Saturday, September 13, 2025
Home Blog Page 11

கண்ணீர்|கவிதை|திருமதி. பா. அக்தர்

கண்ணீர் - திருமதி. பா. அக்தர்
💎 நாம் பிறந்ததும்

நம் முதல் உணர்வு !

மழலைகள் பசிக்குப்

பேசும் மொழி !

 
💎 சிறுபிள்ளைகள்

சிறுவாடு கேட்க தேவை

விடலைகள் காதலைச் சொல்ல

துணைக்கு அழைப்பது!

 
💎 திருமணம் முடிந்ததும்

தாய்வீடு பிரியும் தருணம்

காதல் இல்லா கணவன்

கடுஞ்சொல் கேட்டதும்

கேட்காமலே வருவது !

 
💎 கடவுள் திருவடி சேரும்போது
 
மற்றவருக்கு மறக்காமல்

கொடுத்துச் செல்வது

ஆரம்பம் முதல் முடிவு வரை

முடிவிலா தொடர்கதை

கண்ணீர்! கண்ணீர்!

 
💎 தொடுவானம் தொடும் தூரம்

தொடுவானம் தொடும்

தூரம் வியப்பில்லை..

வானம் என்றுமே

பறவைக்கு இலக்கில்லை…

 
💎 வாழ்க்கையின் இலக்குகள்
 
யாருக்கும் சமமில்லை…

அவரவர் தேடல்களில்

அவரவர் வானங்கள்

 
💎 தூரங்கள் எதுவும் தொய்வில்லை

துன்பங்கள் எவருக்கும் நிலைப்பதில்லை

அச்சமின்றி அனுதினமும் ஆசைப் படு

அகிலமனைத்தும் உன் தொடுவானம்

தூரங்களைத் தொலைத்துவிட்டுத்

தொட்டு விடு வானத்தை…!

 

பனிவிழும் ரோஜா

💎 மங்கையர் கூந்தலில் மகுடமாய்.!

காளையர் வர்ணனையில் கவிதையாய்.!

மழலையின் பாத வர்ணமாய்!

காதலர்களின் சின்னமாய்!

கவிஞர்களின் எண்ணமாய்!

கடவுள் சிலையில் தெய்வீகமாய்!

கல்லறை தோட்டத்தில் கௌரவமாய்!

காண்போர் நெஞ்சில் குதூகலமாய்!

பூந்தோட்டத்தில் புது மலராய்!

புன்னகைப்பூக்கும்

இளவரசியே!  பனிவிழும் ரோஜாவே..!!

 
கவிதையின் ஆசிரியர்,

திருமதி. பா. அக்தர்

தமிழ் ஆர்வலர்,

இராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம்.

 

வருதுயர் மறந்தேன் நானே!|கவிதை|கவிஞர் அர. செல்வமணி

வருதுயர் மறந்தேன் நானே!-செல்வமணி
📜 வானுலவும் நிலவின் ஒளியில்
மனமகிழ்ந் தாடும் களியில்
கானுலவும் புள்ளின் இசையில்
கனிந்துளம் ஆழும் விசையில்
தேனுறையும் மலரின் விரிப்பே
சிந்திடும் அழகின் சிரிப்பே
வானுறையும் முகிலின் துளியே
வையமிதைக் காக்கும் அளியே


📜 தண்டமிழின் இனிமை தன்னில்
தணிந்திடும் வெம்மை என்னில்
ஒண்டமிழின் ஊற்றை மேவில்
உளமிக ஒன்றும் பாவில்
பண்டமிழின் பாக்கள் வெற்பே
பணைமிகக் கூட்டும் பொற்பே
வண்டமிழின் துணையால் தானே
வருதுயர் மறந்தேன் நானே!

அருஞ்சொற்பொருள்
அளி = அருள்

தண்டமிழ் = தண்மையான தமிழ்

ஒண்டமிழ் = ஒளிமிகு தமிழ்

மேவில் = விரும்பில்

பண்டமிழ் = பண்ணிசைத் தமிழ்

வெற்பே = மலையே

பணை = பெருமை

பொற்பே = அழகே

வண்டமிழ் = வளமிகு தமிழ்

கவிதையின் ஆசிரியர்
கவிஞர் அர. செல்வமணி,

அஞ்சற்பெட்டி எண்: 21,

பாசக்குட்டைப் புதூர்,

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் – 638401.

 

விடை வனைய வருவீரோ? |கவிதை|கவிஞர் ச.நவநீதனா

விடை வனைய வருவீரோ - கவிஞர் ச.நவநீதனா

📜 நின் தமிழ்ப் பற்றிற்குச்


சரணங்கள் ஈடாமோ?!

உண்ணும் உணவிலுமே,


உட்புகுங் காற்றிலுமே,


பருகும் நீரிலுமே,


உள்ளொளியாய்,


அழகுத் தெய்வமாமே!


 

📜 வெகுளிகள் அதிகந்தான்,


வெளிச்சமாகச் சிலவனவே!


முடிச்சிட்ட முண்டாசினுள்,


அதென்ன? – முத்தமிழ் !


 

📜 அரசிக்கு மட்டுமே,


வித்தாரமாய்ப் பெருங்கோட்டை!


ஆயிரந்தான் கற்றாலும்,


உம் செங்கவிகட்கு ஈடாமோ?


 

📜 ஏனிந்தப் பெருங்காதலோ?

இமைக்கின்ற விழிகளிலே,


பார்வையொன்று சுடராக,

வேள்வியே நடத்தும்


விதிகள்தாம் எதற்கு?


 

📜 எம் கேள்விகட்குப் பஞ்சமில்லை!


செஞ்சொற்களுக்குத்


தானிங்கு, பெரும்பஞ்சம்…


ஓரிரு சொற்கள்


கொடுக்கவுமே மனமில்லையோ?


செம்பொற்சுடரே!


 

 

📜 ஓடுங்குருதியிலே


ஒருத்தி மட்டும் ஒய்யாரமாய்


உறைந்து கிடப்பது,


என்னவித மாயங்களோ?


 

📜 உறைந்திருக்குந்தான்!


துளித் திமிரும் தான்!!!


அவள் வாழுஞ் சிறையுளே,


மிடுக்காய் ஒரு திமிர்!


இல்லையெனில்,

வனப்பிற்குத்தான் ஈடாமோ?


 

📜 கருவிற்குமோர்

பெரும்கவியே!

உயிரிருக்குந்தான்,

கருவாக ஒன்றும்,

அதனுயிராக அரசியுமாய்,

ஓர் கவிதான் இயம்பித்தாருமே!


வெகுளி தீர்த்து


வெளிச்சமாகிப் போகிறேன்…

செகத்தீரே!


 

📜 ஊன் வளர்க்க,


பசிக்குமாமே!


ஏனோ, இங்கே!!


உயிர் வளர்க்க,

பசித்ததாமே! இங்கே!!


உயிர் வளர்க்க, பசித்ததாமே!

பார்அதியின் மாயங்கள்தாம் பாரும்!


 

கவிஞர் ச.நவநீதனா


இளங்கலை இரண்டாம் ஆண்டு,


வணிகவியல் துறை 


கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும்
ஆராய்ச்சிக் கல்லூரி,

கோவை.

 

மாணவர்கள் மனதில் வளர்க்கலாம்|கவிதை| கவிஞர் ச.குமார்

மாணவர்கள் மனதில் வளர்க்கலாம்-கவிஞர் ச.குமார்

அப்துல்கலாம் வாழ்க்கை பாடத்தைப் படிக்கலாம்!

அறிவை மேம்படுத்தி புதியவை படைக்கலாம்!

ஏவுகணை நாயகன் பத்துக்கட்டளை ஏற்கலாம்!

அக்னிச்சிறகாய் உயர்ந்த எண்ணத்தில் பறக்கலாம்!



2020 போன்றே 2030யைச் சிறப்பிக்கலாம்!

மரம்தனை அனைவரும் நட்டு  வளர்க்கலாம்!

கற்றலை ஊக்கப்படுத்தி கற்பித்தலைச் சேர்க்கலாம்!

நோக்கம் நிறைவேற தொடர்ந்து  உழைக்கலாம்!




தடைகளைத் தகர்த்து வழிகளை உருவாக்கலாம்!

வேற்றுமை களைந்து ஒற்றுமையைப் புதுப்பிக்கலாம்!

சோதனை கடந்து சாதனை படைக்கலாம்!

நேர்மையை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகலாம்!



ஆசிரியப் பணியை அறமெனக் கடைப்பிடிக்கலாம்!

மானுடம் சிறக்க சிந்தனை நிலைக்கலாம்!

காலம் கலாம்தனை உன்னில் உருவாக் *கலாம்*!

கவிஞர் ச.குமார் 

தமிழ்த்துறை

உதவிப் பேராசிரியர்

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி

 

மாடுகளின் சுழியும் நம்பிக்கையும் | சு. கலைச்செல்வன்

மாடுகளின் சுழியும் நம்பிக்கையும்-சு. கலைச்செல்வன்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மாற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”   குறள் – உழவு: 104
ழவர்களுக்கு முதுகெலும்பாக விளங்குவது மாடுகளே. அதனால்தான் உழவர்கள் மாடுகளை வாங்கும்போதும் அதனை விற்கும்போதும் சுழி பார்த்து வாங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவர். இது அனைவரிடத்திலும் ஆழமாகப் பதிந்துள்ள ஒன்று. அந்த வகையில் நன்மை மற்றும் தீமை தரும் சுழிகள் மாடுகளில் உள்ளன. மாடுகளை வாங்கி அதனை உழவு தொழிலுக்குப் பயன்படுத்துகின்றனர். உழவுமாடுகள் விவசாயிகளின் செல்வம் ஆகும். மாடு என்றாலே பொதுவாகச் செல்வம் என்பது பொருள். கம்பன் மாட்டின் சிறப்பைச் சொல்லும்போது,

“வானத்தில் மேகங்கள் எழுந்து
குறித்த காலத்தில் மழை பெய்தாலும்
உலகினருக்கு செழிப்பு உண்டாவது மாடுகளினாலேதான்.
வேதம் படித்தவர்களால் வெய்யப்படும் வேள்விகள்
சிறப்புப் பெறுவதுவும் மாடுகளால்தான்.
படைகள் கொண்டு போர் புரியும் மன்னர்களின்
மதங்கொண்ட யானைகள் வலிமைப்
பெறுவதும் மாடுகளால்தான்”     -ஏர் எழுபது
என்று வேளாளர்களின் உழவுமாடுகளைச் சிறப்பிக்கின்றார். நம் நாட்டில் விவசாயிகள் பழங்காலம் தொட்டு இன்றுவரையில் மாடுகளின் பங்கு இன்றியமையாததாக இருந்து வருகின்றன என்பது ஒவ்வொரு விவசாயியும் தம்தேவைக்கு ஏற்றார்போல் மாடுகளை வைத்திருப்பார்கள்.

“ஏர் ஓட்ட, உரம் எடுத்துச் செல்ல,
விதை விதைக்க, பல்லு மரம் ஓட்ட,
கார் மரம் ஓட்ட, பரம்பு ஓட்ட, 
மகசூலை எடுத்துவர”     ஏர் எழுபது
எனப் பலதரப்பட்ட அவசியத்தேவைகளுக்கு கிராமச்சூழலில் மாடுகள் இன்றியமையாதனவையாக இருந்து வருகின்றன.

