சந்திரப்பூவா | திருமதி நித்யா லெனின்| சிறுகதை

சந்திரப்பூவா - நித்யா லெனின்

  சந்திரப்பூவா

       கிழக்குப் பாத்த வாசப்படி. காலையில வெயில் அடிச்சுதுன்னா நேரா வீட்டுக்குள்ளே சுள்ளுன்னு அடிக்கும். தென்னங்கீற்றால் பின்னப்பட்ட குடிசை வீடுதான் சந்திரப்பூவாவின் வீடு. வீட்டுக்கு முன்னால் சின்னதாய் களம். இடதுப்பக்கம் தண்ணீர் தொட்டியும் குளிக்க சின்னதாய் மறைவு இடமும் உண்டு. அந்தத் தண்ணீர் வீணாவதைத் தடுக்க வாழை மரங்கள்,  செம்பருத்தி செடி, மருதாணி செடிகளின் வேர்களில் பாய்ந்து செல்லும். வலதுபக்கம் கூடாரகூடாரமாய் சாணங்கள் கொட்டிக்கிடக்கும்.  இடப்பக்கம் வீட்டின் வாசற்படி குறுகியபடிதான் இருக்கும். வாசற்படியை அடுத்து வலதுபக்க சுவர் முழுவதும் சாணத்தால் தட்டிய வரட்டி குண்டாலம் குண்டாலமாக வட்டமாய் பதிந்து இருக்கும். அந்த வீட்டின் சுவரானது எப்போதும் வரட்டியைச் சுமந்த அமாவாசையாகவே காட்சி அளிக்கும்.
     இப்போது கூட சந்தரப்பூவா சாணியைத்தான் தட்டிக்கொண்டிருக்கிறாள். சின்ன கூடையில் ஒரு அளவாகச் சாணத்தை எடுத்துக் கொள்வாள். லேசான தண்ணீர் தெளித்துக் கோதுமை மாவு பிசைவதுபோல் நன்றாகப் பிசைந்து கொள்ளுவாள். பிறகு சமநிலையாக ஒவ்வொரு உருண்டையாகப் பிடித்துக் கொள்வாள். ஒரு கூடையில் சுமார் இருபதிலிருந்து இருப்பத்தைந்து வரையிலான உருண்டைகள் வரும் அளவிற்கு பிடித்துக்கொள்கிறாள்.
      பிடித்து வைத்திருந்த உருண்டைகளைச் சுவற்றின் ஒரு ஓரத்திலிருந்து தட்டிக்கொண்டே வர வேண்டும். சந்திரப்பூவாவும் உருண்டை சாணத்தை எடுத்து செவுத்திலே அறைந்து நன்றாகத் தட்டி சாணத்தை விரித்துக் கொள்வாள். அதன்பிறகு தட்டிய சாணத்தை எடுத்து வரிசையாகச் செவுத்திலே காயவைத்து விடுவாள். இன்றைக்கு என்னவோ தெரியவில்லை சந்திரப்பூவாவின் எண்ண ஓட்டங்கள் வேறு எங்கோ போய்க்கொண்டிருக்க கைகள் மட்டும் தானாக வரட்டி தட்டிக்கொண்டிருந்தது.
“சந்திரப்பூவா என்ன பன்ற” பக்கத்து வீட்டுக் கிழவி ஆராயிதான் நலம் விசாரித்தாள். ஆராயி ரெண்டு மூனு கூப்பாடுக்குப் பிறகே நினைவு திரும்பியவளாய்,
“ஏய் கிழவி! நான் என்ன பன்றன்னு உனக்கு தெரியல” என்றாள்.
“தெரியுது.. தெரியுது… ஆனா உடம்பு இங்கிட்டுதான் இருக்கு. மனசுதான் எங்க இருக்குன்னு தெரியல. உருண்ட புடிக்கிற கை நோவப்போவுது பாத்துப் பதுமானமா புடி புள்ள” ஆராயி கிளவியின் பேச்சில் விஷமம் இருந்தது.
“கிழவி.. அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ ஏதோ அதுஇதுன்னு சொல்லியிட்டு திரியாத..”
“உங்க அம்மாவுக்கு பிரசவம் பாத்ததே நான்தான். எனக்கு தெரியாதா உன்னபத்தி. நீ பொறந்ததுல இருந்தே நான் உன்ன பாக்குறன்.  உனக்கு என்ன புடிக்கும். புடிக்காதுன்னு.. உன் மூஞ்ச பாத்தாலே தெரியும். என்னான்னு சொல்லு புள்ள?” என்றாள் ஆராயி கிழவி.
