விடியாத இரவு |சிறுகதை|முனைவர் கை.சிவக்குமார்

          கரு கும்மென்று இருட்டு. இரவு இரண்டு மணி இருக்கும்.  மாயவன் பணி முடித்துவிட்டு விடியற்காலை இரண்டுமணி பேருந்திற்காகக் காத்திருந்தான்.
அவன் ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்குச் செல்லவேண்டும். அதற்காக ஒசூர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தான்.

அவன் சற்று வித்தியாசமானவன். தனியார் பேருந்தில் ஏறுவதைவிட அரசு பேருந்தில் ஏறுவதை மிகவும் விரும்புவான். அதற்குக் காரணம் உண்டு. அரசு பேருந்து என்றால் சொகுசாக உறங்கிக்கொண்டு செல்லலாம், தனியார் பேருந்தில் கூட்டம் அதிகம். இரண்டு ஆள் அமரவேண்டிய இடத்தில் மூன்று பேர் உட்கார வைப்பார்கள். மக்கள் கூட்டத்தை அடுக்குவார்கள்.

ஆனால் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போல  தனியார் பேருந்துதான் கிருஷ்ணகிரி செல்ல தயாராக இருந்தது. அரசு பேருந்து சற்று நேரத்திற்கு முன்புதான் சென்றிருக்கிறது. 

இரவுதானே பஸ்ல கூட்டம் ஒன்னும் இருக்காது என்று ஏறிவிட்டான். வேலைக்குப் போன அலுப்பில் “சீட்டுப் புடுச்சி உக்காந்திட்டு நல்லா தூங்கிட்டுப் போகலாம்” என்று பார்த்தால் இடமும் இல்லை ஒன்றும் இல்லை.. கீழே இறங்கிடலாமென்று நினைக்கும்போது பேருந்தை எடுத்துவிட்டார்கள். ‘சரி என்ன பண்றது. அடுத்த பஸ் வரதுக்குள்ளார கொஞ்சநேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா வீட்டுக்கே போயிறலாம்’ என்று நினைத்தான்.

சுற்றும் முற்றுமாக பார்த்தான். அமர்வதற்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று. டிரைவருக்கு பக்கத்தில் இருக்கும் இன்ஜின் மேல் யாரும் உட்காரவில்லை.

இதுதான் சமயமென்று மியுசிக்கல் நாற்காலியில் அமர்வதுபோல் ஓடி போய் உட்கார்ந்து கொண்டான். படியில் இருந்தவர்கள் மட்டும் சிலர் “யாருடா ராத்திரியில நின்னுகிட்டே ஒருமணிநேரம் போறது”என்று இறங்கி கொண்டார்கள்.

கண்டக்டர்  பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வரும் வரை கிருஷ்ணகிரி…. கிருஷ்ணகிரி ….எனக் கூவிக்கொண்டே வந்தார்.

மாயவன் ஒருவழியாக எஞ்சின் சீட்டு கிடைத்த சந்தோசத்தில் பயணிகளைப் பார்த்ததுபோல் அமர்ந்துவிட்டான். பயணிகள் அனைவருக்கும் நந்திபோல இவன் அமர்ந்திருந்தான்.

ஓட்டுநர் பஸ்சை எடுத்த உடனே வேகம்தான். மாயவனுக்கு கொஞ்சம் பயந்த சுபாவம். ‘இன்னைக்கு கத முடிஞ்சிது’ என நினைத்தான். அவ்வளவு வேகம். கொஞ்சதூரம் தான் அப்படி வேகமாக வந்தார். அதற்குப் பிறகு வழக்கம் போலதான்..

டிக்கெட்… டிக்கெட் என்றபடியே கண்டக்டர் வந்தார். முன் இருக்கையில் இருந்து ஆரம்பித்தார். டிக்கெட்…டிக்கெட்… என்ற சப்தம்… வண்டி நகரத்தொடங்கியது…. “சில்லரைய எடுத்து வச்சிக்கோங்க.. இராத்திரியில என்ன இம்ச பண்ணாதிங்க…” என்ற குரலோடு முதல் பயணியிடம் “எங்கப் போகனும்” என்றார்.

பயணி ஒருவர், “என் வீட்டுக்குத்தான் போகனும்” என்றார். கடுப்பான கண்டக்டர் “சுடுகாட்டுலதான் இறக்கிவிடப்போறேம் பாரு” என்றார்…

வாயை மூடிய பயணி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்துக் கிருஷ்ணகிரிக்கு ஒரு டிக்கெட் கேட்டார்…  டிக்கெட்டின் பின்புறம் எதையோ கிறுக்கினார். அதை பயணியிடம் கொடுத்துவிட்டு ”மீதியைக் கிருஷ்ணகிரி பஸ்டாண்டில் வந்து வாங்கிக்கோ” என்றார். வாய் பேசாமல் தலையசைத்த பயணி ‘மீதப்பணத்தை எப்படி வாங்குவது’ என்ற கவலையில் உறங்க முடியாமல் தவித்தார்.

கண்டக்டர் கிருஷ்ணகிரிக்கு 34 ரூபாய் டிக்கெட் போக மீதி ஆறு ரூபாய் சில்லறையை கொடுப்பது இல்லை. அதனால் பயணிகள் எல்லோரும் அவர்கள் பையில் இருக்கும் சில்லறை காசுகளை எல்லாம் தேடி பிடித்துச்  சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்க தொடங்கினார்கள்.

டிக்கெட் வாங்கியவர்கள் காசையும், டிக்கட்டையும் பத்திரப்படுத்திக்கொண்டு ஜன்னல் ஓரமாக தலையைச் சாய்த்துக்கொண்டார்கள். சீட்டின் நடுவில் உட்கார்ந்திருந்தவர்கள் தன் கையில் வைத்திருந்த பையைக் கட்டிபிடித்துக்கொண்டு தலையை அப்படியே சாய்த்துக்கொண்டார்கள். உறங்கிய வேகத்தில் சிலர் கும்பகர்ணனையே மிஞ்சினார்கள். சிலர் தவளை கத்துவதுபோல் குறட்டைவிடத்தொடங்கினர்.

கம்பி ஓரமாய் இருந்தவர்கள் கம்பிக்குள் கையை விட்டு கம்பி மேல் சாய்ந்துகொண்டார்கள்.சிலர் தூங்கி அருகில் இருந்தவர்கள் மீது விழுந்தார்கள். வாயில் இருந்து விழும் எச்சில் ஆடையை ஈரமாக்கியதுகூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர் சிலர்.

“டிக்கெட் எடுக்காதவங்க யாராவது இருந்தா டிக்கெட் வாங்கிக்கோங்க” என்றார் கண்டக்டர். அதைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. பயணிகளைச் சரிபார்த்து தான்கொடுத்த டிக்கெட்டும் சரியாக இருக்கிறதா எனச் சோதித்துப் பார்த்துக்கொண்டார்.

சில்லரை பாக்கி வேண்டும் என்றனர். கண்டக்டர் “இறங்கும்போது தர்றேன்”என்று கூறிவிட்டு கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் முடிந்தவரையில் கொடுக்கவேண்டிய சில்லரைகளைக் கொடுத்துவிட்டார். ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கவில்லை.

பேருந்தில் நின்று பயணித்தவர்கள் மட்டும் காதில் எதையோ விதவிதமாக மாட்டிக்கொண்டு மொபைல் போனை பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தூக்கம் வந்தாலும் வேறுவழி இல்லை.தூங்கிதூங்கி விழுந்து கொண்டுதான் இருந்தார்கள். முடியாத சிலர் உட்கார்ந்து கொண்டார்கள்.

சீட்டில் உட்க்கார்ந்திருந்த சில இளசுகள் பேஷ்புக், இன்ஷ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் தவழ்ந்தனர். சிலர் அவர்களுக்குப் பிடித்திருந்த சினிமா படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பேருந்தில் இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலியினுடைய வரிகளை எஸ்.ஜானகி அம்மாவும், மலேசியா வாசுதேவனும் “நிலா காயுது நேரம் நல்ல நேரம், நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்” என்ற பாடலை மென்மையாக ஒலிபெருக்கி வழியே ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.

டிரைவர் அதிக ஒளிதரும் விளக்குகளை அணைத்து விட்டு நீலவண்ண விளக்கை மட்டும் லேசாகத் தெரிவதுபோல வைத்திருந்தார். அதிக வெளிச்சம் இல்லாததால் ஆட்கள் இருப்பது தெரியும். முகம் தெரியாது. இதனால் சிலருக்கு இல்லை பலருக்குப் பேருதவியாக இருந்தது.
 
குறிப்பாக அதில் சிலர் இன்பமாக உறங்கினர். சிலருக்கு அதுவே இன்பமாகக் கூட இருந்தது.

மாயவனுக்கு கொட்டாவி வந்தது.. தூங்கி விழுந்தால் டிரைவர் ஏதாவது சொல்வாரோ என நினைத்தான். தன் மொபைலை எடுத்து ஏதாவது நோண்டலாம் என நினைத்தான்.