உழவுமாடுகள் வகைகள்
உழவுமாடுகள் பல வகைகளில் உள்ளன. வளைந்த கொம்புகளை உடைய மாடு குடைக்கொம்பன். சிவந்த நிறத்திட்டுக்களை உடைய மாடு செம்மறையன். குத்திட்டு நிற்கும் குளம்புடைய மாடு குத்துக்குளம்பன். குடை போன்ற காதுகளையுடைய மாடு குடைச்செவியன். கொம்புகளின் இரு முனைகளும் இணைந்த மாடு கூடுகொம்பன். பனங்காய் நிறத்தில் இருக்கும் மாடு மயிலை. கழற்சிக்காய் போன்ற கண்களையுடைய மாடு கழற்சிக்கண்ணன். சிறிய கொம்புகளை உடைய மாடுகள் மட்டைக்கொம்பன். கருப்பு நிற மாடுகளை கறுப்பன், மேலும் மஞ்சள்வாலன், படப்புப்புடுங்கி, கொட்டைப்பாக்கன், கருமறையன், பசுக்காலன், அணிற்காலன், படலைக்கொம்பன், விடர்த்தலை பூ நிறத்தான், வெள்ளைக்காளை, மணப்பாரை, வடக்கத்தியான் மேற்கத்தியான், ஓங்கோல், மற்றும் மல்லம் என‌ நிறைய வகை மாடுகள் இருந்துள்ளன.
இன்னும்கூட இருக்கும், ஆனால் நமக்கு தெரியுமா? முக்கூடற்பள்ளு என்ற நூலில் இருப்பதில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

“குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை
குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன்
வடர்ப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக் கண்ணன்
மட்டைக்கொம்பன் கறுப்பன் மஞ்சள்வாலன்
படப்புப் பிடுங்கி கொட்டைப் பாக்கன் கருமறையன்
பசுக்காலன் அணிற்காலன் படலைக்கொம்பன்
விடர்த்தலைப் பூநிறத்தான் வெள்ளைக் காளையும் இந்த
விதத்திலுண் டாயிரமே மெய்கா ணாண்டே.”   முக்கூடற்பள்ளு.பா.109
உழவுமாடுகள் மேல் உள்ள‌ சுழிகள்
சுழி என்பது வட்டமான வடிவத்தைக் குறிக்கிறது. மாட்டின் மீது பல இடங்களில் சுழி (அதாவது வளைவு) இருக்கும். சுழிகளின் (வளைவுகளின்) அமைப்பை வைத்து அவை நன்மை தரும் சுழிகள் மற்றும் தீமை தரும் சுழிகள் என்று பிரிக்கின்றனர். சுழியினைச் சுடி என்றும் பேச்சு வழக்கில் சொல்லுவதுண்டு.
மாடு வாங்கும்போது அதுவும் குறிப்பாக நாட்டு மாடுகளை வாங்கும்பொழுது, சுழிகள் நன்றாக அமைந்திருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உழவர் பெருமக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

உழவுத் தொழிலுக்கு அச்சாணியாக இருப்பது எருது மாடுகளே ஆகும். எனவேதான் உழவர் பெருமக்கள் தங்களிடம் உள்ள உழவு எருதுகளில் தீயசுழிகள் இல்லாமல் இருப்பவைகளை மட்டுமே பேணி வளர்ப்பர்.  பால் மாடுகளிலும் சுழி பார்ப்பவர்கள் உண்டு. மாட்டின் சுழிகளுக்கும் அவற்றின் உடல்நலன் மற்றும் உழைக்கும் திறனிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். கிராமத்தில் தம்தேவைக்கு மாடுகள் வாங்க முயலும்போது, மாடுகளின் சுடிகளை(சுழி) நன்கு அறிந்த ஒரு சிலரின் உதவியால் மட்டுமே மாடுகளை வாங்குவார்கள். அதுபோல் மாடுகளின் வகைகளையும் தத்தம் பகுதிகளுக்கு ஏற்றார்போல் வாங்குவார்கள்.

நன்மை செய்யும் சுழிகள்
1.கோபுரச்சுழி

2.லட்சுமிச் சுழி

3.தாமணி சுழி

4.வரி சுழி

5.இரட்டைக்கவர் சுழி

6.ஏறுபூரான் சுழி

7. விபூதி சுழி

8.கொம்புதானா சுழி

9.ஏறு நாக சுழி

10. பாசிங்சுழி.

நன்மை தரும் சுழிகள்
கோபுர சுழி
திமிலின் மேலும் திமிலின் முன்புறத்தில் அல்லது திமில் மற்றும் முதுகு சேருமிடத்தில் இருப்பது கோபுர சுழியாகும். இதை ராஜசுழி என்றும் கூறுவர். இந்தச் சுழி உள்ள மாட்டை வைத்திருப்போர் மிகுந்த செல்வத்துடன் வாழ்வர் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.

இலட்சுமி சுழி
கழுத்தின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் தள்ளி இருப்பது லட்சுமி சுழியாகும். இந்தச் சுழி உள்ள மாடு மிகவும் அதிர்ஷ்டம் கொடுக்க கூடியது. ஆனால் இந்தச் சுழி உள்ள மாடு கிடைப்பது அரிது. இவ்வகையான மாட்டினை வைத்து இருப்பவர் லட்சுமி செல்வாக்குடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.

தாமணி சுழி
மாட்டை பிணைக்கும் கயிறு அல்லது தாமணி எனப்படும் நடு முதுகுத் தண்டில் நீளமாக ஒரு கோடும் கோட்டின் இருபுறமும் இரு சுழிகள் இருந்தால் தாமணி சுழி எனப்படும். மேலும், முன்னங்கால்களுக்கும் கழுத்துக்கும் இடையில் அவை தாடியின் இருபுறங்களிலும் இருக்கலாம். இந்தr சுழி உள்ள மாட்டை வாங்குபவர்கள் மேலும் ஏராளமான மாடுகளை வாங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

விரி சுழி
முதுகுத்தண்டின் இடது பக்கத்தில் மட்டும் இருக்கும் சுழி விரிசுழி. இந்தச் சுழி உள்ள மாட்டை வாங்குபவர் நன்மைகளை அடைவர் என்பது நம்பிக்கை.

இரட்டைக் கவர் சுழி
முன்னங்கால் முட்டியின் இருபக்கத்திலும் இரண்டு பிளவு போல் இருப்பது இரட்டை கவர் சுழியாகும்.  இந்தச் சுழி உள்ள மாட்டை வாங்குபவர்களுக்கு மிகுந்த நன்மை உண்டாகும். இரண்டு பிளவு இல்லாமல் ஒரு பக்கத்தில் மட்டும் பிளவு இருந்தால் வீட்டில் இருக்கும் எல்லா மாடுகளுக்கும் இது தீமையாக அமையும் என்பது நம்பிக்கை.

பாசிங் சுழி
 
இரு கண்களுக்கு மேல் நெற்றியில் இருக்கும் சுழி இரட்டையாய் இருந்தால் அது பாசிங் சுழி, ஜோடி சுழி எனப்படுகிறது. இந்த சுழி உள்ள மாடு உள்ளவருக்கு கல்யாணம் விரைவில் நடைபெறும், மனைவியை இழந்தவருக்கு மருமணமாக நடக்கவும் வாய்ப்புகள் அமையும் என்பது நம்பிக்கை.

ஏறுபூரான் சுழி
மாட்டின் முதுகின் மத்தியில் பூரான் போன்று முடி பிளவு இருக்கும். அந்தச் சுழி முன்பக்கமாக வந்து முடிந்திருந்தால் அது ஏறுபூரான் சுழி எனப்படும். இச்சுழி உள்ள மாடு வளர்த்தால் சகல செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும் ஏறும் என்பது நம்பிக்கை.

விபூதி சுழி
மாட்டின் இரு கண்களுக்கும் நடுவில் இரண்டு சுழிகள் இரு புருவக்கோடுகளுக்கு கீழிருக்கும். இந்தச் சுழி உள்ள மாடுகளை வைத்திருப்பவருக்கு பணம், வீடு, தோட்டம், பொன் என அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

கொம்புதானா சுழி
இந்த சுழி கொம்புகளின் கீழ்ப்பக்கத்தில் இருக்கும். இந்த சுழி உள்ள மாடு இருந்தால், மந்தையில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் நோய் இல்லமால் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.

ஏறுநாக சுழி
மாட்டின் வாலின் மேல்பக்கம் முதுகு நோக்கி தொடர்ந்து சுழித்துச் செல்லும் சுழி ஏறுநாகச்சுழி என்று கூறப்படுகிறது. இந்தச் சுழி உள்ள மட்டை வாங்குபவர்களுக்கு நன்மை பயக்கும் அல்லது மங்களம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

நீர் சுழி
மாட்டின் மூத்திர துவாரத்திற்கு பக்கத்தில் காளை மாடுகளுக்கு இருக்கும் சுழி நீர் சுழி. இதை நல்ல சுழி என்றும் இதை கெட்ட சுழி என்றும் சொல்லமுடியாது.

மும்மூர்த்தி சுழி
முமம்மூர்த்தி சுழி என்பது மாட்டின் நெற்றியில் மூன்று சுழிகள் இருக்கும். இது முக்கோணம் வடிவத்தில் இருக்கும். இந்தச் சுழிகள் உள்ள மாட்டை வைத்திருப்பவர் மூவேந்தர் போல வாழ்வர் என்பதும் அவர்களிடம் பொன்னும் பொருளும் அதிகமாகச் சேரும் எனவும் நமபப்படுகிறது.

கூக்கை வாழ் சுழி
                 
கூக்கை வாழ் உள்ள மாடு வீட்டில் பிரச்சனை உள்ள குடும்பத்தைச் சேர்த்து வைக்கும் என்பது நம்பிக்கை.

மாட்டின் தீமை தரும் சுழிகள்
முக்கண் சுழி / அக்கினி சுழி

மாட்டின் இரு கண்களுக்கும் நடுவில் முக்கோண வடிவில் காணப்படும். இந்தச் சுழி முக்கண் சுழி எனப்படும். இந்தச் சுழி உள்ள மாடு குடும்பத்தில் பல இடையூறுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

குடைமேல் குடை | இடி மேல் இடி
மாட்டின் நெற்றியில் மேலும், கீழும் சுழி இருக்கும், இதை குடைமேல் குடை (அ) இடி மேல் இடி சுழி என்று கூறுவர். இச்சுழி உள்ள மாட்டை வைத்திருப்பவர் மிகுந்த துன்பத்திற்கு ஆளவார். சிலநேரம் பொருள் அனைத்தையும் இழக்கவும் நேரலாம்.

விலங்கு சுழி
மாட்டின் முன்னங்கால் அல்லது பின்னங்கால், பின்புறமோ அல்லது கணுக்காலிலோ சுழித்து இருந்தால் விலங்கு சுழி என்று கூறுவர். இந்தச் சுழி உள்ள மாட்டை வாங்குபவர், விலங்கிடப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது நம்பிக்கை.

பாடை சுழி
மாடுகளின் முதுகின் பின்பகுதியில், வாலின் முன்பக்கம் அல்லது பின்பக்கமாகக் காணப்படுவது பாடை சுழி ஆகும். இந்தச் சுழி மிகவும் ஆபத்தாகக் கருதப்படுகிறது, இது குடும்பத்தில் உள்ளவரின் உயிருக்கு அபயம் ஏற்படும்.

பெண்டிழந்தான் சுழி
 
மாட்டின் வாலின் உட்பக்கம் மலத்துவாரத்திற்கு நடுவில் ஒன்று அல்லது இரண்டு சுழிகள் இருக்கும். இதற்கு பெண்டிழந்தான் சுழி என்று பெயர். இந்தச் சுழி உள்ள மாட்டை வைத்து இருப்பவருக்கு, ஆபத்துகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாகக் குடும்ப பெண்களுக்கு துன்பம் ஏற்படும்.

நாகப்பட சுழி
மாட்டின் தொடைகளின் பின் வளைவுகளில் பாம்பு படம் எடுப்பது போன்று சுழி இருந்தால் நாகப்பட சுழி எனப்படும்.

தட்டுச் சுழி
மாட்டின் இடுப்பு சேருமிடத்தில், முதுகில் காணப்படும். இச்சுழி உள்ள மாட்டை வைத்திருப்பவர்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்.

துடைப்பை சுழி
மாட்டின் வால் ஆரம்பிக்கும் இடத்தில் உள்பக்கம் இச்சுழி இருக்கும். வீட்டில் உள்ள செல்வத்தைச் சுத்தமாகத் துடைத்து விடும் என்பது நம்பிக்கை.

புட்டாணிச் சுழி
மாட்டின் இடுப்புக்கும் வால் ஆரம்பிக்கும் இடத்திற்கும் மத்தியில் இருக்கும். மாட்டில் இச்சுழி இருந்தால் மாட்டின் உரிமையாளருக்கு தீமை ஏற்படும்.
படைக்கட்டு சுழி
               
மாட்டின் உதட்டில் இச்சுழி இருக்கும். இச்சுழியினால் பண்ணையில் உள்ள மற்ற மாட்டை ஒழித்து விடும் உரிமையாளருக்கும் தீங்கு ஏற்படும்.

எச்சுப்புள்ளி
மாட்டின் மலத்தூவாரத்திற்கும் வால் ஆரம்பமாகும் இடத்திற்கும் இடையில் வெண் புள்ளிகள் போன்று காணப்படும். இச்சுழி உள்ள மாட்டின் சொந்தக்காரருக்கு வியாதிகள் ஏற்படும்.

வால் முடங்கிச் சுழி
மாட்டு வாலின் கீழ்ப்புறம் உட்பக்கமாக அமையப்பெற்ற ஒற்றைச் சுழியானது வால் முடங்கி சுழியாகும். இச்சுழியினால் பண்ணையில் உள்ள மற்ற விலங்கிற்கு தீங்கு ஏற்படும்.

