ஆண் கட்டற்ற ஆளுமை|அ.செல்வராசு

ஆண் கட்டற்ற ஆளுமை - அ.செல்வராசு
மனித சமூகத்தை, சமூகவியலாளர் இருவகையாகப் பிரிப்பர். ஒன்று, பெண் தலைமைச் சமூகம். மற்றொன்று ஆண் தலைமைச் சமூகம். குடும்ப, சமூக அதிகாரம் யாரிடம் இருந்தன அல்லது யாரால் கட்டுப்படுத்தப் பெற்றன என்பதை வைத்து இவ்வகைப்பாடு செய்யப்பெற்றுள்ளது. இன்று ஆண் தலைமைச் சமூகம் நிலைபெற்றுள்ளது. எனினும் சமூக வரலாற்றின் தொடக்கத்தில் பெண் தலைமைச் சமூகமே இருந்திருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வரலாற்றிலும் இலக்கியத்திலும் பெண் தலைமைச் சமூகம் இருந்ததற்கான எச்சங்கள் ஆங்காங்கே காணப்பெறுகின்றன.
    
குடும்பம், அரசு, சொத்து ஆகியவற்றைக் கைப்பற்றி கொண்ட ஆடவர்கள், தம் தலைமையிலான சமூகத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆண் தலைமைச் சமூகம் உருக்கொண்ட பிறகு, பெண்களின் அனைத்து நடவடிக்கைகளும் ஆண்களாலேயே தீர்மானிக்கப்பட்டன. அந்தத் தீர்மானத்தின் உச்சக்கட்டம் தான் ‘கற்பு’ என்பது. ஆண் என்ற பாசக்கயிறு பெண்களின் மீது எப்போதுமே பிணிக்கப்பட்டே இருந்துள்ளது; இருக்கிறது. அந்தப் பாசக்கயிற்றை எங்கே இறுக்குவது எங்கே இலகுவாக்குவது என்பதை ஆண்களே முடிவு செய்தனர்; செய்கின்றனர். ஆண்களுக்கு இணையான எல்லாத் திறன்களையும் பெண்கள் பெற்றிருந்தாலும்கூட அவற்றை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை. குடும்பம் என்ற கட்டமைப்பில் ஆடவர் கையிலிருந்த பாசக்கயிற்றாலேயே பெண்கள் கைப்பாவை ஆனார்கள். தந்தை, கணவன், அண்ணன், தலைவன் என்று அனைத்துப் பொறுப்பினராலும் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள். அதேநேரத்தில் ஆண் என்ற பாசக்கயிறு இல்லாச் சூழலில் பெண்கள், தம் முழு ஆற்றலையும் வெளிக்காட்டுபவர்களாகவே இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
    
சிலப்பதிகாரத்தில், கண்ணகி பாத்திரம் முதன்மைப் பாத்திரமாகும். தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே கண்ணகி இடம்பெற்றுள்ளாள். காப்பியத்துள், திருமண வயதுடைய பெண்ணாக அவள் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளாள். திருமணம் முடிந்தவுடன் கோவலன் அவளை, ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே, காசறு விரையே கரும்பே தேனே, அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே, மலையிடைப் பிறவா மணியே…, அலையிடைப் பிறவா அமிழ்தே…, யாழிடைப் பிறவா இசையே…’ என்றெல்லாம் புகழ்கின்றான். இந்தப் புகழுரைக்குக் கண்ணகியிடமிருந்து எந்த மறுமொழியும் இல்லை. அவன் புகழப்புகழ அவள் வெட்கப்பட்டதாகக்கூட இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை. அறியாப் பருவத்துப் பெண் போல அவள் அமைதியாகவே இருந்தாள். பிறகு கோவலன் மாதவியோடு சென்றுவிட, பிரிந்த கணவன் மீண்டும் வந்து சேர்வதற்கு தேவந்தி வழி கூறியபோதும் ‘பீடன்று’ என ஒரே சொல்லில் முடித்துக் கொண்டாள் கண்ணகி.
     மாதவியை விட்டுக் கோவலன் கண்ணகியிடம் மீண்ட பொழுது ‘நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச், சிலம்பு உள கொண்ம்’ என்று சிலம்பைக் கொடுத்து விட்டாள். புகாரிலிருந்து மதுரைக்குச் செல்லும்வரை, ‘நீர் ஏன் இவ்வாறு செய்தீர்?’ என ஒரு வார்த்தைகூட அவனிடம் அவள் கேட்கவில்லை.
    