அந்த நேரம் பார்த்து படியின் ஓரத்தில் உள்ள “மாற்றுத்திறனாளிகள் அமருமிடம்”என்ற இருக்கைக்கு கீழே அரும்புவிடும் மீசையை உடைய பையனும், காமக்கண்களையுடைய பெண்ணும் அமர்ந்திருந்தனர். வயது சுமார் பதினெட்டு, பத்தொன்பது இருக்கும். அவர்கள் இருவரும் பேருந்தில் யாரும் இல்லை என எண்ணியதுபோல இருந்தனர்.

இருவரும் நீல ஒளியில் ஒரே நிறமாகத்தான் தெரிந்தனர். அவர்கள் இருவரும் காதலர்கள் என்பதற்கு அடையாளமாக இருவர் அமரும் அந்த இருக்கையில் ஜன்னல் ஓரமாக அந்தப்பெண் அமர்ந்திருந்தாள். அவளது வலதுகை விரல்களை அவன் இடதுகை விரல்களால் கோர்த்து இருக்கமாய் பிடித்திருந்தான். அந்த இளம் வெளிச்சம் அவர்களின் காதல் சுகத்திற்கு ஏதுவாக அமைந்திருந்தது.

அவன் பெண்ணின் காதில் ஏதோ “குசு குசு” எனக் கூறினான். பெண்ணின் முகத்தில் புன்சிரிப்பு. அவன் தன் பையில் வைத்திருந்த நூறுரூபாய் மதிப்பிற்கும் மேலேவுள்ள  சாக்லேட்டை எடுத்து அவளிடம் கொடுக்கிறான்.  அதை வாங்கியதும் அந்த பெண்ணுக்கு ஆனந்தம். இருவருக்கும் தான். அவன் மடியில் அவள் சாய்கின்றாள். அவள் கன்னங்களை வருடியவாரே காதோரம் பேசுவது போல முத்தங்களை இடுகிறான் சத்தமில்லாமல். யாராவது பார்த்துவிடுவார்கள் என்ற அச்சம் அவனுக்குச் சிறிதும் இல்லை.  அந்தப் பெண்ணும் அதை ஏற்றுக்கொள்வதைப் போல எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

இதை பார்த்த உடன் மாயவனுக்கு ஒரே அறுவறுப்பு. பேருந்து, மக்கள் கூட்டம் என்றுகூட அவர்கள் பார்க்கவில்லை. பொதுவெளியில் இப்படி அசிங்கமாக நடந்துகொள்கிறார்களே. இதனால்தான் நாட்டில் மழை பெய்யவில்லையோ!. சகித்துக்கொள்ள முடியாத மாயவன் “மூதேவிகளா! பஸ்னு கூட பாக்காம என்ன பண்றீங்க. வெட்கமா இல்ல. உங்க வீட்ல செய்ய வேண்டியதெல்லாம் இங்க செய்ரீங்க. ஆளும் மூஞ்சியும் பாரு” என்றெல்லாம் திட்ட நினைத்தான். “எல்லோரும் பாத்துட்டு சும்மா தான இருக்காங்க.. நமக்கு எதுக்குடா வம்பு” என்று வாய் பேசமுடியாமல் தன் மனதின் ஆதங்கத்தை அடக்கிக்கொண்டு வெளியில் பார்க்கலாம் என்று திரும்பினான். அவன் கண்ணில் கக்கிருட்டுதான் பட்டது. இருந்தாலும் அதையாவது பார்க்கலாம் எனச் சிந்தனையை மாற்றினான்.

காதலரை துன்பப்படுத்துவது போல பயணிகளின் பின் இருக்கை பக்கமாக இருந்து சத்தம் வந்தது. அதைக் கேட்டதும் மாயவன் தன் பார்வையைச் செலுத்தினான். அதேபோல் காதலன் மடியில் படுத்திருந்த பெண்ணும் சத்தம் கேட்டு எழுந்து திரும்பிப் பார்த்தாள். அதற்குள் பேருந்து சூளகிரியைக் கடந்துவிட்டது.

அவர்கள் மட்டுமல்ல பேருந்தே சத்தம் வந்த பின்பக்கத்தைத் திரும்பி பார்த்தது. பாதி தூக்கத்தில் இருந்தவர்கள் கூட விழித்துக்கொண்டார்கள். சொர்க்கம் அடைந்தவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை.

ஆடி 18 விழாவுக்குச் சொந்த ஊருக்குச் செல்வதற்காகத் தன்குடும்பத்துடன் கூலித் தொழிலாளி செல்கிறார். அவர் மது பருகியதால் ஏதோ தவறுதலாகப் பேச … பின்சீட்டில் இருந்த ஒரு குடும்பத் தலைவர் நல்ல முறையாக, “லேடிஸ்லாம் இருக்காங்க தப்பா பேசாத” என இரண்டு வார்த்தை சொல்லியிருக்கிறார். குறிப்பாக ஆபாச வார்த்தைகள் பேசவேண்டாம் என எச்சரித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் குடிமகனுக்கோ உள்ளுக்குள் இருந்து ஆபாச  வார்த்தைகளே வந்துகொண்டு இருந்திருக்கிறது.