இறங்கு நாக சுழி
இச்சுழி வாலின் மேல் காணப்படும். மாட்டின் கீழ்ப்பக்கமாகத் தரை நோக்கி காணப்படும். இச்சுழி உள்ள மாட்டை வைத்திருப்பவர் செல்வம் இழந்து ஏழ்மை நிலை அடைவார்.

கருநாக சுழி
கழுத்தைச் சுற்றி மணிக்கயிற்றை அழகாக கட்டியது போன்று மாட்டில் இருக்கும். மாட்டில் இச்சுழி காணப்பட்டால் இம்மாட்டை வைத்திருப்பவர் துன்பம் அடைவார்.

மென்னிப்பிடி சுழி
               
மாட்டில் கழுத்தின் கீழ்பக்கத்தின் இரண்டு மயிர்ப்பிளவுகள் மென்னியைப் பிடிப்பது போல் இருக்கும். இம்மாட்டை வைத்திருப்பவருக்கு கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.

இறங்கு பூரான் சுழி
மாட்டில் பூரான் போன்ற மயிர் பிளவு முதுகின் மத்தியில் ஆரம்பித்து வால் பக்கம் தொடர்ந்து முடியும்.
முடிவுரை           
மாடுகள் மனிதனுக்கு நன்மை மற்றும் தீமை இரண்டையும் வழங்கக்கூடியதாக உள்ளது. எனவே, மாடுகள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான மனிதனோடு ஒன்றி இருப்பதாக உள்ளது. ஆகவே மனிதனின் இன்றியாமையத் தேவையான மாடுகள் பிறந்தது முதல் ஒரே வீட்டில் இருந்தால் தீமைத்தரும் சுழிகள் பற்றிய நம்பிக்கைக்குறைவு. ஆனால் பிறந்தது முதல் ஒரே வீட்டில் இருந்தால் நன்மைத்தரும் சுழிகள் பற்றிய நம்பிக்கை அதிகமாக இருக்கும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

சு. கலைச்செல்வன்,
முனைவர் பட்ட ஆய்வாளர் மற்றும் உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 130.

 

நான் இப்படி தான்…! |கவிதை|யோகேஷ் குமார்.ச

நான் இப்படி தான்…! யோகேஷ் குமார்.ச

✒️ நான் இப்படி தான்..!


தமிழ் மொழியை நேசிப்பவன்


பிற மொழியை மதிப்பவன்


என்னை மதிபவர்களை மதிப்பவன்


என்னை மிதிபவர்களை மண்ணிபவன்

 



✒️ நான் இப்படி தான்..!


சிறியவையும் என்னை மகிழ்விக்கும்


உறவுகள் என்னை ஏமாற்றும் – இருப்பினும்


நான் இப்படி தான்..!



 

✒️ இயற்கையின் காதலன் நான் !


புத்தகங்களின் வாசகன் நான் !


பேனாவின் மைந்தன் நான் !


பயணங்களின் நேசன் நான் !


தனிமையின் காதலன் நான் !


புகழ்ச்சிக்கு எதிரானவன் நான் !


வெற்றியில் மகிழ்பவன் நான் !


தோல்வியில் கற்றுகொள்பவன் நான் !


கவியின் வாசகன் நான் !


வாழ்கையின் நேசன் நான் !


நான் இப்படி தான்..!
         

 

கவிதையின் ஆசிரியர்,

கவிஞர்  ச.யோகேஸ்குமார்,

மூன்றாமாண்டு இளங்கலை நிர்வாகவியல்,

KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்,

 

தாழம்பூ|கவிதை| நா.மோகனசெல்வி மனோகரன்

தாழம்பூ-கவிதை -நா மோகன செல்வி மனோகரன்
🌺 மடல் விரித்த
மங்கையாய்
மணநாளில் !
மங்கலமாய் இதழ் வெடிக்கும்

இளம் தாழம்பூவே..!

 
🌺 பூத்துக்குலுங்கும்

புகழ் உனக்கு இல்லை !

புதருக்குள் மண்டி மனம் வீசும்!

மங்கை நீ

மணக்கும் அழகி !

 
🌺 இதழ்கள் அழகிய

ஜடைப் பின்னலில்

பின்னிப் பிணைந்து

இணைந்து ஊஞ்சலாட…
 

🌺 நறுமணமும் நகைக்கொண்டு

வெட்கப்பட்டு கொண்டது..!

வெள்ளை வீச்சருவாளாய்

மனதை  அள்ளியது..!

 
🌺 நறுமணமடல் மங்கையவள்

புதியதாய் பூத்திடவே..!

கருணாகமும் இடம் தேடி தவழ்ந்தது!

தடம் பதித்த கால்வாய் நீரும்

கண்ணீர் துளிபட காத்துக் கிடந்தது!

 
🌺 மலர்விற்கான விழா 

திருமண வைபோகம்

வரவேற்பில் முதலிடமாய்

சாரம் கொண்டாய்..!


 

🌺 தாழம்பூவே!

விதி செய்யும் நாட்களும்

வினாக்குறிகளாக

மாதங்களை நோக்கி

மலர்விற்காக….


 

கவிதையின் ஆசிரியர்,
கவிஞர் முனைவர் நா மோகன செல்வி மனோகரன்
உதவிப்பேராசிரியை,
தமிழ்த்துறை,
குமுதா கல்வியியல் கல்லூரி,
நம்பியூர், கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு மாவட்டம்.

 

சிலப்பதிகாரத்தில் ஐந்திணை மக்களின் வாழ்வியல்|ப.தனேஸ்வரி

சிலப்பதிகாரத்தில் ஐந்திணை மக்களின் வாழ்வியல்-ப.தனேஸ்வரி
ஆய்வுச்சுருக்கம்
               
சிலப்பதிகாரம் முத்தமிழ்க்காப்பியம் குடிமக்களைக் காப்பியத் தலைமையாகக் கொண்டதால் குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலம்பில் ஐந்திணைகளின் அமைப்பு முறை சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. இவ்வாய்வில் ஆய்வுக்களமாக ஐந்திணை மக்களின் வாழ்வு எடுத்து ஆராயப்பட்டுள்ளது.
               
சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாக இருந்தவர்கள் குறிஞ்சி நில மக்களே. குறிஞ்சி நில மக்கள் முருகனைத் தெய்வாக வழிபட்டனர். அவர்கள் மலையில் கிடைக்கும் தானியங்கள், தேன் ஆகியவற்றை உண்டு வாழ்ந்ததையும் விலங்குகளை வேட்டையாடினர் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. பிற மக்களைக் காட்டிலும் முல்லை மற்றும் மருத நில மக்கள் மேம்பட்ட வாழ்வு வாழ்ந்தனர் என்பதையும் நகரங்களில் அவர்கள் செல்வச் செழிப்பான வாழ்வு வாழ்ந்ததையும் மாதரி, ஐயை பாத்திரங்கள் மூலம் அறியப்படுகிறது. மக்கள் மன்னர் மீது கொண்டிருந்த அன்பும் மரியாதையும் மலைவாழ் குறவர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
               
சங்ககாலத்தில் தோன்றிய திணைநில மக்களின் பெயர்கள் பிற்காலத்திலும் தொடர்ந்த நிலை அறியப்படுகிறது. குறவர்கள் அருவிகள், சுனைகள் நிறைந்த பகுதியில் வளமையான வாழ்வு வாழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்களை அரசனுக்கு இணையானவராகக் கருதிக் கொண்டனர். நகரத்தில் வசதியான வாழ்வு வாழ்ந்ததும் கண்டறியப்பட்டது. இவர்களின் வளமான வாழ்விற்கு ஆதாரமாக கால்நடைகள் இருந்துள்ளதும் அறியப்பட்டது.
               
முல்லை நிலத்தில் ஏறு தழுவுதல் சிறப்பாக நடைபெற்றது. ஏழு தழுவிய ஆடவனையே மகளிர் விரும்பியதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் கூத்து நடத்துவது வழக்கமாக இருந்துள்ளது. ஐந்திணை மக்களும் மன்னரிடத்தில் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப வாழ்விற்காகப் பெண்களும் பணி செய்துள்ளனர். களை பறித்தல், நாற்று நடுதல், மீன் உலர வைத்தல், திணைப்புனம் காத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தமை ஆராயப்பட்டுள்ளது. பெண்கள் கள் விற்றனர் என்பதும் கள் அருந்தினர் என்பதும் கண்டறிப்பட்டுள்ளது. கணிகையர், பரத்தையர் பற்றிக் கூறும் போது பரத்தமையொழுக்கம் பெரும் குற்றமாகக் கருதப்படவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. ஒழுக்கம் தவறிய ஆண் மகனை பரத்தர் என்ற சொல்லால் இளங்கோ குறித்துள்ளது ஆண் பெண் சமநிலையைக் குறிக்கிறது. ஐந்திணைகளையும் இலக்கண முறைமை பிறழாமல் இளங்கோ சிலம்பில் கையாண்டுள்ளார்.

முன்னுரை
               
தமிழர்கள் தாம் வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பகுத்துக் கொண்டனர். குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடுவதும், முல்லை நிலத்தில் ஆடு மாடுகளை மேய்ப்பதும், மருத நிலத்தில் வேளாண்மை செய்தும் நெய்தல் நிலத்தில் கடல் சார்ந்த மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்கள் செய்தும் வாழ்வது மக்களின் வாழ்வியல் முறைகளாகும்.
               
ஐந்திணை மக்களுள் முல்லை மற்றும் மருத நில மக்கள் அறிவாற்றலாலும் நாகரீக மேம்பாட்டாலும் மற்ற திணை மக்களிடமிருந்து மாறுபட்டு மதுரைப் புறஞ்சேரிப் பகுதியில் வாழ்ந்தனர். இது ‘பதியெழு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்” (15:15-6) என்பதால் அறியப்படுகிறது.  குன்றக்குறவை குறிஞ்சி நில மக்களின் வாழ்வியலையும் ‘ஆய்ச்சியர் குறவை” முல்லை நில மக்களின் வாழ்வியலையும், இந்திர விழாவூரெடுத்த காதை” மருத நில மக்களின் பண்பு நலனையும் ‘கானல் வரி” நெய்தல் நில மக்களையும் ‘வேட்டுவ வரி” பாலை நில மக்களின் இயல்புகளையும் விவரித்துள்ளன.

குறிஞ்சி நில மக்கள்
               
குறிஞ்சி நில மக்களின் வழிபடு தெய்வம் முருகன். இவர்கள் மலையில் கிடைக்கும் தேன், மூங்கிலரிசி, கிழங்குகள் போன்றவற்றை உண்டு வாழ்ந்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதி ‘சிறுகுடி” என்பதை ‘மழை விளையாடுங் குன்று சேர் சிறுகுடி” (108) எனக் குறுந்தொகை காட்டும்.

குறிஞ்சி நிலத்தலைவன்
               
‘வெற்பன்” (24:12:2) ‘சிலம்பன்” (24:11:2) ‘குறவன்” (25:27) எனச் சிலப்பதிகாரத்தில் குறிஞ்சித் திணைத் தலைவனின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க காலத்தில் வழங்கப்பட்ட திணை நில மக்களின் பெயர்கள் பிற்காலத்திலும் தொடர்ந்த நிலையை அறிய முடிகிறது.

தொழில்
               
குறவர்களின் பொதுவான தொழில் தேனெடுத்தலும், வேட்டையாடுதலுமாகும். கொடிச்சியர் தினைப்புனம் காத்தனர்.

‘குருவி ஓம்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி
அருவி ஆடியும் சுனை குடைந்தும்” (24:1:1-2)
குறிஞ்சி நில மக்கள் பொழுது போக்கியதை சிலம்பு குறிப்பிடுகிறது.
 குறவர்கள் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதை ‘குல மலை உறைதரு குறவர்” (24:17:2) என்ற அடிகளில் சிலம்பு குறித்துள்ளது. அருவியும் சோலையும் சூழ்ந்த மலைப்பகுதியில் குறவர்கள் வாழ்ந்தனர். அதனால் குறவர்கள் வாழ்வு வளமிக்கதாக இருந்தமை அறியப்படுகிறது.

