கொடிமரத்தின் வேர்கள் கவிதையில் தேசியம்

முன்னுரை

உயிரினங்களில் மனிதனே அறிவு வளர்ச்சியால் மேலோங்கியுள்ளான். மனிதன் மொழி, இனம், சமூகம், நாடு என்று ஓர் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறான். தனது தன்னுடையது என்ற உரிமையோடு நாட்டைக் காப்பவனாக இருக்கின்றான். அதேசமயத்தில் உரிமைகள் பறிக்கப்படும்போது அதற்காகப் போராடுகிறான். உயிர்த் தியாகமும் செய்கின்றான். அவ்வுத்தமர்களை என்றும் போற்றி வணங்கும் பண்பாளர்களாக இலக்கியவாதிகள் உள்ளனர் என்பதைக் காட்டுமுகமாக இக்கட்டுரை அமைகின்றது.

கொடிமரத்தின் வேர்கள்

சமூகத்தின் பிரச்சனைகளை எடுத்தியம்பும் இலக்கியங்கள். நாடகம் நாவல், சிறுகதை, கவிதை போன்றவையாகும். இதில் கவிதை மக்களுக்கு எளிதில் சென்றடையும். மேலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வைரமுத்து தேசிய அவலங்களை கொடிமரத்தின் வேர்கள் என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் பதிவு செய்துள்ளார். இதில் அன்றைய அறிவியல் முன்னேற்றத்தின் விளைவுகளையும் தேசத்தியாகிகளின் நிலையையும், மக்கள் அமைதியின்றி போராடும் நிலை பற்றியும் வெளிப்படுத்துவதை இக்கவிதை தொகுப்பில் காணமுடிகின்றது.

சுதந்திரத்திற்குப்பின் தியாகி

இந்திய நாட்டு விடுதலைக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்தனர் தியாகிகள். சுதந்திரப் போராட்டத்தில் எஞ்சிய தியாகிகள் வலுவிழந்த நிலையில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கிராமம் ஒன்றில் தியாகி ஒருவர் மந்திரி வரும் நாளன்று இறந்துபோனார். அவரின் உடல் மந்திர் வரும் சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்று தொண்டர்களிடத்திலும் மந்திரியின் பாதுகாப்பிற்காக வந்த காவலர்களிடத்திலும் தியாக்பின் உடல் சுடுகாடு செல்ல சுடுகாடு கேட்டது.  அந்த அவல நிலையை.

ஒரு தியாசியின் பிணம்

சுடுகாடு வருவதற்குச்

சுதந்திரம் கேட்டது

கிடைத்ததா என்ன?

இவரைப் பற்றி

எழுதி வைக்கும்முன்

மகாத்மா பாவம்

மரித்துப் போனார்

என்ற இக்கவிதை அடிகள் தியாகியின் நிலையைத் தெளிவு படுத்துகிறது.

சிதை உண்ட இந்தியா

வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர் அரசர்களிடம் இருந்து ஒற்றுமையின்மையை அறிந்து கொண்டு, இந்தியாவைத் தன் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்திக் கொண்டனர். அடிமையில் கிடந்த இந்தியாவிற்கு சுதந்திரமாய் வாழ சுதந்திரம் தேவைப்பட்டது. ஆனால் சுதந்திரம் கிட்டிய இந்தியாவிற்கு இனம், மொழி, தொகுதி பங்கீடுகள். தேவைப்பட்டது என்பதனை,

அடிமை இந்தியா

தேசியம் கேட்டது

சுதந்திர இந்தியா

தேர்தல் கேட்டது

என்று அடிமை இந்தியா காசி முதல் கன்னியாகுமரி வரையிலான மனித ஒருமைப்பாட்டை வலியுறுத்தியது. அதன் விளைவாகத்தான் சுதந்திரமும் பெறமுடிந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த நம் மக்களோ இனம், மொழி என்ற அடிப்படையில் தங்களைப் பிரித்துக்கொண்டு, அவர்களுக்குள்ளேயே ஆட்சி புரிவதில் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.  தங்களிடம் இருக்கும் இயற்கை வளங்களை மற்ற மாநிலத்திற்குப் பகிர்ந்தளிப்பதற்கு மனம் இன்றித்தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்கின்றனர். அன்று மக்களுக்காகப் போராடியவர்கள் தேசியம் கேட்டனர்; இன்று பணத்திற்கும். பதவிக்கும் போராடுபவர்கள் தேர்தல் கேட்கின்றனர். சுதந்திர இந்தியாவில் தேசியம் அழிந்து கொண்டிருப்பதை இக்கவிதை காட்டுகின்றது.

பூங்காவிற்குப் புதியசட்டம் பிச்சைக்காரனால்

மனிதன் செய்யும் தவறுகளைச் சரிசெய்யும் பொருட்டுச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் தவறு செய்தவன் யாராக இருப்பினும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கை வகுக்கப்பட்டது. அதே ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றையச் சூழலில், பசுமையான பூங்கா ஒன்றில் வெறுந்தட்டை கையில் கொண்ட பிச்சைக்காரனிடம் அவள் தட்டைப் போன்றே வயிறும் வெறுமையாக இருந்தது. அந்த பூங்காவிற்கு ஓய்வு எடுக்க வரும் மக்கள் பிச்சைக்காரனைப் பார்த்து வேறு பக்கம் திரும்பினர். அந்தத் தருணத்தில் காகம் ஒன்று கரைய அதன் ஓசையில் பசியில் வாடிக்கிடந்த அவன் திடுக்கிட்டான். மனிதன் போனால் போகட்டும், நான் உனக்கு பிச்சை இடுகின்றேன் என்பது போல ஒரு மரம் தன் மலரை அவனுக்கு பிச்சையிட்டது. அவன் அந்த மலரின் இதழை மெல்ல மெல்லத் புசிக்கத் தொடங்கினான். அடுத்தநாள் பூங்காவின் அறிவிப்புப் பலகையில் ஒரு வாசகம் பூக்கள் புசிப்பதற்கல்ல என்று எழுதப்பட்டது. இதில் இயற்கை காட்டும் பரிவு கூட மனிதர்களிடத்தில் இல்லை என்பதும் சட்டங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு பயன்படாத நிலையும் வெளிப்படுகின்றது.

காதலனுக்கு கடிதம்

இன்று உலகந்தோறும் பல தீவிரவாத செய்ல்கள் ஊடுருவி வருகின்றது. இது போன்ற தீவிரவாத அமைப்புகளினால் ஏராளமான மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றனர். இதைத் தடுக்க அரசு பாதுகாப்புப் படையை நியமித்திருக்கின்றது. அந்தப் பாதுகாப்புப் படையில் இருக்கும் வீரன் ஒருவனுக்கு அவன் காதலி கடிதம் எழுதுகிறாள். அதில்,

காதலா

நீயும் நானும்

ரகசியமாய் நடந்து போகும்

ராத்திரிச்சாலை

இப்போது வெடிகுண்டுகளின்

விதைப் பண்ணையாகிவிட்டது.

மரணத்திற்கு இங்கு யாரும் அஞ்சுவதில்லை.

என்றாலும் கூட உன்னை

நினைத்துக்கொண்டிருக்கின்றேன்.

என் இனியவனே

எப்போதும் துப்பாக்கியை

நேசிக்கும் உனக்கு

எப்போதாவது என் நினைவு வந்ததுண்டா?

துப்பாக்கி எப்போது பூ பூப்பது

அப்போதுதான்

நீ என்னை நினைப்பாய்.

காதலனே – இப்போது

நான் திருமணத்தைக் காதலிக்கவில்லை – ஆனால்

பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஏனென்றால்

ஈழ யுத்தத்திற்கு

இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்

தம்பதிகளாய் இருப்பதிலும்

சுதந்திர ஈழத்தில்

கல்லறைகளாய் இருப்போம்

என்று தன் குமுறலைக் காதலனுக்கு அனுப்புவதாகக் காட்டுகின்றார் கவிஞர்.

புத்தாண்டு

சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் நம் நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சுமந்து கொண்டு வருகின்றது. இதை அறிந்த கவிஞன் தன் மக அழுத்தத்தை வெளிப்படுத்துகிறான். அறிவியல் வளர்ச்சியின் விளைவில் குளோனிங் முறையைப் பயன்படுத்திப் பிறக்கும் குழந்தையை எண்ணி வருந்துகின்றார். அக்குழந்தைகள் சொந்த பந்தங்கள் பற்றி அறிந்திருக்குமா ? இல்லை சொந்தம் என்றால் என்ன ? என்ற கேள்வி தான் எழுப்புமா ? இல்லை அக்குழந்தைக்கு தாய்ப்பால் தான் கிடைக்குமா ? என்று வருந்துகிறார். மேலும்.

“சோதனைக் குழாயில்

தாய்ப்பால் வடியுமா ?”

“கவலைகள் கழிந்த

நாடு கொண்டு வா”

கதவுகள் கழிந்த

நாடு கொண்டு வா”

அகிலம் துயில

படைதீ கொண்டு வா

என்று இனி வரும் புத்தாண்டில் நாம் நினைத்த அமைதியான நாடாக வேண்டும் என்கிறார். இக்கிவிதையின் மூலம் கவிஞன் ஒரு பற்றுக் கொண்டவராகத் திகழ்வதைக் காணமுடிகின்றது.

முடிவுரை

அக்காலத்தில் அந்நியரிடம் போராடினோம். அனால் இன்று அரசியல் வாதிகளிடம் போராட வேண்டியிருக்கிறது. மேலும் ஒன்றாக இருந்த இந்தியா இன்று சிதைந்து கிடக்கின்றது. இதற்கு மனிதனின் அதிகாரமும் ஆதிக்கமும் தான் காரணமாகின்றன. மனிதன் நாட்டைப் போலவே இனம், மொழி என்ற அடிப்படையில் பிரிந்து கிடக்கின்றான். தீவிரவாதிகள் தேசத்தை நேசித்திருந்தால் நாம் அணுகுண்டுகளைப் பற்றி யோசித்திருக்க வேண்டியதில்லை. எப்போது நிம்மதியாக உறங்குவோம் ? இந்த நூற்றாண்டிலாவது அது நடக்குமா? கொடிமரத்தின் வேர்களை அழிக்க நினைக்கும் தீய சக்திகளிடம் இருந்து வேர்களைக் காப்பாற்றுவது நம் கடமைகளாகும். தீவிரவாதம் ஒழிய நாம் பாடுபட வேண்டும். இது போன்ற தேசப்பற்று புகட்டும் இலக்கியங்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்படவேண்டும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.எழுதிகச் சாங்கியம்

2.விடுதலைப் பண்ணையம்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here