Ilakkiyangalil Pulal Vagai Unavu|D.Rajakumari

Abstract
         
          Moral literature advocates vegetarianism. However, the people of the Sangam period consumed meat in large quantities. Meat was the primary food given by kings to beggars. The people of the Sangam period consumed animals, birds, fish, reptiles, and arthropods. Just as in the present day, there was a custom of preserving meat with salt and then consuming it. Pieces of meat were skewered on iron rods, seasoned with salt, black pepper powder, and mustard, and then roasted and eaten.      


“இலக்கியங்களில் புலால் வகை உணவு”

முன்னுரை         
         சங்ககால மக்கள் போரினையும், காதலையும் மிகுதியாக விரும்பியதற்குக் காரணம் அவர்கள் உட்கொண்ட மாமிச உணவே ஆகும்.  மாமிச உணவு மென்மையான மன இயல்புடையவர்களைக் கடுமையான மனதுடையவராக்கும் திறம் கொண்டது.  உடலுக்கும் மனதுக்கும் வலுவையூட்டும் சத்துப்பொருளாக மாமிச உணவு காணப்படுகிறது.  அவற்றுள் ஊர்வனன, பறப்பன, நீந்துவன என மூவகைப் பிராணிகள் அடங்கும்.  இவை சுவைபட சமைத்து குழம்பாகவும், உப்புக் கண்டமாகவும், சுட்டும், பொறித்தும் பச்சையாகவும் உண்ணப்படுவது வழக்கம்  இறைச்சிப் பொருட்களைப் பக்குவப்படுத்தி பரண்களில் மூடி வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.  இறைச்சிக்காக வேட்டையாடுவது போக, தனியே விலங்குகளை வளர்த்தும் வந்துள்ளனர் என்பதையும் அக்கால இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.
         
         புலால் உண்ணாமையை நீதி இலக்கியங்கள் கூறுகின்றன.  இருப்பினும் சங்ககால மக்கள் ஊன் உணவை அதிக அளவில் உண்டுள்ளனர்.  மன்னர்கள் இரவலர்களுக்குக் கொடுத்த உணவில் ஊன் உணவே முதன்மையாக இருந்துள்ளது.  சங்ககால மக்கள் விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, கணுக்காலிகள் போன்றவற்றை உணவில் பயன்படுத்தியுள்ளனர். ஊன், புலால், புலவு, பைந்தடி, பைந்துணி, உணங்கல் எனப் பல பெயர்களால் இறைச்சி வகைகள் அழைக்கப்படுகிறது.  வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பன்றி, மான், மாடு, ஆமான், முயல் போன்ற விலங்குகளும் உடும்பு, அணில், எலி போன்ற சிறு பிராணிகளும், கோழி, காடை, காட்டுக்கோழி, புறா போன்ற பறவையினங்களும் மழைக்காலத்து ஈசல்களும் உணவாக உண்ணப்பட்டன.  இறைச்சியைப் புழுக்கியும், வறுத்தும், சுட்டும், பொரித்தும் உண்டுள்ளனர்.  தமிழர்கள் இறைச்சியை வேக வைத்தும் சுட்டும் உண்டனர்.  வேக வைக்கப்பட்ட இறைச்சி ‘வேவிறைச்சி’ என்றும், தீயில் வாட்டப்பட்டது ‘சூட்டிறைச்சி என்றும் அழைக்கப்பட்டது. 