குரவைக் கூத்து
               
கூத்து வகைகளில் ஒன்று குரவைக் கூத்து இது ஏழு முதல் ஒன்பது மகளிர் வட்டமாக நின்று கைகோர்த்து ஆடுவது குரவைக் கூத்து குன்றக் குறவை, ஆய்ச்சியர் குறவை என இரு வகைப்படும். குறிஞ்சிப் பெண்கள் முருகனுக்காக ஆடுவது குன்றக் குறவை ஆகும். குறவர்கள் குறிஞ்சிப் பண் பாடவும், இசைக் கருவிகளை இசைக்கவும் குரவைக் கூத்தாடவும் (24:7) வெறியாட்டு நிகழ்த்தவும் (14.11) அறிந்திருந்தனர். குறவைக் கூத்தின் ஒலியும், குறிஞ்சிப் பண்ணின் ஒலியும், திணைக் குற்றும் மங்கையரின் வள்ளைப் பாட்டின் ஒலியும் மலை வளம் காண வந்த செங்குட்டுவனை வரவேற்றதாக சிலம்பு குறிப்பிடுகிறது. இதனால் குறவர்களின் கலையுணர்வு புலனாகிறது.

                அரசனைக் காண வந்த குறவர்கள் ‘ஏழ்பிறப்பு அடியேம்” (25:56) என்று கூறுவதன் மூலம் தன் மன்னனிடம் கொண்ட அன்பும் பற்றும் வெளிப்படுகின்றன.
‘பல்நூறு ஆயிரத்தாண்டு வாழி” (25:63) எனவும், ‘ஊழி ஊழி வழி வழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம்” (25:91:92) எனவும் வாழ்த்தியமை மலை மக்களின் வாழ்த்தும் பண்பைக் காட்டுகிறது.

முல்லை நில மக்கள்
               
சங்க காலத்தில் ஆயர்கள் தம்மை அரசனுக்கு இனையானவராகக் கருதிக் கொண்டனர்.
               
‘நட்ட குடியொடு தோன்றிய           
நல்லினத்து ஆயர்”
               
கலித்தொகைப் பாடல் இதற்குச் சான்றாகும். இவர்கள் ஆயர், கோவலர், இடையர் என்றும் வழங்கப்பட்டனர். இவர்கள் பிற்காலத்தில் இடம் பெயர்ந்து நகரங்களில் வாழ்ந்தனர் என்பதை மாதரி, ஐயை போன்ற ஆயர்களின் வாழ்வு மூலம் அறியப்படுகிறது. முல்லை நில மக்களின் வழிபடு தெய்வம் திருமால் வரகு, சாமை, முதிரை போன்றவை இவர்களின் உணவாகும். கால்நடைகளை மேய்த்து வாழும் இடையர்களுள் ஆடு மேய்ப்பவர் ‘புல்லினத்தார்” என்றும் மாடு மேய்ப்பவர் கோவினத்தார் என்றும் வழங்கப்பட்டனர். இவ்விரு ஆயரும் ‘ஏறு தழுவல்” போட்டியில் வென்று ஒரு குல மகளிரை மணம் புரிதற்குரியர் என்பதை முல்லைக் கலி தெளிவுறுத்தும்.

‘ஆ காத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை” (15:120-121)
               
என்ற வரிகள் ஆயரின் சிறப்பை உணர்த்தும் இவர்களின் வளமான வாழ்விற்கு ஆதாரமாகக் கால்நடைகள் இருந்தன. பெண்கள் மோர் விற்றுப் பொருள் சேர்த்துள்ளனர். ‘அளை விலை உணவின் ஆய்ச்சியர்” (16:3)  என்ற வரிகள் மூலம் ஆண் பெண் இருவரும் இணைந்து தொழில் செய்து குடும்பத்தை நடத்தியமை புலனாகிறது.

ஏறு தழுவுதல்              
சங்க காலத்தில் இருந்து வந்த ஏறு தழுவுதல் சிலம்பிலும் தொடர்ந்தது ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் தலையாய கடமையாகக் கருதப்பட்டது. ஏறு தழுவிய வீரனையே ஆயர் மகள் மணந்துள்ளாள். பருவமடைந்த ஒவ்வொரு பெண்ணும் ஒரு காளையை வளர்ப்பாள். அக்காளையை அடக்கிய இளைஞனையே அப்பெண் மணம் புரிவாள் என்பதை சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை விளக்கும். (17:6-13) காரி எருத்தின் சினத்திற்கு அஞ்சாமல் பாய்ந்து சென்று அடக்கியவனை ஆயமகள் விரும்புவாள் என்பதை,
  
‘காரிகதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ்           
வேரி மலர்க் கோதையாள்”  (17:6)
என்ற கொளு விளக்கும். காளைகளைப் பெண்கள் தொழுவில் வளர்த்தமையினை,
               
‘தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்           
எழுவர் இளங்கோதை யார்” (17:13:2-3)
               
என்ற வரிகள் சுட்டுகின்றன.

குரவைக் கூத்து
               
இன்பத்திலும் துன்பத்திலும் கூத்து நடத்துதல் மக்களின் மரபாக இருந்துள்ளது. திருமாலுக்காக ஆடும் கூத்து ஆய்ச்சியர் குரவை எனப்படும். இது இசையும் கூத்தும் இணைந்து ஆடப்படும். கண்ணகியின் துயர் நீங்க ஆயமகளிர் குரவைக் கூத்து நிகழ்த்தினர்.

‘வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடாடிய
குரவையாடுதும் யாமென்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே”  (17:5:10-12)
என்ற வரிகளில் கண்ணகிக்குத் துன்பம் நேரப் போவதைக் கன்றுக்கு ஏற்படும் துயரென குறிப்பாக உணர்த்தி, அத்துயர் நீங்க குரவைக் கூத்தை நிகழ்த்தியது ஆய்ச்சியரின் உளப்பாங்கினை உணர்த்துகிறது.
ஆயரால் அடக்குவதற்குரிய ஏறுகள் காரி, வெள்ளை, சேய், குரால் என நிறத்தால் பெயர் பெற்றிருந்தன. காரியும் வெள்ளையும் மாயவன,; பலதேவன் ஆகிய கடவுள்களை ஒத்தமையால் ஆய்ச்சியர் குரவையுள் அவை இடம் பெற்றுள்ளன. ஆயர்கள் காடுகளில் ஆக்களை மேய்ப்பவர் அவர்கள் கோடாலி, சூட்டுக்கோல், கறவைக் கலங்கள், புல்லாங்குழல் ஆகியவைகளை உறியில் தொங்கவிட்டு உடன் வைத்திருந்தனர்.
               
‘குழல் வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு           
மழலைத் தும்பி வாய்வைத் தூத”
               
என்று சிலப்பதிகாரம் வண்டுடன் ஆயரை இணைத்துக் கூறுகிறது. ஆயர் குல தெய்வமாகிய மாயோனும் குழலிசை வல்லோன். அவன் குழலில் எழும் முல்லைப் பண்ணின் இசையை ஆய மகளிர் கேட்க விரும்பி யதனை,

‘கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன           
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்           
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழி”
               
என்னும் வரிகளில் அறியலாம். ஆயர்களிடையே இசையும் கூத்தும் ஆகிய கலைகள் சிறப்புற்றமைக்கு சிலம்பு சான்றாகும். குரவைக் கூத்து முடிவில் மன்னனையும் அவன் வெற்றி முரசையும் வாழ்த்தியதை அறிய முடிகிறது. இறைவனை ஆடிப் பாடி வணங்கும் முறைமை நாயன்மார் ஆழ்வார்களின் பக்திப் பாசுரங்களில் நிலைத்த இடத்தைப் பெற்றது. இம்மரபு பழந்தமிழகத்திலேயே உண்டு என்பதற்கு ஆய்ச்சியர் குறவை சான்றாகும்.

மருத நில மக்கள்
               
நதிகளில் ஓடி வரும் நீரை வாய்க்கால்களின் வழியாக ஏரி, குளங்களில் நிரப்பி கரும்பு, மஞ்சள், நெல் போன்றவற்றை பயிர் செய்யும் நீர் வளம் மிக்க  நிலம் மருதம் எனப்பட்டது. அங்கு வாழும் மக்கள் உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர் ஆவர். இவர்களின் வாழிடம் ஊர், பேரூர் எனப்பட்டது. அரிசி, பால் கரும்பு போன்ற உணவுகளை உண்டனர். ஏனைய மக்களை விட மருத நில மக்கள் நாகரீகத்தில் மேம்பட்டவர்கள். சங்க காலத்திலிருந்தே தமிழகம் உழவுத் தொழிலில்  சிறந்திருந்தது. மன்னரின் வெற்றி உழவரின் கலப்பையை நம்பியிருந்ததனை
               
‘பொருபடை தரூஉம் கொற்றம் உழவர்           
ஊன்று சால் மருங்கின், இன்றதன் பயனே”  (புறம் 35)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள் வெளிப்படுத்தும் திருவள்ளுவர் உழவுக்குத் தனி அதிகாரம் அமைத்துள்ளார். உழுதொழிலால் உணவும் பிறவும் நிறையப் பெற்று ஓய்வும் வாய்க்கப் பெற்றவர் மருத நில மக்கள் இவர்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்ததைக் காண முடிகிறது.

ஆடவர் தொழில்
               
உழவர்கள் செந்நெற்கதிர் அறுகு, குவளை போன்ற மலர்களைக் கலந்து தொடுத்த மாலையை மேழிக்குச் சூட்டி உழுதனர். நெற்பயிரை அறுத்துப் போரடிக்கும் போதும் கடா விடும் போதும் பாடல்களைப் பாடினர் வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடல் பாடித் தொழில் செய்வது, தமிழகக் கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ளது. உழத்தியர் நெல் நாற்றுக்களைப் பிரித்து நடும் போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு எனப்பட்டது.

ஏர்மங்கலப்பாடல்
               
கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தியடிகள் ஆகிய மூவரும் புகார் நகரத்திலிருந்து மதுரையை நோக்கிச் சென்றனர். அப்போது அவர்கள் வழியில் கண்ட உழவர்களின் செயல்களை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தியுள்ளார். அருகம்புல்லையும், குவளை மலர்களையும், நெற்கதிர்களையும் கலந்து கட்டிய மாலையை அணிந்து ஏரொடு நின்ற உழவர்கள் ஏர் மங்கலப் பாடலைப் பாடியுள்ளனர். (10:132-135) வயல்களில் வேலை செய்யும் உழவர்கள் பாடல்கள் பாடி உழைப்பின் கடுமையை எளிதாக்கிக் கொள்கின்றனர். கதிரை அரிந்து குவிக்கும் போதும், கடா விடும் போதும், நெல்லை முகந்து கொடுக்கும் போதும் முகவைப் பாட்டுப் பாடினர் (10:136-137)

பெண்களின் தொழில்
               
நாற்று நடுதல், களையெடுத்தல், விளை நிலங்களைக் காவல் செய்தல் போன்றன மருத நிலப் பெண்களின் தொழில்களாகும். தினைப் புனங்களில் பரண் கட்டித் தட்டை என்னும் கருவியால் ஒலியெழுப்பிக் கிளியை விரட்டினர் எனக் குறிஞ்சிப்பாட்டு (43-44 வரிகள்) குறிப்பிடுகிறது. நடவு நடும் பெண்கள் கள்ளுண்டு களித்துப் பாடிய குறிப்பு சிலம்பில் இடம் பெற்றுள்ளது (10:130-131) சங்க காலத்தில் பெண்கள் கள்ளுண்ட நிலை பிற்காலத்திலும் தொடர்ந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்.

கணிகையர்
               
சங்க இலக்கியங்களில் கணிகை பற்றிய செய்தியோ சொல்லோ இடம் பெறவில்லை. பரிபாடல் ‘மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை” (16) என்று கூறுகிறது. ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய பெண் கணிகை எனப்பட்டாள் சிலப்பதிகாரத்தில் ‘கணிகையர்” (5:50) ‘காவற்கணிகையர் (5:50) ஆடற்கூத்தியர் (5:50) ஆடல் மகள் (8:109) பூவிலை மடந்தையர் (5:51) மங்கலத்தாசியர் (6:125) வம்பப்பரத்தை (10:219) கடைகழி மகளிர் (14:71) நாடக மடந்தையர் (22:142) பண் இயல் மடந்தையர் (22:139) என்று கணிகையர் பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதில் எவ்விடத்திலும் மாதவியைப் பரத்தை என்ற பொருளில் இளங்கோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                பரத்தையர் இருந்த வீதி இருபெரு வீதி (14:167) எனப்பட்டது. தவம் செய்பவராயினும், காமவயப்பட்ட காமுகராயினும் கணிகையர் வீதியைக் கண்ணுற்றால் அங்கு தங்கிச் செல்லத் தூண்டும் வன்மையுடையவர் பரத்தையர் (14:160:165) பரத்தையர் பிறரைக் கவர்ந்திழுக்கும் தன்மையுடையவர் என்பது புலனாகிறது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஆடவர்கள் கணிகையரை நாடிச் சென்றதற்குக் காரணம் அவர்களின் அழகும் ஆடல் பாடல் போன்ற கலைகளுமே ஆகும். கோவலன் மாதவியை நாடிச் சென்றமைக்கு முதற் காரணம் கலையே என்பது மு.வ.வின் கருத்து (டாக்டர் மு.வரதராஜன் மாதவி ப.26)

பரத்தர்
               
குடும்ப அமைப்பு முறையில் ஓர் ஆணைக் கணவனாக மணந்து வாழ்நாள் முழுவதும் அவனை மட்டும் சார்ந்து வாழ்வது கற்புடை மகளிரின் நெறி. அவ்வாறன்றிப் பல்வேறு ஆண்களுடன் உறவு கொண்டுள்ள பெண்களைக் குறிக்கப் ‘பரத்தை” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பரத்தமைக் குற்றமிழைத்த ஆடவனை வம்பப் பரத்தர் (16:63) என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

நெய்தல் திணை மக்கள்
               
ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு அந்நாட்டு மக்களின் நாகரிகம், பண்பாடு ஆகியன அமையும். கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் நிலம். எனவே நெய்தல் நிலத்தில் கடல் வணிகம் சிறப்புற்றிருந்தது. சேரி, பட்டினம், பாக்கம் ஆகியன நெய்தல் நில மக்களின் இருப்பிடங்களாகும். குடிசைப் பகுதிகள் நிறைந்த குடியிருப்புகள் பாக்கம் எனப்பட்டன. மாட மாளிகைகள் நிறைந்த குடியிருப்புப் பகுதி பட்டினம் எனப்பட்டன. மக்கள் கூடி வாழும் இடம் குடிகள் எனப்பட்டது.
               
கடலுக்குப் பரவை என்ற பெயருமுண்டு. எனவே கடல்வாழ் மக்கள் பரதவர் என்றழைக்கப்பட்டனர். இவர்களை பரதர், பரத்தியர், நுழையர், நுழைச்சியர் சேர்ப்பன் என்றும் வழங்குவர். ‘நுழைமகள்” என்னும் சொல் சிறுபாணாற்றுப் படையில் இடம் பெற்றுள்ளது. (சிறுபாண் 158) மழைக் கடவுளைத் தெய்வமாகக் கொண்ட இவர்கள் வலை வீசி கடலில் மீன் பிடித்த செய்தியை,
               
‘வள்ளை நீக்கி வயமின் முகந்து           
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்”        (மதுரைக் காஞ்சி (255-56)

என்ற மதுரைக்காஞ்சி அடிகளால் அறியப்படுகிறது.

தொழில்
               
மீன் விலைப் பரதவர் என்றும் வெள்ளுப்புப் பகருநர் என்றும் சிலப்பதிகாரம் மொழியும் இவர்கள் தினம் தோறும் கடல் அலைகளுடன் போராடி வாழ்க்கை நடத்துபவர். அரசருக்கு இணையான செல்வத்தையுடைய வணிகரைப் பரதர்; எனக் குறிப்பிட்டுள்ளனர். (2:1-2) இவர்கள் அரசர் தெருவை அடுத்துப் பட்டினப்பாக்கத்தில் வாழ்ந்தனர். கடல் தரும் பொருள்களால் பெரு வணிகம் செய்த செல்வந்தர் வணிகர் படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து சீரிய வாழ்க்கை வாழ்ந்தனர்.
                மீன் பிடித்தலுடன் வலை பின்னல், படகு கட்டுதல் போன்றவையும் பரதவரின் துணைத் தொழில்களாகும். நெய்தல் நில மக்களில் ஆடவரே தலைமைப் பொறுப்பேற்றனர். இவர்கள் மீன்களைக் கொல்லும் தொழிலினர் என்பதைக் ‘கொடுங்கண் வலையால் உயிர் கொள்வான் நுந்தை” (7.18)’ஓடும்  திமில் கொண்டு உயிர் கொல்வான் நின் ஐயர்” (7:19) என்ற பாடல் வரிகளில் பதிவு செய்துள்ளார் இளங்கோ

பெண்டிர் தொழில்
               
ஆடவர் பிடித்து வந்த மீன்களை உலர்த்தி விற்கும் வேலையைப் பெண்கள் செய்தனர். பவள உலக்கையால் முத்துக்களை அரியாகப் போட்டுக் குத்தியமை (7:20:1-2) பரதவரின் செல்வச் செழிப்பைக் காட்டுகிறது. மகளிர் கடற்கரையில் கட்டிய வீட்டை அழிக்கும் சங்குகள் மீது நெருப்தல் நில மகளிர் பொய்க்கோபம் கொண்டு குவளை மலரினை எறிந்து பொழுது போக்கினர்.

கலங்கள்
               
தமிழர்கள் கடலில் செல்வதற்கும் வெளிநாட்டு வணிகத்திற்கும் பெரிய நாவாய்களை பயன்படுத்தினர். உள்நாட்டு ஓடம் பறி எனப்பட்டது. குதிரை முக அம்பி, யானை முக அம்பி, சிங்க முக அம்பி என்பன சிலப்பதிகாரக் காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது. (13:176-178) சிறிய அளவிலான மரக்கலங்கள் தோணி அம்பி என்றும் பெற்றன. மரத்தோணிகள், நாவாய்கள் மற்றும் ஓடங்களும் நீர்த்துறைகளைக் கடக்கப் பயன்பட்டன. கடல் வணிகத்திலும் உள்நாட்டு வணிகத்திலும் மிகுந்த பொருள் ஈட்டி பரதவர் செல்வச் செழிப்பாக வாழ்ந்ததை,
               
‘கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட           
குலத்தில் குன்றாக கொழுங்குடிச் செல்வர்”      (2:7-8)

என்ற  வரிகள் உணர்த்தும்
.
பாலை நில மக்கள்
               
தொல்காப்பியத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நானிலமே குறிக்கப் பெற்றுள்ளது. தமிழகத்தில் பாலை என்ற நிலம் இல்லை. முல்லையும் குறிஞ்சியும் தட்ப வெப்ப வேறுபாடுகளால் வேறுபட்டு பாலை நிலமாக மாறியது.
               
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து           
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்து           
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்”
               
எனச் சிலப்பதிகாரம் பாலை நிலத்திற்கான இலக்கணத்தைச் சுட்டியுள்ளது. ‘கடுங்கதிர் வேனில”; (13:3) ‘கடுங்கதிர் திருகலின்” (12:1) என வேனிலின் வெம்மையும் கொடுமையும் சிலப்பதிகாரத்தில் வருணிக்கப் பெற்றுள்ளன. பாலைத் திணைக்குரிய மக்கள் எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், மீளி, விடலை, காளை எனவும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

தொழில்
               
பாலை நிலம் கொடுமையான வெம்மையை உடையது அங்கு வாழும் எயினர் வழிச் செல்வோரை வருத்தும் உழவைச் செய்து பொருள் ஈட்டுவர். ஆதலால் இவர்கள் வில்லேருழவர் (11:2:10) எனப்பட்டனர். இவர்கள் நாகரிகமில்லாதவராக வில் ஏந்தித் திரிந்த செய்தியை சிலம்பு இயம்பும். ஆனால் பகைநாட்டு வெற்றிக்கு துணையாக இருந்துள்ளனர் என்பதை
‘வேற்றுப்புலம் போகி, நல்வெற்றம் கொடுத்துக்
கழிபேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்”
என்ற அடிகள் மூலம் அறியலாகிறது.

கலைச் சிறப்பு
               
இவர்கள் துடி போன்ற இசைக் கருவிகளை இசைக்கவும் அறிந்திருந்தனர். வேடுவர்கள் வழிப்போக்கர்களிடம் பொருளைக் கவர வரும் போது பறையைக் கொட்டினர். கொற்றவையை வணங்கும் போது இசைக் கருவிகளை இசைத்தனர்.

பெண்கள் தொழில்
               
பாலை நிலத்தில் பெண்களுக்கெனத் தனியாக தொழில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. வேட்டுவவரியில்  ‘கள் விளையாட்டி” (12:16) என்ற சொல் மூலம் பெண்கள் கள் விற்கும் தொழிலில் ஈடுபட்டமையை அறிய முடிகிறது.

வாழிடம்
               
எயினர்களின் வாழிடம் ஊர் மன்றத்தில் இருந்தது. எயினர்கள் கூடி வாழும் இயல்பை உடையவர்கள் அவர்கள் தாங்கள் வாழும் இடத்தை முள்வேலியிட்டுப் பாதுகாத்தமையை
               
‘இடுமுள் வேலி எயினர்” (12:10)
என்ற தொடர் மூலம் அறியலாம். ஐ வகை நிலங்களில் வாழ்ந்த மனிதர்களையும் அவர்கள் தாம் நிலத் தன்மைக்கேற்ப தொழில் புரிந்ததையும் கூடி வாழ்ந்ததையும் சிலம்பு விரிவாகக் காட்டியுள்ளது.

முடிவுரை
               
பழந்தமிழர் நிலப் பகுதியை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பகுத்து அதற்கு இலக்கணங்களையும் வகுத்தனர். அவ்விலக்கண முறை மாறாமல் முதல், கரு, உரிப்பொருள்களை இளங்கோ காப்பியக்; கதையோடு இணைத்து இலக்கியச்சுவை குன்றாமல் இப்பெருங்காப்பியத்தைப் படைத்துள்ளது நினைத்து இன்புறத்தக்கது.

தொகுப்புரை
🌻 ஐவகை நில மக்களுள் குறிஞ்சி நில மக்களே கண்ணகியை தெய்வமாகப் போற்றுவதற்கு காரணமாய் இருந்தனர்.

🌻 முல்லை நிலத்தில் ஆயர்கள் ‘ஏறு தழுவுதல்” சிலப்பதிகாரக் காலத்திலும் நிகழ்ந்துள்ளது.

🌻 இவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் கூத்து நடத்தி மகிழ்ந்துள்ளனர்
.
🌻 மருத நில உழவர்கள் வேலைப் பளு தெரியாமல் இருக்க முகவைப் பாட்டைப் பாடி மகிழ்ச்சியுடன் தொழில் செய்துள்ளனர்.

🌻 பரத்தமை ஒழுக்கமுடைய ஆணைக் குறிக்க பரத்தர் என்ற சொல்லை இளங்கோ கையாண்டுள்ளார்.

🌻 நெய்தல் நில மக்கள் கடற்பகுதியை நம்பியே வாழ்ந்துள்ளனர்
.
பாலை நில மக்கள் துடியும் யாழும் இசைப்பதில் திறம் பெற்றிருந்தனர். ஆகியன ஆய்வில் கண்டறியப்பட்டன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ப.தனேஸ்வரி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோபி, தமிழ்நாடு, இந்தியா.

 

மயிலாடும்பாறை அருகே 12,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்காலம் மற்றும் புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிப்பு

புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிப்பு
       தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே நுண்கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 12000 ஆண்டுகள் தொடர் வரலாற்று சிறப்பு கொண்ட இப்பகுதியை அகழாய்வு செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.
               
           மயிலாடும்பாறை அருகே கிளியன் சட்டி மலை அடிவாரத்தில் மலைச்சாமி விஜயன் என்பவரின் காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மலைச்சாமி என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான செல்வம் தலைமையில்  பள்ளி மாணவர்கள் பாரதிராஜா, தமிழ் ராஜன் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பாய்வில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த சர்ட் வகை கல்லால் செய்யப்பட்ட சுரண்டிகள், அறுப்பான்கள், கூர்முனை கருவிகள், துளைப்பான்கள் மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்க கோடளிகள், கலாயுதங்கள் தீட்டுக் கற்கள், அரவை கற்கள், கவண் கற்கள், குறியீடு உள்ள பானை ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான பானை ஓடுகள், மண் பாத்திரங்கள் வைப்பதற்குரிய பானை தாங்கிகள், முதுமக்கள் தாலியின் உடைந்த பகுதிகள் போன்றவைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

                இதுகுறித்து ஆய்வாளர் செல்வம் குறுகையில் தமிழகத்தில் கடைய கற்காலமே நுண்கற் கருவி காலமாக கருதப்படுகிறது. பெரிய கருவிகளைக் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதை தவிர்த்து, சிறிய சிறிய கற்க கருவிகளையும் கற்சில்களையும் கருவிகளாக பயன்படுத்தி வேட்டையாடிய காலம் நுண்கற்காலமாகும். நுண்கற்கால மக்கள் பெரும்பாலும் மலை அடிவாரங்களிலும் திறந்தவெளி பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர். நுண்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 3000 வரையிலானது. நுண்கற்கால கருவிகள் அளவில் மிக சிறியவை பழைய கற்காலத்தில் கருவிகள் செய்யும்போது உடைந்த சிறிய துண்டுகளை நுண்கற்காலத்தில் அம்பு முனைகள், சிறு கத்திகள், சுரண்டிகளாக பயன்படுத்தியுள்ளனர்.
               
