சங்ககால தச்சுக்கலையும் மட்பாண்டக் கலையும்
மனிதன் நாகரிக வளர்ச்சிஅடைய புதிய புதிய உத்திமுறைகளை கண்டுபிடித்து அவற்றை உலகிற்கு கொடையாக வழங்கியுள்ளான். அவ்வகையில் தான் வாழும் வாழ்விடத்திற்குதகுந்ததுபோல இயற்கை தந்த கொடைகளைக் கொண்டு கலைநயம் மிக்க சூழலை உருவாக்கி அதனுடன் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் இணைத்துப் பழமையில் புதுமையை உருவாக்கத் தலைப்பட்டான். அங்கனம் கலைநயத்தோடு செய்யப்பட்ட தச்சுக்கலை குறித்தும் மட்பாண்டக் கலை குறித்தும் விவாதிக்கிறது இக்கட்டுரை.
சங்க காலத்தில் பல கலைஞர்கள் இருந்தனர் மரத்தால் வாழ்க்கைக்கு தேவையான பலப்பொருள்களை செய்பவர்கள் தச்சர்கள் எனப்பட்டனர். மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான மரச்சாமான்கள் வண்டிகள் கடல் வாணிபத்திற்கு தேவையான படகுகள் வீட்டிற்குரிய அழகிய தூண்கள், வேலைப்பாடுடைய கதவுகள், அரசருக்கு தேவையான தேர்கள் போன்வெற்றை செய்துக் கொடுப்பவர்கள் தச்சர்கள் நால்வகைப் படைகளில் சிறந்தப்படை தேர்படை. தேர்செய்து கொடுப்பது தச்சரின் தலையான கடமையாக இருந்திருக்கிறது. தச்சர்கள் மன்னர்களுக்கு வலிமையான தேர்களை செய்துக் கொடுப்பதை தங்களது கடமைகளாகக் கருதினர்.
“வைகல் எண்டேர் செய்யும் தச்சன்
திங்கள் வலிந்த காலன் னோனே” புறம்.87
இதனால் தச்சர்கள் மரத்தால் பலப்பொருள்களை செய்துக் கொடுத்தனர் என்பது தெளிவாகிறது. உறுதியான தேர்களையும் செய்துக் கொடுத்தனர் என்பதை உணர முடிகிறது. மேலும் மக்களுக்குத் தேவையான தச்சுக் கருவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். சங்க காலம் முதல் இன்று வரை தச்சர்களின் செயல் மிகுந்து காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னர்களுக்கும் தேவையான அழகிய தூண்களும் வேலைப்பாடுடைய அழகிய கதவுகளும் அவர்களுக்குத் தேவையான தேர்களையும் அவற்றை உறுதியுடன் செய்துக் கொடுப்பது. தச்சர்களின் கடமையாக இருந்தது. தொழில்களில் சிறந்த தொழிலாக தச்சுத் தொழில் போற்றப்படுகிறன்றது.
தச்சுவேலையில் கலைநயம்
சங்ககால மக்களில் தலைமை வாய்ந்த மன்னர்களின் சமூகம் எதிரிகளின் தாக்குதலில் இருந்துத் தன்னைகாத்துக் கொள்ளமிகவும் வலிமையானபோர் கதவுகளை தனது கோபுரவாயிலில் அமைத்திருந்தான். அத்தகைய கோபுரவாயிலின் கதவுகள் பற்றி நெடுநல்வாடையில் ஆணிகள், பட்டங்கள் யாவும் பருத்த இரும்புகளால் பிணிக்கப் பெற்றவை. அதில் தாழ்ப்பாள்கள் மிகவும் வலிமையானதாக விளங்கினஎனச் சுட்டப்படுகின்றது. இவையாவும் “கைவல் கம்மியன்” என்று கூறப்படும் தச்சுவேலையில் நேர்த்தி உடையவர்களால் செய்யப்பட்டது.
“ஒருங்கு உடன் வளைஇ ஓங்குகலை வரைப்பின்
பருஇரும்பு பிணித்து செல்வரக்கு உரீஇ
துணைமான் கதவம் பொருத்தி இணைமாண்டு” (நெடுநல்:78-80)
என்ற வரிகளில் சங்ககால மக்களின் கைத்திறனுடன் சேர்ந்த கலை நயத்தை அரண்மனைக்கு பொருத்தப்பட்;ட கதவுகள் உணர்த்துகின்றன. மேலும் இன்று பெரும்பாலான வீடுகளின் நிலைக்களுக்கு மேலே காணலாகும் ‘கஜலெட்சுமி’ வடிவம் இழைத்த உத்தரம் நெடுநல்வாடையிலே இடம் பெற்றுவிட்டது. உத்திரத்தின் மேலே அதாவது நிலைக்கு மேலே கற்பலகையில் குவளையின் புதிய மலர்களை உயர்த்தித் தங்கள் துதிக்கைகளால் ஏந்திய பிடிகளின் உருவங்களும் அதன் நடுவில் திருமகள் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். இத்தகைய தொழில் நுட்பங்கள் யாவும் சங்ககாலமக்கள் வழங்கிய கொடை எனில் அது மிகையாககாது. நெடுநல்வாடைக்கு உரை வகுத்த நச்சினார்கினியர் கஜலெட்சுமி உருவம் பொறித்த கற்பலகைக்கு விளக்கம் தரும் போது, “நடுவில் திருமகளும், இருபுறத்தும் இரண்டு செழுங்கழுநீர்ப் பூவும், இரண்டு பிடியுமாக வகுத்த உத்தரக் கற்கலி” என்று அழகுபட உரைக்கின்றார். இத்தகைய காட்சி கலித்தொகையிலும் காணமுடிகின்றது.
“வரிநுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்
புரிநெகிழ் தாமரைமலரங்கண் வீறுஎய்தித்
திருநயந்து இருந்தன்ன” (கலி:44)
என்று கூறப்பட்டுள்ளது. பழங்கால கலைகளுள் நிலைத்த தன்மை உடையன என்பதற்கு இதுவேதக்கச் சான்றாகும்.
கட்டிலின் தொழில்நுட்ப கூறுகள்
பாண்டிமாதேவி உறங்குவதற்காகச் செய்யப்பட்ட கட்டிலின் கலை வேலைப்பாடுகள் நெடுநல்வாடையில் சுட்டப்பட்டுள்ளதை நோக்கும் போது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக மக்களின் வாழ்க்கை முறைகளில் எத்தகைய அருமையான கலைக் கொடை இன்றைய கலை விரும்பிகளுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் கிடைத்துள்ளது என்பதை அறியமுடிகின்றது. பாண்டில் என்றுசொல்லப்படும் கட்டில் எப்படி செய்யப்பட்டது என்பதை நெடுநல்வாடை விளக்கும்போது நாற்பது வயது நிரம்பிய முரசு போன்ற கால்களை உடைய போரில் இறந்த யானையின் தானே விழுந்த தந்தங்களால் செய்யப்பட்டது. தச்சன் தனது கூர்மையான சிறிய உளியால் நுட்பாகச் செதுக்கிவட்டக் கட்டிலை உருவாக்கினான். மேலும் அதன் இடையில் இலைவடிவங்கள் விளங்குமாறு செய்யப்பட்டது என்று கூறும் போது நுண்ணிய வேலைப்பாடு உடைய கட்டில் (அ) பாண்டில் செய்ய சிற்றுளி பயன்பாடு மாறவில்லை. காலங்கள் மாறினாலும், கலையும், தொழிலும் மாறாது என்பதற்கு இதுவேதக்கச் சான்றாகும். கட்டிலின் மேல் சிங்கம் வேட்டையாடுவது போன்ற காட்சி தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தூரிகை கொண்டு வண்ணங்களால் சித்திரம் தீட்டுவதைக் காட்டிலும் தகடுகளில் உருவங்கள் பொறிப்பது என்பது கடினமானதாக்கும் என்றும் கலை தன்மை கொண்ட கலைஞர்களுக்கு அது எளிதாகிப் போகின்றது.
“தசநான்குஎய்தியபணைமருள் நோன்தாள்
இகல் மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதல்
பொழுதுஒழி,நாகம் ஒழிஎயிறுஅருகுஎறிந்து
சீரும் செம்மையும் ஒப்பவல்லோன்
கூர் உளிக் குயின்றஈர் இலை இடை இடுபு” (நெடுநல்:115-119)
என்ற செய்யுள் வரிகளில் கட்டிலை தச்சன் செய்தமுறையைக் கூறியுள்ளது. மேலும் பாண்டில் பற்றி மலைப்படுகடாமில் “நுண் உருக்குற்றவிளங்கு அடர்ப் பாண்டில்” என்று கூறப்பட்டுள்ளது.
மட்பாண்டத் தொழில்
பண்டை நாளில் பெரும்பான்மையான மக்கள் மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர். மட்கலம் செய்யும் மக்கள் குயவர்கள் எனப்படுகின்றனர். பச்சை மண்ணால் செய்த கலத்தைச் சூளையில் இட்டு எரித்து புனைவது மட்கலம் எனப்பட்டது.
மண்பாண்டங்கள் மக்களுக்குப் பல வகையில் பயன்பட்டது. இதற்கு பலப்பெயர்கள் உள்ளன. உணவு சமைத்தற்குரிய கலம், அடுகலம் என்றும் நீர் நிறைத்து வைப்பதற்குரிய கலம் மட்கலம் என்றும் கூறப்படுகிறது. இறந்தவர் உடலை பெரிய மட்கலத்தில் வைத்துப் புதைப்பர் இதனை தாழிகள் என்று அழைத்தனர். மண்பாண்டம் செய்ய கருவிகள் தேவைப்பட்டன.
“அச்சுடைக் சாகாட்டு ஆரம்” (புறம்:256)
என்ற வரிகள் மூலம் மண்பாண்டம் செய்ய சக்கரம் என்ற கருவி பயன்பட்டன என்பது தெளிவாகிறது. மண்பானையை சுடாமல் அப்படியே பயன்படுத்தினால் அது பயனற்று போகும். அதனால் அதனைச் சுட்டு பயன்படுத்த வேண்டும் என்பதை,
“இருள் திணித்தன்ன குரூஉத்திரன் பரூஉப்புகை
அகலிக விசும்பின் உளன்றும் சூளை”
என்பது தெளிவாகிறது. சங்க காலத்தில் மக்கள் இறந்த பிறகு அவ்வுடலைத் தாழியைக் கொண்டு புதைத்தனர். இதனை,
“கவி செந்தாழிக் குவிபுறத் திருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவர்” (புறம்.238)
என்பதால் மக்கள் தாழிகளைப் பயனப்டுத்தினர் என்றும் அத்தாழி செந்நிறமாக உள்ளது என்றும் தெளிவாகிறது. மண்பாண்டங்களை மக்கள் சங்ககாலம் முதல் இன்று வரை பயன்படுத்தி வருகிறார்கள். இத்தொழில் அன்று முதல் இன்று வரை இருந்து வருகிறது என்பது புறநானூற்றின் மூலம் அறிய முடிகிறது.
சங்க காலத்தில் மட்பாண்டத் தொழில் பரவலாக்கம் பெற்று இருந்தது. மட்பாண்டங்களைச் செய்வோர் அதனைத் தனித்த தொழிலாகச் செய்துள்ளனர். எனவே அவர்களைக் கலம்செய்கோ, எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர். இதனை, “கலம் செய் கோவே! கலம் செய் கோவே!”(புறம்: 228) என்னும் புறநானூற்றுப் பாடல் வழி அறிய முடிகின்றது. மேலும் அவர்கள் வேட்கோ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும், சிறுவயது முதலே இத்தொழிலை மேற்கொள்கின்றனர் எனவும்,
“வேட்கோ சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரு உத்திரன் போல” (புறம். 32)
புறப்பாடல் குறிக்கின்றது. இதை நோக்க மட்பாண்டத் தொழில் குடும்பத்தொழிலாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும் உணர்த்துகின்றது. மட்பாண்டங்கள் பெரும்பாலும் கொள்கலனாகவே காட்டப்படுகின்றன. பானை, நீர்க்கன்னல், இறந்தோரைப் புதைக்க பயன்படுத்திய தாழிகள் முதலியவை சங்க இலக்கியங்களில் காட்டப்படுகின்றன.
பானைகள் பானை, குழிசி, தசும்பு, மண்டை, உறி, கரகம் எனப்பல பெயர்களால் குறிக்கப்படுகின்றன.
“திண்கால் உறியண் பானை” (அகம்: 270)
என்னும் பாடலடி பானை எனக் குறிக்கப்பட்டமையையும்,
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி” (பெரும்: 96)
என்னும் பாடலடி குழிசி எனச் சுட்டப்பட்டமையையும்,
“தயிர் கொடு வந்த தசும்பு” (புறம்: 33)
என்பது தசும்பு எனக் குறித்ததையும்,
“பாணர் பசுமீன் சொரிந்த மண்டை” (குறு: 169)
என்னும் அடி மண்டை என அழைக்கப்பட்டதையும்,
“உறித் தாழ்ந்த கரகம்” (கலி: 9)
என்னும் பாடல்வரி கரகம் என்றதையும் குறிக்கின்றன. இவ்வாறு வேறு வேறு பெயர்களால் அழைக்கப் பெற அவற்றின் வடிவம் அல்லது அளவு மாறுபாடு காரணமாக இருக்கலாம் எனினும் அவற்றை உறுதி செய்ய சங்கப் பாடல்களில் இடமில்லை.
பானைகளில் ஓவியங்கள் வரையப்பட்டமையோடு பானைகளில் பெயர் எழுதும் பழக்கமும் சங்க காலத்தில் இருந்துள்ளது.
“வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த என்னும்
பல்பொதிக் கடைமுக வாயில்.” (சிலம்பு. இந்திர.111-113)
என்னும் அடிகள் பானையில் பெயர் பொறித்தமையைக் காட்டுகின்றது. மட்பாண்டங்கள் செய்த முறையினையும் சங்கப்பாடல்கள் வழியாக அறிய முடிகின்றது. மட்பாண்டங்கள் செய்ய ஈர மண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். ஈரமான பதப்படுத்திய மண்ணை சக்கரத்தில் இட்டு பானை செய்துள்ளனர்.
“வனை கலதிகிரியின் குழிசி சுழலும்
துணை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்” (மலை:475)
என்னும் பாடலடிகள் இதனை உணர்த்துகின்றது. இவ்வாறு சக்கரத்தைச் சுழலவிட்டு கைகளால் செய்யப்பட்ட பானைகள் பின்னர் நெருப்பில் இட்டு சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பானை தனித்தனியாக சுடப்படாமல் மொத்தமாக சுடப்பட்டிருக்க வேண்டும். இப்படி பானைகளைச் சுடுவதால் ஏற்படும் புகை மலையையே மறைப்பதாக,
“இலங்குமலை புதைய வெண்மழை கவைஇ
கலம்சுடு புகையின் தோன்றும் நாட” (அகம்: 308)
என்னும் அகநானூற்றுப் பாடல்வரிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு சுடப்படாத பானைகள் ஈரத்தைத் தாங்காதவையாக, பயனற்றவையாக இருந்தன. இந்த பயனற்ற கலத்தை பசுங்கலம் என்று குறிக்கப்பட்டமையை,
“பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
ஊள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி” (குறு: 29)
“ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு” (நற்: 308)
முதலான பாடல் வரிகள் குறிக்கின்றன. சுடப்படாத பானைகள் பயனற்று கரையும் நிலையில் இருக்க, சுடப்பட்ட பயனுள்ள பானைகள் உணவுசார் தேவைகளுக்குப் பயன் படுத்தப்பட்டுள்ளன.
“முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடுஊண் புழக்கல்” (பெரும்: 96)
“சோறு அடு குழிசி இளக
மான்தடி புழக்கிய புலவுநாறு குழிசி
நகைமுதிர் சாடி நறுவின் வாழ்த்தி” (பேரும்:40)
போன்ற பாடல் வரிகள் பானைகள் உணவு சமைக்க பயன்பட்டமையைப் புலப்படுத்துகின்றன. மேலும்,
“பாணர் பசுமீண் சொரிந்த மண்டை” (குறுந்.169)
என்னும் பாடலடி மீனைச் சேகரிக்க மண்பானையைப் பயன்படுத்தியதைக் காட்டுகின்றது. மேலும், மண்பானைகள் தயிரை வைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
“தயிர் கொடு வந்த தசும்பு” ((புறம்: 33)
எனும் புறநானூற்றுப் பாடலடி இதனைப் புலப்படுத்துகின்றது.
“உறி தாழ்ந்த கரகம்” (பெரும்: 56)
“இமிழ் இசை மண்டை உறியொடு” (கலி: 106)
“திண்கால் உறியண் பானை” (அகம்: 270)
போன்ற பாடல் பானைகளை வீட்டில் தொங்கவிட உறிகளைப் பயன்படுத்தியமையைக் காட்டுகின்றது
. முடிவுகள்
📍 சங்க காலத்தில் வேளாண்மைத் தொழிலைத் தவிர பிற தொழில்களும் சிறந்தவையாக இருந்துள்ளன.
📍 சங்ககால மக்கள் எத்தொழிலைச் செய்யினும் அவற்றைக் கலைநயத்தோடும், தொழில்நுட்பத்தோடும் செய்தனர் .
📍பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட முறைகள் இன்று பின்பற்றப்படும்போது தொழில்நுட்பங்கள் மாறவில்லை. தொழில்நுட்பக் கருவிகளே மாறி உள்ளன.
📍சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுவது போன்று சாமானியரின் புழங்கு பொருளாக பலவகைப் பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சங்கப் பாடல் குறிப்பது போல தங்கள் பானைகளில் பெயர் எழுதி பயன்படுத்தியுள்ளனர். உலோகங்கள் பயன்படுத்தப்பட்ட காலமாயினும் சங்க காலத்தில் மட்பாண்டங்களே சாமானியர் பயன்பாட்டில் பெரும் இடம் பிடிக்கின்றன.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க. இராஜா
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி
பொள்ளாச்சி – 642107
Email: rajavmctamil@gmail.com
306 ஆண்டுகள் பழமையான திருக்குறள் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு
தேனி மாவட்டம், வருஷநாடு அருகே தங்கமாள்புரத்தில் 306 ஆண்டு பழமையான திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடி தொல்லியல் ஆய்வாளர் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவரும் தொல்லியல் ஆய்வாளரும் தமிழ் ஆசிரியருமான ஜெயலட்சுமி, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தொல்லியல் கள ஆய்வு செய்து தொல்லியல் சின்னங்களை ஆவணப்படுத்தி வருகிறேன். என் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்ததில் அச்சுவடி திருக்குறள் சுவடி என்பது தெரிய வந்தது. இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில் உரைநடையுடன் கூடியதாக இருந்தது.
