அன்பின் ஐந்திணை

கால்கள் ரெண்டும் நடுக்கத்தில் வௌவௌத்துப் போயிருந்ததன. கண்களை இறுக மூடிக்கொண்டேன். மனசு முழுதும் பயம். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹாஜியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். ஹாஜியின் கையில் இருந்த ஈரம் என் இதயத்தை ரணமாக்கியது. எங்கையோ நன்றாக வாழக்கூடியப் பெண் ஹாஜி. என்னை காதலித்தப் பாவத்திற்காக மலையுச்சியில் தற்கொலை செய்து கொள்வதற்காக நின்று கொண்டிருக்கிறாள். ரெண்டு பேரும் நிறைய அழுதாகிவிட்டது. இனிமேல் எங்களால் வாழவே முடியாது என்ற பட்சத்தில்தான் இந்த முடிவினை எடுத்துள்ளோம். கடைசியாகக் கண்களைத் திறந்து என் ஆருயிர் காதலியை ஒருமுறை பார்த்தேன். அவள் நன்றாகக் கண்களை மூடிக்கொண்டிருந்தாள். கிட்டதட்ட பதினாறாயிரம் அடி உயரத்தில் நின்று கொண்டிருந்த எங்களின் மேல் சில்லென்ற காற்று பரவியது. இருப்பினும் அவளின் முகம் கண்ணீராலும் வியர்வையினாலும் சோர்ந்து காணப்பட்டது. இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டேன். “ஹாஜி…. ஐ..ஐ.. லவ்..லவ்..லவ்.. யு..” என்று உரக்க கத்தினேன். அவளும் பதிலுக்கு ”ஐ லவ் யு மகிழன்” என்றாள். இந்த வார்த்தையை அவளிடம் முதன்முதலாக நான் கேட்ட போது எப்படி மகிழ்ந்தேன் தெரியுமா? இப்பொழுது நினைத்தாலும் மனசு இனிக்கிறது. மீண்டும் அதே வார்த்தையைக் கேட்கின்றேன். ஹாஜியை இனிமேல் என்னால் பார்க்க முடியாது. அவளுடன் சேர்ந்து வாழவும் முடியாது. எங்கள் வாழ்க்கை இத்துடன் முடிந்தது. இப்படி இன்னும் என்னன்னவோ நினைக்கத் தோன்றியது. என்னாடா சாவும் போது வழவழன்னு பேசறான்னு நினைக்கிறிங்களா? காலத்தின் சூழ்நிலைகள் நம்மை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கும். அன்று நானும் அப்படித்தான் ஆகியிருந்தேன். ரெண்டு பேரும் ஒரே முடிவுடன் உச்சி மலையில் இருந்து குதிக்கத் தயாரானோம். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு எகிறிய போது, பின்னால் இருந்து ஒரு முரட்டு கை என் வலக்கையை அழுத்திப் பிடித்து இழுத்தது.

            ரெண்டடி பின்னால் வந்து விழுந்தவுடன்தான் கண்களைத் திறந்து பார்த்தேன். என் மேலேயே ஹாஜியும் வந்து விழுந்தாள். எங்களின் முன்னால் வெள்ளை உடை அணிந்த ஃபாதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரின் முகம் மிகவும் பிரகாசமாயிருந்தது. அவரின் பக்கத்தில் நின்ற இருவர் கறுப்பாகவும் குண்டாகவும் இருந்தார்கள். அவர்கள்தான் எங்களை இழுத்துப் போட்டிருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு சிஸ்டரும் நின்னுட்டு இருந்தாங்க.  அப்போ அந்த சிஸ்டர் என் கன்னத்தில் ”ப்ளார்” என்று அறை விட்டார்கள். கையை இடுப்பில் வைத்துக் கொண்டு என்னை முறைத்துப் பாரத்தார் சிஸ்டர். கன்னத்தில் கை வைத்தப்படி கண் கலங்க அவர்களை உற்றுப்பார்த்தேன். ஹாஜி என் கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள்.

            கொடைக்கானல் மலைப்பிரதேசம். ஆங்காங்கு பள்ளங்களும் காடுகளும் பெரியபெரிய கற்களும் நிறைந்த பகுதி. அப்போது வலுக்கட்டாயமாக அவர்களின் வாகனத்தில் ஏற்றப்பட்டோம். கொஞ்சநேரப் பயணத்திற்குப் பிறகு தேவலாயத்திற்கு வந்து சேர்ந்தோம். சின்னதா ஒரு கோயில். இல்ல… சர்ச்.. ஆமாம்! தேவாலாயம். அந்த தேவாலாயத்திற்கு உள்ளே சில பெஞ்சுக்களைக் கடந்து நாங்கள் இருவரும் அமர்தோம். எங்களின் முன்னால் சென்று கொண்டிருந்த ஃபாதர் திரும்பி அந்தக் குண்டர்களை நோக்கி அவர்களிடம் எதுவும் கேட்க வேண்டாம். இயேசுவின் பிள்ளைகளான அவர்களைத் தனியாக விடுங்கள் என்றார். தனியாக விடுங்கள் என்றபோது சிஸ்டரை நோக்கித்தான் சொன்னார். இப்போது எங்களைத் தவிர அங்கு யாரும் இல்லை.

            சிறிதுநேர மௌனத்திற்கு பிறகு கத்தி அழுதேன். இன்னும் வேகமாக கத்தி அழுதேன். “மகிழன் அழாத… மகிழன்… சொன்னா கேளு.. அழாதா…” என்று என்னை ஆறுதல்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள் ஹாஜி.

            “இல்ல ஹாஜி… நான் தப்பு பண்ணிட்டேன். போராடி ஜெயிக்கத் தெரியாதவன் எதுக்காக காதலிக்கனும். அதுவும் மதம் மாறி. என்னோட ஆசிரியர் ஜெய்க்குமார் அடிக்கடி சொல்லுவாரு தற்கொலை செய்யிறது கோழைத்தனம். இந்த உலகத்துல மனுசனா பிறந்ததுக்கே லாயக்கு இல்லாதவன்தான் அப்படிச் செய்வான்னு சொல்லுவாரு. அவருடைய மாணவன் நானா இப்படி செய்யத் துணிந்தேன். நான் மட்டும் சாவுறது இல்லாமா உன்னையும் சேர்த்து கொல்ல நினைச்சேனே! நான் பாவி.. நான் கொலைகாரன் ஹாஜி. என்னை மன்னிச்சுடு” என்று தேம்பி தேம்பி அழுதான் மகிழன். மகிழனின் கண்களையே பார்த்துக்கொண்டு அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள் ஹாஜி.

“ஒன்னுமில்ல மகி.. ஒன்னுமில்ல மகி..” – ஹாஜி

“நாம இனி ஒன்னா வாழனும். சாகக் கூடாது. வாழ்க்கையில போராடுவோம். ஜெயிக்கிற வரை போராடுவோம்” என்றான்.

அவர்கள் இருவரும் அமைதியாக தனக்கு எதிரேயுள்ள இறைவன் ஏசுநாதரின் திருமுகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தனர். இறைவனின் முகம் அவர்களுக்குள் ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. பின்னால் இருந்துவந்த ஃபாதர் “என்ன குழந்தைகளா எப்படி இருக்கீங்க?” என்றார்.

“நல்லா இருக்கேன் ஃபாதர்” என்றான் மகிழன்.

“நீ எப்படிம்மா இருக்க..” என்றார்.

“நான் நல்லா இருக்கேன் ஃபாதர். ஆனா.. மகிதான் கொஞ்சம் மனசு உடைஞ்சு இருக்கான்” என்றாள் ஹாஜி.

ஃபாதர் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். அவருடையக் கையில் சின்னதா சிலுவை ஒன்று இருந்தது. வாயில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டார். “சரி.. நான் இப்ப உங்கள எதுவும் கேட்கல. ரெண்டு நாள் ஆகட்டும். எங்க தேவாலயத்துக்குப் பின்னால ஒரு வீடு இருக்கு. அங்க தங்கிக்கிங்க என்றார். தேவாலயத்தில் மூன்று வேலையும் நல்ல சாப்பாடு. நிம்மதியான தூக்கம். அங்கு இருப்பவர்கள் அனைவரும் அவர்களிடையே அன்பு பாராட்டினார்கள். தேவாலயத்திற்கு தினமும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து ஆண்டவரை வணங்கிச் சென்றனர். மகிழன் அங்கு வருகின்றவர்களைப் பார்க்கும் போது நம்முடைய உறவினர்கள் யாராவது வருவார்களா என்று எண்ணுவதும் உண்டு. அந்த தேவாலயப் படிக்கட்டில் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தான். பிறகு வேகமாக பின்னால் இருந்த தன் வீட்டிற்குச் சென்றான். ஹாஜி அங்குள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். “ஹாஜி எனக்கு போரடிக்குது. கொஞ்சநேரம் வெளியப் போயிட்டு வரேன்” என்றான். அவளிடமிருந்து ம்..என்ற ஒலி மட்டுதான் வந்தது. ஆனால் கண்களில் காதலை வைத்துக்கொண்டு மனசில் வலியோடுதான் அவளும் இருந்தாள். அந்த நிலையில் மகிழனை தனியாக அனுப்புவது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது மகிழனின் முகத்தில் சாகனும் என்ற சலனம் அறவே போயிருந்ததை அவளால் உணர முடிந்தது. 

கால் போன வாக்கில் கொடைக்கானலைச் சுற்றித்திரிந்தான். எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கூட தெரியவில்லை. நாய் மாதிரி அலைந்தான். நாயும் எங்கே போய் விட்டாலும் மறுபடியும் தேடிக்கொண்டு வீட்டுக்கே வந்துவிடும் என்பார்கள். அதுபோலத்தான் மகிழனும் வேட்டை நாயைப் போல வேட்டையாட எண்ணினான். அந்த வேட்டை பெரியதாக இருக்கவேண்டுமென எண்ணினான்.

மாலை நேரம். அந்தக் கடையில் கூட்டம் அலை மோதின. கடையை நெறுங்க நெறுங்க வாசனை மூக்கை துளைத்தது. பனையாரக் கடை. வயதான இரண்டு பெண்களும் ஒரு ஆணும் கடையின் உள்ளே இருந்தார்கள். ஒரு பெண் பனையாரச் சட்டியில்  மாவை ஊற்றினாள். இன்னொரு பெண் பக்கத்தில் இருந்த பெரியப் பானையில் இருந்த அரிசி மாவினைக் கரைத்துக்கொண்டிருந்தாள். அந்த ஆண், வாடிக்கையாளருக்கு கையில் காசை வாங்கி பனையாரத்தை காகிதத்தில் சுற்றிக்கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கும் ஆசையாய் இருந்தது. அம்மாவின் கைச்சுவையில் பனையாரம் தின்றது ஞாபகம். கைப்பையில் ஒரு இருபது ரூபாய் இருந்தது.

“இருபது ரூபாய்க்கு பனையாரம் தாங்கண்ணா” என்றேன். அந்தக் கூட்டத்தின் நடுவே நானும் பனையாரம் வாங்கிட்டு வெளியே வந்தேன். இருட்டு சூழ ஆரபித்தது. இதற்கு மேல் இங்கு இருக்கக் கூடாது என மனதில் நினைத்துக் கொண்டேன். அப்பொழுதுதான் ஹாஜியின் நினைப்பு வந்தது. “ஐயோ பாவம்! ஹாஜி என்ன பண்ணுவாள். காலையில் வந்தேன். நான் இல்லாததை நினைத்து எப்படி வருந்தியிருப்பாள். ஹாஜியை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் இதயத்தை கூரிய முள்ளால் குத்துவது போன்று இருந்தது.

வீட்டிற்குள் நுழைத்த போது ஹாஜி தலையில் முக்காடிட்டபடி அல்லாவை வணங்கி கொண்டிருந்தாள். பிராத்தனை முடியும் வரை எதுவும் பேசாமல் மெதுவாகச் சென்று அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டான். பிராத்தனை முடித்த ஹாஜி மகிழனைக் கண்டவுடன் கட்டிக்கொண்டாள். வேகமாக அழுதாள். தன் பற்களால் மகிழனின் தோள் பட்டையின் எலும்பை இறுகக் கடித்தாள்.

“ஹே… ஹாஜி என்ன பன்ற வலிக்குது..”

“என்ன விட்டுட்டு எங்கப் போன? நேரமாகியும் நீ வராததை நினைச்சு துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா?”

“சாரிடா.. இனிமேல் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன். இது சத்தியம்” என்றான். “இந்தா உனக்காக பனையாரம் வாங்கிட்டு வந்தேன். சாப்பிடு” என்றான். ஆளுக்கொரு பனையாரமாக எடுத்துச் சாப்பிட்டார்கள்.

ஹாஜி சாப்பிட்டுக்கொண்டே, “ஃபாதர் சாயுங்காலம் வந்தார். நம்மளபத்தி கேட்டார். நானும் சொன்னேன். நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கரதாவும், உனக்கு ஒரு வேலை வாங்கி தரதாகவும் சொன்னார். நீ என்ன சொல்லுற மகி” என்றாள். மகிழன் யோசனையில் ஆழ்ந்தான்.

“அப்பா.. அம்மா.. ஞாபகம் வரலியா ஹாஜி..”

“எப்படி வரமாலிருக்கும். எங்க வாப்பாவை பாக்கனும் போல இருக்கு. அம்மா மடியில படுத்து தூங்கனும். அண்ணாகிட்ட சண்டை போடனும்ன்னு தோனுது. ஆனா.. இப்ப எதுவும் முடியாது” என்று முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

“உனக்கு மகி… நீ எப்படி ஃபீல் பன்ற..”

“நானும்தான். ஆனா! வாழ்க்கையில நாம ஜெயிக்கனும். அதுக்கு என்ன பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்”

“ஃபாதர் சொன்ன மாதிரி வேலைக்கு போங்க.. நானும் ஏதாவது ஒரு வேலைக்குப் போறேன்”

மகிழன் அதன்பிறகு எதுவும் பேசவில்லை. தனித்தனியாக ஆளுக்கொரு படுக்கையில் படுத்துக்கொண்டார்கள். விளக்கு அணைக்கப்பட்டது. அவன் கண்களை மூடிக்கொண்டான். ஹாஜியும் கண்ணயர்ந்தாள்.  இப்போது அவனுடைய முகமெல்லாம் வியர்த்தது. அந்த சாலையின் வளைவு அழகாயிருந்தது. நிழலொடு கூடிய அற்புதமான இடம். அருவிலிருந்து கொட்டுகிற தண்ணீர் அதன் பக்கத்தில் எப்போதும் ஊற்றிக்கொண்டே இருந்தது. அங்கே அவனின் கைகளையும் கால்களையும் யாரோ கட்டி உச்சி மலையிலிருந்து கீழே தூக்கிப்போட்டார்கள். மேலிருந்து கீழே விழும்போது தலையெல்லாம் சுற்றியது. அடிவயிறு கொலகொலவென்று ஏதோ செய்தது. பெரிய பாறையில் தலை மோதி சுக்கு நூறானது. “ஹாஜி… ” என்றவாறு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான். ஹாஜியும் விழித்துக்கொண்டாள்.  உடபெல்லாம் வியர்வையால் நனைந்து போயிருந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஹாஜி அவசரமாக ஓடி தண்ணீர் கொண்டு வந்தாள். அந்த டம்ளரில் ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்தான். அவனுடைய கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள் அவள். அவனுடையத் தோளில் சாய்ந்து மேல்கையில் தன்னுடைய சிவந்த உதடுகளைப் பதித்து கண்ணீர் கரைய இரண்டு கண்களையும் மூடினாள்.

“ஹாஜி என்கூடவே இருப்பியா… என்னவிட்டு போகமாட்டியே..”

“கண்டிப்பா போக மாட்டேன் மகி” அவனின் முகம் இப்பொழுது மலர்ந்திருந்தது. விடியற்காலையில் எழுந்தவுடன் இருவரும் ஃபாதரை பார்க்கச் சென்றார்கள். தூக்கக் கலக்கத்தில் அதுவும் அந்த நேரத்தில் அவர்களை அங்கு பார்த்தவுடன் கொஞ்சம் பதறித்தான் போனார்.

“என்னாச்சு மகிழன்” – ஃபாதர்

“நாங்க தனியா ஒரு கடை போடலாமுன்னு இருக்கோம்” – மகிழன்.

“கடையா? புரியல எனக்கு? என்ன கடை? எப்படி நடத்துவீங்க? எங்க நடத்துவீங்க? பணம் வேண்டாமா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேச்சென்றார் ஃபாதர்.

“நீங்க கேட்கிறது சரிதான் ஃபாதர். சின்னதா ஹோட்டல் நடத்தலாமுன்னு இருக்கோம். எங்க அப்பா ஊர்ல ஹோட்டல்தான் வச்சிருக்கார். நான் நல்லா சமைப்பேன். எங்ககிட்ட கையில ஒன்னும் இல்ல. அதுக்கு உங்க உதவி மட்டும் வேணும். அதுக்காக, அன்னிக்கு எங்கள மலை உச்சியில் இருந்து காப்பாற்றின போது ரெண்டு பேரு உங்ககூட இருந்தாங்க இல்ல… அவுங்கள எங்க கூட அனுப்பனும். அப்புறம் மளிகைக் கடை, பாத்திரக்கடை, மற்றப் பொருட்கள் வாங்குவதற்கு நீங்க சொன்னதா சொல்லி கடன் கொடுக்கனும். தப்பா நினைச்சுக்காதீங்க..! கண்டிப்பா சாயுங்காலத்திற்குள் எல்லா கடனையும் அடைச்சு உங்க பேர காப்பாத்திருவேன்” என்றான்.

யோசித்துவிட்டு, “உன்னோட துடிப்பு புரியுது. உங்களுக்கு நானே காசு தரனே. அப்புறமா கொடுங்களேன்” என்றார்.

“இல்ல ஃபாதர். யாருன்னே தெரியாத எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிட்டிங்க. இனிமேல் உங்ககிட்ட இருந்து நாங்க கேட்கிற இது ஒன்னு மட்டும் போதும் ஃபாதர்” என்றான். அதற்கு மேல் ஃபாதரால் ஒன்றும் பேச முடியவில்லை. சரியென்று ஒத்துக்கொண்டார். ஆனால் அந்த பையன் எங்கே கடை போடுவான். எப்படி கடை நடத்துவான் என்று புதிராக இருந்தது அவருக்கு.

அகஸ்டினும், ஸ்டீபனும் வந்து விட்டார்கள்.  ஹாஜியுடன் சேர்ந்து மகிழன் நேற்று பாரத்த, கனவில் கண்ட அந்த இடத்திற்குச் சென்றான். தேவாலயத்திலிருந்து கொண்டு வந்த கத்தியால் நால்வரும் அந்த இடத்தை சீர் செய்ய ஆரமித்தார்கள்.  இரண்டு மணி நேரத்திற்குள் அந்த இடம் மேலும் அழகாய் மின்னியது. மேற்கு நோக்கி வரும் சாலையானது சற்று வளைந்து வடக்குப் பக்கமாகச் செல்லும் பாதை. அந்த வளைவில் உள்ள மரங்களைத் தூண்களாக்கி பந்தல் போட்டாகி விட்டது. ஒருசில செடிக்கொடிகளை வெட்டியவுடன் பின்னால் இருந்த அருவி நன்றாகத் தெரிந்தது. அருவி தண்ணீர் இவர்களின் பின்பக்க கடை வாசலை நனைத்து சென்றது. 

ஃபாதர் சொல்லியதாக மளிகைப் பொருட்கள், பாத்திரம் என வாங்கினார்கள். எல்லாவற்றையும் கடைக்குக் கொண்டு சென்றார்கள். கடையில் ஹாஜியோடு துணைக்கு  ஸ்டீபனையும் வைத்துவிட்டு அகஸ்டினோடு மகிழன் வெளியேச் சென்றான்.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத சுற்றுலாதலம் கொடைக்கானல். நிறைய பேருந்துகள். தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிருந்தும் மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள். நிறையக் கடைகள். விற்பனை நிலையங்கள், டூரீஸ்ட்டுகள், பேக் – கார்கள், ஹோட்டல்கள் என திரும்புகிற திசைகள் எல்லாம் கூட்டம்தான். அவர்கள் நின்ற எதிர் திசையில் ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது.

“அகஸ்ட்டின் அந்த பேருந்தை எப்படியாவது நிறுத்துங்கள்” – மகிழன்

அகஸ்ட்டின் அந்த பேருந்து முன்னால் போய் நின்று கை அசைத்தார். வண்டியின் வேகம் குறைந்து நின்றது. டிரைவர் சீட்டுக்கு ஓடினான் மகிழன்.

“சார்.. மதியம் சாப்பாடு ரெடியாயிருக்கு.. மத்த இடத்துல கொடுக்கிறத விட பத்து ரூபா குறைச்சே கொடுங்க. இல்லன்னா… உங்களுக்கு என்ன சமையல் பிடிக்கும்முன்னு சொல்லுங்க. சைவம், அசைவம்  எதுவாயிருந்தாலும் உடனே செஞ்சு கொடுத்துடுவோம். எங்ககிட்ட உள்ளூர் ஆள் இருக்கு. அவங்கள உங்கக் கூட அனுப்பி இந்த கொடைக்கானலையே இலவசமா சுத்தி காண்பிக்கிறோம்” என்று ஒருசில வினாடிகளுக்குள் சொல்லி முடித்தான் மகிழன். அதற்குள் பின்னால் நின்று கொண்டிருந்த பேருந்து ஹார்ன் அடித்துக் கொண்டேயிருந்தது.

“இல்லப்பா… நாங்க ஏற்கனவே புக் பண்ணிட்டோம்” என்று சொல்லி முடிப்பதற்குள் வண்டியை டிரைவர் நகர்த்த ஆரமித்தார். மகிழன் அந்த டிரைவருக்கு நன்றியைக் கூறிவிட்டு அடுத்தப் பேருந்தை நெருங்கினான். ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாய் எல்லா பேருந்துகளிலும் ஒரே பதில்தான்.

“கொடைக்கானல் பெரிய டூரீஸ்ட் ஏரியா. அதுதான் எல்லாம் புக் ஆகியே வருது. ஆனாலும் காலையிலிருந்து உன்னோட முயற்சியும், தன்னம்பிக்கையும், செய்யுற வேலையில கவனம், ஆர்வத்தையும் பாக்குறன். கண்டிப்பா முயற்சி பண்ணிக்கிட்டே இருப்போம். நமக்கு ஒரு பேருந்து கூடவா கிடைக்காமல் போயிடும் தம்பி” என்றார் அகஸ்டின். இப்பொழுது மணி காலை பதினொன்றை தாண்டியிருந்தது. ஹாஜியின் நினைப்பு அவ்வப்போது மகிழனுக்கு வந்துவந்து சென்றது. அப்பொழுது மீண்டும் ஒரு பேருந்து வந்துகொண்டிருந்தது. பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மகிழன் டிரைவரிடம் பேசினான். டிரைவர் புதியவர் ஆதலால் எங்கே சாப்பிடுவது, தங்குவது, சுற்றிப்பார்ப்பது என தெரியாமல் வந்திருக்கிறார்கள். மகிழன் பேசியது டிரைவருக்கும், அப்பேருந்தின் தலைவராக இருக்கும் ஒருவருக்கும் பிடித்துப் போனது. சரி என்று ஒத்துக்கொண்டார்கள். என்னன்ன சாப்பாடு என்று குறிப்பெடுத்துக்கொண்டார்கள். சைவம், அசைவம் என இரண்டுமே அந்தக் குறிப்பில் இருந்தது. ரெண்டு மணிக்கு உணவு செய்யப்பட்டுவிடும் என்றும், கூடவே சுற்றிக் காண்பிபதற்கு அகஸ்ட்டினையும் அனுப்பி வைத்தான். அந்த தலைவர் மகிழன் கையில் குறிப்பிட்டத் தொகையை திணித்து முன்பணமாக வைத்துக்கொள் என்றார். மகிழன் இந்நேரம் மகிழ்ந்துதான் போனான். மகிழன் பேசியதையும், சாமர்த்தியமாக நடந்து கொண்டு முன்பணம் பெற்றுக்கொண்டதையும் நினைத்து “நல்ல புத்திசாலி பையன்தான்” எனப் பெருமைப்பட்டுக்கொண்டார் அகஸ்டின்.

ஹாஜி-மகிழன்-ஸ்டீபன் ஆகிய மூவரும் விரைவாக வேலையைப் பார்க்க ஆரமித்தார்கள். மகிழனுக்கு நெருப்பும் கரண்டியும் புதிதல்ல. சோறு, குழம்பு, பொறியல், சிக்கன் வறுவல், முட்டை, மீன் குழம்பு, மீன் வறுவல் என வரிசையாய் செய்தாகிவிட்டது. ஹாஜிக்கு உண்மையாலும் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். இஸ்லாமியப் பெண்களுக்கு அசைவ சமையல் பற்றிச் சொல்லித்தர வேண்டுமா? சமையலில் மகிழனுக்கு அங்கங்கு நிறைய டிப்ஸ்களைக் கொடுத்து அசத்தினாள். இறுதியாக அடுப்பில் ரசம் முட்டைக்கொதி வந்து வாசனை அவ்விடம் முழுவதும் பரவியது. பேருந்தும் சரியான நேரத்திற்கு வந்து பயணிகள் இறங்கினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு உணவு பரிமாறும் வேலையும், பயணிகளின் சிரிப்பொலியும், வாசனையுமே நிறைந்திருந்தது.

குளுமையான இடம். நிறைவான சாப்பாடு. நல்லத்தண்ணீர். அவர்களுக்குப் பிடித்துத்தான் போயிருந்தது. பேசியதை விட நூறு ரூபாயை அதிகமாகவே கொடுத்துவிட்டுச் சென்றார் பேருந்து தலைவர்.

“தம்பி.. நான் டூரிஸ்ட் புரொக்கர். நானும் இப்பதான் தொழில் ஆரமிச்சேன். கொடைக்கானல் புதுசுதான். இங்க யாராவது ஆள் போட்டு பாத்துக்கனுமின்னு நினைச்சேன். உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அதனால தினமும் ரெண்டு மூணு வண்டி வரும் அவுங்களுக்கு சாப்பாடு போட்டு சுத்தி காண்பிச்சிரு. உனக்கு தர வேண்டிய கமிஷன் மற்றும் சாப்பாட்டு காசும் கொடுத்திடுறேன்” என்றார்.

மகிழனுக்கு தலைகால் புரியவில்லை. “ரொம்ப நன்றி சார்” என்றான். பேருந்து புறப்பட்டது. முதல் நாளே நம்ம தொழில் வளர விதை போட்டாச்சு என்ற சந்தோசம்.  பாத்திர பண்டம் என அனைத்துக்கும் பணத்தைப் பிரித்து வைத்தனர். சமையலில் மீதியானப் பொருள்களை வண்டியில் ஏற்றினார்கள்.   ஃபாதர் அங்கு வந்தார். அகஸ்டினும், ஸ்டீபனும் மகிழனைப் புகந்து தள்ளினார்கள்.

“இந்த இடத்துல நானே செட் போட்டு தரேன். நகராட்சிகிட்ட பேசி உரிமையும் வாங்கிதரேன்” என்றார். அகஸ்டின், ஸ்டீபன் இருவருக்கும் அவர்களுக்குண்டான கூலியைப் பிரித்துக் கொடுத்தான். ஃபாதரின் காரிலே மகிழனும் ஹாஜியும் தேவாலயத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்த்த ஃபாதர் இறைவனே தன்னிடம் அனுப்பி வைத்ததாக கருதினார்.

அன்று இரவு. ஆளுக்கொரு படுக்கையில் படுத்திருந்தனர். விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. ஆனால் இருவரும் பேசிக்கொண்டனர். அவளுக்கு மகிழனை நினைக்கும் போதெல்லாம் புதிராகவே தெரிந்தான். அவனை நேசித்தது முதல் இன்று வரை அப்படித்தான் இருந்தான். மற்றவர்களுக்கு கற்பனைக்கு எட்டாத சில விஷியங்களைக் கூட செய்து காட்டக்கூடிய திறமைப் படைத்தவன். நிறைய பேசுவான். அவன் கூட இருந்தா ஒரு நல்ல எனர்ஜி கிடைக்கும். தற்கொலை பத்திக்கூட அவன்தான் முதல்ல என்கிட்ட பேசினான். அவன் சொன்னப்ப பயம்தான் முதல்ல கண்ணுக்கு தெரிஞ்சுது. எங்க காதல் வீட்டுல எல்லாம் தெரிஞ்சு என்னை அடிச்சாங்க. எங்க சொந்தகாரங்க மகிழனையும் அடிச்சும் மிரட்டியும் இருக்காங்க. எப்படியோ வீட்டை விட்டு வெளிய வந்து நான்தான் கொடைக்கானல் போயி செத்து போலாம்ன்னு ஐடியா கொடுத்தேன்.  ப்பா.. என்னன்வோ ஆகிடுச்சு. மனசுக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு.

“நம்ம ஹோட்டலுக்கு என்ன பேரு வைக்கலாம் மகிழன்” – ஹாஜி

“எம்மதமும் சம்மதம். சாதிகள் வேரோடு அழிய ஒற்றுமை மனிதரிடத்தில் பிறக்க வேண்டும். ஒற்றுமை வலுபெற வேண்டுமானால் அன்பால் மட்டுமே மானுடம் ஜெயிக்கும். அதனால் அன்பின் ஐந்திணை என்று வைக்கலாம் என எண்ணுகிறேன்” என்றான் மகிழன்.

ஹாஜி படுக்கையை விட்டு எழுந்து தலையை உயர்த்தி மகிழனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

Leave a Reply