      இங்கு கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட கற்கருவிகள் கருங்கல்லால் ஆனது நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர். தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளனர். புதிய கற்காலம் கி.மு.3,000 முதல் கி.மு. 1,000 வரையிலானது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கருவிகள், கையாலும் சக்கரத்தாளும் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர். மூல வைகைப் பகுதியில் புதிய கற்கால கருவிகள் கிடைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நுண்கற்காலம், புதிய கற்கால கருவிகளோடு பெருங்கற்கால முதுமக்கள் தாலியும், ரோமானிய ரெளலட் மண்பாண்ட வகைகளும் இங்கு கிடைப்பதால் நுண்கற்கால முதல் வரலாற்று காலம் வரை பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வசித்த வளமான பகுதியாக இப்பகுதி உள்ளது.
               
           நுண்கற்கால கருவிகளும், புதிய கற்கால கருவிகளும், அரவை கற்களும், பல்வகை மண் ஓடுகளும் இப்பகுதியில் பரவி கிடப்பதால், மக்களின் வசிப்பிடமாகவும் கல் ஆயுதங்கள் மண் சட்டிகள் செய்யும் தொழில் கூடங்களும்  இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இங்கு கிடைக்கும் மண்ணோடு ஒன்றின் உட்புறத்தில் புள்ளிகளிடப்பட்ட முக்கோண முத்திரை இடப்பட்டு உள்ளது. பானையை உற்பத்தி செய்பவரின் அடையாளமாக இக் குறியீடு இருக்கலாம்.
               
         மேலும் இவ்விடத்திலிருந்து கிழக்கு ஒரு மைல் தொலைவில் கரடி புடவு என்ற தொல் மனித வாழ்விடம் உள்ளது. அங்கிருக்கும் பிரம்மாண்ட கல் ஒதுக்கில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்விடத்திற்கு மேற்கு புறம் உள்ள வடக்கு கூட்டம் மலைப் பகுதியில் பெருங்கற்கால மக்கள் நினைவுச் சின்னங்களான கல்வட்டம் மற்றும் நெடுங்கல் இருக்கின்றன.
   
             கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் வாழ்ந்து வரும் மூல வைகை ஆற்றங்கரையான இப்பகுதியில் அகழாய்வு செய்தால் பழைய கற்கால கருவிகளும் கிடைத்திட வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழக அரசும் மத்திய அரசு தொல்லியல் துறையும் இப்பகுதியில் ஆய்வு செய்து மூலவகையாற்றுப் பகுதியின் பலமையை வெளிக்கொணர வேண்டுமாய் கோரிக்கை வைக்கின்றோம் என கூறினார்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

மூ.செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
வருசநாடு, ஆண்டிபட்டி (வ),
தேனி (மாவட்டம்) –  625579.

 

சங்க கால மக்களின் சூழலியல் சார் விளையாட்டுப் பொருட்கள்

சங்க கால மக்களின் சூழலியல் சார் விளையாட்டு பொருட்கள்
முன்னுரை
       இயற்கையைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டது சங்க இலக்கியம் ஆகும். நிலம், நீர், காற்று, தட்பவெட்பநிலை என இயற்கை சார்ந்த  கூறுகளைப் பின்னணியாக வைத்து சங்க இலக்கிய பாடல்கள் அமைய பெற்றுள்ளன. இதன் மூலம் அக்கால மக்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. சங்ககால மக்கள் அனைவரும் தாங்கள் வாழும் நிலப்பகுதியில் சூழ்ந்திருந்த மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, ஊர்வன ஆகியவற்றை மையம் இட்டு தங்களது வாழ்க்கையை வாழ்ந்தனர். என்பதைத் தொல்காப்பியர் தம் இலக்கணத்தில் கருப்பொருள்கள் என்று வரையறை செய்கிறார். சங்ககால மக்கள் வேட்டைக்கு அடுத்தநிலையில் விளையாட்டுக்கு அதிக இடம் கொடுத்துள்ளனர். தங்கள் நிலப்பகுதியில் கிடைக்கும் இயற்கை சார்ந்த பொருட்களைக் கொண்டு விளையாடி உள்ளனர். அவ்வகையில் அவர்கள் பயன்படுத்திய சூழலியல் சார் விளையாட்டுப் பொருள்களை இனங்கண்டு வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
சூழலியல் விளக்கம் 
       சூழலியல் என்பதை ஆங்கிலத்தில் (Ecology) எக்காலஜி என்ற சொல்லினால் குறித்தனர். சங்க இலக்கியப் பாடல்களில் சூழலியல் பதிவுகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினையும்  மற்றும் இவை சூழ்நிலையோடு கொண்டுள்ள உறவுகளையும்  விளக்கும் அறிவியலின் கிளை தொழில் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவற்றை உணர்த்தும் வகையில் சங்க இலக்கியச்  செய்யுள்கள் அமைந்துள்ளன .
சூழலியல் சார்ந்த விளையாட்டுப் பொருட்கள்
சங்ககால மக்கள் பொழுதுபோக்கிற்காகவும் மன மகிழ்ச்சிக்காகவும் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி உள்ளனர். விளையாட்டு என்பது உலகினைப் புரிந்து கொள்ளச் செய்தல், சிந்திக்கப் பயிற்சி அளித்தல், நற்பண்புகளைக் கற்றுத் தருதல் போன்ற கருதுகோள்களை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன  அவ்விளையாட்டால் நிகழும் நன்மைகள் என டபிள்யூ டி லால் விளையாட்டினால் ஏற்படும் நன்மைகளுக்கு  விளக்கம் தருகிறார்.
விளையாட்டு என்பதற்கு “பொழுது போக்கிற்காகவும் வேடிக்கைக்காகவும் விளையாடுவதே”  என கலைக்களஞ்சியம் விளையாட்டிற்கு விளக்கம் தருகிறது. அவ்வகையில் சங்க கால மக்கள் தங்கள் நிலப்பகுதியில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் விளையாடி உள்ளனர். பருவப் பெண்கள் தினைப்புனம் காவல் காக்கச் சென்ற இடம், புனலாடச் சென்ற  இடம் சோலைகள் கடற்கரைகள் எனப் பல இடங்களில் கவண்  , சுழற்சிக்காய், மண், நண்டு எனத் தங்கள் சூழல் சார்ந்த விளையாட்டுக்களை விளையாடி உள்ளனர். ஆண்கள் ஏறுதழுவுதல், சடுகுடு, கவண்   விடுதல் போன்ற விளையாட்டுகளையும் சிறுவர்கள் பனைக்குறும்பு ஓட்டுதல், யானைத் தேர், மண் வீடு கட்டுதல் போன்றவைகளை மரங்கள், மண் போன்ற பொருட்களைக் கொண்டு   விளையாடி உள்ளனர். இதன் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் விளையாட்டுப் பொருட்களை மூன்று வகையாகப் பிரித்துக் கூறலாம்.
             அ)   மகளிர் விளையாட்டுப் பொருட்கள் 
            ஆ)  ஆடவர் விளையாட்டுப் பொருட்கள் 
            இ)   சிறுவர் விளையாட்டுப் பொருட்கள்
அ) மகளிர் விளையாட்டுப் பொருட்கள்
             மகளிர் தங்கள் பொழுது போக்கிற்காகப் பலவகை விளையாட்டுகளை விளையாடியுள்ளனர். இல்லத்தில் உள்ளேயும், வீட்டின் முற்றத்திலும் தினைப்புனம் காவல் செல்லும் போதும், கடற்கரைக்குச் செல்லும் போதும் எனப் பல்வேறு சூழல்களில் பொழுதுபோக்கிற்காக மகளிர் விளையாடிய செய்திகளைச் சங்க அகநூல்கள் எடுத்துரைக்கின்றன. சங்ககால மகளிர் விளையாடிய சூழலியல் சார்ந்த விளையாட்டுப் பொருட்களாகப் புன்னைக்காய், கழற்சிக்காய், கவண்  போன்ற பொருட்கள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் தினையை விதைப்பர். தினை வளரும் பொழுது அதனைக் காவல் காக்க வீட்டில் இருக்கும் மகளிர் செல்வது  வழக்கமாக இருந்துள்ளது.  பருவப் பெண்கள் தினைப்புனத்திற்குக் காவலுக்குச் செல்லும் போது கிளிகளை விரட்ட மரக்கம்பால் செய்யப் பெற்ற கவணை எடுத்துச் செல்வதனை நற்றிணைப் பாடல் புலப்படுத்துகிறது.
                    துய்த்தலைப்  புனிற்றுக்குரல் பால் வார்பு இறைஞ்சி
                    தோடு அலைக் கொண்டன ஏனல் என்று
                     துருக்கல் மிசைக்  குறுவன குழீஇச்
                     செவ்வாய் பாசினம் கவருமின்ற வாய்
                     தட்டையும் புடைத்தனை கவிணையுந்  தொடுக்கென” (நற்றிணை.206)
மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று கழங்காடல் ஆகும். இவ்விளையாட்டினைப் பெண்கள் மலைப்பகுதியின் கீழே கூட்டமாக அமர்ந்து, இயற்கையாக மரங்களில் இருந்து கிடைக்கும் காய்களைக் கொண்டு விளையாடி உள்ளனர் என்ற செய்தியினைப் பின்வரும் பாடல்களில் பதிவு செய்கின்றன.
                        கூரை தன் பனைக் குறுந்தொடி மகளிர்
                        மணல் ஆடு கழங்கின் அறை இசைத் தா அம்” (நற்றிணை.79)
                        “காதல் தந்த மை அறியாத உணர்ந்த
                        அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்” (நற்றிணை பாடல்.282)
கழற்சிக்காய்களைக் கொண்டு காய்மறை விளையாட்டினை விளையாடி உள்ளனர்.  இச்செய்தியை நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது. தலைவி, தோழியுடன் மணலில் விளையாடும் போது புன்னைமரக் காயை மணலில் புதைத்ததனை மறந்து இல்லம் திரும்புகின்றாள்.   தலைவியின் செயலால்  அந்தக் காயானது பிற்காலத்தில் புன்னை மரமாக வளர்ந்து விட்டது. இம்மரத்தினை தம் தமக்கையாகக் கருதுகின்றாள் தலைவி என்ற செய்தியை பின்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகிறன.
                       “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
                        மறந்தனம் துறந்த கால் முளை அகைய
                       அம்ம நாணுதும் நும்மோடு நகையே” (நற்றிணை.172)
ஆ) ஆடவர் விளையாட்டுப் பொருட்கள் 
          ஆடவர்களின் விளையாட்டுக்கள் பெரிதும் வீரமிக்கதாகவே இருந்துள்ளன. உடல் திறனை வெளிப்படுத்தும் ஏறுதழுவுதல், சடுகுடு போன்ற விளையாட்டுகளை விளையாடி உள்ளனர். மகளிரை விட ஆடவர்கள்  குறைவான விளையாட்டையே விளையாடியுள்ளனர். இவர்களும் தினைப்புனம் காக்கச் செல்லும் போதும் புனலாடச் செல்லும் போதும் கவண், தூம்பு போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு விளையாடிய செய்திகள் சங்க அகநூல்களில் இடம்பெற்றள்ளன.  ஆடவர்களின் விளையாட்டுப் பொருட்களில் ஒன்று தூம்பாகும்.  இது உயிர்த்தூம்பு என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. மரத்தால் ஆன கம்புகளில் சிறிய துளைகளைப் போட்டுப் புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதையே  தூம்பு என்று நற்றிணை மற்றும் அகநானூற்றுப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.
                           நீர்வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் (நற்றிணை.6)
                           அம் தூம்பு வள்ளை ஆய்க்கொடி மயக்கி (அகம்.6)
ஆண்கள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்களில் மற்றொன்று கவண்  ஆடவர்கள் தினைப்புனம் காவல் காக்க செல்லும் போது அங்கு வரும் யானைகளை விரட்ட இந்தக் கவணைப் பயன்படுத்தி உள்ளனர். அதே கவணால் கனிகளை அடித்துச் சென்ற செய்தி  அகப்பாடலில் குறிப்பிடத்தக்கது.
                        இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்
                        புலம் கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும் (கலித்தொகை.23)
இ) சிறுவர் விளையாட்டுப் பொருட்கள்
                 சங்ககாலச் சிறுவர்கள் சூழ்நிலைகள் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி விளையாடி உள்ளனர். வட்டுப்பனை, பனங்குறும்பை ஓட்டுதல், மரப்பொம்மை ஆகிய விளையாட்டுகளை இயற்கைப் பொருள்கள் மூலம் விளையாடிய செய்தியை சங்ககால நூல்கள் எடுத்துரைக்கின்றன. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களில் ஒன்று வட்டாகும். அரக்கினால் செய்யப்பட்ட வட்டினை வைத்து குவித்து இருக்கும் நெல்லிக்காய்களை அடித்து விளையாடியுள்ளனர் இதனை
                                     “முளிந்த வோமை முதையலங் காட்டுப்
                                      பளிங்கத் தன்னப் பல்காய் நெல்லி
                                     மோட்டிரும் பாறை யீட்டு வட்டய்யே”       (அகம்.5)
என்று அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனங் குரும்புகளை கோல்களால்  வண்டி செய்து சிறுவர்கள் விளையாடியுள்ளனர் ஒரு கோளின் இருபுருமும் பனங் குறும்புகளை சக்கரம் போலப் பொருத்தி, அதனை ஒரு கோலின் மூலம் தள்ளி விளையாடிய செய்தியை கலித்தொகைப் பாடல்கள் பதிவு  செய்கின்றன.       
                       “பெருமடற் பெண்ணைப்  பிணர்த் தோட்டுப்  பைங்குருமைக்
                        குடவாய்க்  கொடிப்  பின்னல் வாங்கி தளமும்
                        பெருமணித் தேர்க் குறுமக்கள் நாப்பண்” (கலித்தொகை.83)
 செல்வந்தர்கள் வீட்டுச் சிறுவர்கள் முத்துக்கள் பதிக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட யானையைக்  கையிற்றினால் கட்டி மெல்ல மெல்ல இழுத்து விளையாடினர் என்பதைக் கலித்தொகை எடுத்து இயம்புகிறது.
                                 திகழ் ஒளிமுத்து அங்கு அரும்பாகத் தைய்ப் 
                                  பவழம் புனைந்து பருதி சுமப்ப
                                  கவளம் அறியா நின்கை பனைவேழம்
                                  புரிபுனை பூங்கயிற்றின் பைய வாங்கி” (கலித்தொகை.80)
முடிவுரை
சங்கப் பாடல்களின் மூலம் சங்ககால மகளிர் விளையாட்டுப் பொருள்களாகக் கவண் கழற்சிக்காய், புன்னை மரக்காய் போன்ற சூழல் சார்ந்தப் பொருட்கள் இருந்துள்ளன.        ஆடவர்களின் விளையாட்டுப் பொருள்களாக தூம்பு, கவண் போன்றவையும் சிறுவர் விளையாட்டுப் பொருள்களாக வட்டு  பனங்குறும்பை மரத்தால் செய்யப்பட்டப் பொம்மைகள் போன்றவைகள் இருந்துள்ளன.
இதன் மூலம் சூழல் சார்ந்த பொருட்களைக் கொண்டு விளையாட்டுப் பொருட்களை உருவாக்கிக் கொண்டமையை அறிய முடிகின்றது.
சங்ககால மக்கள்  சூழல் சார்ந்த சிந்தனை உடையவர்களாக வாழ்ந்துள்ளனர் என்பது கட்டுரை வழி அறியலாகிறது.
சூழலியல் சார்ந்து  விழிப்புணர்வைச் சங்கப் பாடல்கள் வழி உணர முடிகிறது.
 