மதுரையின் புறச்சேரியில் சென்று தங்கி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மனைவி சமைத்த உணவைக் கோவலன் உண்கிறான். தன் மனைவி தன்னிடம் எதுவுமே கேட்காதது அவனுக்கு உறுத்தலாக இருக்கிறது. அவனே, ‘சிறுமுது குறைவிக்குச் சிறுமையும் செய்தேன், வழு எனும் பாரேன்’ என்று கூறி வருந்துகிறான். அப்போதும்கூடக் கண்ணகி ‘அறநெறியாளர்க்கு உணவு அளித்தல், அந்தணரைப் பேணுதல், துறவியரை உபசரித்தல், விருந்தினரை எதிர்கோடல் என்பனவற்றை நான் இழந்திருந்தேன். போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ என்பதோடு நிறுத்திக் கொள்கிறாள்.
    
கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுக்கு அடங்கிய பெண்ணாகவே இங்கும் கண்ணகி இருந்திருக்கிறாள். ‘போற்றா ஒழுக்கம் புரிந்த’ கணவனை ஏற்றுக் கொள்கிறாள். ஆண் தலைமைச் சமூகம் கற்பித்த கற்பிதத்திலிருந்து கண்ணகி சற்றும் விலகி நிற்கவில்லை. கோவலன் கொல்லப்படும்வரை அவள் ‘அப்பாவி’ பெண்.
    
கோவலன் கொல்லப்பட்ட பிறகு வெளிப்படும் கண்ணகியின் ஆளுமை மேற்சுட்டியதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. கணவன் என்ற ‘கட்டு’ அறுபட்டவுடன் அவளது சுயம் முழுமையாக வெளிப்படுகின்றது. மன்னனிடம் நீதி கேட்கச் செல்லும் கண்ணகி, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாக, தான் வாழ்ந்த சோழநாட்டு அரசரையும் அவர்தம் ஆட்சி முறையையும் எடுத்துரைக்கிறாள். தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை, காட்சிப் பொருளான மாணிக்கப் பரல்கள் கொண்டு நிறுவுகிறாள். தானும் ஒரு பத்தினிப் பெண் என்பதை நிறுவ, தனக்கு முன்பிருந்த பத்தினிப் பெண்களின் செயல்பாடுகளை எடுத்துரைக்கிறாள். வரலாறு, அரசியல், சமூகம் என அனைத்தையும் அறிந்திருந்தவளாகக் கண்ணகி இவ்விடத்தில் அடையாளப்படுகிறாள். புகாரை விட்டு வெளியேறுவதற்கு முன்பே, ‘மதுரை மூதூர் யாது?’ எனக் கேட்ட கண்ணகியா இவள்? என வியக்கும் வண்ணம் அவளது ஆளுமை மதுரையில் வெளிப்படுகின்றது.
    
இவ்வளவு திறன் படைத்த கண்ணகி, கணவன் என்ற ‘கட்டு’ இருக்கும்வரைத் தன் திறனை வெளிப்படுத்தவேயில்லை. வரலாறு, அரசியல், சமூகம் என்பவற்றை அறிந்திருந்த கண்ணகிக்கு, மனைவியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு தொடர்புகொண்டு அழிந்துபோன ஆடவர்கள் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும்? ஆனால் அவள் பேசவில்லை. தவறு செய்த ஆடவன் திரும்பி வந்தபோது அவனை வீட்டிற்குள் விடாமல் விரட்டிய பெண்களின் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும்? ஆனால் அவள் பேசவில்லை.
தவறு செய்த கணவனை விட்டுவிட்டுத் தனியாக வாழ்ந்த பெண்களின் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும்? ஆனால் அவள் பேசவில்லை.
     எல்லாம் தெரிந்தும் அவள் பேசாமல் இருந்ததற்கான காரணம் கணவன் (ஆடவன்) என்ற ‘பாசக்கயிறே’ ஆகும். அந்தக் கயிறு இல்லாதபொழுது பெண்கள் தம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதற்குச் சான்றாகக் கண்ணகியின் ஆளுமைப் பண்பு வெளிப்பட்டுள்ளது. ஆண் தலைமைச் சமூகத்தின் அடிப்படையே பெண்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுதான். அதனையும் மீறிப் பெண்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்தினால் அதனையும் தமக்கானதாக மாற்றிக்கொள்ளும் வழிவகைகளையும் ஆண் தலைமைச் சமூகம் அறிந்து வைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி-620023,


மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

அ.செல்வராசு அவர்களின் படைப்புகளைக் காண்க..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here