பல்வேறு திருக்குறள் உரையாசிரியர்களின் உரையுடன் ஒப்பிட்டுபார்த்ததில் இச்சுவடியில் உள்ள உரை புதிதாக உள்ளது. மேலும் இச்சுவடி எழுதப் பட்ட காலம் விளம்பி ஆண்டு மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இதன் காலம் 1718ம் ஆண்டு ஜூலை 31 ஆகும்.
தற்போதைய நிலையில் 306 ஆண்டு பழமையாக உள்ளது. எழுத்துக்கள் இடைவெளி இல்லாமலும், நெடில் எழுத்துக்கள், புள்ளிகள் இல்லாமலும் உள்ளதால் இச்சுவடியானது வீரமாமுனிவரின் எழுத்து சீர்திருத்த காலத்திற்கு முந்தையது என உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவடியின் ஒரு இதழில் ஆறு முதல் பத்து வரிகள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழிலும் அதன் பக்கத்தை குறிக்கும் வகையில் தமிழ் எண்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு திருக்குறள் முடிந்ததும் அதன் உரையானது இடைவெளி இன்றி தொடர்ச்சி யாக எழுதப்பட்டுள்ளது. அதிகாரங்களில் உள்ள திருக்குறள் வரிசை மாற்றப்பட்டுள்ளது.
அதிகார தலைப்புகளைத் தற்போதைய தலைப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் சற்று மாறுபட்டிருப்பது வியப்பாக உள்ளது. இச்சுவடியை ஆவணப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு உள்ளேன். விரைவில் நூலாக்கம் உரையுடன் செய்யப்பட உள்ளது. அவ்வாறு வெளிவருமாயின் தமிழ் உலகிற்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறேன்.
ஆய்வாளர்
திருமதி ம.ஜெயலட்சுமி
தொல்லியல் ஆய்வாளர்
ஓசூர் – 635 130
இலக்கியத்தில் கூற்றுகள் ?
1.ஆசையே துன்பத்திற்குக் காரணம் – புத்தர்
2.கற்றுணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே – திருநாவுக்கரசர்
3.என் கடன் பணி செய்து கிடப்பதே – திருநாவுக்கரசர்
4.நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோம்
அல்லோம் – திருநாவுக்கரசர்
5. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் – திருநாவுக்கரசர்
6. அடியவர்க்கும், அடியவர்க்கும், அடியவர்க்கும் அடியேன் யான் – நம்மாழ்வார்
7. வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் : மெய் கூறுவல் – மருதனில் நாகனார்
8. செல்வத்துப்பயனே ஈதல் – நக்கீரர்
9. ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று – கழைதின் யானையார் (புறநானூறு)
10.கோல்நோக்கி வாழும் குடிபோல் இருந்தேன்- குலசேகர ஆழ்வார்
11.செல்வத்துப் பயனே ஈதல் – நக்கீரர்
12.நூல் பல கல் – ஒளவையார்
13.இளமையில் கல் – ஒளவையார்
14.நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு – ஒளவையார்
15.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் – ஒளவையார்
16.அணுவைத் துளைத்தேழ் கடலையும் குறுகத் தறித்தக் குறள் – ஒளவையார்
17.திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – ஒளவையார்
18.மீதூண் விரும்பேல் – ஒளவையார்
19.இயல்வது கரவேல் – ஒளவையார்
20.நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே –
ஒளவையார்
21.ஈவது விலக்கேல் – – ஒளவையார்
22.எறும்பும் தன் கையால் எண்சாண் – – ஒளவையார்
23.கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு – – ஒளவையார்
24.காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக் கட்டி அரிசி அவள் அமைத்து வாயுடை மறையவர் மந்திரத்தால் – ஆண்டாள்
25.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – திருவள்ளுவர்
26.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் – திருவள்ளுவர்
27.அன்பின் வழியது உயிர்நிலை – திருவள்ளுவர்
28.அறிவற்றங் காக்கும் கருவி – திருவள்ளுவர்
29.எண்ணித் துணிக கருமம் – திருவள்ளுவர்
30.நீரின்றி அமையாது உலகு – திருவள்ளுவர்
31.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – திருவள்ளுவர்
32.நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் – திருமூலர்
33.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் – திருமூலர்
34.உடம்பார் அழியின் உயிரார் அழிவர் – திருமூலர்
35.ஒன்றே குலம் ஒருவனே தேவன் – திருமூலர்
36.உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் – திருமூலர்
37.என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு – திருமூலர்
38.வைதோரைக் கூட வையாதே – இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே – கடுவெளிச்சித்தர்
39.முப்பால் அறிந்த முதற்பா விலர் ஒப்பார் எப்பா பலரினும் இல் – நல்லந்துவனார்
40. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – அதிவீரராம பாண்டியன்
41. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
42.உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோனா றரசும் செல்லும் என்று பாடியவர் – பாண்டியன் நெடுஞ்செழியன்
43.பரணிக்கோர் ஜெயங்கொண்டான் – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
44.தென்றமிழ் தெய்வப் பரணி – ஒட்டக்கூத்தர்
45. தீதும் நன்றும் பிறர் தர வாரா – கணியன் பூங்குன்றனார்
46. பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய மாமலைப் பயந்த காமருமணியும் – கண்ணகனார் (புறநானூறு)
47. பசித்திரு, தனித்திரு, விழித்திரு – இராமலிங்க அடிகள் (வள்ளலார்)
48.அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை – வள்ளலார்
49.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் – வள்ளலார்
50.கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக வேண்டும் – வள்ளலார்
51.ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர்ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் – வள்ளலார்
52.உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் – வள்ளலார்
53. சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு வள்ளலார்
54.எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே – வள்ளலார்
55.கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் – வள்ளலார்
56.பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் எண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி – வள்ளலார்
57.கலையுணர்ந்த கற்பனையே நிலையெனக் வழக்கமெல்லாம் மண்மூடிப் போக – வள்ளலார்
58.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் – வள்ளலார்
59.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே –
தாயுமானவர்
60.அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே – தாயுமானவர்
61.ஓர் அணுவினைச் சதக்கூறிட்ட கோணினும் உளன் – கம்பர்
62.உடம்பிடைத் தோன்றிற் றொன்றை அறிந்ததுன்
உதிரமூற்றி அடல்உறச் சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் – கம்பர்
63.கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் – ராமகிருஷ்ண பரமஹம்சர்
64.திருந்திய பண்பும் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழியாம் – பரிதிமாற்
கலைஞர்
65.வாலெங்கே நீண்டு எழுந்த வல்லுகி ரெங்கே ? நாலு காலெங்கே? ஊன் வடிந்த கண்ணெங்கே? -கவிகாளமேகப்புலவர்
66.நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் – பாரதியார்
67.காக்கை குருவி எங்கள் ஜாதி – பாரதியார்
68.காக்கைச் சிறகினிலே நந்தலாலா – பாரதியார்
69.சாதிகள் இல்லையடி பாப்பா – பாரதியார்
70.பெண் விடுதலை வேண்டும் – பாரதியார்
71.என்று தணியும் இந்த சுதந்திர தாகம் – பாரதியார்
72.எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பாரதியார்
73.அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே – பாரதியார்
74.ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா – பாரதியார்
75.ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் – பாரதியார் 76.ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் – பாரதியார்
77.பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே- பாரதியார்
78.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – பாரதியார்
79.நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் – பாரதியார்
80.தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம் – பாரதியார்
81.செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்- பாரதியார்
82.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – பாரதியார்
83.பாரத நாடு பழம் பெரும் நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் – பாரதியார்
84.யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம் – பாரதியார்
85.சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் – பாரதியார்
86.காவிரி தென்பெண்ணை பாலாறு கண்டதோர் வையை பொருநை நதி – பாரதியார்
87.கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு – பாரதியார்
88.நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு – பாரதியார்
89.யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவன்போல் இளங்கோவனைப்போல் பூமிதனில்
யாங்கணுமே பிறந்ததில்லை – பாரதியார்
90.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – பாரதியார்
91.தனியொருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் – பாரதியார்
92.கம்ப நாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே – பாரதியார்
93.ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி – பாரதியார்
94.பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் – பாரதியார்
95.காசிநகர்ப் புலவன் பாடும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் – பாரதியார்
96.வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் – பாரதியார்
97.ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று – பாரதியார்
98.வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழர்! – பாரதியார்
99.செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துபாயுது காதினிலே – பாரதியார்
100.பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் – பாரதியார்
101.இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் – பாரதியார்
102.பாலைப் பொழிந்து தரும் பாப்பா- அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா! – பாரதியார்
103.வயலில் உழுது வரும் மாடு – அதனை ஆதரிக்க வேணுமடி பாப்பா! – பாரதியார்
104.வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம் மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் –
பாரதியார்
105.முப்பது கோடி முகமுடையாள் நிகரென்று கொட்டு முரசே இந்த நீணிலம் வாழ்ப வரெல்லாம் தகரென்று கொட்டு முரசே பொய்ம்மைச் சாதிவகுப்பினை எல்லாம் – பாரதியார்
106.மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் – பாரதியார்
107.வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டு – பாரதியார்
108.இதந்தரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும் சுதந்திர தேவி, நின்னை தொழுதிடல் மறக்கி லேனே – பாரதியார்
109.இன்பக் கதைகளெல்லாம் – உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ அன்பு தருவதிலே உனை நேர் ஆகுமோர் தெய்வமுண்டோ- பாரதியார்
110.தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – பாரதியார்
111.அறம் பெருகும் தமிழ் படித்தால், அகத்தில் ஒளி பெருகும் திறம் பெருகும் உரம் பெருகும் தீமைக் கெதிர் நிற்கும் – பெருஞ்சித்திரனார்
112.கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித் தானா? – இராமச்சந்திரக் கவிராயர்
113.தமிழுக்கும் அமுதென்று பேர் – பாரதிதாசன்
114.புதியதோர் உலகம் செய்வோம் – பாரதிதாசன்
115.எங்கெங்கு காணினும் சக்தியடா – பாரதிதாசன்
116.வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையமே- பாரதிதாசன்
117.கொலை வாளினை எடுடா வெகு கொடியோர் செயல் அறவே – பாரதிதாசன்
118.இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பவனும் இருக்கின்றானே – பாரதிதாசன்
119.கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவள் – பாரதிதாசன்
120.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே – பாரதிதாசன்
121.திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குன்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் – பாரதிதாசன்
122.வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே – பாரதிதாசன்
123. அகர முதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் நிகரிலாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய் – பாரதிதாசன்
124.மழையே மழையே வா வா – நல்ல வானில் புனலே வா வா – இவ் வையத் தமுதே வா வா – பாரதிதாசன்
125.தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள் இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே – பாரதிதாசன்
126.’காடு கமழ வந்த கற்பூரச் சொற்கோ’ என்று பாரதியாரைப் பாடியவர் – பாரதிதாசன்
127.தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும் – பெரியார் பற்றி பாரதிதாசன்
128.செத்தும் கொடுத்த சீதக்காதி – படிக்காசுப் புலவர்
129.உள்ளத்துள்ளது கவிதை இன்பம் உருவெடுப்பது கவிதை – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
130.வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசுதென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு – – கவிமணி
131.மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டு மம்மா – கவிமணி
132.தோட்டத்தில் மேயுது”வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
133.தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம் – கவிமணி
134.சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும் சாலைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் – கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
135.கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ – கவிமணி
136.காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப்போவானே – கவிமணி
137.நாடக சாலையொத்த நற்கலாசாலை ஒன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
138.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை
139.தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா – நாமக்கல் கவிஞர்
140.கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது – நாமக்கல் கவிஞர்
141.கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் – நாமக்கல் கவிஞர்
142.அமிழ்தம் அவளுடைய மொழியாகும் அன்பே அவளுடைய வழியாகும் மானம் பெரிதென உயிர் விடுவார் – நாமக்கல் கவிஞர்
143.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு – நாமக்கல் கவிஞர்
144.பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் – நாமக்கல் கவிஞர்
145.சூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதா னது – பம்மல் சம்மந்தனார் 146.எதையும் தாங்கும் இதயம் வேண்டும் – அறிஞர் அண்ணா
147.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – அறிஞர் அண்ணா
148.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு – அறிஞர் அண்ணா
149.உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமையில்லா மனித குலம் உயர்வு தாழ்வு வளக்குது – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்
150.செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத் திறமைதான் நமது செல்வம் – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்
151.வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
152.செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் வண்ணச் சந்தத்திலே கவிதைச் சரம் தொடுப்பேன் – கண்ணதாசன்
153.எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் – கண்ணதாசன்
154.நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – கண்ணதாசன்
155.போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன் – கண்ணதாசன்
156.ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி! – முடியரசன்
157.நான் தனியாக வாழவில்லை. தமிழோடு வாழ்கிறேன் – திரு.வி.கலியாணசுந்தரனார்
158.பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பு வழுக்கி இறந்தவனும் உண்டு – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
159.ஏர்முனைக்கு நிகரிங்கே எதுவுமில்லை – மருதகாசி
160.வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்? – அப்துல் ரகுமான் (பால் வீதி கவிதைத் தொகுப்பு)
மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..
காடு நமது வாழ்வியல்|முனைவர் ம.கார்த்திகா
முன்னுரை
21 ஆம் நூற்றாண்டில் மனிதன் தொடமுடியாத உயரங்களைத் தொட்டுவிட்டான் ஆனால் பூமியையும் அங்குள்ள இயற்கையைப் பாதுகாக்கவோ மீள உருவாக்கவோ மனிதனால் முடியவில்லை. இயற்கையின் வரமாகப் பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக மனிதன் சுவாசிக்க தேவையான ஒட்சிசனை பூமிக்கு வெளிவிடுகின்ற தாவரங்கள் அடங்கிய இயற்கையான சூழல் தொகுதியே காடுகளாகும். காடுகள் இல்லையெனில் மனிதர்கள் இல்லை. காடுகளின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்ததால்தான் திருவள்ளுவர்,
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”
எனக் கூறியுள்ளார். இக்காடுகள் மனித தலையீடுகளின்றி பூமியில் தோன்றிய வரப்பிரசதமாகும் இவை தான் சூழலை குளிர்விக்கின்றன. மழையை பொழிவிக்கின்றன. தரைக்கீழ் நீரைப் பிடித்து வைக்கின்றன. அருவிகளை ஆறுகளை உருவாக்கி விவசாயத்தைப் பாதுகாக்கின்றன. மனிதனுக்கு நிழலையும் தந்து பல்லாயிர கணக்கான விலங்குகள் பூச்சிகள் பறவைகள் மீன்களுக்கும் வாழ்விடமாக விளங்குகின்றன. அந்தளவுக்கு பசும் போர்வையாக இக்காடுகளே எம்மை இரட்சிக்கின்றன என்பது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.
காடுகள் செழிப்பாக இருந்தால் தான் ஒரு நாடு செழிப்பாக இருக்கும். எனினும் இன்று காடுகள் அழிப்பு என்பது உலகம் முழுவதிலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.உலக வனத் துறை சட்டப்படி, ஒரு மரச் வெட்டப்பட்டால், 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி ஆனால், அதுஏட்டளவில் தொடர்வதாகவே தெரிகிறது. இக்கட்டுரையில் காடுகள் பற்றி நோக்கலாம். ஆனால் மனிதர்களில் சிலர் இதை புரிந்து கொள்ளாது காடுகளை அழித்த வண்ணமே உள்ளனர். இந்தக் கட்டுரையில் காடுகளின்
பயன்கள் பற்றி பார்க்கலாம்.
காடுகளின் முக்கியத்துவம்
காட்டு வளமே நாட்டுவளம். காடழிந்தால் நாடழியும் என்பது ஆன்றோர் வாக்கு பூமியின் நிலப் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு காடுகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும். காடுகள் வெறுமனே இடபரம்பலை மாத்திரம் கொண்டு காணப்படும் ஒரு வளம் அல்லாமல் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வாய்ப்புகளை வழங்கும் அதி உன்னத பசுமை நிறைந்த இயற்கை வளம் என்றால் அது மிகையாகாது.
மனிதன் உட்பட பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாக காடுகள் விளங்குகின்றன. காடுகள் இல்லையேல் நாடுகள் இல்லை. வனம் இன்றிப் போனால் மனித இனம் உள்பட அனைத்து உயிரினங்களும் அற்றுப் போகும். பல வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு காடுகள் முக்கியமானவையாகும். வனங்களில் பெய்யும் மழையே அனைத்து உயிரினங்களுக்கும் நீராதாரமாக விளங்குகின்றது. காடுகளும், மரங்களும் வளமாக இருந்தால் நமக்கான தண்ணீர்த் தேவை குறையாமல் இருக்கும்.
காடுகளின் பரம்பல்
உலகினுடைய காடுகளின் பரம்பலானது புவியியல் அமைவிட ரீதியாக அயனமழைக்காடுகள், ஊசியிலைகாடுகள், சவன்னாக்களும் புல்வெளிகளும் என வகைப்படுத்தபடுகிறது. இவற்றில் அயன மழைக்காடுகள் மத்தியகோட்டை அண்டி காணப்படும் காடுகளாகும். இவை என்றும் பசுமையான அதிக உயிர் பல்வகைமையை கொண்ட காடுகளாகும். இங்குள்ள தாவரங்கள் பெறுமதி மிக்கனவாக உள்ளதால் அதிகம் மனிதனால் அழிக்கப்பட்டும் வருகின்றன.
உதாரணமாக அமேசன் மழைக்காடுகள் கொங்கோ மழைக்காடுகள் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மழைக்காடுகள் தென்கிழக்காசியாவின் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் லாவோஸ் போன்றவற்றில் அயன மழைக்காடுகளை காணமுடியும்.மேலும் இடைவெப்பவலய நாடுகளான ஐரோப்பாவடஅமரிக்கா கனடா ஆகிய நாடுகளில் ஊசியிலை ஆப்பிரிக்கா ஆர்ஜென்ரினா ஆஸ்ரேலியா போன்றநாடுகளில்சவன்னா புல்வெளிகளும் பரம்பியுள்ளன.இக்காடுகள் வெவ்வேறான சிறப்பியல்புகளை கொண்டு காணப்படுகின்றன.
மரங்களின் பயன்கள்
🎤 சுவாசிக்க ஆக்சிஜனை கொடுக்கிறது.
🎤 பல உயிரினங்கள் வாழுமிடமாகவும் திகழ்கிறது.
🎤 மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும் ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை.
🎤 மரங்கள் நமக்கு நிழலைக் கொடுக்கின்றன. உண்ண உணவு, உடுத்த உடை, இப்படி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்திற்கும் தேவையானது மரமாகும்.
🎤 சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றது.
🎤 மழை பெறுவதற்கு மரம் இன்றியமையாததாகும்.
🎤 மரங்கள் காற்றை சுத்தப்படுத்துகின்றது.
