Wednesday, August 26, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home சிறுகதைகள் குடும்பச்சிறுகதைகள் கருமிளகு|சிறுகதை|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்

கருமிளகு|சிறுகதை|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்

கருமிளகு|முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்
“அம்மா… அன்னைக்கு ஹோட்டல்ல சாப்பிட்டோமே, அதே மாதிரி இன்னைக்கு நைட்டுக்கு நல்லா காரசாரமா ‘பெப்பர் சிக்கன் ப்ரை’ செஞ்சு குடுமா…” என்று மகன் ஆசையாய்க் கேட்க, சமையலறைக்குள் மொபைலைத் தூக்கிக் கொண்டு  நுழைந்தாள் அவள். 
யூடியூப்பில் ‘சிக்கன் மிளகு வறுவல்’ செய்முறையைத் தேடி பார்த்து முடித்தபோது, தற்செயலாகப் பக்கத்தில் ஒரு பரிந்துரை வீடியோ தட்டுப்பட்டது. ‘மம்மிகளைப் பாதுகாக்கும் எகிப்திய அறிவியல் – இந்திய கருமிளகின் ரகசியம்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் அவள் விரல்கள் தானாக அதைத் தொட்டன. “மூவாயிரத்து இருநூறு வருசத்துக்கு முந்திய உடம்பு அழுகாமல் இருக்க, எகிப்து பார்வோன்களுக்கு நம்ம ஊர் கருமிளகை மூக்கின் உள்ளே  திணித்து வைத்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்ற தகவலைப் பார்த்த கணத்தில், அவளுக்குள் பழைய நினைவுகள் அப்படியே பின்னோக்கிச் சுழன்றன. காலச் சக்கரம் அவளைச் சட்டென்று முப்பது வருடத்துக்கு முந்தைய மேலஇலந்தைக்குளம் கிராமத்துக்கு இழுத்துக்கொண்டு ஓடியது. அப்போது அவளுக்கு, ஏன் எதற்கு என்று காரணத்தைத் தேடிய வயசு.  
அவர்கள் குடும்பம் வாழ்ந்த தெற்கு வீட்டு வாசலில் இருந்து பார்த்தால், வடக்கு வீட்டுத் திண்ணையில் நான்கு மூலைகளிலும் கல்கள் தாங்கி நிற்கும் உயரமான மரக்கட்டிலில், அவளின் அப்பத்தா கம்பீரமாக அமர்ந்திருப்பது தெரியும். கையில் வெண்கலக் கும்பா இருக்கும். அதிலே வெற்றிலையை மென்று துப்பும் அந்த அழகை, சிறுமியாக இருந்த அவள் வாசலில் நின்றபடியே வேடிக்கை பார்த்து ரசிப்பாள்.  மஞ்சள் பூசி பளிச்சுன்னு இருக்குற முகத்தில் திருநீற்றுப்பட்டையும், அதன் நடுவே குங்குமமும் மிளிர, வழுவழுப்பான கைகளில் ஓடுற பச்சை நரம்புகளுமாய்க்  காட்சி தரும் அவள்தான் அந்த வீட்டோட மகாராணி. நெட்ட நெடு உயரமும் கண்ணங் கரேர்னு இருக்குற கறுப்பு நிறமும் உடைய தாத்தாவிற்கு, இந்த மகாராணி கரிசல் காட்டு வாகைத்தாவூரில் இருந்து வந்து வாய்த்தது அவளுக்கு ஆச்சரியம்தான். 
அப்பத்தாவிடம் ஒருநாள், ‘ஆத்தா…நீங்க கலரா இருக்கீங்க. தாத்தா மட்டும் ஏன்  இம்புட்டுக் கறுப்பா இருக்காரு. ?’ என்று அவள் கேட்க, சிரித்துக்கொண்டே தன் பளபளப்பான கையை நீட்டி அவள் கன்னத்தைக் கிள்ளியபடி அப்பத்தா,  ‘செவக்காட்டு வெயிலடிச்சு தாத்தோவோட மேனி கறுத்துப்போச்சு தாயி.. ஆனா என்ன? அவரோட மனசுல இருக்குற குணம் இருக்கே, அது மிளகுக் காரத்தை விட எத்தனையோ மடங்கு வீரியமானது! மனுஷனுக்கு வெள்ளையா இருக்கிற தோலைவிட, நெஞ்சோட காரமும் உறுதியும் தான் முக்கியம் தாயி!’ என்று தாத்தாவின் நிறத்தைப் பற்றிய கவலையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, அவரது அன்பை மட்டுமே பெரிதாக மதித்துக் கூறியவள்.
