Kulanthai Ilakkiyam Sollum Neethigal – Thinamalar Siruvar Malarai Munvaiththu|Dr N.Paramasivam

Abstract
         
          All the literally texts deal with the social realities and the writers psychological condition. Those text were written for those who are grown up both physically and mentally. Ain’t there any literally texts for the children? Yes, but they are very few. Those literally contributions were initiated by daily newspapers. Thus, this research aims to emphasis the literary writings for children written in Dinamalar’s siruvarmalar.


“குழந்தை இலக்கியம் சொல்லும் நீதிகள் – தினமலர் சிறுவர் மலரை முன்வைத்து”
         

        ஏதாவதொரு கருப்பொருளைக் காலந்தோறும் இலக்கியத்திற்குத் தந்து கொண்டிருக்கும் வல்லமையுடையது மொழி. இது காதுகளுக்கு எட்டும் ஒலியளவில் இருந்து ஏட்டில் தவழ்ந்து கண்களுக்குத் தெரியும் ஒளியளவான பின்னர் அது முன்னைக் காட்டிலும் மிகுவலிமை பெற்றது. உணவும் இச்சையும் என இரண்டு நிலைகளை மட்டுமே வாழ்வியலாகக் கொண்;ட விலங்கு நிலையிலிருந்து வாழ்வென்பது இவ்விரண்டையும் தாண்டி ஏதாவது ஒரு செய்தியை மனிதவாழ்விற்குச் சொல்லக் காத்திருக்கிறது என நினைத்து அதைச் சொல்வதற்கான ஊடகமாக மொழியை மனிதன் கண்டுபிடித்ததன் பின்னர் அதை இடையறாது பிறருக்குப் பயிற்றுவிக்கும் பொழுதே வாழ்வியலின் அறமும் வளர்ந்தது மொழியோடு.
         
         ஒரு காலத்திற்குப் பெருங்காதலும் வீரமும் தேவையான பொழுது மற்றொரு காலத்தில் அறம் மட்டுமே தேவையாய் இருந்தது. இவை கழிந்தது போக பக்தியும் காப்பியமும் பெருங்காலத்தைத் தன்னகத்தே கொண்டு தமிழையும் தமிழனின் மொழியாற்றலையும் வெளிக்கொண்டுவந்தது. பேரிலக்கியம் படைப்பினும் அதைப்; பலபடக் கூறினும் மனிதன் சிறுமையுடையவனே என்பதை கூறுவதற்குச் சிற்றிலக்கியங்கள் ஆற்றின் ஊற்றுப்போல் பெருக்கெடுத்துத் தொண்ணூற்றாறு வகையாய்க் கிளைவிட்டன. இப்படிக் காலங்கள் மாறமாற அக்காலத்தே தோன்றிய படைப்பாளனும் காலவோட்டத்தை விட்டுப் பிரியாது மொழி வழியே தன்பயணத்தைத் தொடர்ந்தான்.
         
         அன்பும் அறனும் சொல்லிய பின்னர் இறுதியாகிய நிலையாமையைத் தன் பட்டறிவின் மூலம் சொல்லிய பின்னரும் இலக்கியம் தன்பயணத்தை நிறுத்திவி;ட்டதா எனின் அதுதான் இல்லை. செல்லும் வாகனம் வெவ்வேறாக இருப்பினும் பயணமும் தூரமும் தொடர்ந்து இருப்பது போல சொல்லும் கருத்துகள் காதலாய் வீரமாய் இருப்பினும் இலக்கியம் அடையவேண்டிய தூரம் இன்னும்இன்னும் நெடுந்தொலைவு இருக்கின்றன என்பதை இலக்கணத்தை உடைத்த இலக்கியமான இக்கால இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. பழங்கால இலக்கியத்தின் மொழித்தழும்பாய் இன்றளவும் கோலோச்சும் கவிதையும் நாடகமும் இன்றளவும் புதுப்பிறப்பாய் விளங்கும் உரைநடையும் கட்டுரையும் கதையும் என விரிந்துபரவியது. நிற்க. மேற்கண்ட அனைத்தும் காதலிக்கும் இளவயதுடையவர் முதல் காடேகும் முதியவர் வரையுள்ளோர்க்கு மட்டுமே படைக்கப்பட்டது. இன்றும் யாருக்கு இலக்கியம் இயற்றப்பட வேண்டும் என்ற வினா எழும்பொழுது ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என எழுத்தை அறிமுகப்படுத்திக் கற்றுக்கொடுத்த ஆசிரியரைப் புகழ்கிறோம். உண்மையில் அப்புகழுக்குக் காரணகர்த்தாவாகிய குழந்தைகள் இலக்கியவாசிப்புக்குள் காணாது போகின்றனர். வேர் பிடிப்பதற்கு மண்காரணமாவது போல குழந்தைகள் அறிவாற்றல்பெற இலக்கியம் வேண்டுமல்லவா? எனவே அவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள்தானே. அவர்களே வருங்காலத்தின் முன்னத்தி ஏர்கள் எனக்கண்டு படைக்கப்பட்டதே இக்கால இலக்கியத்தின் ஆற்றல்மிகு இலக்கியமான குழந்தை இலக்கியமாகும்.