காடுகளின் எண்ணற்ற பயன்களை பூமிக்கும் பூமியில் வாழும் மக்களுக்கும் வழங்கி ஒருகவசமாக தொழிற்படுகிறது காடுகளை பூமியின் நுரையீரல் என்று சிறப்பித்து கூறுவார்கள். நாம் சுவாசிக்க சுத்தமான காற்றையும் நாம் குடிக்க சுத்தமான நீரையும் நாம் உண்ண காய்கறிகள் தளபாடங்களையும் மருந்து மூலிகைகளையும் மனதை மகிழ்விக்கும் கிழங்குகள் உணவையும் நாம் வாழ தேவையான வீடுகளை உருவாக்க அழகான சூழலையும் இக்காடுகளே தருகின்றன.
காடழிப்பும் பூகோள வெப்பமயமாதலும்
நகரமயமாக்கல், வளர்ச்சிப் பணிகள், மனிதப் பேராசை உள்ளிட்ட காரணங்களால் தினமும் ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவுக்கு காடுகள்அழிக்கப்பட்டுவருகின்றன. நிலக்கரிஉள்ளிட்டகனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுதல், சுரங்கப்பணிகள், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமானநிலையங்களை அமைத்தல், ரயில் இரும்புப்பாதைகள் அமைத்தல், அணைகள்-பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல் சுற்றுலா விடுதிகள் வரைமுறையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. இன்று காடுகள் வேகமாக குடியிருப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன அபிவிருத்தி நகராக்கம் எனும் போர்வையில் மனிதன் காடுகளை அழித்து வருவதானது யானைதன் தலையில் மண்ணை அள்ளி
போடுவதற்கு ஒப்பானதாகும்.
காடுகளை அழிப்பதனால் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் காடழிப்பதனால் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் அதிகரிக்கும் இதனால் வளிமண்டல வெப்பநிலை உயர்வடையும். இதனால் நாம் வாழும் புவியின் வெப்பநிலை உயர்வடைவதனால் பூமியில் காலநிலை மாற்றம் பாலைவனமாதல் கடல்மட்டம் உயர்வடைதல் போன்ற பெரிய பிரச்சனைகள் தோன்றி வருகின்றமையால் மனித வாழ்க்கை சவால் மிக்கதாக அண்மைக்காலங்களில் மாறிவருவதைகண்கூடுகாணமுடிகிறது.
முடிவுரை
காடுகள் மிகவும் முக்கியமானவை அவை பாதுகாக்கப்பட வேண்டியவை இவற்றிலேயே மனித வாழ்க்கை தங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இன்று பல்வேறு நாடுகள் சூழல் ஆர்வம் கொண்ட நிறுவனங்கள் காடுகளை பாதுகாக்க முன்வருகின்றன. காடுகளை பாதுகாக்கும் முகமாக சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21 உலகளவில் ஐக்கியநாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இன்று காடுகள் இல்லையென்றால் ஏதும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. பெருமளவில் காடுகளை அழிப்பதால் நமது நாட்டின் இயற்கை வளம் அழிந்து வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். காடுகளை பாதுகாப்பது நமது தலையாய கடமை என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும். ஆகவே காடுகள் பாதுகாக்க படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து நாம் அனைவரும் இணைந்து காடுகளைப் பாதுகாப்போம். அடுத்த தலைமுறைக்கு வளங்களைக் காத்து வளமான வாழ்க்கை வாழ காடுகளை வாழ வைப்போம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்.ம.கார்த்திகா
உதவிப்பேராசிரியர்
தகவல் தொழில் நுட்பவியல் துறை,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
பசுமலை, மதுரை
சங்க இலக்கியங்களில் தெய்வ வழிபாடுகள்|முனைவர் க.லெனின்
ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்
மனிதனுக்கு நம்பிக்கையை உண்டாக்கிய கடவுளை வழிபாடுகள் நடத்தி வேண்டிக்கொண்டார்கள். அவை வழிபாடுகள், பூசைகள் என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடித்தமான முறையில் இறைவனுக்கு வழிபாடுகளை நடத்தினான். மனிதர்கள் நடத்திய வழிபாடுகள் இரண்டு விதமான வேற்றுமைகள் உள்ளடக்கியிருந்து வந்தன.
(1) இன்னவை வேண்டுமென இறைவனுக்கு வழிபாடுகள் நடத்துதல்
(2) இறைவனால் இன்னவையெல்லாம் கிடைத்தது என மகிழ்ச்சி பொங்க வழிபாடுகள் நடத்துதல்
ஆகிய இரண்டு வகைகளில் பெரும்பாலும் மனிதர்கள் தனக்கு என்ன வேண்டும் என வலியுறுத்தும் வழிபாடுகளே அதிகம் நடந்தேறியுள்ளன. கிடைக்கும்வரை இறைவனைப் பக்தி பரவசம் பொங்க பாடுகின்றவர்கள்; கேட்டவைகள் கிடைத்தவுடன் இறைவனை மறந்து தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதிலேயே மிகுந்த அக்கறைகாட்டத் தொடங்குகின்றனர். அப்படிப்பட்ட தெய்வ வழிபாட்டின் முறைமைகளைக் கூற விழைகிறது இவ்வாய்வுக்கட்டுரை.
வழிபாட்டின் நோக்கம்
பிரிந்து பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடவும், தனக்குள் ஏற்பட்ட நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தவும், உறவுகளோடு சேர்ந்து இறைவனை வணங்குதல் வழிபாட்டின் நோக்கமாகக் பார்க்கப்படுகிறது. எப்படிப்பட்ட மனிதனையும் கண்களை மூடி இறைவனைக் கையெடுத்து வணங்கப்படும்போது அவனின் ஆழ்மனது தீய எண்ணங்கள் விலகி நல்லெண்ணங்கள் தோன்ற வழி வகை செய்கிறது. வழிபாட்டின்போது பின்பற்றப்படும் கற்பூரதீ, மேளச்சத்தம், நறுமணம் ஆகியவை ஆழ்மனதை மேய்ந்து கொண்டிருக்கின்ற எண்ண அலைகளை ஒருநிலைப்படுத்தி நிற்கும்.
வழிபாட்டின் தோற்றமும் பின்னணியும்
இயற்கையை வழிபட்ட மனிதர்கள் முதலில் இயற்கையையே வழிபாடு செய்து வந்தனர். இயற்கை மூலமாக பெறப்பட்ட பயன்களை எண்ணி மகிழ்ச்சியும் அடைந்தனர். பின்னாளில் உருவ வழிபாடு வந்த பிறகு வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாற்றங்களையும் தமிழக மக்கள் பெரிதும் விரும்பி ஏற்றுக் கொண்டனர்.
எந்த ஒரு செயலுக்கும் தொடக்கம் என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டும். இறைவனிடம் வேண்டுதலும் வழிபாடுகள் நடத்துவதும் தமிழகத்தில் தொன்று தொட்டு நடந்து வந்துள்ளன. மனிதனுக்கு இறைவனிடமிருந்து எளிமையாகக் கிடைத்திருக்கும் வரை வழிபாடுகள் தோன்ற வாய்ப்பு இருந்திருக்காது. மனிதர்களிடத்தில் ஆசைகள் அதிகமானதால் மற்றவனைவிட எனக்கு இன்னும் அதிகம் வேண்டும் என்பதிலேயே வழிபாடுகள் தோன்றியிருக்கக் கூடும்.
திராவிடர்கள் ஆரியர்கள் என வழிபாடுகளைத் தங்களுக்குத் தெரிந்த வகையில் நடத்தி வந்திருக்கிறார்கள். அதிலும் திராவிடர்கள் கடுமையான முறையில் வழிபாடுகள் நடத்தி வந்திருக்கக் கூடும் என இலக்கியங்களும் (கண்ணப்ப நாயனார் புராணம், சிறுத்தொண்டர் நாயனார் புராணம்) வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கூறுவதைப் பார்க்க முடியும்.
வழிபாடுகள் நிகழ்த்த காரணம்
(i) வானம் பொய்த்து போதல்
(ii) உறவுகள் ஒன்று கூடி மகிழ்ச்சி பொங்க இருத்தல்
(iii) இறைவனை மகிழ்வித்தல்
(i) கூத்து கலைகள்
(ii) வேடிக்கைகள்
(iii) இறைவன் திருவீதி உலா
(iv) பக்தி பரவச நிலை
(iv) பிரச்சனைகளில் இருந்து விடுபட
(V) குடமுழுக்கு
(vi) பயத்தின் காரணமாக
மேற்கூறிய காரணங்களால் வழிபாடுகள் நிகழ்த்தப்பெறுகின்றன. வானம் பார்த்து ஏமாந்து போன விவசாயிகள் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்கின்றனர். உறவுகள் ஒன்று கூடி குலசாமி விழா எடுத்து வழிபடுகின்றனர். இறைவனை மகிழ்வித்து நாடும் நகரும் மக்களும் விலங்குகளும் பிற உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் இருக்கவும் நம்முடைய தமிழகக் கலைகளை வளர்க்கவும் செய்கின்றனர். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், கோயில் கட்டி குடமுழுக்கு நேரங்களிலும் இறைவனுக்காக வழிபாடு நடத்துகின்றனர். வழிபாடுகள் நன்றாக முடிந்தவுடன் தம்முடைய ஊரானது சீரும் சிறப்புமாக இருக்கின்றது என அக்கால மக்கள் நம்பினர். தோற்றத்தில் சக்தி மிகுந்த தெய்வங்களுக்கு (காளி) பயத்தின் காரணமாகவும் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன.
வழிபாட்டு முறைகள்
தமிழக மக்களிடையே பெருந்தெய்வ வழிபாடு சிறுதெய்வ வழிபாடு என இரண்டு வகையாகக் பிரித்துப் பார்க்கலாம். பெருந்தெய்வ வழிபாடுகளில் சூடம் ஏற்றுதல் தேவார திருவாசக பஜனை பாடுதல், இறைவனை வாய்விட்டு அழைத்தல், பூச்சூடல், அலங்கரித்தல் போன்ற முறைகளில் பின்பற்றப்படுகிறது. அந்தணர்கள் இக்கோயில்களில் வழிபாடு நடத்துகிறார்கள். சிறு தெய்வ வழிபாடுகளில் பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். வாயில் துணியால் கட்டிக்கொண்டு பூசை செய்யப்படுகின்றது. கிராம தெய்வங்களுக்கு பூச்சூடல், படையல், அலங்கரித்தல், மணியோசை, ரத்த காவு போன்ற முறைகளில் வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. மொட்டை அடித்தல், பலியிடல், காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல் (காது குத்துதல்), அங்கப்பிரதட்சணம் செய்தல் (கோவிலைச் சுற்றி உருண்டு வருதல்), மண் சாப்பாடு, தொட்டில் கட்டுதல், காப்பு கட்டுதல், விரதம் போன்றவைகள் நேர்த்திக்கடன்களாக தமிழக மக்கள் பின்பற்றுகின்றனர். வழிபாட்டு முறைகளில் பால்குறி வழிபாடு இருந்ததாக, “ஹரப்பா, மொகஞ்சதாரோ மக்கள் சிவலிங்க வழிபாடு செய்து வந்தனர். இவ்வழிபாட்டை பால்குறி வழிபாட்டு வடிவமாகக் கொள்கின்றனர்”1 என்று கே.கே.பிள்ளை கூறுகிறார்.
சங்க இலக்கியத்திலும் வழிபாட்டு முறைகள் இருந்து வந்துள்ளன. அம்மக்கள் அதிகம் இயற்கை வழிபாட்டையே முன்னிறுத்தி வணங்கி வந்துள்ளனர். அவ்வகையில் சங்க கால வழிபாடுகளை பற்றி ஆராய்வோம்.
உழவர்கள் வழிபாடு
உழவர்கள் நடத்தும் வழிபாடுகள் ஊர்கள் தோறும் வேலனால் கூட்டியும் மெழுகியும் அழகுற அமைக்கப்பட்டு இருக்கும். அவ்விடமானது செந்நெல்லின் வெள்ளியப் பொரியைச் சிதறினார் போன்று காட்சியளிக்கும். இத்தகைய வளம் பொருந்திய பழமையான ஊரில் இறைவனுக்கு வழிபாடு நடத்தினார்கள். குறுந்தொகையில்,
“தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பௌவம் அணுங்குக” (குறுந்.164 3-4)
அறிவு மிகுந்தவர்களும் உழவினைத் தொழிலாகக் கொண்டவர்களும் உறவுகளில் குறைகள் காணாதவர்கள் ஆகிய முதிர்ந்த வேளிர் குளத்திற்கு உரியவர்கள். இறைவனை பூக்களைத் தூவி வழிபட்டார்கள் என்கிறது குறுந்தொகை பாடல். உழவர்கள் தன்னுடைய நிலத்தில் விளைந்ததை முதலில் இறைவனுக்குப் படைத்த பின்புதான் எடுத்துக் கொண்டார்கள். குறிஞ்சி நிலத்துக்குரிய தலைவன் தன்னுடைய தோட்டத்தில் தினை விதித்துள்ளான். அத்தினையும் நன்றாகக் குறுத்து தோன்ற விளைந்து நின்றது. சுற்றத்தாருடன் வயலுக்குச் சென்று தினைக்கதிரை அறுத்து இறைவனுக்கு பலியிட வேண்டும் என்று நினைத்தான்.
“கடி உண் கடவுட்கு இட்ட செழுங்குரல்
அறியாது உண்ட மஞ்சை, ஆடுமகள்” (குறுந்.105 2-3)
ஆனால், தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறிய தினையின் முற்றிய பாலுடன் சேர்த்த செழுமையைக் கண்ட மயிலானது இத்தினை இறைவனுக்கானது என்று அறியாமல் கொத்தித் தின்றதாம். குறிஞ்சி நிலத்தலைவனும் முருகப்பெருமானே உண்டதாக மகிழ்ந்து போனான் என்கிறார் நக்கீரர். மலைகளை வேலியாக உடைய அழகிய கிராமம். திருமண நாளை அறிவிப்பது போன்ற வேங்கை மரங்கள் வீடுகள் தோறும் பூத்து நின்றன. ஒவ்வொரு பொன் நிறப்பூக்கள் உதிர்ந்து விழுந்து பரவி அழகிய முற்றத்தினை அழகு செய்யும். தம்முடைய இல்லத்தை காவல் காத்தும் தீங்கு நேராவண்ணம் பாதுகாத்தும் இருக்கின்ற கடவுளுக்கு எம் அன்னையானவள் நாள்தோறும் செய்யும் பூசைகள் பூக்கள் பலவுடன் சேர்த்து வழிபாடு நடத்துகிறார்கள்.
“ஆர்கலி விழவுக் களம்கடுப்ப, நாளும்,
விரவுப்பூம் பலியொடு விரைஇ, அன்னை” (அகம்.232 11-12)
குளிர்ச்சி பொருந்திய துறையில் உள்ள தெய்வத்தை தலைவி தன் தோழிகளுடன் சேர்ந்து தொழுது வழிபட்டாள் என்கிறது அகநானூறு. சங்க காலத்தில் பூக்களை வைத்து வழிபாடுகள் நிகழ்த்தி வந்துள்ளதை அறிய முடிகிறது. கயல்மீன் போன்ற அழகிய மையுண்ட கண்களை உடையவர்கள். தங்களுடைய காதுகளில் கனத்த குழை அணிந்தவர்களும் ஆகிய பெண்கள் மாலைப் பொழுதில் இறைவனை வழிபட தயாராகின்றனர். தங்களுடைய வீட்டில் இருக்கும் வழிபாடு பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். குறுந்தொகையில்,
“கயல் ஏர் உண்கண் கனங்குழை மகளிர்
கையுறை ஆக நெய்பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை” (குறுந்.398 3-5)
இந்த உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வணங்குகின்ற ஒளிப் பொருளாகிய தெய்வத்திற்கு நல்ல பசுவின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யினால் விளக்கு ஏற்றப்படும். அப்படிப்பட்ட இனிய மாலைப் பொழுதாக விளங்குகிறது என்கிறார் குறுந்தொகை ஆசிரியர் பெருங்கடுங்கோ,
“அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு” (நற்.9 1-2)
இவ்வுலகத்தில் மனிதனாகத் தோன்றிய அனைவரும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார். நீண்ட காலம் வாழ வேண்டுமானால் மனிதன் நோய் நொடியின்றி வாழ வேண்டும். அவ்வாறாக மனிதனுடைய மனதில் ஏற்படும் தீய குணங்களாகப் பொய், கோபம், காமம், குரோதம் போன்றவற்றை அறவே ஒழித்து வாழ முற்படவேண்டும். அப்படி வாழ வேண்டும் என்று நினைக்கும் மக்கள் வழிபடுகின்ற தெய்வத்திடம் நீண்ட ஆயுளை தந்து அருளுக என வேண்டிக் கொள்வார்களாம் என்கிறார்.
உழவர்களின் வழிபாட்டு மரபுகள்
உழவர்கள் தங்களுக்கென்று வழிபாட்டு முறையினை அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்தனர். அவை நம் பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் பொருந்தி நிற்பனவே ஆகும். குறுந்தொகையில்,
“மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல்ஆற்றுக் கவலைப் பல்இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தி.” (குறுந்.263 1-4)
ஆற்றின் இளம் குட்டி அறுத்து இரத்தத்தை எடுப்பார்கள். தினைச்சோற்றோடு சூட்டோடு இருக்கும் இரத்தத்தைச் சேர்த்து இறைவனுக்கு பலியாகக் கொடுப்பார்கள். வழிபாடு முடிந்தவுடன் அந்த இரத்தச்சோற்றைக் குழந்தைப்பேறு இல்லாதவர்களிடம் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. வழிபாட்டின் வழியாகக் கொடுக்கப்படும் இரத்தச்சோற்றை உண்ணும் பெண்களுக்கு விரைவாக குழந்தைப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கையும் நம் மக்களிடையே இருந்து வருகின்றது. மேலும், வழிபாட்டின்போது இசைக்கருவிகள் முழங்கியும் விண்ணை பிளக்குமாறும் வாசிக்கப்படுகின்றன. ஆனால் இவ்வழிபாடு ஊருக்குப் புறத்தே நிகழும் என்கிறது பண்டைய இலக்கியங்கள். ஊருக்கு வெளியே உழவு வேலை செய்த காட்டின் ஒரு பகுதியிலேயே பெரும்பாலும் நடக்கின்றது. இதனாலேயே இன்றளவும் குறிப்பிட்ட வயல்வெளிகளில் ஏதாவது ஒரு கோயில் இருப்பதைக் காண முடியும்.
மழை வழிபாடு
‘நீரின்றி அமையாது உலகு‘ என்பார் வள்ளுவர். வானம் பொய்த்து விட்டால் நிலம் வறண்டு போகும். உழவர்கள் அழிந்து போவார்கள். மக்கள் பசி பட்டினி என்று செத்து மடிவார்கள். மழைநீர் உயிர் நீர். அக்காலகட்டத்தில் மக்கள் மழையை வணங்கியுள்ளனர். மழை கடவுளான வருண பகவானுக்கு விளக்கேற்றி மலர்களைத் தூவி போற்றியுள்ளனர்.
“அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்
கடவுள் ஓங்கு வரை பேன்மார்” (நற்.165 3-4)
எனக் குறிஞ்சிநிலத்துக் கானவன் கூறுவதாக இவ்வரிகள் அமைந்துள்ளது. தலைவிக்கும் தனக்கும் திருமணம் விரைவில் நடக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். எங்களுடைய மலையானது தற்போது மழை இல்லாமல் காய்ந்து போய் உள்ளது. ஆனால் எங்களுடைய மலை தெய்வத்தின் அருளால் சூழ்ந்தது. அதனால் அத்தெய்வத்தின் கோபம் தணியுமாறு எங்கள் சுற்றத்தோடு விரும்பி வந்து இம்மலை தெய்வத்தை வணங்கினோம் என்றால் மழையானது கொட்டும். அவ்வாறாக மழை வருமானால் எங்களுடைய மலையானது குளிர்ச்சிப் பொருந்திய வளம் உடையதாக மாறும் என்கிறான். மழைக்காக வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளன.
“மலை வான் கொள்க! என உயர் பலி தூஉய்
மாரி ஆன்று, மழை மேற்கு உயர்க! எனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்,” (புறம்.143 1-3)
தெய்வத்தை அன்றாடம் வணங்கும் குறமக்கள். அவர்கள் மழையற்றுக் காலத்து மழையைப் பெய்ய வேண்டி தங்களின் மலைகளில் மிகுந்த பலியைத் தூவி வழிபாடு நிகழ்த்துகின்றனர். இங்கு பலி என்பது மஞ்சளுடன் பூக்களை அரிசியுடன் சேர்த்து வணங்குதல். இவ்வழிபாட்டில் முடிவாகக் குறவர்கள் வாழும் மலை முழுவதும் கடும் மழை பெய்ததாம். அளவுக்கு அதிகமாக மழை பெய்து அதனால் மழை வேண்டாம் என்று மீண்டும் தெய்வத்திற்கு வழிபாடு செய்கின்றனர். அதன் பொருட்டு மழையானது அவ்விடத்தில் நின்று வேறு இடத்தில் மழை பெய்தது என்கிறார் ஆசிரியர்.
இதன் மூலம் மழைக்காக மக்கள் வேண்டி நின்றலும் மழை அதிகம் பெய்து விட்டால் மழை நிற்கும் படியும் மக்கள் தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளனர் என்பது புலனாகிறது.
“மாரி வாய்க்க! வளம் நனிசிறக்க!
என வேட்டோளே, யாயே யாமே” (ஐங்.10 2-3)
ஒவ்வொரு காலமும் மழை நீரானது பொய்க்காமல் பெய்ய வேண்டும். இந்த உலகத்தின் நன்மை ஒன்றையே கருதியும் உலக வாழ்வுக்கு இன்றியமையாத மழை வளத்தையும் அதன்மூலம் உண்டாகும் செல்வச் சிறப்பையும் எப்போதும் மக்கள் விரும்பி நிற்பார்கள். மலைகளின் மீது விதைத்து வளர்ந்த துணை பயிருக்கு மழை வேண்டி குறமாந்தர்கள் ஆரவாரம் செய்தனர் ஆராவாரம் செய்தால் மேகம் மழை பொழியும் என்பது பழங்கால நம்பிக்கையாகும்.
நெல் வழிபாடு
அந்தக் காலத்தில் மக்கள் உணவாக உட்கொள்ளும் அரிசி நெல்லினை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். யாருக்கேனும் தானம் தருவதிலும் நெல்லினியே முதலிடம் பெற்றது எனலாம். இறைவன் வழிபாட்டின் போது நெல்லினை தூவி வழிபாடு நிகழ்வினை நிகழ்த்தியுள்ளனர். நெல் வயல்களில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்ற பழக்கமும் இருந்து வந்துள்ளது. ஏனெனில் உண்ணும் நெல்லினைக் கடவுளுக்குச் சமமாக வைத்து வணங்கி வந்துள்ளனர் சங்ககால மக்கள்.
“அவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்த்திரி கொளிஇ,
நெல்லும் மலரும் தூஉம் கை தொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர” (நெடுநல் 41 – 44)
மகளிர் வெண்ணிறச் சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள் அணிந்த முன் கையை உடையவர் ஆவார். முத்துப்போன்ற பல்லினை உடையவர். மடமை குணத்தைக் கொண்டவர்கள். இம்மகளிர்கள் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லையின் மலர்களை அழகிய பூந்தட்டுகளில் நிரப்பி வைத்திருப்பர். அப்பூக்கள் மலர்ந்து வாசம் வருவதைக் கண்டு மாலைநேரம் வந்திருப்பதை உணர்வர். சாயங்கால நேரத்தில் இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில் எண்ணெய் தோய்த்த திரியை கொளுத்துவர். நெல்லையும் மலரையும் தூவி கைக்கூப்பி வீட்டு தெய்வத்தை வழிபட்டார்கள் என்கிறார் நக்கீரர்.
“நல்நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை
செம் முது பெண்டிரோடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும் ஆயின்” (நற்.288 5-7)
தலைவன் பொருள்மேல் சென்றுள்ளான். தலைவிக்குப் பசலை நோய்ப் படர்ந்திருந்தது. அப்போது அந்தப் பக்கத்தில் ஒரு முதுமை மிக்க கட்டுவிச்சி என்கிற குறி சொல்பவள் செல்கிறாள். தலைவியானவள் அவளை அழைத்து தலைவனின் வரவை பற்றி குறிக்கேட்கிறாள். தன் வீட்டிற்கு முன்னால் அப்பொழுதுதான் களத்தில் இருந்து அறுத்து வரப்பட்ட நெல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தெய்வமாக மதிக்கும் நெல் கட்டுக்கு முன்னால் வைத்து தலைவி குறிக் கேட்கிறாள். இவ்விடத்தில் நெல்லினைக் கடவுளாக வைத்து தலைவி பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்.80 6-7)
அஞ்சத்தக்க குகையும் குரலெடுத்து அலறும் இரவுப்பொழுது. தலைவன் இல்லாமல் வருந்தும் தலைவி மாறுகண் துயிலாமல் தலைவனை நினைத்து வருந்துகிறாள். அப்பொழுது தலைவனின் வரவைக் காண நெல்லும் நீரும் தூவி விருச்சி கேட்கும் முதுநிலை பெண்டிர்கள் இன்சொற்களானது தலைவியின் துயரத்தைப் போக்கும் என்கிறது புறநானூறு.
“நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்.335 12)
தம்மோடு பொருந்தாத பகைவரைப் போர்முனையில் எதிர்நின்று தடுத்து நிறுத்தி அவர்களுடைய ஒளியுடைய ஏந்திய கொம்புகள் உடைய யானைகளைக் கொன்று இறந்து பட்டவனுக்கு வைக்கப்பட்டுள்ள நடுகல்லில் தெய்வமாய் நின்றவனை நெல்லை தூவி வணங்கி வழிபாடு நிகழ்த்துகின்றனர். இவ்விரண்டைத் தவிர வேற கடவுள்கள் இவ்வூரில் இல்லை என்கிறார்கள். நெல்லினைத் தூவி வழிபடும் நெல்லினை தானம் கொடுத்தும் நெல்லினை முன்னிறுத்தி கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர் நம் முன்னோர்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
தை வழிபாடு
உழவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாதம் தை மாதம் ஆகும். அப்பொழுதுதான் நெல்லினை அறுவடை செய்வார்கள். இந்த வருடத்தில் எம்மண்ணில் நிறைய அறுவடையைக் கொடுத்ததாகக் கடவுளுக்குப் பூஜை செய்து வணங்குவார்கள்.
“தைத் திங்கள் தண் தயம் படியும்” (நற்.80 7)
தகுந்த நாணம் கொண்டவளான தலைவி தைத்திங்களில் குளிர்ந்த நீரிலாடி நோன்பு மேற்கொண்டாள். நோன்பின் பயனாகத் தலைவன் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டாள். மேலும் சூளோடு வாடிய நெற்பயிருக்கு நடு இரவில் மழை பெய்தது. அதனால் தை நோன்பு இருந்தவனுக்குப் பின்பு உண்ணுதலை போல் இருந்தது இம்மழை என்கிறார் புறநானூற்று ஆசிரியர்.
“தையல் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?” (கலி.59 13)
இப்பாடலில் தலைவியின் அரிய பண்புகள் சுட்டப்பட்டுள்ளன. நின்னை ஒத்த மகளிர் சூழ வகைவகையாக அணி புனைந்து தைத்திங்களில் நீராடிய தவத்தின் பயனெல்லாம் தலைவி பெறுகின்றாள் என்கிறார் ஆசிரியர். “தை நீராடுதல் இளம் பெண்களால் நிகழ்த்தப் பெறும். சங்க இலக்கியங்களில் சுட்டப் பெறும் நிகழ்வு. பண்டையத் தமிழர் தம் பண்பாட்டு தொடர்புடையது. மணமாகாத பெண்கள் மார்கழி முழுமதி நாள் தொடங்கி தை முழுமதி நாள்வரை நாட்காலையில் நீராடி நோன்பிருந்து வழிபடுவர். திருப்பாவை, திருவெம்பாவை இலக்கியங்கள் தோன்றுவதற்கும் தைநீராடல் அடிப்படையாக அமைந்தது எனலாம். தைநீராடும் மகளிர் பிறர்மனைக்கு சென்று பாடி ஐயம் ஏற்று கிடைத்தவற்றைப் பிறருக்கு கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது சிறந்ததொன்றாகக் கருதப்பட்டது. ‘ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்டி’ என்னும் ஆண்டாள் பாசுரச் செயலுக்கு முன்னோடி கலித்தொகை தலைவியின் இச்செயல்”2 என்கிறார் முனைவர் ஆ விசுவநாதன் அவர்கள். இவ்வாறாக நோன்பு சங்க காலத்திலிருந்து இன்றுவரை நம் பெண்களிடையே இருந்து வருவதைக் காணமுடிகிறது.
வழிபாட்டு முறையில் பலியீடு
சிறுதெய்வ வழிபாட்டு முறைகளில் உயிர்ப்பலி கொடுத்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக ஆடு, கோழி, பன்றி போன்ற விலங்குகளைப் பலி கொடுத்துக் கடவுளை வணங்கியுள்ளனர். ஆரம்பத்தில் பூக்கள், நெல் போன்றவையே இறைவனுக்கு பலியிடப்படும் உணவாக அமைந்தது. பிற்காலத்தில் சமூக மக்களிடம் ஏற்பட்ட மாறுதல்களில் விலங்குகளைப் பலி கொடுப்பது வழிபாட்டு மரபுகளில் வைத்துக் கொண்டனர்.
இந்த வழக்கமானது சிறு தொழில்கள் செய்து வருபவர்களிடமிருந்தும் சிறுதெய்வங்களை வணங்கி வருபவர்களிடமிருந்தும் வந்துள்ளன என்பதாகக் கொள்ளலாம். ஏனெனில் ஒரு கிணறு வெட்டும் தொழிலாளி கிணற்றை வெட்டும் போது ஏதோ ஒரு விபத்தின் காரணமாக இரத்தக் காயம் ஏற்பட்டு விடுகிறது. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதைப்போல கருவிகள் மூலம் செய்யப்படும் அனைத்து வாழ்வாதார தொழில்களுக்கும் பொருந்தும். இத்தகைய இழப்புகளைத் தவிர்ப்பதற்காக வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்னரே விலங்குகளை கொற்றவை ஆகிய சிறு தெய்வத்திற்கு இரத்த பலி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு செய்தால் வேலை செய்யும் இடத்தில் பெரிய இழப்பு ஒன்றும் வராது என நம்பிக்கை வைத்திருந்தனர். இதன் பொருட்டே கடவுள்களுக்கு வழிபாட்டின்போது பலிகொடுப்பது வந்திருக்கலாம் என அறிய முடிகிறது.
காக்கைக்குப் பலி உணவு
காக்கைகள் நம்முடைய இறந்த முன்னோர்கள் என்று இன்றளவும் நம் மக்களால் நம்பப்படுகிறது. அம்மாவாசை அன்று விரதமிருந்து காக்கைக்கு பலியாக இடப்படும் உணவை வைத்து காக்கை உண்டவுடன் நாம் சாப்பிடும் பழக்கமும் இன்றளவும் நம்மிடையே உள்ளது.
“விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே” (குறுந்.210 6)
நள்ளி என்பவனுடைய தொண்டி என்னும் நகரில் வாழும் தலைவிக்கு விருந்தினர் வரவைக் காக்கையானது கரைந்து சொல்லியது. அதனால் விண்ணில் அரிசியால் ஆக்கிய சோறானது வேறு களங்களில் நிரம்பி இருந்தாலும் விருந்தினர் வரவை சொல்லிய காக்கைக்கு இடும் பலி உணவானது சிறிய அளவிலேயே உடையது ஆகும் என்கிறார் ஆசிரியர்.
மறுஇல் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபின் நின் இளையோடு ஆரப்” (ஐங்.391 1-2)
வேற்று நிறக்கலப்பு சிறிதும் இல்லாத தூய கருநிற சிறகுகள் கொண்ட காக்கை. உறவினர்கள் வருகையைக் கரைந்து உணர்த்தியது. தலைவி அக்காக்கைக்கு பலி உணவாக நல்ல நிணமும் ஊனும் கலந்து உயர்ந்த உணவை பொற்கலத்தில் வைத்துக் கொடத்தாளாம் என்கிறது ஐங்குறுநூறு.
“மாசு இல் மரத்த பலி உண் காக்கை” (நற்.281 1)
குற்றமில்லாத மரத்தில் இருந்து கொண்டு மக்கள் கொடுக்கின்ற பலி உணவுக்காக காத்திருந்தது காக்கை என்கிறார்.
“செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை கவவு முனையின்” (பொருந.183 – 184)
மருதநில மரச்சோலைகள் நிரம்பியிருக்கும் ஊரில் வாழும் குடிமக்கள் காக்கைகளுக்கு நாள் தவறாமல் பலி உணவினை வழங்குவார்களாம். அதுவும் உரத்தோடு சேர்ந்த சிவந்த சோற்றுப் பலியைக் காக்கைக்குப் படைப்பார்கள் என்கிறது பொருநராற்றுப்படை. நெடிய விழுதுகள் இறங்கிய கடவுள் உறையும் ஆலமரம். அங்கு கடவுளுக்கு படைத்து வைத்த பலி உணவை காக்கைகள் உண்ணுமாம் என்கிறது நற்றிணை (343:4 – 5) பாடல்.
பலியிடுதல்
பல பிளவுகளையும் குகைகளையும் உடைய மழை பக்கத்திலுள்ள வெற்றி பொருந்திய கொற்றவைத் தெய்வத்திற்கு மக்கள் பலி கடன் செய்ய நேர்ந்து கொள்கிறார்கள். இதனால் நோன்பின் காரணமாகக் காப்பு நாண் அணிதல், நிமித்தம் பார்த்தல், விரிச்சி கேட்டல் போன்றவைகள் செய்கின்றனர்.
கரிய கண்ணையுடைய கருணைக்கிழங்கின் பொரியலோடு செந்நெல்லாற் சமைத்த வெண்மையான சோற்றுப் பலியைக் தெய்வத்திற்கு இடுவார்கள். அவ்வாறு இடும் இல்லங்கள் பல உள்ள பழமைமிக்க ஊர் என நற்றிணை (367:3-4) கூறுகிறது. பலியிடும் வழக்கம் ஆரம்பத்தில் சோற்றைத்தான் பலியாகக் கொண்டனர். பிற்பாடுதான் விலங்குகளைப் பலியாகக் கொடுக்கும் பழக்கம் வந்திருக்கக்கூடும்.
“மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை” (நற்.73 2- 4)
கோடைக்காலத்தில் வலிய வாயை உடைய வளமை மிக்க பழமையான ஊரிடத்தே தெய்வத்திற்கு வழிபாட்டோடு இடப்படும் ஊன் மிக்க பலிச் சோற்றினை உண்பதற்காகத் தான்வாழும் பாழான மன்றத்தை இடித்துக் கொண்டு எழும் என்கிறார் ஆசிரியர்.
“தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்புஆ எறிந்து, குருதி தூஉய்” ( அகம்.309 4-5)
பால் தரும் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வந்த வெட்சி மறவர்கள் தம்மோடு போரிட்ட கரந்தை மறவர்களைக் கொன்றனர். வலிய காட்டு வழியில் நெடுந்தொலைவு விரட்டி வந்தனர். அவ்வூரில் தெய்வம் வாழும் பருத்த அடி மரத்தை கொண்ட வேப்பமரத்தை கண்டனர். கவர்ந்து வரப்பட்ட நல்ல பசுக்களில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொன்று அதன் குருதியைத் தெய்வம் உறையும் மரத்தின் மேல் தெளித்து வழிபட்டனர். பலியிட்டுக் கொடுத்த புலாலைச் சமைத்து உண்டார்கள். தனக்கு எவ்விதமும் தீங்கு வரக்கூடாது என்று பலியிட்டு வேண்டிக் கொள்கின்றனர். பலிக்காகத் தாயின் முலைப்பால் கிடைக்கப் பெறாது மெல்லிய தளிராகிய தளை உணவை உண்ணக் கூடிய மிக்க இளமையுடைய ஆட்டுக்குட்டியைக் கடவுளுக்குப் பலியிட்டு வந்துள்ளனர் என அகநானூறு (292: 3 – 4) கூறுகின்றது.
தெய்வ வழிபாட்டின்போது விலங்குகளைப் பலி கொடுப்பது மட்டுமின்றி கள்ளினையும் உணவாகப் பலி கொடுத்துள்ளனர். நாட்பட்டு முதிர்ந்த கடிய வேகங்கொண்ட பாம்பினது சீற்றத்தை ஒத்த வெறியுடைய அந்தக் கள்ளினை முதலில் ஓங்கி உயர்ந்த உச்சியை உடைய தெய்வம் வாழும் மலைக்கு படைத்துவிட்டுப் பிறகு அம்மக்கள் அருந்தினார்களாம் என்று அகநானூறு (348:3 – 8) கூறுகிறது. சுவரில் ஓவியமாக வரையப்பட்ட அழகிய கடவுள் அவ்விடம் விட்டு நீங்கி சென்றதால் இடமானது பொலிவிழந்து காணப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு இடைவிடாது நடத்தப்பெறும் பலியும் மறக்கப்பட்டது. வருடந்தோறும் இறைவனுக்கு கொடுக்கும் பலியானது மக்களின் வறுமையால் நிறுத்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
“கள்ளும் கண்ணியும் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,” (அகம்.156 13 – 15)
நீர் நிரம்பியுள்ள குளத்தின் மேல் உறைந்திருக்கும் கடவுளுக்குக் கள்ளையும் மாலையும் சாத்தப்படுகிறது. பலியாக நிமிர்ந்து நேர்க்கொண்ட கொம்பினையும் தொங்கும் காதுகளையுடைய வெள்ளாட்டுக் கிடாயினையும் கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட செய்யுளில் கையுறை என்பது கடவுளிடம் தான்வேண்டியது நடந்தேறினால் அம்மக்கள் கடவுளுக்குக் காணிக்கையாக எதைக்கொடுக்க நினைத்தார்களோ அவற்றை கொடுத்துத் தன்னுடைய கணக்கைத் தீர்த்துக் கொள்கின்றனர். இவ்வகையான பழக்கவழக்கங்கள் இன்றளவும் நம் சமூக மக்களிடையே இருந்து வருவதைக் காணமுடியும்.
முருகன் வழிபாடு
குறிஞ்சிக்கடவுள் முருகன். தமிழ் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். தமிழகத்தில் குறவர் இனத்தில் வள்ளியை காதல் திருமணம் செய்ததால் முருகக்கடவுள் மருமகன் ஆனார். முருகன் என்றால் அழகு, இளமை என்று பலவாறு பொருள் கொள்ளலாம். குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தாங்கள் நுகர்ந்த இன்பத்தை இறைவனாக எண்ணி வழிப்பட்டார்கள். அவ்வாறு வழிப்பட்ட இறைவனை முருகு என்று அழைத்து வந்தார்கள். குறுந்தொகையில்,
“சிறு மறி கொன்று, இவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய” (குறும்.362 4-5)
பலவாய செய்த பொருட்களில் தினை அரிசி சோற்றுப்பலியுடன் ஆட்டின் சிறிய குட்டியைக் கொன்று அதனுடைய இரத்தத்தைத் தலைவனுடைய நெற்றியில் பூசியும் முருக கடவுளான உனக்கு வழிபாடு செய்கின்றோம். இப்பலியினை ஏற்றுக்கொள்க என்கிறார் ஆசிரியர். சங்க காலத்தில் பெண்களுக்கு வெறியாட்டு நிகழ்த்தும் காலத்தில் இவ்வகையான வழிபாடுகள் நிகழ்த்தப்படுவது உண்டு. அதிலும் முருகப்பெருமானை முன்னிறுத்தியே இவ்வகையான வழிபாடுகள் நடந்தேறியுள்ளன. குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவன் தன்னுடைய குடி தெய்வமாகிய முருகனை வழிபட்டு வழங்குகின்றான் என்ற செய்தியை ஐங்குறுநூறு (257) பாடல் கூறுகிறது. மேலும் சிறுகுடி என்ற சிற்றூரில் முருகவேளுடன் கூடிச் சென்ற வள்ளி நாயகியும் சேர்ந்து காட்சியளிக்கும் செய்தியை நற்றிணை (82) கூறுகிறது.
“அணங்கு என உணரக் கூறி, வேலன்
இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே” (நற்.322 10-12)
தலைவிக்குப் பசலை நோய் படர்ந்து விட்டது. இந்நோய்க்கான காரணம் முருகவேள்தான் என்று நினைக்கிறாள் தாய். அதனால் துடி முதலிய இனிய இசைக்கருவிகள் ஒலிக்க பாடியும் நறுமணமுள்ள பூக்களைத் தூவி துதித்தும் இந்த ஆட்டுப் பலியை ஏற்றுக்கொள்க எனத் தலைவியின் தாய் வழிபாடு நிகழ்த்துகிறாள். வீட்டின் முன்னால் அழகிய கண்களை உடைய மணலைப் பரப்பியும், இல்லத்தைச் செம்மண்ணால் பூசியும், பெண் எருமையின் கொம்பினைத் தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வந்துள்ளனர் (கலி.114:13 – 15).
வழிபாடுகள் ஒவ்வாரு மனிதனையும் நம்பிக்கை சார்ந்த வாழ்வினை வாழ வைத்ததோடு தம்முடைய முன்னொர்களின் வரலாறுகளையும் குடிப்பெருமைகளையும் காக்க உதவியிருக்கிறது.
சான்றெண் விளக்கம்
1. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், ப.171
2.முனைவர் அ.விசுவநாதன், கலித்தொகை மூலமும் உரையும், NCBH, ப.250
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.
தேன்கூடு | சிறுகதை |பழ.பாலசுந்தரம்
அலுவலகத்தில் எனக்கான கண்ணாடித் தடுப்பறையில் எனக்கெதிரே மூன்று இருக்கைகள் மட்டுமே உண்டு. ஒரு சமயத்தில் ஒருவரோ அல்லது இருவரோதான் வருவார்கள். அந்த சனிக்கிழமை மாலை வருகையாளர்கள் ஐந்து பேர். கையில்லாத நாற்காலிகள் இரண்டை என் உதவியாளன் விமல் போட்டுவிட்டுப் போனான். முன் வரிசையில் என்றும், அமர்ந்த ஒருவர் தன் பெயர் மதிவாணன் இரண்டு மாதங்களுக்கு முன் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். மற்றவர்களையும் எனக்கு அறிமுகம் செய்தார். அவருடைய சொந்த ஊர் செங்கம் என்பது தெரிந்தது.
ஒசூரிலிருந்து மத்திகிரி செல்லும் வழியில் நவதி உள்ளது. அங்கே அறுபத்தி இரண்டு மனைகளோடு வள்ளல் ஓரி நகர் வளர்ந்து வருவதாக அவர்கள் மூலம் அறிந்தேன். நாற்பத்தி மூன்று மனைகள் விற்கப்பட்டு, அவற்றுள் முப்பத்தோரு மனைகளில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டதாகவும் தெரி வித்தனர். நகராட்சியை அணுக, சங்கம் ஒன்றைப் பதிவு செய்து தரவேண்டுமென்பதே அவர்களின் வேண்டுகோள். சாலை வசதி, குடிநீர் இணைப்பு போன்ற பல அடிப்படைத் தேவைகளுக்கும் பதிவு பெற்ற சங்கம் மூலமே நடவடிக்கை எடுக்க முடியும். எங்கள் அலுவலகம் மூலமாக ஏராளமான பதிவுகள் நடந்திருக்கின்றன. வருமான வரி தொடர்பான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்தாலும், இது போன்ற பதிவு வேலைகளையும் தவிர்க்க முடியாது. கிருஷ்ணகிரியில் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் இயங்குவதால், பயணங்களையும் தவிர்க்க முடியாது.
அவர்களிடம் ஒரு பட்டியல் இருந்தது. பெயர், வீட்டு மனை எண் மட்டுமே அதிலிருந்தன. பதிவுக்கான ஆவணங்கள் என்னென்ன தேவையென நான் ஒரு பட்டியலைத் தந்தேன். (வாயால் சொல்லி மாளவில்லை, அச்சிட்ட தாள்தான் சுலபம்) முன் வரிசையிலிருந்த மூவரும் அதைப் படித்துவிட்டு மௌனம் காத்தனர். மதிவாணன் லேசாக செருமியபடி,
“நாளக்கி சண்டே… மேக்சிமம் கலெக்ட் பண்றோம்… கொஞ்சம் பேரு ஊருக்கும் போயிருக்காங்க.. அவங்ககிட்ட அடுத்த வாரந்தான் வாங்க முடியும் சார்… புதன் அல்லது வியாழன் கொண்டு வந்து தந்தர்றோம்..” என்றார்.
நான் ஆமோதித்தேன். மொத்தம் எவ்வளவு செலவாகுமென ஒருவர் கேட்க தொகையைச் சொன்னேன். உடனே ஆட்சேபித்தார். மிக அதிகமென்றும், அதில் பாதி செலவில் தனக்குத் தெரிந்தவர் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பு ஒரு சங்கத்தைப் பதிவு செய்ததாகவும் வேகமாகச் சொன்னார். நானும் பதில் தந்தேன்.
“ரெண்டு வருஷத்துக்கு முந்தி அவ்வளவுதான். ஃபீஸ் ஐநூத்தி ஐம்பத்தஞ்சு ரூபாதான் பத்து வருஷத்துக்கு முந்தி… அப்புறம் அது ரெண்டாயிரத்து ஐநூத்து ஐம்பதாகி, இப் ஐயாயிரத்து நூறு ரூபா ஆயிடுச்சுங்க… அதனாலதான் நாங்களும் அதிகம் வாங்க வேண்டியிருக்கு…”
அவர்களுக்குள்ளாக சளசளவென உரையாடி கொண்டிருந்தனர். நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்தபோதே எதிரே இருந்தவர்கள் விவாதித்து முடித்திருந்தனர். செயலாளர் பதவிக்கு தொகையை எல்லோரும் ஒப்புக் கொள்வதாகவும், அடுத்த தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சம்பத், நான் சொன்ன கட்டணத் வாரம் ஆவணங்களோடு வருவதாகவும் சொல்லி எழ, மீதி நால்வரும் எழுந்து கொண்டனர். அனைவரும் அகன்றதும், சோர்வாய் உணர்ந்தேன். தேநீர் மூலம் புத்துணர்வு பெற வெளியே வந்தேன்.
அடுத்த புதனன்று மதிவாணனும், தனசேகரும் வந்தனர். சேகரித்திருந்த ஆதார் அட்டை நகல்களையும், கேட்டிருந்த விபரங்களையும் சமர்ப்பித்தனர். நிர்வாகிகள் பட்டியலை மீண்டும் சரிபார்த்துத் தரச்சொன்னேன். ஒரு மாற்றமுமில்லை என்றார்கள். உபவிதிகளையும், படிவங்களையும் அடுத்த நாள் தயாரித்துத் தருவதாகச் சொல்லி அனுப்பி வைத்தேன். வெள்ளியன்று காலை மதிவாணன் மட்டும் வந்தார். பழைய உற்சாகம் தென்படவில்லை அவரிடம்,
“ரொம்ப அலைய வெக்றாங்க சார்… பொருளாளர்னு ஒருத்தனுக்குப் பொறுப்பு குடுத்துருக்கோம்… பணம் தராதவங்ககிட்ட போய் வசூல் பண்ணனுமில்ல… செய்ய மாட்டேங்கிறான் சார்… ஷிப்ட்டுக்குப் போகணும்.. போயிட்டு வந்தா ரெஸ்ட் எடுக்கணும்… வீட்ல வேல இருக்கு… இப்படி ஏதாவது ஒரு காரணம்… அட நானும் வர்றேன்… ரெண்டு பேரும் போலான்னாலும் வர மாட்டேங்கறான் சார்… மீறி கேட்டா… நீங்கதான் தலைவர்… நீங்கதான் பாத்துக்கணும்கறான்…” நேத்து மட்டும் நானே போய் பதினாலு வீட்ல பணம் வசூல் பண்ணேன். எங்க வீட்ல திட்டறாங்க… ரிட்டையரானதக்கப்புறம் ரொம்ப அலையறீங்கன்னு ஒரே புகாரு… கஷ்டமா இருக்கு…”
புலம்பி முடித்ததும் அவருக்கு அருந்த நீர் கொடுத்தேன். கொஞ்சம் அமைதியானார். இதுபோனற் ஆதங்கப் பதில்கள் எனக்குப் புதிதல்ல. பல சங்கங்களில் இதே நிலைதான். முன்னின்று வேலைகளைச் செய்ய சிலரே இருப்பார்கள். கேள்வி கேட்கவும் குறை சொல்லவும் ஆட்களுக்குப் பஞ்சமே
இருக்காது.
கணினியிலிருந்து அச்சிடும் கருவிக்கு ஆணை கொடுத்தேன். பதினாறு பக்கங்களை அது வெப்பத்தோடு வெளியேற்றியது. அவற்றைத் தொகுத்து அவரிடம் தந்தேன்.
“இதுல ஏதாவது மாத்தனம்னா சொல்லுங்க… மாடல்தான் இது… அப்பறம்… ரொம்ப… ஃபீல் பண்ணாதிங்க… எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க… கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க.. நானும் சம்பத்கிட்ட பேசறேன் சார்…”
சற்றே சமாதானமாகிப் புறப்பட்டார். அன்று மாலையே சம்பத்திடம் பேசினேன். அவனும் ஆமோதித்தான் எல்லா வேலைகளையும் ஒருவர் மீதே சுமத்துவது நியாயமாகுமா என்ற கேள்வியோடு நிறுத்தினேன்.
திங்களன்று தனசேகர் வந்தார். உபதலைவர் பதவி அவருக்கு. அச்சிட்ட தாள் தொகுப்பிலிந்து இரண்டை மட்டும் வெளியே எடுத்தார்.
“சார்… ரெண்டே ரெண்டு கரெக்ஷன், பூபதி, கிருஷ்ணமூர்த்தி. ஸ்பெல்லிங்க மாத்தனும்… மத்தபடி எல்லாம் சரியா இருக்கு”
உடனேயே பூர்ணிமாவை அழைத்து, மாற்றங்களைச் சுட்டினேன். கணினியில் சரி செய்து சேமித்தாள். இளம்பச்சை நிறத்தாள்களில் அச்சிட்டு, நிர்வாகிகள் கையெழுத்திட வேண்டிய இடங்களைக் குறித்துத் தந்தேன். கட்டணத் தொகையோடு தானோ வேறு யாராவதோ வருவதாகச் சொல்லிச் சென்றார்.
செவ்வாய் காலை பதினோரு மணியளவில் என் கைபேசி ஒலித்தது. பெயரற்ற புதிய எண் ஒளிர்ந்தது.
“ஹலோ யாருங்க…?”
“ஆடிட்டர்தான பேசறது?”
“ஆமாங்க… நீங்க யாருன்ன சொல்லலியே…”
“சார்… எம் பேரு மார்டின்… ஓரி நகர் அசோசியேசன் ஜாயிண்ட் செக்ரட்ரி”
“ஓ..ஓகே… சொல்லுங்க..”
“சார்… டாக்குமெண்ட்ல ஒரு சேஞ்ச் பண்ணனும்…”
”அப்படியா… ஏதாவது சேத்தணுமா…?”
”இல்ல… சம்பத் செக்ரட்ரி போஸ்ட் வேண்டாம்னு சொல்றாரு சார்… அவருக்கு பதிலா கமிட்டி மெம்பரா இருக்க சின்னசாமியை செக்ரட்டரியா போடனும் சார்…”
“ஏன்? போன வெள்ளிக்கிழமை அவரோட பேசறப்ப கூட ஒண்ணும் சொல்லலியே…”
“ஆமாங்க சார்…” நேத்து அவர்கிட்ட கையெழுத்து வாங்கப் போனப்பதான் சொன்னாராம். வீட்ல வேணாம்னு சொன்னதா கேள்விப்பட்டேன் சார்…
“ஓகோ… அப்ப நீங்க மொத்த பேப்பரையும் எடுத்துட்டு வாங்க… ரெண்டு மூணு எடத்துல கரெக்ஷன் பண்ண வேண்டியிருக்கும்…”
“சரிங்க சார்… இன்னும் கால் மணி நேரத்துல வர்றேன்… ஆபீஸ்லயே இருங்க…”
கைப்பேசியைக் கிடத்திவிட்டு, தேநீர்க் கடையை நாடினேன். துவக்க நிலையிலேயே ஏன் தடுமாற்றங்கள் என்ற நினைப்பு எனக்குள் ஒடியது.
மார்டின் கொண்டு வந்திருந்த தாள்கள் கசங்கியிருந்தன. மாற்றம் செய்ய வேண்டிய மூன்று பக்கங்களைப் பிரித்தெடுத்து, முதலில் பேனாவால் அடித்து எழுதினேன். பூர்ணிமாவை அழைத்து, வேறு தாள்களில் அச்சிட்டு தரச் சொன்னேன்.
“கையெழுத்து போட வேண்டிய பேபர்ஸ் மட்டும் தர்றேன், மறக்காம சாட்சி கையெழுத்து ரெண்டு பேர்கிட்ட வாங்கிடுங்க… அவங்களோட ஆதார் காப்பியும் வேணும்…”
‘அதுல அவங்க கையெழுத்து வேணுமா சார்?”
“கண்டிப்பா வேணும். இதெல்லாம் கொண்டு வர்றப்ப மதி சார வரச் சொல்லுங்க. அவரு எல்லாப் பக்கத்துலயும் கையெழுத்து போடணும்…
”அடுத்த நாள் மதிவாணன் வந்தார். என்னிடமிருந்த தாள்களிலும் அவரிடம் கையெழுத்து பெற்று, ஒருமுறை சரி பார்த்தேன். விமலை அழைத்து எல்லாத் தாள்களையும் கொடுத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
“என்ன சார்… சம்பத் திடீர்னு ஜகா வாங்கிட்டாரு…”
“அவரு என்ன சார் பண்ணுவாரு… மிஸஸ் வேலைக்கு போறாங்க… இவரு சாயந்தரத்துல வீட்டோட இருக்கனும்னு எதிர்பார்க்கறாங்க… என்னமோ தெனமும் அசோசியேஷன் வேல இருக்கற மாதிரி…”
“ஆமாமா… வீட்ல அப்போஸ் பண்ணா ஒண்ணும் பண்ண முடியாது. நீங்க மனசு விடாம எல்லாத்தையும் கோஆடினேட் பண்ணுங்க சார்…”
அவர் ஆமோதித்து விடை பெற்றார். அன்றே கிருஷ்ணகிரி அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒரு வாரம் சென்ற பின் தினமும் ஒருவராவது கைப்பேசியில் அழைத்து பதிவுச் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்று கேட்கத் துவங்கினார்கள். பதிவு அலுவலகத்தை அவ்வப்போது தொடர்பு கொண்டு கேம்டடபோது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். வேலை மட்டும் நடக்கவில்லை.
இடையில் ஒரு நாள் மதிவாணன் வந்து, பதிவுக்குப் பின் என்னென்ன நடைமுறைகள், எப்படிக் கணக்குகளைப் பராமரிப்பது போன்ற விவரங்களைப் பூர்ணிமாவிடம் கேட்டு எழுதிக் கொண்டு போனார். ஒரு வழியாக அம்மாத இறுதியில் சான்றிதழை ஒப்படைத்தேன். பிறகு, மற்ற வேலைகளில் மூழ்கி, என் கவனத்திலிருந்து அந்த சங்கம் மறைந்து போனது.
நாலைந்து மாதங்களுக்குப் பின்னால் திடீரென ஒரு நாள் மதிவாணன் அலுவலகத்திற்கு வந்தார். நல விசாரிப்புகளுக்குப் பிறகு,
“சார்… தலைவர் பதவியிலிருந்து வெலகச் சொல்றாங்க சார்”… என்றார் வருத்தம் மிகுந்த குரலில். நான் அதிர்ந்தேன்… என்னால் நம்ப முடியவில்லை. “என்ன சார் சொல்றீங்க? உங்கள எதுக்கு ரிசைன் பண்ண சொல்றாங்க… மொதல்ல இருந்து நீங்கதான ஆக்டிவா இருக்கீங்க… அப்புறம் எதுக்கு?”
“ப்ச்… என்னென்னவோ நடந்து போச்சுங்க சார்” என்று தொடங்கி ஒவ்வொன்றாய் சொன்னார். பதிவுக்கு பின் நகராட்சி ஆணையாளரைப் பலமுறை சந்தித்து, சாலை, தெருவிளக்கு, குப்பை சேகரிப்பு, வரி விதிப்பு போன்ற பல அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். பெரும்பாலும் தனியாகவே செயலாற்றியிருக்கிறார். சில சமயம் மார்டின் உடன் சென்றிருக்கிறார். ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த பதினாறு பேர் சங்கத்தில் இருந்திருக்கிறார்கள். சுதந்திர தின விழாவிற்கு, சட்டமன்ற உறுப்பினரை அழைத்து மிகச் சிறப்பாக எல்லா நிகழ்ச்சியையும் நடத்தியிருக்கிறார். வள்ளல் ஓரி நகர் பல விதங்களில் முன்மாதிரியாக விளங்குவதாக சட்டமன்ற உறுப்பினரும் பாராட்டியிருக்கிறார். குடியிருப்போர் மத்தியிலும் செல்வாக்கு இவருக்கு உயர்ந்ததும், அந்த நிறுவன ஊழியர்களுக்குப் பொறுக்கவில்லை. இவர் செங்கத்திற்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஞாயிற்றுக்கிழமை அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, தலைவரை மாற்ற வேண்டுமென முடிவு செய்திருக்கிறார்கள். தானாக முன்வந்து விலகல் கடிதம் கொடுத்துவிட்டால் மரியாதை என்று எச்சரித்திருக்கிறார்கள். பதிவாளர் அலுவலகத்தில் என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும், கட்டணம் எவ்வளவு என விசாரித்த அவரை நான் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறுகதையின் ஆசிரியர்
பழ.பாலசுந்தரம்,
எழுத்தாளர் மற்றும் ஆடிட்டர்,
ஓசூர்.
பழ.பாலசுந்தரம் அவர்களின் சிறுகதைகளைப் படிக்க..
தமிழ்விடு தூதில் பெண் உளவியல் பார்வை| முனைவர் கி.நாகேந்திரன்
முன்னுரை
தமிழ்மொழியில் அமைந்த சிற்றிலக்கிய வகைகளைப் பிரபந்தங்கள் என்று அழைப்பர். இவற்றை வகைப்படுத்தித் ‘தொண்ணுற்றாறு பிரபந்தங்கள் என தமிழ் மொழியில் குறிப்பிடும் வழக்காறு உள்ளது. பிரபந்தம் என்பது நன்கு கட்டப்படுகின்ற பொருளைத் தருவதாய் அமைகின்றது. மேலும் பிரபந்தம் என்ற சொல்லாட்சி சிற்றிலக்கியத்தை மட்டும் குறிப்பிட்டு உணர்த்தாமல் சிற்றிலக்கிய வகைகளையும் குறிப்பிட்டு உணர்த்துவதால் சிறுபிரபந்தம் அல்லது சில்லறைப் பிரபந்தம் என்ற சொல் அமைப்பை பயன்படுத்தத் தொடங்கினர். இச்சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று தூது இலக்கியம். தமிழ்விடுதூதுவில் பெண்கள் உளவியல் என்ற நோக்கில் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
தூது
ஒருவர் மற்றொருவரிடத்து ஓர் அஃறிணைப் பொருள் அல்லது ணர்வுகளை அல்லது ஓர் உயர்திணையோர் வழியாகத் தம் உள்ள உ செய்திகளைக்கூறி, அனுப்பும் பொருள்மையைக் கொண்டு இயற்றப்படும் இலக்கியவகையே தூது இலக்கியம் ஆகும். சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையைக் கொண்டதாகவும் கலிவெண்பாவால் பாடப்படும் இலக்கிய வகையாகவும் தூது இலக்கியம் திகழ்கின்றது. இவற்றில் தமிழ்விடு தூது என்பது மதுரை சோமகந்தர இறைவன் மேல் காதல்கொண்டதலைவிதன்காதல்வேட்கையை வெளிப்படுத்தத் தமிழைத் தூதாக அனுப்புவதற்கு இயற்றப்பெற்ற இலக்கியம் ஆகும். இத்தூது இலக்கியத்திற்கு இலக்கணமாக பாட்டியல் நூல்கள்,
“இரு திணையுடன் மையலை யுரைத்துத்
தூது செலவிடுவது தூது இவை கலிவெண்
பாவினால் விரித்துப் பகிர்வது மரபே” (பி.ம. 15)
“பயிறருங் கலிவெண்பாவினாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்நூறு தூதெனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே” (இ.வி. 874)
என்ற இலக்கணம் கூறுகின்றன.
உளவியல்
முன்பு நடந்த ஒரு செயலை நினைவிற்கு கொண்டு வரும் உருவகமே உளவியல்.மனிதனின் உள்ளம் அல்லது மனதின் செயல்களை விளக்கும் இயல் உளவியல் எனச் சில அறிஞர்கள் கருத்து தருகின்றனர். ‘உள்ளம்’ உளவியலை”நனவுநிலை’பற்றிய இயல் என விளக்குகின்றனர்.”உளவியல் என்பது மனிதனின் நடத்தை,நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் என்பது ‘ஆன்மா’ என்பதைப் போன்றே தெளிவற்றதென நினைத்து, ஆகியவற்றைப்பற்றிப்படிப்பதாகும்” என்று வில்லியம் மக்டூகல் கூறுகிறார். பற்றிப் படிப்பதாகும்” என்று லெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ் குரோ ‘உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவுமுறைகளைப் எடுத்து இயம்புகிறார். மனிதனது நடத்தை பற்றிய சில அடிப்படைக் கருத்துக்கள் இன்று பொதுவாக எல்லா உளவியலறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. “உடலுக்குள்ளிருந்து எழும் வேட்கைகள் வெளியுலகச் சூழலிலிருந்து எழும் தூண்டல்கள், மனிதர்களின் சமூக உறவினின்றும் எழும் துன்பங்கள் போன்ற பல வகைப்பட்ட தூண்டல்களினால் மனிதனது நடத்தை தோற்றுவிக்கப்பட்டு நெறிப்படுத்தப்படுகிறது.” (சு. சாவித்திரி வாழ்வியற்களஞ்சியம் தொகுதி – 5 ப. 444)படைப்பாற்றல் மிக்க மனம், உயர்திணைப்பொருள்களாகிய மனிதனுக்கு மட்டும் உரியது. மனம்தான் மனித சமுதாயத்திற்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் படைத்துத் தந்ததாகும். இயற்கையாகவே ஏனென்றால் மனிதன் பரிணாமத்தின் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளான். ஐம்பொறிகளின் தலைமைப் பீடமாகிய மூளை தலையினுள் அமைந்துள்ளது. வாய், கண், மூக்கு, செவி என்னும் நாற்பொறிகளும் தலையில் அமைய ‘மெய்’உடம்பு முழுவதையும் இணைத்துத் தொடு உணர்ச்சியை மூளைக்குக் கொண்டு செல்கிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் ஐம்பொறிகளைப் பற்றி வள்ளுவர்,
“கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள” (திருக்குறள் 1101)
என்று கூறுகிறார். சமூக உளவியல் சார்ந்த கருத்துக்களைத்திருக்குறள் பொருட்பாலில்
“மன நலத்தி னாகும் மறுமை மற்றஃதும்
இனநலத்தின் ஏமாப்புடைத்து” (திருக்குறள் 459)
என மனிதன் ஒருவன் கொண்டுள்ள மனநலத்தினால் அவன் மறைந்த பின்னரும் புகழ் உண்டு என்பதைக் கூறகின்றார்.
தமிழ்விடு தூதில் பெண் உளவியல்
உடல்மெலிந்து இருக்கின்றேன். காதல் கொண்ட தலைவியின் உள்ளத்தைத் தமிழ்விடுதூது காலக் கண்ணாடியாக படம்பிடித்துக் காட்டுகின்றது. மதுரையில் வீற்றிறுக்கும் சோமசுந்தர கடவுள் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் மன வருத்தத்தினால் தமிழ் மொழியைப் பார்த்து, காதல் நோயால் வருத்தமுற்று அறியவேண்டிய உன்னிடத்தில் உன்னுடைய சீரிய பெருமைகளையேநான் என்னுடைய நிலையைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தமிழே! என்னுடைய காதல் வேட்கையை, அறிந்துகொள்ள ‘மாட்டேன் என்கிறாயே! என் உள்ளத்தின் நிலையைத்
“என் செய்தி நீ கண்டு இரங்குவது நீதியல்லால்
உன் செய்தி நானோ உரை செய்வேன்” (தமிழ்விடுதூது-96)
என்று தலைவி கூறுகிறாள். தன் தலைவன் மீது கொண்டுள்ள காதல் வேட்கையின் உணர்வு எத்தகையது என்பதைத் தன் மனம் நொந்து கூறுவதைக் காணமுடிகிறது.
தலைவன் இல்லாமல் வாழ முடியாது
தலைவனிடத்து அன்பு கொண்ட தலைவி, தலைவன் இல்லாமல் உயிரோடு இருக்கமுடியாது என்கிறாள். அதன் பொருட்டு மனம் இரக்கம் கொண்டு காதலனான சோமசுந்தர கடவுளிடத்து தூது சென்று வரும்படி கூறுகின்றாள். சுந்தர மூர்த்தி நாயனார் தன் காதலுக்காக ஓர் அடிக்கு ஓராயிரம் பொன் கொடுத்தார். அவரின் காதலின் பொருட்டு பரவை நாச்சியாரிடம் தூதாக சென்ற தமிழே என் மன நிலையை அறிய மாட்டாய நானும் பெண்தானே என் மன வேட்க்கையை நீக்குவாயாக என்று தலைவியானவலின் மன வேட்க்கையையும் வேட்கையால் உண்டான மனவேதனையும் நீக்குகின்ற பொறுப்பு தமிழிடம் இருக்கின்றதாகதலைவி கூறுகின்றாள். இதனை
“மாண்பாய் ஓர் தூது சொல்லி வர என்பேன் என் வருத்தம்
காண்பாய் என் பெண்மதி நீ காணாதே” (தமிழ்விடுதூது -101)
என்று தமிழ்விடு தூது கூறுகின்றது. தலைவியின் உள்ளத்தை வாட்டி வருத்துகின்ற புண்களை மாற்றுவாயாக! என்று தமிழைப் பார்த்துக் காமம் மிக்க கழிபடர் கிளவியாக உரைக்கின்றாள். சங்க இலக்கியமான நற்றிணையில் தலைவி மீது காதல் கொண்ட தலைவன் தோழியிடம்,
“உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடுவில் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே” (நற்.75)
என்று கூறுகிறான். தன்னுடை துன்பத்தை அறிந்தும், தன்னிடம் இரக்கங்கொண்டு தன்னுடைய மனம் அறியாமையைத் தலைவியிடம் சொல்லி சிரிக்கச் செய்யாமல் என் நெஞ்சம் விரும்புமாறு தன்னுடைய காதலைத் தலைவியிடம் எடுத்துக் கூறும்படி கூறுகிறான். தோழியிடம் தன் மனவேட்கையைப் பலவாறு எடுத்துரைக்கின்றான் தலைவன். காதல் வேட்கை கொண்ட ஒரு தலைவனின் மனப்பாங்கை இங்குக் காணமுடிகிறது.
பிற அஃறிணைப் உயிர்களைத் தூதாக அனுப்புதல்
மதுரையம் பதியில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுள் மீது காதல் கொண்ட தலைவி, தலைவனிடம் மனவேட்கையைப் புலப்படுத்தப் பல அஃறிணைப்பொருட்களைத் தூதாக அனுப்ப நினைக்கிறாள். பின் அதன் செயல்பாடுகளை நினைத்து ஒவ்வொன்றாகத் தவிர்க்கின்றாள்.
அன்னப்பறவையை தூது அனுப்புதல்
முதலில் அன்னத்தைத் தேர்ந்தெடுக்கின்றாள். ஒளி பொருந்திய தாமரை மலரை விரும்பி அதன் மேல் அமர்ந்திருக்கும் அன்னத்தைத் தூதுவிடலாம் என்று நினைத்தால், முன்பு ஒருநாள் சிவபெருமானிடம் அடி முடியைக் காண பிரம்மன் அன்னப் பறவை வேடங்கொண்டு சென்று அவருடைய அடிமுடியைக் காணாமல் வந்தது போன்று என்தலைவரையும் காணாமல் வந்துவிடுமோ என்று தலைவி தன் மனத்திற்குள் எண்ணுகிறாள். இதை,
“அன்னந்தனை விடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னம்தான் கண்டு அறியாது என்பரே” (தமிழ்விடுதூது -107)
தலைவனுக்குத்தூதுவிட அன்னத்தின் செயல்களைக் கூறி, அதனுடன் புராணக் கருத்துக்களையும் எடுத்துக் கூறுகின்றாள். இப்புராணச் செய்தி
அன்னம் விடு தூதில்,
மூளையால் நான்
முகன் நின்றனை நன்கறிந் தேறினான்” (அன்ன. 8-9)
கூறப்படுகின்றது. அன்னம் பற்றிய புராணக் கருத்தும் அதன் பெருமைகளும் விளக்கப்பட்டுள்ளன. அன்னத்தின் இயல்பை நினைத்த எனக் தலைவி வண்டைத் தூதாக அனுப்ப நினைக்கிறாள். ஆனால், அது தலைவன் “காமம் செப்பாதே’ என்று கூறினால் உடனே திகைத்து ஒன்றுவிடும் என்கிறாள். “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பிகாமம் செப்பாது கண்டதுமொழியுமோ” (குறுந். 2) என்ற குறுந்தொகைப்பாடலில் வண்டின் இயல்பு கூறப்பட்டுள்ளதைக் தேனையுண்டு போதையில் தலைவனிடம் செல்லும் பொழுது, இயற்கையில் காமத்தைச் செப்பாதே என்று கூற, இவ்வண்டு தலைவியான என்னுடைய காமத்தைப் பற்றிக் கூறாதே என்று அவர் கூறியதாக எடுத்துக் கொண்டாலும் எடுத்துக் கொள்ளும் என்கிறாள்.
மானைத் தூதாக அனுப்புதல்
மானைத் தூதாக அனுப்பத் தலைவி நினைத்தபோது, சிவபெருமான் அணிந்திருக்கும் புலித்தோல் ஆடையைப் பார்த்து பயந்து நின்றுவிடும் என்று நினைக்கின்றாள். இது,
“மானைப் போய்த் தூது சொல்லி வா என்பேன் வல்லியப்பூத்
தானைப் பரமர்பால் சாராதே” (தமிழ்விடுதூது-109)
என்ற வரிகள் மூலம் தலைவன்பால் காதல் கொண்ட தலைவியின் நிலை அறியப்படுகிறது.
குயிலைத்துதாக அனுப்புதல்
தூதுவிடுவதற்கு சிறந்ததொரு வழி, எது என்று தீர்வு காணமுடியாமல் தலைவி வருந்தினாள். பின் குயிலைத் தேர்ந்தெடுத்துத் தூதுவிட நினைத்தாள். அனால் குயிலோ காக்கை இனத்தைச் சோந்தது என்றும், காக்கைக்கும், வலியானுக்கும் பகை என்றும் எண்ணுகிறாள். ஆனால் வலியான் சோமசுந்தரக் கடவுளை வழிப்பட்டு ‘வலியான்’ என்னும் பெயரையும், காக்கையை வெல்லும் வலிமையும் பெற்றுள்ளது. இதனால் தூது செல்லும் குயில் வலியானைக் கண்டதும் பயந்து என் தலைவனிடம் என்னுடைய குறையையும் என்நிலையையும் எடுத்துக்கூறாம வந்துவிடுமோ ! என்று தலைவி குயிலின் இயல்பை நினைந்து வருந்துகிறாள். இதை,
“கோகிலத்தை நான்விடுப்பேன்
கோகிலமும் காக்கை இனம்
ஆகிய வலியானுக்கு அஞ்சுமே” (தமிழ்விடுதூது-110)
கண்ணியில் தலைவி, புராணக்கதையுடன் ஒப்பிட்டுக் என்று கூறுகின்றாள். தலைவி தலைவனிடம் தூதாக விடுவதற்கு நினைத்த அஃறிணைப் பொருள்களின் அனைத்து இயல்புகளையும் எடுத்துரைத்து அவைகளை ஒதுக்கிவிட்டுத் தன் மனத்தையே தூதாகவிட நினைக்கின்றாள். ஆனால் தலைவனான அவர் மனதிற்கு எட்டாதவர்.ஆகையால் மனமும் அவரிடம் நெருங்க முடியாது என்று தலைவி கூறுகின்றாள்.
இவ்வாறு தலைவி ஒரு பொருளும் தன் மனநிலையை தலைவனிடம் உரைப்பதற்குத்தகுதியுடையதாகத் தோன்றியமையால் என்ன செய்வேன். என்ன செய்வேன் என்று தன் மனம் ஓங்கி நிற்கிறது என்று தன் மன வருத்தத்தைத் தமிழிடம் எடுத்துரைக்கின்றாள்.
“என்று என்று இரங்கினேன் என் கவலை எல்லாம் பொன்
குன்று அனையாய் உன்னுடன் கூறுகேன்” (தமிழ்விடுதூது – 112)
என்ற கண்ணியில் தலைவி, தன் கவலைகளையெல்லாம் ‘மூவாத்தமிழ்’ எனவும்‘கன்னி’ எனவும் சிறப்பிக்கின்ற தமிழான உன்னிடம் கூறுகிறேன். மதுரையில் எழுந்தருளியிருக்கும் இறைவனிடம் எனக்காகச் சென்று ‘என்னுடைய காதலை அவர் ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக ஒருமாலை வாங்கி வா என்று தலைவி தமிழிடம் தன் காதல் வேட்கையால் ஏற்பட்ட மனவருத்தத்தைக் எடுத்துக் கூறுகின்றாள்.
முடிவுரை
மனிதர்களின் இயல்பான மனநிலையை தமிழ்விடு தூதில் அறிய முடிகின்றது. தலைவி ஒவ்வொரு பொருளையும் தான் ஏன் தூதாக அனுப்பவில்லை என்பதற்குரிய காரணத்தைக் கூறுகின்றாள். குயிலையும் அன்னத்தையும் கூறுகின்றபொழுது சிவபெருமானோடு தொடர்புபடுத்திப் புராணச் செய்திகளைக் கூறுகின்றபொழுது தலைவியின் உள்ளப்பாங்கு தெளிவாகத் தெரிகின்றது. தன்னுடைய ஆறாக் காதலைத் தலைவனிடம் சொல்லவேண்டுமே என்ற தவிப்பு தலைவியிடம் காணப்படுகிறது. இது தூதுவிடும் தலைவி ஒவ்வொருவர்க்கும் இருக்கக்கூடிய மனநிலையே, இன்றைய உலகிலும் தூதாகச் செல்லுபவரைப் புகழ்தல் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் தமிழ்விடுதூதில் தலைவியின் மனநிலை உளவியல் ரீதியில் சிறப்பாக வெளிப்படுத்தப்படக் காணலாம்.
சான்றெண் விளக்கம்
1.சு.சாவித்திரி, வாழ்வியற்களஞ்சியம் தொகுதி – 5 ப. 444.
2.திருக்குறள் 1101
3.மேலது 459
4. பேராசிரியர் முனைவர் அ.மீனாட்சிசுந்தரம் கற்றல் மற்றும் மனித வளர்ச்சி உளவியல், காவியமாலா பப்ளிசர்ஸ், சின்னாலபட்டி, திண்டுக்கல் 624 302
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கி.நாகேந்திரன்,
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை,
ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி),
சாத்தூர், விருதநகர் மாவட்டம் – 626203,
வாக்கியங்கள் என்றால் என்ன? வாக்கிய வகைகள் யாவை?
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் எனப்படும். இதனை வாக்கியம் என்று கூறுவர். நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க அடிப்படையாக இருப்பது வாக்கியமே ஆகும். வாக்கியம் அமைத்துத் தருவதற்கு முன்னர் எழுவாய், பயனிலை, செயப்படபொருள் ஆகியவற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும்.
எழுவாய்
ஒரு வாக்கியத்தின் முதலில் வருவது. பெயராகவும் அமையும்.
பயனிலை
ஒரு வாக்கியத்தின் வினையை (அ) செயலைக் குறிப்பது.
செயப்படு பொருள்
ஒரு வாக்கியத்தின் வினைச்சொல்லிற்கு முன் எதை ? யாரை ? என்ற கேள்விகளுள் ஒன்றைச் சேர்த்து கேள்வியாக அமைத்துக் கேட்கக் கிடைக்கும் விடையே செயப்படுபொருள் ஆகும்.
(உம்) ஆசிரியர் மாணவனை அடித்தார்
இந்த சொற்றொடரில் அடித்தார் என்பது வினைச்சொல் ஆகும். அடித்தார் என்னும் சொல்லுக்கு முன் யாரை? என்ற சொல்லைச் சேர்த்து யாரை அடித்தார்? என்று கேள்வி கேட்க மாணவனை என்ற விடை கிடைக்கிறது எனவே மாணவனை என்பதே செயப்படுபொருள் ஆகும்.
எழுவாய் – இளங்கோவடிகள்
செயப்படுபொருள் – சிலப்பதிகாரத்தை
பயனிலை – இயற்றினார்.
கீழ்க்கண்ட வாக்கியங்களை வரிசையாகப் பார்க்கலாம்
தன்வினை வாக்கியம் – பிறவினை வாக்கியம்
1. தன்வினை
கருத்தா தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினை வாக்கியம் ஆகும். (எழுவாய் தானே ஒரு செயலை செய்தல்)
(உம்) கோதை பாடம் கற்றாள்
கண்ணன் பொம்மை செய்தான்
2. பிறவினை
கருத்தா பிறரைக் கொண்டு தொழில் செய்வித்தலை உணர்த்துவது பிறவினை வாக்கியம் ஆகும். (எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வித்தல்)
(உம்) கோதை பாடம் கற்பித்தாள்
கண்ணன் பொம்மை செய்வித்தான்
தன்வினையைப் பிறவினையாக்கும்போது செய்ய வேண்டியவை :
1. தன்வினைப் பகுதியில் உள்ள மெல்லின மெய்யை வல்லின மெய்யாக மாற்றவேண்டும். எ.கா. திருந்தினான் – திருத்தினான்
2. தன்வினைப் பகுதியில் உள்ள வல்லின மெய் எழுத்தை இரட்டிக்க வேண்டும்.
எ.கா. பழகினாள் – பழக்கினாள்
3. தன்வினை பகுதியுடன் வி.பி.கு,கூடுது,பு,று என்னும் விகுதிகளில் ஒன்றைச் சேர்க்க வேண்டும்.
வ.எண் | தன்வினை | பிறவினை |
1 | திருந்தினான் | திருத்தினான் |
2 | உருண்டான் | உருட்டினான் |
3 | உண்டாள் | உண்பித்தாள் |
4 | ஆடினார் | ஆட்டுவித்தார் |
5 | கண்டான் | காண்பித்தான் |
6 | உழுதார் | உழுவித்தார் |
7 | செய்தான் | செய்வித்தான் |
8 | படித்தான் | படிப்பித்தான் |
9 | கற்றான் | கற்பித்தான் |
10 | எழுது | எழுதுவி |
11 | படி | படிப்பி |
12 | இறங்கு | இறக்கு |
13 | உருள் | உருட்டு |
14 | நட | நடத்து |
15 | எழு | எழும்பு |
16 | மருள் | மருட்டு |
17 | பயின்றான் | பயிற்றுவித்தான் |
18 | வந்தான் | வருவித்தான் |
19 | ஓடினான் | ஓட்டினான் |
20 | வளைத்தான் | வளைவித்தான் |
உதாரணங்கள்
1. மாதவி நடனம் பழகினாள் (தன்வினை)
மாதவி நடனம் பழக்கினாள் ( பிறவினை)
2.கண்ணன் கடிதம் எழுதினான் (தன்வினை)
கண்ணன் கடிதம் எழுதுவித்தான் ( பிறவினை)
3.இராமன் வில்லை வளைத்தார் (தன்வினை)
இராமன் வில்லை வளைவித்தார் ( பிறவினை)
4. மணிவாசகன் புத்தகங்களை எடுத்து வந்தான் (தன்வினை)
மணிவாசகன் புத்தகங்களை எடுத்து வருவித்தான் ( பிறவினை)
5.சிற்பி கோவில் கட்டினார் (தன்வினை)
சிற்பி கோவில் கட்டுவித்தார் ( பிறவினை)
6.திருக்குறள் கற்றேன் (தன்வினை)
திருக்குறள் கற்பித்தேன் ( பிறவினை)
7.நண்பருடன் விருந்து உண்டேன் (தன்வினை)
நண்பரை விருந்து உண்பித்தேன் ( பிறவினை)
செய்வினை வாக்கியம் – செயப்பாட்டு வினை வாக்கியம்
3. செய்வினை
எழுவாயே செயலைச் செய்வதாகக் கூறுவது செய்வினை வாக்கியம். எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். (ஐ – உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும் )
(உம்) இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்
4.செயப்பாட்டுவினை
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். எழுவாயோடு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். பயனிலையோடு படு, பட்டது எனும் சொற்களைச் சேர்த்து ( படு துணை வினை) அமைத்தல் செயப்பாட்ட வினை வாக்கியம் எனப்படும்.
(உம்) சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது
உதாரணங்கள்
1.திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் (செய்வினை)
திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. (செயப்பாட்டுவினை)
2.குடியரசுத்தலைவர் விருது வழங்கினார். (செய்வினை)
விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. (செயப்பாட்டுவினை)
3.பாரதிதாசன் என்றென்றும் நிலைத்து நிற்கும் இலக்கியங்களைப் பாடினார். (செய்வினை)
என்றென்றும் நிலைத்து நிற்கும் இலக்கியங்கள் பாரதிதாசனால் பாடப்பட்டது. (செயப்பாட்டு வினை)
4. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர் (செய்வினை)
வகுப்பு, மாணவர்களால் தூய்மை செய்யப்பட்டது. (செயப்பாட்டு வினை)
5.ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார் (செய்வினை)
இலக்கணம். ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது (செயப்பாட்டு வினை)
6.தச்சன் நாற்காலியைச் செய்தான் (செய்வினை)
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது (செயப்பாட்டு வினை)
7.நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர். (செய்வினை)
நாட்டுப் பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது (செயப்பாட்டு வினை)
8. மூவர் தேவாரம் பாடினார்கள் (செய்வினை)
தேவாரம் மூவரால் பாடப்பட்டது. செயப்பாட்டு வினை)
(செய்வினை வாக்கியத்தில் எழுவாயாக இருப்பது செயப்பாட்டு வாக்கியத்தில் செயப்படுபொருளாக மாறி அமைவதைக் காண்க).
தன்வினைக்கும் செய்வினைக்கும் உள்ள வேறுபாடு
© தன்வினை என்பது யார் வேண்டுமானாலும் செயலை செய்ய முடியும்.
© செய்வினை என்பது ஒரு காரியத்தை அவரால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறுவது.
நேர்க்கூற்று வாக்கியம் – அயற்கூற்று வாக்கியம்
5.நேர்க்கூற்று
ஒருவர் கூறியதை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே எடுத்துக் கூறுவது நேர்க்கூற்று ஆகும். மேற்கோள் குறியீடு இடம் பெறும். தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம் பெறும்.
(உம்) “நான், நாளை உன் இல்லத்திற்கு வருவேன்” என்று இமயவரம்பன் கபிலனிடம் கூறினான்.
நான் நாளை உன் இல்லத்திற்கு வருவேன் என்ற செய்தியை இமயவரம்பன், கபிலனிடம் நேரில் கூறினான். எனவே, இது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.
6.அயற்கூற்று
ஒருவர் முன்னிலையாய் நேரில் கூறியதைப் படர்க்கை இடத்திற்கு ஏற்றாற்போலச் சொற்களை மாற்றிப் பொருள் மாறாதவாறு அயலார் கூறுவது போல் சொல்லவது அயற்கூற்று எனப்படும். மேற்கோள் குறியீடு இடம்பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்.
(உம்) தாய்மொழியைப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.
தாய்மொழியை உயிராகப் போற்றுங்கள் என்பது மாணவர்களை முன்னிலைப்படுத்திக் ஆசிரியர் கூறியது. இச்செய்தியை அயலாருக்குக் கூறுவதுபோல் பொருள் மாறாதவாறு இவ்வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது அயற்கூற்று வாக்கியம் எனப்படும்.
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்போது வேறுபடும் சொற்கள் :
வ.எண் | நேர்க்கூற்று | அயற்கூற்று |
1 | இது, இவை | அது, அவை |
2 | இன்று | அன்று |
3 | இப்பொழுது | அப்பொழுது |
4 | இதனால் | அதனால் |
5 | நாளை | மறுநாள் |
6 | நேற்று | முன்னாள் |
7 | நான், நாம், நாங்கள் | தான், தாம், தாங்கள் |
8 | நீ | அவன், அவள் |
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றுவதற்கு
“புலவரே, பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று அரசன் கூறினான். – நேர்க்கூற்று வாக்கியம்
1. முன்னிலை விளிப்பெயரைப் படர்க்கைப் பெயராக சேர்க்க வேண்டும். (புலவரே) – புலவர்
2. அப்பெயருடன் தக்கவாறு வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். (புலவர்+இடம்) – புலவரிடம்
3. ஏவல் வினையை எச்ச வினையாக மாற்ற வேண்டும். (பெற்றுக் கொள்ளுங்கள்)- பெற்றுக்கொள்ளுமாறு அரசன் கூறினான்.
4. பின்னர் கூறியவர் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புலவரிடம் பரிசைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசன் கூறினான் – அயற்கூற்று வாக்கியம்
அயற்கூற்றை நேர்க்கூற்றாக மாற்றுவதற்கு
கீரை வாங்கி வருமாறு தாய் மகனிடம் கூறினார். அயற்கூற்று வாக்கியம்
1.படர்க்கையில் வேற்றுமை உருபு பெற்றிருக்கும் பெயரை (மகனிடம் = மகன் + இடம்) ‘மகன்’ என விளிக்கும் சொல்லாக (அழைக்கும் பொருளில்) மாற்ற வேண்டும்.
2. வருமாறு என்னும் வினையெச்சத்தை ‘வா’ என முன்னிலை ஏவல் வினையாக மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றியமைத்தால் “மகனே! கீரை வாங்கிவா” என நேர்க்கூற்றாக அமையும்.
3. இதனுடன் கூறியவர் பெயரையும் ‘என்று’ என்னும் சொல்லையும் சேர்த்தல் வேண்டும்.
“மகனே! கீரை வாங்கி வா” என்று தாயார் கூறினார் – நேர்க்கூற்று வாக்கியம்.
உதாரணங்கள்
1.”நாளை நான் மதுரை செல்வேன்” என்று நன்மாறன் கூறினான். (நேர்க்கூற்று )
மறுநாள் தான் மதுரை செல்வதாக நன்மாறன் கூறினான். (அயற்கூற்று )
2.”நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று செல்வி தோழியிடம் கூறினாள். ( நேர்க்கூற்று )
செல்வி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள். (அயற்கூற்று )
3. இசையாசிரியர், ”மாணவர்களே நீங்கள் நாள்தோறும் பாடிப் பழக வேண்டும்” என்றார். ( நேர்க்கூற்று )
இசையாசிரியர் மாணவர்களிடம் நாள்தோறும் பாடிப் பழகும்படி கூறினார். (அயற்கூற்று )
4. அமைச்சர், ”அரசே! நீங்கள் செங்கோல் வழுவாது ஆட்சி செய்ய வேண்டும்” என்றார். ( நேர்க்கூற்று )
அமைச்சர் அரசனிடம் செங்கோல் வழுவாது ஆட்சி செய்ய வேண்டும் என்றார். அயற்கூற்று )
5.”நான் நாளை மதுரை செல்வேன்” என்று மாறன் கூறினான்.
மறுநாள் தான் மதுரை செல்வதாக மாறன் கூறினான்.
உடன்பாட்டு வாக்கியம் – எதிர்மறை வாக்கியம்
7. உடன்பாட்டு வாக்கியம்
செயல் அல்லது தொழில் நிகழ்வதைத் தெரிவிப்பது.
(உம்) வயலில் மாடுகள் மேய்ந்தன.
8. எதிர்மறை வாக்கியம்
செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது.
(உம்) வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தில,
உதாரணங்கள்
1.தமிழ்ச்செல்வி புதுவைக்குச் சென்றாள்
தமிழ்ச்செல்வி புதுவைக்கு சென்றிலள்.
2.இனியன் உணவு உண்டான்
இனியன் உணவு உண்டிலன்.
3.கல்விச் செல்வத்தை அனைவரும் போற்றுவர்
கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் எவரும் இலர்
4.குடும்பத்தலைவிக்குப் பொறுப்பு உள்ளது
பொறுப்பில்லாத குடும்பத்தலைவி இலள்
5.திருவள்ளுவரைப் போற்றாதவர் இலர்
திருவள்ளுவரை போற்றுவர் அனைவரும்
6. ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு.
ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு இல்லாமல் இல்லை
7. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும்
போட்டியில் எல்லோராலும் வெற்றி பெற முடியாது.
9. செய்தி வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம் எனப்படும்.
(உம்) மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்.
குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை தந்தார்.
இளமையில் கற்க வேண்டும்
வள்ளுவர் கோட்டம் மிக அழகாக அமைந்திருக்கிறது
10.உணர்ச்சி வாக்கியம் (அ) வியப்பு வாக்கியம்
மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம் எனப்படும்.
(உம்) ஆ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு!
ஐயோ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே!
என்னே! வள்ளுவர் கோட்டத்தின் அழகு !
11. கட்டளை வாக்கியம் (அ) ஏவல் வாக்கியம்
விழைவு. வேண்டுகோல், வாழ்த்தல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் கட்டளை வாக்கியம் எனப்படும்.
(உம்) மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக.
அனைவரும் தாய்மொழியைப் போற்றுக.
இளமையில் கல்
12.வினா வாக்கியம்
வினாப் பொருள் தரும் வாக்கியங்களை வினா வாக்கியம் என்று அழைப்பர்.
(உம்) குழந்தைக்கு என்ன தெரியும்?
உண்மைக்கு அழிவில்லை அல்லவா?
13. தனிவாக்கியம்
ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும். அதனை தனி வாக்கியங்கள் என்று அழைப்பர்.
(உம்) திரு.வி.க பெண்களைப் போற்றினார்.
கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையை போற்றினர்.
14.தொடர்வாக்கியம்
தனிவாக்கியங்கள் பல தொடந்து வரும். ஓர் எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வருவது தொடர் வாக்கியம் எனப்படும்.
(உம்) அரசன் புலவரைக் கண்டான்; அவரை வரவேற்றான்; பரிசு வழங்கினான்.
15.கலவை வாக்கியம்
ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட துணை வாக்கியங்களுடன் சேர்ந்தும் வரும்.
(உம்) யார் கல்விச்செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம்பெறுவர்.
16.விழைவு வாக்கியம்
கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் எனப்படும்.
(உம்) தமிழ்ப்பாடத்தை முறையாகப் படி (கட்டளை )
நல்ல கருத்துகளை நாளும் கேட்க (வேண்டுகோள்)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க (வாழ்தல்)
தியவை ஒழிக (வைதல்)
பயிற்சிகள்
1. மக்களால் மழைநீர் சேமிக்கப்பட்டது – செய்வினை வாக்கியமாக மாற்றுக
2. கனிமொழி கட்டுரை எழுதினாள் – செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றுக
3. காமராசரை அறியாதவர் எவரும் இலர் – உடன்பாட்டு வாக்கியமாக மாற்றுக
4.நற்செயல்களை அனைவரும் போற்றுவர் – எதிர்மறை வாக்கியமாக மாற்றுக
5. மாதவி நடனம் கற்பித்தாள் – தன்வினை வாக்கியமாக மாற்றுக
6. மாறன் மாட்டை ஓட்டினான் – பிறவினை வாக்கியமாக மாற்றுக
7. தந்தை மகனிடம் நன்கு படிக்கும்படி கூறினார் – நேர்க்கூற்றாக மாற்றுக
8. முதலாளி, தொழிலாளியிடம், ”நேர்மையாக உழைக்க வேண்டும்” என்று கூறினார் – அயற்கூற்றாக மாற்றுக
9. நாள்தோறும் உடற் பயிற்சி செய்க – செய்தி வாக்கியமாக மாற்றுக
10. திருவள்ளுவர் சிலை அழகாக உள்ளது – வினாவாக்கியமாக மாற்றுக
11. ஒவ்வொருநாளும் செய்தித்தாளைப் படிக்க வேண்டும் – கட்டளை வாக்கியமாக மாற்றுக
12. ஓவியம் மிக அழகாக உள்ளது – உணர்ச்சி வாக்கியமாக மாற்றுக
13, காந்தியடிகள், அயராது போராடினமையால் சுதந்தpரம் பெற்றுத் தந்தார் – தனிவாக்கியமாக மாற்றுக.
14. நம்பி, பள்ளியில் முதல் மாணவனாகத் திகழ்ந்தான் – தொடர் வாக்கியமாக மாற்றுக
15. அயராது படித்ததால் கந்தன் கடுமையாக உழைத்தான் ; அதனால் பொருள் ஈட்டினான் – கலவை வாக்கியமாக மாற்றுக
தமிழரின் வீர விளையாட்டில் சிலம்பம்|கி.சின்னசாமி
காதலும் வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும் மறப்பண்பு உடையோராகவும் வீரப்பற்று மிக்கோராகவும் தமிழர்கள் விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டும். இத்தகைய மறப்பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
தமிழரின் வீர விளையாட்டுக்கள்
1) சிலம்பம்
2) வழுக்கு மரம்
3) சல்லிக் கட்டு
4) கபடி விளையாட்டு
5)வில்வித்தை ஆகியனவாகும்.
