The Agrarian Life of Farmers in Kanmani Gunasekaran’s Novel Korai- S.Viji

கண்மணி குணசேகரனின் கோரைப் புதினத்தில் விவசாயிகளின் வாழ்வியல்-சீ.விஜி
Abstract
           
        The long story written in prose is called a novel. Tamils initially referred to it simply as a novel. Later, it was Tamilized and presented under the name “Puthinam” (fiction). After it was realized that the imaginative beauty and emotional expressions of poetry can also be conveyed in prose, the first form of prose literature to emerge in Tamil was fiction literature. These fictions are written in various genres. Among them, many writers, with concern for society, create fiction based on the difficulties faced by the people.
Among them, writer Kanmani Gunasekaran has created many fictions portraying the livelihood struggles of the rural farming community without losing the essence of the soil. Farming remains an important occupation in our life even today. The collective desire is to further develop this occupation and make our country shine as a self-sufficient nation in agriculture. In this context, the aim of this article is to study the livelihood of farmers depicted in the core fiction.


“கண்மணிகுணசேகரனின் கோரைப் புதினத்தில் விவசாயிகளின் வாழ்வியல்”

முன்னுரை
        
       உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கியேலர் நாவல் என்பர்.தமிழர்களும் ஆரம்பத்தில் நாவல் என்றே அழைத்தனர். பின்பு தமிழ்ப்படுத்தி புதினம் என்ற பெயரால் வழங்கி வருகின்றனர். கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டு வர முடியும் என்று உணர்த்தப்பட்ட பிறகு தமிழ் உரைநடை படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது புதின இலக்கியமே ஆகும். இப்புதினங்கள் பல்வேறு வகைகளாக பிரித்து எழுதப்படுகிறது. அதில் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பல எழுத்தாளர்கள் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை புதினமாக படைக்கின்றனர். அவர்களுள் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் நடுநாட்டு விவசாய மக்களின் வாழ்வியல் சிக்கல்களை மண் மனம் மாறாமல் பல புதினங்களாக படைத்துள்ளார். அவற்றுள் கோரைப் புதினத்தில் இடம்பெறும் விவசாயிகளின் வாழ்வியலை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேளாண்மை      
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்       
ஊழந்தும் உழவே தலை”(திரு-1031) 
         
      உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த்தொழிலின் பின் நிற்கின்றது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத்தொழிலே சிறந்தது என்கிறார் திருவள்ளுவர்.

“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்ல இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி “(தொல்-பொருள்- மரபு 81) என தொல்காப்பியரும்

“எருது பொழில் செய்யாது ஓடவிடும் கடன் வேளார்க்கு இன்று”(பரி-20-63)
         
      என பரிபாடலும் வேளாண்மையின் சிறப்புகளை எடுத்துக்கூறுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பங்களும் வணிக மயமாதலின் தாக்கமும் உழவுத்தொழிலை பின்னுக்கு தள்ளியிருக்கிறது விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கோரைப்புதினம்         
      ஒவ்வொரு புதின ஆசிரியரும் சமுதாயத்தைத் தாங்கள் புரிந்து கொண்ட கோணத்தில் நின்று அதற்கேற்பப் பாத்திரங்களைப் படைக்கின்றனர். அவ்வரிசையில் எதார்த்தவாத படைப்புகளை எழுதி தமிழ்ப் படைப்புலகில் பயணித்து வரும் எழுத்தாளர் அ.குணசேகர் என்னும் இயற்பெயர் கொண்ட கண்மணி குணசேகரன். தன் எழுத்துப் பற்றி கண்மணி குணசேகரன் அவர்கள் கூறும்பொழுது என்னைப் போலவே என் கதைகளும் எளிமையானவை. முந்திரிக்காட்டு கிராமத்து மக்களின் வாழ்க்கையை முருங்கை மரக்கிளையை வெட்டி நடுவது போல பாசாங்கு இல்லாமல் இயல்பான மொழிநடையில் எழுதுகிறேன் என்கிறார்.  இன்றைய விவசாயிகளின் வாழ்வியல் போராட்டத்தை ‘கோரை’ப் புதினத்தில் வரும் உத்தண்டி கதாப்பாத்திரத்தின் மூலம் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்துள்ளார்.

உத்தண்டியின் மகிழ்ச்சி
   
     ஒவ்வொரு விவசாயிகளுக்கும் மனதில் பெரிய கனவு ஒன்று இருக்கும். தனக்கென்று சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் என்பதுதான் அக்கனவு. அதுபோல உத்தண்டிக்கும் ஒரு கனவு இருந்தது. அவனின் கனவு பூரணியை திருமணம் செய்தவுடன் கால் காணி நிலம் வாங்கியதன் மூலம் நிறைவேறியது. முதல் மகசூல் சொல்ல முடியாத மகிழ்ச்சி உத்தண்டிக்கும் பூரணிக்கும் ஆனால் மல்லாட்டை போடுவதா மிளகாய் வைப்பதா என இரு மனசாய் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தார்கள். நமக்கு சொந்தமான நிலத்தில் பயிர் வைத்து குறைந்த அளவு மகசூல் வந்தாலும் விவசாயிகள் மகிழ்வர் என்பதனை உத்தண்டியின் மன உணர்வு மூலமாக எழுத்தாளர் எடுத்துரைக்கிறார்.

கோரையால் ஏற்படும் பிரச்சினைகள்
      
       உத்தண்டியின் மகிழ்ச்சி சிறிது நாள் கூட நீடிக்கவில்லை. நிலம் முழுக்க கோரைச்செடிகள் முளைத்து நின்றன.காலடியில் ரத்தம் கசிகிற மாதிரி ஒரே வலி நெருஞ்சி முள்ளாய் மனதில் குத்துகிற கோரைக்காம்பில் உத்தண்டியால் அதற்கு மேல் நிற்க முடியவில்லை நடந்தான். கால்விரல்களில் கோரைகள் நாராய் சிக்கின.கோரையின் நெரிசலில் முழி பிதுங்கிகொண்டிருந்த மல்லாட்டைக் கொல்லையை விட்டு காட்டாமணி வேலி மறிச்சியை நிக்கிவிட்டு ரோட்டுக்கு வந்தான். கோரைப்புல் விளையும் நிலத்தை ஏமாந்து வாங்கிவிட்டோமே என்ற நினைப்பு உத்தண்டியை உள்ளுக்குள் சீவு முள்ளாய்க் குத்தி அவனை சின்னாபின்னப் படுத்திக்கொண்டிருந்தது.நல்லா இருந்த ஏங் கொல்ல பூரா கோரையா பூட்டுது என்னானு தெரியல எப்பிடினு புரியல என்று யாரிடம் கேட்பான். ஏற்கனவே  இவன் நிலம் வாங்கியதைப் பார்த்து பொச்சரிப்பில் அவனவன் வயிறு எரிந்து போய் நிற்கிற நிலையில,; இவன் கேட்டு விட்டால் அது வறவோட்டில் தண்ணீர் தெளித்த கதைதான்.சுர்ரென்று பொங்கும், புகையும், கடைசியில் ஆவியாய் வறண்டு போகும் வார்த்தைகள்”என்னடா இப்பதான் புது சாமான்ல இது மொளைச்ச மாதிரி காணி மயிரு வாங்கிட்டனு கோர மொளஞ்சிருக்கு அதுக்கு என்னா காரணம் கொரங்கு நிண்டிருக்கு, அதுக்கு என்னா வைத்தியம்னு ஒம் பூரிப்பப் போட்டு இங்க வந்து ஒடைக்கிறது” என்று சொல்லும் போது  உத்தண்டிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

கோரைக்கான காரணம்
    
     உத்தண்டியின்  வருத்தத்தை புரிந்து கொண்ட செம்புலிங்க கிழவர் நிலத்தை உற்று பார்த்தார். கெஞ்ச நேரம் கழித்து பட்டென்று கேட்டார் இதுவரைக்கும் அந்த கொல்லியல என்னென்ன மாசூலு வச்சிருக்க? மஞ்சள் வச்சேன் அதுக்கு முன்பு மல்லாட்ட போட்டேன்.கொல்ல வாங்கன பிறகு நான் வச்ச மொத மாசூலு மொளகாதான் படபடவென்று ஒப்பித்தான். மொளகா என்றதும் அவருக்கு நெற்றி சுருங்கியது. மொளகாய்க்கு என்ன தீனி வச்ச? என்று கேட்டவுடன் எருவு போட்டேன் புண்ணாக்கு தண்ணி, பிறகு பிஞ்சு நல்லா புடிக்குமுனு சொன்னாங்கனு பன்னி சாணி போட்டேன் என்றதும் கிழவர் பட்டென்று எழுந்து விட்டார். உன்னுடைய நிலத்தின் இந்நிலைக்கு நீயேதான் காரணம் என்று சொல்லி விட்டு அதான் வெர முதல்லுக்கு முகூர்த்தம் கோலிட்டீயே என்றார். அதற்கு உத்தண்டி குழப்பமாக கேட்டான்
 “என்னா பெரிப்பா சொல்றது ஒண்ணும் புரியலிய
 “ பன்னி சாணிதான் வெர முதலு”
 “ பன்னி சாணியா?”
“ஆமா பன்னி என்னாத்த திங்குது”
 “ஓட ஓடப்புல அலம்பும் அப்புறம்  முந்தரிக் கொட்ட நாளையில முந்திரி பழம்”
 “அப்பறம்”
“ எங்கையாவது கரம்பு கத்தாழையில கோரய நிண்டும்” அவனையும் அறியாமல் அவன் வாயிலிருந்து கோரை என்கிற வார்த்தை வந்ததும் மின்னல் வெட்டியது மாதிரி அப்படியே நின்று விட்டான். எங்கையாவுது கோரக்கெழங்க நிண்டன சாணிய அள்ளியாந்து போட்டிருப்ப அது மட மடன்னு கௌம்பிப் போச்சி, கோரன்னா சும்மாவா “ஆட்சா வைரம்”னு வரம் வாங்கி வந்ததாச்ச என்று சொல்லிக்கொண்டே போனார் செம்புலிங்;க கிழவர். மற்றவர்கள் சொல்வதை கேட்கும் அப்பாவி விவசாயிகளின் ஒட்டு மொத்த உருவமாக உத்தண்டி எனும் கதாப்பாத்திரம் உள்ளுக்குள் கலங்கியதை இப்புதினம் உணர்வுடன் உரைக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள்
           
    நிலத்தில் கோரை முளைத்ததால்; பூரணிக்கும் உத்தண்டிக்கும் தினமும் சண்டை வந்துகொண்டே இருந்தது.  விளைந்த மிளகாயை விற்கச் சென்றவன் வெறுங்கையோடு திரும்பியதை பார்த்த பூரணி “காலையில் சாப்பாட்டுப் பொட்டலம் எடுத்துக்கிட்ட போன பையி எங்க?”
“தே…இங்கதான் இருக்கு” கால்சட்டைப் பையில் மடக்கி வைத்திருந்த மஞ்சள் பையை வெளியே எடுத்தான்.
“என்னா,இது வெறும் பையா இருக்கு” ஏமாற்றமாய் கேட்டாள்.
“ஊம்.பத்து மூட்டைமொளா எடுத்துட்டு போனேன். வித்து கத்த கத்தையா பணம் வாங்கனேன்.அதுல பத்து முழம் பூவும், அரைகிலோ மிச்சரும் வாங்கியாந்து குடுக்கலங்கற. வெளியிலிருந்து வந்தான், ஒரு சொம்பு தண்ணிகிண்ணி சாய்ச்சிக் குடுக்கணும்னு அந்த யோசன கீசன இல்ல இப்பதான் வெறும் பையா இருக்குன்னு”கோபமாய் பேசியபடி குந்தினான். “ஆமா, நீ பத்து மொழம் பூவு வாங்கிட்டு வருவ சீவீச் சிங்காரிச்சி வைச்சிகிட்டு நிக்கலாம்னு இருக்கறன். என்னைக்கு ஒனக்கு வாக்கப்பட்டனோ அன்னையிலேர்ந்து ஒண்ணுமில்லாம பூட்டேன்”என்று அழுதாள். விவசாயிகளின் வீடுகளில் தினமும் நடக்கும் சிறுசிறு மனக்கசப்புகளை  வட்டார மொழியில் மனவலியுடன் எழுத்தாளர் எடுத்துக்கூறியுள்ளார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்         
    உழவர்கள் எனப்படுவோர் எப்போதும் தங்கள் விளைநிலத்தினைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்க வேண்டும் என்பதை

“பயந்த விளை நிலம் உள்ளும் உழவன்”(நாலடி-356)
            
என்ற நாலடியார் பாடலடி குறிப்பிடுகிறது.

“நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்”(நாலடி-179)
         
    உழவர்கள் கடினமாக உழைத்தாலும் நிலவளம் இன்றி பயிர்வளம் சிறக்காது  என  நாலடியார் குறிப்பிடுவதைப் போல, இப்புதினத்தில் வரும் உத்தண்டி கதாப்பாத்திரம் கடினமான உழைப்பாளி ஆனால்  சரியான நிலம் அமையவில்லை. அதனால் பொருளாதாரத்திலும் இல்லற வாழ்விலும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. விளைச்சல் அதிகமாகும் போது விலை குறைந்து விடுகிறது. விலை அதிகமாகும் போது விளைச்சல் குறைகிறது. உழவுத்தொழிலுக்கு மிக அவசியமானது நீர், அது குறையும் போது எப்பயிரையும்  விளைவிக்க முடியவில்லை. இதனை
 
“ மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை மழையும்”(நான்-48)
         
      என்னும் நான்மணிக்கடிகை பாடல் வழி அறிந்து கொள்ளலாம். ஊத்தண்டிக்கு சொந்தமாக கிணறும் இல்லை. பக்கத்து நிலத்தில் பயிர் வைப்பவரிடம் இருந்து; கிணற்று நீரை கடன் வாங்கி இறைத்தான். அதனால் விளையும் மகசூலில் முக்கால் பாகம் அவர்களுக்கே கொடுக்க வேண்டியிருந்தது. “என்னாத்த சொல்றது அந்த ஆளு அதிசயமா வாரத்தண்ணி வுடறான்னு நேரம் பார்த்து கேனக் கொண்டாந்து குடுக்கிறான். வித்தகாசி ஒரத்துக்கும் எண்ணெய்க்குந்தான் சரியா இருந்தது என்று; உத்தண்டி சொல்லும் வார்த்தைகள் நம்மை வருத்தப்பட வைக்கிறது.
 
“உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது”
        எனும் பழமொழியை நினைவுப்படுத்துகிறார் எழுத்தாளர்.

முடிவுரை
  
      இப்புதினம் நடுநாட்டில் ஓர் ஏழைக் குடியானவன் விவசாயத்தில் படும் பாடுகளை மண் மொழியில் கலைநயத்தோடு சித்திரிக்கும் புதினமாக விளங்குகிறது.  நிலத்தில்  முளைந்த கோரைகளை அழிக்க பன்றிகளை அழைத்து வந்து  மறுபடியும்  நிலத்தை வீணாக்கிவிட்டதை  எண்ணி உத்தண்டி வருத்தப்படுவதை படிக்கும் போது கண்களில் நமக்கு நீர் வருகிறது. மனித இனம் தோன்றிய போதே உழவுத்தொழிலும் தோன்றியது. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு மாற்றங்கள் அடைந்தாலும், நம் வாழ்வின் முக்கிய தொழிலாக இன்றும் இருப்பது உழவுத்தொழிலே. அத்தொழிலை மேலும் வளர்த்து விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக நம் நாட்டை ஒளிரச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். எனவே விவசாயிகளின் பெருமையையும் அவர்கள் படும் துயர்களையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து கூறும் வகையில் இதுபோன்ற நல்ல புதினங்களை எழுத்தாளர்கள்  படைத்தல் வேண்டும்.

துணை நூற்பட்டியல்
1.கண்மணிகுணசேகரன் – கோரை (புதினம்)

2.பதிப்பாசிரியர் குழு(கௌரா பதிப்பகம்)   – நாலடியார் மூலமும் உரையும்
3.பரிமேலழகர் உரை  – திருக்குறள்

4.ந.மு.வேங்கடசாமிநாட்டார்- நான்மணிக்கடிகை

Iniyavaikatral_Article_Publishedஆய்வாளர்  
சீ.விஜி

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)

கலைஞர் கருணாநிதி அரசுகலைக்கல்லூரி

ரிஷிவந்தியம்,கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
நெறியாளர்
முனைவர் ந.குப்புசாமி

முதல்வர்,
அரசுகலைக்கல்லூரி
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here