நீங்கள் வாழ்வில் உயர்வது உங்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையில்தான் உள்ளது. ஆதலால் சமுதாயத்தில் உயர்வதற்கு உங்களின் உடல் ஒத்துழைக்கின்றதா? கவனியுங்கள். மனம், மூளை, கண்கள், கைகள், கால்கள் என்று அனைத்தும் உங்களுக்கு உழைக்க தயாராக இருக்கின்றனவா? இந்தக் கேள்விக்கு ஆம் என்பது பதில் என்றால் நிச்சயம் நீங்கள் ஹீரோதான்.
தொடுக்கப்பட்ட வினாவிற்குப் பலரின் பதில் இல்லை என்றே வரும். வெற்றிபெற வேண்டும் என்று மனம் நினைக்கும். ஆனால் அதிகாலையில் கண்கள் உறக்கத்தைத் துறக்க மறுக்கும். கால்கள் எழுந்து நடக்க தயங்கும். உடல் சோம்பலில் சுகம் கண்டு செயல்பட மறுக்கும். இவ்வாறு உங்களின் உறுப்புகளே உழைக்க மறுத்தால் மற்றவர்கள் எவ்வாறு அக்கரை கொள்வார்கள். எனவே நீங்கள் பிறந்த இச்சமுதாயத்தில் மாற்றப்பட வேண்டியவை நீக்கப்பட வேண்டியவை என்று எத்தனையோ பொதிந்துள்ளன. அந்த மாற்றங்களை இளைஞர்களே கொண்டு வரலாம். அவ்வாறு சமுதாயத்தின் மாற்றத்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு மாறப்போகும் காட்சியை இப்போதே உங்கள் மனக்கண்களால் காணுங்கள். எந்த நேரமும் அதே சிந்தனையுடனே உலவுங்கள். உறங்கும் போதும் அதே காட்சிகளைக் கனவிலும் கண்டீர்களேயானால், உங்களின் இலட்சிய பாதையை நோக்க உள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.
நீங்கள் செய்யும் கைமாறு
மனதில் நற்சிந்தனைகள் தோன்றி அவை செயலாக உருவெடுக்கும் போது துணையாக யாரும் இல்லையே என்று தோன்றும். மற்றவர்களை உதவிக்கு அழைக்கலாமா என ஏங்கும். வேண்டாம் யாரும் உங்களுக்கு உதவ வரவேண்டாம். மற்றவர்களுக்காகக் காத்திருந்தால் மணித்துளிகள் விரையமாகும். உலகில் எவற்றை இழந்தாலும் பெற்று விடலாம். ஆனால் உயிர்போன்ற நேரத்தை, நாட்களை இழந்தால் மீண்டும் பெற இயலாது. செயலைச் செய்ய தொடக்கத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும். நீங்கள் தொடர்ந்து செயல்பட்டால் நீரில் எழுதப்பட்ட எழுத்து போல கஷ்டங்கள் காணாமல் மறைந்து விடும். “தயங்கினால் உடலும் சுமைதான். எழுந்து நடந்தால் இமயமும் உங்கள் காலடியில் தான்” தேங்கி கிடக்கும் தண்ணீர் நாற்றமெடுக்கும். ஓடிக்கொண்டிருக்கும் நீரே தூய்மையானது. எனவே உங்களின் சிந்தனைகளைச் சமுதாய மாற்றத்திற்காகப் பயன்படுத்துங்கள். உங்களின் சிந்தனைகள் உதாரணமாக, நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் ஏழ்மையில் இருப்பவர்களை முன்னேற ஒருவழியை ஏற்படுத்தி அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல நினைக்கலாம். உமது சமுதாயத்தைப் பிச்சைக்காரர்களே இல்லாத ஒன்றாக மாற்ற வேண்டும் என எண்ணலாம். இளைஞர் தீயவழியில் செல்லாமல் நல்வழியைப் பின்பற்ற மார்கத்தைத் தேடலாம். இவ்வாறு எத்தனையோ உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்க்காகச் செய்கிறோம் என்ற எண்ணம் தோன்றாமல் உங்களின் சமுதாயத்திற்காக உங்களை மனிதனாக உருவாக்கிய இயற்கைக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு என்று கடமையாற்ற வேண்டும்.