கூடவே சொந்த அத்தை பிள்ளை என்ற உரிமை, நிறங்களைக்கடந்து அவர்களை உறவாட வைத்தது என்றுதான் கூறவேண்டும். அந்தக்காலத்துப் பெரியவர்கள் நிறத்தை ஒரு பெரிய குறையாகப்  பார்க்கவில்லை. அந்தப் பாசப் பிணைப்பில்தான் ஏழுகிராமத்து நிலக்கிழார் என்ற அந்தஸ்துடைய மணவாளனுக்கு இந்த மகாராணி இரண்டு ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் பிள்ளைகளுமாய் ஐந்து ஜீவன்களைப் பெற்றுத் தந்து அந்தச் செவக்காட்டு வம்சத்தையே தழைக்க வைத்தாள். இருவரும் தங்களின் முதுமையிலும் கூட, ஒருவருக்கொருவர் சளைக்காமல், பேச்சுத் துணையாய் எந்நேரமும் காடு கரை, உழவு உறவு என நேரத்தைக் கழிப்பதுண்டு. பெயருக்கு ஏற்றார் போல அந்த ஏழூர் ஜனங்களுக்கும் அன்னத்தை வற்றாது ஆக்கி வழங்கியவள்தான் இந்த அன்னத்தின் தாய். 
அப்படிப்பட்ட அப்பத்தா ஆண்டுகள் கடந்து வயதான காலத்தில் உடல்நலம் குன்றி, நலிந்து போன நாள்கள் வந்தபோது, மருத்துவர்கள் முடியாது, ‘இரண்டு நாட்கள்தான் தாங்கும்’ என நாள் குறித்து வீட்டிற்கு அனுப்ப, மேலஇலந்தைக்குளத்து வீடே உறைந்து போய் கிடந்தது. 
தினமும்  மரக்கட்டிலில் அமர்ந்து அதற்கு உயிர்கொடுத்துக் கொண்டிருந்த அப்பத்தா, அன்று அக்கட்டிலில் உணர்வற்றவளாய்க் மரக்கட்டையாய்க் கிடந்தாள். அத்தைகள் இருவரும் ஆத்தாவின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் சோகமும் வருத்தமுமாய் அமர்ந்திருக்க, இரண்டு மருமகள்களும் முகத்தில் கவலையைத் தேக்கிக்கொண்டு வேலைகளை செய்து கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர். திண்ணையில சுற்றுவட்டாரத்து ஜனங்கள் எல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
“ஆத்தா, அம்புட்டு லேசுல உசிர விடாதுப்பா… வாழ்ந்த இந்த வீட்டையும் வாக்கப்பட்ட புருஷனையும் தவிக்கவிட்டுச் செல்ல அந்த மகராசிக்கு எப்படி மனசு வரும்? அதுவும்  நம்ம செவக்காட்டுப் பக்கமெல்லாம் உசிர் போற வரைக்கும் நல்லாத் தவிச்சுத்தான் அடங்கும். அதுதான் முறை” என்று பெரியவர்கள் பேசிக்கொண்டது அவளுக்கு அரைகுறையாகக் கேட்டது.  
