கார்காலக் குளிரும்! மார்கழிப் பனியும்!! |கோ.ஆனந்த்|சிறுகதை

கார்காலக் குளிரும்! மார்கழிப் பனியும்!!

வாழ்க்கை மிக எளிதானது.கணவன் மனைவி ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகள்.அன்றாடத்திற்கு உணவு உடை உறைவிடம். இவற்றைப் பெற ஏதோ ஒரு நேர்மையான சம்பாத்தியம். இது மட்டும் போதும் என்று இருந்தால், வாழ்க்கை சுகமானது மகிழ்ச்சியானது. ஆரோக்கியத்துடன் நிம்மதியான உறக்கம் கைகூடும்.

“ஓ இது மட்டும் போதுமா?”

இப்படி கேட்க ஆரம்பிப்பதில் தான் எல்லோருக்கும் வாழ்க்கையின் கடின பக்கங்கள் புரட்டப்படுகின்றன. விமல்ராஜூக்கும் அப்படித்தான் புரட்டப்பட்டது.

“சும்மா இருக்கிற வேலையிலேயே உட்கார்ந்துகிட்டிருந்தா எப்படி? நாலு இடம் அலைஞ்சு திரிஞ்சாதானே ஒரு நல்ல வேல கிடைக்கும்.எல்லாத்துக்கும் எங்க வீட்டையே எதிர்பார்த்துக்கிட்டிருக்க முடியுமா? நாளைக்கு பாப்பாவுக்கு கல்யாணம் பண்றதுக்கு கூட எங்க அப்பாவையே கேக்க முடியுமா?” மல்லிகா ஒருநாள் குழந்தையைத் தூளியில் ஆட்டிக்கொண்டே கேட்டாள்.

விமல்ராஜுக்கு சுருக்கென்று தைத்தது. தனிக்குடித்தனம் சந்தோஷமாகத் தான் இருந்தது குழந்தை பிறக்கும் வரை. குழந்தை பிறப்புக்கும் வளர்ப்புக்கும் மாமனார் வீட்டைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அதுவரை இருவருக்கும் எதேஷ்டமாக இருந்த சம்பளம்,மாதக் கடைசியில் வேகவேகமாகக் கரைய ஆரம்பித்தது.

மாமனார் நல்லவர்.ஒரு பெண் ஒரு பையன்.பெண்ணுக்கு கல்யாணம் முடித்துப்  பிள்ளைப் பேற்றையும் பார்த்து விட்டார். பிள்ளை படித்துக் கொண்டிருக்கிறான். அவன் வேலைக்குப் போய் திருமணமாகும் வரை நிச்சயமாக எந்தக் குறையும் சொல்லாமல் பெண் குடும்பத்தையும் சேர்த்து தாங்குவார் தான். ஆனால் அதுவரையிலும் அவர் தலையிலேயே தங்கள் சுமையை இறக்கி வைத்திருக்க முடியுமா?.

அதுவரை யோசிக்கப்படாத மற்ற அத்தியாவசியத் தேவைகள் ஒவ்வொன்றாய் தலை தூக்க ஆரம்பித்தன.ஏதாவது தொழில் தொடங்கலாமென்றாலும் அதற்கும் மாமனார் தலையைத் தான் உருட்ட வேண்டியிருக்கும். விமல் ராஜின் பெற்றோர் ஊரில் விவசாயம் செய்து தங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்கிறார்கள். இவனை சல்லிக்காசு கேட்பதில்லை. அதற்கே அவன் சந்தோஷப்பட்டாக வேண்டும். அவர்களைப் போய் தொழில் தொடங்க பணம் கேட்பது எரிகிற வீட்டில் பிடுங்குவது போலத் தான்.

கிராமத்து வளர்ப்பு, மாமனாரிடம் போய் நிற்பது கேவலம் என்று இடித்துச் சொன்னது.மல்லிகாவும் பொறுமைசாலி தான்.ஆனால் பிற்காலத்தை நினைத்து இப்போதே கணவனைத் தயார் படுத்த ஆரம்பித்து விட்டாள்.

