மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

மானகஞ்சாற நாயனார்

மானக்கஞ்சாற நாயனார்


            சோழநாட்டிலுள்ள கஞ்சனூரில், வேளாளர் குலத்தில் பிறந்தவர் மானக்கஞ்சாற நாயனார் ஆவார். இவர் சோழ மன்னரிடத்தில் சேனாதிபதியாய்ப் பணியாற்றினார். சிவபக்தியிலும் அடியவர் பக்தியிலும் சிறந்து நின்றார். தன் பொருள் எல்லாம் அடியவர் பொருள் என்று கருதி வந்தார்.

            அவருக்குத் திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்தாள். அப்பெண்ணை, திருப் பெருமங்கலத்திலுள்ள ஏயர்கோன் கலிக்காமருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தார் நாயனார். திருமணமும் நிச்சயமாகி, நாளும் குறிக்கப்பட்டது.

திருமண நாளன்று ஏயர்கோன் கலிக்காமர், தன் சுற்றத் தாருடன் கஞ்சனூருக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவ்வேளையில் சிவபிரான் மானக்கஞ்சாறரின் அடியவர் பக்தியை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டார்.
            பெருமான் அடியவர் கோலம் தாங்கி, மானக் கஞ்சாறரின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு திருமணக் கோலாகலம் தெரிந்தது. அடியவரைக் கண்ட மானக்கஞ்சாறர் வணங்கினார். தாங்கள் வந்தவேளை நல்லவேளை’ என்று கூறி உபசரித்தார். அடியவர் நாயனாரிடம், “இவ்வீட்டில் நற்காரியம் ஏதும் நடக்கவிருக்கிறதா?” என்று கேட்டார்.

மானக்கஞ்சாறரும் மகிழ்வுடன், “ஆமாம்! என் புதல்விக்குத் திருமணம் நடக்கவுள்ளது. தாங்களும் மணமக்களை வாழ்த்தியருள வேண்டும்!” என்று கூறினார். பின் அடியவரிடம் ஆசி பெறுவதற்காகத் தன் புதல்வியை அழைத்தார்.

நாயனாரின் புதல்வியும் வந்து அடியவரைப் பணிந்து வணங்கினாள். அப்போது, மணப்பெண்ணின் நீண்டு வளர்ந்திருந்த கூந்தலைக் கண்ட அடியவர், “இப்பெண்ணின் கூந்தலை எனக்குத் தருவீரோ?! என் பூணூலுக்கு அது பயன்படும்!” என்று கேட்டார். அடியவர் கேட்டு நாயனார் மறுப்பாரோ?
பெண்ணிற்குத்
சற்று நேரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், நாயனார் தன் மகளின் கூந்தலை வாள் கொண்டு அறுத்து அடியவரிடம் தந்தார். அக்கணமே அடியவர் மறைந்தார். சிவபிரான் உமாதேவியாருடன் விடை வாகனத்தில் திருக்காட்சி தந்தார். அனைவரும் மெய் சிலிர்த்தனர்.

பெருமான் நாயனாரிடம், “அன்பரே! உமது அடியவர் பக்தியை சோதிக்கவே இவ்வாறு செய்தோம். வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம் அடைவீராக!” என்று வாழ்த்தி மறைந்தரு ளினார். மணப்பெண்ணின் கூந்தலும் முன்போலவே நீண்டு வளர்ந்தது.

சற்று நேரத்தில் கஞ்சனூரை அடைந்த ஏயர்கோன் கலிக்காமர், நடந்ததைக் கேட்டறிந்தார். ‘அக்காட்சியைத் தான்காணவில்லையே!’ என்று வருந்தினார். மறுகணமே, “யாமே வந்தோம்!” என்று இறைவன் வாக்கருளினார். கலிக்காமருக்கும் மானக்கஞ்சாறரின் புதல்விக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.


  மானக்கஞ்சாறரும் சிறப்புற வாழ்ந்து, அடியவர் தொண்டை வழுவாது செய்து சிவபதம் அடைந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

Leave a Reply