“நான் என்ன நினைக்கப் போறான். எல்லாம் என்னோட பையன் செல்வத்தப் பத்திதான். அவன நல்லா படிக்க வைக்கனும். நல்லா வளக்கனும். அதான் நினைச்சன். மனசெல்லாம் இருக்கமா ஆயிடுச்சி. எப்படின்னுதான் தெரியில” சந்திரப்பூவாவின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் கரைய பேசினாள்.
“கவல படாத சந்திரப்பூவா… உனக்கும் உம்பிள்ளைக்கும் ஒரு குறையும் வராது. கடவுள் இருக்கிறாரு..”
“ஆமா! பொல்லாத கடவுள். என்னப்பாரு இருபத்தாறுலேயே தாலிய அறுத்திட்டு ஒத்தையில நிக்குற..”
சந்திரப்பூவா கருப்பும் செவப்பும் கலந்த மாநிறம். நல்ல அழகான தோற்றம். யாரையும் தன் பக்கம் இழுக்கும் பார்வை. நல்ல மனசுக்காரி. சந்திரப்பூவா அம்மா தன்னுடைய தம்பிக்குத்தான் கல்யாணம் பண்ணி வச்சா. அவனும் அவளும் நல்லாதான் வாழ்ந்தாங்க. கல்யாணம் ஆகி ஆறு மாசத்துல ஒரு சொந்தகாரங்க கல்யாணத்துக்குப் போயிட்டு வரப்ப அம்மாவும் புருசனும் விபத்துல இறந்துட்டாங்க. சந்தரப்பூவா மட்டும் ஒத்தையா தனியா இருந்தா. அப்ப அவளுக்குத் தெரியாது வயித்துல குழந்தை வளந்திட்டு வருதுன்னு.. சின்ன வயசுக்காரி.  குழந்தைய பெத்து எடுத்தா.. குழந்தைதா எல்லாமுமேன்னு நினைச்சா..
பலதடவை நான் சொல்லிட்டேன். நீ வேறவொரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்பெல்லாம் இது சகஜம்ன்னு. ஆனா புடிவாதமா மறுத்துட்டா சந்திரப்பூவா… தன்னுடைய குழந்தைய நல்லா வளக்கனுமுன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பா.. நானும் சந்திரப்பூவாவை அப்பப்ப அவளுடைய வயச ஞாபகப்படுத்திற மாதிரி ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டேதான் இருப்பேன். ஆனா அவ பிடிக்கொடுத்துப் பேசுற மாதிரி தெரியில…  சந்திரப்பூவாவுக்கு அப்படி என்ன வயசாயிடுச்சி. ஒரு முப்பதுதான் இருக்கும். இந்தக்காலத்துல இன்னும் முப்பது வயசாகியும் கல்யாணமே பண்ணிக்காத எத்தனையோ பொண்ணுங்க இருக்கத்தானே செய்யுறாங்க.. இவுளுக்கு மட்டும் என்னவாம்! ஒரு மாதிரியாய் சந்திரப்பூவாவைப் பார்த்துக் கொண்டு அனுதாப்பட்டாள் ஆராயி கிழவி.
“ஏய் கிழவி! என்ன பாத்து ரசிச்சது போதும். உனக்கு என்ன வேணுமுன்னு சொல்லு. அதுக்குதான என்ன தேடி வருவ” என்றாள் சந்திரப்பூவா
”அடியே அமுக்கு கள்ளி! ஏதோ பேத்திக்கிட்ட ரசம் கொஞ்சம் வாங்கிட்டு போகலாமேன்னு வந்தேன். நீ என்னான்னா ரொம்பத்தா பீத்தீக்கிற.. போடி இவளே..” என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு போகத்தயாரானாள் ஆராயி கிழவி.
“ஏய் கிழவி நில்லு. ரொம்பத்தான் பன்ற. நான் உன்ன திட்டாம வேற யாரு திட்டுவா. நீ செத்தா நான்தான் உன்ன தூக்கிப்போடனும். தெரிச்சிக்கோ.. உம் பசங்களா வரப்போறாங்க.. சரி.. சரி… கத்திரிக்காயைச் சின்ன வெங்காயம் போட்டுக் குழம்பு வச்சிருக்கேன். எடுத்துட்டுப் போ… என்றாள் சந்திரப்பூவா.
ஆராயி கிழவி அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் அப்பதான் மகனைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். செல்வம்… செல்வம்… என்று கத்தினாள். சாணிக்கூடையில் உட்காந்து கொண்டு சாணத்தை மேலும் கீழும் தன்னுடைய உடம்பிலே அப்பியபடி அம்மாவைப் போன்று தானும் பிஞ்சுக் கைகளினால் சாணத்தை உருண்டைப் பிடித்துக் கொண்டிருந்தான் மூன்று வயதே ஆன செல்வம்.