ஆச்சு. ஆறுமாதமாகி விட்டது குழந்தை பிறந்து.இன்னும் ஆறு மாதம் மாமனார் பார்த்துக் கொள்வார்.அப்புறம்?கணவன் மனைவி இருவரும் தனித்து இயங்க வேண்டும்.இவன் அலுவலகம் செல்ல வேண்டும்.அவள் குழந்தையையும் பார்த்துக்கொண்டு அன்றாட வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுகூட சமாளித்து விடலாம்.துண்டு விழும் குடும்ப பட்ஜெட்டை எப்படி சரி செய்வது.?’

விமல்ராஜுக்கு நினைக்க நினைக்கத் தலை சுற்றிற்று.குடும்ப பாரம் என்பது புரிய ஆரம்பித்தது.அவனுக்கு அப்போது தெரிந்த ஒரே வழி சென்னையிலிருக்கும் நண்பன் ஜெயராஜைத் தொடர்பு கொள்வது தான்… கொண்டான்…

ஜெயராஜ் பால்ய சிநேகிதன். “பார்த்துக்கலாம் வா” என்று தைரியம் சொன்னான்.

மேகங்கள் சூழ்ந்த ஒரு மழை நாளில் விமல்ராஜும் சிங்காரச் சென்னையில் கால் பதித்திருந்தான்.சென்டிரல் ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து திருவல்லிக்கேணி சேவல் பண்ணை மேன்ஷன்களில் ஒன்றின் முன் வந்து இறங்கினான்.

இவன் வருகைக்காகவே வெளியில் கைகளைக் குறுக்காக கட்டியபடியே ஜெயராஜ் காத்துக்கொண்டிருந்தான்.

“வாடா விமலு, புள்ளகுட்டிக்காரனாயிட்ட. எல்லாம் எப்படியிருக்காங்க?”

“சௌக்கியன்டா ஜெயா.நீ என்ன இப்படித் துரும்பா கெடக்க?”

“என்னடா பண்றது.வேல அலச்சல்தான். வா மேல ரூமுக்கு போவோம்”.

“காஞ்சிப் பட்டுடுத்தி..கஸ்தூரி பொட்டும் வச்சு” …பக்கத்து அறையில் பாடல் மெல்லியதாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

“விமல் அப்படியே குளிச்சு முடிச்சு வா.போய் சாப்பிட்டு வருவோம்.சீக்கிரமா போனாத்தான் மெஸ்ஸில சாப்பாடு கிடைக்கும்”

மெஸ்ஸில் சாப்பிட்டு முடித்து விட்டு, வீட்டை அழைத்து வந்து சேர்ந்த விவரம் தெரிவித்தான். மேன்ஷன் வந்து அமர்ந்தவுடன் விமல் ராஜ் ஆரம்பித்தான்.

“ஜெயா,உன்ன நம்பித்தான், இருக்கிற வேலய விட்டு கெளம்பி வந்துட்டன். ஏதாவது பாத்து சீக்கிரம் பண்ணுடா.”

“டேய் வந்த ஒடனே ஆரம்பிச்சிட்டியா. டிரெய்ன்ல சரியா தூங்கியிருக்க மாட்ட.உன் விவரம் எல்லாம் அவர் கிட்ட சொல்லியிருக்கேன்.நாளைக்கு எனக்கு லீவுதான்.பொறுமையா போய் பாத்து பேசவோம்.இப்பப் படுத்து ரெஸ்ட் எடு”

“சரிடா.ஆமா காலைலே கேக்கனும்னு இருந்தேன்.வரும்போதே குளுகுளுனு குளிர் காத்து.இப்ப என்னடான்னா ரூமுக்குள்ளாறயே இப்படி குளிருது.என்னடா ஆச்சு உங்க சென்னைக்கு?”

“அட ஆமாடா.இது எல்லாருக்குமே புதுசா இருக்கு. இது மழக்காலமா இருந்தாலும் எப்பவும் மார்கழில தான் குளிர் அதிகமா தெரிய ஆரம்பிக்கும்.இப்ப கார்த்திக தான் நடக்குது. அதுக்குள்ளாறயே குளிரடிக்குது. அதுவும் நடுப்பகல்லயே. ஏதோ அடமழ வரப்போவுதுன்றானுங்க. ஆனா ஒண்ணயும் காணோம்.குளிரு தான் அடிக்குது.இந்தா போர்வ.இத போத்திகிட்டு படுத்துக்க.நல்ல வேள.நீ வந்த நேரம் பக்கத்து பெட் அன்வர் பாய் ஊருக்குப் போய்ட்டாரு .இல்லன்னா உனக்கு வேற மேன்ஷன்ல தான் இடம் பாத்திருக்கனும்.”

ஜெயராஜ் கொடுத்த போர்வையைப் போர்த்தி சென்னைக் குளிரை(!!!) அனுபவித்தவாறே கண்ணை மூடித் தூங்க முயற்சி செய்தான்.

பக்கத்து அறையில் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…” என்று யேசுதாஸ் உருகிக் கொண்டிருந்தார்.அப்படியே நினைவுகளிலாழ்ந்தான் விமல்.

இப்படியாகப்பட்ட ஒரு கார்காலம் தான் அவர்கள் பாப்பா உருவாகக் காரணமாயிருந்தது. கோயம்புத்தூர் பக்கமிருந்த மல்லிகாவுடைய அத்தை வீடு அது. மல்லிகாவின் சித்தப்பா மகள் திருமணத்திற்கு சென்றிருந்த அவர்கள், திருமணத்திற்கு முந்தைய இரவு அந்த அத்தை வீட்டில் உறங்கச் சென்றிருந்தனர்.

இருந்த ஒற்றைப் படுக்கையறையை புது மணத்தம்பதிகளான இவர்களுக்குக் கொடுத்துவிட்டு அத்தைக் குடும்பம் ஹாலில் படுத்துக் கொண்டது.

விமல்ராஜ் குளிரால் இழுத்துப் போர்த்து சுருண்டுக் கொண்டிருந்த மனைவியை சுரண்டினான்.

“சும்மா இருங்க.எங்க வந்து,..இப்ப யார் வீட்ல இருக்கோம்?”.

“யார் வீட்ல இருந்தா என்ன,ரூம்ல தான இருக்கோம்?”

“இருந்தாலும் அவங்க படுக்கை இது”

“இதுவும் படுக்கை தான”.

வாய்கள் தான் பேசிக் கொண்டிருந்தன சற்று நேரத்தில் பேச்சு அடங்கியது.

அடுத்த நாள் காலை மல்லிகா ரூம் கதவைத் திறக்க அதற்காகவே காத்திருந்த அத்தையின் கணவர்,அவசர அவசரமாய் சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு “உங்க அத்த ரொம்ப நேரமா கதவத் தட்டிப் பாத்தாமா.நீங்க எழுந்துக்குற மாதிரி இல்ல.அதனால என்ன இருந்து சாவிய குடுத்துட்டு வரச் சொல்லிட்டு பசங்களும் அவளும் கிளம்பி மண்டபத்துக்குப் போய்ட்டாங்க.நானும் கிளம்பறேன்.நீங்களும் சீக்கிரம் கிளம்பி வாங்க.முகூர்த்தத்துக்கு நேரமாயிடுச்சி” என்றபடி அவசர அவசரமாய் வெளியே சென்றார்.

மல்லிகாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.அவசரஅவசரமாகக் கணவனை எழுப்பி,இருவரும் கிளம்பி மண்டபத்துக்கு போய் சேரவும்,கெட்டி மேளம் ஒலிக்கவும் சரியாக இருந்தது.அங்கிருந்து திரும்பிய அடுத்த மாதமே மல்லிகா கருவுற்றிருப்பதாகப் பரிசோதித்த மருத்துவர் சொன்னார்.

அன்றிலிருந்து விமலுக்கு மனைவியை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால்,” கோயம்புத்தூர் ஒருதரம் போய்வருவோமா?” என்று கண்ணடிப்பான். மல்லிகா வெகுண்டு கையில் கிடப்பதைத் தூக்கி அவன் மேல் எறிவாள்.

நன்றாகத் தூங்கி எழுந்து மறுநாள் நண்பர்கள் இருவரும் கிளம்பிப் போய் அரபு நாடுகளுக்கு ஆளனுப்பும் ஏஜன்ட் செல்வத்தை சந்தித்தனர்.

“வாப்பா ஜெயா.இவர்தான் நீ சொன்னவரா?”

“ஆமா செல்வம் அண்ணே.பாத்து சீக்கிரம் அனுப்பி வைங்க.”

“ஜெயா எல்லாம் சொன்னார் தம்பி. போனாக்கா ரெண்டு வருசமாவது இருந்தாவனும்.வேல கஷ்டமா இருக்கு.பொண்டாட்டி புள்ளயப் பாக்கனும்னு கிளம்பி வந்துடக் கூடாது.அதுக்கு சரின்னா அடுத்த வாரமே எல்லாம் ஏற்பாடு பண்ணிரலாம்”.

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லீங்க.போயி கொஞ்சம் காசு தேத்திகிட்டு வந்தா போதும், அப்புறம் கடை கண்ணி வெச்சி பொழச்சிக்கலாம்னு பாக்கிறேன்.”

“எல்லாம் அப்படி சொல்லித்தான் போறாங்க.ஆரம்பம் தான் கஷ்டம்.ஒருதடவை இருந்துட்டு வந்துட்டா அப்புறம் இது புலி வால புடிச்ச கத தான்.மறுபடி எங்கிட்ட தான் வந்து நிப்பாங்க.சரி பாஸ்போர்ட், ஃபோட்டோ எல்லாம் குடுத்துட்டு ஊருக்கு போறதானா போய்ட்டு வாங்க.நான் எல்லாம் ரெடிபண்ணிட்டு ஜெயா கிட்ட சொல்லி அனுப்பறேன்”.

“இல்லண்ணே ஒரு வாரம் தானே.இங்கேயே இருந்துடறேன்.நீங்க ரெடி பண்ணிட்டு சொல்லுங்க.”

“அப்ப சரி .போயிட்டு வாங்க”

ஜெயாவும் விமலும் மேன்ஷன் வந்து சேர்ந்தனர்.

“செல்வம் நல்லவருடா.எப்படியும் அடுத்த வாரம் உன்ன பிளேன்ல ஏத்தி விட்ருவாரு பாரு.அன்வர் பாயத் தான் கொஞ்சம் சமாளிக்கனும்”

“அன்வர் பாய எதுக்குடா சமாளிக்கனும்?”.

“அவரும் என்கிட்ட தான்டா வேலைக்கு ஏற்பாடு பண்ண சொல்லியிருந்தாரு. நானும் செல்வம் கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். இந்த வருசம் இன்னும்  ஒரே ஒரு ஆள் தான் அனுப்பமுடியும். பாக்கலாம்னு சொல்லிகிட்டிருந்தார். அப்ப தான் நீ போன் பண்ணி புலம்பின.

அன்வரும் அவசரமா ஊருக்கு போகனும்னு புறப்பட்டு போய்ட்டாரா.. அதனால அந்த வேலய உனக்கு குடுக்கச் சொல்லி செல்வம் கிட்ட சொல்லிட்டேன். அன்வர் வந்தா அடுத்த வருசம் போயிடலாம்ணே ன்னு சொல்லி சமாளிக்கனும்.”

“ரொம்ப தாங்க்ஸ்டா நானும் இந்த வருசம் போய்ட்டு வந்தா தான் திரும்பி வந்து செட்டிலாக சரியா இருக்கும்.”