குழந்தை இலக்கிய வகைமைகள்
         
     கதைகள், பாடல்கள் கதைப்பாடல்கள் எனப் பல்வேறு வகைகளில் கிளைத்துப் பெருகியது குழந்தைகளுக்கான இலக்கியங்கள். இவர்களின் விளையாட்டுகளில் பாடல்கள் முன்னர் நிறைய இடம்பெற்றிருந்தன. காரணம் குழந்தைகள் விளையாடும் பொழுது மனது இலகுவாகின்றது. இலகுவாக இருக்கும்பொழுதுதான் பிறர் சொல்லும் சொல் எளிதாக மனதில் பதியும் என்ற அடிப்படையில் விளையாட்டுடன் கூடிய கல்விமுறை புகுத்தப்பட்டது. எனினும் குழந்தைகளுக்கு மனம் சார்ந்ததாக, கல்வி சார்ந்ததாக மட்டும் பாடல்கள் முன்னிருத்தப்படவில்லை என்று அறிதல் வேண்டும். ஏனெனில் உடலின்றி மனமோ அறிவோ இல்லை என்பது யாவரும் அறிந்ததே. அதனால்தான் பாரதிகூட ‘உடலினை உறுதிசெய்’ என்றார். இக்கருத்தை அடியொற்றியே பின்வரும் குழந்தைப்பாடலும் அமைவதைக் காணலாம். இருவர் கைமாற்றிக் கோர்த்துச் சுற்றும்பொழுது,

கோ கோ பிஸ்
கோக்கலங்கா பிஸ்
நாலுகரண்டி நல்லெண்ண
நாப்பத்தாறு தீப்பெட்டி
வாராரய்யா சுப்பைய்யா
வழுக்கிவிட்டா மீனாட்சி
தும்பி தொளசி
தூக்கிவிட்டா மம்மட்டி
கல்யாண வீட்டுல
கண்டெடுத்த மூக்குத்தி
         
      என்ற பாடலைப் பாடி முடித்தவுடனே சுற்றிய இருவரும் அசையாது ஆடாது நிலையாக நிற்கவேண்டும். அப்படி நில்லாது கீழே விழுந்துவிடின் விழுந்தவர் தோற்றவராகக் கருதப்படுவார். இதில் வெற்றி தோல்வி என்பதோ பாடலின் கருத்தோ முக்கியம்அல்ல என்பதை நாம் உணர்தல் வேண்டும். ஏனெனில் உடல்நலிவு கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்துவிடாமல் இருக்க இம்மாதிரியான விளையாட்டுப் பயிற்சியே முக்கியமாகும். எனவே படைப்பு எனப்படுவது எழுத்தை வலிமையாக்குவது அல்ல அது குழந்தைகளின் உடலை உள்ளத்தை வலுப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். இதையே புரட்சிக்கவி பாரதிதாசனும் ‘அறிவை விரிவுசெய் அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள் உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்கிறார். (பாரதிதாசன் கவிதைகள்)

தினமலர் நாளிதழில் சிறுவர் இலக்கியத்தின் பங்கு
         
ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையன்றும் குழந்தைகளுக்கென்று நான்கு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது தினமலர் நாளிதழ். இதில்

ஆச்சர்யமூட்டும் அறிவியல் அலைகள்
குழந்தைகளின் சாதனைகள்
உங்களுக்குத் தெரியுமா?
இளம் ஓவியர்கள்
படக்கதை
வார்த்தை விளையாட்டுகள்
வாங்க சிரிக்கலாம்
சின்னச்சின்னப் பூக்கள்
தொடர்கதை
இருவகைப் படங்களுக்கும் உள்ள வித்தியாசம்
         
    எனப் பல்வேறு பகுதிகளைக் கொண்டு குழந்தைகளின் இரசனை அறிந்து பகுத்துத்தந்துள்ளது.  மேற்கண்ட வகைமைகளில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்றுத் திகழ்வது ஆச்சர்யமூட்டும் அறிவியல் அலைகள் எனும் பகுதியாகும். அப்பகுதியில் மிமிக்ரிபறவை எனப் பலராலும் அழைக்கப்படும் புன்னாகம் எனும் பறவையாகும். இதை ஆங்கிலத்தில் மாக்கிங் என அழைக்கின்றனர். இப்பறவை வடஅமெரிக்காவையும் அதைச்சுற்றியுள்ள பலதீவுகளிலும் உள்ளது என்பதை 1835 இல் சார்லஸ் டார்வின் என்பவர் கண்டறிந்துள்ளார்.
         
         இப்பறவை அமெரிக்காவின் ஐந்து மாகாணங்களில் தேசியப் பறவையாகத் திகழ்கிறது. காரணம,; இது அழகு நிறைந்த பறவையாக இருப்பதாலும் தன்வாழ்நாளில் 200 வகையான ஒலிகளைக்கற்றுப் பிரதிபலிக்கும் புத்திக் கூர்மையாலும் விருப்பத்துடன் இதை வளர்க்கின்றனர். பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம்வரை ஒருவகைக் குரலிலும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை வேறுவிதக் குரலிலும் ஒலிக்கின்றது என்பதைக் கண்டறிந்துள்ளனர். இவை பெரும்பாலும் பின்னிரவில் பாடும் இயல்புடையது என்றும் முடிவில்லாது தொடர்ச்சியாய் பலகுரலில் பாடும் திறன் கொண்டதென்றும் கூறுகின்றனர்.
          இவ்வாறு பாடுவதற்குத் தனித்த காரணமாகத் தன்குஞ்சுகளை விலங்குகள் மற்றும் எதிரிப்பறவைகளிடம் இருந்து பாதுகாக்கவே பல குரலில் பாடி எதிரியைத் திணறடித்து ஓடச்செய்வதற்குப் பலகுரலைக் கற்கின்றது என்பது ஆச்சர்யமே எனக்கூறி வாசகர்களை வியப்படையச்செய்கிறது இவ்விதழ்.

குழந்தைகளின் சாதனைகள்
         
       உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் வீர்பான் என்பார் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தார். தாகம் எடுக்கவே ஆற்றுநீரைக் குடித்தபின் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வாற்றில் இருந்த முதலையானது வீர்பான் காலைக்கவ்வ முதலையைப் பார்;த்து அதிர்ந்து பெருங்குரலெடுத்து அலறியுள்ளார்.
இவரின் அலறல் சப்தம்கேட்டு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த இவரது ஏழுவயது மகன் அஜய்ராஜ் ஒரு குச்சியைக் கொண்டு முதலையைத் தாக்கியுள்ளார். இதனால் வீர்பானை நீருக்குள் இழுத்துள்ளது முதலை. இதைக்கண்ட அஜய்ராஜ் சிறிதும் பதறாது சமயோசிதமாக முதலையை அடித்த குச்சியைக் கொண்டு அதன் கண்களைக் குத்தியுள்ளான். வலிதாங்காத முதலை வீர்பானை விட்டுவிட்டு நீருக்குள் மூழ்கித் தப்பியது. உயிர்தப்பிய வீர்பான் ஊரெல்லாம் இச்செய்தியைக் கூற அஜய்ராஜின் வீரச்செயலை அறிந்த மத்தியஅரசு டிசம்பர் 26, 2025 இல் தேசிய வீரபாலகர் தினத்தில் டில்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமரின் தேசிய வீரபாலர் விருது ஜனாதிபதி பொற்கரத்தால் பெற்றான் அஜய்ராஜ். இவ்விருது வீரத்துடன் கூடிய விவேகத்திற்குக் கிடைத்தது என்பதே பொருந்தும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கட்டான சூழலில் உணர்வுக்கு முக்கியத்துவம் தராது விவேகத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை இவ்விருது உணர்த்தியுள்ளது.

உங்களுக்குத் தெரியுமா?
         
     இப்பகுதியில் பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டு அக்கேள்விக்கு அருகிலேயே அதற்கான விடையும் கொடுத்து அறிவைச் சோதிக்கும் , ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ளது இப்பகுதி.

இளம் ஓவியர்கள்
         
      மனதை ஒருமுகப்படுத்தி அதன்வழியே தன் விரல்களுக்குக் கொண்டுவந்து காட்டுவது ஓவியம். அவ்வகையில் தான் விரும்பிய தலைவர்கள் இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை மனக்கண் வழியே கண்டு வரைந்து காட்டும் முறையில் அமைவது இளம்ஓவியர்கள் பகுதியாகும்.

படக்கதை
         
     படக்கதை என்பது படத்திற்குப் பொருத்தமான கதைகளையும் வரைந்து, படிக்கின்ற குழந்தைகளின் கண்ணையும் கருத்தையும் ஒழுங்குபடுத்தி படக்கதை அமைத்து அதில் நீதியைச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது படக்கதை.

வார்த்தை விளையாட்டு
         
   இவ்விளையாட்டு மொழியின் வளத்தை அறிவதற்குப் பெருந்துணை புரிகின்றது. ஒருபொருளைக் கூற பலசொற்கள் தமிழில் உள்ளன. அவற்றைக் குழந்தைகளும் உணர்ந்து எழுதும் பொருட்டு வார்த்தை விளையாட்டு அமைந்துள்ளது.

அடைபட்ட கட்டங்களைத் தவிர பிற கட்டங்களில்,
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
கீழிருந்து மேல்
மேலிருந்து கீழ்
         
        எனும் முறையில் அமைந்து சரியான சொற்கோவையை உருவாக்கிப் பொருள்தரும்படி அமையும் விளையாட்டு வார்த்தை விளையாட்டாகும்.

வாங்க சிரிக்கலாம்
   
      இப்பகுதியில் வார்த்தைகள் இன்றி ஓவியம் மட்டுமே இடம்பெற்றிருக்கும். அந்த ஓவியத்தைக் கொண்டே சிரிப்பினைக் கொடுக்கும் பகுதி இதுவாகும். உதாரணமாக மூன்று காட்சி ஓவியங்கள் மட்டுமே இடம்பெற்று சிந்தனையோடு கூடிய சிரிப்பினை வழங்குவதை,
முதல்படம்:    மழை வருதல் – மழையில் மனிதனும் அவன்நாய்க்குட்டியும் நனைதல்இரண்டாம்படம்: மழையில் நனையாமல் இருக்க குடையோடு ஒருவர் செல்லுதல்மூன்றாம்படம்:  எஜமானலை விட்டுவிட்டு குடையோடு செல்லும் மனிதருடன் நனையாது இருக்க அந்தநாய்க்குட்டி செல்லுதல். எஜமானர் மழையில் நனைதல்.
          இப்படக்கதை சிந்தனையோடு கூடிய சிரிப்பினை வாங்கசிரிக்கலாம் பகுதி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றது.

சின்னச்சின்னப் பூக்கள்
         
    குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு அக்குழந்தைகளை மகிழ்விக்கும் பொருட்டு பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடும் பகுதியே சின்னச்சின்னப் பூக்கள் பகுதியாகும்.

இருபடங்களுக்கும் உள்ள வித்தியாசம்
         
      ஒரே மாதிரியான ஆனால் சற்றே வேறுபட்ட இருபடங்களைக் கொடுத்து ஏழு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கும் போட்டியாக இப்படங்கள் விளங்கும். இது அனைத்து விதமான வயதுகொண்டவர்களும் விரும்பிக் கண்டுபிடிப்பதாக விளங்குகின்றது,

தொடர்கதை
         
      கதை படிக்கும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்;டவும் அடுத்து என்ன நடக்கும் என்ற சிந்தையைத் தூண்டும் விதமாகவும் தொடர்கதை அமைந்திருக்கின்றன. முன்னர் இத்தொடர்கதையைப் படிப்பதற்கென்றே நூலகம் சென்றுபடித்த நாட்கள் உண்டு. நூலகங்களும் குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுவனவாக இருந்தன. வாசகர்களின் ஆர்வத்தை உணர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்சு என்பார் வாசகர்களுக்கென 3.7 கோடிப் புத்தகங்கள் வாங்கியுள்ளார். 1800 ஏப்ரல்  24ல் தொடங்கப்பட்ட இந்நூலகம் பன்னிரெண்டு ஆண்டுகள் கழி;த்து பிரிட்டன் இராணுவம் இந்நூலகத்தை அழித்தது. அடுத்த அதிபரான தாமஸ் ஜெபர்சன் என்பார் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் உலகின் மிகப்பெரிய நூலகத்தை அமைத்து அனைவருக்குமான நூல்களை இடம்பெறச்செய்து அறிவுசான்றவர்களாக உருவாக்கினார் என்பர். (முனைவர் இரா.குணசீலன் நிற்க அதற்குத் தக ப.67)

கற்கலாம் பழகலாம்
         
      நம்மிடம் இருக்கின்ற தாள்,அட்டை போன்றவற்றில் அழகுப்பொருள்,கப்பல்,பட்டம் உள்ளிட்டவற்றை எவ்வாறு செய்வது என்ற வழிமுறைகளையும் அவ்வழிமுறைகளைக் கற்றுக்கொண்டவர்கள் எவ்வாறு பிறருக்குக் கற்றுக்கொடுப்பது என்பதை விளக்கும் விதமாகவும் கற்கலாம் பழகலாம் பகுதி இடம்பெற்றுள்ளது. மேற்கண்ட அனைத்தும் கீழ்க்கண்ட சிந்தனை வடிவில் அமைந்துள்ளதை,

அறிவியல் அலைகள்                – அடிப்படை அறிவியலை அறிதல்

குழந்தைகளின் சாதனைகள்      – செயல்பட ஊக்கம் கொடுத்தல்

உங்களுக்குத் தெரியுமா?           – ஆர்வத்தைத் தூண்டுதல்

இளம் ஓவியர்கள்                       – எண்ணத்தை மனக்கண்ணால் கொண்டு வருதல்

படக்கதை                                 – கண்ணையும் கருத்தையும் ஒன்றுபடுத்துதல்

வார்த்தை விளையாட்டு             – மொழியாற்றலை உருவாக்கச்செய்தல்

வாங்க சிரிக்கலாம்                      – அறிவும் அறியாமையும் ஒன்றிணைதல்

சின்னச் சின்னப்பூக்கள்             -தொலைவில் உள்ளோரையும் மகிழ்ச்சிப்படுத்துதல்

தொடர்கதை                             – சிந்தையையும் ஆர்வத்தையும் வளர்த்தல்

இருபடங்களுக்குள்ள வேற்றுமை – மிக நுண்ணிய பார்வையுடன் அணுகுதல்

கற்கலாம் பழகலாம்                    – இடையறாத தொடர்ச்சியுடன் கற்றல்
       எனப் பல்வேறு கோணங்களில் அணுகி நுண்ணிதின் ஆராய்ந்து சிறுவர்மலராய் மலரச்செய்கிறது தினமலர். இதைப் பொதுவாகப் பார்ப்பவர்களுக்கு பக்கங்கள் நான்கு என்ற எண்ணிக்கை மட்டுமே தெரியும். ஆனால் அதைக்கூர்ந்து நோக்கும் பொழுது குழந்தைகளுக்கு எதைத்தரவேண்டும் என்ற பொருப்புணர்வும் இதில் அடங்கியருப்பதை உணரமுடிகிறது. கண்களால் காணும் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய அலைபேசி உலகில் கருத்துக்களால் நிரம்பிய எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் தராத இன்றைய குழந்தைகள் பெருகியுள்ளனர். இது குழந்தைகளின் கற்றல் குறித்தான கேள்வியையே எழுப்புகின்றது. வாசிப்பதன் முக்கியத்துவத்தை ஜொனாதன் ஸ்விஃப்டர் என்பார் நான் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது, அது ஞானமுள்ளதோ அல்லது அற்பமானதோ, அது உயிருடன் இருப்பதாகவும் என்னுடன் பேசுவதாகவும் எனக்குத் தோன்றுகிறது எனக் கூறுகிறார் (வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும் தமிழில் ஆலிரத் அசோக்குமார். ப.167) அதுமட்டுமின்றி தனித்த நீதிபோதனைக் கதைகள் பெயரளவுக்குக்கூட இல்லாமல் போவது என்பது இன்றைய குழந்தைகளுக்கு,

🎯எழுத்துக்களை இனம்பிரித்து அறியாமை

🎯சொற்களை எவ்விடத்தில் நிறுத்திப்படிக்கவேண்டும் என்பது குறித்த தெளிவின்மை

🎯படித்தபின்னர் கதையைத் தெளிவாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியாமை

🎯படித்த பகுதியைப் பிறருக்கு எடுத்துச்சொல்லும் திறனின்மை
           
     ஆகியவை ஏற்படவாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பத்திரிக்கைகள் தனித்த இலவச இணைப்பாக நீதிக்கதைகள் அதிகம் இடம்பெறச்செய்யின் இன்னும் நலம்பயக்கும் சிறார்களுக்கு!

துணைநின்ற நூல்கள்
1.பாரதிதாசன் கவிதைகள்

2.முனைவர் இரா.குணசீலன.; நிற்க அதற்குத் தக ப.67

3.வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும் தமிழில் ஆலிரத் அசோக்குமார். ப.167

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.பரமசிவம்
தமிழ் இணைப்பேராசிரியர்
விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரிதிண்டல்,
ஈரோடு – 638 012.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here