 அடிக் குறிப்புகள்
 கா. பஞ்சாங்கம், இலக்கியத் திறனாய்வு கோட்பாடுகள்- பக்கம் 32 
தனலட்சுமி,  குழந்தைப் பாடல்களில்  பாடு பொருள்களும் பாடு நெறியும் – பக்கம் 12
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 
முனைவர்.இரா.செங்கோட்டுவேல்,
உதவிப்பேராசிரியர்,

முதுகலைத்தமிழ் மற்றும் உயராய்வுத்துறை,

கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி,

செட்டியார்பாளையம், முத்தூர் 638 105,
திருப்பூர் மாவட்டம்.

 

என்.ஸ்ரீராமின் கதைகளில் இறப்புச் சடங்குகள் | நா.மோகனசெல்வி

என்.ஸ்ரீராமின் கதைகளில் இறப்புச் சடங்குகள் நா.மோகனசெல்வி
ஆய்வுச்சுருக்கம்
                 
     தமிழரின் வாழ்வியலோடு ஒட்டிய நிகழ்வுகளை கொங்கு நாட்டின் பழக்க வழக்கங்கள் என்ற தன்னுடைய பார்வையில் பட்டதை உயிரோட்டமாக மண்மனம் மாறாமல் எடுத்து எழுத்துக்களில் படைத்தவர் நம் எழுத்தாளர். மனிதனின் வாழ்நாளை முழுமைப்படுத்திய இறப்பின் சடங்குகளை விருப்பு வெறுப்பு இன்றி உரத்த தொனியில் கூறுகின்றார். சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கையை ‘பீடி’ என்ற சிறுகதை வாயிலாக இறந்தவர்களின் உடலுக்கு செய்யும் மரியாதையையும், அவர்களின் நிறைவேறாத ஆசைகள் அவர்கள் வாழ்நாளில் விரும்பிய பொருட்களை அவர்களின் இறப்பு சடங்குகளில் வைத்து நிறைவேற்றப்படுகின்றது.
               
         அது போலவே ‘சிதைக்கோழி’ என்ற சிறுகதையில் ஒருவர் இறந்ததாக நினைத்து செய்யப்பட்ட இறப்பு சடங்குகளின் போது உயிர் பெற்று விட்டால் அவர்களின் வாழ்நாள் நீடிக்கப் பெற்று விட்ட காரணத்தினால் இறப்பு சடங்கை தவிர்க்க முடியாத நிலையில் ஒரு மனித உயிரின் மகத்துவத்திற்காக பாடையில் கோழியை கட்டி இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பழக்கம் இருப்பதையும் தம் கதையில் நம்பிக்கையின் நிகழ்வாக காட்டியுள்ளார்
               
மரணம் பற்றிய நம்பிக்கைகள் என்ற கருத்தில் ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் அந்த வீட்டில் ஒருநல்ல நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அதை மெய்பிக்கும் விதமாக ‘தாமரை நாச்சியார்’ என்ற கதையில் அந்த பெண் இறந்து விடுகிறாள்.அது வரை அவர்கள் பட்ட கஷ்டங்களும் இன்னல்களும் குறைந்ததாக தாமரை நாச்சியாரின் இறப்பிற்க்கு பின்னர் வீட்டில் உள்ள பெண்களுக்கு திருமணம் கைகூடி வருவதாகவும் அமைந்துள்ள இக்கதை ஒரு விதமான நம்பிக்கையை மெய்ப்பிப்பதாகவே அமைகின்றது.  
முன்னுரை
        
      சடங்குகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வியலோடு ஒட்டிய முக்கிய நிகழ்வாகவே அமைகின்றது. காலங்காலமாக முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்களே பின்னாளில் சடங்குகளாக உருப்பெற்றது. இன்றைய காலகட்டத்தில் இளம்தலைமுறையினர் சம்பிரதாயம் என்ற ஒரு நிகழ்வை செய்து வருவதைக் காணலாம். பெரும்பாலும் சடங்குகள் முன்னோர்களின் வழித்தோன்றலாகவே அமைகின்றது.
                  
      தமிழரின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் முறைகள் பழக்க வழக்கங்கள் சமயங்கள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள்,விளையாட்டுகள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றது. சடங்கு முறைகள் ஏற்பட்டுவிட்ட காலத்தில் இருந்தே மக்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக அமைவது அவர்களது நம்பிக்கை. அது இறை நம்பிக்கை,மறுபிறவி நம்பிக்கை, சொர்க்கம், நரகம் என்ற அடிப்படையில் சடங்குகள் பின்பற்றப்பட, சிறுகதைகளில் சடங்குகளுக்கு கொடு;க்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

சொர்க்கம் நரகம் பற்றி நம்பிக்கைகள்
                
      மனிதர்கள் இறப்பிற்கு பிறகு மறுபிறவி உண்டென்றும் அவைபல பிறவிகள் தொடரும் என்றும் நம்பினர்.பீடி என்ற சிறுகதையில் இளங்கோ என்பவனின் சித்தி இறந்துவிடுகின்றாள், அடக்கம் செய்யும் நிகழ்வு குறித்து ஆசிரியர் சிறப்பாக தன் எழுத்துக்களின் கோர்ப்பில், சித்தப்பாவுக்கு குரல் தழுதழுத்தது விம்மி விம்மிஅழுதார.; இவன் முகத்தை இறுக்கமாக்கிக்கொண்டு நடந்தபடி இருந்தான்.கொட்டுச்சத்தம் கேட்கத்தொடங்கியது.

     பெரியவெட்டியான் பங்காளிகளின் உதவியுடன் பிணத்தை குழியில் இறக்குகின்றார்.
    “மண்ணுதள்ளர எசமாங்கஆரு மளார்ன்னு வாங்க” அழைக்க, சித்தப்பாவை குழிமேட்டிற்கு கூட்டிப் போகின்றனர்.  மீண்டும் பெரியவெட்டியான்,
      
“சாமீ எசமாங்க மேலோகம் போராங்க நிராசையா போகக்கூடாதுங்க அவுங்களுக்கு புடுச்சது ஏதாச்சும் இருந்தா குழியில போடறது சாங்கீதமுங்க” என கூறுகின்றான். இதிலிருந்து ஒருவர் இறந்தால் அவர்களின் ஆசைகள் மதிக்கப்படுவதும் இறந்த பின் சடங்குகள் என்ற பெயரில் அவை நிறைவேற்றப்படுவதையும் அறிய முடிகின்றது.
               
இதை மனிதர்கள் இறப்பிற்குப் பிறகு உண்டென்றும் அவை பல பிறவிகள் தொடரும் என்றும் நம்பினர்.
 
“ எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்  
பண்புடை மக்கட் பெறின்” -1 – குறள் (62)
என்ற குறளில் ஏழு பிறவிகளிலும் ஏற்படுகின்ற நன்மை தீமைகளை எடுத்துக்கூறுகின்றார்.
      
சித்திக்குப் பிடித்ததை எல்லாம் ஒரு சிறிய மஞ்சள் பையில் போட்டுக்கட்டி எடுத்து வந்து குழியில் போடுகின்றனர்.பெரியவெட்டியான் மீண்டும் சத்தமிடுகின்றார்,
 
“ வேற ஏதாச்சும் இருக்கா சாமீ…ஒன்னும் உட்டுப்போகலையே… ஏன்னா மேல போற உசிரு அதுக்கு ஆசைப் பட்டு இங்க அலைபாயக்கூடாது பாருங்க” என்று கூறிவிட்டு,
 “சாமீ…. மூணு கை மண்ணு அள்ளி உள்ள போடுங்க” என்கின்றார்.
          
இவ்வாறாக இறப்பின் போதுபின்பற்றப்படும் சடங்குகளில்இறந்தவர்களின் ஆசைகளை நிறைவேற்ற செய்யப்படும் செயல்கள் இறந்தவர்களின் ஆன்மாவிற்க்கு செய்யும் ஒரு மானசீகமான நிகழ்வாக அமைவதைப் பார்க்க முடிகின்றது.

இறப்பு சடங்குகள்
           
       தமிழர்களிடையே சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் ஏராளம் இவற்றில் சில அர்த்தமற்றதாக இருந்தாலும் முன்னோர் செய்து வந்த சடங்குகள் என்று பாரம்பரியத்தை விட்டுவிடாமல் செய்து வரப்படுகின்றன. சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் மறைந்துள்ள உண்மைகளைத் தேடிக்கொண்டு நாம் பயணிக்கின்றோம்.
          
       பிணம் தழுவியவன் என்ற கதையில், ஒருபெண் இறந்துவிடுகிறாள் அவள் மணமாகாமல் இறந்துவிடும் நிலையில் அவளுக்கு செய்யும் சடங்குகள் நம்பிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்படுவதை அறிய முடிகின்றது.