சந்திரப்பூவாவுக்கு மகனைப் பார்த்தமாத்திரத்தில் கோவம் ஒன்றும் வரவில்லை. ஆனால் அவனை எப்படி குளிப்பாட்டி சாணத்தின் வாசனையைப் போக்குவது என்பது பெரும்பாடாய் இருந்தது. அன்னபேஷன் நிறைய தண்ணீர் கொண்டு வந்து அதன் உள்ளே செல்வத்தை ஒரு அமுக்கு அமுக்கினாள். செல்வத்தின் உடம்பில் ஒட்டியிருந்த  சாணம் முழுவதும் தண்ணீரோடு கலந்தது. மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு மீண்டும் தண்ணீர் தொட்டியிலிருந்து அன்னபேஷன் நிறைய தண்ணீர் எடுத்து வந்து மகனை அதனுள் உட்கார வைத்தாள். செல்வம் தண்ணீரை அடித்துக் கொண்டு விளையாடினான்.
சந்திரப்பூவா இப்பல்லாம் தனிமையா இருக்குறதா கொஞ்சம் கூட நினைக்கிறதே இல்ல. ஏன்னா அவக்கூட செல்வம் எப்பவும் ம்மா.. ம்மா… ன்னு உடம்போட ஒட்டிக்கிட்டே இருப்பான். கணவனும் அம்மாவும் செத்துப் போனப்ப உலகமே இருண்டதா நினைச்சவ. தனக்கு யாரும் இல்லன்னு அநாதையா உணர்ந்தவளுக்குத் தன் வயித்துல குழந்த இருக்கிறத தெரிஞ்சவுடனே ஒரு புதுதெம்பு வந்து வாழனுமுன்னு ஆசையும் வந்துடுச்சி.  அந்த ஊருல கிடைச்ச வேலைக்குப் போவா.. கொடுக்கிற காச வாங்கிட்டு வந்து பொங்கி திம்பா… அவ்வளுவுதான் சந்திரப்பூவாவின் வாழ்க்கை.
சந்திரப்பூவாவின் வீட்டு முன்னால இருக்குற சாலையில் ஆடு மாடுகள்ன்னு வந்து போகும். அதுங்க போடுற சாணத்த எடுத்துட்டு வந்து வரட்டியா தட்டி காய வைப்பா. அப்படி காயவச்ச வரட்டிய அடுப்புக்கு விறகா பயன்படுத்திக்குவா.. அடுப்புக்கான விறகுக்கு எங்கு போவா சந்தரப்பூவா.. அதான் இப்படி கிடைக்கிறத வச்சி வாழ பழகிட்டா.
சந்திரப்பூவாவைப் பார்த்த மற்ற பெண்களும் சாணத்தில வரட்டி தட்டி காய வச்சாங்க. அத அடுப்புக்கும் பயன் படுத்திக்கிட்டாங்க.. ஆனா இது எது வரையில்? கொஞ்ச நாளைக்கு மட்டும்தான். ஏன்னா சாணம் நாத்தம்.. அழுக்கு.. தொடும்போது ஒருவகையான முகசுளிப்பு. இதனால வரட்டி தட்டுன ஒவ்வொரு பெண்களும் அத நிறுத்த ஆரமிச்சாங்க. ஆனா சந்தரப்பூவாவுக்கு அப்படியில்ல. இதுதான் வாழ்க்கை. சாணத்த அழுக்கா நினைக்கல. நாத்தமா நினைக்கல.. முகம் சுளிக்கல.. தனக்கு கிடைச்ச தொழிலா பாத்தா சந்திரப்பூவா…
ஒவ்வொரு ஆடு, மாடுகள் இருக்கிற வீடா சென்று சாணத்த காசுக்கு வாங்கின. வாங்கிய சாணத்த தவிட்டுடன் சேர்த்து வரட்டி தட்டுனா… நல்லா காய்ஞ்சு போன வரட்டியை ஐஞ்சு ரூபாய்க்கு ஒன்னுன்னு வித்தா.. கிராமத்துல கொஞ்சம் கம்மியாப் போனாலும், நகரத்திற்குக் கூடையில் கொண்டு வந்து வித்திட்டுப் போனா சந்திரப்பூவா. ஒருநாளும் வரட்டிய விக்காம மட்டும் வரமாட்டா. சந்தரப்பூவா கெட்டிக்காரி. நல்லா சத்தம் போட்டுக் கூவிகூவி விப்பா. நகரத்துக்காரங்க அடுப்பெரிக்க விறகுக்கு எங்க போவாங்க.. பால் காய்ச்சனுமின்னா ஒரு வரட்டி இருந்தா போதும். பால் காய்ச்சிடலாம். சோறு பொங்க மூணு, குழம்பு வைக்க மூணுன்னு கணக்குப் பண்ணிடலாம். அதனால சாண வரட்டியும் மலிவு விலையில விக்கிறதுனால பெரும்பாலும் மக்கள் வாங்க ஆரமிச்சாங்க. இந்த வரட்டி அவங்களுக்கு ரொம்ப உதவிக்கரமா இருந்துச்சு. அப்பெல்லாம் ஆராயி கிழவிதான் செல்வத்தப் பாத்துப்பா..