ஊன் சோறு
         
      இன்று பிரியாணி என்று அழைக்கப்படும் இவ்வுணவு அக்காலத்தில் ஊன்சொறு என்ற பெயரால் அன்று செய்யப்பட்டது.  இது சங்கப் புலவர்களால் ‘ஊன் துவையடிசில்’ எனச் சிறப்பிக்கப்படுகிறது.  ஐவகை நிலங்களில் வாழும் மக்கள் பலவகை உணவு முறைகளால் வேறுபட்டாலும் ஒன்றுபட்டிருந்த ஒரு உணவுவகை ஊன்சோறு தான்.  பாமரமக்கள் முதல் மன்னர் வரை ஊன்சொற்றினை விரும்பி உண்டனர்.  ‘ஊன்’ என்பது இறைச்சியையும் ‘துவை’ என்பது கலந்த தன்மையையும் ‘அடிசில்’ என்பது சமைக்கப்பட்ட உணவினையும் குறிக்கிறது.  ஊன் துவை அடிசில் என்பதற்கு இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட உணவு என்று பொருள். ‘பிரியாணி’ என்னும் சொல் பிற்காலத்தில் வந்துள்ளது.  ஆனால் பிரியாணி என்னும் உணவு சங்க காலத்திலேயே தமிழ் மக்களாலும் பிறராலும் உண்ணப்பட்டுள்ளது.  பிரியாணி என்னும் சொல் பாரசீகச் சொல்.  ‘பிரியன்’ என்னும் சொல்லிலிருந்து பிரியாணி என்னும் கொல் உருவாகியுள்ளது.  பிரியன் என்றால் சமைப்பதற்கு முன்பாகப் பொரிக்கப்பட்டது என்று பொருள்.  அவர்கள் பிரியாணியை இறைச்சி, அரிசி நெய், மஞ்சள், மிளகு ஆகியவற்றைக் கலந்து உருவாக்கியிருக்கிறார்கள்.
         
       1398 இல் தைமூர் இந்தியாவிற்கு வரும்போது பிரியாணி என்னும் உணவு வகையும் இந்தியாவிற்கு வந்தது என்று குறிப்பிடுகின்றனர்.  பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசை ஆட்சி புரிந்த ஜகாங்கீரின் மனைவியான நூர்ஜகான் இந்தியாவில் பிரியாணியை அறிமுகம் செய்தார் என்றும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த க்ஷாஜகானின் மனைவியான மும்தாஜ் அறிமுகப்படுத்தினார் என்றும் கூறுகின்றனர்.  இந்தியாவில் பிரியாணி பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனாது என்று வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஊன் துவை அடிசில் என்னும் பெயரில் அது பயன்பாட்டில் இருந்ததை சங்க இலக்கியம் நமக்குத் தெரிவிக்கிறது.  சேரன் குட்டுவன் போர்க்களத்தில் வெற்றி பெற்றபின், தனது வீரர்களுக்கு விருந்தளித்தான்.  அந்த விருந்தில் அவன் வழங்கிய ஊன் துவை அாசிலானது சோறு வேறாகவும் இறைச்சி வேறாகவும் பிரித்து அறிய முடியாத அளவிற்கு ஒன்றி இருந்தது என உணர்த்தியுள்ளார் புலவர் பரணர்.
         
       செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடிய பாடலிலும் ஊன் துவை கறிசோறு இடம்பெற்றுள்ளது.  செல்வக் கடுங்கோ வாழியாதனின் கைகள் வில் பிடித்துப் போர் செய்வதாலும் பாணருக்கும் புலவருக்கும் தொடர்ந்து வழங்குவதாலும் வன்மையாகவும், வண்மையாகவும் உள்ளன.  ஆனால் எனது கைகள் பிரியாணி என்னும் ஊன் துவை கறி சோறு உண்ணும் தொழிலைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.  எனவே எனது கைகள் மென்மையாக இருக்கின்றன என்று பாடியுள்ளார்.

“புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை
கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின்”
         
       என்று தனது கையின் மென்மைத் தன்மைக்குக் காணரம் தெரிவித்துள்ளார் கபிலர். அக்காலத்தில் சமையல்காரன் ‘வாலுவன்’ என அழைக்கப்பட்டான்.  “அவன் தன் கைகளையே அகப்பையாகக் கொண்டு, துழாவி ஊன் சோற்றினைச் சமைத்து உண்போர் வரிசையறிந்து வழங்கினான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது”.

விலங்குகளின் இறைச்சி
         
     தங்களுக்கு பயன்படக்கூடிய விலங்குகளை வளர்க்கவும், அவற்றை உணவாகப் பயன்படுத்தவும் பழந்தமிழ் மக்கள் அறிந்திருந்தனர்.  ஆட்டின் இறைச்சி, பசுவின் இறைச்சி, பன்றி இறைச்சி, மான் இறைச்சி முளவுமா இறைச்சி, யானை இறைச்சி அகிய விலங்குகளின் இறைச்சிகளைத் தமிழ் மக்கள் உணவாகப் பயன்படுத்தியுள்ளனர்.  மனிதன் ஆதிகாலத்தில் இறைச்சியைப் பச்சையாகவே தின்றதாகத் தெரிகிறது.  இதுபற்றி சங்க இலக்கியத்திலும் சிறுகுறிப்பு உள்ளது.  மறவர்கள், கள்விலைக்கு மாறாக நிரையைக் கொடுத்துக் கள்ளுண்டனர் என்றும், அவர்கள் பச்சை இறைச்சியைத் தின்றுவிட்டு ஈர மிக்க கையை வில்லின் புறத்தே தடவினர் என்றும்,

“நிறுத்த வாயந் தலைச் சென் றுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
எச்சி லீர்ங்கை விற்புறந் திமிரி”
         
       மேற்கூறிய புறநானூற்றடிகள் உரைக்கின்றன.  ஊன் உணவைப் பதப்படுத்திய நிலையை சூடு, புழுக்கு, பொரியல், வறை, வாட்டு, வேவை என்றும் சொற்கள் காட்டுகின்றன.  குழைச்சூடு, கொஞ்சூடு, நெடுஞ்சூடு, வான்சூடு, என்பன சூட்டின் தன்மையை விளக்குவதாகும்.  “இறைச்சியை இரும்பு கம்பியில் கோர்த்துச் சுட்டதாகப் பொருநராற்றுப்படை கூறுகிறது”.

பறவைகளின் இறைச்சி
         
         சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் அளகின் (கோழி) இறைச்சி, ஈதல் இறைச்சி, குறும்பூழ் இறைச்சி, புறா இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தியதாகச் சங்ககால இலக்கியங்களில் குறிப்பு காணப்படுகிறது.  விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடிய வேடர்களின் புதல்வர்கள் பறவைகளின் இறைச்சியைத் தின்றதால் அவர்களின் வாய் புலால் நாற்றம் வீசியது என்பதை,

“புள்ளுன் றின்ற புலவுநாறு கயவாய்
வெவ்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்”
         
      என்ற புறநானூற்று அடிகள் உரைக்கின்றன. இலக்கியத்தில் கோழி காட்டுக்கோழி, மனைக்கோழி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.  சேவல் கோழியை ‘அளகு’ என மக்கள் கூறியதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.  கோழி இறைச்சி இன்றும் பெரும்பாலானோரால் உண்ணப்பட்டு வருகிறது.  இதில் நாட்டுக் கோழியே சிறந்ததாகக் கருதப்படுகிறது.  அக்காலத்தில் உள்ளோரும் கோழி இறைச்சியை அதிக அளவில் உண்டுள்ளனர்.  “மருதநில உழவர்கள் தம் உழைப்பால் பெற்ற வெண்மைநிற நெற்சோற்றோடு கோழிப்பெடைப் பொரியலை உண்ணக் கொடுப்பர் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது”. கோழியை வீட்டில் அதிக அளவில் வளர்த்தனர்.  விருந்தினர் வந்தால் அக்கோழி விருந்தினருக்கு உணவாகச் சமைத்து கொடுக்கப்பட்டது.  இன்றும் கிராமப்புறங்களில் வாழ்வோர் விருந்தினர் வந்தால் வீட்டிலிருக்கும் கோழியைச் சமைத்து உண்ணக் கொடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத நிலமக்களின் அசைவ உணவாகக் கோழி இறைச்சி மட்டுமே இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.  இன்று அனைத்து நில மக்களின் பிரதான அசைவ உணவாகக் கோழி இறைச்சிக் காணப்படுகிறது.  பிற அசைவ உணவுகள் அந்தந்த நிலம் சார்ந்து மிகுதியாகக் காணப்படுகின்றன.  ஆனால் கோழி இறைச்சி மட்டுமே அனைத்து வகை நிலங்களிலும் மிகுதியாகக் கிடைக்கப் பெறுகின்றன.  இவ்வுணவின் வருகையால் பிற அசைவ இறைச்சி உணவுக்கான மாடு, ஆடு போன்ற விலங்கினங்கள் பெரும்பான்மையும் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மீன்கள்
         
