Vijayabaarathi|Dr.P.Senthilnathan

 Abstract
        The gentle Tamil charioteer Bharati, who aspired to nurture and guide the world through the power of song, had also reached great heights in prose—a fact that remains unknown to many even today. It can be understood that his essays function as explanations and extensions of his poetry. The themes of the articles he wrote in India, Vijaya, and Swadesamitran are strikingly original and invite critical debate. Even in his prose style, Bharati’s distinct individuality is clearly evident, particularly through his abundant use of satirical wit. This study is centred on the news articles written by Bharati himself in the Vijaya daily newspaper, which he personally edited and published.

“விஜயபாரதி”

முன்னுரை
    ‘பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் என்று விரும்பிய பைந்தமிழ்த் தேர்ப்பாகன் உரைநடையிலும் உச்சம் தொட்டு இருப்பது இங்கு பலரும் அறியாத ஒன்றாகும். கவிதைகளின் விளக்கமாக அவனது கட்டுரைகள் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. இந்தியா,விஜயா, மற்றும் சுதேசமித்திரனில் எழுதியுள்ள கட்டுரைகளின் பொருண்மைகள் விந்தையாகவும், விவாதத்திற்குரியதாகவும் அமைந்துள்ளன. கட்டுரை நடையிலும் பாரதி தனது தனித்தன்மையைக் குறிப்பாக அங்கதச் சுவை மிகுதி பட எழுதி உள்ளமையைக் காணமுடிகிறது. பாரதி தானே நடத்திய ‘விஜயா’ நாளேட்டில் எழுதியுள்ள செய்தியை மையப்படுத்தி இவ்வாய்வு அமைகிறது.

விஜயா
       “பாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு விஜயா” ஆகும் 1909-1910 இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிக்கைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத்தில் அவருடைய எண்ணங்களையும் மன ஓட்டங்களையும் படம் பிடித்து காட்டுகின்றது”.
இப்பத்திரிக்கையைக்கு எட்டு மாத காலம் ஆசிரியராக இருந்திருக்கிறார், பாரதியின் பத்திரிகைப் பணியில் இந்தியா வார இதழும், சுதேசமித்திரன் நினைவுக்கு வரும் வேளையில் விஜயா அறிமுகமில்லாத இதழாகும்.செல்லம்மாபாரதியின் ‘பாரதி சரித்திரம்’ மற்றும் வ.ரா.வின் ‘மகாகவி பாரதியார்’ இரண்டிலுமே இடம்றா இதழாகும்.
கால ஓட்டத்தில் வார இதழ்களும், மாத இதழ்களும் ஓரளவு தப்புவதற்கான சூழல் உண்டு. ஆனால் நாளேடுகள் தப்புவது  அரிதினும் அரிதாகும். ‘இந்தியா’ வின் அறுபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் ஏறத்தாழ 120 இதழ்கள் கிடைத்துள்ளன. விஜயாவின் நிலையோ தலைகீழ். மிக அரிதாகக் கிடைத்த இவ்விதழின் பகுதிகளைத்தேடி ஆ.ரா. வேங்கடாசலபதி பிரான்ஸ் வரை சென்று வந்திருப்பதாக தனது ‘விஜயா கட்டுரைகள்’ தொகுப்பு நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விதழ் முதலில் சென்னையிலேயே வெளிவந்திருக்கிறது. பிறகு புதுவையிலிருந்து வெளிவரத் துவங்கியுள்ளது. இவ்விதழும் இந்தியாவும் ஏறக்குறைய ஒரே செய்தியையே பிரசுரித்தன. விஜயாவின் ஆசிரியராக சி. சுப்பிரமணிய பாரதியே இருந்துள்ளார்.
”1908 அக்டோபர் முதல் 1909 மே வரை சென்னையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த விஜயா 1909 செப்டம்பரில் புதுச்சேரிக்கு இடம் மாறியது. இடையில் சில மாதங்கள் ‘விஜயா’ வெளியானதாகத் தெரியவில்லை. இந்தியாவைப் போலவே சென்னையில் பத்திரிக்கையும் (விஜயா) சர்க்கார் தலையீடு இன்றி நடக்க முடியாமல் போகவே அதுவும் புதுவை வந்தது” என்று ரா.அ.பத்மநாபன் குறிப்பிடுவதாக ஆ.ரா. வேங்கடாசலபதி தமது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
இத்துனை இடையூறுகளுக்கும், இன்னல்களுக்குமிடையில் வெளிவந்த விஜயாவில் இடம்பெற்றுள்ள செய்திகள் யாவும் சிந்தனைக்கும், பெரும் ஆய்விற்கும் உரியனவாகவே அமைந்துள்ளமையை உணர முடிகிறது. இவ்வாய்வுப்  பொருண்மையும் மிகுந்த சுவாரசியமானதே ஆகும்.