ஆனாலும் பாசக் கயிறு அப்படியே விட்டுவிடுமா என்ன? அப்போதுதான் அவளுடைய அண்ணன் வேலூர் சி.எம்.சி-யில் மருத்துவத்தைப் படித்து முடித்து லீவுக்கு  வந்திருந்தான். டவுன்ல படிச்ச நவீன விஞ்ஞானமும் போகிற உயிரைத் தவிக்கவிடக்கூடாது என்கிற மனித நேயமும் அவனுக்குள்ளே துளிர்த்தது. “அப்பத்தாவுக்கு இன்னும் லேசாத் தான் உயிர் இருக்கு… அதற்காக அவரை அப்படியே விட்டுவிடக் கூடாது. உயிர் பிரியும் வரை குளுக்கோஸ் ஏற்றலாம்” என்று கூற, குளுக்கோஸ் பாட்டில்கள் வரவழைக்கப்பட்டன. உடனே அண்ணன், அப்பத்தாவின் தளர்ந்து போன கைகளில் ஊசியைக் குத்தி குளுக்கோஸ் பாட்டிலைக் கட்டிலின் அருகே இருந்த ஜன்னலில்,  கயிறு கட்டி தொங்கவிட்டான்.  
சொட்டுச் சொட்டாக மெல்ல இறங்கிய குளுக்கோஸைப் போலவே, அந்தக் கணங்களும் காலமும் கூட நகர்வதே தெரியாமல் மெல்ல நகர்ந்தன.
ஒருநாள் முடிந்து மறுநாள் விடியற்காலம். சரியாக எட்டு மணி அளவில், இறங்கிக் கொண்டிருந்த குளுக்கோஸ் சட்டென்று நின்றது. அதைப் பார்த்ததும் பதறிப்போய் அப்பத்தாவின் நாடியைப் பிடித்துப் பார்த்த அண்ணன், அருகில் கண்கள் கலங்கி நின்ற அப்பா மற்றும் சித்தப்பாவிடம்,  “ஆத்தா உயிர் பிரிஞ்சிருச்சுப்பா…” என்று நா தழுதழுக்கக் கூறிவிட்டு, ஆத்தாளின் கையில் இருந்த ஊசியையும் குளுக்கோஸ் பாட்டிலையும் கழற்றினான். பிரிய மனமின்றி பிரிந்த தன் துணையை இழந்த தாத்தா பேச்சின்றி உறைந்துபோய் நின்றார். “ஐயோ எங்களை அனாதையாய் விட்டுவிட்டுப் போயிட்டேயே…மா” என்று அத்தைமார் அலற, திண்ணையில் காத்திருந்த உறவுகள் உள்ளே ஓடிவந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கின. வீடு முழுக்க அழுகைச் சத்தம் அடங்காமல் ஒலித்தது. 
அப்போதுத்தான் கூட்டத்தை நெட்டித் தள்ளிக்கிட்டு உள்ளே வந்தார் முத்தம்மாள் கிழவி. அவள் கையில ஒரு சின்ன உரலும், உடைஞ்ச சில மிளகுத் துண்டுகளும் இருந்தன. 
“இருங்க… சடாரென்று அழுது தீர்க்காதீங்க!” என்று கிழவி அதட்ட, அழுகைக்குரல் சற்றே அடங்கின.
“ஏன் கிழவி, இதயம் தான் நின்னுபோச்சே… டாக்டரே சொல்லியாச்சே அப்புறம் என்ன?” என்று மேலத்தெரு பெரியசாமி தாத்தா அதட்ட,  
“ராசா டவுன்ல படிச்ச டாக்டருதான், அவர் படிப்பு அவருக்கு. ஆனா நம்ம நாட்டு வைத்திய மரபுன்னு ஒன்னு இருக்குல்ல. இந்த மிளகு உசிர் இருக்கான்னு பாக்குற கடைசிப் பரீட்சை” என்று சொல்லிக்கொண்டே, கிழவி அங்கேயே உட்கார்ந்து சில மிளகுகளை நறநறவென்று நுணுக்கினாள். லேசாகத் தண்ணிர் தெளித்து, அந்த மிளகுச் சாற்றில் சில துளிகளை அப்பத்தாவோட வாயை விரலால் பிளந்து தொண்டைக் குழிக்குள் ஊற்றினாள்.   மீதமுள்ளதை நாக்கின் அடியிலும் அண்ணப் பகுதிகளிலும் தடவினாள்.