அடுப்பெரிக்க மட்டுமில்லாது செடி கொடிகளுக்கு உரமாகப் போடுவதற்கும் இந்த வகையான வரட்டிகள் மக்களிடத்தில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. அதிலையும் சந்திரப்பூவாவினுடைய வரட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. சாணத்தைத் தவிட்டிலே உருட்டி வரட்டியாக உருப்பெறும்போது நெருப்பிலே போட்டால் இன்னும் வேகமாக எரியும். அந்த வரட்டி தட்டுன தொழில்ல கொஞ்சகொஞ்சமாய் காசு சேர ஆரமிச்சது சந்திரப்பூவாவுக்கு. மகனை பள்ளிக்கூடத்துல சேர்த்துப் படிக்க வச்சா. தன்னோட வாழ்க்கை இப்படியே நல்லா போகனுமுன்னு கடவுள வேண்டிக்கிட்டா. மனுஷ வாழ்க்கையிங்கிறது இன்பமும் துன்பமும் நிறைந்ததுதானே.. அவளோட வாழ்க்கையும் அப்படித்தான் ஆச்சு.
காலச்சக்கரம் சுழல ஆரமிச்சது. கொஞ்ச நாள்ளயே மக்களிடத்திலே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. மக்கள் அடுப்புக்குப் பதிலா கேஸ்ஸிற்குப் போக ஆரமித்தார்கள். பெண்கள் அடுப்பின் முன்னால் உட்கார தேவையில்லை. விறகையோ சாணத்திலான வரட்டியையோ அடுப்பிலிட்டு ஊதுகுழலினால் ஊத வேண்டியதில்லை. கண்களில் புகை அடித்து யாரும் அழ வேண்டியதில்லை. புகை சேராமல் இருமலுக்கு மாத்திரைகள் வாங்க வேண்டியதில்லை. சிவப்பு நிறத்திலான உருண்டை வடிவிலான குழலினைக் கண்ணைக் கவரும் சில்வரில் உள்ள இரண்டு அடுப்புள்ளதோடு இணைத்துவிட்டால் போதும். சிலிண்டரின் மேல் இருக்கக்கூடிய திருகியை மேலே தூக்கிவிட்டால் அடுப்பு எரியும். கீழே இறக்கி விட்டால் அடுப்பு அணைந்து போகும். சிலிண்டர் வந்த நேரங்களில் மக்களிடத்தில் எங்கே சிலிண்டர் வெடித்து இறந்து விடுவோமோ என்று கொஞ்சம் பயம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் காலப்போக்கில் எல்லாம் மறைந்து அனைவரும் சிலிண்டர் அடுப்பையே விரும்பி சமையலுக்குப் பயன்படுத்த ஆரமித்தனர்.
சந்திரப்பூவாவின் தொழில் முன்னே மாதிரி இப்போது இல்லை. அன்னபேஷனில் வரட்டியை எடுத்துக் கொண்டு எங்கும் விற்பனை செய்வதில்லை. ஆங்காங்கு யாரோ சிலர் மட்டும் சந்திரப்பூவாவிடம் வந்து வரட்டியை வாங்கி செல்கிறார்கள். அதுவும், வீட்டிற்கு முன்னால் குளிப்பதற்கென வைத்திருந்த அடுப்பில் வரட்டியைப் போட்டு எரிப்பார்கள். கரும்பு ஆலைகளிலும் வரட்டியைப் பயன்படுத்தி வந்தனர். சந்திரப்பூவா கையில் இருந்த காசும் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைய ஆரமித்தது. கிராமத்தில் கிடைத்த வேலைக்குச் செல்ல ஆரமித்தாள். பயிர் நடுவாள், களை பறிப்பாள், மண்ணு சுமப்பாள், எருவு அள்ளுவாள், வாய்க்காலுக்குத் தண்ணீர் கட்டுவாள். இந்த வேலைக்குத்தான் போகனுமின்னு இல்ல. எல்லா வேலைக்கும் சந்திரப்பூவா போனாள். ஏன்னா அவளும் அவளுடைய மகனும் சாப்பிடனும்மில்ல. சரி வேலையும் தினமும் இருக்குமா என்ன? வேலைக்குப் போனாலும் கூலிய உடனேவா கொடுத்திருவாங்க.. இப்படி அப்படின்னுதான் சந்திரப்பூவாவின் வாழ்க்க ஓடிச்சி.