ஆய்வுப் பொருண்மை
       22 ஜனவரி 1910-இல் வெளியான இக்கட்டுரை அன்றைய சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தியாவில் அதிகரித்து வந்த ராஜரீக கொலைத் தொழில்களுக்கு முகாந்திரமாக ஸ்ரீமத்கீதை இருப்பதாகவும், மக்களை கொலை செய்யத் தூண்டும் விதமாக அமைந்துள்ளதாகவும் அதனால் ஸ்ரீமத் கீதையைத் தடை செய்ய வேண்டும் என்றும் ஆங்கிலேயர் இயற்றிய சட்டத்தை எதிர்த்தும் பகடி செய்தும் இக்கட்டுரை பாரதியால் எழுதப்பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

ராணுவச் சட்டம்
       இந்தியாவை ஏறக்குறைய நூற்றி ஐம்பது ஆண்டுகளாக ஆண்டு வந்த போதும், இந்தியர்களின் உண்மை நிலையை அவர்களால் அறிந்து கொள்ள இயலவில்லை. காரணம், பாரதமக்களைப் பார்ப்பதற்கு இடையூறாக கிழக்கு தேசத்தின் திரையானது தங்கள் கண்களை மறைத்துக் கொண்டு இருப்பதாக லார்டு மிண்டோ கூறுவதாகச் சொல்லும் பாரதி, இந்தியர்களின் என்ன நிலைமையை இவர்களால் அறிய முடியவில்லை? என கேள்வியும் எழுப்புகிறான். தங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை விளைவிக்க வேண்டும் என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால் இந்தியர்களின் குறை கண்களில் தென்படாது என்றும் கூறுகிறான்.
மேலும், ஆங்கிலேயர்கள் வெளியிலிருந்து வரும் எதிர்ப்பைக் கூட சமாளித்து விடுவார்கள். ஆனால், உள்நாட்டு கலவரங்களைச் சமாளிப்பது அவர்களால் இயலாத காரியம். குறிப்பாக, வங்காள மக்கள் ராஜரீக கொலைத் தொழிலில் ஈடுபடுவதற்குக் காரணம், விவேகானந்தரே என்றும் அவருடைய உபந்யாச நூல்களில் அரசுக்கு எதிரான செய்திகள் மலிந்து இருப்பதாகவும் ஆங்கிலேய நிர்வாகம் கண்டடைந்திருப்பதாகவும், அதுசமயம், விவேகானந்தர் தன்னுடைய நூலில் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டிருக்கும் நூல் எதுவென நோக்கினால் அது ஸ்ரீமத்கீதை என்பதாக ஆங்கிலேயர்கள் கண்டறிந்ததாகவும், ஆகவே அந்நூலானது ராஜ நிந்தனையான நூல் என்றும் கருதி விட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.
ஆகவே, வெளியிலிருந்து வெடிகுண்டு வீசுபவனை விட திரைக்குப் பின்னாலிருந்து அடுப்பங்கரையில் வெடிகுண்டு செய்யும் வங்காளப் பெண்களே அபாயகரமாணவர்கள் என்பதால் இவர்களை அடக்குவதற்காக ‘ராணுவச்சட்டத்தை’ ஆங்கில அரசு இயற்றியது. இதனை, ஆங்கிலோ-இந்திய பத்திரிக்கைகளும் உறுதி செய்தன. ஆகவே, இந்தியர்களைத் தூண்டிவிடும் உபந்யாசங்களைக்கூறும் ‘ஸ்ரீவிவேகானந்த சுவாமிகள்’ மீது அவர்களது துவேஷம் திரும்பியது.

ஸ்ரீமத் பகவத் கீதை
       உலக நன்மைக்காக ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு புனித நூல்கள் தோன்றியுள்ளன. அந்நூல்சார்ந்தும், அதனையொட்டியும், அவற்றை விளக்குமுகமாகவும் பல்வேறு நூல்களும் தோன்றிய வண்ணமேயுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இந்து மதத்தின் புனித நூலாக பகவத் கீதை போற்றப்படுகிறது. அதற்கு முந்தைய வேதங்களும், உபநிடதங்களும் மனித வாழ்விற்கான மேன்மைகளை, கொள்கைகளை, சிந்தனைகளைத் தத்துவங்காளாச் சொல்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த சாராம்சமாகவே ஸ்ரீமத் பகவத்கீதை விளங்குகிறது. இதன் உட்பொருளை அறிய வேண்டுமானால் இந்நூலின் தத்துவங்களையும், உண்மையான நோக்கங்களையும் கற்றறிந்த ஒரு நல்ல ஆசிரியரையடைந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
”பாரத நாட்டின் ஆத்ம ஞானம்; ஆத்ம சக்தி முதலானவற்றின் மேற்பிறையைக் கூட அறியமுடியாத இந்த ஆங்கிலோ-இந்திய பத்திரிகைகள் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸூஷமார்த்தங்களை  நமக்கு வெளியிட வந்துவிட்டன! என்ன அதிசயம்! மிஸ்ட்ரஸ் ஆனி பிஜான்டினிடம் கீதா அர்த்தங்களை கேட்பதைவிட ஆங்கிலேய இந்திய பத்திரிகைகள் கூறும் அர்த்தத்தை ஒப்புக் கொள்ளுதல் நலம் எனக் கருதுவாரும் நம்மில் ஒரு பகுதி யாருளர் என்கிறார்”.
பகவத் கீதை கூறும் தத்துவங்களை அறியாத ஆங்கிலேயர் அந்நூலை தடைசெய்ய நினைத்த அவர்களது மூடத்தனத்தைக் கண்டிப்பதோடு எள்ளி நகையாடவும் செய்கிறார். மக்களுக்கான வாழ்வியலை போதிக்கும் ஸ்ரீமத்கீதையைப் படிக்காமலும் படித்தவர்கள் இடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும் முற்றிலுமாக ராஜ நிந்தனை கருத்துக்களை அந்நூல் கூறுவதாக அபத்தமாக எண்ணிய ஆங்கிலேயரைச் சாடுகிறார்.

ஆங்கிலேயரும் ஸ்ரீமத் கீதையும்
          ஸ்ரீமத் கீதையை குறை கூறிய ஆங்கிலோ-இந்திய பத்திரிகைகளும் ஆங்கிலேயர்களும் கீதை குறித்து ஒரு சிறிதும் அறிந்தவர்கள் இல்லை. அன்றைய சூழலில் இந்தியாவில் வெடிகுண்டு வீசப்பட்டது ராஜரீக கொலை கொள்ளைகளும் நடைபெற்றதற்குப் பகவத்கீதையே காரணம் என்றது சுத்த மூடத்தனம் என்கிறார்.
”ஆரிய நாட்டினர்களுக்கடுக்காத இத்தகைய பயங்கரமான கொடும் செயல்கள் எல்லாம் யாருடையது? ஆரிய நாட்டினுடையதா ஸ்ரீமத் கீதையில் சொல்லி இருக்கிறதா என்பதைப்பற்றி நன்றாய் நினைத்து தங்களுடைய மார்பின் மீது கைவைத்துக்கொண்டு மல்லாந்தவாறு படுத்துக்கொண்டு இந்த ஆங்கிலோ-இந்திய பத்திரிகைகள் தங்கள் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளட்டும். உண்மை வெளிவரும். இந்த வெடிகுண்டு முதலிய கொடும் செயல்கள் எல்லாம் நமது பாரதநாட்டின் கேட்டிராத அநாரிக காரியங்கள்”.
ஆகவே, இந்திய மக்கள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அல்லல்பட்டு வந்த வேளையில், ஒரு சில சலுகைகள் கேட்டும் ஆங்கில அரசு செய்து கொடுக்காத காரணத்தினால் முன்யோசனையற்ற சிறுபிள்ளைகள் அன்னிய நாட்டில் நடைபெறுவது போல வெடிகுண்டுகளை பிரயோகித்தனர். இது நிச்சயம் கண்டிக்கத்தக்கதே. ஏனெனில் பாரத மக்கள் மிகவும் சாந்தமான வர்கள். அவர்கள் இதுமாதிரியான கொடுஞ் செயல்களைச் செய்ய ஒருபோதும் துணிய மாட்டார்கள். இருப்பினும் இந்த மாதிரியான செயல்களைச் செய்யத் தூண்டும் விதமாக அமைந்த ஆங்கிலேயரின் பாராமுகம் அடிமைத்தனம் ஆகும் என்பதை அறிய முடிகிறது.

ஸ்ரீமத் கீதை கூறும் உபதேசம்
             ஸ்ரீமத் கீதையானது குருஷேத்திர யுத்தகளத்தில் பார்த்தனுக்கு சாரதி சொன்ன உபதேசங்களேயாம். அவ்வுபதேசம் என்பது போர் பற்றியது மட்டுமன்று. அதையும் தாண்டி தத்துவங்கள், ஆத்ம சக்தி சூட்சமங்கள், வாழ்வியல் சிந்தனைகள் போன்ற பல்வேறு செய்திகளை விளக்கும் நூலாக அமைந்துள்ளது. மாறாக வெடிகுண்டு வைப்பது பற்றியெல்லாம் அது உபதேசிக்க வில்லை என்பதை தெளிவுறுத்தும் விதமாகவும் உண்மையில் என்ன காரணத்திற்காக கீதை உபதேசிக்கப்பட்டது எந்த சூழ்நிலையில் எந்த உத்திகளைப் போதிக்கிறது என்பது பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் பாரதி. ”ஸ்ரீமத் பகவத் கீதையானது குருஷேத்திரம் எனும் யுத்த பூமியில் பாண்டவ கௌரவ சேனைகள் இருபுறத்திலும் அணிவகுத்து சமுத்திரம் போல் நிற்கையில் உலகத்தைக் காத்து தர்ம பரிபாலனம் செய்ய வேண்டியதுதான் சத்திரியனுடைய கடமை. அதற்காக நீ யுத்தம் செய்து பகைவர்களை வென்று நாட்டிற்கு அரசனாகி பிரஜைகளை தரும நீதிமுறையில் பரிபாலனம் செய். இவற்றையெல்லாம் நீயாகவே செய்யும் காரியமல்ல கடவுள் கட்டளை என்ற சாத்வீக புத்தியுடன் யுத்தம் செய் என்று ஸ்ரீ பகவான் பணித்தார். சாம, தான, பேத, தண்டம் எனும் நான்கு உபாயத்தில் வனவாச, அஞ்ஞாத வாசமெனும் சாம உபாயமும், ஸ்ரீ கிருஷ்ணன் தூது எனும் தான உபாயமும், கர்ண அசுவத்தாமர்களை பரீட்சித்த பேத உபாயமும், தவறிப் போய்விட்ட பிறகு மகா சாந்த மூர்த்தியான ஸ்ரீ பகவான் நான்காவதான தண்டோபாயத்தைக் கொள்ளும்படி பாண்டவர்களுக்கு உபதேசித்தார். ஸ்ரீபகவத் கீதையில் அவனவனுக்கு ஏற்பட்டிருக்கும் தருமத்தை (காரியத்தை) அவனவன் கடவுள் தனக்கு விதித்திருக்கும் கடமை என்று சாத்வீக பக்தியுடன் அயலவர்களின் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும்  பொருட்செய்யாமல் செய்துவர வேண்டியது என்று சொல்லப்பட்டிருப்பது வாஸ்தவம்தான். பார்த்தனும் அப்படியே செய்தான். ஆனால் வெடிகுண்டு வகையறா சங்கதிகள் ஆங்கில, முதலிய ஐரோப்பிய நாடுகளின் துஷ்டவழக்கங்களில் ஒன்றே தவிர மாட்சிமை தாங்கிய பாரத நாட்டின் ஸ்ரீ பகவத் கீதையின் போதனையல்ல என்பதை நாம் உறுதியாக சொல்கிறோம்” என்று பாரதி பகவத் கீதை கூறும் உபதேசங்களை படம்பிடித்துக் காட்டுகிறார்.

முடிவுரை
        ஆங்கிலேய ஆட்சியின் ஒடுக்குமுறைகளுக்கும், பத்திரிக்கை தடை சட்டங்களுக்கும் இடையிலும் பல்வேறு இதழ்கள் ஸ்வதேசம் பேசின. பல வார மாத, இதழ்கள் அடக்குமுறைகளுக்காட்பட்டுக் காணாமலும் போயின. ஆனால் பாரதி நடத்திய விஜயா நாளேடு முடிந்த வரை தாக்குப்பிடித்து பல இன்னல்களுக்கு இடையிலும் தனது பணியைச் செவ்வனே ஆற்றி வந்ததை வரலாறு பறைசாற்றுகிறது. அதற்குச் சான்றாக பல்வேறு ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சென்று தேடித்தேடித் தொகுக்கப்பெற்ற ’பாரதி ’விஜயா’ கட்டுரைகள்’ என்ற நூல் திகழ்கிறது
ஸ்ரீமத் பகவத் கீதையை ஆங்கில அரசு தடை செய்ய முற்பட்ட சூழலையும், அதன் பின்னணியும், உண்மையில் கீதை கூறும் தத்துவங்களையும், ஆங்கிலேயர்களின் புரிந்து கொள்ள முயற்சிக்காத மூடத்தனத்தையும் ’ஸ்ரீமத் கீதையும் கொடுஞ் செயல்களும்’ என்ற கட்டுரையில் அங்கதச்சுவை தொனிக்க விவரித்துள்ளார் பாரதி. கவிதைகளால் மட்டுமே அறியப்பட்ட பாட்டுக்கொரு புலவன் கட்டுரைகளிலும் ஒளிந்துகொண்டு வார்த்தை விளையாட்டுகளை நிகழ்த்தியிருப்பதை இவ்வாய்வு மூலம் அறிய முடிகிறது.

பார்வை நூல்கள்
1.பாரதியார் கவிதைகள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், செம்பதிப்பு 1987.

2.ஆ. ரா. வெங்கடாசலபதி, பாரதி விஜயா கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், மறு அச்சு, அக்டோபர் 2006.

3.தமிழருவி மணியன்,கனவு மெய்ப்பட வேண்டும், விகடன் பிரசுரம்,757, அண்ணா சாலை, சென்னை-2 முதற்பதிப்பு, ஆகஸ்ட் 2011.

4.மு.ஸ்ரீனிவாசன், பாரதியின் பார்வையில், விகடன் பிரசுரம், அண்ணா சாலை, சென்னை-2 முதற்பதிப்பு, அக்டோபர் 2007.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப.செந்தில்நாதன்,

உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி),

பெரம்பலூர்-621 220.





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here