டாக்டர் பேரன் இதயத் துடிப்புநின்றுவிட்டதாக நவீன அறிவியலின்படி சொன்னாலும், முத்தம்மாள் கிழவியின் கைகளோ அந்த மிளகின் காரத்திற்கு அப்பத்தாவின் தொண்டையில் ஏதேனும் ஒரு சின்ன அசைவாவது தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தது. அப்பத்தாவின் உடம்பு அசையவில்லை. “விஷமுறிவும் நடக்கல, அசைவும் இல்ல… உசிர் போயிருச்சுப்பா… இனி அழுகலாம்” என்று கிழவி சொல்ல நின்ற கூக்குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கின.  
“ஆத்தா உயிர்தான் பிரிஞ்சிருச்சு… தொண்டைக் குழியில தசை இறுகிடுச்சு, இனி சாறு உள்ளே இறங்காது’ என்று வருத்தத்துடன் கூறினான்.
உடனே முத்தம்மாள் கிழவி, ‘ராசா… உள்ளே இறங்காட்டா என்னப்பா? வாயிலயும் நாக்கிலயும் இருக்குற இந்த மிளகுக் காரமே, உடம்பு கிருமி அண்டாமலும் கெட்டுப்போகாமலும் காத்து நிக்கும்!’ என்று உறுதியோடு சொன்னாள்.
அப்போது அங்கிருந்த நாட்டு வைத்தியர் ஒருவர் அருகில் வந்து, ‘உண்மைதான் தம்பி… நம்ம ஆத்தா சாவு மூப்பு மரணம்னு ஆயிடுச்சு. அதனால இதுல காரம் வேலை செய்யாது. ஆனா, சிலர் திடீர்னு விஷம் ஏறியோ அல்லது மயக்கத்திலோ மூச்சுப்பேச்சில்லாம கிடப்பாக; அவர்களை நிஜமாவே செத்துட்டாங்கன்னு நினைச்சுடக் கூடாது. அப்படிப்பட்டவங்க வாயில இந்த மிளகுச் சாற்றை இறக்கினா, உள்ளுக்குள்ள இருக்கும் விஷத்தை முறிச்சு அவங்களை கண் விழிச்சுக்க வைக்கும் அதுக்காகத்தான் இந்த முறை. உடம்புக்குள்ள ஏதாச்சும் விஷம் ஏறியிருந்தா அதை முறிக்கவும் இதுதான் மருந்து. அதனால்தான் ‘பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’னு  நம் முன்னோர்கள் சொன்னாங்க.!’ என்று விளக்கமாகச் சொன்னார்.
இதற்கிடையே காரியங்கள் விறுவிறு என நடந்தேறின. வீடே சுறுசுறுப்பாகியது. மருமக்கள் முறையான இளவட்டங்கள் அப்பத்தாவை அப்படியே குச்சு வீட்டின் தாழ்வாரத்திற்குத்  தூக்கிக்கிட்டுப் போய், நிலைக்கதவிலிருந்து கழற்றி,  திருப்பிப் போட்டு வைத்திருந்த பெரிய மரக் கதவின்  மேல் படுக்க வைத்துவிட்டு நகர்ந்தனர். சுற்றி நின்ற பெண்கள் சேலைகளைச்சுற்றிப் பிடிக்க அங்கே குளிப்பாட்டும் சடங்கு நடக்கத் தொடங்கியது. 
அப்போது அங்கே நின்றிருந்த சில முதியவர்கள் பேசிக்கொள்வது அவளுக்குக் கேட்டது, “மிளகுச் சாறை உள்ள ஊத்துனா, வயித்துக்குள்ள இருக்குற கெட்ட கழிவெல்லாம் வெளியேறும்பா…ஒண்ணும் வந்தபாடில்ல” என்று ஒரு கிழவி சொல்ல, இன்னொருத்தி, “ஆமா ஆமா… ஆனா ஆத்தா நீண்ட நாளா அன்ன ஆகாரம் இல்லாமல்லா  கிடந்தாக, அப்புறம் எங்க இருந்து அசடு வரும்?” என்று கூற, மற்றொருவர் “இப்பத்தானே ஊத்தியிருக்கு உடனேவா வெளியேறிடும்” என்று கூறி தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.  “அண்ணன்தான் சாறு உள்ளே இறங்காது என்று முன்பே சொல்லிவிட்டானே, பிறகு எங்கே இருந்து கழிவு, அசடெல்லாம் வெளியேறும்?” என்று தனக்குள்ளேயே ஒரு கணம் யோசித்துக்கொண்டாள் அவள்.
குளிப்பாட்டி முடித்ததும், அப்பத்தாவை ஒரு சுமங்கலியாகப் பேரலங்காரம் செய்தனர். புதிய அழகிய புடவையைக் கட்டி, மூக்கின் தூவரங்களில் மிளகை வைத்து பஞ்சு வைத்து அடைத்து, நாடிக்கட்டு கட்டினர். அதற்குள் நடுக்கூடத்தில் கட்டில் அகற்றப்பட்டு,   ஒரு பெரிய மர நாற்காலி போடப்பட அப்பத்தாவை அதில் வடக்கு நோக்கி அமர வைத்து, நாற்காலி சாய்ந்து விடாமல் இருக்கப் பின்னால் இருந்த ஜன்னல் கம்பியோடு சேர்த்து இறுக்கிக் கட்டினர். அதற்குள் வடக்குத் தெருவில் இருந்து ஐஸ் கட்டி சாக்குகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தனர். பெரிய ஐஸ் துண்டுகளைத் துணியில் சுத்தி, அப்பத்தாளோட அக்குள்களிளேயும், கால்களின் இடுக்களிளேயும் வச்சு அடக்கி கட்ட ஆரம்பித்தனர்.  
 “அப்பா… ஏன் அக்குள்ளயும் கால்லயும் ஐஸ் வைக்கிறாங்க?” என்று அவள் அப்பாவிடம் கேட்க,  அவள் தலையை வருடியபடி, “உடம்போட சூடு அதிகமாத் தங்குற இடம் அதுதான்மா. அங்க ஐஸ் வச்சா, வெளியில் கெட்டுப்போகாம பாத்துக்கும்; மிளகு உடலைக் கெட்டுப்போகாம பாத்துக்குவது போல. நம்ம ஊரு சனங்களுக்கு இந்த எளிய அறிவு தெரிஞ்சிருந்துக்கு” என்று அப்பா கண் துடைத்தார்.
அன்றைக்குக் காரணம் புரிந்தும் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், இன்னைக்கு அம்மாவாகி மொபைல் ஸ்க்ரீனைப் பாத்துக்கொண்டே பெருமூச்சு விட்டாள். 
“பாரீஸ் நகரத்து விஞ்ஞானம் வியந்து பதிவு செய்த எகிப்திய மம்மிகளில் கருமிளகின் தடம் இருந்தது போலவே, மேலஇலந்தைக்குளத்து முத்தம்மா கிழவியின் கைகளிலும் கருமிளகைப் பற்றிய ஒரு பாரம்பரிய அறிவு வாழ்ந்திருந்தது என்று அவள் வியந்தாள்.
அதற்குள், ‘அம்மா பெப்பர் சிக்கன் ரெடியா? என்று மகன் குரல் கொடுக்க, கண்ணோரம் லேசாகக் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மிளகை எடுக்க அஞ்சறைப் பெட்டியைத் துளாவி மிளகை கையில் ஏந்தினாள்.
மகனுக்கு அது பெப்பர் சிக்கனின் வாசம். அவளுக்கு அது அப்பத்தாவின் நினைவை மீட்டெடுத்த வாசம்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து எகிப்து பிரமிடுக்குள் தூங்குகிற பார்வோன் ராஜாக்களை விட, அவள் ‘அப்பத்தா’ அன்று அவளுக்கு ரொம்பப் பெருசாகத் தெரிந்தாள். எகிப்து அரசர் அரசிகளுக்கு இணையாக மேலஇலந்தைக்குளத்துச் செம்மண் பூமிக்குள்ளே அன்னத்தின் தாயாய் உறங்கிக்கிட்டு இருக்கிறாள் அந்தச் செவக்காட்டு மகாராணி என்ற பெருமிதத்துடன் ‘பெப்பர் சிக்கன்’ செய்வதில் மும்முரமானாள் அவள்.
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்,
 உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை 44

கருமிளகு|சிறுகதை PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »