அரிவட்டாய நாயனார் புராணம்

அரிவாட்டாய நாயனார்

அரிவட்டாய நாயனார்


            சோழநாட்டிலுள்ள கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் நாயனார் ஆவார். செல்வந்தராகத் திகழ்ந்த அவர் சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். நாள்தோறும் சிவபிரானுக்கு அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்.


            நாயனாரின் பக்தியை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்ட பெருமான், நாயனாரின் செல்வம் அனைத்தையும் கரையச் செய்தார். தாயனார் தன் நிலங்களையெல்லாம் விற்று இறைவனுக்கு அமுது படைத்தார். வறுமையுற்றார்.


            இருப்பினும் சிவனுக்கு அமுது படைக்கத் தவற வில்லை. கூலிக்கு நெல்லறுக்கச் சென்றார் நாயனார். கூலியாகக் கிடைக்கும் செந்நெல் முழுவதையும் பெருமானுக்கே படைத்தார். கார் நெல்லை மட்டுமே தான் உண்டார்.


            நாளடைவில் கார் நெல் கிடைக்காமல் போயிற்று. தாயனார் பட்டினிக் கிடந்தார். கணவர் பசியோடிருக்கப் பொறுக்காத அவர் மனைவியார் தோட்டத்திலுள்ள

            கீரைகளைப் பறித்து சமைத்துத் தந்தார். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. தோட்டத்தில் கீரைகளும் தீர்ந்தன. பின் வெறும் நீரை மட்டும் அருந்தினார் தாயனார். அதனால் அவரது உடல் மெலிந்து பலகீனமானது. இருந்தும் இறைவனுக்கு செந்நெல் படைப்பதிலிருந்து விலகாது நின்றார் தாயனார்.


            ஒருநாள் வழக்கம்போல் செந்நெல்லும், செங்கீரையும், மாவடுவையும் தாங்கிய கூடையோடு ஆலயத்தை நோக்கிச் சென்றார் தாயனார். மனைவியாரும் பஞ்ச கவ்ய கலயத்தோடு அவரைப் பின் தொடர்ந்து சென்றார். அது கோடைக்காலம் ஆனதால் வழியெங்கும் நிலம் வெடித்து, பிளந்து நின்றது.


தேகம் மெலிவுற்றிருந்த நாயனார், வழியில் தடுமாறி விழப்போனார். அதைக்கண்ட மனைவியார், கலயத்தோடு கணவரைத் தாங்கிப் பிடித்தார். இருப்பினும் தாயனாரின் கூடையிலிருந்த செந்நெல்லும் மாவடுவும், தரையெங்கும் சிதறியது. நெல்மணிகள் நிலத்திலிருந்த வெடிப்புகளினுள் புகுந்தன.


            அதைக்கண்ட தாயனார், “சிவபிரானுக்கு செந்நெல் படைக்க முடியாத நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?” என்று கூறியபடியே கத்தியால் தன் கழுத்தை அறுக்கத் தொடங்கினார்.

அக்கணம், நிலத்திலிருந்த வெடிப்பினுள், இறைவர் மாவடுக்களைக் கடிக்கும் ஒலி கேட்டது. மறுகணம் பெருமான், கழுத்தை அறுத்த கையைத் தடுத்தார். தாயனரும் அவரது மனைவியாரும் சிவகருணையை எண்ணி மெய் சிலிர்த்தனர். தாயனாரின் கழுத்தும் முன்போல் ஆனது.

            அந்நேரம் சிவபிரான் உமையன்னையுடன், இடப வாகனத்தில் தோன்றினார். “அன்பனே! வறுமையில் எமக்கு அமுதூட்டத் தவறாத நீயும் மனைவியாரும் என்னை அடைவீர்களாக!” என்று வாக்கருளினார். தாயனரும், அவரது மனைவியாரும் சிவபதம் சென்றடைந்தனர்.


            இறைவனுக்காகத் தன் கழுத்தை அறுக்க துணிந்ததால், தாயனார் அரிவட்டாயர் என்ற பெயர் பெற்றார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

Leave a Reply