மேன்மை தரும் இலக்குகள்
உங்களுக்குப் பிடித்த ஆசை சமுதாயத்திற்கு ஒரு வளர்ச்சியை பெற்றுத்தருவதாக இருக்கவேண்டும். தனிப்பட்ட உங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியை தரும் மாற்றத்தை உண்டு பன்னக்கூடாது. அது சுயநலம் என்ற பெயரில் தள்ளப்பட்டு விடும்.
உதாரணமாக ரைட் சகோதரர்கள் பறவைகள் போல பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அந்த ஆசை உலகத்தில் உள்ள மனித சமுதாயமே பறப்பதற்கு வழிவகுத்தது. கடின உழைப்பைக் கொண்டு பல போராட்டங்களின் இறுதியில் அடைய வேண்டியது பெரிய ஆக்கப்பூர்வமான மாற்றமாக இருக்க வேண்டும்.
மற்றவர்கள் உங்களுக்கு உதவுகிறார்களோ இல்லையோ! நீங்கள் அவர்களுக்கு உதவுங்கள். உதவும் இடத்தில் இருக்கிறீர்கள் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். கொடுக்கும்கை மேலிருக்கும் வாங்கும்கை தாழ்ந்திருக்கும். எனவே உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். பல வீடுகளில் பார்த்திருப்பீர்கள் ஒரு சன்னல் இருக்கும் அதற்கு எதிராக இன்றொன்றை வைப்பார்கள் காரணம் வெளியில் செல்ல வழி இருந்தால் மட்டுமே காற்றும் கூட உள்ளே நுழையும். உழைக்க தயாராக இருந்தால் மட்டுமே சில ஆக்கச்செயல்கள் உங்களை வந்து சேரும். ஒரு பிரச்சனை உங்களை தேடி வருகிறது என்றால் அதனை தீர்வு காணும் மார்க்கமும் உங்களிடமே உள்ளது என்பது பொருளாகும். எவற்றைக் கொண்டும் அச்சம் கொள்ளலாகாது. வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று உங்களின் பாதையில் சென்று கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும், நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் அதன் பயன் உங்களையே வந்து சேரும்.
ஆயிரமாயிரம் பசுக்கள் நிறைந்துள்ள கூட்டத்தில் விடப்பட்ட கன்று ஒன்று அதன் தாய்ப்பசுவைச் சென்று அடைந்துவிடும். அந்தத் தன்மை கன்றுக்கு உண்டு. அதைப்போன்று செய்யும் செயலின் பலன் சேர்வது உறுதி. பெய்த நீரானது பள்ளங்களை நோக்கியே செல்லும், சென்று அவற்றை நிறைவடையச் செய்யும். அதைப்போல உங்களின் இலக்குகளால் ஆக்கச் சிந்தனைகளால் இந்தச் சமுதாயத்தை நிறைவடையச் செய்யுங்கள்.
உங்களின் உள்ளே உன்னதம்
இந்த உலகத்தில் மற்றவர்கள் வியக்கும் வண்ணம் செயல்களைச் செய்யும் ஆக்கசக்தி உங்களிடமே உள்ளது. இதை உணர்தல் வேண்டும்.
