Friday, September 12, 2025
Home Blog Page 20

ஆற்றுப்படை|சிறுகதை|பழ.பாலசுந்தரம்

ஆற்றுப்படை-சிறுகதை
அருவியில் திளைத்தது அலுக்கவே இல்லை அவர்களுக்கு. ஒரு வாளித் தண்ணீரில் உடம்பை நனைத்துக் கொள்ளும் அன்றாடக் கடமையிலிருந்து அருவிக் குளியல் முற்றிலும் வேறுபட்டிருந்தது. தடதட வென விழும் நீருக்கடியில் தங்களை மறந்து நின்று அனுபவித்துக் கொண்டிருந்தனர். திவ்யமான நீராடல் பசியைக் கிளப்பிற்று. அனைவரும் உணவை முடித்தபோது மணி பத்துதான் காலை ஆகியிருந்தது.

“ஆஃபீஸ் போற டைம் ஆயிடுச்சுப்பா… நேத்து இதே டைமுக்கு..” ஆரம்பித்த குமாரை அடக்கினர்.

”டேய் நிறுத்துடா…ஒரு நாளு ஜாலியா இருக்கலாமேன்னு ஒகேனக்கல் வந்திருக்கோம். இங்க வந்தும் ஆஃபீஸ் ஞாபகமா? அடுத்து என்ன பண்ணலாம்? சொல்லுங்கப்பா.”
           
“ரசூல்கானின் கேள்விக்கு விடைகள் பல வந்தன. மீன் வறுபடும் வாசனையில் மயங்கிய சிலர், வாங்கிக் கொடுத்து வறுக்கச் சொல்லும் ஏற்பாடுகளில் இறங்கினர். வேறு சிலர் தொங்கு பாலம் நோக்கி நடையைக் கட்டினர். மீண்டும் குளிக்க ஆசைப்பட்டவர்கள் நகர்ந்தனர். தண்ணீரைப் பார்த்ததும் வேறு திரவம் பற்றிய எண்ணம் எழப்பெற்றவர்கள் தனியே ஒதுங்கினர். எஞ்சிய மூவர் ராமன், சேகர், மற்றும் இளங்கோ.

“அப்படியே வேடிக்க பார்த்துக்கிட்டே நடப்போம்…” சேகரின் யோசனையை மற்ற இருவரும் மறுக்கவில்லை. வாகனங்கள் வர ஆரம்பித்தன. கர்நாடக மாநிலத்திலிருந்து நிறைய வந்திருந்தன. ஒரு கல்லூரியின் பேருந்து வந்ததும் களை கட்டியது. அந்தச் சூழ்நிலையே வண்ணமயமானது. மாணவிகள் குதூகலத்தோடு உலவினர். மேக மூட்டத்தால் சூரியன் காணாமல் போயிருந்தான். இளங்கோவிற்கு உடலும் மனதும் இலேசானது போல் இருந்தது. நடை தொடர்ந்தது.

மாதையன் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தான். கால் சட்டை மட்டும் உடம்பில். அரிவாளால் விறகு பிளந்து கொண்டிருந்த அம்மா தென்பட்டாள்.

“அம்பது ரூவா சேந்ததுமே வந்து குடுத்துட்டுப் போடா. இருந்த காசையெல்லாம் உங்கொப்பன் தூக்கிட்டுப் போயாச்சு. அரிசி எண்ணெயெல்லாம் வாங்கனும். சீக்கிரம் வந்துரு..”

”சரிம்மா…” ஆமோதிப்போடு ஆற்றங்கரை நோக்கி ஓடினான். ஐம்பது ரூபாய்க்கு மேல் எவ்வளவு சேர்க்க முடியும் என்ற எண்ணம் உள்ளே ஒடிக் கொண்டிருந்தது. நண்பர்களோடு தர்மபுரி சென்று சினிமா பார்த்துவிட்டு நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப எப்படியும் ஐம்பது ரூபாய் வேண்டும் என மனம் கணக்கிட்டது. இலக்கை எட்டிவிட வேண்டும் என்ற துடிப்பும் நாளைய சுகங்கள் பற்றிய நினைப்பும் அவனை வேகமாகச் செயல்பட வைத்தன.

அவர்கள் மூவரும் படகுத் துறையை அடைந்தபோது துடுப்போடு ஒருவர் அணுகினார்.
“சார்.. வாங்க சார்.. போட்ல போகலாம். ஐந்தருவியெல்லாம் பாத்துட்டு வரலாம்…”

”மூவருக்கும் உந்துதல் ஏற்பட ஒப்புதலோடு அவரைத் தொடர்ந்தார்கள். நதியின் ஓட்டத்தில் சீற்றம் இருந்தது. மாநில எல்லையாக மலை படுத்திருந்தது. மூவரையும் ஏற்றிக் கொண்டு பரிசல்காரரும் உள் அமர்ந்தார். துடுப்பை நீருக்குள் பாய்ச்சி, மணலை இளங்கோ, அவர் பெயரை விசாரிக்க, முகத்தில் சற்றே அழுத்த, படகு முன்னேறியது.  ஆச்சரியம் காட்டினார். அவனை நன்றாகப் பார்த்து உச்சரித்தார் ‘மாணிக்கம்’.
          
பரிசல் நீரின் போக்கிற்கு எதிராக முன்னேறிக் கொண்டிருந்தது. இருபுறமும் உயர்ந்த செங்குத்தான பாறைகள் புது அனுபவம். பிரிந்து விழுந்து கொண்டிருந்த அருவிகளின் மதில் போல நின்றிருக்க நடுவில் பயணித்தது இளங்கோவிற்குப் திவலைகள் காற்றில் பறந்து கொண்டிருந்த காட்சியில் சத்தம் அண்மையில் கேட்கத் தொடங்கியது. வெண்ணிறத் இளங்கோ லயித்துக் கொண்டிருந்தபோது வானிலிருந்து அசரீரியாய் ஒரு குரல் கேட்டது.

“அஞ்சு ரூவா குடுக்கறீங்களா, குதிக்கிறேன்…”
           
குரல் நோக்கித் தலை உயர்த்தினான் இளங்கோ. பக்கப் பாறையின் உச்சியில் ஒரு சிறுவன் உடம்பில் நீர் சொட்ட நின்று கொண்டிருந்தான். வயிறு ஒட்டிப் போய்த் தெரிந்தது. வயது பத்து கூடத் தாண்டியிருக்காது. கையை அவர்களை நோக்கித் தாழ்த்தி, விரல்களைக் குவித்து விரித்து மீண்டும் கேட்டான்.
“அஞ்சு ரூபா குடுக்கிறீங்களாண்ணா? குதிச்சுக் காட்டறேன்.”

திடுக்கிட்ட இளங்கோவிற்குள் சிந்தனை அலைகள் எழுப்ப நொடியில் சேகர் உரக்க கத்தினான்.

”குதிடா… பாக்கலாம்.”

அடுத்த வினாடி அந்தச் சிறுவன் பாறையிலிருந்து எம்பினான். சரேலென்று அந்தரத்தில் பறப்பது போல் உயர்ந்து, செங்குத்தாக இறங்கி, நீருக்குள் அமிழ்ந்தான். நீர்ப்பரப்பு பெரிதாகச் சலனப் பட்டு, அலைகள் உற்பத்தியாகி நெளிந்து பரவின. பரிசலில் மோதி ஆடவைத்தன. இளங்கோ பிரமிப்போடு எச்சில் விழுங்கினான். மாணிக்கம் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
          
“என்ன சார்… ஆச்சர்யமா இருக்கா? அந்தப் பையனுக்கு இதுதான் சார் தொழிலே. அவனோட தாத்தா சினிமா ஹீரோவுக்கெல்லாம் டூப்புப் போட்டுக் குதிச்சிருக்காரு… அருவிகிட்டயே குதிப்பாரு…”

வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான். பரிசல் அருவிகளை நெருங்கத் தத்தளிப்பு அதிகமானது. ஒடுங்கி அமர்ந்திருந்த ராமனின் குரல் நடுங்கியது.
           
“போதுங்க மாணிக்கம்… ரொம்ப கிட்ட போவேணாம்…”
    
லேசான சிரிப்போடு பரிசலை ஒரு சுற்றுச் சுற்றி லாவகமாகத் திருப்பினார். நீரின் திசையில் வேகமெடுத்தது. பாறை ஓரமாக ஒதுக்கி சற்றே குழிவான இடுக்கில் நிறுத்திக் கொண்டார். அவர் பீடியைப் பற்ற வைத்தபோது, பாறை மறைவிலிருந்து அந்தச் சிறுவன் வெளிவந்தான்.

இளங்கோ ஐந்து ரூபாய் நோட்டை அவன் ஈரக்கையில் வைத்தான்.

“ஆமா காசெல்லாம் எங்க வெச்சுக்குவே? நனையாதா?”

“நனையாதுண்ணா.. மேல பாறை சந்துல வெச்சுக்குவேன். அம்பதுரூவா சேந்ததும் எங்கம்மாகிட்டக் குடுத்துட்டு வந்துடுவேன்.
“
 ஐம்பது ரூபாய்க்குப் பத்து முறை குதித்து மேலே ஏற வேண்டுமே என இளங்கோவின் மனம் கணக்கிட்டது.

“உங்கம்மா என்ன பண்றாங்க?”

”வீட்டுலயே மீன் வறுத்து விக்கிறாங்கண்ணா, அவங்களுக்கு ஒரு கால் இல்லங்கண்ணா… சரியா நடக்க முடியாது…”
”உங்கப்பா இருக்காரா? என்ன பண்றாரு?” “பரிசல் வருதுங்கண்ணா… நான் போறேன்.”
            இளங்கோவின் தொடர்ந்த அழைப்புகளைப் பொருட்படுத்தாமல் விறுவிறுவெனப் பாறையில் தொற்றி ஏறி உச்சிக்குப் போய்விட்டான். மறுபடியும் அவன் குரல் ஒலித்தது. புதிதாக வந்த பரிசலில் இருந்தவர்கள் அவனைக் குதிக்கச் சொல்ல மீண்டும் அந்தக் காட்சி காணக் கிடைத்தது. இம்முறை இளங்கோவின் மன ஆழத்தில் குதித்து அங்கேயே துளைக்கத் தொடங்கியிருந்தான். அதிர்ச்சி நீங்காமல் கேட்டான்.

“இங்க ஆழம் எவ்வளவு இருக்குங்க மாணிக்கம்?”

“அது இருக்கும் சார்… ஒரு எம்பதடி..

“அப்படியா? பாறையோட உச்சி எவ்வளவு ஒயரம் இருக்கும்?”
    
 “ம்… நாப்பது அம்பதடி இருக்கலாம். மேலே நின்னு கீழ தண்ணியப் பாத்தா ஈரக்குலையெல்லாம் நடுங்கும் சார். அந்தப் பையனுக்குத் தெகிரியம் ஜாஸ்தி. சலிக்காத குதிப்பான். என்ன சார் பண்றது? அவங்கப்பனுக்குச் சதா சர்வ காலமும் சாராயந்தான் கதி. இவந்தான் சம்பாரிக்கணும். இவனுக்கு ஒரு தம்பி இருக்கான் சார்…”
மாணிக்கத்தின் விவரிப்பு இளங்கோவின் மனத்தைப் பிசைந்தது. சுரந்த கண்ணீரை, முகம் திருப்பிச் சுண்டிவிட்டான். இறங்க வேண்டிய இடம் சமீபித்துக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தபோது பாறை உச்சியில் சிறுவன் தெரிந்தான். குவிந்து விரிந்த வலக்கையும், அசைந்த வாயும் அப்படியே மனத்துள் பதிவாயின.
           
“சார் மொதல்லருந்தே அக்கறையா விசாரிச்சுகிட்டே வர்றீங்க….. இந்த ஏழைங்களைப் பத்தியெல்லாம் யாருமே கவலப்பட மாட்டாங்க சார்… நெறையப் பேரு ரெண்டு ரூவாதான் குடுப்பாங்க… சில பேரு அவனக் குதிக்கச் சொல்லிட்டுக் காசு தராமலே போயிருவாங்க… என்ன பண்ண முடியும் சொல்லுங்க… பொருளா, காசு தர்லேன்னா திரும்ப எடுத்துக்க?”

இளங்கோ கதறிவிடுவான் போலிருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டான். காவிரியின் ஆழத்தில் வாழ்க்கையைத் தேடித் தேடித் திரும்பும் அவனின் தொழில் நடவடிக்கைகள் இளங்கோவை அடியோடு புரட்டிப் போட இயல்பிழந்தான். மாணிக்கத்திடம் பணம் தந்து விடை பெற்றான்.
           
மீண்டும் அவர்கள் குழுவானார்கள். அவரவர் தங்கள் நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அனுபவப் பரிமாற்றங்கள் செய்து கொண்டிருக்க இளங்கோ மட்டும் தீவானான். சுற்றுலா மையத்தில் நிற்கும் பிரக்ஞையே அற்றுப் போனான். நீர் தளும்பும் செப்புக் குடத்தை நெஞ்சின் மேல் வைத்து ஒரு சேரப் பலர் அழுத்துவது போல் ஒரு வலி உணர்ந்தான். மறுபடியும் அந்தச் சிறுவன் எத்தனை முறை குதித்தானோ என்று மனம் பதைத்தது. கால் இல்லாத அம்மா குடிசை முன் அமர்ந்து மீன் வறுக்கும் காட்சியும் அவ்வப்போது தோன்றி வதைத்தது.
        
மாலையில் குளிர் ஆரம்பித்தபோது சிறுவனின் நடுக்கத்தை இளங்கோவால் உணரமுடிந்தது. மனவெளியில் நீர் நிறைந்து அதில் அந்தச் சிறுவன் மூழ்கி எழுந்து கொண்டிருந்தான். அவர்கள் சேலம் செல்லும் பேருந்தை நிறைத்தனர். ஓகேனக்கல் விலகத் தொடங்கிற்று. சமவெளியில் நதியாய் நடந்த காவிரி அருவியாய்க் குதிக்கும் உருமாற்றத்தால் எத்தனை பேரின் பிழைப்பு நடக்கிறது என்ற எண்ணம் பயணம் முழுவதும் அவனுள் ஊறிக்கொண்டேயிருந்தது.
           
அடுத்த நாள் முதல் தண்ணீரைப் பார்க்கும்போதெல்லாம் அதில் அந்தச் சிறுவன் குதித்து எழுவதான பிம்பம் தெரிந்து மறைய ஆரம்பித்தது இளங்கோவிற்கு. அவன் நெஞ்சிற்குள் சிறுவனின் கைகள் துழாவிக் கொண்டேயிருந்தன. ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்ற நினைப்பு பரிணாமுற்று குறிக்கோளாயிருந்தது. பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு ஞாயிறன்று புறப்பட்டுவிட்டான்.
           
விடுமுறையாதலால் அன்று கூட்டம் அதிகம்தான். எண்ணெய்ப் புட்டியோடு சூழ்ந்தவர்களையும், மீன் துண்டங்களோடு மறித்தவர்களையும் புறக்கணித்துப் பரிசல் துறையை எட்டினான் இளங்கோ கண்கள் மாணிக்கத்தைத் தேடின. சில நிமிடங்களில் பின்னாலிருந்து குரல் வந்தது.

“வாங்க சார்… வந்து ரொம்ப நேரமாச்சா?”

“இல்லல்ல… இப்பதான் வந்தேன். போலாமா?”
”போலாம் சார், தனியாத்தான் வந்தீங்களா?”

“ஆமாமா… அதுக்காக யோசிக்காதீங்க. சேத்து ரூவா குடுத்தர்றேன்.”

”அடடா… அதுக்காக கேக்கல சார்.. போன தடவையே பேசுனதவிடப் பத்து ரூவா அதிகமாத்தான் தந்துட்டுப் போனீங்க… உக்காருங்க.”

படகு நகர்ந்தது. இருவர் மட்டுமே என்பதால் இலகுவாக முன்னேறியது.

ஆமா, அந்தப் பையன் எப்படி இருக்கான்? மேலயிருந்து குதிச்சு சம்பாரிப்பானே…”
“மாதையனா… அவன் போய்ச் சேந்துட்டான் சார். தண்ணீலேயே பொழப்பு நடத்துனான் கடைசில அதுலயே உசிரும் போயிருச்சு…”

“பகீரென்றது அவனுக்கு. அதிர்ச்சியில் நெஞ்சடைத்தது.

“ஐயய்யோ… என்ன சொல்றீங்க மாணிக்கம்?”
          
“என்னத்த சார் சொல்றது? கொடும சார். ஒரு நா வேற ஸ்டேட் பசங்க கும்பலா வந்திருந்தானுங்க. வழக்கம் போல இவன் குதிச்சுக் காமிச்சு அஞ்சு ரூவா வாங்கினான். கும்பல்ல யாரோ பாவி நூறு ரூவா தர்றதா ஆச காட்டி அருவிகிட்டக் குதிக்கச் சொல்லியிருக்கான். இவனும் பணத்துக்கு ஆசப்பட்டு நெப்பு தெரியாமக் குதிச்சுட்டான். பாறையில் அடிபட்டு மண்ட பொளந்து போச்சு. ரொம்ப தூரம் தள்ளிப்போய்த்தான் பாடி கெடச்சுது. வயித்துப் பொழப்புக்காக ஏதோ பண்ணப் போயி… ப்ச் பாவம் சார்…”
           
துக்கத்தால் கனத்துப்போன மனத்தோடு செய்வதறியாது உறைந்து போனான் இளங்கோ. படகு ஐந்தருவியை நெருங்க. அவன் பார்வை மேலே போனது. வெட வெடத்தபடி ஒரு சிறுவன் தெரிந்தான்.

“இது யாருங்க மாணிக்கம்?”

”மாதய்யனோட தம்பி சார். இஸ்கூல் போறத நிறுத்திட்டு இங்க வந்துட்டான். என்ன சார் பண்றது. பொழப்பு நடக்கணுமே.

பரிசல் முன்னேற… மேலிருந்து கீச்சுக் குரல் கேட்டது.
“அம்பது ரூபா குடுக்கறேன் குதிடா…” கட்டுப்பாட்டை இழந்து கத்திய இளங்கோ, பொங்கிய கண்ணீரையும் துடைக்காமல் மாணிக்கத்தின் தோளில் விழுந்து கேவ ஆரம்பித்தான். அவர் உடலும் குலுங்க துவங்க, இருவரின் கண்ணீரும் படகுக்குள் சொட்ட ஆரம்பித்தது. சில நொடிகளில் நீர்ப்பரப்பு அதிர்ந்து படகு ஆட ஆரம்பித்தது. சிதறித் தெளித்த நீர்த்துளிகளுள் ஒன்று இளங்கோவின் வாயில் பட உப்புக் கரித்தது

சிறுகதையின் ஆசிரியர்

பழ.பாலசுந்தரம்

எழுத்தாளர்

ஓசூர் – 635 109

 

தேவதை சிரிப்பு |கவிதை|ச.குமரேசன்

தேவதை சிரிப்பு - ச. குமரேசன் - கவிதை

தேவதை சிரிப்பு

 
பிரெஞ்சு டியூ
பிளேவை
நினைவூட்டும்
வெண்ணிற
சுருண்ட கூந்தல்..!

 
தோடுடைய செவியனை

கண் முன் நிறுத்தும் 

அவள் காதின் நீண்ட துளைகள்..!

 
கைகளால் என்னை இழுத்து

இன்பமாய் கொஞ்சிடும்போது

தொங்கட்டான் கன்னம் வரை சென்று

ஊசல் வரி பாடிவரும்..!

 
பாட்டி வந்தவுடன்

திருவிழா ராட்டினம்

கண்ட மகிழ்ச்சி பொங்கி வரும்..!

 
வயல் வரப்புகளை

இரண்டு வட்டம் சுற்றி வருவோம்…

ஓட்டத்தினூடே பாட்டி கையிலுள்ள

மஞ்சள் பையின்
 
நினைவுகளும் சேர்ந்தே

ஓடிக்கொண்டிருக்கும்..!

 
பாட்டியின் வழக்கமான
 
மிக்சர் பொட்டலம்
 
பார்லேஜ் பிஸ்கட்
 
அன்பில் துவைத்து எடுத்த

அச்சு முறுக்கு . . !

 
பேரன்களை கண்டவுடன்

பாட்டியின் மஞ்சள் முகம்
 
மத்தாப்பாய் ஒளிவிடும்…

பாட்டி வாய்க்கு 
பல்லே
தேவையில்லை
 
தேவதை சிரிப்பு..!

 
எங்கள் அன்னையை

அகிலத்திற்கு

அறிமுகப்படுத்தியவள்
 
அன்பே உருவானவள்..!

 
எப்போது எண்ணினாலும்

என் துன்பத்தை எல்லாம்
 
நினைவுகளால் துடைத்திடுவாள்

‘துளசி’ பாட்டி ..!
 
கவிதையின் ஆசிரியர்

-கவிஞர் ச.குமரேசன்
தமிழ் உதவிப் பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),
இராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம்.

கவிஞர் பேரா. ச. குமரேசனின் படைப்புகளைக் காண்க..

தமிழ் இலக்கியக் கதைகளில் அறநெறிமுறைகள்|ஆய்வுக்கட்டுரை|முனைவர் பெ.இளையாப்பிள்ளை

தமிழ் இலக்கியக் கதைகளில் அற நெறிமுறைகள்
முன்னுரை
           தமிழ் இலக்கியங்கள் நம் வாழ்வை படம் பிடித்து காட்டும் காலப் புகைப்படக் கருவிகள் என்றே சொல்லலாம் பாட்டும் தொகையும் பழந்தமிழ்ப்  பனுவல்கலாம். சங்க இலக்கியங்கள் நம் பண்பாட்டை வெளிப்படுத்தும் விழுமியங்களாக இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களோடு மக்களாக பயணித்த புலவர்களினுடைய கவிதை வரிகளினூடே அறநெறிகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன பண்பாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன. சங்கம் தொடங்கி சமகாலம் வரை உள்ள பலவகைப்பட்ட இலக்கியங்களில் அறநெறி முறைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை விளக்கும் இக்கட்டுரை அவற்றின் பின்புறமான இவ்விளக்கியம் அக்கதையை கூறும் சான்றோர் அவை அன்று பயன்பட்ட விதம் ஆகிய எல்லாவற்றையும் திறம்பட விளக்குவதாய் அமைந்துள்ளது.

அறநெறிக் கதைகள் கூறும் இலக்கியங்கள்
               கதைகள் இன்று இலக்கியங்களாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் அன்றோ! பாமர மக்களின் பொழுது போக்கிற்காகவும், அவர்கள் நாளும் உரையாடும் உரையாடல்களிலும், ஒருவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளையும் செவிவழியாக கடத்தப்பட்டு இன்றைக்கு நூல்களாக அச்சுக்கு ஏறி பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பதை பார்க்கும் போது பன்னெடுங்காலக் கதைகள் வழி அறநெறிச் சிந்தனைகளை பழந்தமிழ் மக்கள் எந்த அளவிற்குக் கையாண்டுள்ளனர் என்பது புலப்படும். மன்னனுக்கும் மக்களுக்கும் ஒரே நீதி என்ற உயர்ந்த அறநெறியை வெளிப்படுத்தும் விதமாய் பாண்டியர் வரலாறு ஒரு செய்தியை பகர்கின்றது. மதுரை மாநகரை ஆண்டு வந்த அரசன் பொற்கை பாண்டியன். அவன் அறநெறி தவறாது ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அந்தணரின் இல்லக் கதவை தட்டியதன் காரணத்தால் தன் அறநெறியினின்று தவறிவிட்டோம் என்று அறிந்து தன் கையை தானே வெட்டிக் கொண்டார். வெட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாது பொன்னாலாகிய மற்றொரு கையை செய்து மாட்டிக் கொண்டான் என்பதை சங்கநூற்கதைகளின் வழி நாம் அறிந்து கொள்கிறோம். வெட்டுண்ட கைக்குப் பதிலாக அரசன் பொன்னால் கை செய்து அமைத்துக் கொண்டான்” என்கிறார் மு.அருணாச்சலம் (தமிழ் இலக்கியம் சொல்லும் கதைகள், பக் ; 22) சான்றோர் செய்யுள்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் தங்களுக்குள்ளே பல்வேறு விதமான மக்கள் மொழி கதைகளை பதிவு செய்து வைத்திருக்கின்றன. அக்கதைகள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வகையான அறநெறி முறைகள் பின்பற்றப் பட்டிருக்கும்.
வீடென்றால் அந்த வீட்டில் நல்ல மனையாள் இருக்க வேண்டும். மனையாள் மட்டும் போதாது. அந்த மனையாளுக்கு கல்வியறிவில் சிறந்த புதல்வனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் அந்த வீடு வீடாக இருக்கும் என்பதை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை சான்றாதாரத்துடன் விளக்குகின்றது. அவை.,
மணிக்கு விளக்கம் மடவாள்; மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர் மனக் இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கு
                                                  
ஓதின் புகழ்சால் உணர்வு   (நான்மணிக் ; பாடல் – 101)

என்ற பாடலின் வழி அறிய முடிகின்றது. இல்லானகத்தில் ஒரு பெண் முடமானவளாகவாவது இருத்தல் வேண்டும். இல்லையேல் அது வீடாக இருக்காது பிணம் எரியும் சுடுகாடாக இருக்கும் என்னும் அறத்தை நாலடியார் கூறும் செய்யுற் கதை பதிவுசெய்கின்றது.
மாண்ட மனையாலை இல்லான் தன்னிலகம்
காண்டர்க்கு அறியதோர் காடு”    
(நாலடி ; பாடல் – 361)
நசையில்லாமல் எந்த ஒரு பெண்ணையும் ஆடவன் பின்தொடரக் கூடாது அப்படி பின்தொடர்ந்தால் அவனுக்கு என்ன விதமான தீங்கு நேரும் என்பதை உதயகுமாரன் மரணத்திலிருந்து நமக்கு புலப்படுத்துகின்றது மணிமேகலை காப்பியம்.

அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
                            உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்”         (மணி.அடி ; 228-231)

என்பதை அள்ளி அள்ளிக் கொடுக்கும் அமுதசுரபி கதையின் மூலம் மணிமேகலை வெளிப்படுத்தும் அறநெறிமுறைப் பாங்கினை பார்க்கவியலும். தெய்வ நம்பிக்கையைப் பற்றுதலோடு பற்றிக் கொண்டிருந்தால் என்றாவது ஒரு நாள் கடவுள் காட்சி கொடுப்பான் என்பதை சுந்தரரின் வரலாற்றுக் கதையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதிலும் ஒருவகையான அறம் பின்பற்றப்பட்டுள்ளது. கிழவனாக வந்து இறைவன் ஆட்கொண்டவற்றை திருவெண்ணெய்நல்லூர் திருப்பதிகம் பத்தும் திறம்பட எடுத்துரைக்கின்றது.

“நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை
பேயாய்த் திரிந்து எய்தேன் பெலாகா அருள் பெற்றேன்
                                                                                                  
(ஏழாம் திருமுறை.வெண்ணைநல்லூர் பதிகம் ; பாடல் – 02)
             
   தான் கொண்ட கொள்கையில் நேர்மையும் பய பக்தியும் கொண்டால் தெய்வத்தையே கணவனாக ஏற்கலாம் என்ற ஆண்டாளின் கதை வழி அறம் வெளிப்படுகின்றது. அதை.,

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தொழீ!நான்
                                                                                                                                             
(நாச்சியார் திருமொழி ; பாடல் – 58)
             
   பெரியாழ்வார் பெற்றெடுத்த பொற்கொடி ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றுக் கதையின் வழி அறம் கொண்டு நிற்பதை காண முடிகின்றது. அது கற்பனையாயினும் அதன் உள்ளே ஒரு அறம் பொதிந்து கிடப்பதை காண முடிகின்றது. மாலவனே வந்து மாலை சூட்டுவான் எனும் மகத்தான ஒரு நெறி கொண்ட கொள்கையில் நேர்மையும் பற்றும் கொண்டு எந்த ஒரு பெண்ணிருக்கிறாளோ அவளுக்கே அது சாத்தியமாகும் என்பதை திறம்பட திருப்பாவையும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் உரைக்கிறது.
  
              எட்டு மகளிரை மணந்தாலும் கூட கடைசியில் அவனுக்கும் நிலை பெற்றது வீடுபேறு நிலை தான் என்பதை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி குறிப்பிடுகின்றது. காதலைக் கூட அறத்தின் வழியில் இட்டுச் செல்கின்ற தமிழில் காப்பியக் கதைகள். என்னிலை ஆயினும் கடைசியில் வீடுபேறு நிலைதான் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. அறநெறியை சொல்லும் முதற்காப்பியமான சிலப்பதிகாரம் அம்மானைப் பாட்டில் கோவிலன் கதை என்று வழங்கப்பட்டுள்ளது. அவற்றை ஆராய்ந்து கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் மேற்கோள் இட்டுக் காட்டுகின்றார். அவை.,
 “சிலப்பதிகாரக் கதை பிற்காலத்தில் பல படியாக வேறுபட்டு வழங்குவதாயிற்று கோவலன் கோவிலனாகவும், கண்ணகி கர்ணகையாகவும், மாதவி மாதகியாகவும், மாசாத்துவான் மாச்சோட்டானாகவும் ஆயினர். கதையும் அங்காங்கே பல மாறுபாடுகளை அடைந்துள்ளது. கண்ணகி துர்கையின் அவதாரம் என்று கதை தொடங்குகிறது. கோவிலன் கதை என்று அம்மானைப் பாட்டில் ஏற்றப்பட்ட நூலால் இவை தெரிகின்றன”. (தமிழ்க் காப்பியங்கள்,பக் – 155) பலவகைப்பட்ட கதைகளின் மூலம் அறநெறிமுறைகள் காணப்பட்டிருப்பினும்., பிற்காலத்தில் தோன்றிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, விவேக சிந்தாமணி, உலகநீதி போன்ற அறநூல்கள் பலவாறாக அறத்தைக் கதைக்குள் புகுத்தி மக்களிடம் சென்றுள்ளன.
              
  ஔவையாரின் மூதுரை ஒரு கதை சொல்கின்றது. நெல்லுக்கு பாய்ச்சும் நீரானது நெல்லோடு இணைந்து வளரும் புல்லுக்கும் பாய்வதைப்போல் நல்லவர் ஒருவர் இம்மண்ணுலகில் இருந்தாலே அவரால் எல்லாருக்கும் மழை பொழியும் என்ற உயறிய அறத்தை மூதுரை கூறுகின்றது.அப்பாடல்.,

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியொடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை”     (மூதுரை : பாடல் – 10)

       பெற்ற பிள்ளை வயதில் மூத்து விட்டால் அப்பாவின் சொல்லைக் கேட்க வேண்டு, மனைவியானவள குடும்ப அதிகாரப் பொறுப்பிற்கு வந்து விட்டால் அவள் தனது கணவன் என்று கருதிப் போற்றுதல் வேண்டும். தன்னிலையில் இருந்து உயர்ந்த இடத்திற்கு வந்துவிட்டால் பணிவைக் கையாளுதல் வேண்டும் இல்லையேல் அது பாழாய் போனதே என்று விவேக சிந்தாமணி கூறுகின்றது. அப்பாடல்.,

“பிள்ளைதான் வயதில் மூத்தான் பிதாவின் சொற்புத்திக் கேளான்
கள்ளினற் குழலாள் கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்
                                                                                                                                     (விவேகசிந்தாமணி : பாடல் – 03)

என்ற பாடலின் வழி அறியமுடிகின்றது. கதைகள் பலவகைப்பட்டன. அக்கதைகளில் ஏதோ ஓர் அறம் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கும். முன்னோர் சொல்லும் நன்னெறிக் கதைகள், ஐந்து தந்திரக் கதைகள் என கதைகள் பொருண்மைப் புலப்பாட்டிற்கேற்ப வழிவழியாக அறநெறிக் கதைகள் கடத்தப்பட்டும் கடைபிடிக்கப்பட்டும் உள்ளன.

முடிவுரை
               
      அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கின் மெய்பொருளைக் கதைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைப்பவை தமிழ் இலக்கியங்கள். அவற்றில் அறநெறிகளைச் சொல்லும் இலக்கியங்கள் அற இலக்கியங்கள் என்னும் தொகுதியில் அடங்குவன. அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்னும் சான்றோர் செய்யுட்கள் தொடங்கி சமகால அறக்கதைகள் வரை மானுடம் உய்க்கும் பொருட்டு அறநெறிமுறைகள் வழுவாது காத்துள்ளவற்றை பதிவு செய்யும் நோக்கில் இக்கட்டுரையானது அமைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை
1.இசைவாணர் கதைகள், மயிலை சீனி.வேங்கடசாமி, இரண்டாம் பதிப்பு ; பிப் –  2022, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை –  600006

2.தமிழ் காப்பியங்கள், கி.வா.ஜெகந்நாதன், முதல் பதிப்பு 2016, வெளியீடு : தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர், சென்னை – 600 008

3.மு.அருணாச்சலம் (தமிழ் இலக்கியம் சொல்லும் கதைகள், பக் ; 22)

4.நான்மணிக் : பாடல் – 101)

5.(நாலடி ; பாடல் – 361)

6.(மணி.அடி ; 228-231)

7.(ஏழாம் திருமுறை.வெண்ணைநல்லூர் பதிகம் ; பா – 02)

8.(நாச்சியார் திருமொழி : பா – 58)

9.(மூதுரை : பாடல் – 10),

10.(விவேகசிந்தாமணி : பாடல் – 03)

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் பெ.இளையாப்பிள்ளை
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்,
கலைப்புல முதன்மையர்,
பேராசிரியர் – இலக்கியத்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010
மின்னஞ்சல் : pelayapillai@gmail.com

கள ஆய்வு என்றால் என்ன? கள ஆய்வின் படிமுறைகள் யாவை?

கள ஆய்வு என்றால் என்ன கள ஆய்வின் படிமுறைகள் யாவை
      ஆய்வுக்குரிய களத்துக்கே நேரடியாகச் சென்று தகவல்களைத் திரட்டி நிகழ்த்தப்படுகின்ற ஆய்வைக் கள ஆய்வு என்று குறிப்பிடுகிறோம்.

கள ஆய்வு ஏற்பாடுகள்
           
      கள ஆய்வுக்குப் புறப்படும் முன்பு ஆய்வுக்குரிய ஏற்பாடுகளைச் செம்மையாகச் செய்து கொள்ள வேண்டும். அந்த ஏற்பாடுகளில் குறைவு ஏற்பட்டால் ஆய்வுக்கு அது இடையூறாக அமையும். ஆய்வுப் பொருளுக்கும் ஆய்வுத் தன்மைக்கும் ஏற்றபடி கள் ஆய்வுக்குரிய கருவிகள் வேறுபடலாம். பொதுவாகச் சொல்லப் போனால் ஆய்வுக்குரிய கருவிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1.சுவடிகள்

2. எழுதுகோல்கள்

3. தகவல் திரட்டுவதற்கு ஏற்ற வகையில் ஒலி இழைப்பதிப்பான்

4.இன்றியமையாத படங்களை எடுப்பதற்கு நிழற் படக் கருவி.

5. தலைவலி போன்ற பொது இடையூறுகளைத் தவிர்க்கத் தக்க மருந்துகள்.

6. நேரச் செலவில்லாமல் எளிய வகையில் பயன்படுத்தத் தக்க உணவு வகைகள்,

7.அன்றாட வாழ்வில் பொதுவாக நாம் பயன்படுத்த வேண்டிய பொருள்கள்.

நாம் இவற்றையெல்லாம் முறையாக ஏற்பாடு செய்து கொண்டு கள ஆய்வுக்குப் புறப்பட வேண்டும்.


தகவலாளர் தெரிவு அல்லது தேர்ந்தெடுப்பு
           
       நமது ஆய்வுக்குப் பயன்படத்தக்க வகையில் நாம் பொருத்தமான தகவலாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தகவலாளர்கள் பொருத்தமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வில்லையானால் சரியாகவும் முறையாகவும் தகவல்களைத் திரட்ட முடியாது. எடுத்துக்காட்டாகச் சொன்னால் நாம் மொழியியல் ஆய்வு செய்வதாகக் கொள்வோம். மொழியியல் ஆய்வு செய்யும் பொழுது பேச்சுக் குறைபாடு இல்லாதவராகப் பார்த்து நாம் தகவலாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பேச்சுக் குறைபாடு உள்ளவரைத் தேர்ந்தெடுத்தால் நம்முடைய தகவல் பதிவு தவறாக முடிந்துவிடும்.

            இன்னொரு எடுத்துக்காட்டு சொன்னால் நாட்டுப்புறத் தரவுகளைப் பதிவு செய்ய விரும்புகிற ஒருவர் நாட்டுப்புறத் தரவுகளில் நன்கு பழக்கமுள்ள வயது முதிர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு பழமொழிகளைப் பற்றி ஆய்வு செய்கின்ற ஒருவர் வயது முதிர்ந்த ஒருவரைப் பழமொழிகளைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இக்காலச் சூழலில் இளைஞர்கள் பொதுவாகப் பழமொழியைக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பயன்படுத்துவதில்லை. இளைஞர்களுக்குப் பழமொழிகளும் சரியாகத் தெரியும் என்று சொல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் வயது முதிர்ந்தவர்கள் தான் பழமொழிகளை நமக்குச் சரியான முறையில் வழங்கத் தக்கவர்களாக இருப்பார்கள். இப்படித் தகவலாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது சரியான முறையில் சரியான அடிப்படையில் நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்துக்  கொள்ள வேண்டும்.
            தகவலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது இரண்டு மூன்று பேரையாவது நமக்குப் பயன்படத் தக்கவர்களை மனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டால் அல்லது நமது ஆய்வு நமக்கு ஆய்வு நிகழும்போது இடையில் உதவமுடியாத உதவ முடியாமல் போனால் நாம் இன்னொருவரின் உதவியை நாட வேண்டியிருக்கும். ஆகவே தகலாளர்களை முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கும் பொழுது இரண்டு மூன்று பேரையாவது மனத்தில் கொள்ள வேண்டும்.

தகவல் களச் சூழலும் பழகு முறையும்
           
      தகவல் களத்துக்கு ஆய்வாளர் ஓரிரு முறை சென்று வந்து அந்தச் சூழலை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தச் சூழலில் வாழும் வாழ்க்கை முறை பற்றியும் அவர்களது பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றபடி தகவல் களச் சூழலில் ஆய்வுத் தகவல்களைச் சிறப்பாகத் தொகுக்கின்ற ஆற்றல் பெற்றவராக ஆய்வாளர் தம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தகவல் களச் சூழலை உணர்ந்து கொண்டால்தான் அந்தக் களத்தில் உள்ள மற்ற மக்களோடு முறையாகவும். எளிதாகவும் பழகித் தகவல்களைத் தொகுத்துக் கொள்ள முடியும். தகவல் களச் சூழலைப் புரிந்து கொள்வதும் அந்தச் சூழலில் வாழும் மக்களைப் புரிந்து கொள்வதும் கள ஆய்வுக்கு மிக இன்றியமையாதவை என்றே குறிப்பிட வேண்டும்.

தகவல் திரட்டும் முறை
           
         கள ஆய்வில் தகவல்களைத் திரட்டும் பொழுது செய்திகளை முறையாகச் சுவடிகளில் அல்லது தனித் தாள்களில் குறித்துக் கொள்ளலாம். தகவலாளர்களை இயல்பாகப் பேசவிட்டு அந்தப் பேச்சை ஒலிப்பதிவுக் கருவியில் முறையாகப் பதிவு செய்துகொண்டு ஒவ்வொரு நாளும் அந்த ஒலிப்பதிவுக் கருவியின் துணைகொண்டு தகவல்களை முறையாகச் சுவடியில் அல்லது தனித்தாளில் எழுதிக் கொள்ள வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட சூழல் களில் நிழற்படக் கருவியைப் பயன்படுத்திப் படங்களை எடுத்துப் படங்களையும் தகவல் தொகுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாகப் பேசவிட்டுச் செய்திகளைத் தொகுப்பது ஒரு பக்கம் இருக்க, நேர்காணல் மூலமும் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும். வினா நிரல் மூலமும் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும். நேர்காணல் மூலம் தகவல்களைத் திரட்டும் போது திட்டமிட்டு நேர்காணலாம், அல்லது தன்னிச்சையாகவும் நேர்காணலாம்.
சரிபார்ப்பும் சீர் அமைப்பும்
           
      தொகுக்கப்பட்ட தகவல்கள் எல்லாவற்றையும் சரி என்று நம்பிவிட முடியாது. சில இடங்களில் தகவல்கள் முன்னுக்குப் பின் முரண்பட்டவையாக அமையக்கூடும். அப்படிப்பட்ட சூழலில் அந்தத் தகவல்களைச் சரியாக நாம் சீரமைத்துக் கொள்ள வேண்டும். சரிபார்த்த தகவல்களை முறைப்படி மீண்டும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் சரிபார்க்கவும் சீரமைக்கவும் ஆய்வாளன் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். சூழலுக்கு ஏற்றபடி ஆய்வாளனே அத்தகைய உத்திகளை அமைத்துக் கொண்டு தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். சீரமைத்துச் செம்மைப் படுத்த வேண்டும்.


கள ஆய்வில் எதிர்பார்க்கும் சிக்கல்களும் தீர்வுகளும்           
     பொதுவாகக் கள ஆய்வில் ஈடுபடுகின்ற ஒருவர் அந்தக் களச் சூழலைப் புரிந்து கொண்ட பிறகு எப்படிப் பட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும், அவற்றுக்கு எப்படிப்பட்ட தீர்வுகள் அமைய வேண்டும் என்பன பற்றிக் கருத்து வகையில் தெரிந்திருக்க வேண்டும். ஆய்வாளர் அந்தக் களச் சூழலைப் புரிந்து கொண்ட நிலையில் அவரால் ஓரளவுக்கு அங்கே தோன்றுகின்ற சிக்கல்களை உணர முடியும். அவற்றைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளையும் கண்டு கொள்ள முடியும். இவை ஒருபுறம் இருக்கத் தான் தெரிந்து வைத்துக் கொண்ட தகவலாளர் தனக்குச் சரியாக முழுமையாக உதவாமல் போனால் அதற்கு அவர் மாற்று வேண்டும். அதனால்தான் ஏற்பாடு செய்து கொள்ள தகவலாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போதே இரண்டு மூன்று பேரை அவர் மனத்தில் கொள்ள வேண்டும் என்று முதலிலேயே குறிப்பிட்டுள்ளோம். தான் தொகுத்த தகவல்களைக் கொண்ட தாள்கள் ஒருகால் காணாமல் போய்விட்டால் அவர் ஆய்வு தடைப்படக் கூடாது. ஆகவே ஆய்வுத் தகவல்களை முதலில் ஒரு சுவடியில் குறித்துக் கொண்டால் அதன் பிறகு தகவல் அட்டையில் எழுதி முறைப்படுத்திக் கொள்ளலாம்.
        
    சில நேரங்களில் கள ஆய்வின்போது நாம் சேகரித்த தகவல்களில் நமக்கே ஐயம் இருக்குமானால் ஒவ்வொரு நாளும் அவற்றைப் பரிசோதித்து ஐயத்தை மறுநாளில் தீர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் இப்படி ஐயப்பாட்டிற்குரிய செய்திகள் எல்லாவற்றையும் தொகுத்து அதற்காகவே ஒரு தனிக் கள ஆய்வை அமைத்துக் கொண்டு அந்த ஐயங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஆய்வில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கெல்லாம் ஆய்வாளனே தீர்வு கண்டாக வேண்டும். கள ஆய்வு என்பது ஆய்வாளன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆய்வுக்கு ஏற்றபடி எளிதாகவும் அமையலாம்: மிகவும் சிக்கல் வாய்ந்ததாகவும் அமையலாம். எப்படி இருப்பினும் களஆய்வைச் சிறப்பாக நிறைவேற்றுவது ஆய்வாளனுக் குரிய தனிப் பொறுப்பு.

நூல் : ஆராய்ச்சி நெறிமுறைகள்

ஆசிரியர் : டாக்டர் பொற்கோ

பதிப்பகம் : ஐந்திணைப் பதிப்பகம், சென்னை – 600 005.

கரந்தைக் கவி  வேங்கடாசலம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்து

கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து

கரந்தைக் கவி  வேங்கடாசலம் பிள்ளையின் பிறப்பு
            கி.பி.1886ஆம் மார்கழித் திங்கள் ஆண்டு ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம் தமிழ் இலக்கியங்களையும் பயின்றார். பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார். செட்டிநாடு, தஞ்சை ஆகிய இடங்களில் பத்தாண்டுகளுக்குமேல் தமிழாசிரியராயிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்பொழில் இதழாசிரியராயிருந்து சீரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தார்.
தமிழ்ப்பற்று
            1932ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார். 1938ல் கரந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் அவருக்குக் கரந்தைக் கவிராயன் என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழக்கப் பெற்றது. 1946ல் அவரது அறுபது ஆண்டு நிறைவு விழாவின்போது இவருக்கு ஓராயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கப் பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே வரவேற்புரைகளும், வாழ்த்துப் பாக்களும் எழுதிக் கொடுத்தார். நகைச்சுவையும், சிலைடை நயமும் கலந்த நடையில் மாணாக்கர்கட்குக் கல்வி புகட்டியும் அறிஞர்களுடன் உரையாடியும் வந்தார். அவர் நினைத்த அளவில் பாடலியற்றும் ஆசுகவியாவார். தன் ஆசான் குயிலையா மீது ஆசான் ஆற்றுப்படை பாடினார். இவர் தெய்வச் சிலையார், தொல்காப்பிய உரைக்குறிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள், செந்தமிழ்க் கட்டுரைகள், உரைநடைக் கோவை ஆகியவற்றின் ஆசிரியர். நாவலர் ந.மு.வேங்கடாசாமி நாட்டாருடன் அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப்பெற்ற அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப் பெற்ற அகநானூற்று மாநாட்டில் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
கரந்தைக் கவியரசு எனும் பட்டம்
            கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய கல்வி நிலையத்தில் சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1922 ஆம் ஆண்டு முதல் பீட்டர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பணியாற்றினார். தொல்காப்பியத்திற்கு தெய்வசிலையார் எழுதிய ஏட்டுச்சுவடி உரையை தமிழ்த்தாத்தா உ.வே.சா.விடம் பெற்று, பதிப்பித்துக் கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடாகக் கொண்டு வந்தார்.
            ‘ஆசானாற்றுப் படை’, ‘சிலப்பதிகார நாடகம்’, ‘மணிமேகலை நாடகம்’, ‘அகநானூறு உரை’ முதலிய நூல்களைப் படைத்து கவியரசு வேங்கடாசலம் தமிழுக்குத் தந்துள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம், கவியரசு வேங்கடாசலத்தின் தமிழ்த் தொண்டினைப் போற்றிப், பாராட்டி, ‘கரந்தைக் கவியரசு’ எனப் பட்டமளித்துச் சிறப்பித்தது. டாக்டர் மா.இராசமாணிக்கம், முத்தானந்த அடிகள் முதலிய புகழ்மிகு தமிழ் அறிஞர்களை உருவாக்கிய கரந்தைக் கவியரசு வேங்கடாசலம், தமது அறுபத்து ஏழாவது வயதில் 1955 ஆம் ஆண்டு மறைந்தார். அன்று அவர் மறைந்தாலும், அவரது தமிழ்த் தொண்டு என்றும் நிலைத்திருக்கும்.
தமிழ்த்தாய் வாழ்த்து
            தமிழ்ப் பெரியார் திரு.வேங்கடாசலம் பிள்ளை பல பாடல்களைப் படைத்துள்ளார்.  இவர், இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து

“வான் ஆர்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே !

மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே !

தேன் ஆர்ந்த தீஞ் சுனை சால் திருமாலின் குன்றம்

தென் குமரி ஆ இடை நற் செங்கோல் கொள் தேவி !

கான் ஆர்ந்த தேனே! கற்கண்டே ! நற்கனியே !

கண்ணே! கண்மணியே! அக் கட்புலம் சேர் தேவி !

ஆனாத நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே !

அம்மே ! நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே !”

 


அருஞ்சொற் பொருள்
வானார்ந்த பொதி = வானுயர்ந்த பொதிய மலை
மன்னிய = பெருமை மிக்க
தேனார்ந்த தீஞ்சுனை சால் = தேன் போல இனிக்கும் நீர்ச் சுனைகள் நிறைந்த
திருமாலின் குன்றம் = வேங்கட மலை
ஆயிடை = அவ்விடம் (இடைப்பட்ட பகுதியில்)
செங்கோல் கொள் = ஆட்சிபுரிகின்ற
கானார்ந்த தேனே = காடுகளில் தேனடையிலிருந்து வடியும் தேன் போன்ற  தமிழே !
கட்புலம் = பார்வை
ஆனாத = குறையாத
சீர் = பெருமை
அறைதல் = சொல்லுதல்
யார்க்கு எளிதே = யாருக்கு எளிய செயலாகும்.

 

வீழ்ந்து விடாத வீரம்|கவிதை|ச. குமரேசன்

வீழ்ந்து விடாத வீரம் - ச. குமரேசன் - கவிதை

வீழ்ந்து விடாத வீரம்

 
வல்லவனையும் வழுக்கி விடும்
வழுக்குப் பாறை தான் வாழ்க்கை…!

 

நம்பிக்கை என்னும்
நரம்பு கயிற்றைப் பிடித்து நட…
உந்தி உந்தி உயரே செல்..
நாளை நட்சத்திரமாய் ஒளிர்வாய்…!

 

வறுமையென்னும்
வளைவுகள்
வாழ்க்கை நதியை
தாமதப்படுத்தலாம்
 தடுத்து நிறுத்தி விடாது…!

 

வாடிய பயிர்கள் எல்லாம்
வளைந்து ஓடும்
நதிகளால்தான்
வளம் கொழிக்கின்றன…!

 

காற்றினால்
களவாடப்பட்ட
கருமேகங்களும் – தான்
கண்ணெதிரே
கனமழையை
கொடுக்கின்றன…!

 

உன் வீரம் வீழ்ந்து விடாது…
நம்பிக்கையோடு
நதியாக..
கனவுகளோடு
கார்மேகமாக..
தடைகளைத் தகர்த்தெறி
வீறுநடைபோடு வெற்றி உனதே..!

ஆசிரியர்

கவிஞர் பேரா. ச. குமரேசன்,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

கவிஞர் பேரா. ச. குமரேசனின் படைப்புகளைக் காண்க..

 

நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ்மொழி மேலாண்மை|ஆய்வுக்கட்டுரை|இளங்கவி ச.வாசுதேவன்

நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ்மொழி மேலாண்மை
முன்னுரை
    இளங்கவி ச.வாசுதேவன்தென்பெண்ணை ஆற்றுக்கு தெற்கு ஆகவும் வட வெள்ளாட்டுக்கு வடக்காகவும் அமைந்துள்ளது நடுநாடு எனும் பகுதி நடுநாட்டை நடுவில் நாடு என்று சொல்லும் வழக்கம் கல்வெட்டில் பொரிந்துள்ளதை காண முடிகிறது நடுநாட்டை நல்ல தமிழ் பேசும் நாடாகவும் கூத்துக்களையில் பெயர் பெற்ற பகுதியாகவும் கூறுவர் சைவம் தலைக்கு வந்த அப்பர் சுந்தரர் ஆகியோர் பிறந்த மண் நாட்டார் கலைகளில் சிறப்பு பெற்ற பகுதியில் இப்பகுதியும் ஒன்று தொன்றுதொட்ட மரபான கூற்றுக்களையில் நடு நாட்டுக் கூத்திற்கே தனியான நடை வாணி உள்ளது. திரை கட்டி பல பகுதிகளில் பலர் ஆடினாலும் கூத்து முறைகளில் தனது தனித்துவத்தை காட்டுவர் நடுநாட்டு கூத்தர்கள் ஒவ்வொரு கலைஞருக்குள்ளும் ஒவ்வொரு விதமான நடையும் திறனும் உள்ளதை அரிதானம் பூசி கலரிக்கு வந்த உடனே கண்டறிய முடியும் கலைஞர்கள் வேடமிட்டு ஆடும் போது அவர்கள் பேசும் வசனத்திலும் பாடல்களிலும் தமிழ் மொழி எவ்வாறு ஊடுருவி உள்ளது என்பதையும் அதன் மேலாண்மை திறனையும் நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ் மொழி மேலாண்மை எனும் பொருண்மையில் அமைந்த இக்கட்டுரை திறம்பட விளக்குகின்றது.
நடுநாட்டு கூத்தர்கள்
                நடுநாட்டு தெருக்கூத்தும் பொருன்மையும் வட ஆற்காடு மாவட்டம் என்றாலே கூத்துக் கலையின் நெடியில்லாமல் இராது என்பது பல்லோர் கருத்து நடுநாட்டிற்கு என்று ஒருவகையான இலக்கிய மரபு இருப்பதைப் போல் நடுநாட்டு பகுதிக்கு என்றே தனியான கலை மரபு உண்டு. அடகு முறையிலும் இசையான பாட்டு பாடும் தொனியிலும் தனித்துவம் பெற்று விளங்கும் பூத்து பொருண்மை பெரும்பாலும் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்தே அமையும் ராமாயணம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிகழ்த்த பெறும். ஆனால் மகாபாரதம் எல்லா இடங்களிலும் நிகழ்த்த பெறும். வட ஆற்காடு மாவட்டத்தில் திரௌபதி அம்மன் வழிபாடு அதிகம் உள்ளதே இதற்கு காரணம் கூத்து நிகழ்த்துக்களை வடிவமானாலும் அதன் பொறுமை பொறுமை இதிகாச கிளை கதைகளில் இருந்தே வைக்கப்படும் அவை அர்ஜுனன் தபசு பாஞ்சால குறவஞ்சி மின்னொளி சிவ பூஜை மதகறி சூரன் சண்டை ஜெராசந்தன் சண்டை விராட பருவம் ஸ்வாலக்ஷ்வாலை கருவபங்கம் சுபத்திரை கல்யாணம் அபிமன்னன் சுந்தரி மாலையிடு அபிமன்னன் கொன்ற மாலை செய்தவன் சண்டை கிருத்துவம் தூது கிரிட்டினன் தூது கிருஷ்ணன் தூது நளாயினி சரித்திரம் போர் மன்னன் சண்டை சுந்தர்ராஜன் கருவ பங்கம் விடும்பா சூரன்பதை சக்கராசுரன் சண்டை சாலை கருவபங்கம் விராட பருவம் கர்ண மோட்சம் 18ஆம் நாள் சண்டை பஞ்சபாண்டவர் பாகப்பிரிவினை ஆறாவது வனம் கங்கா தேவி திருமணம் போன்ற பொருண்மையில் கூத்துக்கு தலைப்புகள் அமைக்கப்படுகிறது மகாபாரதம் கூத்து நிகழ்த்தப்பட்டால் அதிகம் அதில் துரியோதனன் தருமன் கண்ணன் ஆகிய கதாபாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கும் ராமாயண கூத்து நிகழ்த்துவது அரிதாகத்தான் நிகழும் பண்பாட்டின் வழியாகத்தான் கலைகள் நிகழ்த்தப்படும் கலைகளே தமிழர்களுக்கு உயிர் மொழி கலைகளின் வழியே தான் கடத்தப்படுகிறது காலம் தோறும் தமிழ் மொழியானது தன்னையும் தன்னை சார்ந்தவரையும் தகவமைத்துக் கொள்ளும் தகை தன்மையுடையது பண்பாட்டின் வளர்ச்சியே கலைகளின் வளர்ச்சி கலைகளின் மேம்பாடு மொழியின் வளர்ச்சி விவரிக்கிறது என்கிறார் நாடகக் கலைஞர் அரியலூர் மணி.
 நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ் மொழிமேலாண்மை
                நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ் மொழி மேலாண்மை தொன்று தொட்டு வளர்ந்து கொண்டே உள்ளது காலப் பழமையும் பண்பாட்டு புதுமையும் கொண்டிலங்கும் மொழி தமிழ் கலை வடிவங்களில் தொன்மை வடிவமாக கருதப்படுவது தெருக்கூத்து தெருக்கூத்தில் பலவகைப்பட்ட கதாபாத்திரங்களும் வேடப்பாடல்களும் வசனங்களும் இடம்பெறும் இவ் வசனங்களில் வழக்குழிந்து போன தமிழ் சார் சொற்களும் சொற்றொடர்களும் இன்றளவும் நடுநாட்டு தெருக்கூத்து கலைஞர்களால் கையாளப்பட்டு வருகின்றது கையாளப்படாத மொழியின் விழுமியங்களை கூர்த்தியல் ஓர் உருவாகவே தன்னகத்தில் கொண்டிலங்குகிறது இதனை தெருக்கூத்து பாடல் பலவகையாக கூறுகிறது அவை திரை வணக்கப் பாடல் வேடப்பாடல் அறிமுகம் கணவன் வணக்கப் பாடல் கணவன் துதி பாடல்கள் என பல வகைப்பட்ட பாடல்களின் தொகுப்பாக தாளம் மத்தளம் முழங்க நிகழ்த்துதல் அரங்கேறும் அரங்கேற்றத்தின் உடைய பொருண்மை கூற்றின் பாங்கிற்கு ஏற்ப பாடல்களும் வசனங்களும் அமையும் அப்பாடல்களில் தமிழ் மொழி ஆதிக்கம் மிகுந்திருப்பதை காண முடிகிறது அவை எள்ளளவு மங்கையும் எள்ளளவு மங்கையும் என் தகப்பாய் ஈசனாரி என் கழுத்தில் இருக்க பிடிக்கலையா கடுகளவு மங்கையும் என் தகப்பாய் சனாரே என் தாலி தானே செரிக்கலையா ஆட வந்த தேவிடியா என் தகப்பாய் ஈசனாரி அவள் அடிமடி வயிற்றில் ஒண்டு நாளா கொட்டிய மோலக்காரன் என் தகப்பாய் ஈசனாரி அவன் கூரைல ஒன்றுரானா எனக்கு பச்சமா வெல்ல தந்த எனக்கு வந்த மன்மதரே இந்த மாளிகை விட்டுப் போகவில்லையே இன்னைக்கு பந்தலும் பிடிக்கலையே ரதிதேவி புலம்பல் இப்பாடல் மன்மதன் ஈசனின் கோபத்தில் எரிந்து கிடக்கும் போது அவனின் மனைவி ரதிதேவியானவள் ஓலமிட்டு புலம்பி அழும் பாடல் இப்பாடலில் என் தகப்பா தேவர் அடியார் மூலகாரன் மாளிகை மன்னவர் பந்தல் போன்ற தமிழ் சொல்லாடல்கள் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பயில்வதை காண முடிகிறது. இது புலம்பல் பாடலாயினும் இப்பாடலில் தமிழ் மொழி பொருண்மையளவிலும் சொல்லளவிலும் சிறப்பு பெற்று இயல்கின்றது. அர்ஜுனன் தபசு கூட்டில் அர்ஜுனன் ஈசனை கோரி தவம் செய்யப் போகும்போது கண்ணபிரான் மோகினி வேடம் எடுத்து அர்ஜுனனை தடுக்கும் போது ஒரு பாடல் அந்நாடகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அப்பாடல் மோகனராகம் கொண்டது மோக ராகம் கொண்டது அங்கே தமிழ் மொழி வளர்ச்சி ஒவ்வொரு வார்த்தையிலும் பயில்கின்றது.
தமிழ்மொழிச் சொற்கள்
            அவை தேரல் மொழி என்னும் மதன் வழியாலும் தேடினான் வந்தேனே வந்ததும் வந்ததும் ஆணழகா உந்தன் அன்பு மொழி கேட்டு அறிவை மயங்கினேனே அதிதிரனே சுகுமாரணி என கேட்டான் தீரணி என மோகினி பாட அதற்கு மறு பாடலை அர்ஜுனன் பாடுகிறார் அவை அம்பு வில் அர்ஜுனன் நம்பி வணங்கிடும் அன்னை இலக்கினியோ இவள் அருந்ததியையோ இல்லை சரஸ்வதியோ அந்த சந்திரமதியோ தான தனந்தன தான தனந்தன தான தனந்தனனா தன னா மோகினி தர்க்கம் இந்தப் பாடலில் தேனைக் குறிக்கக்கூடிய சங்கச் சொல்லான பேரல் எனும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்ணனை விழி என்றும் கண்ணை விழி என்றும் ஆணழகா அருந்ததி மதி இலக்குமி அறிவை பெண் போன்ற தமிழ் சொற்கள் இப்பாடல் நிறைந்துள்ளது இதுபோல் நாடகங்களுக்கு ஏற்ப தமிழ் சொற்கள் கையாளப்படுகிறது கையாளும் சங்க சொற்கள் இன்றைக்கும் நடுநாட்டு தெருக்கூத்தில் நடைமுறையில் இருக்கின்றன என்பதுதான் வியப்பிற்குரிய ஒன்றாக உள்ளது தெருக்கூத்தில் எப்படி இசை, இசைக்கேற்ற தாளம் தாளத்திற்கேற்ற சுதி சுதிக்கேற்ற அளவு அடவுக்கேற்ற களரி உள்ளதோ அதை போல் வசனங்களும் பாடல்களும் வட சொற்கள் தவிர்த்து நிகழையாக தமிழில் மட்டுமே உள்ளன பண்பட்ட சூழலில் பன்னெடுங்கால கலை மரபில் தெளிந்த மழை இன்றைக்கும் பயன்படுத்தும் கலை தெருக்கூத்தாகும் நடுநாட்டு தெருக்கூத்தில் மேன்மை பொருந்திய தமிழ்ச் சொற்களும் யாப்பு கட்டமைப்பும் மேலோங்கி உள்ளதை காண முடியும் ஒப்பாரி தாலாட்டு காதல் பாட்டு அடகு பாட்டு ஆகிய எப்பாடல் ஆயினும் அப்பாடலில் வட சொற்கள் இருப்பதை விட தமிழ் மொழிச் சொற்கள் இருப்பதே அதிகம் தமிழ் மொழிச் சொற்களை பூத்துக் கலைஞர்கள் தீர்க்கமாகவும் திறமாகவும் கையாளுகின்றனர் நடுநாட்டு தெருக்கூத்து கலையில் குறிப்பிடத்தக்கவர்களான நாடக ஆசிரியர் அரியலூர் மணி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதாளர் தாங்கள் சேகர் போன்றோர் இதற்கு சான்றாக விளங்குகின்றனர் முடிவுரை ஆதி கலை வடிவான தெருக்கூத்து வட்டார வள மொழிகளில் நிகழ்த்தப் பெறும் அது வட ஆற்காடு மாவட்ட பகுதிகளில் மிகையாக நிகழ்த்த பெறுவதுண்டு மண்மனம் மாறாமல் பண்பாடு சிதையாமல் இதிகாசம் புராணங்கள் போன்ற நாடகங்கள் ஆயினும் தெருக்கூத்தில் புராண இதிகாசங்கள் குறிப்பிடும் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்தினாலும் தமிழ் மொழிச் சொற்களையே அதிகமாக கையாள்கின்றனர் நாடகக் கலைஞர்கள்.
முடிவுரை
                வட்டாரங்களுக்கு ஏற்றார் போல தங்களது நாடகங்களை அமைத்திடுவர் நடுநாட்டு தெருக்கூத்து என்பது வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள எல்லா வட்டார கூத்துகளோடு ஒன்றி போனாலும் இசையோடும் பயிலும் உரையோடும் வேறுபடுகின்றன கதாபாத்திர வர்ணனை கூத்துக் களரி அமைப்பு வாத்தியக்காரர்கள் வைப்பு முறை பின்பாட்டு பாடுபவர்களின் குரல் திறன் ஆகிய எல்லாவற்றையும் தெளிவாக பாடுபவர் வழங்குபவர்கள் நடுநாட்டு கூத்து கலைஞர்கள் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் சங்கத்தமிழ் சொற்கள் ஆதிக்கம் மிகுந்திருக்கும் கூத்து சார்ந்த பொருட்களும் தமிழ்ச் சொற்களே மேலோங்கி இருக்கும் தமிழ் மொழி மேலாண்மை என்பது கையாள்கின்ற திறத்திலும் கையாள்பவர் சார்ந்த பின்புலத்திலும் மேம்படும் தன்மை எது பண்பாட்டின் கூரான மொழி தெருக்கூத்தில் கதை மொழியாகவும் பாடலில் இசை மொழியாகவும் வசனத்தில் இயல் மொழியாகவும் உள்ளது நடுநாட்டு தெருக்கூத்து கலையில் இன்றளவும் தமிழ் மொழி மேலாண்மை பெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இக்கட்டுரை விளங்குகின்றது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
இளங்கவி ச.வாசுதேவன்
(நடுநாட்டுத்தமிழன்)
             முதுகலைத்தமிழ்ப் பட்டதாரி,
குடியநல்லூர் கிராமம்,
வேங்கைவாடி அஞ்சல்,
கள்ளக்குறிச்சி வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606 206
மின்னஞ்சல் : shankarvasu98@gmail.com

மேலும் பார்க்க..

1.கலைஞர் நூற்றாண்டுக் கவிதை 

 

நீதிக்கு அடிபணி|வாழ்வியல் கட்டுரை|முனைவர் ஈ.யுவராணி

நீதிக்கு அடிபணி_யுவராணி

நீதிக்கு அடிபணி

மூதாட்டியின் உணவு விடுதி
      வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்தி வந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டு வாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள்.
      ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, ‘அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை’ எனக் கூற விரும்பினாள்.  கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து, ‘அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள். அவர் அதன் அடிப்படையில்,
                        “இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை” என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள்.
                        காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர் அப்பம் கேட்டார். அவள் இரண்டாவது அப்பம் கொடுத்தாள். அவர் “அம்மா! அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு” எனக் கேட்டார்.  அம்மூதாட்டி “அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள். அப்பம் வாங்கியவர் “பார்த்தேன்! படித்தேன்! அதன் பிறகுதான் சர்க்கரை கேட்டேன்” என்று கூறினார்.  “அதைப் படித்துவிட்டுமா கேட்கிறீர்?” என்றாள் அம்மூதாட்டி.  “ஆமாம்… அறிவிப்பு அட்டையில் என்ன எழுதி இருக்கிறது? ‘இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான் சர்க்கரை கேட்கிறேன்” என்றார்.  “ஐயா! அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன்” என்று கூறினாள். அறிவிப்பு அட்டை எழுதியவரை அழைத்தாள். ஐயா, அறிவிப்பு அட்டையில் “அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை” என எழுதிவிடுங்கள் என்றாள். அந்த நாள் முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி விற்கத் தொடங்கினாள். காலைச் சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது.  பகலுணவு வழங்குவதில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டது.  அன்று மதியம் வழிப்போக்கன் ஒருவன் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தான். மூதாட்டியிடம் ஐந்து பணம் கொடுத்துவிட்டு, “அம்மா, எனக்கு அதிகமான பசியாக இருக்கிறது. எலுமிச்சங்காய் அளவு சோறாவது எனக்குச் சீக்கிரமாகப் போடு” என்றான். மூதாட்டி “நீ கேட்டபடியே எலுமிச்சங்காய் அளவு சோறு போடுகிறேன்” என்று கூறினாள்.  ஒரு வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து. எலுமிச்சங்காய் அளவு சாதம் மட்டும் உருட்டி அவன் இலையில் போட்டாள். அதைப் பார்த்ததும் வழிப்போக்கன், “இது எப்படி என் வயிற்றுக்குப் போதும்? வயிற்றுப் பசிக்குத்தானே சோறு சாப்பிடுகிறோம்?” என்றான். “நீ கேட்டபடி எலுமிச்சங்காய் அளவு சோறு போட்டுவிட்டேன். விரும்பினால் சாப்பிடு! இல்லையானால் எழுந்து போ!” என்று சொன்னாள். “அப்படியா? எனக்கு இது வேண்டாம். நான் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடு, நான் போகிறேன்” என்றான் வழிப்போக்கன்.  உணவு விடுதிக்கு உரியவள் ஐந்து பணத்தைத் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டாள். வழிப்போக்கன் மரியாதை ராமனைத் தேடிச் சென்றான். நீதிபதியான மரியாதை ராமனிடம் நடந்ததைக் கூறி முறையிட்டான். நீதிபதி உணவு விடுதி நடத்தி வந்த மூதாட்டியை ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார்.
                        விடுதிக்குச் சொந்தக்காரியான அம்மூதாட்டி நீதிபதியின் முன் நின்று, “ஐயா! வழிப்போக்கன் கேட்டபடி, அவன் கொடுத்த பணத்திற்குச் சோறு போட்டுவிட்டேன்” என்று கூறினாள். அத்தோடு தான் இலையில் உருட்டிப் போட்ட எலுமிச்சங்காய் அளவு சோற்று உருண்டையையும் சாட்சியமாக எடுத்துக் காட்டினாள்.  அதை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நீதிபதி மரியாதை ராமன் புன்னகை தவழ, “அம்மா! நீ என்ன ஒப்புக்கொண்டாய்? எலுமிச்சங்காய் அளவு  சோறு போடுவதாகத்தானே ஒப்புக்கொண்டாய்? நீ போட்ட இந்த சோற்றுப் பருக்கை ஒன்றே ஒன்றாவது இருக்கிறதா பார்! ஆகவே, வழிப்போக்கன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு! அல்லது எலுமிச்சங்காய் அளவு பருமன் உள்ள ஒரு சோற்றுப் பருக்கையையாவது போடு” என்று தீர்ப்பு வழங்கினார்.   சொல்லின் நுணுக்கத்தை உணர்ந்த உணவு விடுதிக்கு உரிமைக்காரியான மூதாட்டி “அந்த அளவு பருமனாகும் சோற்றுக்கு உரிய அரிசிக்கு நான் எங்கே போவேன்? என்று கூறி, வழிப்போக்கன் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீதிக்கு அடிபணிந்து நடந்தாள்!
பொய்யான சாட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும்
                        ஒருவரை நீண்ட நாட்களாகக் காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.  குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார். “மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டார் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
                        பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.  அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை” என்று கூறினார்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி,
கோபிச்செட்டிபாளையம்.
ஈரோடு மாவட்டம் – 638 476.

மேலும் பார்க்க..

1.கற்பதை கசடற கற்க

2.தாத்தாவின் பழைய வீடு

 

திருமூலர் சித்தரின் வரலாறும் முதல் நான்கு வரிப்பாடல்களுக்கான விளக்கமும்

திருமூலர் சித்தரின் வரலாறும் முதல் நான்கு வரிபாடல்களுக்கான விளக்கமும்
திருமூலர் சித்தர்
ஓம் திருமூலர் சித்தர் ஸ்வாமியே போற்றி…
ஸ்ரீதிருமூலர் சித்தசாமியின்  அடிபணிந்து திருமந்திரம் எழுத அருள்  புரிந்த திருமூலர் சித்தர் சுவாமியே போற்றி.
         
இவரது இயற்பெயர் சித்தசன் என்னும் முனிவர் ஆவார். அவர் ஈசனிடம்/ சிவபெருமானிடம் நேரடியாக தீட்சை பெற்ற முனிவர்களில் ஒருவர் ஆவார். மூலம் என்றால் மூலக் கருத்து, ஆதாரம், மூலப்பொருள்  என்பதாகும்.  எந்த ஒரு செயலுக்கும் ஒரு மூலம் ஆதாரம் வேண்டும் இந்த உலக மக்கள் வாழ்வதற்கு தேவையான அத்தனை ரகசியங்களையும் அவர் பல வருடங்களாக ஆராய்ந்து மனித உடற்கூறுகளை பற்றியும் மனிதனது மனதைப் பற்றியும் மனிதனுக்கு உண்டாகும் அனைத்து வகையான இன்னல்கள் நோய்கள் பற்றியும் அதை எப்படி சரி செய்வது என்ற முறையைப் பற்றியும் அருளியுள்ளார்.
குண்டலினி யோகம்
            குண்டலினி யோகம் என்னும் ஒரு ரகசியத்தை மனித உடலில் எத்தனை சக்கரங்கள் உள்ளது அவைகள் எப்படி இயங்குகின்றன அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றியும் விளக்கியுள்ளார்.  திருமூலர் இறைவனின் தூதராவார் அவர் எழுதிய திருமந்திரம் நூல் முழுவதும் இறைவனைப் பற்றியே எடுத்துரைத்துள்ளார். இறைவன் இருக்கும் இடத்தையும் அவரை அடையும் உண்மையான வழிகள் அனைத்தையும் விரிவாக எடுத்து உணர்த்துகிறார். அது மட்டுமல்லாமல் மனித உடலின் தத்துவம் உயிர் தத்துவம் சிவதத்துவம் என்று எல்லாத் தத்துவ உண்மைகளையும் உணர்த்துகின்றார் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நெறிகளையும் இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி என்னும் அட்டாங்க யோகங்களையும் மிகத் தெளிவாக உணரும் வண்ணம் உணர்த்துகிறார் சைவத்தை கடைப்பிடித்து ஒழுகி சன்மார்க்க நெறியில் இருக்குமாறு வலியுறுத்துகிறார் உயிர்கள் பராசக்தியை பணிந்து வழிபட்டு பலன் அடைய நவாக்கரி மந்திரத்தை சொல்கின்றார் ஓங்காரம் ஓரெழுத்து என் உண்மையான இந்நூலைப் படிக்கும் அனைவரும் அறியும் வண்ணம் உபதேசித்துள்ளார்.
            திருமூலர் என்ற பெயர் எல்லா வகையான செயல்களுக்கும் உயிர்களுக்கும் மூலமான பொருள் என்ன என்பதை ஆராய்ந்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி உள்ளதால் அவருக்கு திரு என்ற மரியாதைக்குரிய சொல்லுடன் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். திருமூலர் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையையும் அறிந்துள்ளார். அதன்மூலம் அதனால் இந்த பூமியில் வாழ்ந்து தூய தமிழில் திருமந்திரம் என்ற ஒரு அற்புதமான நூலை எழுதுவதற்கு காரணமான ஒரு கதை உள்ளது.
திருமூலர் வரலாறு
            ஒரு சமயம் திருமூலர் ஆகாய மார்க்கமாக பூமியின் மீது வந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது  ஒரு மனிதனைச் சுற்றி பசுக்கள்  நின்று கண்ணீர் வடித்த வண்ணம் கத்தியும் நின்று கொண்டு இருக்கிறது. அதை பார்த்த திருமூலர் உடனே தனது ஞானதிருஸ்டியால்   தெரிந்துகொண்டு கீழே வருகிறார். அந்த பசு கூட்டங்களின் கண்ணீரையும் அந்த மாடு மேய்ப்பவன் மீது கொண்டுள்ள அன்பையும் கண்டு வியந்து அவர் தனது உடலை பத்திரமாக ஒரு குகைக்குள் வைத்துவிட்டு கூடுவிட்டு கூடுபாயும் முறையில் இறந்த அந்த இடையனின் உடலில் புகுந்து உயிர் கொண்டு எழுகிறார். அதை பார்த்தவுடன் பசுக்களெல்லாம் மிகவும். சந்தோசம் அடைந்தது. மாலை ஆனதால் பசுக்கள் அந்த கிராமத்தை நோக்கி செல்கின்றது. திருமூலர்   சரி இந்த மாடுகளை அந்த கிராமத்தில் விட்டுவிட்டு சென்று விடலாம் என்று நினைத்து செல்லுகிறார். அப்பொழுது அந்த ஊருக்கு சென்றவுடன் அந்த இடையனின் மனைவி தனது கணவன் ஏன் இவ்வளவு நேரம் கழித்து வருகிறார் என அழுது புலம்புகிறார். அதைப்பார்த்த திருமூலர் தான் உனது கணவன் அல்ல என்றும் அவன் இறந்துவிட்டான் என்றும் நான் கூடுவிட்டு கூடுபாயும் முறையில் இறந்த உனது கணவனின் உடலுக்குள் புகுந்து வந்துள்ளேன். இந்த மாடுகளை விட்டு விட்டு செல்லலாம் என்று வந்தேன் என்கிறார். ஆனால் அந்த இடையனின் மனைவி அதை நம்ப முடியாமல் ஊர் மக்களிடம். முறையிடுகிறார் சித்திரும் ஊர் மக்களிடம் நடந்ததை கூறுகிறார்.  எனது  உடலை காட்டுகிறேன் என்று கூறுகிறார். அதன்படி அவர் தனது உடலை விட்டுச் சென்ற இடத்தை நோக்கி சென்று பார்க்கும் பொழுது திருமூலரின்  உடல் அங்கே இல்லாமல் மறைந்து போய்விடுகிறது. அதைப்பார்த்த திருமூலர் இறைவனை / சிவபெருமானை நோக்கி வழிபடுகிறார். சிவபெருமான் அவரது வேண்டுகோளை ஏற்று சித்தரே நீ இந்த உலக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், அறிவுறுத்த வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது அதை முடித்துவிட்டு வாரும். அதற்குப் பிறகு நீ என்னிடம் வந்து சேர்வாய் உன்னுடைய உண்மையான உடலுடன் என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார். எனவே இடையன் உருவில் இருந்த சித்தர் பல ஆண்டுகள் அந்த இடத்திலேயே இருந்து தவம் புரிகிறார்.
கடவுள் வாழ்த்துக்குப் பிறகு தெய்வதூதர் திருமூலர் எழுதிய
முதல் நான்கு வரிப்பாடல் அதற்கான விளக்கம்
            திருமூலர் அருளிய தெய்வத்தமிழ் திருமந்திரம் 3000 பாடல்கள். 1 முதல் 112 வரை கடவுள் வாழ்த்து இந்த நான்கு வரி பாடல்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களுக்கெல்லாம் சித்தர்  அகத்தியருக்கு பிறகு தோன்றிய தெய்வ அருள் பெற்ற மூலர் எனப்படும் ஒரு சித்தர் சித்தர்சாமி என்று அழைக்கப்படும் ஒரு சித்தர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாடலை எழுதியுள்ளார் என்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  தமிழ்  எழுத்துக்களும் எண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனால் நாம் தெரிந்துகொள்வது உலகமொழிகளில் அனைத்து மொழிகளுக்கும்ம் தமிழ் அடிப்படை மொழியாக கொண்டும் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாக கொண்டும் எண்களையும் அடிப்படையாகக் கொண்டும் மற்ற இன மக்கள் பூமியில் உள்ள வேறு நாட்டு மக்கள் தங்களது ஒலிகளைக் கொண்டு உண்டான எழுத்துக்களை கண்டுபிடித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
            இது போல வேறு எந்த மொழியிலும் இலக்கியமும், சித்தர்ககளுடைய வழிகாட்டுதல் உபதேசம் போன்றவற்றைக் கூற வேறு மொழிகளில் சித்தர் / மனிதர்கள் வேறு எந்த நாட்டிலும் இந்த பூமியில் பிறந்து உள்ள எந்த ஜீவராசிகளிடத்திலும் மனிதர்கள் இடத்திலும் இல்லை.  அதனால் உலக மக்களுக்கு அடிப்படையாக வாழ்ந்த சித்தர்கள் என சொல்லப்படும் தெய்வம் என சொல்லப்படும் இறைவன் கடவுள் தெய்வம் என சொல்லப்படும் எல்லாம் ஒன்றே அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த பெயரை எப்படி நாம் வைத்துக் கொள்கிறோமோ அது மாதிரி ஆதிகாலத்தில் மனிதன் தங்களது சுயநலத்திற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதம் என்று சொல்லக்கூடிய ஒன்றையும் அதைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு இன மக்களும் தங்களுக்கு தகுந்தார் போல பெயர்களை இட்டு வணங்கி வாழ்ந்தனர் என்பதற்கு இப்பொழுதுள்ள தற்போது வாழ்ந்து வரும் உலக மக்கள் தொகை உதாரணமாக உள்ளது எனத் தெரிய வருகிறது நன்றி
             திருமந்திரமே.  இந்த உலகத்தில் உள்ள அனைத்து சித்தர்களும் ஞானிகளும் அவரை குருவாக வணங்கி அவர் மூலம் உருவான அத்தனை மூலக் கருத்துக்களும் மனிதன் எப்படி வாழ வேண்டும் இறைவனை எப்படி வழிபட வேண்டும் நோய் நொடிகளிலிருந்து எப்படி காப்பாற்றுவது ஞானம் எப்படி அடைவது  போன்ற முலக் கருத்துக்களை உலகிற்கு எடுத்துக் கூறுவதால் *மூலர் திருமூலர் என்ற பெயர் வந்தது. மந்திரம் திருமூலரின் திருமந்திரம்  முதல் பாடல் முதல் இரண்டு வார்த்தைகள் விளக்கம்.

“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர்ச்

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே”

என்பது முதல் பாடலாகும்.
1.ஒன்றவன்தானே (இதற்கான விளக்கம்)
            இந்த உலகம் தோன்றியது முதல் ஒரே  ஒரு பிபஞ்சம் மட்டுமே உள்ளது. இதில்தான் சூரியன என்ற ஒரு பெரும் பெரிய தீப்பிழம்பு பிரபஞ்சத்தில் பல ஆயிரம் வருடங்கள் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து வெடித்து சிதறி பிரிந்து  பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களும் நமது கண்களுக்கு தெரியக்கூடிய கோள்களும் அந்த தீப்பிழம்பிலிருந்து தான் உண்டானது. அந்த தீப்பிழம்பு தான் சூரியன். சூரிய பகவான் என்று சொல்லப்படும் இந்தக் கோள் மட்டுமே இந்த உலகத்தையும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும், கண்ணுக்குத் தெரிகின்ற தெரியாத எல்லா செடி கொடி மரம் மற்றும் அனைத்து உயிரினங்கள் என்று சொல்லப்படும் இந்தத் தாவரங்கள் கூட வாழ்வதற்கு தேவையான ஒன்று தேவை என்றால் இந்த சூரிய பகவான்தான். சூரியன் இல்லாவிட்டால் இந்த மண்ணுலகம் என்ற ஒன்று இல்லை என்பது உண்மையாகும். அதனால் ஒன்றவன் என்றால் சூரியன் ஆகத்தான் இருக்கவேண்டும். ஆதி பகவன் என்று அதனால் தான் திருவள்ளுவரும்  முதல் அதிகாரத்தில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் என்று எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒன்றவன்தானே இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிரினங்களிலும் குடியிருப்பவன் ஈசன் ஒருவனே, ஒன்றவன்தானே நெற்றிக் கண்ணையுடைய அவன் இந்த உலகில் அவன் ஒருவனே. அதனால் ஒன்றவன்தானே.
ஞானத்தில் அறிவுக்கண் தொலைநோக்குப் பார்வையும் என அனைத்து உலகங்களின் தலைவன் ஒன்றவன்தானே ஈரேழுலோகம் என்று சொல்லக்கூடிய அனைத்து உலகங்களுக்கும் தலைவன் ஒருவனே. படைத்தவன் அவனே அதனால் அவன் ஒன்று  அவன் ஒருவனே. இந்தப் பிரபஞ்சத்தில் சூரியனும்  கோடான கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் அந்த நட்சத்திரங்களால் இந்தப் பிரபஞ்சத்திற்கு எந்தப் பயனும் இல்லை ஆனால் ஆதிபகவன் என்று சொல்லக்கூடிய சூரியன் இந்தப் பிரபஞ்சத்திற்கு அவன் ஒருவனே அவன் இன்றி இந்த உலகம் இல்லை ஒன்றவன்தானே.  
ஒன்றவன் என்றால் சீவன், உயிர், தன்மை கொண்டவன் என விளக்கினார் . மேலும் கிடைத்துள்ள சங்ககால இலக்கியங்களின் அடிப்படையில் முதன்முதலில் திருமூலர் மட்டுமே சிவன் என்ற ஒரு வார்த்தையை எழுதியுள்ளார்.  அதை அடிப்படையாகக் கொண்டுதான் பிற்காலத்தில் வந்த அனைத்து சித்தர்களும் அவரது சிஷ்யர்களும் சிவன் என்ற ஒரு வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனுடைய சக்தியை உணர்ந்து வழிபாடு செய்தார்கள். சிவனுக்கு மூன்று கண்கள் உள்ளது நெற்றிக்கண் என்ற ஒரு அமைப்பு கொண்ட தெய்வம் கடவுள் சிவபெருமானுக்கு மட்டுமே உண்டு.
ஞானத்தில் அறிவுக்கண் தொலைநோக்குப் பார்வையும் என அனைத்து உலகங்களின் தலைவன் ஒன்றவன்தானே ஈரேழு லோகம் என்று சொல்லக்கூடிய அனைத்து உலகங்களுக்கும் தலைவன் அவனே படைத்தவன் அவனே அதனால் அவன் ஒருவனே 
உதாரணமாக. 0 என்ற இந்த சுழிக்கு மதிப்பு இல்லை. ஆனால் அதற்கு முன் ஒன்று என்ற எண்ணை சேர்த்தால் அதற்கு மதிப்பு அப்போது கிடைக்கும் எண்10. அதாவது இறைவன் ஒருவனே அவனே எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் இருந்து நிறைந்து இயக்குபவன் அவனே ஆகும். அருளியுள்ளார் அதையே திருவள்ளுவர் ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான்  அதை… உயிரினும் மேலாக வைத்தான்… 
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
2. இரண்டவன் இன்னருள் என்றால்
            அந்த ஈசன் எனப்படும் சிவபெருமான் தனக்குளமுழு சக்தியையும் அடக்கி வைத்துக் கொண்டுள்ளார். அதுதான் சக்தி எனப்படும் ஒரு தொலைநோக்கு அல்லது இந்த உலகை படைத்து காப்பதற்கும் அழிப்பதற்கும் ஒரு சக்தி தேவை என்பதால் தன்னையே அதாவது தனது உடலை இரண்டாக்கி சக்தியாக மாற்றி ஒரு பெண் உருவத்தை தனக்குள் உண்டாக்கி இரண்டாக உள்ளார் எனலாம்.  இந்த உலகத்தில் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு கண்ணுக்கு தெரிவது எத்தனையோ நட்சத்திரங்கள் என்று பல விஷயங்கள் இந்த பிரபஞ்சத்தில் தெரிந்தாலும், இரண்டாவதாக மனிதனின் கண்ணுக்கு தெரிவது சந்திரன் என்று சொல்லப்படும் ஒரு கிரகம் ஆகும். அந்த சந்திரன் மூலம் மனிதர்களின் மனநிலையையும், உடல் நிலையையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
            மேலும் இரவில்   அந்த சந்திரனுடைய ஒளி சூரியனிடமிருந்து வாங்கி பிரதிபலிப்பதால் அந்த இரவும் மனிதர்களுக்கு மிகவும் குளிர்ச்சியானதாகவும் இருப்பதற்கு காரணமாக அமைவது இந்த சந்திரன் எனப்படும் ஒரு கிரகம் ஆகும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள வேறு எந்த கோள்களும் எளிதாக மனிதர்களுடைய கண்ணுக்குத் தெரிவதில்லை.  (நட்சத்திரங்கள் புள்ளி புள்ளியாக தெரிந்தாலும் 27 நட்சத்திரங்கள் மட்டுமே மனிதர்கள் வாழ்க்கையில் தொடர்பு கொண்டுள்ளன.)
மனமும் ஆத்மாவும்
நம்முள் இருக்கும் இறைவனால் நாம் கண்காணிக்கப் படுகிறோம். இறைவனால் நாம் இயக்கப்படுகிறோம். ஆத்மா என்பது நம் உடலில் உயிராக உள்ளது. உடல் மேலும் உபயோகப்படுத்த முடியாது என்ற நிலைக்குத்  தள்ளப்படும்போது அதிலிருந்து உயிர் விலகி வேறு உடலை அடைகிறது. பிறப்பும் இறப்புமான இந்த 2 வாழ்க்கையைப் பற்றி – பிறப்பு, இறப்பிலிருந்து விடுபட வேண்டுமென்றால் இறைவனை சரணடைவது ஒன்றே வழி.  உயிரின் உறைவிடத்தையே ஆத்மா என்கிறோம். உயிர் செயலில் இல்லை என்றால் உயிர் பிரிந்து விட்டது அல்லது ஆத்மா பிரிந்து விட்டது என்று சொல்லுகிறோம்.
இரண்டானவன் என்ற வரிக்கு மற்றோர் விளக்கம்.
             உயிரும் மெய்யும் கலந்தால் தானே தமிழ் அதன் அடிப்படை என்ன தெரியுமா? சிவன் என்பது மெய். இதை உடல் எனக் கொள்ளலாம் உயிர் என்பது இந்த உடலை இயக்கும் உயிர் . உடலென்ற மெய் உயிரில்லாமல் இயங்குமா? எனவே தமிழுக்கும் உயிர் மெய் எழுத்துக்கள் அடிப்படை. ஆன்மா இயங்க வேண்டுமெனில் உயிரும் மெய்யும் அவசியமாகிறது. அது போல மெய் என்பது சிவன் அந்த மெய்யாகிய சிவன் இயங்க உயிராகிய சக்தி தேவை. உயிரில்லாத மெய் பயனற்றது. அது போலவே சக்தி இல்லாமல் சிவன் இயங்காது என்பதே அடிப்படை உண்மை.
            இந்த உலகம் இந்தப் பிரபஞ்சம் 2 அணுக்கள் சேர்ந்தால்தானே இந்த உலகம் இந்த பிரபஞ்சமே உள்ளது. அதுபோல ஆண்பெண் -இரண்டு பேர்களுடைய புணர்ச்சி ஒன்றுடன் ஒன்று கலப்பதால் தான் குழந்தை பிறப்பு. உதாரணமாக திருவள்ளுவர், குறள்.5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
2.இருவினையும் சேரா:- இருவினை என்றால் நல்வினையும்  தீவினையும் என்ற இரண்டு செயல்கள்  ஆகும். நல்லது நினைத்தால் நல்வினை அதாவது நல்ல செயல்களை அவனால் உலக மக்களுக்காக செய்து கொண்டே இருக்க முடியும். நல்ல செயல் என்றால் என்ன தூய சிந்தனையுடன் இருந்தால் தூய எண்ணங்கள் உண்டாகும் அதன்மூலம் தூய செயல்களை செய்ய முடியும். இது ஒருவனுடைய நேர்மறையான எண்ணங்கள் ஆகும். இதற்கு எதிர்மறையாக செய்யப்படும் செயல்கள் அனைத்தும் தீவினை ஆகும். எனவே இந்த இரு வினைகளையும் மனிதன் தீவிரமாக ஆய்ந்து அறிந்து தெளிந்து செயல்பட வேண்டும். வாழ்க்கையை இரண்டாக வகுத்தான். அகம், புறம் என கணவன் மனைவி வாழும் வாழ்க்கை அகத்தையும் புறத்தையும் சார்ந்துள்ளது. (திருவள்ளுவருடைய குருவும் திருமூலரே ஆவார் அதனால் தனது குறளிலும் இருவினை பற்றி எழுதியுள்ளார் எனலாம்)
மேலும் மூன்று என்ற எண்ணை, ஒரு குறியீட்டை பற்றி  சிந்தித்து பார்த்தால்  மூன்று காலங்களையும் நினைத்து இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. நிகழ்காலம்,கடந்த காலம், எதிர்காலம். இந்த மூன்றும் தான் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து வகையான உயிரினங்களும்  அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கிறது.
மூன்று என்பதற்கு காத்தல்  அழித்தல் படைத்தல் போன்ற மூன்று தொழிலையும் அல்லது செயல்களையும் சிவபெருமான் தன்னிடம் வைத்துக் கொண்டதால் மூன்றினுள் என்று எடுத்துக் கொள்ளலாம். இறைவனுடைய அருளைப்பெற வேண்டும். ஒன்றுக்கொன்று அந்த மூன்றாவது ஆக்கல் அழித்தல் காத்தல் இந்த மூன்றையும் தனக்குள் எடுத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது உருவாக்கி, வேண்டாத பொழுது அழிக்கிறான்.  அதனால் ஆக்கல் அழித்தல் காத்தல் என்ற மூன்று செயல்களுக்கும் நின்றனன். இதை அடிப்படையாகக் கொண்டுதான் உலகத்தை உலகத்தில் உள்ள உயிர்களை இயக்குகிறார். அதனால் மூன்று நின்றனன். மூன்று என்பதன் விளக்கத்தில்,
தோஷங்கள் மூன்று –  வாதம், பித்தம் சிலேத்துமம். மூன்றாகி நின்றனன் இந்த மூன்றும்தான் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து வகையான உயிரினங்களுக்கும்  அடிப்படையாக உள்ளது . இந்த உலகம் இயங்குகிறது.
மண்டலங்கள் 3 அக்கினி மண்டலம் ஆதித்த (சூரிய) மண்டலம், சந்திர மண்டலம்
குணங்கள் மூன்று சாத்துவிகம், இராசதம், தாமதம் .
மலங்கள் 3 ,ஆணவம் , கன்மம், மாயை  இதை ஒழிக்க அருள் புரிவாயாக.
மூன்றினுள் என்பதற்கு மூன்று வேல் திரிசூலம் போன்ற ஒரு அமைப்பை கொண்டது.  மனிதன் தனது மூன்று விரலால் தான் நெற்றியில் திருநீறு பூசுவதன் மூலம் இந்த உடம்பும் ஒருநாள் சாம்பலாகும் என்ற தத்துவத்தை உணர்ந்து உலகில் வாழ வேண்டும்.
நான்குணர்ந்தனன் என்றால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பூமியை சார்ந்து வாழும் மக்கள் 4 பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் எனலாம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்காக பிரித்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான்கு உணர்ந்ததன் என்கிறார்களாம்
4 திசைகள் நான்கு பாகமாககும் எனவே  நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டிருக்குமாறு மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக நான்முகன் என்ற ஒரு கடவுளை படைக்கிறார்.
திசையைக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனவும். காற்றையும் நான்காக  பிரித்தார்.
தென்றல்,,வாடை , கோடை , கொண்டல் என்பதாகும்.
கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்.
தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல்.
மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை .
வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை.
ஐந்து என்பதற்கு ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து செயல்களையும் என்பதற்கு எடுத்துக் கொள்ளலாம். 
ஐந்து வேள்விகள்:
1)கடவுள் வேள்வி, 2) பிரமவேள்வி, 3) பூதவேள்வி, 4)மானிடவேள்வி, 5)தென்புலத்தார்வேள்வி
ஆன்மீக ஒழுக்கத்தின் பொருட்டு ஒருவர் செய்யவேண்டிய ஐந்து யாகங்கள்: 1)கருமயாகம், 2)தவயாகம்,  3) செபயாகம்,  4) தியானயாகம், 5)ஞானயாகம்.
5 என்பதில் 
பூதங்கள் ஐந்து நீர், நிலம், நெருப்பு, காற்று,   ஆகாயம்.
பொறி 5 மெய்,வாய் கண், மூக்கு, செவி
ஐந்து.தொழில்கள்
5 தேவதானம், விசர்க்கம், ஆனந்தம், பயம். கோசம்.  அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம்.
சயம் 5 அமரசயம்,,.பக்குவாசயம் மலசயம், சிலசமயம் சுக்கிலசயம்.
புலன்கள் 5. சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்.
காமேந்திரியம் 5.வாக்கு,பாதம், பாணி ,பாயுறு ,உத்தமம்.
அவத்தை 5. சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், அதிதுரியும் இவையும் அடங்கும்.
ஐந்து எழுத்து மந்திரத்திலுள்ள ரகசிய என்னவென்று திருமூலர் அருளியுள்ள
சி வா ய ந ம 
சி என்றால் சிவன் என்றால் உயிர் அம்மா சக்தி என்றால் உயிர் சிவாய சிவனும் சக்தியும் ஒன்றே.
நிலத்தை ஐந்தாக பிரித்தான்… 
குறிஞ்சி  (மலைப்பகுதி) 
முல்லை   ( வனப்பகுதி) 
நெய்தல்  ( கடல் பகுதி) 
மருதம் ( நீர் மற்றும் நிலம்) 
பாலை  ( வறண்ட பகுதி)
ஆறு என்பதற்கு விளக்கம்
மனித உடலில் ஆறு சக்கரங்கள் உள்ளன.
1. மூலாதாரம்  2.அடிவயிற்றுக்கு கீழ் 3.தொப்புள்  4.தொண்டை குழி 5.நெற்றி 
6.உச்சந்தலை.
மனிதனுக்கு உள்ள  ஆறறிவைக் கொடுத்தான்.
1. கற்பூர புத்தி
2. கரி புத்தி
3. காரிய புத்தி
4. வாழைமட்டை புத்தி
5. சமயோஜித புத்தி
6. பகுத்தறிவு
இவைதான் மனிதனுக்கு வகைப்படுத்தப்பட்டுள்ள ஆறறிவு .
பருவ காலங்கள் ஆறு கோடை காலம், குளிர்காலம், முன்பணிக்காலம், பின் பணி காலம், இலையுதிர் காலம்,
மழைகாலம்.
மேலும் சுவையை ஆறாக பிரித்தான்… இனிப்பு,கசப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு  என அறுசுவையாகும்.
இசையை ஏழாகக் கொடுத்தான்… 
ச ரி க ம ப த நி
இசையை ஏழாக கொடுத்தார்.  நாட்களையும் ஏழாக பிரித்தார். 
ஏழு என்பதற்கு உலகங்கள் ஏழு.
நாட்கள் 7 திருக்குறளில் வெண்பா ஏழு
இந்த உலகத்தை ஏழு கண்டங்களாக பிரித்து உள்ளார்கள்.
எட்டு என்பதற்கு மனித உடன் தான் உடம்பு என்று கணக்குட்டுள்ளார். மேலும் 1.காமம் 2.குரோதம் 3.பற்று 4.சுவை 5.உணர்வு 6.ஒளி 7.ஒலி 8.கேட்டல் ஆன்மாவுடன் இந்த எட்டும் இருக்கும் ஐந்து மெய் உறுப்புகள் உணரக்கூடிய விஷயங்களும் அத்துடன் ஆணவம் புத்தி மனம் ஆகிய மூன்றும் சேர்ந்து எட்டாகும்.. ஒரு சில சித்தர்கள் செய்யக்கூடிய அஷ்டாங்க யோகம் என்னும் பயிற்சி மூலம் உடலை 8 பாகங்களாக பிரித்து விடுவார்கள்.
திசைகளை எட்டாகப் பிரித்தார்….
கிழக்கு,மேற்குவடக்கு, தெற்கு,வட கிழக்கு, வட மேற்கு,தென் கிழக்கு,தென் மேற்கு,
என முதல் பாடலில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள முக்கியத்துவத்தையும் சிறப்பையும் திருமூலர் உணர்த்துகிறார் என நினைக்கத் தோன்றுகிறது.
இப்பாடல் வரிகளின் ஆய்வு உரையாசிரியர்
குறளமுதம்
எம்எஸ்கே மனோகரன், கோவை.
 

பிரியமான கூறல்|கவிதை|க.கலைவாணன்

பிரியமான கூறல்

பிரியமான கூறல்

ஏனோ! ஏனோ!

என்னை நீ சுற்றி வர..

யாரோ! வீனோ!

உன்னை ஏளனமாய் நினைத்திட….

 

மெய்க்காதல் உன்னில்

தீயாக எரிந்திட…

உன் இதயம் கதறும் ஓசை

சுடும் சுவாச காற்றில் கசிந்திட…

 

அஞ்சலாக நீ கொடுத்த முத்தம்..

 உன் முகவரியை

என் இதயத்தில் சேர்த்தது !

என் இரத்தம்…

 

பெண்ணே…

உன் கண்களைக்  காண்கையில் !!

ஏக்கங்கள்

ஏழு இலட்சம்…

கசிந்திட கண்ணீரோ 

ஏது மிச்சம்….

 

பெண்ணே…

கேட்காமல் கேட்கிறாய் நீ!!

காதலால் என்னை

கட்டி அணைப்பாயாடா என்று!!

ஊடலால் எனது

உள்ளம் குளிர்ப்பாயடா என்று. !!

 

பெண்ணே,

வென்று விட்டாய் நீ..

உன் விழியால்

கொன்று விட்டாயடி 

பிரியமானவளே….!

ஆசிரியர்

கவிஞர் க.கலைவாணன்

ஓசூர் – 635 109

கலைஞர் நூற்றாண்டுக் கவிதை | இளங்கவி ச. வாசுதேவன்

கலைஞர் நூற்றாண்டுக் கவிதை

கலைஞர் நூற்றாண்டுக் கவிதை

(விருத்தப்பா – எண்சீர் விருத்தம்)

 
காலத்தால் வற்றாத கடலின் நீரே
கற்பனைகள் ஊறிவரும் கவிதை நீரே
ஞாலத்தில் புகழ்படைத்த தலைவர் தன்னுள்
நற்றமிழில் தென்றலென பேசும் அண்ணல்
காலமெனும் சக்கரத்தில் ஏறி நின்று
கனிவுடனே உலாசெல்லும் இனிய நெஞ்சன்
கோலமுடன் உரைவீச்சு நடத்தும் அன்பன்
திருக்குவளை மண்ணீன்ற தமிழர் நண்பன்!

 

காலையில் உதிக்கின்ற கருத்துப் பூத்தீ!
கரும்பினிலே இனிக்கின்ற சாரும் ஆனான்
சோலையில் விளையாடும் சிவந்த வேங்கை
சுந்தரனாய் அரசியலைக் காத்த வேந்தன்
மாலையில் வெளியாகும் வீண்மீன் தோழன்
மகிழ்வினையே தொண்டர்க்கு வழங்கும் ஆசான்
சாலையில் நடந்துவரும் தங்கத் தேரு
சரித்திரத்தில் யாருமில்லை என்றே கூறு!

 

வள்ளுவருக்குக் கோட்டத்தை அமைத்துத் தந்தார்
வானளவு வள்ளுவனார் சிலையை வைத்தார்
உள்ளுவதை உயர்வாக எண்ணும் வேங்கை
உள்ளத்தில் தமிழ்கொண்டு அருளும் செங்கை
கொள்கையிலே பெரியாரை இணைப்பார்; அந்த
பெரியாரின் கோட்பாட்டைப் பிடிப்பார் நன்றாய்
கள்ளமிலா மானிடருள் இவரும் ஒருவர்
கலைஞரெனும் பெயர்கொண்ட இன்பத் தமிழர்!

 

வற்றாத பாக்களுக்கும் உரைக ளுக்கும்
வழித்தோன்றல் இவர்தானே தமிழர் நெஞ்சில்
கற்றழியாய் குடி கொண்ட கழகத் தலைவர்
கன்னித்தமிழ் திருவாரூர் பிறந்த இளைஞர்
கொற்றவனாய் சிலகாலம் நாடு காத்த
கோடியான தலைவரிலே இவர்பே ருண்டு
நற்றமிழாள் ஈன்றெடுத்த அழகுச் செண்டு!

 

பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி
பேச்சினிலே இடி முரசை அறையும் நம்பி
ஊரறிஞர் அன்பழகன் போற்றும் தோழன்
உத்தமராய் தமிழ்நாடு ஆண்ட தீரன்
பாரறிஞர் பல்லோரும் ஏத்தி ஏத்தி
பாவலர்கள் பாமாலை சாற்றிப் போற்றும்
வீரறிஞர் இளநகையே முகமாய் நிற்கும்
முத்தமிழின் காவலரே வாழ்க! வாழ்க!!

 

திருக்குவளை மாகடலில் விளைந்த முத்து
திருக்குறளும் காப்பியமும் இவரின் சொத்து
கருத்துக்கள் கூறுகின்ற கேணி தானே
கற்பனைகள் பிறப்பெடுக்கும் வாணி தானே
விறுப்புடனே கவியரங்கம் பலவாய்க் கண்டார்
வெற்றிகளை மாலையாய் ஏற்றுக் கொண்டார்
மறுப்பொன்றும் பேசாத மனித மாண்பு
மகத்துவமே இவர்வடிவாய் விளங்கும் பண்பு!

 

அவ்வையெனும் தமிழ்க்கிழத்திச் சொல்லி வைத்த
அறக்கருத்து மிக்கதமி ழில்லை என்று
அவ்வையோடு வள்ளுவனார் கம்பன் தன்னை
வாஞ்சையுடன் இளங்கோவின் சிலம்பு கொண்டு
இவ்வூரைத் தமிழுக்கு கொடுத்த எங்கள்
கலைஞர்பு ழெந்நாளும் அழியாது என்று
கொவ்வைத்த மிழ்கூறும் புலவர் நெஞ்சில்
புகுந்திட்ட தமிழ்க்கோவே வாழி வாழி!

 

குமரியிலே குறள் தந்த வள்ளுவர்க்கு
குரல் போலே சிலை வைத்தீர் எவரும் காணார்
அமரர்போல் அரசாலும் வானூர் எல்லாம்
அன்பான மலர்கொண்டு போற்று வாராம்
சமரென்னும் அரசியலில் களமும் கண்ட
சமரசனே சக்தியனே சான்றோர் நெஞ்சில்
இமயம்போல் உயர்ந்திட்ட உந்தன் அன்பு
இனித்திடுமே எந்நாளும் அதுவே தெம்பு!

 

கலையோடும் இலையோடும் புகுந்து சென்று
கதைவசனம் பலவோடும் பொழுதும் வாழ்ந்து
மலையான தமிழ்க்கவிதை மரபைக் கொண்டு
மானமுள்ள தமிழுக்குச் செய்தாய் தொண்டு
வலைவீசி பிடித்துவிட்டாய் சொல்மீன் தன்னை
வலைத்திட்டாய் அனைவரையும் கருத்தால் பேச்சால்
உலைவிளையும் நெற்கதிரும் நீரும் நீதான்
உலகாள உதித்திட்ட சூரியன் நீதான்!

 

சங்கப்பா மிளிருகின்ற சபைகள் தோறும்
சரித்திரத்தின் நாயகனே உந்தன் தேரும்
எங்களது வீதிகளில் ஓடும் நாளும்
எழிலான தேமாங்காய் புளிமா தேடும்
மங்காத புகழ்படைத்தப் பரிதி உன்னை
மகிழ்ச்சியுடன் புகழ்ந்தேத்தும் சிறுவன் என்னை
மங்காத சூரியனாய் ஒலி கொடுத்து
நூற்றாண்டு கண்டவரே காப்பீர் நன்றாய்!

 

இளங்கவி ச வாசுதேவன் (நடுநாட்டுத்தமிழன்)
முதுகலைத்தமிழ்ப் பட்டதாரி,
தமிழ்ப்பற்றாளன்,
குடியநல்லூர் கிராமம்,
வேங்கைவாடி அஞ்சல்,
கள்ளக்குறிச்சி வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606 206
மின்னஞ்சல் : shankarvasu98@gmail.com

Sorry|சிறுகதை|பிரபுவ

Sorry சிறுகதை
‘சும்மா இருங்க. உங்களுக்குப் புரியாது’. நான் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறேன். அங்கே என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா? ஒரு சாரி கேட்டு மெசேஜ் அனுப்புறது ஒண்ணும் பெரிய தப்பில்லை. வேலை பார்க்கும் இடத்தில் இதையெல்லாம் ‘அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டுதான் வேலை பார்க்கணும்’. இவ்வாறு நீது தன் கணவன் வேதாவிடம் கூறினாள்.
நீது ஒரு தனியார் பள்ளியில் கடந்த சில வருடங்களாக படித்த படிப்பிற்கிணங்க, மாத ஊதியத்திற்கு வேலை பார்த்து வந்தாள். அன்று பள்ளி விடுமுறை தினம். அதாவது பள்ளி விடுமுறை தினத்தில் விடுப்பு அளித்து இருந்தது. பொதுவாக பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து விட்டு ஆசிரியர்களுக்கு ஏதாவது அலுவலக பணி செய்யும் விதமாக வரச்சொல்லி விடுவார்கள்.
அன்று விடுமுறையை முன்னிட்டு உறவினர்கள் சிலர் நீதுவின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அதனால் எப்போதும் போல் இல்லாமல் அன்று நாள் முழுவதும் கொஞ்சம் பிஸியாக தான் இருந்தாள். அதிலும் குறிப்பாக மாலை நேரம் வந்தவுடன் சொல்லவே தேவையில்லை. பிஸியோ பிஸி.
வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உபசரனை செய்யும் பொருட்டும், சிறுபிள்ளைகளுக்கு இரவு உணவு தயார் செய்து கொண்டு இருந்ததன் பொருட்டும் கடந்த சில மணி நேரங்களாக நீது கைபேசியை சற்றும் கவனிக்கவில்லை.
இரவு சுமார் 9.30 மணி இருக்கும். ஒரு புறம் பிள்ளைகள் உணவு உண்ட மயக்கத்தில் தூங்க ஆரம்பித்தனர். அதே சமயம் வீட்டிற்கு வந்த விருந்தினர்களையும் உபசரித்து வழியனுப்பியும் முடிந்தது. இப்போதுதான் நீது தன் கைபேசியை எடுத்துப் பார்த்தார்.
பள்ளியில் அவர்களுக்கு என்று வாட்ஸ் அப் குரூப் ஒன்று உள்ளது. அது பள்ளியின் ஏதேனும் அலுவல் சம்பந்தமான தகவல்களை பதிவிடப்படும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் உயர்திரு அட்மின் அவர்கள் அனுப்பிய செய்தி பின்வருமாறு.
“ஆசிரியர்கள் கவனத்திற்கு, கோடை விடுமுறை தினங்களில் ஓரிரு நாட்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டி இருக்கும்”. ‘Please acknowledge and confirm by phone or message me’ என்று மாலை 6.30 மணியளவில் வாட்ஸ் அப் குழுவில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்தக் குழுவில் இருந்த பலரும் ‘ok’, ‘yes mam’… என்று தங்கள் வெறுப்பை மறைத்து விருப்பத்தைத் தெரிவித்து இருந்தனர்.
நீது வீட்டின் அலுவலில் முழுவதும் மூழ்கியிருந்தபடியால் இது ஏதும் தெரியாமல் இருந்தாள். அவள் மட்டும் அதில் பதில் அளிக்காது இருந்திருந்தாள். அதனால் அட்மின் அவர்கள் ‘Neethu, what about you?’ என்று வினா கேட்கப்பட்டு அப்போது இரண்டு மணி நேரம் முடிந்தே போயிருந்தது.
இதை பார்த்தவுடன் நீதுவுக்கு, அவள் யாரும் செய்திடாத பெரிய தவறை இழைத்து விட்டதாக எண்ணி வருந்தினாள். ஒரு வேளை அடிமைகளில் சிறந்த அடிமையாக இருக்க தவறிவிட்டோமோ என்று கருதி துவண்டு போனாள்.
உடனே அவளுடைய பதிலை, ‘ok mam’ என்று எழுதினாள். அதே சமயம் அருகில் இருந்த கணவனிடம், ஏங்க வேதா, ‘sorry for the delay response’ அல்லது ‘sorry for the delay’ இவற்றில் ‘எது சரியாக இருக்கும்’ என்று கேட்டாள். திரு வேதா அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரது புராணத்தை பேச ஆரம்பித்தார்.
போனை கையில் வாங்கி மேலும் கீழுமாக இழுத்துப் பார்த்து படித்துவிட்டு வேதா, இந்த இடத்தில் ‘sorry’ ஒன்றும் கேட்க தேவையில்லை. ஆறு நாட்களுக்குப் பிறகு நடக்கப் போகும் ஒரு செயலுக்கு விருப்பு அளிக்கும் படியாகதானே இருக்கிறது. எப்படியும் ஒருவரும் மறுத்து பதில் சொல்லப்போவது இல்லையல்லவா?
அதனால் சொல்றத கேளு, ‘ok mam, Noted’. அல்லது ‘Sure. Will do’ என்று மட்டும் அனுப்பு போதும்; ‘sorry’ கேட்கக்கூடிய அளவுக்கு ‘இது அவ்வளவு முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை’ என்றான் வேதா.
உங்களிடம் ‘sorry’ கேட்கலாமா? வேண்டாமா? என்று நான் கேட்கவே இல்லையே. அந்த வாக்கியத்தில் எது சரி? எது தவறு? என்று மட்டும் தானே கேட்டேன் என்று சற்று கோபத்துடன் நீது சொன்னாள்.
இந்த நேரத்தில்தான் நீது தன் கணவனிடம், ‘உங்களுக்கு அங்கு என்ன நடக்குதுன்னு தெரியுமா? ஒரு இடத்துல வேலை பார்க்குறதுன்னா சும்மாயில்லை…’என்று கடுகடுத்த குரலில் ஆரம்பத்தில் மேலே சொல்லியது போல கூறினாள்.
இதைக் கேட்ட வேதாவின் கோபம் தலைக்கு ஏறியது. கண்கள் சிவந்தது; துக்கம் மார்பை அடைத்தது. எதற்கும் அஞ்சாத கலங்காத ஆண்மகன், ஏதோ பொறி தட்டியது போல் அப்படியே திகைத்து நின்றான். மறுவார்த்தை ஒன்றும் மறுத்து சொல்லாமல், அவ்விடம் விட்டு நகர்ந்தான். அன்று இரவு உணவு உண்ணாமல் நோன்போடு படுக்கை அறைக்குச் சென்று படுத்தான். அந்த வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. படுத்துக் கொண்டு தான் இருந்தான்; ஆனால் அவனுடைய பக்கத்தில் கூட தூக்கம் வந்து படுக்கவில்லை.
பலபல சிந்தனைகள் தோன்றி மறைந்து கொண்டே இருந்தது. அப்போது அவனுடைய வாழ்க்கையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துப் பதினான்கு வருடங்கள் முடிந்து விட்டது என்பதை நினைவுகூர்ந்தான்.
வீட்டில் இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் இருக்கின்ற வேதாவுக்கு இது போன்று ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டு போக தெரியவில்லையோ’. ஒருவேளை இப்படி செய்து இருந்தால் செய்த வேலையை எல்லாம் விட்டுவிட்டு இப்படி வீட்டில் வேலை இல்லாமல் இருந்திருக்க மாட்டேனோ? என்று நினைத்து வருந்தினான்.
“இறுதியாக வேலை செய்த பெரிய நிறுவனத்தில் ஒட்டுமொத்த வேலையையும் இழுத்துப் போட்டு ஓடி ஓடி செய்தோமே! எனக்கு தகுந்த மரியாதையும் சன்மானமும் கொஞ்சம்கூட கிடைக்கவில்லையே! ‘பொறுத்து இருங்கள்’ என்று நிர்வாகம் கூறியதற்கு எதிர்த்துக் கேள்விக் கேட்டதற்கு தண்டனையாக மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்;  ‘இல்லையேல் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்து விடுவோம்’ என்று மிரட்டினார்கள். நீங்கள் வேலையில் இருந்து நீக்கியதாக இருக்கக் கூடாது, மாறாக நான் வேலையை விட்டு போனதாக இருக்க வேண்டும்.” என்று வேலையை விட்டு வந்த காரணத்தையும் சற்றுத் தியானித்துப் பார்த்தான். 
ஒரு வேளை ஏதாவது பணியில் இருந்து சொல்லி இருந்தால், சொல்லியதை உதாசினப்படுத்தாமல் கண்டிப்பாக நீது கேட்டு இருப்பாளோ என்னவோ? என்று நினைத்து வருந்தினான்.
வேலை ஒன்றுக்கும் போகாமல் வீட்டில் இருக்கும் கணவனை ‘*த்துடைத்தக் கல்லாகக் கருதி விட்டாளோ’ என்று நினைத்து வருந்தினான். அப்படி அவன் நினைத்து வருந்துவது சரியா? தவறா? என்று தெரியாமல் வேதனையில் மூழ்கினான். இது உள்ளூர உண்மையில்லை என்று தேற்றினாலும் வருந்தவே செய்தான். வேதாவின் ‘உயிர் உடலை வெறுத்து ஒதுக்கி சென்றது’ போல் வெறுக்க ஆரம்பித்தான். அப்போது படுக்கை அறையின் கதவை திறந்து மெல்ல நளினமாக உள்ளே வந்தாள் நீது. 
’ஏங்க, சாப்பிடாம உங்களுக்கு தூக்கம் வராது! ஒழுங்கா எழுந்து வாங்க! சேர்ந்து சாப்பிடலாம்’, என்று நீது கொஞ்சும் கிளியின் குரலில் கெஞ்சினாள்.
‘Sorry’ங்க, sorry, sorry என்று சொல்லி வீண் வீம்பு பிடித்த வேதாவின் கையை இறுகப்பிடித்துச் சாப்பிட வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றாள். ‘உயிர் உடலை வெறுக்க நினைத்தாலும், உடல் உயிரை ஒருபோதும் வெறுத்து ஒதுக்காது’ என்பதை மெய்யாக்கிடுவது போல.

சிறுகதையின் ஆசிரியர்

பிரபுவ,

பல்லபுரம், இலால்குடி தாலுக்கா

திருச்சி – 621 712.

karpraba@gmail.com

எழுத்தாளர் பிரபுவ – வின் படைப்புகளைப் படிக்க…

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

5.மொபைல் ரூல்ஸ்

6.கிருகபதி – கிருகிணி (கவிதை)

7.அம்மாயும் சிறு குழந்தைதான்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »