கம்பளத்து நாயக்கர் என்போர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் ஓர் இனத்தார் ஆவர். ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கு வந்து குடியமர்ந்துவிட்டனர். தமிழ்நாட்டில் இவர்களைக் கம்பளத்தான் என்று அழைப்பர். கர்நாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியான கம்பளம் என்ற பகுதியில் இருந்து வந்ததால் இவ்வாறு பெயர் பெற்றிருக்கக்கூடும் . இவர்கள் பேசும் மொழி தெலுங்கு மொழியாகும். ஆந்திராவில் இருந்து இவர்கள் தமிழகத்தில் குடியேறியதற்கான மூன்று காரணங்களை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை,
1.முகமதியர்களின் படையெடுப்பு
2. ஆந்திராவில் ஏற்பட்ட பஞ்சம்
3. அரசியல் நகர்வு
என்பனவாகும் .
ஆந்திரத்தின் மீது முகமதியர்கள் படையெடுத்ததன் காரணமாக இவர்கள் தமிழகத்தை நோக்கி நகர்ந்தார்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் முகமதிய சமூகத்தைச் சார்ந்த மன்னன் ஒருவன் கம்பளத்துச் சமூகப் பெண்ணொருத்தியை மணமுடித்துத் தரும்படிக் கேட்டதாகவும் இதனை விரும்பாத கம்பள நாட்டை ஆண்டுவந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னன் முகமதியர்களிடமிருந்து தம் குலப் பெண்களைக் காப்பாற்றிக்கொள்ள தெற்கு நோக்கிச் செல்ல ஆணையிட்டதாகவும் அந்த வருகை ஜக்கம்மா என்ற பெண்ணின் தலைமையில் நிகழ்ந்ததாகவும் அப்படி வரும் வழியில் ஏற்பட்ட தடைகளை எல்லாம் அந்தப் பெண் வீரம், மாந்திரீகம் போன்றவற்றால் வெற்றி கொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக (ராஜ) கம்பளத்தைச் சார்ந்தவர்கள் அப்பெண்ணைக் குலதெய்வமாகக் கொண்டாடுகின்றனர். மேலும் அந்த ஜக்கம்மாளுக்கு 9 குழந்தைகள் பிறந்ததாகவும் அந்தப் பிள்ளைகளின் பிரிவு தான் இன்று கம்பளத்து மக்களிடம் காணப்படும் ஒன்பது வகையான பிரிவுகள் என்றும் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் வாழும் கம்பளத்து மக்கள் மேற்சுட்டிய ஜக்கம்மா கதையைச் சிறுசிறு மாற்றங்களோடு சொல்லிவருகின்றனர். இவ் இனத்தாரிடம் காணப்பெறும் ஒன்பது பிரிவுகளை பெத்தவாரு, கொல்லவாரு, சில்லவாரு, தோக்கலவாரு, காப்புவாரு, மல்லவாரு, நித்ரவாரு, பாலவாரு, சீலவரு என ஒ. முத்தையா குறிப்பிட்டுள்ளார்(2003).
நானூறு ஆண்டுகளுக்கு முன்னால்ஆந்திரப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்ட தற்கான பதிவு எதுவும் பெரிய அளவில் கிடைக்கப் பெறவில்லை. எனினும் அவர்களது இடப்பெயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.
13ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மதுரையை ஆண்ட பாண்டியர்களிடம் ஏற்பட்ட அதிகாரப் பகிர்வுச் சண்டை விஜயநகரப் பேரரசை தமிழகம் வர வைத்தது. அதன் காரணமாக நாயகர்கள் தமிழகத்திற்கு வர தொடங்கினர். முதலில் 14ஆம் நூற்றாண்டில் அரசப் பிரதிநிதிகளாக வந்தவர்கள் பிறகு பாளையக்காரர்களாக ஆகிவிட்டனர். பாண்டிய நாட்டுக் குழப்பத்தை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் கிருஷ்ண தேவராயரால் அனுப்பிவைக்கப்பட்டார் . பிறகு மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார் . அவரது வருகையிலிருந்து நாயக்க மக்களின் வருகையும் தொடங்கியது . இவ்வாறாக மூன்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூடக் கம்பளத்து மக்களில் பெரும்பாலோர் முதல் காரணத்தையே குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.
கம்பளத்து நாயக்கருள் ஒரு பிரிவினர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள ஆர்டி மலை ஊராட்சிக்கு உட்பட்ட வாலியம்பட்டி என்ற ஊரில் வசித்து வருகின்றனர் . இவர்கள் பெரும்பாலும் உழவுத்தொழில் செய்து வாழ்கின்றனர். எனினும் ஆடு மாடுகள் வளர்ப்பது அவர் தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். பொங்கல் திருநாளின் போது இவர்களிடம் காணப்படும் ஒரு வழக்காறு கால்நடைச் சமூக எச்சத்தைக் கொண்டுள்ளது.
