      தன்னுடைய  பிறந்த ஊரான கார்குடலுக்கு போக மனமில்லாமல் மணக்கொல்லையிலே தங்கிவிட்டாள். கணவனிடம்  அடிஉதை வாங்கிகொண்டு அவனுடனே இருக்காமல் திருமணபந்தத்தை உதறிவிட்டு கிளம்புகிறாள். வழியில் தன் அக்காவைப் பார்த்து அவளுடன் தெளார் செல்கிறாள். அக்காவின் கொழுந்தனை மறுமணம்  செய்துகொள்கிறாள். ஆசையுடன் தொடங்கிய வாழ்வு அக்காவிற்கும் கொழுந்தனுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பால் அர்த்தமற்று போகிறது. அவள் வயிற்றிலிருந்த குழந்தை வாழச்சொல்லி கட்டாயப்படுத்தியது. அக்காவின் அனைத்துப்பேச்சுகளையும் மறந்து போகும் வகையில் அழகாக பிறந்தாள் நிலா. மறுமணம் செய்த கணவனின் ஆதரவும் பொய்த்துப்போக  தாய் வீட்டிற்கு செல்கிறாள்.
        
        வள்ளியின் ஆசைப்படி மணக்கொல்லைச் சென்று  முதல் கணவனான மண்ணாங்கட்டி என்கிற கணேசனிடம் வாழ்கிறாள். ஆண்களுக்கு எதிலும்  கட்டுப்பாடு வைக்காத சமூகம் பெண்களின்  இயல்பான ஆசையைக்கூட ஏளனமாய் பேசுகிறது. அஞ்சலையின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாதவர்கள் அவளை இழிவாகபேசுகிறார்கள். உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் வடிகால் தேடும் இடங்களில் ஏமாற்றப்படுகிறாள். அக்காவின் கணவன் தொடங்கி கணேசன் அவனுடைய அண்ணன் மத்தளக்காரன் மறுமணம் செய்த ஆறுமுகம் வேலை செய்யும் இடங்களில் உள்ள பண்ணையார்கள் என அனைத்து ஆண்கள் மட்டுமல்லாமல் அக்கா ஓப்படியா என பெண்கள் பலரும் அஞ்சலையின் வாழ்வை காயப்படுத்துகிறார்கள். தன்னுடைய  மகள் நிலாவை குழந்தையிலேயே அம்மா வீட்டில் விட்டுவிட்டாள்.  மகளை தம்பி திருமணம் செய்து கொள்வான்  என்ற  ஆசையும் பொய்த்துப் போகிறது. நிலாவை தன்னுடன் தங்க அழைத்து வருகிறாள். ஆனால் கணவன்  கணேசனுக்கு  அஞ்சலையின் செயல் பிடிக்கவில்லை. அஞ்சலையை அடித்து கேவலமாக பேசுகிறான். முந்திரி  காட்டுக்குள்  தூக்கு போட்டுக் கொள்பவளை  பிள்ளைகள் காப்பாற்றுகிறார்கள். ஆண்கள் இரண்டு மூன்று என திருமணம் செய்தாலும் குறை  சொல்லாத இச்சமூகம்  பெண்கள்  இச்செயலை செய்தால் அவமானப்படுத்துகிறது. அஞ்சலையின்  எண்ணமும் ஏக்கமும் எல்லாப்பெண்களுக்குள்ளும் ஏற்படும் இயல்பான ஆசைதான். அந்த ஆசை நிராசையாகும் போது  எடுத்த முடிவுகள்  அவளை  வாழ்க்கை முழுவதும் அழவைக்கிறது.

பாக்கியம்         
       அஞ்சலையின் அம்மா. கணவன் இல்லாமல் நான்கு பிள்ளைகளை தனியாக வளர்த்தவள்.இரண்டு பெண்களுக்கு திருமணம் முடித்துவிட்டாள். மூன்றாவது பெண் அஞ்சலைக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை  தேடிக்கொண்டிருந்தாள். பாக்கியத்தின்  எண்ணத்தை அறிந்த மூத்த பெண் தன் கொழுந்தனுக்கு அஞ்சலையை கேட்டாள். இளைய மருமகன் தனக்கு தருமாறு கேட்டான். பாக்கியம் செய்வதறியாது திகைத்தாள். மனதிற்குள்  கணவன் குட்டாரு வந்தான். பேர் போன வேலைக்காரன்  போற இடத்தில் வஞ்சனையில்லாமல்  வேலை செய்வான்.“காற்றே இல்லாத சமயங்களில் கூட வாட்டப்பலி விட்டால் அப்பிடி தூசும் பதரும் பிரிந்து போகும். அந்த வாட்டப்பலியில்  மயங்கி மாவிடந்தல்காரி  பாக்கியம்  அவனை  திருமணம் செய்து கொண்டாள்”.   (அ-ப-26) அள்ளிக்கெடாசினால் விளைந்து சரிகிற வயக்காடு  குட்டாருக்குச் சளைக்காமல்  பாக்கியத்திற்கும் கூழாய்க் குழைகிற சேற்றில் முப்போக விளைச்சலில் பஞ்சமில்லாமல் வேலை கிடைத்தது. மூனு பெண் பிறந்து நாலாவதாய் பையன் வயிற்றிலிருக்கும் போது ஏதோ கடித்து  மயங்கி விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்கவே இல்லை. தந்தை இல்லாத குறையே தெரியாமல் பிள்ளைகளை வளர்த்தாள். சின்ன மருமகன் பேச்சை நம்பி அஞ்சலையை  மணக்கொல்லையில் திருமணம் செய்து வைத்தாள்.   அஞ்சலை  கணவனுடன் கார்குடலுக்கு  வருகிறாள்.  தன் மகளுடன்  வரும் மாப்பிள்ளை மண்ணாங்கட்டியைப்  பார்த்ததும்   அனைவரும்  மருமகன் சின்னசாமியால் ஏமாற்றப்பட்டதை  உணர்ந்து துடிக்கிறாள். தன்னுடைய இயலாமையை நினைத்து வருந்துகிறாள்.
         
      மணக்கொல்லையை விட்டு கைக்குழந்தையுடன்  வரும்  மகளை ஆதரிக்கும் இடத்திலும்  அஞ்சலைக்கு  துரோகம் செய்த மூத்த மகளை கண்டிக்கும் இடத்திலும்  தாய்மையின் உண்மை வடிவமாக திகழ்கிறாள். சிறுவயது முதல்  உழைத்து உழைத்து ஓடாய் தேய்கிறாள். ஒருமகள் குடிகார தம்பியிடமும் இன்னொரு மகள்  பொருத்தமில்லாத கணவனிடமும்  வாக்கப்பட்டதை  எண்ணி  வருந்துகிறாள். ஊராரின் ஏச்சுக்கும்  பேச்சுக்கும்  ஆளாகி  தனியே நிற்கும் போது கணவனை இழந்த   பெண்களின்  ஏக்க மனதையும் இயலாமை நிலையையும்  வெளிப்படுத்துகிறாள்.

வள்ளி            
        மணக்கொல்லையில் பிறந்தவள். அஞ்சலையின்கணவன் மண்ணாங்கட்டிக்கு  சகோதரி உறவு அண்ணி அண்ணி என்று அவள் கொடுத்த பாசம்தான் அஞ்சலையை  மணக்கொல்லையில் வாழவைத்தது.  பேசுவதற்கும்  முந்திரி காட்டிற்கு போவதற்கும்  வள்ளிதான் துணை.

“ நவில்தொறும்  நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை  யாளர்  தொடர்பு”(தி-அ-79)
         
         என்னும் குறளுக்கேற்ப  வள்ளியிடம் பழக பழக அஞ்சலைக்கு  இன்பத்தை தந்தது அவளுடைய நட்பு. மூத்தார் மீது கொண்ட ஆசை தவறு என அஞ்சலைக்கு  எடுத்து கூறி  அவளின்  மனத்தடுமாற்றத்தை  சரிபடுத்தியவள்.  வள்ளி பவழங்குடியில் இருக்கும் மாமனுக்கு  வாக்கப்பட்டு போகப் போகிறாள் என்பதை அறிந்த அஞ்சலை மனம் ஒடிந்து போகிறாள்.   தனக்கு   இருந்த ஒரு துணையும் மணக்கொல்லையை விட்டு போவதை அவளால் ஏற்று கொள்ளமுடியவில்லை. அஞ்சலையின் ஓப்படியா அவளை  என்னவெல்லாம்  பேசப்போகிறாளோ  என்பதை நினைத்த வள்ளியால் பவழங்குடிக்கு  மகிழ்ச்சியாக செல்லமுடியவில்லை.  
               
        அவள் நினைத்தது  போலவே ஓப்படியாவின் பேச்சையும் கணேசனிடம் வாங்கிய அடியையும் தாங்கமுடியாமல் அஞ்சலை  மணக்கொல்லையை  விட்டு போய்விடுகிறாள். சிறிது காலம்  கழித்து தன்னுடைய வீட்டிற்கு வரும் அண்ணி அஞ்சலையை அன்போடு வரவேற்கிறாள் வள்ளி. “அண்ணி நான் மட்டும் இருந்திருந்தா உன்ன மணக்கொல்லையை விட்டு போக விட்டிருக்கமாட்டேன்” (அ-ப-73) என்று  வள்ளி  கூறுவதிலிருந்து அவளுடைய  உண்மையான பாசம் நமக்கு புரிகிறது. நல்ல பண்பு நலன்களை பெற்றிருந்த  வள்ளி  தன்னுடன்  நட்பு கொண்ட   அஞ்சலை நல்ல வழியில்  செல்வதற்கு  அறிவுரை  வழங்கும் இடத்தில் அவளின்   அன்னையாகவே தெரிகிறாள்.

“ மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா–கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே  சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்”(மூதுரை-12)
         
       உருவத்தால் பெரியவர் குணத்தால் சிறியவராதலும் உருவத்தால் சிறியவர் குணத்தால் பெரியவராதலும் உண்டு  என  ஔவையார் கூறுவது போல்  அதிகம் கல்வி கற்காவிட்டாலும் அஞ்சலையை விட சிறிய பெண் என்றாலும்  வள்ளி குணத்தால்  அனைவர் மனதிலும் உயர்ந்து நிற்கிறாள்.போக்கிடம்இல்லாத அஞ்சலையை மீண்டும் மணக்கொல்லைக்குஅழைத்து வந்து கணேசனுடன்  வாழ வைக்கிறாள்.

கல்யாணி            
      அஞ்சலையின் மூத்த அக்கா  தன்னுடைய கொழுந்தனுக்கு அவளை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டவள்.  கணவன் வீட்டை விட்டு வந்த அஞ்சலைக்கு ஆதரவு தந்தவள். கொழுந்தனுக்கு தன் தங்கை  அஞ்சலையை  மறுமணம்  செய்து வைத்தாள். அக்காவின் அன்பு உண்மை  என்னு  நம்பிய அஞ்சலை  அத்தனையும்  நடிப்பு எனத்தெரிய வரும்  போது    உறவுகளையே வெறுக்கிறாள்.கணவன் இருக்க அவனுடைய தம்பியின் மீது ஆசைப்பட்டு  தகாத உறவு வைத்துக்கொள்கிறாள்.

“ புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறுபோல் பீடு  நடை”    (தி-அ-6)
         
       என்று திருவள்ளுவர் கூறுவது போல் ஒழுக்கமில்லாத  மனைவி அமைந்ததால் கல்யாணியின் கணவன்  தலைகுனிவுடன் வாழ்கிறான். தனது கவலையை மறக்க நிறைய குடிக்கிறான்.தன்னை மறந்த நிலையில்  கல்யாணியின் ஒழுக்கம் தவறிய செயல்களை சொல்லி புலம்புகிறான் .இதனை கேட்கும்  அஞ்சலை முதலில் நம்ப மறுக்கிறாள். தன்னுடைய கண்களால் பார்த்தபிறகு  அக்காவையும் கணவனையும் நினைத்து நெஞ்சம் கலங்குகிறாள். அதைப்பற்றி எல்லாம் கல்யாணி கவலைப்படுவதே இல்லை. கொழுந்தனுடன்  மகிழ்ச்சியாக இருக்கிறாள். தங்கையை கொடுமைப்படுத்துகிறாள்.  அஞ்சலை கர்ப்பமானது தெரிந்தவுடன் கோபமும் எரிச்சலும் அடைகிறாள். தனக்கு கிடைக்காத பிள்ளை பாக்கியம் தங்கைக்கு கிடைத்துவிட்டதே என எண்ணி ஆத்திரத்துடன் அஞ்சலையை சித்திரவதை செய்கிறாள்.  கர்ப்பமான பெண் என்றும் பாராமல் வேலை வாங்குவதுடன்  அடித்து காயப்படுத்துகிறாள். சாப்பாடு தராமல் தவிக்கவிடுகிறாள். ஆசை வார்த்தைகளை கூறி தங்கையின்   வாழ்வை அடியோடு மாற்றி  அல்லல்படுத்தியவள்.  தனக்கு பிள்ளை பிறந்தவுடன்  தங்கையை  வீட்டை விட்டு  துரத்தும்  இரக்கமற்றவளாக  இருக்கிறாள்.  அஞ்சலையின் மகள் நிலாவை தம்பி திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில்   தன்னுடைய  பெண்ணை கட்டித்தருவதாக  சொல்கிறாள்.    அவளுடைய  கொடுமை  அஞ்சலையோடு நின்றுவிடாமல்  நிலாவிடமும்  தொடர்ந்தது. தன்னுடன் பிறந்தவள் என்கிற அன்பு சிறிதும் இல்லாமல்  வாழும்  அவள்  நம் வாழ்வில் சந்தித்த  சிலரை நினைவுபடுத்துகிறாள்.

நிலா                      
      அஞ்சலைக்கும்  ஆறுமுகத்திற்கும்  பிறந்த மகள். பாட்டி பாக்கியத்திடம் வளர்ந்தவள் தாய் தந்தை  அன்பை முழுவதும் பெறாதவள். இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட தாயினால்  அவள் படும்  அவமானங்கள்  சொல்லில் அடங்காதவை .மாமன்  தன்னை திருமணம் செய்து கொள்வான்  என நினைத்ததும் நடக்காமல் போனதால்  தந்தையான ஆறுமுகத்திடம் வருகிறாள். அங்கு தன் பெரியம்மா கல்யாணியின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறாள். தங்கையின் மகள் என்ற உணர்வு சிறிதும் இல்லாமல்  நிலாவை அடித்துக் காயப்படுத்துகிறாள். கல்யாணியின் கொடுமை தாங்க முடியாமல்  தாய் அஞ்சலையுடன்  மணக்கொல்லைக்கு  செல்கிறாள்.
               
       அந்நிலவினைப்போல்  இந்நிலாவின் மனதிலும்  களங்கமில்லை.ஆனால் தாய் அஞ்சலை செய்த இரண்டு திருமணத்தால்  போகும் இடமெல்லாம்  அவனானப்படுத்தபடுகிறாள்.  தாய் தூக்கு மாட்டி  உயிரைவிட நினைக்கும் போது நிலா  கோபத்தின் உச்சிக்கு  சென்று தான் பட்ட துயரங்களை எல்லாம்   நினைத்து அவளை  அடித்து விடுகிறாள்.   “நாடுமாறி  நீ ஏண்டி சாவப்போற நீ பண்ணனதுக்கு நாந்தான்டி சாவனும்  நானு அப்பனையும் பார்த்ததில்ல  தெளார்க்காரி மொவளக் கொண்டாந்து போட்டியா வைக்கிறா. அங்கியும்  எனக்கு எடம் இல்ல  நீனும்  இங்க சாவப்போறங்கிற எனக்கு யாருடி இருக்கா? அநாதையா நிக்கிற நாந்தாண்டி சாவனும் என்னக் கொன்னுட்டு செத்துப் போடி”(அ-ப-319) என்று நிலா சொல்வது ஆதரவற்ற குழந்தைகளின் உள்ளக்குமுறலாக உள்ளது. துணைக்கு  யாருமில்லாத  பெண்களின்  மனதையும் காட்டுவதாக உள்ளது.

முடிவுரை                                                                    
 
“ ஆடை அணிகலன்கள் ஆசைக்கு  வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதும்
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழ்வதும்
கெஞ்சுவதுமாக்க் கிடக்கும்  மகளிர் குலம்
மானிடர் கூட்டத்தில்  வலிவற்ற ஓர் பகுதி”(பா.க-வீ-காட்சி-1)
         
       என்று  புரட்சிக்கவிஞர்  சொன்னது போல்  இந்நாவலில்  வரும் பெண்கதை மாந்தர்கள் அனைவரும் வலுவற்ற பகுதியாக  வாழ்கின்றனர். அஞ்சலை கடும் உழைப்பாளி தனக்கு பிடித்த செயலை துணிந்து தைரியமாக செய்பவள். அவளையும் இச்சமூகம் அவதூறு பேசி ஆமையாக மாற்றி விடுகிறது.
 
“ கற்பு நிலையென்று சொல்ல வந்தார் 
இரு கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்”(பா-விடு-5)
           
       மகாகவியின் இக்கூற்றை யாரும் மனதில் இருத்தவில்லை என்றே சொல்லாம்.பெண்களுக்கு கற்பை முன்னிலைப்படுத்தும் இச்சமூகம் ஆண்களுக்கு முன்னிலைப் படுத்த தவறிவிட்டது. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்  என்பது இன்றளவும் ஏட்டளவிலே உள்ளது. வரும் காலங்களில்  இந்நிலையை மாற்ற சமூகத்துடன் சேர்ந்து நாமும்  முயற்சி செய்வோம்.
 
துணை நூற்பட்டியல்                      
1.கண்மணி குணசேகரன்                        ­­­­–       அஞ்சலை நாவல்

2.பரிமேலழகர் உரை                              ­­­­–       திருக்குறள்,

3.பாரதிதாசன்                                           ­­­­–      பாரதிதாசன் கவிதைகள்,

4.பாரதியார்                                             ­­­­–    பாரதியார் கவிதைகள்                                           

5.வேங்கடசாமி நாட்டார் .ந.மு                  ­­­­–   நீதிநூல்கள்,

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சீ.விஜி

முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்)

கலைஞர்கருணாநிதி அரசுகலைக்கல்லூரி

திருவண்ணாமலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here