         அந்தக்காலத்தில் சாமி,பேய் பிசாசு,ஆவிகள் மேலே நிஜமான நம்பிக்கையிருந்தது. ஓர் உயிர் உடலைவிட்டுப் பிரியும் போது நிராசையோடு பிரிந்ததென்றால் அது ஆவி ரூபத்தில் ஊரையே சுற்றி அட்டூழியங்கள் செய்யும் என்பது நம்பிக்கை,அப்படி ஓர் உயிர் இறந்தால் அதன் நிராசையெல்லாம் தீர்த்துவைத்த பின்பு தான் அதன் உடலைத் தகனமோ,அடக்கமோ செய்வார்கள்.
       
      ஒருவன் நல்ல சாப்பாட்டின் மேல் ஆசைகொண்டு அவனுக்கு அது கிடைக்காமலேயே இறந்துவிட்டால் அவனை அடக்கம் செய்யும்பொழுது நல்ல சாப்பாட்டு வகைகளைப் படையல் வைத்துப் பூஜை செய்து பிணத்திற்கு ஊட்டிவிட்ட பின்புதான் அடக்கம் செய்வார்கள். இல்லையென்றால் அவன் அதிகம் ஆசைப்பட்ட பொருளை குழியில் போடுவார்கள் அப்படிச் செய்தால் நிராசையெல்லாம் நிறைவேறிவிட்டதாக அர்த்தமாகிறது.
       
   அது போல் ஒரு கன்னிப்பெண் இறந்துவிட்டால் அப்பெண்ணை கன்னி கழிக்காமல் அடக்கம் செய்யமாட்டார்கள். கன்னிப்பேய்க்கு விசை அதிகமாம் ஊரையே பிடித்து ஆட்டிவிடுமாம். சுடுகாட்டில் அது மாதிரி கன்னிப் பிணங்களைத் தழுவுவதற்கென்றே ஒரு கூட்டம் முறைமை வாங்கி எல்லா ஊர்களிலும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
                
     அதே மாதிரி கல்யாணமாகாத ஆண்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு ஆண்களின் ஒழுக்கத்தின் மேல் அப்போதைய மக்களுக்கு நம்பிக்கையில்லை போலும் அவர்களை யாரும் தழுவுவதில்லை என்ற ஒரு கருத்தையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
               
    இறப்பு, இழப்பு போன்றவை நிகழும்போது மேற்கொள்ளப்படும் சடங்குகள் இறப்பு சடங்காகும் இதைத்தான் திருவள்ளுவர்,

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு”   ( குறள்.339)
               
      இறப்பு என்பது உறங்குவதைப் போன்றது, பிறப்பு என்பது உறங்கியவன் மீண்டும் விழிப்பது போன்றதே எனவே இறப்பு உண்டென்றால் பிறப்பு உண்டு என நம்பி இறந்தபிறகு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

துக்க நிகழ்வுகளில் சடங்குகள்
                
      மனிதனுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய சாவும் இறைவனால் நிர்ணயிக்கப்படுகின்றது. அவை இயற்கையான மரணம், தற்கொலை மரணம் இவற்றைத் தனது சில கதைகளில் ஆசிரியர் படைத்துள்ளார்.
  
               இதை ‘சிதைக்கோழி’ என்ற கதையில் இறந்த கிழவிக்கு செய்யப்படும் சடங்குகள் பற்றி தனது கதையில் கிராமத்தின் பின்னனியில் அமைந்த சில சடங்குகளை செய்வது குறித்து எதார்த்தமாக பல சம்பிரதாயங்களை படைத்துள்ளார்.
                 
“அம்பட்டையான் பாடைக்கோல் கொண்டு வந்துட்டான் சட்டுன்னு எடுக்குற காரியத்தை பாருங்க”
               
அதன் பின்பு செயல்கள் துரிதமாகவே நடந்தன. மகள் ஊருக்கு சொன்னதும் அன்று மதியம் தான் மகள் வந்து சேர்ந்தாள். மஞ்சள் கொட்டிப் போட்டதும் இவன் வெளியே வந்து சப்தமிட்டான்.
               
 “எடுக்கற பங்காளி எசமாங்க எல்லாம் வாங்க சாமியோவ்”
பங்காளிகள் என்று கூடயாரும் இல்லை மாமன் மைத்துனன் என கலந்தே நாலுபேர் வந்தார்கள்.தண்ணீர் சுற்றிபோட்டதும் சவத்தை தூக்கிக் கொண்டுவந்து பாடையில் கிடத்தினார்கள்.
               
      இவன் கால்கட்டு கட்டும்போது கிழவியின் கால்கள் சூடாக இருப்பதை உணர்ந்தான். இவன் சட்டென முகத்தைப் பார்த்தான். கிழவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் கழுத்து ஆரத்தை சரிசெய்வது போல நெஞ்சுக்கூட்டைத் தொட்டுப்பார்த்தான்;. நெஞ்சுக்கூடு ஏறி அமிழ்ந்து கொண்டிருந்தது. அவனுக்குப் புரிந்துவிட்டது கிழவிக்கு இன்னும் உயிர்இருக்கிறது. அவன் அருகில் உள்ளவர்களிடம் விஷயத்தைச் சொல்கிறான்.
               
     ஊர் எல்லை வரை ஒப்பாரிவைத்து சடலத்தை வழியனுப்ப இருந்த பெண்கள் கூட்டம் கிழவியை சுற்றிக்கொண்டனர். கிழவியை வீட்டில் கொண்டு போய் கோரைப்பாயில் கிடத்தினர். இதுவரை இந்தப்பகுதியில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்ததேயில்லை.  வாசலில் நின்றிருந்த பெரியவர்,
 “ஏம்பா கெழவி பொழச்சுகிச்சு வெறும்பாடையைக் கொண்டு போய் எங்க போடறது”,பாடையையாவது தூக்கி கடாசிறலா, சிதைக்கு அடுக்;கிறதுக்கு சுடுகாட்டுக்கு போனவெறக என்ன செய்யறது? 
               
     ஊரில் சில பெரியவர்கள் ஆதீஸ்வரர் கோயில் பெரிய குருக்களிடம் கேட்டுவருவதாகக் கிளம்பிப் போனார்கள். விஜயரங்கன்வலசு அருமைக்கார அய்யனிடம் பார்த்து வருவதாக சென்றனர்.அந்த அய்யனுக்கு இது மாதிரி ஐதீகங்கள் அத்துப்படியாக தெரியும்.
                  
       பெரிய குருக்களைப் பார்க்கப் போனவர்கள் வந்தனர். பெரிய குருக்களுக்கு இதைப்பத்தி ஒன்னும் தெரியலை. அருமைக்கார அய்யன் சொன்னாரு ரெண்டு தலைக்கட்டுக்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காம். அப்போ… கோழியைக் கொண்டுபோய் சீர் செய்து அடக்கம் பண்ணினாங்களாம். ஆதனால நாமளும் அப்படியே செஞ்சுருவோம். நீ போயி ஒரு சேவலை வெலைக்கு வாங்கிட்டு வா. “சட்டுன்னு காரியம் ஆவட்டும் கிளம்பு என கூறுகின்றனர்.
               
     பின்னர் சேவலின் கால்களை சரட்டினால் பாடையில் சேர்த்து கட்டுகின்றனர்.
தோட்டிகள் விறகு அடிக்கி வைக்கப்பட்டிருந்த சிதையில் சேவலை வைத்து மூடி தீ மூட்டினர். இவ்வாறு இறப்புகளுக்கு ஒரு விதமான சடங்குகள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

மரணம் பற்றிய நம்பிக்கை
                   
வீட்டினுள் மூத்த குழந்தை இறந்தால் வீட்டினுள் புதைக்கின்ற வழக்கம் இன்றைய காலங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றன. மரண வீட்டிற்குச் செல்பவர்கள் குளித்த பின்பு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் இருந்து வருகின்றது.
               
 மரண வீட்டில் நாள் முழுவதும் விளக்கு எரிய வேண்டும் என்ற ஒரு வழக்கம் இருந்து வருகின்றது. இறந்தவர்களுக்கு பறை கொட்டும் பழக்கமும் காணப்பட்டது. இதனை,
                 
“இறந்தவர் வீட்டில் சாவுமேளம் கொட்டும் முன்பு இறந்தவர்களை ஒரு நாள் இறக்கப் போகிறவர்கள் துணியால் மூடித் தோளில் ஏந்திக் கிளம்புவர்” (நாலடி.24)   என்றும்
               
“முற்பகலில் திருமணம் நடந்த வீட்டில் பிற்பகலில் சாவு தப்பட்டை ஒலிக்கவும் கூடும்”  ( நாலடி -23 )
                 
அது போலவே இறப்புக்கு செய்யப்படும் சடங்குகள் வழிவழியாக சமுதாயத்தில் வேறூன்றியே காணப்படுகின்றது. அது சங்ககால முதல் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகின்றது.
                  
      சங்ககாலத்தில் நடுகல்கள் குறித்த சான்றுகள் பல கிடைக்கப்பெற்றுகின்றன. இறந்தவரது உடல்களின் மீது பதுக்கைச் சேர்த்துக் கல் எழுப்புதலும் உண்டு. நிரைமீட்டு மடிந்த வீரர்களுக்கு இவ்வாறு கல் எழுப்பும் வழக்கம் காணப்படுகின்றது. வீரன் இறந்த இடத்திலேயே கல் எழுப்பும் நிலை இருந்தமையை இது காட்டுகிறது.    புறநானூற்றில் நடுகல் பற்றிய பல செய்திகள் காணப்படுகின்றன.
         
“உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே         
மடஞ்சால் மஞ்ஞை துணிமயிர் சூட்டி         
படஞ்செய் பந்தர்க் கல்மிசையதுவே” (புறநானூறு)
முடிவுரை
               
நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் மனித சமுதாயத்திலிருந்து எளிதாக பிரிக்க முடியாத ஒரு நிகழ்வே. சமுதாயத்தின் நம்பிக்கையின் மீது நம்பிக்கை இல்லாத மனிதனைக் காண்பது அரிதாகும். மேலும் இன்றைய விஞ்ஞான யுகத்திலும் நம்பிக்கைகளும் அதை ஒட்டிய சடங்குகளும் தனக்கென உள்ள தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

தொகுப்புரை
           
🌴 சொர்க்கம் நரகம் பற்றிய நம்பிக்கையில் மறுபிறவி உண்டென்று ஆராயப்படுகின்றது.            
🌴 பிணம்தழுவியவன் கதையில் தமிழர்களுக்கு இடுகாட்டு பழக்கங்கள் பின்னப்படுவதை ஆராயலாம்.
             
🌴 துக்கநிகழ்வுகள் நடந்த வீட்டில் செய்யப்படும் சம்பிரதாயங்கள் குறித்து விளக்கப்படுகின்றது. இதன் மூலம் ஒருவர் இறப்பின் போது பாடை கட்டுதல் மஞ்சள் கொட்டிப் போடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை அறியலாம்.
🌴மரணம் நடந்த வீட்டில் நல்ல விஷேசங்கள் அடுத்ததாக நடைபெறும் என்பதை தாமரை நாச்சி என்ற கதையின் மூலம் அறியப்படுகின்றது.

    ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்                   
நா.மோகனசெல்வி
    
முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,
     
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
               
கோபி, தமிழ்நாடு, இந்தியா

 

 

மலை மண்மக்கள் பளியர் |கவிதை |ம.ஆன்றிஷா

மலை மண்மக்கள் பளியர் - கவிதை - ம.ஆன்றிஷா

🍄 மலைமுகடுகளில்


தஞ்சம் புகுந்து


இயற்கையின் மடியில் தவழ்ந்த


இயற்கை காவலர்கள்..!


 

🍄பசித்த வயிறு


படிப்பில்லா வாழ்க்கை


அரிசி உணவிற்கு ஏங்கும்


விழிகள் கொண்ட


வறுமையின் குழந்தைகள்..!


 

🍄விரல் விட்டு உடைகளை


எண்ணும் உலகில்


கந்தல் கசக்கி கட்டிய


ஆதிக்குடிகள்..!
.


 

🍄குறுங்குறிஞ்சி பூக்கள் நடுவில்


மனம் போல் வாழாமல்


மனம் மரத்து வாழும்


இராஜபாளையம் மேற்கு


மலைத்தொடர் பழையர்குடி


அதுதான் பளியர்குடி..!


                                                                                                                

            கவிதையின் ஆசிரியர்                      

ம.ஆன்றிஷா

பதிவுஎண்-22113154022011

முனைவர் பட்ட ஆய்வாளர்

தெ.தி.இந்துக்கல்லூரி

நாகர்கோவில் -02.

 

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »