இரண்டாவது மனைவி
ஆட்டோவிற்கு மூன்று சக்கரம்தான் உள்ளது. நான்காவதாக இன்னொரு சக்கரம் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும். மூன்று சக்கரம் உள்ளதால்தான் ஆட்டோ என்கிறோம். நான்கு சக்கரம் இருந்துவிட்டால் குட்டியானை, டெம்போ, லாரி என்றல்லவா அழைத்திருப்போம். கையில் பிடித்த ஸ்டிரிங்கை சாலையில் குண்டு குழியில் சக்கரம் சிக்கிக்கொள்ளாமல் சரியாக ஓட்டினான் கனகசபை. அவனுடைய ஆட்டோவில் வருகின்றவர்களுக்கு ஒருகுறையும் வந்துறக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பான்.
“தம்பி இந்த இடம்தான் நிறுத்துப்பா..” என்றார் அந்த வயதானவர்.
ஆட்டோவை நிறுத்தி மீட்டரைப் பார்த்தான் கனகசபை. அந்தப் பெரியவரும் பார்த்தார். இரண்டு பேர் கண்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் வந்துவிடப்போகிறது. ஒரே தொகைதான். பெரியவர் கனகசபையிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் அமர்ந்திருக்கும் தன்னுடைய வயதான மனைவியை அழைக்க கையை நீட்டினார். அதற்குள் கனகசபை கீழே இறங்கி,
“பெரியவரே இருங்க. அம்மாவ நானே மெதுவா இறக்கி விடுறேன்”
“உனக்கு எதுக்குப்பா சிரமம். நான் பாத்துக்கிறனே” என்றார் பெரியவர்.
“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்ல. பாட்டியம்மா என்னோட கையைப் புடிச்சுக்கோங்க” என்றான். அந்த வயதான அம்மாவை மெதுவாய் ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டான். அவர்களுடையப் பைகளையும் கொண்டுபோய் வீட்டின் உள்கதவு வாசலில் வைத்தான். ஆட்டோவிற்கு திரும்பி வந்த கனகசபை ஒருமுறை ஆட்டோவை நன்றாகக் கவனித்தான். எதையாவது விட்டுவிட்டு சென்று இருப்பார்களா என்று? எதுவுமில்லை என்றவுடன் மீண்டும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். அப்போதுதான் அதை கவனித்தான்.
அந்தப் பெரியவருக்குத் தொன்னூறு வயதிற்கு மேல் இருக்கும். பெரியம்மாவிற்கு எம்பத்தைந்தைத் தாண்டியிருக்கும். சுருக்கம் விழுந்த பெரியம்மாவின் கையை இறுகப்பற்றியிருந்தார் அப்பெரியவர். பெரியம்மாவும் கணவனைத் தாங்கிப்பிடித்து நடந்து சென்றார். கனகசபைக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. இத்தனை வயசுக்குப் பின்னாலும் காதலும் தாபத்தியமும் இனிக்கின்றதா என்ன? உன்னதமான அன்பு இறைவனால் எப்போதும் கைவிடப்படுவதில்லை. ஆட்டோ வேகமாக ஓடியதில் புகை கருகியது.
சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கல்யாணி நின்றிருந்தாள். எடுப்பான தோற்றம். கை இடுக்கில் தோல்பை ஒன்று. பார்க்க சாதாரணமாய் இருந்தாலும் அழகாய் இருந்தாள். கல்யாணியின் கண்கள் வலதும் இடதுமாய் சுழன்ற வண்ணம் இருந்தன. இப்போது அவளின் முன்னால் ஆட்டோ வந்து நின்றது.
“ஏன் இவ்வளவு நேரம். சீக்கிரம் வர வேண்டியதுதானே” என்று கடிந்து கொண்டாள் கல்யாணி.
“சவாரி ஒன்னு இருந்தது. அதான் லேட்டாயிடுச்சி. வா.. வந்த ஆட்டோவுல சீக்கிரம் ஏறு. இன்னும் பசங்கள வேற கூப்பிட போகனும்” என்றான் கனகசபை.
