பெருந்தாயம் விளையாட்டு – ஒரு பார்வை

            கிருஷ்ணகிரி வட்டாரம் காடுகள் நிறைந்தப் பகுதியாகும். இப்பகுதியில் கால்நடை வளர்ப்புத் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலை மேற்கொள்ளும் ஆடவர்கள், வேளாண்மையில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள, நாட்டுப்புற விளையாட்டுகளுள் சில விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இவ்விளையாட்டைப் பெருந்தாயம் விளையாட்டு என்று கூறுகின்றனர். இவ்விளையாட்டை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆராயப்படுகின்றது.

பெருந்தாயம் விளையாட்டு

            தமிழ் நாட்டுப் பாரம்பரிய விளையாட்டுகளுள் முக்கியமானது தாயம் விளையாட்டு. தாயக் கட்டத்திற்கு எதிரெதிரே ஆண்கள் அமர்ந்து, தாயக்கட்டையை உருட்டி விளையாடுவர். இவ்விளையாட்டு ஆண்களுக்குரியது. இவ்விளையாட்டைப் பொழுது போக்கிற்காகவும் விளையாடுகிறார்கள். தற்பொழுது பந்தயம் கட்டியும் விளையாடுகின்றனர். இதைப் பங்காளி விளையாட்டு என்றும், சூது, தாயம் என்றும் கூறப்படுகிறது. தாயம் விளையாட்டுத் தமிழர்களின் மரபு சார்ந்த விளையாட்டாகும். இவ்விளையாட்டுத் தமிழரின் எண்ண ஓட்டத்திற்கும், அறிவுக் கூர்மைக்கும் பயன்படும் விளையாட்டாகவே திகழ்கிறது.

தாயம் – சொற்பொருள் விளக்கம்

            தாயம் என்ற சொல்லுக்கு அகராதிகள் பின்வருமாறு விளக்கங்களைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, “தாயமாடுதல் – கவறாடுதல், சூதாடல்”1 என்று செந்தமிழ் அகராதியும், 

                                    “சூதாடு கருவி – தாயக்கட்டை

                                    சூதாடல் – சூது விளையாடல்

                                    சூதாட்டம் – தாயம் விளையாடல்

                                    சூதாட்டம் – கவறு உருட்டியாட்டம்

                                    சூதுகாரன் – சூது விளையாடுபவன்”2

என்றெல்லாம் கதிர்வேற்பிள்ளை அகராதியும் பொருள் தருகிறது.

விளையாட்டுக்களம்

            தாயம் விளையாட்டு ஆண்களுக்குரியது. சில நேரங்களில் வீட்டில் இருக்கும் பெண்களும், வீட்டிற்குள் தரையில் கோடுகளை வரைந்து விளையாடுகிறார்கள். வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண் தொழிலாளர்கள், மதிய உணவிற்குப் பின் ஓய்வு நேரங்களில், நிலத்தின் அருகில் இருக்கும் பாறை மீது கட்டங்களை வரைந்து இவ்விளையாட்டினை விளையாடுகின்றனர். சிற்றூர்களில் ஊரின் நடுவே தாயாட்டம் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. “ஊரிலுள்ளவர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களும் உட்கார்ந்து ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள தட்டையான கல்லுக்குப் பெயர் சகுனிகல் என்பதாகும். சகுனிக்கல் எனப் பொருள் வரக் காரணம், சகுனி என்பவர் மகாபாரதத்தில் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்தவர். அதனால், தாயாட்டத்தை விளையாடுவதற்குச் சகுனிக்கல் பலகையை அமைத்திருப்பர்”3 என்பது ஆய்வாளர் கருதுகிறார். இது எப்பொழுதும் அழியாத தழும்பாகவே இருக்கக்கூடும். இக்களத்தைச் சுற்றியும் வேப்பமரம், அரசமரம், ஆலமரத்தையும் நிழழுக்காக வளர்ப்பர். இவ்விடத்தில்  பெரியவர்கள், ஆடவர்கள் பகல் பொழுதில் ஓய்வு நேரங்களில் தாயம் விளையாட்டை விளையாடுகின்றனர்.

தாயம் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள்

            பருவச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு காடுகளிலும், மலைகளிலும், நிலத்திலும் வளரக்கூடிய மரம், செடிக் கொடிகளில் கிடைக்கப்பெறும் காய்களையும், விதைகளையும் தாயம் விளையாட்டிற்குப் பயன்படுத்துகின்றனர். “கிருஷ்ணகிரி வட்டாரத்தில் சுண்டைக்காய், கலாக்காய், புங்கங்கொட்டை, முத்துக்கொட்டை (ஆமணக்கு காய்) சூட்டுக்கொட்டை, வெங்கலிசாங்கல், குண்டுக்கல், ஆட்டுப்புலுக்கை ஆகிய பொருட்களைத் தாயக் கட்டத்தில் நகர்த்துவதற்குக் காய்களாகப் பயன்படுத்துகின்றனர்”4 என்பது களாய்வில் அறியமுடிகிறது.  மேலும், தாயம் விளையாட்டை விளையாடுவதற்கான, கட்டங்களை வரைய கோவை இலை, அவரை இலை, செங்கல், சுண்ணாம்புக்கட்டி, மாவுக்கல் சுண்ணக்கட்டி (சாக்பிஸ்), திருநீறுகட்டி ஆகிய பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இப்பொருட்கள் அனைத்தும் எளிதாகக் கிடைக்கின்ற பொருட்களாகும். இவ்விளையாட்டிற்கு எல்லா இடத்திலும் மேற்கண்ட பொருட்களைக் கொண்டு வரைவதில்லை. விளையாடும் இடத்தில் மேற்கண்ட பொருட்களுள் எளிதாகக் கிடைக்கும். ஒரு பொருளைக்கொண்டு கட்டத்தை வரைந்து கொள்கின்றனர்.

தாயக்கட்டை வடிவங்கள்

            தாயக் கட்டையைக் கையில் உருட்டி விளையாடுவதற்கு ஏற்ப, வயதிற்கு ஏற்றார் போல பெரியது, சிறியது எனக் கட்டையை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

கட்டம் அமைக்கும் முறை

            தாயம் விளையாட்டை விளையாடுவதற்குக் கட்டம் வரையப்படுகின்றது. தாயம் விளையாடுவதற்குத் தாயக் கட்டையே முதன்மையாகின்றது. முதலில், நடுவில் ஒரு சதுரமாகக் கட்டத்தை வரைந்து கொள்வர். அதனுள் மையப் புள்ளியை வைத்து, நான்கு புறமும் நான்கு செவ்வகங்கள் வரையப்பட்டு, செவ்வகங்களை நீளவாட்டில் மூன்று கட்டங்களாகவும், அகலவாட்டில் ஆறு கட்டங்களாகவும் கோட்டை கட்டத்தைப் போட்டுக்கொள்வார்கள். தாய் மலையில் பெருக்கல் குறியீட்டை செய்து வரைந்து கொள்வர். பின்பு கீழ்மலை, மூலைமலை, கோடிமலைகளில் பெருக்கல் குறியீடுகளை வரைவர்.

தாயம் விளையாடுவோர் எண்ணிக்கை

            தாயம் விளையாட்டில், நபர்களை இரண்டு, நான்கு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் அமர்த்தி, இரு அணியாகப் பிரித்து விளையாடுகின்றனர். ஒற்றை படை எண்ணிக்கையில் அமரக் கூடியவர்கள் ஒரு குழுவாகவும், இரட்டை படை எண்ணிக்கையில் அமரக்கூடியவர்கள் எதிரணியினராகவும் தாயக் கட்டத்தில் அமர்ந்து விளையாடுவர்.

இருவர் விளையாடுதல்

            இருவர் மட்டும் விளையாடும் விளையாட்டை இருவர் விளையாட்டு என்கின்றனர். அதாவது விளையாடும் பொழுது இருவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிராக அமர்ந்து விளையாடுவதாக இவ்விளையாட்டு அமையும்.

நான்கு பேர் விளையாடுதல்

            ஓர் அணிக்கு இரண்டு நபர்கள் விகிதம், இரண்டு அணிக்கும் மொத்தம் நான்கு நபர்கள் விளையாடுவர். ஓர் அணியாகவும், மற்றோர் அணியாகவும் அமர்ந்து விளையாடுகின்றனர். அவ்வாறு விளையாடுகின்றபொழுது அணித்தலைவராகவும் செயல்படுவர். இவர்களே கட்டத்தில் உள்ள காயை நகர்த்துகின்றனர். சில சமயம் அவரவர் அணியினரின் அறிவுரையின் பேரில் நகர்த்துகின்றனர்.

ஆறுபேர் விளையாடுதல்

            ஓர் அணிக்கு மூன்று நபர் வீதம் இரண்டு அணிக்கு ஆறு நபர்கள் விளையாடுகின்றனர். ஒரு குழுவில் உள்ள அணியில் மூன்று நபர்கள் விளையாடும் பொழுது, அவர்களுள் ஒரு நபர் தாயக்கட்டையை உருட்டி தாயம் போட்டுத் தன் பக்கம் உள்ள மலைக் கட்டத்தில் காயை இறக்குவர். அதே குழுவில் உள்ள மற்ற இரண்டு நபர்கள் தாயம் போட்டு, முதல் நபர் காயை இறக்கிய கட்டத்தில் அதே மலைக் கட்டத்தில் காயை இறக்குவர்.

            அதேபோல் அணியில் மூன்று நபர்கள் விளையாடும்பொழுது மூன்று நபர்களுள் ஒரு நபர் தாயக் கட்டையை உருட்டி தாயம் போட்டுத் தன் பக்கம் உள்ள மலை கட்டத்தில் காயை இறக்குவார்.

பெருந்தாயம் விளையாட்டுக்கு காய்களைப் பயன்படுத்தும் முறை

                        ஒருவர் கட்டையை உருட்டும் போது தாயம் விழுந்தால் மீண்டும் அவரே தொடர்ந்து தாயக் கட்டையை உருட்டி விளையாட வேண்டும். இதேபோல் ஐந்து, ஆறு, பன்னிரண்டு என்ற எண்ணிக்கை விழுந்தால் மீண்டும் அவரே தாயக் கட்டையை உருட்டி விளையாட வேண்டும். தாயக் கட்டையை உருட்டும் போது இரண்டு, மூன்று, நான்கு என்று குறைவான எண்கள் விழுந்தால் புள்ளிகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு காயை நகர்தி விட்டு, எதிரணியினருக்குத் தாயக் கட்டையை விட்டு விட வேண்டும். மறுபடியும் கட்டையை எடுத்து உருட்டக் கூடாது. இது இரு குழுவுக்கும் பொதுவான விதிமுறையாகும்.

விளையாடும் முறை

            இரண்டு அணியினரும் தாயக் கட்டத்திற்கு எதிரெதிரே அமர்ந்து விளையாடும் பொழுது முதலில் யார் தாயக் கட்டையை உருட்டுவது என்பது முக்கியமல்ல, முதலில் தாயம் போடுவது யார் என்பதுதான் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒருவர் தாயக் கட்டையை உருட்டியதும் தாயம் (ஒன்று) விழுந்தால்தான் காயைத் தாய் மலையில் இருந்து இறக்கவேண்டும்.

            இரு அணியினரும் தாயம் போட்டு, ஒவ்வொரு காயையும் உரிய மலையில் இறக்கி, வலது புறமாகக் கட்டத்தில் சுற்றி வரவேண்டும். 2,3,4,5,6,12 என்று விழுகின்ற எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிட்டுக் கட்டத்திற்குள் காய்களை முன்னேற்றிக்கொண்டே செல்லும் போது, இரண்டு அணியினருடைய காய்கள் முன்னும் பின்னுமாக நகர்ந்து, இரு அணியினரின் காய்கள் சந்திக்கும் இடத்தில் வெட்டப்படுகின்றன. ஆனால், இரண்டு அணியினரும் தங்கள் காய்களை வெட்டப்படாமல் பாதுகாத்துத் தாண்டி தாண்டி, வெட்டுக்குக் கொடுக்காமல் விழுகின்ற எண்ணிக்கையைப் பொருத்துத் தந்திரமாகக் கட்டத்திற்குள் காய்களை நகர்த்திக் கொண்டு பழம் எடுக்கின்றனர். ஓர் அணியினர் ஆறு காய்களையும் பழம் எடுத்துவிட்டால், அந்த அணியினர் வெற்றி பெற்றவர்களாவர். எதிர் அணியினர் தோல்வியடைந்தவராவர். தாயம் விளையாடுவதற்கு வரையப்பட்ட கட்டத்தில், வரையப்பட்டுள்ள கட்டங்களுக்கு 1. தாய் மலை அல்லது தாய் வீடு 2. கை துவைதல் அல்லது காய் இறக்குதல் 3. கிழ் மலை 4. மூலை மலை 5. கோடி மலை 6. தொக்கை மலை (அல்லது) பழம் மலை என்றெல்லாம் பெயர் சூட்டப்படுகின்றன.

1. தாய் மலை (அ) தாய் வீடு

            கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தாய் மலையைத் தாய் வீடு என்று அழைக்கின்றனர். இவ்விளையாட்டில் அனைத்துக் காய்களையும் இறக்குமிடத்திற்குத் தாய்மலை (அ) தாய்வீடு என்று கூறப்படுகிறது.

2. கை துவைதல் (அ) காய் இறக்குதல்

            தாயம் விளையாட்டில் கை துவைதல் அல்லது கை தொய்தல் என்ற வட்டாரச் சொல் வழக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.  ஒருவர் தாயக் கட்டையை முதன் முதலில் உருட்டி விளையாடும் போது 4,5,6,12,2,3 என்ற எண்கள் நீண்ட நேரம் விழுந்து கொண்டேயிருந்தால் அவருக்கு விளையாடுவதற்குத் தகுதி இல்லை. முறையாக ஒரு புள்ளி விழும் போதுதான் அவர் தாயம் விளையாடுவதற்குத் தகுதி பெறுகிறார். தாயம் (ஒன்று) விழுந்தால் மட்டும்தான் காய் துவைதல் என்கின்;றனர்.

3. கீழ் மலை

            தாயம் போட்டுக் காயைத் தாய் வீட்டிலிருந்து வெளியேற்றி வரும்போது 6 ஆவது கட்டத்தையும், 20 ஆவது கட்டத்தையும், 34 ஆவது கட்டத்தையும், 48 ஆவது கட்டத்தையும் கீழ் மலை என்று அழைக்கின்றனர்.

4. மூலை மலை

            தாயம் போட்டுக் காயைத் தாய் வீட்டிலிருந்து இறக்கி நகர்த்தி வரும்போது 13 ஆவது கட்டத்தையும், 27 ஆவது கட்டத்தையும், 41 ஆவது கட்டத்தையும் மூலை மலைகள் என்று அழைக்கின்றனர்.

5. கோடி மலை

            தாயம் போட்டுக் காயைத் தாய் வீட்டிலிருந்து இறக்கி நகர்த்தி வரும்போது 55 ஆவது கட்டம் கோடி மலையாகும். காயை இறக்கும் தாய் மலைக்கு இடது பக்கமாக இருக்கும் மலையைக் கோடிமலை என்று கூறப்படுகிறது. கோடி மலையை மூலை மலை என்றும் அழைப்பர். 6. தொக்கை மலை

            தொக்கை மலை என்பதைப் பழம் மலை என்றும் அழைப்பர். இம்மலையில் எதிர்பாராத விதமாக 67 ஆவது கட்டத்தில் காய் இருந்தால், தாயம் போட்டுத்தான் காயை எடுக்க முடியும். இல்லையென்றால் தொக்கையிலே காய் உட்கார்ந்துவிடும்.

தாயாட்டம் தெரிவிக்கும் செய்தி

            தாயம் விளையாட்டுக் கட்டத்தில் மனித சமுதாயத்தின் பிறப்பும், இறப்பும் ஆகிய இரண்டும் அறிவுறுத்தப்படுகின்றன. பிறந்த பின்பு நல்ல அறங்களையும், ஒழுக்க நெறிமுறைகளையும் கற்றுக் கொள்வதற்குப் பாட போதனையாகவும் தாயம் விளையாட்டு அமைகிறது. மனித சமூகத்தில், ஒருவன் பலவிதமான இன்னல்களையும் வெற்றித் தோல்விகளையும் மாறி மாறி அனுபவிக்கின்றான். இதனைச் சந்திக்கும் போக்கு வளர்த்தெடுக்கப்படுகிறது. ஒருவரை உயர்த்தி பேசுவதும், தாழ்த்தி பேசுவதும் குறைகளைச் சுட்டிக்காட்டுவதும், நிறைகளை மேன்மைப்படுத்துவதும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதும், மீண்டும் ஓரிடத்தில் சேருவதும் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்கின்ற மனித குலப் போராட்டங்களைத் தாயம் விளையாட்டுத் தெரிவிக்கிறது. இவ்விளையாட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விளையாட்டாக இருந்தாலும், சிற்றூரில் வாழக்கூடியவர்கள், விவசாய தொழிலை நம்பி வாழ்கின்றனர். அவர்கள் நிலத்தில் வேலை செய்து விட்டு, ஓய்வான நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் போன்றோர் ஒன்றிணைந்து தாயம் விளையாட்டை விளையாடுகின்றனர்.

முடிவுரை

            இவ்விளையாட்டுப் பொழுது போக்கிற்காகவே இக்காலத்தில் விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டு, மனிதனைப் பக்குவப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் அமைகின்றது. அதே சமயத்தில் மக்களின் ஒற்றுமையை புலப்படுத்தவும் வலுப்படுத்துவதாகவும் மனம் மகிழ்ச்சி, சகோதரத்துவம் வளர்க்கும் விளையாட்டாக அமைகிறது. இந்த விளையாட்டுக் காலத்தை கடந்து நிற்கும் வகையில், மேன்மேலும் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியதாகின்றது.

சான்றெண் விளக்கம்

1.          செந்தமிழ் அகராதி, ப.344

2.          நா.கதிரைவேற்பிள்ளை அகராதி, ப.687

3.          நேர்காணல், மகாலிங்கம், வயது – 68, ஏரிக்கொல்லை, நாள் : 26.01.2019

4.          மேலது. நாள் : 26.01.2019

ஆசிரியரின் பிறக்கட்டுரை

1.சிறுதாயம் விளையாட்டு

கட்டுரையின் ஆசிரியர்

ம.ஆத்மலிங்கம்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி,

ஓசூர் – 635 130,

தொலைபேசி எண் : 9943259247,

gmail: aathmalingam1977@gmail.com

Leave a Reply