“அம்மா பென்சில் வாங்கனும்” – என்றான் மகன் செல்வம்
“அதான் போனவாரம் வாங்கிக்கொடுத்தேனே” சந்திரப்பூவா
“நீ வாங்கி கொடுத்த பென்சில் கூறு உடைஞ்சி உடைஞ்சி போயுடுது. அதான் சீக்கிரம் தீர்ந்திடுச்சி. இதோ பாரு“ என்று கையில் இருந்த குட்டீயூண்டு பென்சிலை அம்மாவின் முன்பு நீட்டினான் செல்வம்.
“அதெப்படிடா உடையும் நீ கூறு சீவிசீவி உடைச்சிருப்ப.. மூஞ்சப்பாரு.. வாங்கி தரவளுக்குத்தான கஷ்டம் தெரியும். உனக்கு எப்படி அதெல்லாம் தெரியும்?” கோவத்தோடு செல்வத்தைப் பார்த்துக் கண்களை உருட்டி கத்தினாள்.
உண்மையாலுமே பையன் கொஞ்சம் பயந்துட்டான். செல்வத்தின் கண்களில் கொஞ்சமாய் கண்ணீர் துளிகள் நிரம்ப ஆரமித்தது. அப்போதுதான் ஆராயி கிழவி வீட்டினுள்ளே நுழைந்தாள்.
“ஏண்டி சந்திரப்பூவா ஒத்த மகன வச்சிகிட்டு அவன் அழுவுற மாதிரி திட்டிக்கிட்டு இருக்கிற. அவன் படிக்கிறதுக்குத்தான கேட்குறான். மத்த புள்ளையங்க மாதிரி எனக்கு இது வேணும். அது வேணும்முன்னா கேட்குறான். நீ கொடுக்கிறத சாப்பிட்டுக்கிட்டு உன்ன கட்டுப்புடிச்சிக்கிட்டே தூங்கிடுறான். அவன போயி திட்டுறியே.. உனக்கு அறிவு இருக்கா புள்ள” என்றாள் ஆராயி கிழவி.
சந்திரப்பூவா தன்னுடைய சேலை தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு அழ ஆரமித்தாள். “கிழவி நான் என்ன பண்ணுவேன் சொல்லு. இருந்தாதானே அவனுக்கு வாங்கித்தர முடியும். இந்த வேள சோத்துக்கு வீட்டுல தண்ணிய தவிர வேற ஒன்னுமில்ல. வயித்துப் பசியில வயிறு கிள்ளுது. நானும் அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க கிட்டலாம் கடனா வாங்கிட்டேன். இனிமேலும் அவுங்க கிட்ட என்னான்னு கேட்குறது. அவனோட அப்பனும் பாட்டியாளும் எனக்கு இந்த வீட்ட தவற என்ன சொத்துச் சேர்த்து வச்சிட்டு போனாங்க.. நீயே சொல்லு கிழவி…” பொறுமினாள்.. ஆதங்கப்பட்டாள்.. வேதனைப்பட்டாள் சந்திரப்பூவா.
செல்வத்தைத் தன்னுடைய மடிமீது வைத்துக் கொண்டிருந்த ஆராயி கிழவியால் அழ முடியுமே தவிர வேறென்ன பண்ண முடியும் சந்திரப்பூவாவுக்கு. தலையை மட்டும் ஆட்டினாள். கிழவிக்குத் தெரியாதா சந்திரப்பூவாவின் வாழ்க்கைய பத்தி.
“இந்தாக் கிழவி என்னுடைய கையப் பாறேன். நீ எத்தன தடவ என்னுடைய கைகளுக்கு மருதாணி வச்சி விட்டுருப்ப.. இப்படியா இருந்தது. இந்தச் சாணிய அள்ளி அள்ளி பிசைந்து பிசைந்து என்னோட கை எப்படி ஆயிடுச்சிப் பாரு” என்று ஆராயி கிழவி முன்பு தன்னுடையக் கைகளை நீட்டினாள்.
