மொபைல் ரூல்ஸ்|ப.பிரபாகரன்| சிறுகதை

மொபைல் ரூல்ஸ்

 ‘மொபைல் ரூல்ஸ்’

           “இப்போ, அப்பா குளிச்சுக்கிட்டு இருக்கிற நேரமாச்சே! என்ன செய்றது? வேறு வழியில்லையே. போன் பண்ணிதான் பார்ப்போம். ஒருவேளை அவர் குளிச்சு முடிச்சுட்டு வந்திருக்கலாம்!” என்று நினைத்து ஹேண்ட்பேக்கில் இருந்து போனை எடுத்து டனுஜா அப்பாவுக்கு போன் செய்தாள்.

           அப்பாவின் போனில் காலர்ட்யூனாக கண்ணதாசனின் வரிகள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…’ என்று பாடி இரண்டு முறை ஒலித்து முடித்தது. அவர் போனை எடுக்கவில்லை. டனுஜாவுக்கு அப்பாவின் மீது கோபம் எல்லைமீறியது; ‘இரண்டு மூன்று முறை முழு ரிங்கும் போய் கூட இன்னும் போனை எடுக்கவில்லையே’ என்று புலம்பினாள்.

           குளியலறையில் முகத்திற்கு சோப்பு போட்டுவிட்டு ஸவரில் குளித்துக்கொண்டிருந்த அப்பாவுக்கு, டனுஜா முதலில் அழைத்த போனின் ஒலி செவிக்கு எட்டவில்லை. ஆனாலும் அவள் போனை வைக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்தாள். சில நிமிடங்களில் அவர் குளித்து முடித்துவிட்டு துண்டை எடுத்து துவட்ட ஆரம்பித்தார்.

           அப்போதுதான் அவருடைய போனில் ஒலித்த சத்தம் கேட்டு துவட்டிக்கொண்டிருந்த துண்டை எடுத்து இடுப்பினில் கட்டிக்கொண்டு குளியலறையில் இருந்து வேகமாக ஓடிவந்தார். பிறகு வீட்டினுள் சரியாக சிக்னல் கிடைக்காது என்பதால் அவசர அவசரமாக போனை எடுத்துக்கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து அட்டண்ட் பண்ணினார்.

           “ஹலோ, ஹலோ சொல்லு பாப்பா! என்னம்மா, கேக்குதா! இப்பதான் குளிச்சுட்டு வர்றேன்”. என்றார். ஆனால் போனின் மறுமுனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் அட்டண்ட் பண்ணின உடனே போன் ஏனோ கட் ஆகி போயிருந்தது. அது தெரியாது மூச்சு விடாமல் போனில் தனியே பேசிக் கொண்டிருந்தார். சில நொடிகளில் போன் கட் ஆகி போனதை அறிந்து காதில் இருந்த போனை கையில் எடுத்து உற்று பார்த்தார்.

           “அட, போன் கட் ஆகி போச்சே! என்ன ஆச்சு? எதுக்கு போன் பண்ணினான்னு தெரியலயே?” என்று நினைத்து, எதற்காக போன் செய்தாள்? என்ன மறந்து போனாளோ தெரியலயே? என்று நினைத்துக்கொண்டு டனுஜாவுக்கு போன் செய்து கொண்டிருந்தார்.

மறுபுறம் “இந்த நேரத்துலதான் நெட்வொர்க் கூட நம்மை பழி வாங்கும்” நம்ம அவசரத்திற்கும் ஆத்திரத்திற்கும் இந்த நெட்வொர்க்க குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம்? என்று டனுஜா கட் ஆனா போனில் இருந்து மீண்டும் அப்பாவுக்கு முயற்சித்தார்.

           இருவரும் ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி போன் செய்து கொண்டிருந்ததால் ‘நெட்வொர்க் பிஸி, பிஸி’ என்று காண்பித்து இருவருக்கும் போன் கட் ஆகி போனது. அவள் கட்டுக்கடங்காத கோபத்திற்கு ஆளானாள். ஓங்கி போனை உடைத்து விடலாம் என்று கையை உயர்த்த டனுஜாவின் போனில் இருந்து ‘கிளிங், கிளிங்’ என்று பேட்டரி லோ ஆனதை உணர்த்தும் எச்சரிக்கை ஒலி ஒலித்தது. சார்ஜ் வேறே கம்மியா இருக்குதே! ஆபிஸ் வேற வரப்போகுது. அங்கு உள்ளே போனதும் போனை ‘வாங்கி சுவிட்ச் ஆப் பண்ணீ’ வச்சுக்குவாங்களே. எப்படி சொல்றதோ தெரியலயே!” எப்படியாவது அவள் அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று துடிதுடித்தாள்.

           அதே சமயம், அப்பாவும் நான்கைந்து முறை முயற்சி செய்து, போன் போகவே மாட்டேங்கிறது? என்று கடுப்பாகி என்ன ஆச்சு? என்று தெரியாமல், “ஒரு வேளை போனை சுவிட்ச் ஆப் செய்து பார்த்தால், போன் போகுமோ?” என்று நினைத்து போனை ஆப் செய்து விட்டார்.

           என்ன இது? ஒரு அவசரத்திற்கு போன் பண்ணுனா, இப்படி பண்ணுறாரே? போன் வேற போக மாட்டேங்கிறது? இப்ப போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்குன்னு வருதே. இருவருக்கும் ஏற்பட்ட பதற்றமும் பரபரப்பும் கொஞ்ச நேரத்தில் பலமடங்காக அதிகரித்து போனது.

           சில விநாடிகளில் காலர் டோன், ரிங் டோன் என்று இருவரின் செவிகளிலும்  கண்ணதாசனின் கீதம் மீண்டும் இசைக்க ஆரம்பித்தது. ஆனால் தொடக்கத்திலேயே இருவரும் அதை துண்டித்து ‘ஹலோ, ஹலோ’ என்று பேச ஆரம்பித்தனர்.

           “அப்பா! எவ்வளவு நேரமாக உங்களுக்கு போன் பண்ணிக்கிட்டே இருக்கிறேன்! என்ன ஆச்சு உங்க போனுக்கு?” என்றாள்.

            “இல்ல பாப்பா, நானும் அத்துனை முறை உனக்கு போன் பண்ணிக்கிட்டே தான் இருந்தேன். போன் போகவேயில்ல. என்னன்னு புரியல. நெட்வொர்க் பிரச்சனையான்னு தெரியல. அதனால தான் போனை சுவிட்ச் ஆப் செய்து ஆன் பண்ணினேன். அதனால தான் இப்போ நம்மால பேச முடிஞ்சது” என்றார்.

எத்தனை முறை உங்களிடம் சொல்லி இருக்கிறேன் “இரண்டு பேரும் ஒரே நேரத்தில் போன் பண்ணினால் இரண்டு பேருக்குமே கடைசிவரைக்கும் லைன் கிடைக்காதுங்கிற உண்மைய புரிஞ்சுக்கங்க, அதே போல யாராவது உங்களுக்கு போன் பண்ணி பேசிக்கிட்டு இருக்கும்போது கட் ஆனாலோ, இல்ல அட்டண்ட் பண்ணின அப்பறம் போன் கட் ஆனாலோ அல்லது பாதி பேசிக்கிட்டு இருக்கும்போது கட் ஆனாலோ, அவரே திரும்ப போன் பண்ணும்வரை கொஞ்சம் பொறுமையா இருங்க! அது போதும்! அப்போதுதான் இதுபோல தேவையே இல்லாத டென்சனை தவிர்க்க முடியும்” என்று டனுஜா அப்பாவிடம் சொன்னாள்.

            “ஒரு வேளை பேலன்ஸ் இல்லாமல் கட் ஆகி போனால் என்ன செய்றதாம்? சரிம்மா. காலையிலே வேண்டாம். நீ சொல்றதை ஒத்துக்கிறேன். இனிமேலு அதை ஞாபகத்தில் வச்சுக்கிட்டு போன் வந்தா பேச முயற்சிக்கிறேன். சரி விடு. நீ எதுக்கு இப்ப போன் பண்ணின? அதை முதல்ல சொல்லு.” என்று கிண்டலாக மெல்ல முணுமுணுத்தார்.

           “இப்படி கிண்டல் கேலிக்கு மட்டும் குறைச்சலில்லை போங்க! ஒரு வேளை போன் பண்ணுபவரின் பேலன்ஸ் இல்லாமல் பாதியில் போன் கட் ஆகி போகும் நிலை இருந்தால் போன் பண்ணியதும் ஹலோ சொல்றதுபோல, பேலன்ஸ் கம்மியாக இருக்கு நீங்களே பண்ணுங்க, இல்ல போன் கட் ஆனா நீங்கள் பண்ணுங்க” என்று சொல்லிட வேண்டியது தானே.

           இதைக் கேட்ட அப்பாவும் கடுப்பாகி, அம்மா டனுஜா! எல்லாம் சரிதான். நீயும் ஒன்னு புரிஞ்சுக்கோ!

           “ஒருத்தருக்கு ஒரு முறை போன் செஞ்சு எடுக்கலன்னா! மாத்துகட்டுல திருப்பி திருப்பி போன் பண்ணிக்கிட்டே இருக்காத. ஒரு வேளை போனுக்கு அருகில் இல்லாமல் இருக்கலாம். இல்லை வேறு ஏதேனும் மிகவும் முக்கியமான வேலையில் இருக்கலாம். ஓரிரு முறை போன் செய்தும் எடுக்கவில்லை என்றால் விட்டுவிட்டால் உனக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது. அதையும் மீறினால் உனக்குத்தான் டென்சன் மேல் டென்சன் அதிகமாகும்” என்றார் அப்பா.

           “ஐயோ! அப்பா, உங்ககிட்ட பேசிகிட்டே நான் சொல்ல வந்ததையே மறந்து போயிட்டேனே!  பஸ்ஸில இருந்து இறங்குற இடம் வந்திடுச்சு. இன்னிக்கு முக்கியமான கேஸ் விசயமா வெளியில போகணும். அதனால ஈவினிங் ஆபிஸ் முடிஞ்சு வர லேட் ஆகும். தம்பியை பள்ளிக் கூடத்தில் இருந்து கூட்டிக் கொண்டு வந்திடுங்க. மறந்திடாதிங்க! நான் வச்சுடுறேன்” என்று கூறி கைபேசி வச்சிருபோருக்கெல்லாம் கச்சிதமாக பல ரூல்களை சொல்லினார்.

           பிறகு டனுஜா பேருந்தில் இருந்து இறங்கி சிட்டியிலே பிரபலமான வக்கீலிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள். ஈவினிங் அந்த கேஸ் விசயமா போக வேண்டி இருந்த ப்ளான் இப்ப காலையிலேயே போகணும் என்று மாறி போனதை தொடர்ந்து ஆபிஸின் வாசலிலே டனுஜாவுக்காக கூட பணிபுரியும் பிரபா காத்திருந்தாள்.

           டனுஜாவை கண்டவுடன் கடுகடுத்த குரலில் ‘டனுஜா, உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? காலையிலே செம்ம கடுப்பான சாரு, கண்ணா பின்னான்னு திட்டிட்டு போயிருக்கார். கிளையண்ட் வீட்டுக்கு உன்னை வர வேண்டான்னு சொல்லிட்டு மாலாவை மட்டும் கூட்டிக்கிட்டு கிளம்பிட்டார். அவ்ளோ நேரமா உனக்கு மாத்தி மாத்தி போன் பண்ணிக்கிட்டே இருந்தார். நீ எங்க வர்றன்னு தெரியாம இவ்ளோ நேரமாக காத்திருந்து இப்பதான் கிளம்பி போனார்.

           “என்னடி சொல்ற. ஐயயோ! நான் அப்பாகிட்டதான் போன் பேசிக்கிட்டே வந்தேன். அதுவும் ஈவினிங் மீட்டிங் விசயமாதான், பையனை ஸ்கூலில இருந்து கூட்டிக்கிட்டு வரச் சொல்ல அவ்ளோ நேரமா ஆச்சு. எல்லாம் இந்த நெட்வெர்க் பிரச்சனைதான்” என்று சொன்னாள்.

           “ஏண்டி டனுஜா, உங்கிட்ட எத்தன டைம் சொல்லியிருக்கே! ஒழுங்கு மரியாதயா உன்னோட போன்ல ‘கால் வெயிட்ங்க ஆன்’ பண்ணி வையின்னு. அப்பதான் நீ, வேற யார்கிட்டயாவது பேசிக்கிட்டு இருந்தாலும் உனக்கு தெரியவரும். யாரு போன் பண்ணுறதுன்னு தெரிஞ்சுக்கிட்டு உடனே அட்டண்ட் பண்ணி பதில் சொல்ல முடியும். இல்லைன்னாலும் அவங்ககிட்ட பேசிட்டு அப்பறமாவது திருப்பி பேசலாம்ல. கால் வெயிட்டிங் ஆன் பண்ணலன்னா கடைசிவரையும் உனக்கு எதுவும் தெரியாமலே போயிடும். ஏதாவது எமர்ஜென்ஸினாலும் உனக்கு தெரியபடுத்த முடியும்” என்று சொன்னாள் பிரபா.

           “இன்னிக்கு அந்த கேஸ் விசயமா, போக விருப்பம் இல்லாம தானே நானே லேட்டா வந்தேன். அதே மாதிரி ஆபிஸ் டென்சன தவிர்க்கதான் இதுவரைக்கும் கால் வெயிட்டிங்க ஆன் பண்ணாமலே இருக்கிறேன்” என்று மனதிற்குள் டனுஜா நினைத்துக்கொண்டு, பதில் ஒன்றும் சொல்லாமல் விழித்தாள்.

சிறுகதையின் ஆசிரியர்,

ப.பிரபாகரன், இலால்குடி

மேலும் ப.பிரபாகரன் அவர்களுடைய சிறுகதைகள் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here