      சங்கத்தமிழர் பலவகை மீன்களை உண்டுள்ளனர்.  மீன் பண்டமாற்று செய்யப்பட்டு அனைத்து நிலங்களிலும் உண்ணப்பட்டது.  அயிலை மீன், ஆரல் மீன், இறால் மீன், கெடிற்று மீன், சுறா மீன், வரால் மீன், வாளை மீன் ஆகிய மீன்களை உண்டதாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நெய்தல் நில மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலாகவே இருந்தது.  சிறு மீன்களை வலையெறிந்தும் பெருமீன்களை உளி எறிந்தும் பிடித்தனர்.  மீன் பிடிப்பதற்குப் பரவலாக தூண்டிலைப் பயன்படுத்தினர்.  சிலவகை மீன் தங்கத் தூண்டிலுக்கு மட்டுமே சிக்கும் என்பதைக் கண்டறிந்து தங்கத்தூண்டிலையும் கண்டறிந்தனர்.  இறால், சுறா போன்றவற்றோடு பலவகையான மீன்களைப் பிடித்தனர்.
         
       சுட்ட கருவாட்டைப் பிற நிலத்தாரும் உணவாகக் கொண்டனர்.  மருதம் போன்ற பிற நிலத்தால் நன்னீர் மீன்களைப் பயன்படுத்தினர்.  நீர் நிறைந்த வயல்களில் அகப்பட்ட மீன், நண்டு, ஆமை என்பவை உணவாகக் கொள்ளப்பட்டது.  அயிரை, ஆரல், இரால், சுறா, வரால், வாளை போன்ற மீன்களைச் சுட்டும், வேகவைத்தும், புளிசேர்த்துக் குழம்பாகவும் அக்காலத்தார் உண்ட செய்திகளை இலக்கியங்கள் கூறுகின்றன. நெய்தல் நில மக்கள் மீனை வாட்டி நெய் எடுக்கத் தெரிந்திருந்தனர்.  அந்த நெய்யிலே மீன் இறைச்சி போன்றவைகளைப் பொரித்தனர்.  பிற நிலத்தார் பண்டமாற்றாக மீன் நெய்யைப் பெற்றுச் சென்றனர்.  குழல் மீனைக் காயவைத்த உணவைக் ‘குழல் மீன் கருவாடு’ என்பர்.
         
         முதுகெலும்புடைய உயிரின வகையைச் சேர்ந்த மீன்களை நன்னீரில் வாழ்பவை, உப்பு நீரில் வாழ்பவை என இரண்டாகப் பிரிப்பர்.  ஊன் உணவு வகைகளுள் மீன் உணவு சிறந்ததாகும்.  ஆறு, குளம், கடல் போன்ற நீர் நிலைகளில் மீன்கள் மிகுதியாக வாழ்கின்றன.  பண்டைய தமிழரின் புவியல் அமைப்புப்படி மருத நிலங்களில் ஆறு குளங்களிலும், நெய்தல் நிலத்தில் கடலிலும் மீன்கள் பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு புழங்கு பொருட்களாகப் பயன்படுத்தி வந்தனர்.  இம்மீன்களைப் பிடிக்கும் அறிவு நுட்பமும், எந்தெந்த மாதங்களில் என்னென்ன மீன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்து வைத்திருந்தனர்.

