இதழியலாளரின் தகுதிகள் யாவை?

இதழியலாளரின் தகுதிகள்

இதழியலாளரின் தகுதிகள் யாவை?


            ஒருவர் இதழியலாளராக வாழ்க்கையை நடத்தி, பெயரும் புகழும் பெற்றுத்திகழ வேண்டுமானால், அவரிடம் இதழியல் தொழிலுக்கு வேண்டிய சில பொதுத் தகுதிகளும் (General Qualifications), சில சிறப்புத் திறன்களும் (Special skills) இருக்க வேண்டும். இவை இயல்பாக அமையாவிட்டால் பயிற்சியின் மூலமாகவும், முயற்சியின் வாயிலாகவும் ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும். இதழியலாளர்களுக்கு வேண்டிய தகுதிகளையும் திறன்களையும் விளக்கிக் கூறலாம்.

(i) பொதுத் தகுதிகள் :

            இதழியலில் பணி செய்கின்றவர்களிடம் அமைந்திருக்க வேண்டிய குறிப்பிடத்தக்க பொதுத் தகுதிகளைத் தொகுத்துக் கூறலாம்.

1.கல்வித் தகுதி :

      இதழியலாளராகப் பணி செய்ய விரும்புபவர் ஓரளவு நன்கு எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். பெரும்பாலான இதழ்கள் பொதுவாகப் பட்டம் பெற்றவர்களையே பணியிலமர்த்த விரும்புகின்றன. பொதுக்கல்வித்தகுதியோடு, எந்த மொழி இதழில் பணியாற்றச் செய்கின்றாரோ அந்த மொழியில் எழுத்தாற்றல் பெற்றிருக்க வேண்டும். பல மொழிகளைத் தெரிந்திருப்பது இதழியல் பணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி பெற்றவர்களால் இதழியல் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

2. பொது அறிவுத்தேர்ச்சி:

      பொது அறிவில் தேர்ச்சி பெற்றிருப்பது இதழியலுக்கு வேண்டிய ஒரு தகுதியாகும். எடுத்துக்காட்டாக, செய்தியாளர் எந்தச் செய்தியைத் திரட்டினாலும், அந்தச் செய்தி சரியானதா வென்பதைத் தீர்மானிக்கவும், அதனைப் பற்றி எழுதவும் பொது அறிவு தேவையாகும். உலகியலறிவு பெற்றவர்களால் இதழியல் பணிகளை அருமையாகச் செய்ய முடியும்.

3. வீர தீரச் செயல்களில் ஆர்வம்:

இதழியல் பணியில் பல வகை இடர்களை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளிலும் அறிவாற்றலோடும், துணிச்சலோடும் இதழியலாளர்கள் செயல்பட வேண்டும். அதற்குரிய அஞ்சாமை இயல்பு இதழியலாளர்களுக்குத் தேவை.

4. கடின உழைப்பு :

இதழியலாளர்கள் காலம் கருதாமல் உழைக்கும் இயல்புடையவராக இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, செய்தியாளர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் செய்திகளுக்காகக் காத்திருக்க வேண்டும். ஓய்வு ஒழிவின்றி அல்லும் பகலும் அயராமல் உழைக்கின்றவர்களால் தான் இதழியலில் பெயரும் புகழும் கொண்ட சிறப்பினைப் பெற முடியும்.

5. பொறுப்புணர்ச்சி:

இதழியலாளா மிருந்த பொறுப்பு வுணர்ச்சியோடு செயல்பட வேண்டும். தனது பணிகளின் விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டும். சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய தெளிவு இதழியலாளருக்கு வேண்டும்.

6. சுதந்திரமாகச் செயல்படல்:

இதழியலாளர்கள் எந்த விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆட்படாமல், சுதந்திரமாகச் செயல்படும் மனப்பாங்கினைப் பெற்றிருக்க வேண்டும். சுதந்திர உணர்வு இல்லாதவர்களால் இதழியலில் புதுப்புது சாதனைகளை நிகழ்த்த முடியாது.

7. சத்திய வேட்கை:

இதழியலாளர்கள் சத்திய வேட்கை வுடையவர்களாக இருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொய்யானவற்றைப் பரப்பக் கூடாது.

8. அற உணர்வு :

இதழியலாளர்கள் நடுநிலை நின்று அறவுணர்வோடு செயல்பட வேண்டும். எந்த நிலையிலும் சமுதாய நீதிக்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது.

9.நாட்டுப் பற்று :

இதழியலாளர்களிடம் தாய் நாட்டுப் பற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் இதழியல் பணியைத் தொண்டு மனப்பான்மையோடு செய்ய முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இதழியல் பணி மூலம் தொண்டு செய்கின்ற நோக்கம் இருந்தால், அவரது பணியால் பெரும்பலன்கள் விளையும்.

(ii) சிறப்புத் திறன்கள்:

ஆசிரியர் தொழில், மருத்துவர் தொழில் போன்று இதழியல் தொழிலும் தனித்திறமைகளைச் சார்ந்து அமைகின்றது. செய்யும் தொழிலுக்கு வேண்டிய திறமைகளைப் பெற்றிருக்காவிட்டால், இத்தொழிலில் வெற்றி பெற இயலாது. இதழியல் தொழிலுக்கு வேண்டிய சிறப்புத் திறமைகளைச் சுட்டிக்காட்டலாம்.

1. எழுத்துத்திறன் :

இதழியலில், குறிப்பாக செய்தித்திரட்டுதல், செப்பனிடுதல் (Editing) போன்ற பணிகளைச் செய்பவர்களிடம் எதற்கும் வடிவமைத்து எழுதும் திறன் இருக்க வேண்டும். எழுதுவது ஒரு கலையாகும். எழுதுவதை விளக்கமாகவும், நுட்பமாகவும், பிறர் மனங்கொள்ளத்தக்க வகையிலும் எழுத வேண்டும். சுவையான எழுத்து நடையை வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள். எழுத வேண்டியதை உரியகாலத்தில், விரைந்து எழுதித்தரும் ஆற்றலை இதழியலாளர்கள் முயன்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. தேர்ந்தெடுக்கும் திறன் :

உலகத்தில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடக்கலாம். அவை எல்லாம் இதழ்களில் வெளியிடும் தகுதி பெறுவதில்லை. எவற்றை எப்படி வெளியிட வேண்டுமென்பதைத் தெரிந்தெடுக்கும் திறன் இதழியலாளர்களுக்குத் தேவை.

3.மெய்ப்பொருள் காணும் திறன்:

‘எப்பொருள் எத்தன்மைத் தாயின்’, எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ அப்பொருளில் மெய்ப் பொருள் காணும் திறன் இதழியலாளருக்குத் தேவை. உண்மை இதுவென்று ஆராய்ந்தறியாமல் எதனையும் வெளியிடக் கூடாது.

4.நினைவாற்றல்:

இதழியலாளர்களிடம் நல்ல நினைவாற்றல் இருக்க வேண்டும். எல்லா நிகழ்வுகளையும் உடனுக்குடன் எழுத இயலாது. பலவற்றை நினைவில் நிறுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுது தான் செய்திகளைச் சீர்குலைக்காமல் வெளியிட முடியும்.

5. சிறப்புப்பயிற்சி:

தொழிலில் பயன்படுத்துகின்ற கருவிகளை இயக்கவும், பிற பணிகளைச் செய்யவும் சிறப்புப்பயிற்சி பெற்றிருக்க வேண்டும். எதிர்காலத்தில் இதழியல் துறையில் மேலும் நிறைய வேலைவாய்ப்புக்கள் தோன்றும் சூழல் இருக்கின்றது. அவற்றைப் பலரும் குறிப்பாக இளைஞர்கள், நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

Leave a Reply