Monday, October 19, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் An Unpublished Tirukkollikkadu Sthalapuranam: A Study Based on the Perur Adheenam Palm-Leaf...

An Unpublished Tirukkollikkadu Sthalapuranam: A Study Based on the Perur Adheenam Palm-Leaf Manuscripts|Dr. S. Vignesh

Tamil Temple Heritage and Manuscripts_iniyavaikatral
Volume : 06 Issue:03| E-ISSN : 3048 – 5495 | ABCD Index Journal| Peer Reviewed Journal | DoI No :
Abstract
    This article aims to examine and present the physical structure, literary framework, poetic nuances, and unique features of the unpublished, incomplete palm-leaf manuscript of the Thirukollikkadu Thala Puranam, preserved at the Kovai Perur Adheenam College Library. Based on the script style of the damaged palm leaves, the manuscript can be dated prior to the 18th century CE. Details regarding the author and the period of composition remain unknown. The manuscript contains only 338 complete verses, encompassing the prefatory section (Paayiram) and 7 chapters (Sarukkam), with the Agasthya Chapter (Agasthiya Sarukkam) abruptly concluding at 18 verses. Thirukollikkadu (known today as Kallikkadu/ Keeralathur/ Seeralathur), a sacred Vaipputhalam in the Chola region, is referred to in the Puranas as Erivanam, Analvanam, and Akkinivanam.  A distinctive feature of this Thala Puranam is the author’s innovative use of Tamil grammatical concepts—including prosody (Yaappu), phonology (Ezhuthu), lexicology (Sol), and rhetoric (Ani)—as allegorical similes to explain divine grace and the nature of God. Identifying, editing, and publishing such rare, endangered manuscripts for the Tamil literary community remains an essential task.
Key words : Sthalapuranam, Palm-leaf manuscripts, Unpublished, Perur Adheenam, Tirukkollikkadu. 

“அச்சேறாத திருக்கொள்ளிக்காட்டுத் தலபுராணம் – ஓர் ஆய்வு : பேரூராதீனச் சுவடிகளை முன்வைத்து”

ஆய்வுச் சுருக்கம்
        கோவை பேரூராதீனக் கல்லூரி நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அச்சேறாத, முழுமையடையாத ‘திருக்கொள்ளிக்காட்டுத் தலபுராண’ ஓலைச்சுவடியின் புறவமைதி, நூலமைப்பு, இலக்கிய நயங்கள் மற்றும் அதன் சிறப்புகளைக் கண்டறிந்து புலப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். சிதிலமடைந்த நிலையில் உள்ள திருக்கொள்ளிக்காட்டுத் தலபுராண வ்ஓலைச்சுவடியின் எழுத்து அமைப்பைக்கொண்டு கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கருத முடிகிறது. நூலாசிரியர் மற்றும் நூலின் காலம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. பாயிரம் மற்றும் 7 சருக்கங்கள் உட்பட 338 பாடல்கள் மட்டுமே முழுமையாகக் கிடைக்கின்றன. அகத்தியச் சருக்கம் 18 பாடல்களுடன் முடிகிறது. சோழ நாட்டு வைப்புத்தலமான திருக்கொள்ளிக்காடு (இன்றைய கள்ளிக்காடு/கீரலத்தூர்/சீரளத்தூர்), புராணங்களில் எரிவனம், அனல்வனம், அக்கினிவனம் என அழைக்கப்படுகிறது. ஆசிரியர் இறைவனின் திருவருளையும் தன்மையையும் விளக்குவதற்குத் தமிழ் மொழியின் யாப்பு, எழுத்து, சொல், அணி ஆகிய இலக்கண விதிகளை உவமைகளாகக் கையாண்டுள்ளமை இத்தலபுராணத்தின் தனிச்சிறப்பாகும். அழிவின் நிலையிலுள்ள இத்தகைய அரிய சுவடிகளைக் கண்டறிந்து பதிப்பித்துத் தமிழுலகிற்கு அளிப்பது இன்றியமையாத தேவையாகும்.
திறவுச் சொற்கள் : தலபுராணம், ஓலைச்சுவடிகள், அச்சாகாதவை, பேரூர் ஆதீனம், திருக்கொள்ளிக்காடு.
முன்னுரை
          கி.பி. பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலகட்டத்தைத் தலபுராண இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். தமிழிலக்கியப் பரப்பில் காப்பிய மரபையொட்டித் தோன்றிய புராணங்கள் இறைவன் ஊரூர்தோறும் எழுந்தருளியுள்ள சிறப்பைப் போற்றுவனவாகித் தலபுராணங்களாக வகைமைபெற்றன. இத்தலபுராணங்கள் வடமொழிப் புராணங்கள் சிலவற்றை மூல நூலாகக் கொண்டவை எனினும், தமிழகக் கோவில்களின் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகைச் சிறப்பினைப் பேசுமிடங்களில் தமிழ்க் காப்பியங்களின் நடையைப் பின்பற்றுகின்றன. தலபுராணப் பொருண்மைகளுள் தலம்(ஊர்), தீர்த்தம்(நீர்நிலை) என்பன அந்தந்த ஊர்களைச் சார்ந்த புவியியல், சூழலியல் மரபுகளோடு தொடர்புடையனவாகின்றன.  தலபுராணங்கள், தேவாரப் பாடல்பெற்ற தலங்கள், வைப்புத்தலங்கள், புலவர்தம் வாழ்வில் அற்புதங்களைச் செய்த திருத்தலங்கள், விருப்பமான தெய்வக் கோவில்கள் எனப் பலவாறாக இயற்றப்பட்டன. இங்ஙனம் தோன்றிய தலபுராணங்கள் தமிழறிஞர்கள் பலரால் அச்சேற்றப்பட்டன. அச்சேறியவை மறுபதிப்பு ஆகாமலும், சில தலபுராணங்கள் அச்சேறாமலும் இன்றளவும் இருந்துவருகின்றன. இந்நிலையிலிருக்கும் நூல்களுள் திருக்கொள்ளிக்காட்டுத் தலபுராணமும் ஒன்று. 
        கொள்ளிக்காட்டுத் தலபுராணத்தின் முழுமையடையாத சுவடி ஒன்று கோவை, பேரூராதீனக் கல்லூரி நூலகத்துள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அச்சுவடியின் தன்மை, சுவடியில் எழுதப்பட்டுள்ள நூலின் அமைப்பு, நுவல்பொருள், நயங்கள் முதலியவற்றைக் கண்டுரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
பேரூராதீனச் சுவடிகள்
        பேரூராதீனத் தவத்திரு சிதம்பர அடிகளார் நூலகத்துள், கொங்குநாட்டு உ.வே.சா. எனப் போற்றப்படும் வே.இரா.தெய்வசிகாமணிக் கவுண்டரவர்கள் தொகுத்தளித்த 376 சுவடிகள் உட்பட 512 சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள சுவடிகள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் நிறுவனம் ஆகிய பல நிறுவனங்களில் ஆய்வுக்கும் பதிப்புக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை, இலக்கணம், இலக்கியம், மருத்துவம், சோதிடம், இசை ஆகிய பகுப்புகளில் அடங்குவன. இச்சுவடிகள் 150 ஆண்டுகள் முதல் 400 ஆண்டுகள் வரையிலும் பழமையானவை. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற அரிய இசை நூலான “பஞ்சமரபின்” சுவடிப்பிரதியும், தக்கை எனும் இசைக்கருவியுடன் இராமாயணக் கதையைப் பாடும் வகையில் படைக்கப்பட்ட தக்கை இராமாயணச் சுவடியும் இத்தொகுப்பிலுள்ள அரிய சுவடிகளாகும். தமிழ்மொழியின் இலக்கணமான தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணையியல், புறத்திணையியல், தமிழ்ச் செவ்விலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, புறத்திரட்டுப் பாடல்கள், நாலடியார், ஆசாரக்கோவை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, சிலப்பதிகாரம் – புகார்க்காண்டம் ஆகிய சுவடிகளும் இங்குள்ளன. இச்சுவடிகளிலிருந்து கவுண்டரவர்களால் பஞ்சமரபு, தக்கை இராமாயணம், கருணாம்பிகை அந்தாதி, புறத்திரட்டு, சிவன்மலைக் குறவஞ்சி, பட்டீசுவரக் கோவை, திருமுருகாற்றுப்படை உரை, கொங்குமண்டல சதகங்கள் ஆகிய பழந்தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தெய்வசிகாமணிக் கவுண்டரவர்கள் தொகுத்தவற்றுள் திட்டமலைக்கும்மி, கொன்றை வேந்தன் வெண்பாமாலை, சுந்தர பாண்டியம், சூரிய மாலை, குவலயானந்தம் உரை, வெள்ளோடை நல்லண்ணன் காதல், ஆகியன அச்சேற்றப்படாத சுவடிகள் ஆகும்.
திருக்கொள்ளிக்காடு
        சோழநாட்டுத் தென்கரைத் தலங்களுள் ஒன்றாகத் திருக்கொள்ளிக்காடு  விளங்குகிறது. எரிவனம், அனல்வனம், அக்கினிவனம், வன்னி வனம் எனப் புராணத்தில் சுட்டப்படும் இத்தலம், கள்ளிக்காடு என இன்று வழங்கப்பெறுகிறது. இக்கோயில் அமைந்துள்ள ஊர் கீரலத்தூர் (ஜயசெந்தில்நாதன். பு.மா.,1995:620) என்றும், சீரளத்தூர் (ரவிராஜ். VR.K.,2010:201) என்றும் சுட்டப்படுகிறது. திருநெல்லிக்கா, திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு ஆகிய மூன்று தலங்களூம் அருகருகில் உள்ள தேவாரத் திருத்தலங்களாகும். இத்தலங்களினைத் தொடர்புபடுத்தி, ‘கொள்ளி கொளுத்த – கொள்ளிக்கா, வெள்ளி முளைக்க – தெங்கூர், நெல்லி காய்க்க – நெல்லிக்கா’ (பாலசாரநாதன்.சு(பதிப்.),1990:107) என்ற வழக்குத் தோன்றியுள்ளமையும் சுட்டத்தக்கது. வசிட்ட முனிவரின் அறிவுரையால் சனிக்கடவுள் கொள்ளிக்காட்டுப் பகுதியில் தவமியற்ற, இறைவன் நெருப்பு வடிவில் தோன்றி அருள்செய்ததாகக் கூறப்படுகிறது(ரவிராஜ்.VR.K.,2010:201). இத்தலம் பொங்குசனித் திருத்தலமாகச் சுட்டப்படுகிறது(மேலவர்:மேலது). சோழ மன்னன் ஒருவனுக்குச் சனிதோசம் போக்கிய தலம். திருஞானசம்பந்தர் இத்தல தேவாரத்தில் இறைவன் யானையை உரித்த செயல் குறிக்கப்படுவதால், மக்கள் ஒரு காலத்தில் இக்கோயிலைக் கரியுரித்தநாதர் கோயில் என அழைத்து வந்ததாகத் தெரிகிறது (ஜயசெந்தில் நாதன்.பு.மா.,1995:620). தலபுராணங்களை ஆராய்ந்த வே.இரா மாதவன், கொள்ளிக்காட்டுத் தலபுராணம் அச்சாகாததைக் குறிப்பிட்டுள்ளார்(1995:126). இக்கோயிலுக்கு எதிரில் மயானம் இருப்பதாலும்(பாலசாரநாதன்.சு (பதிப்.),1990:107) இத்தலம் கொள்ளிக்காடு எனப் பெயர்பெற்றிருக்கலாம். நாவுக்கரசப் பெருமானால், ‘சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக்காடு’ (6:71:6) எனவரும் பொதுத் திருப்பதிகத்தில் வைப்புத் தலமாகப் போற்றப்பட்டுள்ளது. 
சுவடியின் புறவமைதி
          TSA-CAL-0290 என்ற எண்ணிடப்பட்ட சுவடி. கரும்பழுப்பு நிற ஓலைகள். கட்டையுடன் கூடிய சுவடி. 38.5 செ.மீ நீளமும் 3 செ.மீ அகலமும் கொண்ட 43 ஏடுகள் உள்ளன. இவ்வேடுகளின் நடுவில் 16 செ.மீ இடைவெளியில் இரண்டு துளைகள் இடப்பட்டுள்ளன. பத்தாவது ஏடு பாதி உடைந்து விடுபட்டுள்ளது. 41-ஆம் ஏடு முதல் மிகவும் சிதிலம். எல்லா ஏடுகளிலும் பூச்சி அரித்த துளைகள் காணப்படுகின்றன. ஒரு பக்கத்திற்கு 5 முதல் 8 வரிகள் வரை எழுதப்பட்டுள்ளன. இதையடுத்துள்ள ஆறு ஏடுகளில் திரிகடுகத்தின் மூலபாடம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. சுவடி எழுதியவர் பற்றிய குறிப்புகள் இல்லை.  முதல் ஏட்டின் தலைப்புப் பகுதியில் “ஹரிஓம் – நன்றாக – குருவாழ்க” எனவும் திருக்கொள்ளிக்காட்டுத் தலபுராணம் எனவும் குறிப்புகள் உள்ளன. 