மறுநாள் செல்வம் எல்லா நடைமுறைகளும் அந்த வாரத்தில முடிந்து விடும் என்றும் அடுத்த திங்கள்கிழமை கிளம்ப வேண்டியிருக்கலாம் என்றும் சொன்னார்.விமல், மல்லிகாவிற்கு போன் பண்ணி சொல்ல அவளும் சந்தோஷமடைந்தாள்.குழந்தையைக் கூட்டிக்கொண்டு ஏர்போர்ட் வருவதாகச் சொன்னாள்.ஆனால் விமல் சென்னையின் சீதோஷ்ண நிலையைப் பற்றிச் சொல்லி வரவேண்டாமென சொல்லி விட்டான்.

“இந்த மழக்காலம் வீணாப்போச்சு மல்லிகா.இரண்டு வருஷம் கழிச்சு வந்தவுடனே கோயம்புத்தூர் அத்தையப் பாத்துட்டு வந்திடலாம்”. மறுமுனையில் மல்லிகா “உங்கள ..” என்று சிணுங்கினாள்.

விதியைப்பற்றி பலர் பலவிதமாய் கூறுவதுண்டு.எல்லாம் விதிப்படிதான் என்பார் சிலர்.விதியை மதியால் வெல்லலாம் என்பார் சிலர்.விதி வலிது ஆனால் மதியால் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்பார் மற்றும் சிலர். ஆனால் யாரும் விதியைக் குறைத்து மதிப்பிட விரும்புவதில்லை.

அன்வர் பாய் மறுநாளே சென்னை வந்து சேர்ந்திருந்தார்!!!.ரூமுக்குள் நுழைந்து தன் கட்டிலில் அமர்ந்திருந்த விமலைக் கூட கவனிக்காமல்,ஜெயாவைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி” “ஜெயா செல்வம் சார் என்ன சொன்னார்?”என்பது தான்.

ஜெயா ஏதும் பதிலளிக்காமல்,”வாங்க பாய்.என்ன விஷயம்? வந்ததும் வராததுமா செல்வம் சாரப் பத்தி கேட்கிறீங்க” என்றான்.

உள்ளே வந்த அன்வர் விமலைப் பார்க்க,பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர்.

“ஜெயா நா இங்கிருந்து போனேன் இல்ல,அதுக்கு காரணமே என் தங்கச்சி ஆயிஷா தான். ரொம்ப நாளா அவளுக்குத் தள்ளி போயிட்டிருந்த கல்யாணம் முடியற மாதிரி இருக்கு.ஆனா மாப்பிள்ளை வீட்ல கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கு.எங்க வாப்பா அதெல்லாம் நம்ம சக்திக்கு அதிகம் வாணாம்னு சொல்லி வருத்தப்படறாரு. நான் தான் ஒரு வருஷம் பொறுத்துக்கோங்க, எப்படியாவது நீங்க எதிர்பார்க்கிறத செஞ்சிடறோம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். எப்படியும் இந்த தடவ செல்வம் அனுப்பிருவாரு இல்ல.அவரத்தான் மலபோல நம்பியிருக்கேன்.” என்று கலங்கினார்.

ஜெயாவும் விமலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.ஜெயா ஒன்றும் பேசாமல் மௌனம் காக்க, விமல் தான் அன்வருக்கு ஆறுதல் சொன்னான். “கவலப் படாதீங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்.நாளைக்கே செல்வம் சாரப் பாத்துப் பேசிடலாம்.”

ஜெயா திடுக்கிட்டு விமலைப் பார்க்க, விமல் ஆமாம் என்பதாய் தலையசைத்து ஜெயாவின் கைகளை அழுத்தினான்.

பக்கத்து அறையில் யேசுதாஸ் மயங்கி(க்கி)க் கொண்டிருந்தார். “கார்காலக் குளிரும்

மார்கழிப் பனியும் ….

கண்ணே உன் கை சேரத் தணியும்…’

 

மேலும் பார்க்க,

1. தூவானம் (சிறுகதை)

 

Leave a Reply