Abstract
After the arrival of the Europeans, the textbooks were taught based on Nunnool. Grammar Question, Grammar Summary, Grammar, Grammar, Grammar, Grammar, Grammar, Children’s Word Grammar, Balance Grammar, Preschool Grammar, Balapadam, the grammar question, grammar, grammar, grammar, grammar, grammar, grammar, grammatical, grammar, preschool grammar, preschool grammar, Palapadam. Scholars who praised the excellence of grammar have been attributed to many reasons for the nineteenth -century. The textbooks written by Visakha Perumalaiyar, Mazhavai Mahalingaiyar, Arumuga Navalar, G. U. Pope, etc., the authors who wrote the grammar textbooks, the importance of the above-mentioned four scholars, and the textbooks written by them have been examined in detail in this article.
இலக்கணப் பாடநூல் உருவாக்கத்தில் நன்னூல் பெறும் இடம்
ஆய்வுச்சுருக்கம்
ஐரோப்பியர்கள் வருகைக்குப் பிறகு அக்காலத்தில் பாடநூல்கள் நன்னூலை அடிப்படையாக கொண்டு பாடம் கற்பிக்கப்பட்டன. மாணவர்கள் எளிமையாக கற்றுக் கொள்வதற்கு இலக்கண வினா விடை, இலக்கண சுருக்கம், இலக்கண நூலாதாரம், இலக்கணச் சிந்தாமணி, இலக்கணத் திரட்டி, இளைஞர் பயில் இலக்கணம், சிற்றிலக்கியம், சிறுவர் சொல் இலக்கணம், பால போத இலக்கணம், பாலர் இலக்கணம், பாலபாடம் ஆகிய தலைப்புகளில் நூல்களைச் சுருக்கி தரப்பட்டுள்ளது. இலக்கணத்தின் சிறப்பைப் புகழ்ந்து பாராட்டிய அறிஞர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நன்னூலுக்கு பல உரைகள் தோன்ற காரணங்களாக கூறப்பட்டுள்ளன.
விசாகப்பெருமாளையர், மழவை மகாலிங்கையர், ஆறுமுக நாவலர், ஜி யூ போப் முதலானவர்கள் இயற்றிய பாடநூல்கள் பற்றியும் இலக்கண பாடநூல் இயற்றிய ஆசிரியர்களையும் மேற்குறிப்பிட்ட நான்கு அறிஞர்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் இயற்றிய பாட புத்தகங்கள் குறித்தும் விரிவாக இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.
முன்னுரை
தமிழ்க்கல்வி வரலாற்றில் நன்னூல் ஒரு வழிகாட்டி நூல் என்றே கூறலாம். அக்காலக் கல்வியை அறிந்துகொள்ள உதவும் இந்நூல் பவணந்தி முனிவரால் பதிமூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. நன்னூல் அனைவராலும் எளிமையாக படிக்க முடியாது என்பதால் இலக்கண வினா விடைகளும், இலக்கணச் சுருக்கப் பதிப்புகளும், காண்டிகையுரைகளும், விருத்தியுரைப் பதிப்புகளும் இயற்றப்பட்டுள்ளன. ஐரோப்பியர் காலத்தில் இருந்து மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், அரசாங்கப் பள்ளிகளிலும், அரசாங்க ஆதரவுபெற்ற பள்ளிகளிலும் நன்னூல் கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதனால் பல பாடநூல்கள் உருவாக்கம் பெற்றன.
இலக்கண பாடநூல்கள்
பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கணம் முழுமையாகக் கற்றுத்தப்பட்டது. அந்தப் பாடநூல்கள் பல்வேறு தலைப்புகளில் இயற்றப்பட்டன. அவை இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா விடை, இலக்கண நூலாதாரம், இலக்கணச் சிந்தாமணி, இலக்கணத் திரட்டு, இளைஞர் பயில் இலக்கணம், சிற்றிலக்கணம், சிறுவர் சொல் இலக்கணம், பாலபோத இலக்கணம், பாலர் இலக்கணம், பாலபாடம், முதலான தலைப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மூன்று நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட நூல்களின் பட்டியல்களை வைத்துபார்க்கும்போது 1870க்கு பிறகுதான் அதிகமான பாடநூல்கள் இயற்றப்பட்டுள்ளன என்று தெரிகிறது. மேற்குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் நன்னூலை அடியொற்றி இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்களில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், சொற்றொடர் அதிகாரம், தொடர்மொழி அதிகாரம், பிரயோகவியல், ஒழிபியல், அனுபந்தம், பகுபதமுடிபு, சூசனம் எனும் இயல்களில் நன்னூல் இலக்கணம் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருசில நூல்களில் மட்டும் நூற்பா எண் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற நூல்களில் உரைநடை வடிவம், வினா விடை வடிவம், எடுத்துக்காட்டு, சூசனம், அனுபந்தம், பயிற்சி வினா, பகுபதமுடிபு, நிறுத்தற்குறி, இயல்கள் மாற்றம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்து வகுப்புகளுக்கும் ஏற்றாற்போல் இலக்கணச் சுருக்க நூல்களில் இயல்களைச் சுருக்கி இயற்றியதாகவும் மழவை மகாலிங்கையர், விசாகப்பெருமாளையர் கூறிய முன்னுரைகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது. நன்னூலார் கூறாத எடுத்துக் காட்டுகள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஜி. யூ. போப்பையர் எழுதிய நூல்களில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் புதுமையாகவும் எளிமையாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.
மொழியறிவைப் புரிந்து கொள்ள நன்னூல் ஒரு முக்கியமான இலக்கண நூலாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பயன்பட்டது. தொடக்கக் காலப் பள்ளிக்கூடங்களில் அடிப்படையான இலக்கணம் மட்டும் போதிக்கப்பட்டது. அவை சிறுவர் சொல் இலக்கணம், நவமணி இலக்கணம், அரிச்சுவடி, நவமணி திரட்டு, குழந்தைகளுக்கான இலக்கணம், வாக்கிய இலக்கணம் என்ற பெயர்களில் இயற்றப்பட்டிருந்தன. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலக்கணம் கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தால் ஆசிரியர்கள் இலக்கண நூல்களைச் சுருக்கமாகவும் ,வினா விடை முறையில் இயற்றினார்கள் என்றும் நூலாசிரியர் இயற்றிய முன்னுரை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆறாம் வகுப்புகளுக்குப் பாலபாடம், இலக்கண வினா விடை, இலக்கணச் சுருக்கம் ஆகிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர். இவர் 1852ஆம் ஆண்டில் மாணவர்களுக்காக தாம் எழுதிய பாலபோத இலக்கணம் நூலின் பாயிரத்தில் உரைநடை நூல்கள் ஏன் தோற்றம் பெற்றன என்று குறிப்பிடுகிறார். இலக்கண இலக்கியக் கணிதப் பூகோளக் ககோளாதி நூல்களையெல்லாம் இக்காலத்து இத்தேசத்தை யாளுகின்ற இங்கீலீஷ் காரர்களும், அவர்கள் வசிக்கும் கண்டத்திலுள்ள ஏனையயோர்களும் செய்யுளில் இயற்றிக் கற்பிப்பவதை விட்டு, வசனங்களிலே தெளிவுற இயற்றிச் சிறுவர்க்குக் கற்பித்துக் கொண்டு வருகின்றனர். அதனால் அக்கண்டத்தில் வாழும் சிறுவர்கள் சில நாட்களிலே பல நூல்களைக் கற்றுப் பல விஷயங்களையும் உணர்ந்து பல தொழில்களையும் இயற்றும் திறமுடையராகின்றனர். இத்தேசத்தார் இந்நூல்களை யெல்லாம் செய்யுளில் செய்து அவற்றிற்குச் சில சொற்களால் உரையியற்றிச் சிறுவர்க்குக் கற்பித்து வருகின்றனர்.