கோபம் கொண்ட, பின் சீட்டுக்காரர் எழுந்து அவர் தலைமுடியைப் பிடித்து ஆட்டி, கொட்டு வைத்திருக்கிறார். தலையைத் தேய்த்தபடி முறைத்துப் பார்த்து ஏதோ வாய்க்குள் முனங்கியபடி இருந்துள்ளார்.

குடிமகனின் மனைவி தன் கணவனிடம், “அசிங்கப்படுத்தாதீங்க” என தன் கணவனை அமைதிப்படுத்திப் பார்க்கின்றாள். மனைவியின் பேச்சை தட்டாதவன்போல் சில நிமிடங்கள்  அமைதியாக இருந்தான்.

பேருந்து அமைதியானது. நின்று கொண்டிருந்தவர்கள் நமக்கு என்ன ? எனத் தன் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். காதல் ஜோடியும் மீண்டும் தனது லீலைகளைத் தொடங்கினர்.
           
அவன் மடியில் அவள் படுத்துக்கொள்ள இரவு வெளிச்சம் அவர்களுக்கு இன்பமாக இருந்தது. படிக்கட்டில் கண்டக்டர் அவருடைய நண்பருடன் அமர்ந்திருந்தனர்.
 
ஆனால் காதலர்கள் அதைப் பற்றி கண்டு கொள்ளவே இல்லை.

அவன் அவள் மீது இருக்கின்ற உணர்வை வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். பஞ்சும், நெருப்பும் தங்கள் எல்லையைத் தாண்டிய போதும் நெருப்பு மட்டும் உண்டாகவில்லை. ஆச்சரியம்தான்.அந்த விஷயத்தில் அவர்கள் தங்கள் எல்லையை மீறவில்லை என்று தான் மாயவனுக்குப் பட்டது.

அதற்குள் இவர்களுக்கு இடையூறாகவே மீண்டும் அங்கு ஒரு சலசலப்பு. மீண்டும் ஏதோ குடிகாரன் பேச பின்சீட்டில் இருக்கக்கூடியவர் ஓங்கி தலையில் அடித்து விட்டார். குடிகாரனின் மனைவிக்கு கோபம் வந்தது. அவளுக்கு வந்த கோபத்தைப் பார்த்தவுடன் தன்கணவனை அடித்தவரை உண்டு இல்லை என்று செய்துவிடுவாள் என எண்ணிய நேரத்தில் தன் கணவனின் கன்னத்தில் ஒரு அறை அறைந்தாள்.

“சும்மா இருக்க மாட்டியாடா” என்று கத்தினாள்.  மீண்டும் அமைதியானான். இப்பொழுது அந்தச் சத்தத்திற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. அது வழக்கமாகிவிட்டது. இவர்கள் அவர்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சத்தம் வந்தாலும்கூட அங்கு திரும்பி பார்க்கின்ற எண்ணம் வரவில்லை. மீண்டும் குடிகாரனிடம் இருந்து சத்தம். பொறுத்திருந்து கண்டக்டர் குடிகாரனிடம் சென்று “அமைதியா இல்லன்னா நீ கீழ இறங்க வேண்டியது தான்” என்றார். அதையும் அப்பொழுது ஏற்றுக் கொண்ட குடிகாரன்.

இரண்டாவது முறை மனைவி அவனை அடிக்கும்போது “வீட்டுக்கு வாடி உன்னைய வச்சிக்கிறேன்” என்றபடி கூறி அமைதியானான். பாவம் அவன் கூறிய வார்த்தைக்கு அவளிடம் வந்த வார்த்தைகளை சொல்லமுடியவில்லை.
 
மாயவனுக்கு இந்த இரண்டு நிகழ்ச்சியையும் பார்க்கும் பொழுது சுத்தமாக உறங்கும் எண்ணமே இல்லை. சமூகத்தின் மீது கோபம் வந்தது. ஒருநொடியில் நிதானம் அடைந்து சிரித்து விட்டான். பாவம் அந்தப் பையன் என்ன ஆகப்போறானோ…. குடிகாரன் வீட்டிற்குச் செல்லும் வரை எத்தனை அடி வாங்கப்போறானோ? என்று நினைத்தபடி, எப்போது கிருஷ்ணகிரி வரும் எனக் காத்துக்கொண்டிருந்தான் மாயவன்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை ,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
இராசிபுரம்.

Leave a Reply