சிலம்பம்
சிலம்பம் என்பது ஒருதடியடி தமிழர் தற்காப்புக்கலைமற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இதுதடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப்பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடுபுள்ளி) போன்றன அடிப்படையாகக்கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.
வரலாறு
மக்கள் தம்மைபுலி போன்ற விலங்குகளிடம் இருந்துகா ஈத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக்கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி,வேல், வாள், கம்பு போன்ற பலவிதமானஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் (சிலம்பு ) ஆகும்.
சிலம்பாட்ட வகைகள்
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன
1) துடுக்காண்டம்
2) குறவஞ்சி
3) மறக்காணம்
4) அலங்காரச் சிலம்பம்
5) போர்ச் சிலம்பம்
6) பனையேறி மல்லு
7) நாகதாளி
8) நாகசீறல்
9)கள்ளன்கம்பு ஆகியனவாகும்.
தொன்மை
சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மை யானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாகக் கருதப்படுகிறது.
பெயர்க்காரணம்
சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் போது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. “சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை,விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, சிலம்பம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், சிலம்பன் என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு சிலம்பம் என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே வாழும் பழங்குடியினருள் “சிலம்பரம்” என்ற பெயரும் வழக்கில் உள்ளது. உள்ள மலைப் பகுதிகளில்
இலக்கியத்தில் சிலம்பம்
சிலம்பம் சுமார் 10000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாகசிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியததில் குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு கத்த் போன்றவை ஒருகடையில்விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிகஆர்வமுடன் வாங்கிச்செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளின் “கோல்” என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில்,
”வீசுதண்டிடை கூர்மழு ஒக்குமே”
என்ற வரிகள் மூலம், “தண்டு) என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்பு விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவாம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.
ஆயுதப்பிரிவு
சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம். எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், வல்லவர்களாக விளங்கினர்.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக பட்டயப்படிப்பாகநடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் ஏசிலமாவரலாறும் அடிமுறைகளும் என்ற நூலை வெளியிட்டுள்ளது.
தற்காப்பு கலை பயிற்சி பயன்கள் – உடற்பயிற்சி நன்மைகள்
தற்காப்பு கலை பயிற்ச் பெறுபவருக்கு உடல், மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீகஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும். தற்காப்புகலைகளில் முறையான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு போன்றவற்றை மேம்படுத்தப்படலாம். வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு. இயக்கம் ஒருங்கிணைப்பு முதலியவற்றை மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு, முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்து செயல்பட தூண்டப்படுகிறது. மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்காக தற்காப்பு கலை பயிற்சி உதவுகிறது. பல தற்காப்பு கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்துகின்றன.
தற்காப்பு கலையின் பயன்கள்
நம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
நம் உடலில் ஓடும் இரத்தத்தின் அளவை சீராக்குகிறது.
நம் மூளையின் செல்களை வலுப்படுத்தி சுறுசுறுப்பான ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
உறுதியான உடல் அமைப்பைக் கொடுக்கிறது.
உடலும், மனதும் கட்டுப்பாடுடன் செயல்பட வைக்கிறது.
இறுதியாக எதிரிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
இது ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் நல்லஉடற்பயிற்சியாக இருக்கும்
சுருள் பட்டை
சுருள் பட்டை என்பது நீண்ட வாள். இது மிகவும் வளையக்கூடிய மெல்லிய இரும்பால் ஆனது அதேசமயம் சதையை வெட்டகூடிய அளவுக்கு கூர்மையானது. இது ஒரு இன்ச் அகலமும் 3 அடி நீளமும் கொண்டது. சுருள் போல மடித்தும் வைத்து கொள்ளலாம். பொதுவாக இதை இடுப்பு பட்டையாக அணிந்து கொள்வர்.
முடிவுரை
தமிழர்களின் வீரவிளையாட்டானா சிலம்பம் நெடுகாலமாக வழக்கத்தில் இருந்துள்ளது.சிலம்பட்டத்தின் வளர்ச்சி சில காலம் குறைந்து இருப்பினும் தற்பொழுது சிலம்பத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் மிகுதியாக இருப்பதால் சிலம்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லது இந்தியாவின் பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் வரவேற்பு பெற்றுள்ளது. சிலம்பத்தின் வளர்ச்சிக்கு தமிழக அரசும் ஈடுபாடு காட்டி வருகிறது. அதேப்போல்சிலம்பம் கற்றுக்கொடுக்கும் பள்ளிகளுக்கும், ஆசாங்களுக்கும் தகுந்த அங்கீகாரம் வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்,
கி.சின்னசாமி,
முதுகலைத்தமிழ் இரண்டாமாண்டு
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,
பசுமலை, மதுரை.
இலக்கியத்தில் புதைந்துண்ட அறிவியல் தகவல்கள்|கி.பானுராதா
முன்னுரை
இனியது இனியது தமிழ்மொழி உயிரினும் இனியது, உன்னதமானது, பண்பை வளர்ப்பது,பண்பாட்டை காப்பது. தொண்மைசான்ற இவ்வின்பத் தமிழ்மொழிமுன்னைப்பழைமைக்கும் பழமையாய்,பின்னைப்புதுமைக்கும் புதுமையாய் புத்துணர்வுடன் திகழ்வது. பண்டைத் தமிழ் மக்களின் கலாச்சார பழக்கவழக்க பண்பாட்டுப்பாரம்பரியத்தை எடுத்தியம்புவன நம் இன்தமிழ் இலக்கியங்களே! இயற்கையோடு இயைந்து இன்பமயமான வாழ்வுதனை வாழ்ந்தோர் நம்தம் பழங்குடி தமிழ்மக்களே ஆவர் என்று அழகுற நயம்பட எடுத்தியம்புவன, தமிழ் இலக்கியச் செல்வங்களேயாம். ஆழ்ந்த அறிவின் அடிப்படையில் அமைந்தவை அறிவியல் அறிவியல் என்பது மனித வாழ்வை மகத்துவமடையச் செய்வது, அறிவியல் என்பது அறிவிற்கும் அப்பாற்பட்ட தன்மையது. அத்தகு அறிவியல் சார்ந்த அறிவு நம் பண்டைக்கால மக்களின் பகுத்தறிவுடன் பின்னிப்பிணைந்து பிரதிபலிக்கிறது என்பதனை அவர்தம் படைப்புகள் புலப்படுத்தும். நம் இலக்கியப்பாடல்களை நுண்ணிதின் ஆராயப்படின் புலமை சான்ற புலவர்களின் அறிவியல் அறிவை நாமும் அறியலாம்.
இலக்கியத்தில் அறிவியல் தகவல்கள்
‘இலக்கியப்பாடல்’ என்பது இன்றைய மக்களின் சிந்தனைக் கருவூலம், அன்றைய மக்களின் அறிவுப் பெட்டகம் அத்தகைய அறிவுப்பெட்டகத்தை ஆழ்ந்து அகன்று ஆராய்ச்சி நோக்கில் நுணுகி ஆராயுமிடத்து எத்தனை, எத்தனையோ அறிவியல் தகவல்கள் ஆழப்புதைந்துண்டு கிடப்பதனை நாமும் அறியலாம். அறிவியல் சார்ந்த அறிவென்பது அன்றைய பழந்தமிழ் மக்களாகிய நம் முன்னோர்களுக்குள்ளேயும் இருந்துள்ளன.
இலக்கியத்தில் புரையோடிக்கிடக்கும் அறிவியல் சார்ந்த அறிவுச்செல்வங்கள்
அறிவியல் என்பது வாழ்க்கையை வளப்படுத்துவது, தொலைவில் உள்ளதனை கொண்டுவரவைப்பது, ஆழ்ந்த அகன்ற அறிவின் பனுவலில் அறிவியல்சார்ந்த அறிவாகபுலபடுவது,மருத்துவம் தொடர்பான அருகாமைக்குக் அடிப்படையில் எழுதுவது அறிவியல். இலக்கியப் வீண் சார்ந்த அறிவு கனிமம் தொடர்பான அறிவு எந்திரம் தொடர்பான அறிவு நீர் தொடர்பான அறிவு அணு தொடர்பான அறிவு மண் சார்ந்த அறிவு அறிவு இதேபோன்று பல தரப்பட்ட அறிவியல் சார்ந்த அறிவு தொடர்பான கருத்துக்கள் நம்தம் புலமை சான்ற புலவர்களின் கைவண்ணத்தில் எழுந்த தமிழ் இலக்கியத்தில் புதைந்துண்டு கிடக்கின்றன.
மருத்துவம் தொடர்பான அறிவு
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்பான் அத்தகு பாரதிதாசன். புகழாரத்திற்கு உரித்தான பாவேந்தர் 1330 அருங்குறளை 133 அதிகாரத்துள் வள்ளுவப்பெருமகனார் அமைந்துள்ளான். இந்த 133 அதிகாரத்துள் ‘மருந்து’ எனும் தலைப்பில் ஓர் அதிகாரத்தை அழகுற நயம்பட நவின்றுள்ளான்வள்ளுவப் பெருமான். இதில் நோய்மிகக்காரணம் என்ன என்பதனைப் பாங்குற படைத்துள்ளான் வான்புகழ் கொண்ட வள்ளுவன. இயற்கை ஈனும் காய்கறிகள் நமது உடலில்தோன்றும் நோய்களைச் சமப்படுத்தும் என்பதனை,
‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால்’
என்ற குறளின் வரி, நமக்கு மருத்துவத்தின் தொன்மைதனை நன்கு புலப்படுத்தும்.மருந்தில்லா மருத்துவத்தை நமக்கு அளித்துச்சென்றுள்ளனர் நம் பதினெட்டுச் சித்தர்கள். அச்சித்தர்கள் அவர்தம் நூற்களில் உடல்பிணியைப்பற்றியதகவல்களை ஏராளமாகஅளித்துச்சென்றுள்ளனர். பக்க விளைவுகள் அற்றது நம் சித்த மருத்துவமே ஆகும். இத்தகு இயற்கை சார்ந்த மருத்துவமுறையினை அன்றே கண்டறிந்துள்ளனர் நம் பழந்தமிழ் மக்கள். இத்தகைய மருத்துவத்தைக் குறிப்பிட வரும் தெய்வபுலவனவாம் வள்ளுவர்,
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றுது போற்றி உணின்” (குறள்-942)
என்ற குறள் வழி அழகுற எடுத்தியம்பியுள்ளான். இதேபோன்று கூடுவிட்டு கூடு பாயும் தன்மையுடைய மூலன் எனப்படும் திருமூலர், முக்கியதுவத்தை பற்றி உடலைப்பாதுகாக்க வேண்டியதன் புலப்படுத்ததியுள்ளார். தமது படைப்பில் இது போன்று மருத்துவம் தொடர்பான பலதகவல்கள் இலக்கியப்பனுவல்களில் காணக்கிடக்கிறது.
நீர் தொடர்பான அறிவு
நீரின் சுழற்சி குறித்து வள்ளுவப்பெருமகனார் அழகுற வான்சிறப்பு எனும் அதிகாரத்துள் எடுத்தியம்பியுள்ளார். தனது இரண்டடிகுறட்பாவில் நீரின் சுழற்சி இயக்கமே உலகத்தை வளப்படுத்தும் தன்மையது, அத்தகு நீரின் சுழற்சி இல்லை எனில் மழை வளம் குன்றும், ஒழுக்கநிலை மாறும், வெப்பநிலை மிகுந்து காணப்படும், புவியில் தட்பவெப்ப நிலையே மாறி அமையும். இந்நீர் சுழற்ச்சியே உயிரிகள் வாழ்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலை மாறின் கடலில் உள்ள நீர்கூட வற்றும் நிலைக்கு உள்ளாகும் என்பதனை,
“நெடுங்கடலும் தண்ணீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்”
என்ற இக்குறள் வழி நயம்பட நவின்றுள்ளார் திருவள்ளுவர். மேலும் இம்மழைநீரை அமிழ்தம் என்றும் வர்ணனை செய்துள்ளார். இது வள்ளுவரின் அறிவியல் அறிவன்றோ!
அணு தொடர்பான அறிவு
சங்க புலவரான ஒளவையாரும், கவிச்சக்கரவர்த்தி எனப் புகழப்படும் கம்பனும் அணுசேர்ப்பும், பிரிப்பும் பற்றி அன்றே தனது பாடலில் படைத்துள்ளனர் என்பதனை,
“ஓர் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி”
எனவரும் பாடல்வரியில் ஒளவைப்பெருமாட்டி அணு சோப்பு குறித்தும்,
“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்”
என்ற வரியில் கம்பர் அணுப்பிரிப்பு பற்றியும் அக்காலத்தே எடுத்தியம்பியுள்ளதை இவ்வரி நமக்கு நன்கு புலப்படுத்துகின்றன.
மண் தொடர்பான அறிவு
நிலத்தின் தன்மைக்கு ஏற்றார்போல நிலத்தை ஐவகை நிலமாக பாகுபடுத்தியுள்ளனர் நம் தமிழர். மேலும் நிறத்தின் அடிப்படையில் செம்மண் நிலமாகவும், தன்மையின் அடிப்படையில் களர் நிலமாகவும், சுவையின் அடிப்படையில் உவர் நிலமாகவும் பாகுபடுத்தியுள்ளனர். இது அவர்களின் மண்ணியல் தொடர்பான அறிவுக்கு சான்றாக அமைகிறது.
கனிமம் தொடர்பான அறிவு
பலதரப்பட்ட மணிகள் குறித்து சிலப்பதிகாரத்தில் உள்ள ஊர்காண் காதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐவகை மணிகளும் ஒளிரும் தன்மையில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளன என்பதனை,
“ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்கு கதிர் விடுஉம் நலங்கெழு மணிகளும்”
எனும் இவ்வரிகள் மூலம் அறியலாம்.
எந்திரம் தொடர்பான அறிவு
இன்றைய மக்களின் வாழ்வில் பெரும்பங்குவகிப்பது பொறியியல், பலதரப்பட்ட எந்திரமும் பொறியியல் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இத்தகு எந்திரம் தொடர்பான அறிவு அன்றைய மக்களிடம் இருந்ததை பதிற்றுப்பத்துப்பாடலில்
‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த’
எனும் பாடலில் அன்றே எந்திரம் தொடர்பான அறிவியல் அறிவு இருந்ததனை அறியலாம்.
வானியல் தொடர்பான அறிவு
திருவாசகத்தில் வானியல் தொடர்பான அறிவு பேசப்படுகிறது. உலகம் சுற்றும் தன்மையது, தொங்கிக்கொண்டு இருப்பது என்பதையும், வானுலகத்தில் காற்றில்லா பகுதி உண்டு என்பதையும் பண்டைகாலப் புலவர்கள் தங்கள் பாடல்களில் அருமையாகப் புலப்படுத்தியுள்ளனர்.
முடிவுரை
நம் பண்டைத்தமிழர்கள் பரந்துபட்ட அறிவியல் பார்வையுடையவர்கள். மண் சார்ந்த, விண் சார்ந்த, மருத்துவம் சார்ந்த, நீரியல் சார்ந்த, உயிரியல் சார்ந்த, எந்திரவியல் தொடர்பான அறிவுடையவர்கள் என்பதை நம் பழம்பாடல்கள் உணர்த்தும் வகையில் இடம்பெற்றுள்ளது. அறிவியல் சார்ந்த அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் இலக்கியப் பெட்டகத்தை ஆராயப்படின் பலதரப்பட்ட மறைந்துகிடக்கும் பல அறிவியல் தகவல்களை அறிய இயலும். இதன் வாயிலாக அன்றைய மக்களின் ஆழ்ந்து அகன்ற அறிவியல் அறிவை நம்மால் பெறமுடியும்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
கி.பானுராதா
தமிழ் ஆர்வலர், திண்டுக்கல்
கடிதம் எழுதுவது எப்படி?|இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்
கடிதம் இல்லா உலகம் வெறுமையானது. மனிதனுடைய உண்மையான மனநிலையை எடுத்துக்காட்டுவது கடிதம் ஆகும். நேரிலே சொல்ல முடியாதவற்றை எல்லாம் எழுத்தின் மூலமாகக் காகிதத்தின் வழியாக கடிதங்கள் மூலம் தெரிவிக்கலாம். ஒவ்வொருவரும் கடிதம் எழுவது பற்றி அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு இடத்திலும் கடிதம் மூலம் நாம் கேட்கும் ஒவ்வொரு கருத்துக்களுக்குமே மதிப்பு உண்டு.
ஆரம்ப காலத்தில் ஓலைச்சுவடி, துணிகளில் மையிட்டு எழுதி ஒற்றர்கள் (குதிரைகள்) மூலமாகவோ அல்லது புறாக்களில் கால்களில் கட்டியோ கடிதங்கள் அனுப்பட்டன. பின்னாளில் அதற்குத் தனியாக அஞ்சல் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. எந்தவொரு கிராமத்திற்கும் கடிதம் கொண்டு சென்று கொடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
இலக்கியங்களில் கடிதங்களை நிறைய பார்க்க முடியும். அக்காலங்களில் மனிதர்களையே தூது என்ற வாக்கில் சொல்லி அனுப்பப்பட்டார்கள். ஆனால் இவ்வகையான முறைகளில் நாம் சொல்லும் அனைத்தும் சரியாகப் போய்ச்சேருமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் நாம் அனுப்பும் ஆள் கூட்டியோ குறைத்தோ சொல்ல முடியும். ஆதலால் கடிதம் மூலம் எழுதி அனுப்பும் முறைதான் சரியாக இருக்கும்.
கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, தூது இலக்கியங்கள், தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், ஞாபக கடிதங்கள் எனக் காணமுடியும். கடித வகைகளை மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,
1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள்
2.உறவுநிலை சார்ந்த கடிதங்கள்
3.அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள்
மேற்கண்ட மூன்று வகையான கடிதங்களில் பிரிவுகளாகக் கீழ்க்கண்ட கடிதங்களை வரையறுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள்
1.விண்ணப்பக்கடிதங்கள்
2.அலுவலகக் கடிதங்கள்
3.புகார்க்கடிதங்கள்
4.வணிகக்கடிதங்கள்
2.உறவுநிலை சார்ந்த கடிதங்கள்
1.பாராட்டுக் கடிதங்கள் (வாழ்த்துக் கடிதங்கள்)
2.சுற்றுலாக் கடிதங்கள் 3.உறவுக்கடிதங்கள்
3.அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள்
1.பொது நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
2.உறவு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
எனப் பிரித்துக்கொள்ளலாம். மேற்கண்ட ஒவ்வொன்றின் தன்மையைத் தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.