இவ்வாறு செய்யுளில் இயற்றப்பட்ட நூல்கள், நிகண்டு முதலிய கருவி நூல்களைக் கற்றன்றிக் கற்கப்படாவாம். ஆகவே, அவற்றுள் ஒரு நூலைக் கற்பதற்கு நெடுநாள் செல்லுகின்றது. செல்லவே பல நூல்களைக் கற்றுணர்ந்து எந்தொழில்களையுஞ் செய்யத் தக்கவர்களாவது அரிதாம். இதனால் இந்நாட்டுச் சிறுவர்கள் தங்கள் வாழ்நாட்கள் வீழ்நாட் படாமற் சில நாட்களில் அப்பல நூல்களையும் கற்றறிந்து எத்தொழில்களையும் செய்யத் தக்க வல்லாமை அடைவதற்கு. அந்நூல்களையெல்லாம் உலக வழக்கியற் சொற்களால் உரை வசனமாகத் தெளிவுறச் செய்து கல்விச் சாலைகளிலே உபயோக முறும்படி செய்தல் நன்று (விசாகப்பெருமாளையர்: 1834: 31. என்று பாலபோத இலக்கண நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இலக்கண பாடப்புத்தகம் பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டதற்கு இதுவே போதுமான சான்றுகள். நான்காம் வகுப்பு மாணவர்களுக்கும் எளிமையாகப் புரியும் வகையில் இந்த இலக்கண நூல்கள் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நன்னூலுக்குப் பல உரைகள் தோன்ற காரணங்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பள்ளி, கல்லூரிகள் அதிகமாயின அப்பொழுது நிறுவனங்கள் சார்ந்த கல்வி பரவலாக்கப்பட்டது. 1867க்கு பிறகுதான் தமிழ் இலக்கணப் பாடப்புத்தகங்கள் அரசாங்கச் சட்டபடி பாடத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டன. பாடத்திட்டம் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே தமிழ் இலக்கணப் பாடநூல்கள் தோற்றம் பெற்றன. அரசாங்கச் சட்டமாக்கப்பட்ட பிறகு இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன. பொதுவாக இலக்கணப் பாடம் எளிய உரையில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி நன்னூலுக்குச் சுருக்க நூல்கள் தோற்றம் பெற்றன. நன்னூல் காண்டிகையுரை, விருத்தியுரை கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டன. நன்னூலுக்குப் பல சுருக்க உரைகள் தோன்றுவதற்கான காரணங்களை இலக்கணக் கொத்து நூலிலும், சங்கரநமச்சிவாயர் உரைப்பதிப்புகளிலும், உ.வே. சா. என் சரித்திரத்திலும், பவானந்தம் பிள்ளையின் நன்னூல் காண்டிகைவுரைகளிலும் அறிந்துகொள்ளமுடிகிறது.
பல உரைகள் ஒரு நூலுக்கு எழுதப்படும்போது அந்நூல் பெருமை பெறுகிறது. இவ்வாறு பெருமைபெற்ற நூல்களுள் ஒன்று நன்னூல், நன்னூலுக்கு உரைகள் பல்கியமைக்குப் பிறிதொரு காரணமும் இருக்கிறது. சமயப் போட்டியின் விளைவாகவும், நன்னூலுக்கு உரைகள் எழுதப்பட்டன. தொல்காப்பியம் உரை பல பெற்றதற்குக் காரணம், புரியாமை, நன்னூல் உரை பல பெற்றமைக்குக் காரணம், சமயப் போட்டி நன்னூல் பழைய உரை சமணச் சமயச் சார்பானது. சமணர் உரையால் நன்னூலும் உட்பட்டது (அறவாணன்: 1977: 84,85). என்று நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றுவதற்குக் காரணம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கணப் பாடநூல்கள் அச்சிடப்பட்டதால் நன்னூக்கு மட்டும் பல உரைகள் எழுதப்பட்டன. மேலும், ஐரோப்பியர்களும், கத்தோலிக்க, புரொட்டஸ்டண்டு கிறிஸ்தவர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில், நன்னூல் மொழி பெயர்ப்புகளையும் பதிப்புகளையும் வெளியிட்டார்கள், அவ்வெளியீடுகள் அனைத்தும் சமயப் போட்டியின் விளைவுகள் அல்ல. எனினும் சமய நலனையும் ஓரளவு கருத்தில் கொண்டு அவை வெளியிடப்பட்டன. சமயத் தொண்டிற்காக வருகின்ற பாதிரிமார்கள் உள்நாட்டு மொழியைப் பயில வழிகாட்டியாக அவை ஆக்கப்பட்டன.
இவ்வாறு சமய ஆர்வத்தால் மட்டுமன்றி, பிறிதொரு வகையாலும் நன்னூல் உரைகளும், பதிப்புகளும் தோன்றின. இவ்வாறு தோன்றினதற்கு தன்மைக் காரணம், அக்காலத்தில் தோன்றிய கல்வி நிறுவனங்களே. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதியில் பள்ளியளவிலும். கல்லூரி அளவிலும் நன்னூல் பாட நூலாக்கப்பட்டது. இவற்றின் நோக்கம் நன்னூலில் கூறப்படுகின்ற செய்திகளை எளிமையாக்கிப் புரிய வைப்பதே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்காரணம் பற்றியே நிரம்பப் உரைகள் வந்தன என்பதை விட, நிரம்ப பதிப்புகள் வந்தன எனலாம் இவை பெரும் பாலும் வணிக நோக்கில் வெளியானவை (தனிநாயகம் அடிகளார்: 1999: 15). என்று பள்ளிகளில் நன்னூல் பாடமாக்கப்பட்டதையும், உரைகள் பல தோற்றம் பெற்றதற்குக் காரணம் அக்காலத்தில் தோன்றிய கல்வி நிறுவனங்களே என்றும் மேலே கூறியதன் மூலம் அறிந்துக் கொள்ளமுடிகிறது.
இலக்கணத்தின் சிறப்பைப் புகழ்ந்து பாராட்டிய அறிஞர்கள்
மொழியின் சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் முழுமையாகக் கற்றுக் கொள்வதற்கு இலக்கணம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழில் ஏறத்தாழ எழுபத்திரண்டு இலக்கண நூல்கள் தோன்றின. இவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பற்றி பேசுவது இவற்றுள் ஏறத்தாழ முப்பத்து மூன்று இலக்கண நூல்கள் மறைந்து விட்டன (தனிநாயகம் அடிகளார்: 1999:15) மேற்கண்ட மறைந்த இலக்கண நூல்களின் பெயரும் சிற்சில நூற்பாக்களுமே இன்று கிடைக்கின்றன. இவைபோக எஞ்சிய முப்பத்தொன்பது இலக்கண நூல்களில் மிகச் சில நூல்கள் மட்டும் இன்று பாராட்டப்படுகின்றன. அவ்வாறு பாராட்டப்படுவனவற்றுள் நன்னூலும் ஒன்று. நன்னூற் பொருளையும், பெயரையும் தம் நூலில் தக்க இடத்தில் அமைத்துப் பாராட்டிய இலக்கியங்கள் பல. அவை புரபுலிங்கலீலை, திருவெங்கையுலா, திருத்தணிகையுலா, கோடிச்சுரக் கோவை, தமிழ் விடு தூது என்பன (Subramanian:1975:2) நன்னூல் பற்றிய புகழ்மொழிகள் என்ற தலைப்பில் இலக்கணத் தேவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னைக் கல்விச் சங்கத்தின் வழித் தமிழ்த்தேர்வு நடத்திய ஐரோப்பியர், நன்னூலைக் கட்டாயப் பாடமாக அமைந்திருந்தனர். என்றி பவர் (1876), எச். ஸ்டோக் (1830), வால்றர் சாய்சு (1858), டி. பிரதர்டன் (1848), டாக்டர் ஜி.யூ. போப்பையர் (1857) ஆகியோர்கள் இந்நூலைப் புகழ்ந்து போற்றினார்கள். ஆங்கிலத்தில் பல்லோராலும் மொழிபெயர்க்கப் பட்ட முதல் இலக்கண நூல் இதுதான். டாக்டர் கால்டுவெல் நன்னூலையே தம் ஒப்பிலக்கண ஆய்வுக்கு மேற்கொண்டார்.
இருபதாம் நூற்றாண்டு மொழியியல் ஆய்விலும் நன்னூல் அறிவியல் முறையில் அமைக்கப்பட்ட இலக்கணம் என்று பாராட்டப்படுகிறது (அறவாணன்: 1977: 44). நன்னூல் இலக்கணம் இத்துணைச் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. டாக்டர் போப்பையர் உரை (கி.பி. 1857) பத்தொன்பதாம் நூற்றாண்டில் டாக்டர் போப்பையரின் பெருமை தமிழ்நாட்டில் விதானமிட்டது. அவர்தம் இலக்கண நூல் ஒவ்வொரு மாணாக்கர் கையிலும் பொலிவதாயிற்று. யான் முதன் முதல் பயின்ற இலக்கணம் இவருடையதே. என்பது தமிழ்த் தென்றல் திரு. வி. க. வின் பொன்னுரை. (அறவாணன் :1977: 210) இலக்கண வினா விடை நூல் இயற்றியதில் ஜி.யூ.போப்பையர் உரைபணி தற்றிய சிறப்புக் குறியதாகப் போற்றப்படுகிறது. நன்னூல் இத்துணைச் சிறப்புகள் பெறக் காரணங்கள் எவை? சொல்காப்பியர் 946 நூற்பாக்களில் 2046 அடிகளில் கூறிய செய்திகளைச் சுருக்கி விளக்கம் குன்றாமல் 462 நூற்பாக்களில் 1029 அடிகளில் கொடுத்தமை நூலை நடத்திச் செல்லும் முறை தருக்க நெறிக்கு உட்பட்டு இருக்கின்றமை எளிதில் மனதில் பதியும் பாங்கு கொண்ட நூற்பா அகவல் யாப்பில் நூலை ஆக்கியமை, நூற்பாவில் ஆளப்பட்ட சொற்கள் இல்லாமலும் அரிய சொற்களாய் இல்லாமலும் அமைந்தமை. நூற்பா அடிகள் பல்காமல் சொற்கள் பல்காமல் பெரும்பான்மையான நூற்பாக்கள், மூன்று நான்குவரிகளுக்கு மிகாது, திட்ப நுப்பம் செறிந்து விளங்குகின்றமை, தமிழ் மொழி மரபுகளைப் புறக்கணியாமலும், புதிய செய்திகளைப் புறக்கணியாமலும் வேற்றுமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமலும் அமைந்தமை (அறவாணன் :1977: 44). என்று நன்னூல் இலக்கணப் பாடநூல்கள் அமைந்தமைக்குச் சிறப்பு காரணங்கள் என்று கூறமுடிகிறது.
துணைநூல் பட்டியல்கள்
1.அரவிந்தன் மு.வை 1968 உரையாசிரியர்கள் சிதம்பரம் மு.ப மணிவாசகர் பதிப்பகம் சென்னை.
2.அறவாணன் க.ப. 1977 எழுநூறு ஆண்டுகளில் நன்னூல் சென்னை பாரி நிலையம்
3.ஆறுமுகநாவலர் – நன்னூற் காண்டிகையுரை பவணந்தி முனிவர் பகுதி-2
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஞா. விஜயகுமாரி
உதவிப் பேராசிரியர்
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி
மீனம்பாக்கம் சென்னை -61