ஊர்வன
         
        ஊர்ந்து செல்வனவற்றில் சங்ககால மக்கள் ஆமை, உடும்பு ஆகியவற்றின் இறைச்சியைப் பயன்படுத்தியுள்ளதாக இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.  ஊர்வனவற்றில் மெதுவாக செல்லக் கூடியது ஆமையாகும்.  ஆமை நிலத்திலும் வாழும்.  நீரிலும் வாழும்.  ஆமை, கடல் ஆமை, குளத்து ஆமை என இருவகைப்படும்.  இவை வயல்களிலும் காணப்படும்.  “வயலிலுள்ள ஆமையைப் புழுக்கி உண்ட செய்தியை பட்டினப்பாலை கூறுகிறது”.  உழவர்கள் வயலை உழும்பொழுது தம் உழுபடையால் சேற்றில் இருந்து வெளிவந்த ஆமையின் தசையை மலை நிலத்திலிருந்தும், காட்டு நிலத்திலிருந்தும் தம் வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு கொடுத்துள்ளனர்.
         
        ஆமை இறைச்சியை உண்ணும் வழக்கம் உப்புக் குறவர்களிடம் காணப்படுகிறது.  அக்கால மக்கள் ஆமை இறைச்சியை உண்டுள்ளனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன.  மீன் பிடித்தல், உப்பை விளைவித்தல், மீனையும் உப்பையும் விற்றல் ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்ட நெய்தல் நில மக்களான பரதவர்கள் ஆமை இறைச்சியை உண்டனர் என்பதைப் பட்டினப்பாலை கூறுகிறது.

“வயல் ஆமைப் புழுக்கு உண்டும்”
         
        என்ற அடியால் நெய்தல் நில மக்கள் ஆமையை உண்டனர் என்பதை அறிய முடிகிறது.  இன்றும் உப்புக் குறவர்கள் ஆமை இறைச்சியை உண்ணுகின்றனர். பொதுவாக ஆமை என்பது மக்களால் வெறுக்கப்படும் ஓர் உயிரினம்.  ஆமை வீட்டுக்குள் நுழையக் கூடாது என்பது மக்களின் நம்பிக்கை.  ஒரு வீட்டில் ஆமை புகுந்தால் அந்த வீடு உருப்படாது என்பர்.  ‘ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்பது பழமொழி.  அதனால் பிற இனத்தவர் ஆமையை உண்பதில்லை.  ஆனால் உப்புக் குறவர்கள் உண்ணுகின்றனர்.  இப்படி பிறரால் வெறுத்து ஒதுக்கப்பட்டதை உண்ணுகின்ற இவர்களும் ஒதுக்கப்படுகின்றனர்.
         
        உடும்பு இறைச்சி அக்காலத்தோரால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டது.  இன்றும் ஈழத்தில் வன்னி மாவட்டத்தில் உடும்பு இறைச்சிக்குப் பெருமதிப்பு உண்டு.  உடும்புக்கறி சிறந்தது என்பதைக் குறிக்கும் ‘முழு உடும்பு, முக்கால் காடை, அரைக் கோழி, கால் அடு’ என்ற பழைய தொடர் வழக்கில் இருக்கின்றது.  ஊர்வனவற்றில் விரைவாக ஓடும் தன்மை உடையது உடும்பு.  இதன் இறைச்சியைச் சுட்டும், புழுக்கியும், பொரித்தும் பயன்படுத்தியுள்ளனர்.  முட்டை உள்ள உடும்பின் இறைச்சியைப் பயன்படுத்தியுள்ளனர்.  இதனை நெடுவாலி என்று அழைத்தனர்.  இறைச்சி வகைகளுள் உடும்பின் இறைச்சியை பழந்தமிழ் மக்கள் சிறந்ததாகக் கருதினர்.  “ஆடவர்கள் உடும்பினைப் பிடித்து அறுத்து அதன் தோலையுரித்துக் கொழுப்பை வீட்டு முற்றத்தில் உறவினர்களுக்கு எல்லாம் கூறு போட்டு கொடுப்பதற்காகக் கொள்ளி வைத்துக் கொளுத்துகின்றனர்.  இதனால் உண்டான நாற்றம் தெருவெல்லாம் சென்று கமழ்கிறது என்று புறநானூற்றில்” உறையூர் முதுகண்ணன் சாத்தனார் உரைக்கின்றார்.
         
         அக்காலத்தில் நாய்களைப் பழக்கி உடும்பை வேட்டையாடினர்.  அவ்வாறு “நாய் கொண்டு வந்து கொடுத்த உடும்பின் தசையை அறுத்து விருந்தினருக்குக் கொடுத்துள்ளனர்.  உடும்பின் கொழுப்பினால் பெய்யப்பட்ட தயிருடன் கூட்டிய கூழினையும், புதிதாகச் சமைத்த பிற நல்ல உணவு வகைகளையும் பாணர்களோடு உடன் வந்த விருந்தினர் பலருக்கும் வழங்கும் விருப்பத்தை உடையவள் என்று புறநானூறு கூறுகிறது”.  கூழில், தயிர், கொழுப்பு போன்றவற்றையும் கலந்துள்ளனர் என்பதையும் வறுமையிலும் அனைவருக்கும் விருந்தளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. “பாலை நிலத்தில் மழை சிறிதளவு பெய்தது.  குழிகளில் சிறிதளவு நீர் நிரம்பி இருந்தது.  அக்கலங்கிய சேற்றைத் தோண்டிப்பெற்ற ஊற்று நீரிதை; தங்களுக்குள் முறையாகப் பெற்று உண்கின்ற நிறைவு பெறாத வாழ்க்கையை உடையவர்கள் அங்கு வாழ்ந்தனர்.  அங்குள்ள ஆண்மக்கள் முள்ளம்பன்றியைக் கொல்வர்.  உடும்பின் நிணத்தை அறுப்பர் பின்னர் தீயை மூட்டி அதில் உடும்பினை வாட்டி அனைவருக்கும் பகுத்துக் கொடுப்பர் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது”.  நீரை முறை வைத்து எடுக்கும் வறுமை நிலையிலும் உடும்பினை அனைவருக்கும் பகுத்துக் கொடுப்பர் என்பதால் அவர்களின் கொடைப் பண்பினை அறியலாம்.

முடிவுரை         
         அக்கால மக்கள் போரினை மிகுதியாக விரும்பியதற்குக் காரணம் அவர்கள் உட்கொண்ட மாமிச உணவே ஆகும்.  மாமிச உணவு மென்மையான இனஇயல்புடையவர்களைக் கடுமையான மனதுடையவராக்கும் திறம் கொண்டது.  உடலுக்கும் மனதுக்கும் வலுவை ஊட்டும் சத்துப்பொருளாக மாமிச உணவு காணப்படுகிறது.  அவற்றுள் ஊர்வன, பறப்பன, நீந்துவன என மூவகைப் பிராணிகள் அடங்கும்.  இவை சுவைபட சமைத்து குழம்பாகவும், உப்புக் கட்டமாகவும், சுட்டும், பொறித்தும், பச்சையாகவும் உண்ணப்படுவது வழக்கம்.  இறைச்சிப் பொருட்களைப் பக்குவப்படுத்தி பரண்களில் மூடி வைத்து பல நாட்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.  இறைச்சிக்காக வேட்டையாடுவது போக, தனியே விலங்குகளை வளர்த்தும் வந்துள்ளனர் என்பதை இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.அவ்வை துரைசாமிப்பிள்ளை, நற்றிணைஅய்யனார் பதிப்பகம்எண். 4/87, 6 வது தெரு, வினாயகபுரம், காரணை புதுச்சேரி, கூடுவாஞ்சேரி – 603 202.

2.கராசன். வி, பத்துப்பாட்டு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பிஇ சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் , அம்பத்தூர், சென்னை

3.நாகராசன் . வி, புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹஸ் (பி) லிட், 41 – பிஇ சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் , அம்பத்தூர், சென்னை

4.மாணிக்கம். அ, அறிஞர் அண்ணா நூற்பதிப்புக் கழகம், 48/1, தென்மேற்கு போக் சாலை, தியாகராய நகர்இ சென்னை

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
து. ராஜகுமாரி, எம்.ஏ., எம்.ஃபில்.,
தமிழ்த்துறை

பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்

கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாலை – 606 603.

ஆய்வு நெறியாளர்
முனைவர் ந. குப்புசாமி
தமிழ்த்துறைத்தலைவர்

கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ரிஷிவந்தியம்இ கள்ளக்குறிச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here