பசங்க என்று சொன்னவுடன் முகம் கோணலாகியது கல்யாணிக்கு. இறுகிய முகத்துடனே ஆட்டோவில் ஏறினாள். கொஞ்சதூரம் சென்றவுடன் மளிகைகடை தாண்டி ஆட்டோவை நிறுத்தினான். கடைக்குச் சென்று பால் பாக்கெட் வாங்கி வந்து கல்யாணியிடம் கொடுத்தான். அவளும் வாங்கிக்கொண்டாள். வீடு போய்ச்சேரும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆட்டோவிலிருந்து கல்யாணி இறங்கியவுடன் புறப்படத் தயாரானான்.
“உள்ள வந்து காபி சாப்பிட்டு போங்க” என்றாள் கல்யாணி
“ஸ்கூல்ல இருந்து பசங்கள கூப்பிடனும். இப்பவே டைம் ஆச்சு. நான் அப்புறமா வரேன்” என்று சொல்லிக்கொண்டே வண்டியைக் கிளப்பினான்.
“இந்த மனுசனுக்கு இங்க வந்தாதான் ஏதோவொரு வேல இருக்குன்னு சொல்லி எஸ்கேப் ஆயிடுராரு. மாசம் பொறந்திச்சின்னா போதும், கல்லி..கல்லி..யின்னு பின்னாலே வந்து அந்தச் செலவு இருக்கு இந்தச் செலவு இருக்குன்னு வாங்கின சம்பளத்துல பாதிய புடிங்கிடுறாரு. மீதியை அப்பப்ப வந்து வாங்கிகிட்டு போயிடறாரு. ஆனா செய்யுறது எல்லாம் அந்த வீட்டுக்கு மட்டுதான். என்ன கொஞ்சமாவது நினைச்சு பாத்தாரா..” மனதில் பொறுமிக் கொண்டாள் கல்யாணி.
வாசலில் கீரையை ஆய்ந்து முறத்தில் வைத்துக்கொண்டிருந்தாள் மீனாட்சி. ஆட்டோ வந்ததும் பிள்ளைகள் ரெண்டும் வேகவேகமாய் அம்மாவைக் கடந்து உள்ளே ஓடின. ஆட்டோவை நிறுத்தி விட்டு கனகசபையும் மீனாட்சியைத் தாண்டி உள்ளே நுழையப்போனான்.
“பசங்களுக்கு எப்ப ஸ்கூல் முடிஞ்சது. இப்பத்தான் கூட்டிட்டு வரீங்க. இவ்வளவு நேரமா எங்க போனீங்க“
“சவாரி இருந்திச்சி. அதான் ஸ்கூலுக்குப் போக லேட்டாயிடுச்சு”
“எல்லாம் எனக்கு தெரியும். ஆட்டோ எங்கயெல்லாம் போகுதுன்னு.. நடக்கட்டும் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்குறன்”
“என்ன விசாரணை கமிஷனா? உனக்கு என்ன தெரியும்? அவனவனுக்கு ஆட்டோ ஓட்டி கஷ்டபட்டா தெரியும்”
“ஆமா… ஊர்ல எவனுமே ஆட்டோ ஓட்டுல பாரு. துரை நீங்க மட்டுந்தான் ஆட்டோ ஓட்டுறீங்க”
அடுத்த வினாடி மீனாட்சியின் கையில் இருந்த முறம் வாசலுக்குப் பறந்தது. கனகசபை வீட்டிற்குள் சென்றான். மீனாட்சி தேம்பி தேம்பி அழுதாள். பெரியவனும் சின்னவனும் பாத்ரூமில் ஒன்னுக்குப் போகச் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு ரெண்டு பசங்களும் அமைதியாய் வெளியில் எட்டிப்பார்த்தனர்.
அந்தத் தெருவில் கடைசி வீடுதான் கல்யாணியின் வீடு. ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் அவள் வீட்டு முன்னால் ஆட்டோ வந்து நின்றது. கையில் கேரிபேக். அவற்றில் மீன் இருந்தது. நேராக உள்ளே சென்றவன் கதவைச் சாத்தினான். தான் வந்த போவது யாருக்கும் தெரியக்கூடாதாம். ஆனால் அந்த வீட்டு முன்னால அப்பப்போ ஆட்டோ வந்து நிக்கிறது தெரு முழுக்க தெரிஞ்சுதான் இருந்தது.
“கல்யாணி.. கல்யாணி… எங்க இருக்குற…” என்று அழைத்துக்கொண்டே பின் வாசலுக்குச் சென்றான்.
“துணி துவைச்சிட்டு இருக்கேன்” பதில் உடனடியாக வந்தது.
அவளின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான். கல்யாணியையே உற்றுப் பாரத்துக் கொண்டிருந்தான். என்ன அழகு? தங்கமான குணம்! வியர்வையும் தண்ணீராலும் நனைந்து போயிருந்த முதுகுபுறம். தன்னையே மறந்து போனான்.
“என்ன புருஷன் சார்! பொண்டாட்டிய சைட் அடிக்கிறியா?”
“ஆமாம்!” உண்மையை ஒத்துக்கொண்டான் கனகசபை.
“செம தைரியம்தான் உங்களுக்கு! சரி நடங்க வெளிய போவோம்…”
“எதுக்கு வெளிய கூப்பிடுற”
“சும்மாதான்… கொஞ்ச வாயேன்..” என்று கையைப் பிடித்து இழுத்தாள். அவள் கை முழுவதும் அழுக்கு சோப்பு நுரை இருந்ததனால் வழுக்கிச் சென்றது.
“என்ன சைட் அடிக்கிற இல்ல.. அதான் வெளிய வந்து ஊரக்கூட்டுறன். சத்தமா இவதான் என்னோட பொண்டாட்டின்னு சொல்லு”
“ம்..ம்.. அது வந்து.. அது வந்து… என்னால முடியாது”
“என்ன முடியாதா? ஆமா நானு யாரு? உங்கள சந்தோஷப்படுத்தனும். காசு கேட்கிறப்பல்லாம் கொடுக்கனும். அதான உங்க விருப்பம். சிறுக்கி மொவதான நானு!
“அப்படியில்ல கல்யாணி தப்பா புரிஞ்சுக்காத…” கோப முகத்துடன் ஐந்து விரல்களையும் ஒன்றாக தலைக்கு மேல தூக்கி, ”போதும் நிறுத்து பேசாத! நான் சிறுக்கி மொவதான” என்றாள். கல்யாணியின் மனம் குமறியது.
“தெருவுல நடக்க முடியல. என்ன யாரு பாத்தாலும், டே ஸ்டெப்னி போகுதுடா – ன்னு சொல்றாங்க. செகணட்டு, பழசு, ஓட்ட காரு, டவுன்பஸ்சு, டே அந்த ஆட்டோக்காரன் அவனுக்கும் வண்டிக்கும் ஸ்டெப்னி வச்சிருக்காண்டா ன்னு சொல்றாங்க”
“நமக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சில்ல. நீ என்னோட பொண்டாட்டி கல்யாணி. உன்ன எதுக்கு அப்படி பேசனும்”
“உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சின்னு நம்ம ரெண்டு பேரு, அப்புறம் அந்தப் பூசாரி அப்புறம் ரெண்டு பொண்டாட்டிகார சாமி. அவ்வளவுதான் வேற யாருக்குமே தெரியாது. இதெல்லாம் ஒரு கல்யாணமா? நல்லது கெட்டதுக்குப் போக முடியல… நீதான் யே புருஷன்னு வெளிய சொல்ல முடியல.. ஆபிஸ்ல எங்க வூட்டுகாரரு மாதிரி யாருமில்லன்னு சொல்லி வச்சிருக்கேன். இன்னும் அவுங்களுக்கு நம்ம கதை தெரியல. தெரிஞ்சா அவ்வளவுதான் நான். ஏதோ யே கதையும் ஓடிட்டு இருக்கு” கடுகடுத்தாள் கல்யாணி. கனகசபை மூஞ்சியை உம்மென்று வைத்திருந்தான்.
“உங்களுக்கென்ன நீங்க ஆம்பிளைங்க. உங்க சுகதுக்கத்தை எல்லாம் இங்க இறக்கி வச்சிட்டு போயிடுவீங்க… நாங்க எங்க இறக்கி வைக்கிறதாம்? எந்த நேரத்துல எங்க அம்மாக்காரி என்னைப் பெத்துப்போட்டாலோ தெரியல. காலம் பூராவும் லோலு பட்டுட்டு திரியரன். இதுக்கு ஒரு விடிவுகாலமே வராதா” என்று அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டாள். கனகசபை தலை குனிந்து கொண்டான். கனகசபை அப்படி உட்காந்திருப்பது கல்யாணிக்குப் பிடிக்கவில்லை.
“சரி.. தலையை தொங்கப்போட்டுட்டு உட்காந்து இருக்காதீங்க. நல்லா இல்ல! சரி கையில என்ன வச்சிருக்கீங்க..”
“மத்தி மீனு வாங்கிட்டு வந்திருக்கேன். மத்தி மீனு உடம்புக்கு நல்லாதாம். குழும்பும் ருசியாய் இருக்குமாம்”
“அந்த வூட்டுக்கு என்ன வாங்கி கொடுத்தீரூ…” புடவைக்கு சோப்பு போட்டுக்கொண்டே கேட்டாள்.
“அங்கேயும் மீனு வாங்கி கொடுத்துட்டுதான் வரேன்” கல்யாணி கனகசபையை முறைத்துவிட்டு, மீன அலசி வையுங்க. சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடியை எடுத்து உரிச்சி வையுங்க. புளி கொஞ்சம் ஊற வைச்சிருங்க. நானு இந்த ரெண்டு துணியை அலசி போட்டுட்டு வந்துடுறேன்.
ஒரே பொண்ணுங்கிறதால அப்பாவுக்கு ரொம்ப புடிச்ச பொண்ணு. அம்மாதான் இப்படி செல்லம் கொடுத்து கொடுத்து அவள கெடுக்கிறீங்க.. என்று அப்பப்போ சண்டை போடுவா. இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு அலைஞ்சிட்டு இருந்தேன். அப்பதான் எங்க வீட்டுக்கு அப்பாவோட பால்ய வயசு நண்பர் ஒருத்தர் வந்திருந்தார். அவுங்க பையன் குரூப் எக்ஸாம் பாஸ் பண்ணி வேலையில இருக்கிறானாம். இப்ப பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்களாம். என்னைப் பார்த்து,
“நீ என்னம்மா பண்ற” – என்றார் அவர்.
“பி.இ முடிச்சிருக்கேன். இப்ப வேலை தேடிகிட்டு இருக்கேன். அப்பாவுக்கும் வயசாயிடுச்சி. அப்பாவுடைய பென்சன் பணத்துலதான் குடும்பமே ஓடுது. நான் வேலைக்கு போனேனான்னா… கொஞ்சம் சிரமம் கொறையும்” வந்தவரிடம் தன்னுடைய இயலாமையைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டாள் கல்யாணி.
“நீ ஏன் குரூப் எக்ஸாம்க்கு படிக்க கூடாது” என்றார்.
அன்று அவர் சொன்னதுதான் மூன்று வருடங்களுக்குப் பிறகு சாத்தியமாகி இருக்கிறது. இரவு பகல் என்று பாராமல் படித்தவள் இன்று அரசாங்க வேலையில் அமர்ந்திருக்கிறாள். கல்யாணிக்கும் வயசு ஏறிக்கொண்டே சென்றது. அப்பாவும் அவருடைய நண்பரும் அடுத்த சந்திப்பில் என்னுடைய கல்யாணத்தைப் பற்றியும் பேசிக்கொண்டனர். அப்பாவின் நண்பருடைய மகனை எனக்கு நிச்சயம் செய்திருந்தனர். நல்ல சம்பந்தம்தான். அன்று காலை நல்ல சுபமுகூர்த்த வேளையில் எனக்கு திருமணம் நடந்தது. மறுவீடு அழைப்பின் போது என்னுடைய கணவர் அவரின் தங்கை குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்க பைக்கில் செல்லும் போது லாரி மீது மோதி மரணமடைந்தார். அத்துடன் என் வாழ்வும் நடுத்தெருவுக்கு வந்து விட்டது. கொஞ்ச காலத்தில் அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். நான் அநாதை ஆக்கப்பட்டேன். அப்பொழுதுதான் தனிமையை முழுமையாக உணர்ந்தேன். வேலைக்கு சென்று வரும்போதுதான் இந்தக் கனகசபையைப் பார்த்தேன். தினமும் அவருடைய ஆட்டோவில்தான் சென்று வருவேன். ஆரம்பத்தில் நான் அவருடன் பேசவே மாட்டேன். நாளாக நாளாகப் கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் என்னுடைய ஆதரவை எண்ணி அவரை விரும்ப ஆரமித்தேன். இந்தச் சமூகத்தில் எனக்கு மனைவி என்கிற அந்தஸ்து வேண்டும். கனகசபையும் அவருடைய வீட்டில் எப்படியோ சம்மதம் பெற்று தருவதாக உறுதி அளித்தார். மனைவி என்கிற அந்தஸ்து அவரிடம் கிடைக்கும் என நம்பினேன். அதனால் அவருக்கு இரண்டாவது மனைவியாகக் கழுத்தை நீட்டினேன்.
எந்த மனைவியாவது தன்னுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி வருவதை ஒத்துக்கொள்வாளா? எங்கையாவது இப்படி நடக்குமா? நான்தான் முட்டாள்தனமாக நம்பிவிட்டேன். என்ன மடத்தனமாய் இருக்கிறது? என்று துணிகளை அலசிக்கொண்டை அத்தனையும் மனதில் படமாய் ஓட்டிப்பார்த்துக் கொண்டாள். கையில் இருந்த ஈரப்புடவையை கையை மேலே தூக்கி உதறினாள். துளித்துளியாய் தண்ணீர் சாரளாய் தெரித்தது. மத்தி மீனு குழம்பில் கொதித்தது. கல்யாணியின் மனமும் குழம்பில் கிடந்த மீனாய் தவித்த்து.
அன்று மாலை கல்யாணியில் வீட்டுக்கதவு யாரோ தட்டும் சத்தம் கேட்டது. மாராப்பை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு கல்யாணிதான் கதவை திறந்தாள். திறந்தவுடன், “ஏ… தேவுடியா மொவளே!..” என்று அவளுடைய வயிற்றில் எட்டி உதைக்கப்பட்டது. தொப்பென்று உள்ளே போய் விழுந்தாள். அதற்குள் கனகசபையின் மனைவியும் அவளுடைய தம்பிகளும் உள்ளே நுழைந்திருந்தனர். மீனாட்சி கனகசபையைப் பார்த்தாள்.
“இந்தாருடா தம்பி… உங்க மாமன பாத்தியாடா… ஆட்டுக்கறியை எனக்கு எடுத்துக்கொடுத்துட்டு மூத்திரத்த குடிக்க இங்க வந்திருக்காருடா” – மீனாட்சி
“அக்கா சும்மா இரு… பேச்சைக்கொற.. மாமா நீங்க வாங்க மாமா…” என்று கனகசபையை வெளியே அழைத்துச்சென்றனர். செல்லும்போது அக்கா மீனாட்சியிடம் கண்ணைக்காமித்துக் கல்யாணியைப் பாரத்தனர். அவ்வளவுதான்! மீனாட்சி கல்யாணியின் மேல் ஏறி சிண்டப்புடிச்சி அடிஅடியென்று அடித்துத் துவைத்துக்கொண்டிருந்தாள். தலைமுடி விரித்த நிலையில் கல்யாணி கீழே படுத்துக்கொண்டிருக்க, கல்யாணியின் வயிற்றின் மேல் மீனாட்சி அமர்ந்திருந்தாள். அவளின் கைகள் கல்யாணியின் மார்பை ஓங்கி ஓங்கி குத்தியது. மீனாட்சியின் வாயில் கெட்ட வார்த்தைகள் தவிர வேறெதுவும் வரவில்லை. பச்சை பச்சையாகத் திட்டிக்கொண்டிருந்தாள்.
“விடுங்கடா என்னை… எங்கடா கூட்டிட்டு போறீங்க… ” என்றார் கனகசபை. மீனாட்சியின் தம்பிகள் ரெண்டு பேரும் அந்த வீதியின் முனைப்பகுதியில் உள்ள சாலையில் கொண்டு வந்து சேர்த்தனர். கல்யாணி வீட்டில் மீனாட்சி அடிப்பது பெரும் சத்தத்ததுடன் அலறல் கேட்டது. அந்த வீதி முழுவதும் கூட்டமாய் மக்கள் நிறைந்து இருந்தனர். கடைசி வீட்டில் அப்படி என்ன நடக்கிறது என்ற ஆவலே அவர்களிடத்தில் மிகுந்திருந்தது. ஒரு சிலபேர் இப்படி அப்படி என்று பலர் அலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கல்யாணியால் அடியைப் பொறுக்க முடியவில்லை. மயக்க நிலைக்குக் கொஞ்சகொஞ்சமாய் சென்றுகொண்டிருந்தாள். மீனாட்சியின் ஒவ்வொரு அடியும் கன்னத்தில் மாறிமாறி விழுந்தது. அடுத்த வினாடி.. கல்யாணி மீனாட்சியை ஒரேஒரு தள்ளாய் கதவுக்கு வெளியே தள்ளி தாழிட்டாள். அப்பதான் அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. மேல்மூச்சு கீழ்மூச்சி வாங்கியது. அடிவயிறு சுள்ளென்று வலித்தது. நெஞ்சு வெடித்து இதயம் வெளியே வந்துவிடும் போலிருந்தது கல்யாணிக்கு.
“கதவ தொறடி நாதேரி முண்ட” சத்தமாய் திட்டினாள்.
கதவை எட்டி எட்டி உதைத்தாள். கதவு அதற்குமேல் திறக்காது என்று தெரிந்து கொண்டாள் மீனாட்சி. மாராப்பை நேராக இழுத்துவிட்டுக்கொண்டு கலைந்திருந்த தலைமுடியைக் கொண்டைப்போட்டுக்கொண்டாள். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் மீனாட்சியின் வெறித்தனமான ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நேராக கணவனிடம் சென்றாள். அவனுடைய சட்டையை இறுக்கப்பிடித்துக்கொண்டாள்.
“எங்கிட்ட இல்லாதது அப்படி என்ன அவகிட்ட இருக்கு? சொல்லு… இப்பவே எனக்கு தெரிஞ்சாகனும் எங்கிட்ட இல்லாதது அப்படி என்ன அவகிட்ட இருக்கு?”
“அமைதியா இரு.. எல்லாரும் பாக்குறாங்க. மானமே போகுது” – கனகசபை
“பாத்தியாடா தம்பி உங்க மாமாவுக்கு மானம் போகுதாம். ஏற்கனவே மானம் காத்துல போயி சந்தி சிரிப்பா சிரிக்குது. அவஅவளுக்கும் வாழ்க்கையே போகுதாம்… இவருக்கு மானம் போகுதாம்மல்ல…” நக்கலாய்ச் சிரித்தாள் மீனாட்சி.
“எதுவாயிருந்தாலும் வீட்டுக்குப் போயி பேசிக்கலாம். வா.. முதல்ல வீட்டுக்குப் போவோம்…” என்றார் கனகசபை.
“என்னது வீட்டுக்குப் போவோமா? என்னது என்ன பூசான பூத்துப் போயிருக்கு. அவகிட்ட என்ன இருக்குன்னுகு நாக்க தொங்க போட்டுட்டு போனவ”
கொஞ்சநேரம் அந்த இடமே நாரசமாய் வார்த்தைகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன. சிலர் சின்னக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். வலி தாங்க முடியாமல் குப்புறப்படுத்துக்கிடந்தாள் கல்யாணி. அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீர்த்துளியானது தரையில் போடப்பட்டிருந்த கோடுகளின் வழியாக ஓடி சுவற்றை தொட்டு திக்குதெரியாமல் அடைபட்டு நின்றது.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
கணவனை இழந்த ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் அவல நிலையை படம் பிடித்து காட்டி பெண்களின் மனக்குமுறலை சமூகத்திற்கு உணர்த்திய கதை ஆசிரியர் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்