ஏழு அண்ணன்களும் ஒரு தங்கையும்

ஓர் ஊரில் ஏழு அண்ணன்மார்களும் ஒரு தங்கையும் சந்தோசமாக வாழ்ந்த வந்தார்கள். அண்ணன்கள் ஏழு பேரும் காட்டிற்கு வேலைக்குப் போவார்கள். அவர்களுக்கு தங்கைதான் சாப்பாடு கொண்டு செல்வாள். மூத்த ஆறு அண்ணன்களும் சட்டியில் இருக்கும் சாப்பாட்டை வழித்து வழித்து உண்பார்கள்.

            ஏழாவது அண்ணன் மட்டும், ஐயோ… தங்கைக்கு சாப்பாடு இல்லையே என்று தனக்கு போடப்பட்ட சாப்பாட்டில் பாதியைத் தனக்கு வேண்டாம் என்று வேண்டுமென்றே வைத்து விடுவான். தங்கையும் அண்ணன் வைத்திருந்த அந்தச் சாப்பாட்டை உண்பாள்.

            ஆறு அண்ணன்களை விடவும் ஏழாவது அண்ணன் மீதுதான் அதிகம் பாசம் கொண்டிருந்தாள். அவனும் தங்கச்சியின் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தான். ஆறு அண்ணன்மார்களுக்கும் திருமணமும் நடைபெற்றது. ஏழாவது அண்ணனுக்கு திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்கள். ஆனால் அவன், தங்கைக்கு திருமணம் செய்து செய்து வைத்த பிறகே தான் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான்.

            ஒருநாள் எப்போதும் போலவே தங்கைக்காரி அனைத்து அண்ணன்களுக்கும் உணவு சமைக்கிறாள்.  அன்று காலை அவள் வீட்டு புழக்கடியில் பாம்பு ஒன்று வந்தது. அந்தப் பாம்பை அடித்து நன்றாகக் கழுவி  தலை வேறாகவும் உடம்பு வேறாகவும் வெட்டுகிறாள். வெட்டிய பாம்பு கறித்துண்டுகளை அழுதபடியே அடுப்பில் வைத்து சமைக்கிறாள்.

            ஆறு அண்ணன்களுக்கும் நல்ல உணவையும் ஏழாவது அண்ணனுக்கு மட்டும் பாம்பு கறி உணவையும் புட்டியில் எடுத்து வைக்கிறாள். காட்டுக்குச் சென்றவுடன் சாப்பிடுவதற்கு ஆறு அண்ணன்களை மட்டும் அழைக்கின்றாள். ஏழாவது அண்ணன் மட்டும் இன்னும் நெல்லு வயலுக்குத் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்தான்.

            ஆறு அண்ணன்களும் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டு வேலைப்பார்க்க வயலுக்குச் செல்கின்றனர். அதன்பிறகே கடைசி அண்ணனைக் கூப்பிடுகிறாள். தட்டு நிறைய வெள்ளையான சாப்பாட்டைப் போட்டு பாம்பு கறியை ஊற்றுகிறாள்.  சாப்பிட்ட அண்ணன்காரனுக்கு கசப்பு தோன்றவே, மனதில்  பாசக்கார தங்கச்சி விஷத்தையா வைக்கப்போகிறாள். அப்படியே வச்சாலும் ஆசையுடனே செத்தும் போகலாம் என்று உணவை அள்ளி அள்ளி சாப்பிட்டான்.

            கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வாயில் நுரை தள்ளி மல்லாந்து செத்துப்போகிறான் கடைசி அண்ணன்.

            சில மாதங்களுக்குப் பிறகு தங்கச்சிக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. ஆறு அண்ணன்களும் ஆறு அண்ணிமார்களும் திருமணத்தை தடபுடலாக நடத்துகின்றனர். சாப்பாடு வரவேற்பு என அசத்துகின்றனர்.

விடிந்தால்  கல்யாணம். மணமகள் ஜோடனைக்கு மல்லிகைப் பூ மட்டும் எங்கேயும் கிடைக்க வில்லை. ஊர் முழுவதும் கேட்டாச்சு… பாத்தாச்சு…. பொண்ணு பூ இல்லாம வெறும் தலையா நின்னா…

அப்போ! யாரோ ஒருத்தர், “அம்மாடி உங்க அண்ணன புதைச்ச இடத்துல மல்லி பூவா பூத்துருக்கு. வேணுமின்னா போயி பறிச்சுக்க புள்ள” என்றார்கள்.

            அண்ணன் செத்த சமாதிக்குத் தங்கச்சிக்காரி ஓடுகிறாள். அண்ணன் கால்மேட்டுல விழுந்து அழுகிறாள்.

புதைச்ச மண்ணுல மல்லிகைப் பூவா பூத்துருக்கு. ஒன்னொன்னா பறிச்சா.. ஊசியால கோத்தா… மல்லிகைப் பூ மாலையைக் கழுத்துல  போட்டா… கழுத்துல போட்டவுடனே மல்லிகைப்பூ பாம்பா மாறிப்போச்சு. கழுத்துல இருந்து வெளியே எடுத்துப் பார்த்தா மல்லிகைப்பூவா இருக்கு. மீண்டும் கழுத்துல போட்டா பாம்பா மாறுது.

            அழுது ஒப்பாரி வைக்குறா….

            அதுக்கு மண்ணுக்குள்ள இருக்குற அவுங்க அண்ணன் பாடுகிறான்,

                        “வாழ அண்ண! அடிச்சிருக்கு

                        வடநாடு போயிருக்கும்

                        ரெட்டி இரு கொண்டைக்கு

                        நிலைக்குமா என் பூ !

                        பலிக்குமா என் பூ! – என்கிறான். தங்கச்சிக்காரியும்,

            “சிரிக்கி அண்ணிமாருங்க பண்ண வேல இது. சொத்துக்கு ஆசப்பட்டு பண்ணிய காரியம் இது. நான் இந்த ஊருல ஒருத்தன காதலிச்சேன். அத அண்ணிமாருங்க ஆறு பேரும் பாத்துட்டாங்க. எனக்கு அந்த பையன கட்டி வைக்கனுமுன்னா உன்னை கொல்லச்  சொன்னாங்க…” மூக்கைச் சிந்தி அழுதாள்.

            நீ கொல்லவில்லை ஆனாலும் நாங்க அவன  (உன்னை) கொல்லத்தான் போறோம்ன்னு சொன்னாங்க..

            “அவுங்க கையில நீ சாவுறதவிட நானே உன்னை கொன்னுடலாமுன்னு நினைச்சேன். அண்ணே”

            “உன் பசிய எனக்கு கொடுத்தியே அண்ணே… எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுண்ணே… உன்னோட மாலை என் கழுத்துல ஏறனும் அண்ணே… அதுதான் எனக்கு நீ கொடுக்கிற பரிசு அண்ணே.. ” என்று நீண்ட ஒப்பாரியை வைத்து விட்டு மல்லிகைப் பூ மாலையை கழுத்தில் சூடினாள். இப்போது மாலையாய் தொங்கிக் கொண்டிருந்தது அவளுடைய கழுத்தில்.

            அவளுக்கு அண்ணனின் வாழ்த்தில் கல்யாணம் நடந்தேறியது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here