Cultural Imprints in the Material Culture of the Kattunayakan Community|Selvaraj D

காட்டுநாயக்கன் மக்களின் புழங்கு பொருள்களில் பண்பாட்டுப் பதிவுகள்
Abstract
         
      Material culture constitutes a vital dimension of community life, embodying the social practices, ecological adaptations, and symbolic meanings embedded within a people’s lived experience. Among the Kattunayakan community of South India, everyday utilitarian objects function not merely as instruments of subsistence but as repositories of indigenous knowledge and cultural memory. Rooted in a forest-based livelihood, the Kattunayakans fashion their material objects primarily from locally available natural resources, demonstrating a sophisticated understanding of ecological balance, sustainability, and environmental adaptation. This study categorizes Kattunayakan material objects into three interrelated domains: domestic implements, occupational tools, and ritual or belief-oriented artifacts. Such a classificatory framework facilitates a systematic analysis of the ways in which material forms encode social organization, customary practices, and intergenerational knowledge transmission. Objects such as the conch (sangu) and the karugamani thaali transcend functional utility, operating as enduring symbols of identity, kinship, and spiritual belief. By foregrounding these artifacts as cultural texts, the study underscores the epistemological significance of Kattunayakan material culture. In the context of rapid modernization and cultural transformation, documenting, identifying, and preserving these indigenous knowledge systems becomes an urgent scholarly and ethical imperative.

Keywords : Kattunayakan; material culture, indigenous knowledge systems, tribal heritage, cultural continuity; ritual symbolism


“காட்டுநாயக்கன் மக்களின் புழங்கு பொருள்களில் பண்பாட்டுப் பதிவுகள்”

ஆய்வுச் சுருக்கம்
         
     புழங்குப் பொருட்கள் என்பவை மக்களுடைய வாழ்வியலில் ஒன்றிணைந்தவையாகக் காணப்படுகின்றன. மக்களினுடைய தேவைக்காகவும் வசதிக்காகவும் பல்வேறு பொருட்களை உருவாக்கிக் கொண்டனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட பொருட்கள் நீண்ட தேவையைக் கொண்டிருப்பின் மட்டுமே மக்களுடைய வழக்காறுகளோடு பிணைந்து காணப்படும். புழங்கு பொருட்கள் சார்ந்த நம்பிக்கைகள் உருவாகின்ற பொழுது தேவையைக் கடந்தும் அப்பொருட்கள் மக்களுடைய வாழ்வில் நிலைத்து நிற்கும் தன்மையை எய்துகின்றன. காட்டுநாயக்க இன மக்கள் பயன்படுத்தக்கூடிய புழங்கு பொருட்களை மூன்று வகைகளாகப் பிரித்து ஆராய்வதன் மூலம் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியை ஆராய இயலும். மலைகளில் தங்களுடைய வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்ட மக்கள் தங்களைச் சுற்றி அமைந்துள்ள சூழலில் இருந்து பெறக்கூடிய பொருட்களைக் கொண்டே புழங்கு பொருட்களை உருவாக்கினர். இதனைக் கருத்தில் கொண்டு காட்டுநாயக்க மக்களினுடைய புழங்கு பொருட்களை ஆராய்கின்ற பொழுது பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் மரபு நிலை தொடர்ச்சியையும் அறிய முடியும் என்ற கருதுகோளின் அடிப்படையில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்படுகிறது.

திறவுச் சொற்கள்: காட்டுநாயக்கர், புழங்கு பொருட்கள், இல்லம் சார்ந்த புழங்கு பொருட்கள், சங்கு, கருகமணி தாலி, பண்பாட்டுப் பதிவுகள்

முன்னுரை
         
       பண்பாடு என்பது உடனே தோன்றி மறைவது அன்று. மக்களினுடைய வாழ்வில் பெற்ற அனுபவங்களில் இருந்தும் தோல்விகளிலிருந்தும் பெறப்பட்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறு தோற்றம் பெறக் கூடிய வழக்காறுகள் நீண்ட நாள் மக்களினுடைய நினைவிலி மனதில் இருந்தும் வாய்மொழியாகவும் கடத்தப்பட்டு பண்பாடாக உருப்பெறுகிறது. அவ்வாறான பண்பாட்டை வளர்க்கக்கூடிய வழக்காறுகளுள் புழங்கு பொருளும் ஒன்று. மக்களினுடைய தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக உருப்பெற்றவையே புழங்கு பொருட்கள். புழங்கு பொருட்களின் வடிவமைப்பும் பயன்பாடும் நீண்ட காலமாக மக்களால் கடத்தப்பட்டும் திருத்தி அமைக்கப்பட்டும் கொண்டு வருகின்றன. இதனால் புழங்க பொருள் சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள், பயன்பாடுகள் ஆகியவை காலம் கடந்தும் மக்களினுடைய பண்பாட்டில் ஊடுருவி நிற்கின்றன. காட்டுநாயக்க இன மக்களின் புழங்கு பொருட்கள் சார்ந்த பண்பாட்டுப் பதிவுகளை ஆராய்வதாக இக்கட்டுரையானது அமைகிறது.

புழங்கு பொருட்கள் விளக்கம்     
       புழங்குதல் என்பதற்கு மெய்யப்பன் தமிழகராதி பழகுதல் (மெய்யப்பன் தமிழ் அகராதி, ப.781) என்றும் கழகத்தமிழ் அகராதி கையாளுதல், வழங்குதல் (கழகத்தமிழ் அகராதி, ப.641)என்றும் நர்மதாவின் தமிழகராதி உபயோகத்தில் இருத்தல், பயன்கருதி கையாளப்படுதல் (நர்மதாவின் தமிழகராதி, ப.670) என்றும் தமிழ் லெக்சிகன் கையாளுதல் (தமிழ் லெக்சிகன், ப.2792) என்றும் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதி வழக்கில் இருக்கும் நிலை (செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதி, ப.274)  என்றும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உபயோகித்தல் அல்லது வழக்கில் இருக்கும் நிலை, பண்பாடு (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.751) என்றும் பல்வேறு அகராதிகள் விளக்கங்கள் தருகின்றன.
         
         மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் கையாளக் கூடிய பரும வடிவப் பொருட்களையே புழங்குபொருட்கள் என்று அறிஞர்கள் அடையாளப்படுத்துகின்றனர். புழங்கு பொருட்கள் மக்களின் தேவை மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு தோற்றம் பெறுகின்றன. “பண்பாடும் புழங்கு பொருட்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. ஏனெனில் புழங்கு பொருட்கள் அனைத்தும் பண்பாட்டோடு ஒன்றிணைந்தே காணப்படுகின்றன. அவை பண்பாட்டு மாற்றத்திற்கு ஏற்ப மாறுபட்டு காணப்பட்டாலும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றியே காணப்படுகின்றன. இதனை பொருளும் பண்பாடும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை; நறுக்குத் தெறித்தாற்போன்று மிகக் குறைந்தபட்ச வரையறையாகச் சொன்னால் பண்பாட்டின் கண்ணாடி புழங்கு பொருட்கள் என்றும் கூறலாம்.” (பக்தவத்சல பாரதி,1980,ப.165) எனவே மக்களின் வாழ்வியலோடு பண்பாட்டுக் கூறினையும் சேர்த்தே பிரதிபலிக்கின்றன என்றறிய முடிகிறது.

புழங்கு பொருட்களின் வகைகள்         
      ஒரு இனத்தின் பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் வாழ்க்கைக்குத் துணை செய்யும் அனைத்துப் பொருள்களையும் புழங்கு பொருட்கள் எனலாம். மக்களின் அன்றாட தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் புழங்கு பொருட்களே ஆகும்.  காட்டுநாயக்க இனமக்களின் வாழ்வினையும் பழக்கங்களையும் கொண்டு,
1.இல்லம் சார் பொருட்கள்,
2.தொழில் சார் பொருட்கள்,
3.வேட்டைக்காகப் பயன்படுத்திய பொருட்கள்
          எனப் புழங்குப் பொருட்களை மூன்று வகைகளாகப் பகுக்க இயலும். வேட்டையாடுதலே இம்மக்களின் பூர்வீகத் தொழில் என்பதால் அதனைத் தனித்து ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இல்லம் சார் பொருட்கள்:
அ.சிணுக்கு வாரி
         
      பெண்களின் தலையில் ஏற்படக்கூடிய சிக்கினை அகற்றுவதற்குப் பயன்படக் கூடிய “சிணுக்கு வாரி” என்பது இரும்பினாலானப் புழங்குபொருளாகும். இதனை மக்கள் “சிக்கால்குச்சி” என கூறுகின்றனர். இவர்களின் தாய்மொழியான தெலுங்கில் ‘சிக்காள் புள்ள’ என்றும் கூறுவர். பூப்புச்சடங்கின் போது பூப்பெய்திய பெண்ணிற்குத் தாய் மாமன் சீரில் ஒன்றாகக் கொடுக்கின்றனர். தீய சக்தியிலிருந்து காக்கும் ஆற்றலைக் கொண்டதாக மக்கள் இப்பொருளைக் கருதுகின்றனர். எரிகின்ற விளக்கில் சிணுக்கு வாரி குச்சியின் முனையை சூடுபடுத்தி பிறந்த குழந்தைக்குத் தலை நெற்றியிலும், இரு கைகளிலும், இரு கால்களிலும் மற்றும் குழந்தை அடிவயிற்றிலும் சூடு வைக்கின்றனர். குழந்தைக்கு எவ்வித நோய் தாக்கமும் ஏற்படக்கூடாது என்றெண்ணி இச்சடங்கினை மேற்கோள்கின்றனர். பனியாரம், அப்பளம் போன்ற பலகாரங்களை எண்ணெயில் இட்டு பொறித்தெடுப்பதற்கும் இச்சிணுக்குக் குச்சியைப் பயன்படுத்துகின்றனர். நம்பிக்கை அடிப்படையிலும் பயன்பாடு அடிப்படையிலும் சிணுக்குக் குச்சி பண்பாட்டில் நிலைத்து நிற்பதை அறிய முடிகிறது.

ஆ.முறம்
         
     பா வடிவில் அல்லது சதுர வடிவில் அல்லது முக்கோண வடிவில் மூங்கிலால் தயாரிக்கப்படும் தட்டையானப் பொருளினை முறம் என்றழைப்பர். உணவுக்காகப் பயன்படுத்துகின்ற அரிசி, பருப்பு, சோளம், கம்பு போன்ற தானியங்களில் உள்ள தூசுகளையும் சிறிய கற்களையும் களைந்து எடுப்பதற்காக முறமானது பயன்படுகிறது. பிறப்புச்சடங்கின் போது பிறந்த குழந்தையை முதல் மூன்று நாட்கள் இம்முறத்தில் படுக்க வைக்கின்றனர். இம்முறத்தை “மொறத்த” என்றும் முக்கோண வடிவ முறத்தினை “சொளக” என்றும் இம்மக்கள் கூறுகின்றனர்.

இ. வெத்தலைப் பெட்டி
         
    வெத்தலைப் பெட்டி இம்மக்களின் வாழ்வில் முக்கிய புழங்கு பொருளாகும். வெற்றிலையினைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பெட்டி “வெற்றிலை பெட்டியாகும்”. ஈச்சமரத்துக்கிளையின் மட்டையில் பின்னப்பட்ட பெட்டியானது கையளவு உடையதாகவும் கைக்கு அடக்கமாகவும் அமைந்திருக்கும் வகையில் உருவாக்குகின்றனர். பணம், நகை, பாசி போன்ற பொருட்களை வைத்து பாதுகாத்து கொள்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றனர்.

ஈ. சங்கு
         
     காட்டு நாயக்க இனமக்கள் பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது பூர்த்தி அடைந்ததும் தாய்ப்பாலிற்கு இணையான பசுவில் இருந்து பெறப்படும் பால் உணவாகக் கொடுக்கப்படுகிறது. அந்த பால் சங்கின் மூலமாக குழந்தைக்கு ஊட்டப்படுகிறது. இச்சங்கானது வெண்கலத்தாலும், வெள்ளியாலும் வட்ட வடிவிலும் அதன் மேல் மூடி கொண்டும், கைப்பிடியோடும் விளிம்பில் பால் ஊட்ட சிறிய கால்வாய் போன்ற அமைப்போடும் தயாரிக்கப்படுகிறது. சங்கு பல்வேறு இனமக்களின் புழங்குபொருளாக இருந்தாலும் இம்மக்களின் வடிவமைப்பு வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

உ. கருகமணி தாலி
         
     கருமை நிறத்தினைக் கொண்ட ஒரு வகை பாசியினை கருகமணி என்றழைக்கின்றனர். இந்த கருக மணியானது காட்டுநாயக்கன் இன பழங்குடி பெண்கள் கழுத்தில் அணிகின்ற  அணிகலன் ஆகும். இதனைத் தாலி என்ற பொருண்மையில் கையாள்கின்றனர். ஏழு வெள்ளை நிற நூலினை எடுத்து மஞ்சள் கலந்து நீரில் நனைத்துப் பின்னர் கருகமணி கோர்க்கப்பட்டு அதன் மையத்தில் தங்கு பொட்டும் கோர்க்கப்படுகிறது. திருமணத்தின் போது மாப்பிள்ளை கருகமணி தாலியைத் திரைக்கு மேலே நீட்டுகிறான். துணைப் பெண் தாலியை வாங்கி மணமகளின் கழுத்தில் காட்டுகிறாள். கருகமணி அணிந்த பெண் திருமணம் முடிந்தவள் என மற்ற திருமணமாகாத ஆண்களுக்குத் தெரியப்படுத்தும் ஒரு குறியீடாகவும் பயன்படுத்துகின்றது.

தொழில் சார் பொருட்கள்:
அ. குடுகுடுப்பை
         
         குறி சொல்லும் தொழில் செய்யும் காட்டு நாயக்க இனமக்கள் பயன்படுத்தும் இசைக் கருவி குடுகுடுப்பையாகும். இக்கருவியை ஆண்கள் மட்டுமே குறி சொல்லப் பயன்படுத்துகின்றனர். பகல், இரவு நேரங்களில் இக்கருவியினை இசைத்துக்கொண்டே குறிசொல்வர். குடுகுடுப்பைத் தயாரிப்பதற்கு மரக்கட்டையையும், வெண்கலத்தையும் பயன்படுத்துகின்றனர். உருள் வடிவம் போன்ற இருக்கக்கூடிய மரக்கட்டையின் திறந்த நிலையில் ஆட்டின் சவ்வினை இருபுறங்களில் மூடி நன்கு கட்டி ஒரு வளையம் பொருத்தப்படுகிறது. இதனை ‘சந்திர வளையம்’ என அழைக்கின்றனர். இரு புறங்களிலும் பொருத்தப்பட்டுள்ள வளையத்தை ஒன்றோடு ஒன்றாக இறுகப்பற்றுமாறு சிறிய நூலினைக் கொண்டு கட்டுகின்றனர். நூலின் முனையில் தேன் மெழுகு போன்ற சிறிய உருண்டை அமுக்கி வைக்கப்படுகிறது. இறுதியாக உடுக்கையின் மையப்பகுதி நீளமான துணி கொண்டு கட்டப்படுகிறது. இத்துடனே சில வெண்கல மணிகளும் கட்டப்பட்டு இருக்கும். ஈஸ்வரன் (சிவபெருமான்) எல்லா மக்களுக்கும் தொழில் பிரித்து தரும்பொழுது இந்த இன மக்களுக்கு மட்டும் சித்து உடுக்கையைக் (குடுகுடுப்பை) கையில் கொடுத்து குறி சொல்லி பிழைத்துக்கொள் என்று கூறினார் என்ற தொன்மக்கதையும் மக்களிடையே நிலவிவருகிறது. மக்கள் தங்கள் தொழிலுக்குரிய கருவியைத் தாங்களே செய்து கொள்கின்றனர்.

ஆ. ஓலைச்சுவடி
         
      குறிசொல்வதற்கு இம்மக்கள் பயன்படுத்தக்கூடிய மற்றொரு பொருள் ஓலைச்சுவடியாகும். ஓலைச்சுவடி என்பது பனை ஓலையால் ஒன்று முதல் இரண்டு அடி கொண்டவையாகத் தயாரிக்கப்படுகிறது. இதனை ஆண், பெண் என இருவரும் குறி சொல்வதற்காகப் பயன்படுத்துகின்றனர். ஓலைச்சுவடியில் புராணக்கதைகளை மையமாகக்கொண்டு கதாபாத்திரங்களை வரைந்திருப்பர். எடுத்துக்காட்டாக: பனை ஓலையின் இரு பக்கங்களிலும் இராமன், முருகன், சீதை, அனுமன், ஜக்கம்மாள், பூதம், பேய் போன்றவற்றின் உருவங்கள் வரையப்பட்டிருக்கும். இவை மட்டும் இல்லாமல் சூரியன், நிலவு, விண்மீன்கள், சூலம் போன்ற சின்னங்களும் வரையப்பட்டிருக்கும். ஒலைச்சுவடியினைச் சுற்றி வைக்கப்படுகின்ற நுனியின் அரை அடி நீளம் கொண்ட கம்பி ஒன்று கட்டி வைக்கப்பட்டிருக்கும். மக்களின் வாழ்வின் போக்கினை இப்படங்கள் கொண்டு குறியாகச் சொல்கின்றனர்.
வேட்டைக்காகப் பயன்படுத்திய பொருட்கள்         
      காட்டு நாயக்க இனமக்களின் தொழில்களுள் வேட்டையாடுதல் மிக முக்கியமானதாகும். உணவுத் தேவையை அடிப்படையாகக் கொண்டு உருவான தொழிலாகும். அதன் பயன்பாட்டுக் கருவிகளையும் மக்களே செய்து கொண்டனர். தேவைக்கும் பயனுக்கும் தகுந்தாற்போல் தயாரிக்கப்படுகிறது.

அ. கவண்கல் 
         
     காட்டுநாயக்கன் பழங்குடியினர் பயன்படுத்துகின்ற வேட்டைப் புழங்குப் பொருட்களுள் ஒன்று கவண்கல்லாகும். கவண்கல் ஆனது ஆங்கில எழுத்து “A” வடிவில் இருக்கும். இதனை ” A ” வடிவில் இருக்கும் மரக்கம்பு, கயிறு அல்லது இரப்பர் நாடா சேர்த்துக்கட்டி உருவாக்குகின்றனர். அதனை சிறிய விலங்குகள் வேட்டையாடப் பயன்படுத்துகின்றனர்.

ஆ. குத்துவெட்டி
         
   குத்துவெட்டி விலங்குகளை வேட்டையாடுவதற்காகப் பயன்படும் கருவியாகும். இந்த பொருளினைப் பெரும்பான்மையாக ஆண்களே கையாளுகின்றனர். காட்டுநாயக்கன் மக்கள் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்து வந்த போது வேட்டைக்குச் செல்வர். சிறுத்தை, புலி, மான் போன்ற காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக இப்பொருள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஒரு அடி உயரம் கொண்டு நான்கு அடி குச்சியினைக் கைப்பிடியாகக் கோர்த்தும் நுனி முனையாது மிக கூர்மையான ஈட்டி போன்ற அமைப்பினையும் கொண்டிருக்கும்.

இ.சக்கி முக்கி 
         
      சக்கி முக்கி என்பது ஒரு விதமான வெண்மை நிற கல்லாகும். இக்கல்லிற்கு இம்மக்களால் வழங்கப்படும் பெயர் “வெங்கட்ராயி” என்பதாகும். அதனைத் தமிழில் “வெங்கட்சாங்கல்” என்ற பெயரால் வழங்குகின்றனர். இக்கல்லுடன் இரும்பு உருக்கு ஒன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் “இலவம்பஞ்சு” சேர்க்கப்படுகிறது. கல்லையும் இரும்பையும் உரசும் பொழுது உராய்வின் காரணமாக நெருப்பு பொறி உருவாகின்றது. இந்த நெருப்பு பொரியானது இலவம்பஞ்சில் படும்பொழுது நெருப்பு உண்டாகிறது. அந்த சிறிய நெருப்பினைப் பெரிய துணியில் வைத்து பற்ற வைக்கின்றனர்.  நெருப்பில் இருந்து வருகின்ற புகையினை எலிப் பொந்துகளில் முயல் பொந்துகளில் மற்றும் குகையில் வசிக்கும் நரி போன்ற காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கும் நெருப்பினைச் சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
ஈ.இலவம் பஞ்சு
         
      தீப்பெட்டி இல்லாத காலத்தில் நெருப்பு உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு புழங்கு பொருள் இலவம் பஞ்சு ஆகும். 150 வருடங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைகளில் வசித்து வந்த காலத்தில், இம்மக்கள் இலவம்பஞ்சு மரத்திலிருந்து கிடைக்கின்ற காயினை நெருப்பில் சுட்டு அதில் இருக்கின்ற பஞ்சினைக் கருக்கி பனங்கொட்டையில் சேகரித்து வைத்துக்கொண்டனர். அதனை அவர்களுக்குத் தேவைப்படும் பொழுது சக்கி முக்கி கல்லோடு இணைத்து நெருப்பினை உண்டாக்கினர். இதனை ‘உலோவம் பஞ்சு’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

உ. பனங்கொட்டைக் குடுவை
         
      பனை மரத்திலிருந்து அழுகிய நிலையில் விழும் பனம் பழத்திலிருந்து பனங்கொட்டை கிடைக்கிறது. இந்த பனங்கொட்டையினைக் காட்டுநாயக்கன் பழங்குடியின மக்கள் தீப்பெட்டிக்கு நிகராகப் பயன்படுத்துகின்றனர். மழை, வெயில் பாராமல் அலைந்துதிரிந்து வேட்டையாடச் செல்வர். அவ்வாறு வேட்டையாடிய விலங்கின் உணவினைச் சமைப்பதற்கும் குகைகளில் உள்ள நில பொந்துகளில் உள்ள விலங்குகளை வெளியேற்றுவதற்கும் நெருப்பு தேவைப்பட்டது. அந்த நெருப்பு உருவாக்குவதற்கு உலோகம் பஞ்சு தேவைப்பட்டது. அப்பஞ்சினை மழையில் நனையாதவாறு பாதுகாப்பதற்கு பனங்கொட்டைகளைப் பயன்படுத்தினர். பனங்கொட்டை விளிம்பில் சிறிய துளை ஒன்றினை உருவாக்கி அதில் கருக்கியப் பஞ்சினைச் சேமித்து வைப்பர்.

முடிவுரை
         
      மக்களின் வாழ்வில் நீண்ட காலமாக பிணைந்திருக்கக் கூடிய வழக்காறுகள் பண்பாடாக உருப்பெறுகிறது. மக்களின் மரபுசார்ந்த அறிவினையும் வாழ்வியல் வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகப் பண்பாட்டுக் கூறுகள் அமைகின்றன. காட்டு நாயக்க இனமக்கள் பயன்படுத்தும் புழங்குப் பொருட்கள் தொடர்நிலை அறிவு வளர்ச்சியினை வெளிப்படுத்துகிறது. இல்லம் சார்ந்து பயன்படுத்தக் கூடியப் பொருட்கள் நம்பிக்கை அடிப்படையிலும் பயன்பாட்டு அடிப்படையிலும் மக்கள் வாழ்வில் நிலைத்திருக்கின்றன. வேட்டையாடுதல் சார்ந்த புழங்கு பொருட்களை ஆராய்கின்ற போது அப்பொருட்கள் பலமுறை முயற்சிக்குப் பின் உருவானது என்று அறிய முடிகிறது. காட்டு நாயக்க இன மக்கள் இயற்கையிலிருந்து பெற்றிருந்த அறிவினையும் அம்மக்கள் இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வியலையும் இனங்காண முடிகிறது. காட்டுநாயக்க இனமக்களின் புழங்குப் பொருட்களை ஆராய்கின்ற போது நீண்டதொரு பண்பாட்டுத் தொடர்ச்சியினை வெளிப்படுத்துகிறது.

தகவலாளர் பட்டியல்
1.பாப்பாத்தி,60, காட்டு நாயக்கர், கல்வியறிவில்லை

2.ஜோதி, 50, காட்டு நாயக்கர், கல்வியறிவில்லை

3.காளியம்மாள், 80, காட்டு நாயக்கர், கல்வியறிவில்லை

4.முத்து, 72, காட்டு நாயக்கர், கல்வியறிவில்லை

துணைநூற்பட்டியல்
1.மெய்யப்பன் தமிழ் அகராதி, மணிவாசகர் பதிப்பகம்,2009

2.கழகத்தமிழ் அகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1964

3.நர்மதாவின் தமிழகராதி, நர்மதா பதிப்பகம்,2018

4.தமிழ் லெக்சிகன், சென்னைப் பல்கலைக்கழகம்,1982

5.செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதி, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், 2005.

6.க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, க்ரியா வெளியீடு, 2020

7.பாரதி பக்தவத்சல சி., பண்பாட்டு மானுடவியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை,1980.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

த.செல்வராஜ்,

முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்),

தமிழ் உயராய்வுத்துறை,

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),

கோவை – 641 018.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here