ஒரு காட்டில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவனுக்கு பசி எடுத்தது. அவ்வழியில் ஒரு மரத்தில் பழங்கள் பழுத்து தொங்கின. அதைப்பார்த்த அவன் ஓடிச்சென்று மரத்தில் ஏறி பழங்களைப் பறித்து தின்றான். பின்னர் கிளையின் நுனியில் இன்னும் கனிந்த பழங்கள் தென்பட அந்த நுனிப்பகுதிக்கு செல்ல கிளை ஒடிந்து கீழே விழப்போனவன் அடுத்த ஒரு கிளையைப் பற்றிக்கொண்டு தொங்கினான். அங்கிருந்து தரை சிறிது தூரமாகத்தான் தெரிந்தது. அவன் பயத்தில் அலற ஆரம்பித்தான். நடுங்கினான் என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கத்த ஆரம்பித்தான். அந்த அலறல் காடு முழுவதும் கேட்டது. சில நிமிடங்களில் அங்கு ஒருவர் வந்தார். இவன் “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று பதற்றத்துடன் கத்தினான். கீழே இருந்த நபர் இவன் மீது ஒரு கல்லை விட்டெறிந்தார். இவனுக்கு கோபம் வந்தது “என்னை காப்பாற்றச் சொன்னால் கல்லால் அடிக்கிறாயா?” என்று கேட்டான். மீண்டும் அந்த நபர் இன்னொரு கல்லையும் விட்டெரிந்தார். அவனுக்கு கோபம் வந்து “இரு வருகிறேன். உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று மரத்தின் சிறிது மேலுள்ள கிளையைப் பற்றிக்கொண்டான். மீண்டும் அந்த நபர் ஒன்றும் பேசாமல் கல்லை எடுத்து அவன்மீது எறிந்தார். உடனே மரத்தில் இருந்த அவன் கீழே இருக்கும் நபரை அடிப்பதற்காக மெதுவாக எம்பி மேலுள்ள கிளையில் தன்காலை வைத்து ஏறிவிட்டான். பின்னர் கோபத்துடனே சரசரவென்று மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அடிக்கச் சென்றான். “ஏன் என்னை கல்லால் அடித்தாய்” என்று அதட்டினான். அந்த நபர் “நான் உன்னை அடிக்க வில்லை காப்பாற்றினேன் எவ்வாறென்றால் மரக்கிளையில் தொங்கும்போது உங்கள் மனம் பயத்தில் மூழ்கியிருந்தது. உடல் வியர்த்தது. கால்கள் நடுங்கின. மேலே ஏற இயலாமலும் கீழே இறங்க முடியாமலும் கத்தினாய். நான் கல்லால் அடித்ததும் அந்தப் பயம்நிலை மாறி கோபம் வந்தது. நடுக்கம் மாறி மேலே ஏறுவதற்கான வேகம் வந்தது. கீழே இறங்கும் நிதானம் உண்டானது. நான் கல்லால் அடிக்கவில்லை என்றால் நீ பயத்தால் கத்திக்கொண்டேதான் இருப்பாய் இறங்க மாட்டாய். இறங்கும் சக்தி உன்னிடமே இருந்தது. ஆனால் அதை நான்தான் வெளிக்கொணர்ந்தேன். எனவே நான் தான் உன்னை காப்பாற்றினேன்”. என்றார்.
இவ்வாறு உலகில் உள்ள ஆக்கங்கள் எல்லாமே செய்து முடிக்கும் தன்மை மனிதர்களிடம் உள்ளது. ஆனால் பலருடைய வாழ்வில் அந்த மாதிரியான நிகழ்வு நடப்பதே இல்லை. அந்த ஆக்கசக்தியை பத்திரமாகவே வைத்துக் கொள்கிறார்கள்.
தீமையற்றவை நல்லவையே
தீமையை ஏற்படுத்தாத ஒவ்வொரு சிந்தனையும் ஆக்கச்சிந்தனையே ஆகும். பலர் வாழ்வில் வளர்ந்து காதல் செய்து திருமணம் புரிந்து குழந்தையைப் பெற்று காலம் முடிந்து மறைந்து விடுகிறார்கள். இது என்ன வாழ்க்கை. இம் மாதிரியான வாழ்க்கையை மிருகங்களும் வாழ்கின்றன. எனவே மனிதனாகப் பிறந்து மனிதனாக வாழ வேண்டும்.
இவ்உலகில் எத்தனையோ உயிர்களைப் பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் குறைந்த அறிவுடன் பிறக்க மனிதர்கள் மட்டும் ஏன் ஆறறிவு படைத்த சிந்தனைதிறன் மிக்கவராகப் பிறக்க வேண்டும்? சிந்திக்க வேண்டாமா? மனிதனிடம் மட்டுமே மற்ற உயிர்களையும் காப்பாற்றும் திறன் உள்ளது என்பதுதான். மனிதன் இந்தப் பிறவியில் மட்டுமே மற்றவர்களுக்கு நன்மை செய்யும் திறன் படைத்தவன். இதை பலர் உணர்வதில்லை. இந்த மனிதனை படைத்த பிறகு எந்த உயிரையும் இறைவன் படைக்கவில்லை. காரணம் மனிதனே எல்லா உயிர்களையும் தனக்காகப் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதாலேயே ஆகும்.
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி
ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,
நல்லம்பள்ளி, தர்மபுரி.