தைத் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்படும் முதல் நாளில் வாலியம்பட்டியைச் சார்ந்த கம்பளத்து நாயக்கர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடுகின்றனர். கூடி, தாங்கள் வளர்த்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை ஓட்டிக்கொண்டு மாலை 4 மணி அளவில் காமனாம்பட்டி என்ற சிற்றூருக்கு முதன்முதலாக வருகின்றனர்.
இவர்களோடு கோமாளி வேட்டமிட்ட இரண்டு அல்லது மூன்று பேரும் வருகின்றனர். அவர்களோடு தப்படிப்போரும் உருமிமேளம் வாசிப்போரும் உடன் வருகின்றனர். ஊரில் இருக்கும் கோயில் மைதானத்தில் கூடி இசைக்கருவிகளின் வாசிப்புக்கு ஏற்ப கோமாளியும் அவர்களோடு உடன் வரும் ஒரு சிலரும் நடனம் ஆடுகின்றனர்.
பிறகு எல்லோரும் சத்தமாக குரலெடுத்து கத்த மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தவர்களில் பெரும்பாலோர் தம் மாடுகளை விரட்டி கொண்டு வந்த வழியிலேயே சென்று விடுகின்றனர். பிறகு அங்கே இருக்கும் 20க்கும் மேற்பட்ட கம்பளத்து நாயக்கர்கள் மாட்டோடும் இசைக்கருவி வாசிப்பாரோடும் கோமாளிகளோடும் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்கின்றனர். இவர்களது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஊர் மக்கள் தங்கள் வீடுகளைத் தூய்மை செய்து வீட்டிற்கு முன்பாக கோலமிட்டு எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் . கம்பளத்தார் ஒரு மாட்டை வீட்டு வாசலுக்கு முன்பாக நிறுத்தி மாட்டின் முன்னங்கால்களில் ஒரு குடம் நீர் ஊற்றுவதோடு மஞ்சள் நீரையும் ஊற்றுகின்றனர். பிறகு சூடம் சாம்பிராணி காட்டி மாட்டை வரவேற்கின்றனர். கூடியிருக்கும் எல்லோரும் சத்தம் எழுப்ப மாட்டை வீட்டின் உள்ளே இழுத்துச் செல்கின்றனர்.
வீட்டுக்குள் செல்லும் மாட்டிற்கு ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசி வைத்து உண்ண வைக்கின்றனர். ஓரிருவாய் உண்ட பிறகு மாட்டை வெளியே இழுத்து வந்து நிற்க வைக்கின்றனர். வீட்டிற்குள் செல்லும் மாடு வீட்டிற்குள்ளேயே சிறுநீர் கழித்தால் அதனை வீட்டுக்காரர் பெருமைக்குரியதாகக் கருதுகின்றனர். வெளியில் கொண்டு வரப்பட்ட மாட்டுக்கு முன்பாக வீட்டுக்காரர் வெற்றிலை பாக்கு வைத்து 50 ரூபாயோ 100 ரூபாயோ தங்கள் வசதிக்கு ஏற்ப அளிக்கின்றனர். அதைப் பெற்றுக்கொண்டு மாட்டுக்காரர் வீட்டரை வாழ்ந்துகின்றார். அவ்வாழ்த்து ‘ சாமி என்ன தருமோ ரூபா தருமோ குறைய பணமோ எலுமிச்சம் கனியார் பட்டி பெருகி பால் பால் பொங்கி சேர் மேல் சேரும் ஆதாயம் (கூடியிருக்கும் சிறுவர்கள் ஓ …………. என இதற்கு முழங்குகின்றனர்) மலையூர் மண்ணுக்கலஞ்சாலும் கஞ்சிக் கள்குடிக்கும் யார்குடியார் தலைக்குடியார் மண்ணபுடிச்சா பொன்னா விளையும் மலைபோல் வந்தால் பனிபோல் நீங்கும். நித்த கண்ணாலமோ பச்ச தோரணமோ பழிகாரர் கை கீழேயோ உன் கையை மேலேயோ சனி எல்லாம் போகட்டும்’ என்பதாக அந்த வாழ்த்து உள்ளது.
இவ்வாறு வாழ்த்திய பிறகு வீட்டிற்கு வரும் கோமாளி தன் கையில் ஓரடி அளவில் உள்ள தோல் வாரினால் வீட்டாரின் தலையில் வைத்து வாழத்திவிட்விட்டுப் போகிறார் .இந்த வாழ்தை வீட்டுக்காரர்கள் மிகப் பெருமை யோடு ஏற்றுக்கொள்கின்றனர். அத்தோடு கோமாளியையும் வீட்டிற்கு முன்பாக ஆடச் சொல்லி மகிழ்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு வீடாக செல்லும் கம்பளத்து நாயக்கர்கள் அட்டவணைப்படுத்தப்பட்டவர் வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுகின்றனர். இந்நிகழ்வு பொங்கல் திருநாள் நடைபெறும் நான்கு நாட்களிலும் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று நிகழ்த்தப்படுகிறது.
மாடுகளை ஓட்டி வரும் கம்பளத்து நாயக்கர்கள் வெள்ளை வேட்டியும் தலைப்பாகையும் அணிந்துள்ளனர் . சிலர் ரோஜா நிற தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலும் அவர்கள் அணிந்திருக்கும் ஆடை புத்தாடையாக உள்ளது .கழுத்தில் பழுப்பு, கருப்பு , வெள்ளை நிறத்திலான பாசி மாலை அணிந்துள்ளனர் . கையில் காப்புக்கயிறும் அணிந்துள்ளனர். மேலும் ஆடு மாடு மேய்ப்பதற்குப் பயன்படும் நான்கு அல்லது ஐந்து அடி உயரம் உடைய தடி ஒன்றையும் கையில் வைத்துள்ளனர் .மிக அரிதாக ஒரு சிலரைத் தவிர பிறர் யாரும் மேல்சட்டை அணியாமல் வருகின்றனர் .
கோமாளி வேடமிட்டு வருபவர்கள் நாடகத்தில் வரும் கோமாளி போன்று ஆடை உடுத்தி உள்ளார் . தலையின் மீது இரண்டு அல்லது மூன்று அடி உயரமுள்ள அணி ஒன்றையும் அணிந்துள்ளார் . கண் மட்டும் தெரியும் படியாக முகமூடி அணிந்து உள்ளார். முகமூடியின் வாய்ப் பகுதிக்கு நேராக பெரிய பெரிய பற்கள் இருப்பது போன்று வெள்ளை நிறத்திலான பற்கள் வரையப்பட்டுள்ளன. வெண்மையான சோலியைக் கோத்தும் பற்கள் போன்று அமைத்துள்ளனர். காலில் சலங்கை அணிந்துள்ளார் . பொதுவாக கம்பளத்து நாயக்கரிடம் தேவராட்டம் , சேவையாட்டம், பலவேட ஆட்டம் என்பன ஆடும் வழக்கு உண்டு. எனினும் இங்குக் கோமாளி ஆடுவது தேவராட்டம் ஆகும்.
பொங்கல் திருநாள் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வாலியம்பட்டி ஊரிலுள்ள கம்பளத்து நாயக்கர்களின் வழிபாட்டு தெய்வங்களான முத்தாலம்மா, ஜக்கம்மா , பொம்மக்கா கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. அத்தோடு மாலை தாண்டும் விழா என்ற ஒன்று நிகழ்த்தப்படுகிறது . இந்த விழாவில் கரூர் , திருச்சி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நாயக்கர்கள் சாமி மாடு எனத் தாங்கள் வளர்த்த மாடுகளைக் கொண்டு வந்து மாலைதாண்டு நிகழ்வில் கலந்து கொள்ள வைக்கின்றனர். அந்த மாடுகளை இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டி விடுகின்றனர். ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாடுகளுக்கு எலுமிச்சம்பழமும் வெற்றிலையும் கொடுத்து சிறப்பு செய்ய படுகிறது.
‘வாலியம்’என்ற சொல்லுக்கு ஆயர் குடியிருக்கும் இடம் என்பது பொருளாகும் . பட்டி என்பது ஆடு மாடு அடைக்கும் இடமாகும். இப்பெயர்பொருத்தத்திற்கு ஏற்ப வாழ்ந்துவரும் கம்பளத்து நாயக்கர்களைப் பற்றிச் சுற்றுவட்டாரத்தில் சொல்லப்படும் மதிப்பீடுகள் வருமாறு :
1.மதுஅருந்துவது கிடையாது.
2.பொய் பேசமாட்டார்கள்.
3.தம் வீட்டைத் தவிர பிற இடங்களில் நீரோ உணவோ உண்ண மாட்டார்கள்.
4.தம் சமூக ஒழுக்கங்களை மிகச்சரியாகக் கடைபிடிப்பார்கள்
5.இவர்கள் சாபம் இட்டாலும் வாழ்த்தினாலும் அப்படியே பலிக்கும்.
பொங்கல் திருநாள் என்பது கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் தமிழர்கள் செலுத்தும் வணக்கத்திற்குரிய விழா. உழவுக்கு துணை செய்யும் கால்நடைகள் தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களைப் போன்றே திராவிட இனத்தினுள் ஒருவரான தெலுங்கு கம்பளத்து நாயக்கர்களும் கால்நடைகளை வளர்த்து வருவதோடு மட்டுமின்றி அவற்றை வழிபடுவது மட்டுமின்றி அவற்றின் வழியாக பிறரையும் வாழ்த்தவும் செய்கின்றனர் என்பது இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவர்களது வாழ்வியல் சார் நிகழ்வுகளிலும் தமிழர்களின் வழக்காறுகள் காணப்படுகின்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். கம்பளத்து நாயக்கர்கள் சொல்லும் சொல் பலிக்கும் என்ற நம்பிக்கையுள்ளதால் அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதை அவ்வட்டார மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி-620023,
மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com
அ.செல்வராசு அவர்களின் படைப்புகளைக் காண்க..