24 காரட் தங்கம்|ப.பிரபாகரன்| சிறுகதை

24 காரட் தங்கம்

            பிபு, தினமும் அதிகாலையில் எழுந்து சுமார் 2.5 கி மீ சுற்றளவுள்ள ஏரிக்கரையை சுற்றி நடைபயிற்சி செய்வது வழக்கம். அப்படி அவன் நடைபயிற்சி செய்து முடித்த பின் அந்தநாள் முழுவதும் அவனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் எல்லையே கிடையாது.

            இனிமையான காலையில் வீசிய இளந்தென்றல் காதோரம் “பொழுது விடியப் போகுது, எழுந்து வா! பிபு, வாக்கிங் போகலாம்” என்று மெல்ல பேசி அவனை தட்டி எழுப்பிவிட்டது. அவன் வழக்கம் போல் எழுந்து பெரிய ஏரிக்கரைக்கு வாக்கிங் போனபோது பொழுது முழுவதும் விடியவில்லை.

இயற்கையின் இசையைக் கேட்டு நடந்தபோது, இனிதே பொழுதும் விடிந்தது; சுமார் 1 கி மீ தூரம் வரை சாலையின் இடது புறமாகச் சென்று கொண்டிருந்தான். பின்னர் சாலையில் குறுக்கே ஒரு சிறிய பள்ளம் கண்களில் தென்பட்டது.  மேலும் அந்தப் பள்ளத்தில் நேற்று பெய்த மழை நீரும் சிறிதளவு தேங்கி இருந்தது.

பிபு, அந்த சிறிய பள்ளத்தைத் தாண்ட மறுத்துச், சாலையின் வலது ஓரமாக நடக்கலானான். அங்கிருந்து பத்து அடிகள்தான் எடுத்து வைத்து இருப்பான், அங்கே அழகான மொபைல் போன் ஒன்று, தன்னந்தனியே தனது உரிமையாளர் இல்லாது நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். வியர்வை வடிந்த அவன் முகத்தில் இருந்த இரு கண்களின் விழியில் ஒருவரும் தென்படவில்லை. அந்த மொபைல் போன் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று புதிதாக இருந்தது.

ஒரு வேளை எவரேனும் வேண்டுமென்றே இங்கே வைத்துவிட்டு, யார்? இந்த கிராமத்தில் நல்லவர். யார்? பிறர் பொருளின் மீது ஆசைப்படாதவர், என்று எவரேனும் இந்த அதிகாலையில் லைவ் ஷோ பண்ணுகிறார்களோ! என்னவோ? என்று நினைத்து, அதை அவன் எடுக்காமல் சற்று தயங்கி யோசித்துக் கொண்டு நின்றான். நிற்க,

(முன்பு ஒரு நாள் இது போலவே சிறப்பானதொரு சம்பவம் நடந்திருந்தது. ஒரு முறை அவன் மளிகை கடைக்கு நடந்து செல்லும் வழியில் ரூபாய் 20, ஒரு ஓரத்தில் கிடப்பதைக் கண்டான். அப்போது கடையில் வாங்கப் போகும் பொருட்களின் சிந்தனையில் சென்று கொண்டிருந்ததால், அந்தப் பணத்தை எடுக்க மறந்து கடையை நோக்கி சற்று முன்னோக்கி சென்றேன். அவனைத் தொடர்ந்து வந்த ஒரு நபர், எங்கே பிபு திரும்பி பார்த்து எடுத்து விடுவானோ! என்று நினைத்து வேக வேகமாக ஓடி வந்து அதை எடுத்து விட்டார். திடீரென்று அந்த இடத்திற்கு எதிர்புறம் இருந்த சிறுவர்கள், ஹே ஹேய், ஹேய்…… என்று கத்தி கூப்பாடு போட்டனர். என்ன நடந்தது? என்று திரும்பி அவர்களை பார்த்தபோது தான் எல்லாமே விளங்கியது.

சிறுவர்கள் கையில் கேமரா வைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின் சிறுவர்கள் அனைவரும் அந்த நபரை சுற்றி கூட்டமாக மொய்த்தனர். உண்மையில் அந்த நபர் செய்வதறியாது வெட்கித் தலைகுனிந்தார். “டேய்! உங்களுக்கு விளையாட விளையாட்டே இல்லையா! இது எல்லாம் ஒரு விளையாட்டா? என்று கடுகடுத்த குரலில் கூறி, கையில் எடுத்த 20 ரூபாயையும் கொடுத்து விட்டு அவ்விடம் இருந்து கிளம்பினார்.

ஜஸ்ட் மிஸ்… என்று முணுமுணுத்துக் கொண்டே அவ்விடம் விட்டு பிபு கிளம்பினான்.)

அன்று நடந்தது போல எந்த ஒரு சம்பவமும் நடக்காது என்று நம்பி, அந்த போனை எடுக்கலாம் என்று மனதிற்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் வரவழைத்து அந்த போனை எடுத்துப் பார்த்தான்.

உண்மையில் அது விலையுயர்ந்த மொபைல் போன் தான்!  அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் கூட இன்னும் நீக்கம் பெறவில்லை. அநேகமாக வாங்கி ஒரிரு மாதம்தான் இருக்கும் போல் தோன்றியது.

அடடா! யாருடையதாக இருக்கும் என்று தெரியவில்லையே! என்று யோசித்துப் பின்புறம் போட்டிருந்த கவரைக் கழட்டிப் பார்த்தான். அதில் ரெட்மி என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் அந்த கவரில் ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஒன்றும் இருந்தது. அந்த போட்டாவை நன்றாக உற்றுப் பார்த்து அந்த நபரை எங்காவது பார்த்து இருக்கிறோமா? என்று சிந்தித்தான்.

பிறகு போனின் முன்புறம் திருப்பிப் பார்க்க, ஐயோ! டிரா அன்லாக் பேட்டன் என்ற வாக்கியமும், அதைத் தொடர்ந்து 9 புள்ளிகள் 3X3 என்ற வரிசையில் இருந்தது. அதற்கும் கீழே, சற்று உற்று நோக்க, எமர்ஜென்சி கால் என்று மட்டும் இருப்பதைப் பார்த்து, அப்பா! முடியல, ஏன் தான் இப்படி லாக் போட்டு வச்சிருக்காங்கலோ, என்ன செய்வது? என்று தெரியாது திகைத்தான்.

அப்போதுதான் அதில் ஒரு மிஸ்டு கால் இருப்பதைக் கண்டான். அந்த நம்பருக்கு பிபு அவனுடைய போனில் இருந்து அழைத்தான். அவனது போனில் ட்ரு காலர் வசதி உள்ளதால் அந்த நபருக்கு போன் செய்தவுடன் ‘ஹரி ஹரி’ என்று காண்பித்தது.

ஹலோ! ஹரியா? தம்பி! நான் பெரிய ஏரிக்கரையில் இருந்து பேசுகிறேன். “உன்னுடைய பிரண்ட்ஸ் யாராவது போனை தொலைச்சுட்டாங்களானு, கொஞ்சம் கேட்டு சொல்லு. ஒரு போன் ஏரிக்கரையில் அந்த குமுளிக்கு பக்கத்திலே கிடந்தது. உன்னுடைய நம்பரில் இருந்துதான் கடைசியாக மிஸ்டு கால் வந்திருக்கிறது. உனது போனையும் கொஞ்சம் செக் பண்ணு. இந்த போன் போட்டோவும், அதில் இருந்த ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோவையும், போட்டா எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பி வச்சிருக்கிறேன். பார்த்துவிட்டு கூப்பிடு” என்றான் பிபு

ஆமாம். சொல்லுங்கண்ணா. அப்படியா! (பேசிகொண்டே வாட்ஸ் அப்ல பார்த்து விட்டு) அண்ணா! இது எங்க மாமாவோட போன் தான். எப்படி மிஸ் பண்ணினார் என்று தெரியவில்லை. நேற்று எங்கள் ஊர் திருவிழாவிற்கு வந்தார். திருவிழா முடிந்து இரவு முழுவதும் தங்கியிருந்து, அதிகாலையில் ஊருக்குத் திரும்பி சென்றார். எப்படி விழுந்தது என்று தெரியவில்லை. ரொம்ப நன்றிங்கணா! இப்ப எங்க இருக்கீங்க!”என்றான் ஹரி.

பிபு பெரிய ஏரிக்கரையில் ரோட்டு மேலே வெயிட் பண்ணுவதாகவும், அடையாளமாக அவன் தலையில் அணிந்திருந்த கருப்பு தொப்பியையும் கூறியதைக் கேட்டு ஹரி அண்ணே! இன்னும் 2 நிமிடத்தில் அங்கு இருப்பேன். தான்க்ஸ் ணா… என்றான்

அப்போதுதான் பிபுவுக்கு என்ன நடந்து இருக்கும்? என்று புரிந்தது. அவன் முன்பு இடப்புறமாக வாக்கிங் வந்தபோது இடையில் ஒரு சிறிய பள்ளம் இருந்தது அல்லவா! அதில் ஹரியின் மாமா வண்டியை விட்டு இருப்பார். அப்பொழுது அவரின் போன் தவறி விழுந்து இருக்க வேண்டும். மேலும் மழை பொழிந்து மண் தரை, பஞ்சு மெத்தை போல இருந்ததால், போன் விழுந்த சத்தம் கூட பாவம் அவருக்கு கேட்டு இருக்காது என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தான்.

இப்படி சிந்தனையில் ஆழ்ந்து இருக்க, மிகவும் வேகமாக வந்து சடெர்ர்ர்… என்று ப்ரேக் அடித்து ஒரு பைக் வந்து அவன் அருகே நின்றது. அந்த பைக்கில் வந்திருந்த பையனுக்கு சுமார் 12 வயது இருக்கும். தலை குளித்த ஈரம் கூட அந்த சிறுவனின் தலையில் காயவில்லை. தலைமுடி ஈரத்தாலும் வியர்வையாலும் சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் பூசிய திருநீறு லேசாக அழிந்து இருந்தது. மாமா தொலைத்துவிட்ட போனை எண்ணி சற்று பதற்றமாகவுமே இருந்தான்.

அண்ணே! “அது எங்க மாமாவோட போன் தான்! என்று ஹரி சொல்ல, அதற்கு பிபு நீ ஹரியா? தம்பி! என்றான்.

ஆமாம். “அண்ணே! வேணும்னா அந்த போன்ல இருக்கிற நம்பருக்கு இப்ப நான் போன் பண்ணுறேன்” என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் தம்பி சரியானவங்ககிட்ட கொடுக்கணும் இல்லயா! அதனாலதான் சும்மா கேட்டேன். இந்தா! போனை பிடி” என்று நீட்டினான் பிபு.

ஹரி போனை வாங்காமல் அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அண்ணே! இத பிடிங்கண்ணே! என்றான்

தம்பி! “என்னப்பா இது, இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாம அக்கம் பக்கத்து ஊர்க்காரங்க, இப்படி எல்லாரும் வந்து போகிற ரோட்டுல, எதையாவது யாராவது தொலைச்சுட்டால் நாம் தான் பொறுப்பு ஏத்துக்கணும் இல்லயா! அந்த ஒரு நல்ல எண்ணத்திலே தான் இதை செய்தேன்” என்றான் பிபு

ம்ம்… என்று தலையாட்டிவிட்டு எல்லாம் சரி தான் அண்ணே…ப்ளீஸ் இத வாங்கிக்கங்க! மத்தவங்க பொருளை திருடி வாழ்க்கை வாழ்வோர் இங்கு பலர் இருக்கின்றனர். கீழே தவறவிட்ட மத்தவங்க போனை திருப்பிக் கொடுக்கணும் என்று நினைக்க ஒரு பெரிய மனசு வேணும் அண்ணா! உங்களுக்கு நல்ல மனசு; நீங்க சுத்த தங்கம். ரொம்ப நன்றி அண்ணா!

18,000 ரூபாய் போன், நான் மாமாவுக்கு போன வாரம் தான் அமேஷான்-ல ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்தேன். என்ன சொல்வது? என்ன செய்வது என்றே தெரியவில்லை. உங்க நல்ல மனசுக்கு என்ன செய்றதுன்னு புரியல. இதைப் பிடிங்க ப்ளீஸ் என்றான்.

‘வேண்டவே வேண்டாம்’ என்று பிபு மறுத்து விட, ஹரி காணாமல் போய் கிடைத்த போனை வாங்கிக்கொண்டு முழுமனதோடும் மகிழ்ச்சியோடும் செல்லவில்லை. கைம்மாறாகக் கொடுத்த அந்த 100 ரூபாயை வாங்காததால் அரை மனதோடு அவ்விடம் விட்டு கிளம்பினான். ஒரு வழியாக பிபுவின் கண்களின் பார்வையில் இருந்தும் ஹரி மறைந்து போனான்.

பிபுவும் அடையாளத்திற்கு அணிந்திருந்த தொப்பியைக் கழட்டிவிட்டு ஏதோ பெரிய சாதனை செய்தது போல பெருமகிழ்ச்சியோடு அவ்விடம் விட்டு கிளம்பினான். அப்போது அவனது பாதத்தில் அந்த நூறு ரூபாய் தாள் லேசாக உரசி, ‘நான் உனக்குத்தான்’ என்று உணர்த்தியது. அய்யய்யா, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த பணத்தை கீழே போட்டுட்டு போயிட்டான். இப்படி பண்ணினால் நாம எடுத்துக்கிட்டு போயிடுவோம் என்று நினைத்து விட்டான் போல முட்டாள் என்று முணுமுணுத்துக்கொண்டு ஹரிக்கு போன் பண்ணினான். ‘தாங்கள் டயல் செய்த எண் இப்போது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது’ என்றது. அடக்கடவுளே! இப்ப என்ன செய்றது? என்று யோசித்துக்கொண்டே ஹரி சென்ற பாதையை நோக்கினான் பிபு.

ஹரி மறைந்த அந்த பாதையில் இருந்து மீண்டும் ஒரு பைக் வருவதைக் கண்டான். ஒரு வேளை திரும்பி வருகிறானோ என்று நினைத்து உற்று நோக்கினான். ஆனால் அதில் வந்தவன் அந்த பையன் இல்லை. பதினைந்து வயது மதிக்கத்தக்க வேறொரு சிறுவன், பைக்கின் பிரேக்கை வேகமாக அழுத்தி அவன் பிபுவுக்கு முன்னே அருகில் வந்து நின்றான்.

அவன் வண்டியில் இருந்து இறங்கி, “அண்ணா!, நீங்க தானே இப்போ, கொஞ்ச முன்னாடி எனக்கு போன் பண்ணி, எங்க மாமா போன் கீழே கிடப்பதை எடுத்து, பத்திரமாக வச்சு இருக்கிறதா இன்ஃபார்ம் பண்ணுனீங்க!”என்றான்.

ஐயோ! ஆமாம்ன்னு சொன்னா, போன் எங்கன்னு கேட்டு நம்மல பிடிச்சுக்குவானே! அது நான் இல்லன்னு சொன்னா, நம்ம மனசாட்சி நம்மல படுத்துமே என்று யோசித்துக் கொண்டு, நாம ஒருத்தருக்கு போன் பண்ணினா இன்னொருத்த வந்து வாங்கிட்டு போயிட்டானே! அது எப்படி சாத்தியமாகும்? இப்படியெல்லாம் கூட ஏமாத்தலாமா? ஐயோ! முடியலடா சாமி. சுத்த தங்கமா இருந்தா ஒன்னுக்கும் உதவாதோ? நல்லதுக்கே காலம் இல்லடா. என்று நினைத்து ஒரு கணம் விழி பிதுங்க விழித்தான்.

சிறுகதையின் ஆசிரியர்,

ப.பிரபாகரன், இலால்குடி

மேலும் சிறுகதைகள் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here