சிவந்து பஞ்சு போன்ற கைகள் இப்போது தடித்து ஆங்காங்கு வெடித்துக் கை நகங்கள் செத்துக் கோணலும் மாணலுமாய் இருந்தது.  ஆராயி கிழவி அப்படியே சந்திரப்பூவாவின் முகத்தையும் ஒருமுறை பார்த்தாள். எப்படியிருந்த முகம். இப்போது இப்படி வாடிப்போய் இருக்கிறதே. புருஷன புடிக்குதோ புடிக்கலயோ சும்மாவாவது வீட்டுல இருக்கட்டுமேன்னு ஒரு ஆண்துணை வேண்டும். அப்பவாவது பூவும் பொட்டும் வச்சிட்டு நல்லா இருப்பாள்ள.. இப்ப பாரு எப்படி இருக்குன்னு மூஞ்சு… என்று ஆராயி கிழவி சந்திரப்பூவாவைப் பற்றி மனதிலே எண்ண ஓட்டங்களை ஓடவிட்டாள்.
“என்ன கிழவி என்னுடைய கைகளைப் பாத்து எதுவும் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருக்குற”
“ஆமா! உன்ன என்ன பொண்ணு பாக்க வராங்களாக்கும். சும்மா கிடப்பியா.. இதுக்கு மேல கைய பாத்த என்ன புரோஜனம் சொல்லு. ஆமாம்! நான் வந்த விஷியத்தையே மறந்துட்டேன். நம்ம ஊருல வடக்குக் காட்டுல இருக்குற நடேசன் செத்துப் போயிட்டாரு.. உனக்கு தெரியுமா சந்திரப்பூவா”
“ஆமாம் கேள்விபட்டன். வெளிநாட்டுக்குப் போயிட்டு இப்பதான வந்தாரு. எப்படி செத்துப் போனாரு..”
“ஏதோ உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க. அதில்லாம அந்த எலவுக்கு அழுவுறதுக்குக் கூப்பிடுறாங்க.. நீயும் வரியா சந்திரப்பூவா… போகலாம். போயிட்டு வந்தோம்மின்னா ஒரு ஐநூறு ரூபாய் கிடைக்கும்”
கூலிக்கு மாரடிக்க கூப்பிடுறியா கிழவி”
“ஆமாம்! இல்லாததுக்கு என்ன பன்றது. நீ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி மூக்க தொடச்சியே… அதையே அங்கேயும் வந்து பண்ணு. அதுபோதும். மத்ததெல்லாம் நான் பாத்துக்குறன்”
“ சரி நானும் வரேன். யாருயாரு போறோம்”
“நீ, நான், நடுபாத்தி பாஞ்சாலை மூணு பேரும் போறோம். அவ்வளவுதான்”
“செல்வத்த என்ன பன்றது கிழவி”
“பக்கத்து வீட்டுக் கோமதிக்கிட்ட உட்டுட்டு வா… நானும் அவகிட்ட சொல்லுறன். சாயந்திரம் மூணு மணிக்குள்ள பொணத்த தூக்கிருவாங்க. நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்”
சந்திரப்பூவாவிற்கு வேறு வழியில்லை. மாரடிக்க போனால் ஐநூறு ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்த வச்சி ஒரு மாசமாவது ஓட்டிடலாம். மனதிற்குள் சரி என்று ஒப்புதல் வாங்கிக் கொண்டாள்.
 சாவு மேளச்சத்தத்துடன் அழுகை சத்தமும் கொஞ்சம் தூரம் இருந்து வருகையிலேயே கேட்டது. நெருங்கிய உறவினர்கள் கதறி துடித்து விழுந்தடித்துப் போனார்கள். தூரத்து உறவினர்கள் மாலையோடு வந்து பிணத்தைத் தொட்டு வணங்கினார்கள். பெண்கள் அனைவரும் மாராப்பு சேலை நழுவ கட்டிப்பித்து அழுவினார்கள். ஒருபக்கம் கூட்டமாய் வட்டமாய் சுழன்று ஒப்பாரி வைத்தார்கள். ஆண்கள் அழக்கூடாதென நினைத்து நெஞ்சை இறுக்கிக் கொண்டு மூக்கிலே அழுகையைக் கொண்டு வந்தார்கள்.
நடேசனின் மனைவிதான் பாவம் அழுதுஅழுது கண்கள் சோர்ந்து சுவற்றில் ஒட்டிய பல்லியாய் ஏதோ வாயில் முணுமுணுத்தபடியே சொல்லிக் கொண்டிருந்தாள். நடேசனின் பிள்ளைகள் இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் அழுது கொண்டிருந்தனர். நடேசனின் மச்சினன்தான் அனைத்துச் செலவுகளையும் கவனித்து வந்தான். எங்க மாமா எப்படி பொறந்தாரோ… அப்படியே சுடுகாட்டுக்கும் போகனும். மாலை மரியாதையோட பட்டாசு சத்தம் காதை பிளக்க மேளச்சத்தம் இடிபோல வீழ பெண்களின் ஒப்பாரி என் மாமனை வாழ்த்த சங்கொலியோடு பூந்தேரில் செல்ல வேண்டும் என்று எண்ணினான்.
சாவு வீட்டில் நடப்பது சந்திரப்பூவாவுக்குப் புதியதாகவே இருந்தது. பணக்காரர்கள் இறப்பில் என்னவெல்லாம் புதுமை கொண்டிருக்கிறதோ தெரியவில்லை என்று எண்ணினாள். ஆராயி கிழவி, பாஞ்சாலையுடன் தானும் சென்று பெண்களோடு பெண்களாக அழுத கண்ணீரோடு ஒட்டிக்கொண்டாள். சாவு வீட்டில் அழும் பெண்களில் எத்தனை பேர் அங்கு இறந்து போயிருக்கும் நபருக்காக அழுகிறார்கள். இல்லைவே இல்லை. அவரவர் இரத்தச் சொந்த பந்தகளை நினைத்துதான் பெரும்பாலும் அழுகிறார்கள். இல்லையென்றால், அங்கே அழும் பிறரைப் பார்த்து இவர்களும் அழத் தொடங்குகிறார்கள். அப்படித்தான் சந்திரப்பூவாவுக்கும் முதலில் கண்களில் இருந்து கண்ணிர் வர மறுத்தது. பிறப் பெண்களைப் பார்த்தவுடனே அழ ஆரமித்து விட்டாள். மேலும், தன்னுடைய கணவனையும் தாயையும் வேறு நினைத்துக் கொண்டாள். சொல்லவே வேண்டாம். கண்ணீர் மல்க பூத்துத் பூத்தென்று அழத்தொடங்கினாள் சந்திரப்பூவா.
சடங்குகள் ஒவ்வொன்றாய் நடந்தேறின. ஒப்பாரி சத்தம் மைக்கில் ஊரையெல்லாம் கூட்டியது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிணத்தினை வைத்தார்கள். தேரின் முன்பு பூக்களைத் தூவினார்கள். அழும் பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு வேகமாக அழ ஆரமித்தார்கள். ஆராயி கிழவியும் பாஞ்சாலையும் இரண்டு கைகளையும் தன்னுடைய நெஞ்சிலே அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தார்கள். சந்திரப்பூவா இப்போது நீண்டு அழ தொடங்கினாள். கத்தினாள். ஓலமிட்டாள். ஆட்டமும் ஆட தொடங்கினாள்.
கருநிறமுள்ள தன்னுடைய நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டாள். கூந்தல் இடுப்புவரை வந்து வீழ்ந்தது. சேலை முந்தானையை இடுப்பிலே சுற்றி அவிழாதபடி கட்டிக்கொண்டாள். இடுப்பில் கட்டியிருந்த கொசவ மடிப்பை கொஞ்சம் ஏற்றிக்கொண்டாள். அப்போதுதான் சேலை காலில் மாட்டாமல் இருக்கும்.
நின்ற இடத்திலிருந்து எகிறினாள். எகிறியபோதே தலை குனிந்தாள். தலை குனிந்ததால் பின்னால் உள்ள கூந்தல் முன்னால் வந்து விழுந்தது. குனிந்து நிமிரும்போது தன்னுடைய இரண்டு கைகளினாலும் நெஞ்சிலே ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டாள். பட்தட்.. பட்தட்… என்று சத்தம் கேட்டது. மேல் மூச்சி வாங்கியது. வாயிலிருந்து ஒவ்வொரு முறையும் ராசா… அப்பனே.. தெய்வமே.. நடராசா… அப்பனே.. தெய்வமே.. என்று வந்து கொண்டே இருந்தது. சந்திரப்பூவாவினுடைய ஒப்பாரி ஆட்டம் அங்கிருந்தவர்களை எல்லாம் ஒருநொடி திகைக்க வைத்தது. எகிறி குதித்துத் குதித்து ஆடினாள். ஆட்டத்திற்கேற்ப ஒப்பாரியும் உஸ்ஸ்ஸ்… உஸ்ஸ்ஸ்… என்ற மூச்சுக்காற்றும் ஓருங்கே வந்து விழுந்தது.  சாவு வீட்டிற்கு வந்தவர்கள் பலர் சந்திரப்பூவாவின் ஒப்பாரி ஆட்டத்தினைத்தான் பார்த்தார்கள். அந்தளவிற்கு மாங்குமாங்கென்று ஆடினாள். ஆராயி கிழவியும் பாஞ்சாலையும்கூட சந்திரப்பூவாவின் ஆட்டத்தைப் பார்த்து அசந்து விட்டார்கள்.
தேர் கொஞ்ச கொஞ்சமாய் நகர்த்தப்பட்டுச் சுடுகாட்டை நோக்கிச் சென்றது. ஆண்கள் தலை குனிந்தபடியே மெதுவாக தேருக்குப் பின்னால் நடந்து சென்றனர்.  வீதியின் முடிவிலே பெண்கள் அனைவரும் நிறுத்தப்பட்டார்கள். ஒப்பாரி ஓய்ந்து போனது. சந்திரப்பூவா மெதுவாக மண்ணிலே சாய்ந்தாள். ஆராயி கிழிவிதான் ஓடி வந்து சந்திரப்பூவாவைத் தூக்கி உட்காரவைத்துப் பக்கத்து வீட்டிலிருந்து கொஞ்சம் குடிக்க தண்ணீர் வாங்கி குடிக்க வைத்தாள்.
சாவு வீடு சுத்தமானது. நெருங்கிய உறவுகளைத் தவிர அங்கு யாருமில்லை. தண்ணீர் தெளித்து வாசல் சுத்தம் செய்யப்பட்டது. வாசலின் ஒரு ஓரத்தில் சுடுகாட்டுக்குச் சென்று வருகின்ற ஆண்கள் கால் அலசுவதற்காக அன்னபேஷனில் தண்ணீர் வைக்கப்பட்டது. அந்தத் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஆராயி கிழவி, சந்திரப்பூவா, பாஞ்சாலை ஆகிய மூவரும் குத்துக்காலிட்டு வரிசையாய் அமர்ந்திருந்தனர்.
சுடுகாட்டிற்குச் சென்று வந்த ஆண்கள் ஒவ்வொருவராய் காலில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றார்கள். அங்கிருந்தவர்களில் ஒருவர்,
“யாரும்மா நீங்க… இங்க உட்காந்திருக்கீங்க.. என்ன வேணும்” என்றார்.
“அண்ணே! நாங்க கூலிக்கு மாரடிக்க வந்தோம்மண்ணே. கூலிய கொடுத்தீங்கின்னா போயிடுவோம்” என்றாள் பாஞ்சாலை.
அப்பத்தான் அவரு சந்திரப்பூவாவ பாக்குறாரு. சந்திரப்பூவா ஆடிய ஆட்டத்தையும் ஒப்பாரியையும் நினைவுக்கு வந்தவராய் வீட்டினுள்ளே செல்கிறார். வெளியே வரும்போது மூவருக்கும் சேர்த்து மூன்று ஐநூறு ரூபாய்களைச் சந்திரப்பூவாவிடம் கொடுக்கின்றார்.
இரண்டு ஐநூறு ரூபாய்களை ஆராயி கிழவியிடமும், பாஞ்சாலையிடமும் கொடுத்துவிட்டு வேகவேகமாக நடக்க ஆரம்மிக்கிறாள் சந்திரப்பூவா.
“எங்கடி எங்கள விட்டுட்டு நீ மட்டும் போற… இருடி நாங்களும் வந்திடுறோம்” என்றாள் ஆராயி கிழவி.
“நீங்க பொறுமையா வாங்க… நான் எம்புள்ளைய பாக்க போகனும். அவன் காலையிலயிருந்து எதுவும் சாப்பிடல. எப்படி இருக்கானோ? என்ன நினைச்சி மனசு வலிச்சுதோ தெரியல… இப்பவரை பசியை எப்படி பொறுத்துக்கிட்டு இருக்கான்… எனக்கு ஒன்னும் இல்ல.. பையனுக்குப் பசியே தெரியாத மாதிரி இனிவே வேண்டியதை கொடுக்கனும். அதுக்கு அந்த மாரியாத்தாதான் துணை நிக்கனும்” என்றபடி வேகவேகமாய் இன்னும் நடையைக் கூட்டினாள்.
சந்திரப்பூவா வாங்கின ஐநூறு ரூபாய்க்கும் அரிசி பருப்பு காய்கறிகள் என வாங்கிக் கொண்டாள். போன உடனே சமைத்துச் செல்வத்திற்குச் சுடசுட கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

சிறுகதையின் ஆசிரியர்

திருமதி நித்யா லெனின்,

ஓசூர் – 635 130.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here