வள்ளிக் காகு  மணாளற்கு முன்னுமா
யுள்ளு வார்க்குப்……..
கொள்ளிக் காட்டுறை குஞ்சரம் போற்றுவாம்.  (பா.எ.-1)
          என்ற பாடலுடன் சுவடி தொடங்கப்பட்டுள்ளது. இச்சுவடி எழுதியவர் அகர, ஆகார, உகர, எகர எழுத்துகளை மொழிமுதலில் வருமிடங்களிலும் முறையே, ‘ய, யா, யு, யெ’ என்று எழுதியுள்ளார். நெடில் ஏகார, ஓகார எழுத்துக்களில் இரட்டைக்கொம்புக் குறியீடுகள் இல்லாமையையும், லை, ளை, னை, ணை ஆகிய எழுத்துக்களில் முன்னிருக்கும் குறியமைப்பையும் நோக்கும்போது இவ்வெழுத்துபிரதி பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனக் கருதலாம். ஆனால் நூலின் காலம் குறித்தும் நூலாசிரியர் குறித்தும் அறிவதற்குண்டான தரவுகள் இச்சுவடியில் இல்லை. நூலும் முழுமைபெறாமலுள்ளது. 
நூலமைப்பு
   தலபுராணங்கள் பெரும்பான்மையும் பாவினங்களால் ஆக்கப்பெற்றவை. கொள்ளிக்காட்டுத் தலபுராணமும் விருத்தம், துறை முதலிய பாவினங்களாலும், உட்பிரிவுகள் சருக்கங்களாகவும் இயற்றப்பட்டுள்ளது. தலபுராணத்தின் பொது அமைப்பாக, நைமிசாரணியச் சருக்கம், புராண வரலாறு, நாட்டுப்படலம் முதலிய செய்திகள் தனித்தனி உட்பிரிவுகளாகப் படைத்துச் சொல்லப்பெறும். பேரூராதினத்தில் உள்ள கொள்ளிக்காட்டுத் தலபுராணச் சுவடிப்பிரதியில் பாயிரம், நாட்டுச்சருக்கம் முதலியவை தனித்துச் சுட்டப்படவில்லை. கடவுள் வாழ்த்துத் தொடங்கி 44 பாடல்களில், இறைவணக்கம், அவையடக்கம், நாட்டுச்சிறப்பு, புராண வரலாறு, நூலமைப்பு முதலிய அனைத்தும் பாடப்பட்டுள்ளன. இத்துடன் ஏழு சருக்கங்களாகப் புராணம் படைக்கப்பெற்றுள்ளது. சுவடி முழுமைபெறாததால் இந்நூலின் மொத்தப் பாடல் எண்ணிக்கையை அறிதற்கில்லை.  
அக்கினீசுவரச் சருக்கம்             – 48 பாடல்கள்
பிரமபுரச்சருக்கம்                       – 80 பாடல்கள்
காட்டானைச்சருக்கம்                – 34 பாடல்கள்
காருண்ய தீர்த்தச் சருக்கம்         – 21 பாடல்கள்
கந்திருவமாது கண்பெற்ற சருக்கம்– 50 பாடல்கள்
பிரகற்சனச் சருக்கம்                  – 43 பாடல்கள்
அகத்தியச் சருக்கம்                   – 18 பாடல்கள்
19ஆம் பாடல் தொடங்கி விடுபட்டுள்ளது.     
வேதத்தின் நிலையறியாக் காரமணர் விடுகற்றூண் மிதவைக் கேற்றி
யோதத்தண் கடல்விடுப்ப மற்றவனு முயிர்க்குயிரா மொருவன் றன்னை
நாதப்பண் ணிசையெடுத்து நமச்சிவா யப்பதிகம் நவின்று பாடி
ஆதித்த னுவரியெழுந் தெனவுதித்த நாவரையற் கன்பு செய்வாம்.
                                                                                                                    (பா.எ.-7)
          என நாவுக்கரசரைப் போற்றுவதாக அமைந்த பாடல் இச்சுவடியிலிருந்து முழுமையாகக் கிடைக்கும் முதற்பாடல் ஆகும். இதையடுத்த பாடல், 
யெட்டுருவு மொன்றான விறையருமை யெண்ணாமல்
நட்டமிடும் பாதமலர் நறவூற்றும் பூழிபட
மட்டுமலி கருங்குழலாள் பாவைகொடு வாவென்று
கட்டுரைமுப் பத்தேழா யிரம்பாடும் கணம்போற்றி (பா.எ.-8)
          எனச் சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்குகிறது. இப்பாடல் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் 37000 எனச்சுட்டுகிறது.
இலக்கிய நயங்கள்
        இறைவனது திருவருட் சிறப்பை விளக்கப்புகுந்த ஆசிரியர், இலக்கணச் செய்திகளை உவமைகளாகக் காட்டுவதை,
யா(ஆ)ழ்கடற் புவியில் வெள்ளை யகவலுங் கலியும் வஞ்சித்
தாழிசை துறைவி ருத்தம் மற்றதன் சாதி போல …………
வாழ்வுற முத்தி நல்கு மெரிவனம் வந்தோர்க் கெல்லாம் 
                                                                                   (பா.எ.-26, 4ஆம் ஏடு)
ய(அ)கரவீ றுயிர தாதி யக்கரந் தனைந டாத்தும்
பகரும்மற் றுயிர்தி ரிந்து பரித்தமெய் திரிந்து நிற்கும்…
                                                                                (பா.எ.-28, 4ஆம் ஏடு)
வேற்றுமை யிரண்டாஞ் சாதி விரிவுடன் தொக்கு மாபோல்
தோற்றிய முத்தர் பெத்தர் விரிவுடன் சுருங்க லாதி …
                                                                              (பா.எ.-29, 4ஆம் ஏடு)
செறிவுட னீரைந் தென்னுஞ் சிறந்தவை தற்பம் பாவில்
பிறிவுடன் பட்டுப் பேதம் பிறந்ததே கெவுட மாகு(ம்)
அறிவினுக் கறிவா யெங்கு மக்கினி வனத்தி லீசன்
மறுவரத் திசைகள் பத்தும் மாறியே மல்கி நிற்பன் 
                                                                             (பா.எ.-30, 4ஆம் ஏடு, பின்பக்கம்)
          எனவரும் பாடல்களில் காணமுடிகிறது. ஆசிரியர் இறைவனது இலக்கணங்களுக்குத் தமிழ்மொழியின் இலக்கண நெறிகளை ஒப்பிட்டுக் காட்டுவது அவர்தம் புலமைத் திறத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இப்பாடல்களில் முறையே, யாப்பிலக்கணம், எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், அணியிலக்கணம் குறித்த செய்திகள் உவமையாகக் கையாளப்பட்டுள்ளது. சோழ நாட்டின் வளத்தை,
ஆழியான் கைச்சங் கென்ன வணிமணி மிடற்றி நல்லார்
வீழிவாய் மயலிற் றோன்றும் வேலவ னயிலே யென்ன
மாழையொண் கண்ணி மாதர்  மாளிகை  பாட லாடல்
சோழர்கா வேரி நாட்டிற் சுசிவனந் துலங்கு மாதோ 
                                                          (பா.எ.-28, அக்கினீசுவரச் சருக்கம்,)
          எனவரும் பாடலில் புலவர் பாடுகிறார். இரண்டாவது சருக்கமாகிய பிரமபுரச்சருக்கத்தில்  நான்முகன் வழிபட்ட முறைகளும், இறைவனுக்குச் சூட்டும் மலர்களும் கூறப்பட்டுள்ளன. அடியவர்களது தவ ஆற்றலைக் கூறுமிடத்து, 
நந்தியு மிலங்கை வேந்தை நவையுறக் கெடுதி யென்றே
மந்திதன் குழுவி னாலே வளநக ரழிந்த துண்டே
சந்திரன் களங்கம் நந்தந் தையலின் சாப மன்றே
சுந்தரத் தவத்தோர் மேன்மை யாமலாற் சொல்லற் பாற்றோ!
ஆக்கமும் வறுமை செய்வ ராவது மழிவுஞ் செய்வர் 
போக்குடன் வரவு செய்வர் புணர்வுடன் பிரிவுஞ் செய்வர்
காக்கவும் விடவுஞ் செய்வர் கருமமும் ஞானஞ் செய்வர்
நீக்கமில் சிவத்திற் கூடும் நிறைதவத் தன்பர் தாமே 
(பா.எ.-44,45, பிரமபுரச் சருக்கம்,)
எனவரும் பாடல்கள் சுவைபயப்பதாய் அமைந்துள்ளன.
முடிவுரை
        தமிழ்மொழி இலக்கியப் பாதை நெடுந்தொலைவுடையது. இப்பரப்பில்  தோன்றிய இலக்கணங்கள், இலக்கியங்கள், உரைகள் பல. காலப்பழைமை வாய்ந்த சங்க இலக்கியத்திலும் கிடைக்காமல் விடுபட்ட பகுதிகள் உண்டு. காப்பியங்களிலும் முழுமைபெறாமல் உள்ளவற்றைக் காணமுடிகிறது. இவற்றைக் கண்டறிந்து பதிப்பித்தல் முதன்மையானது. அதுபோலவே, இன்று நம் கைகளில் கிடைக்கும் அச்சேறாத இலக்கியங்களைப் பதிப்புலகில் பதிவுசெய்வதும் தேவையானதாகும். ஆசிரியர் பெயர் அறிய இயலாத திருக்கொள்ளிக்காட்டுத் தலபுராணம், ஏழு சருக்கங்களோடும் 338 பாடல்களோடும் நமக்குக் கிடைத்துள்ளது. இந்நூலின் முழு அமைப்பையும் அறியத்தகுந்த சுவடிகள் இல்லை. இறைவனைப் புகழும் இடங்களில் தமிழ் இலக்கணங்களை உவமைப்படுத்துவது புலவரின் படைப்புத்திறனைக் காட்டுகிறது. அக்னி வனம், எரி வனம் எனும் பெயர்களால் கொள்ளிக்காட்டுத் தலத்தை புராணம் குறிப்பிடுகிறது. 
        இறைசெய்திகளை மட்டுமே பாடும் இலக்கியங்கள் எனப் புராணங்களை எண்ணிவிட முடியாது. தமிழில் குறிப்பிட்ட கால சொல்வழக்குகள், இலக்கியங்களுள் அமையும் தொடரமைப்புகள், யாப்பிலக்கணக் கொள்கைகள் ஆகியவற்றையும் ஆராய்வதற்கான பெருங்களஞ்சியமாகத் திகழ்வன தலபுராணங்கள்.  அவற்றைப் பயில்நிலைக்குக் கொணர்தல் தமிழுலகிற்கு ஆற்றும் பணிகளுள் தலையாய ஒன்றாகும்.
முதன்மைச்சான்றாதாரம் 
1.TSA-CAL-0290 – திருக்கொள்ளிக்காட்டுத் தலபுராணம், வே.இரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் சுவடித் தொகுப்பு, தவத்திரு சிதம்பர அடிகளார் நூலகம், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர்– 10.
மேற்கோள் நூல்கள்
1.ரவிராஜ்.VR.K., – பரிகாரத் திருத்தலங்கள், ஆனந்த நிலையம், சென்னை – 17, முதற்பதிப்பு –  2010.
2.ஜயசெந்தில் நாதன்.பு.மா., – திருமுறைத் திருத்தலங்கள், தமிழ் நிலையம், சென்னை – 17, இரண்டாம் பதிப்பு – 1995.
3.பாலசாரநாதன்.சு(பதிப்.), – திருத்தலங்கள் வரலாறு, டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை – 90, முதற்பதிப்பு -1990.
4.மாதவன். வே.இரா., – தமிழில் தலபுராணங்கள் (முதற்பகுதி), பாவை வெளியீட்டகம், தஞ்சாவூர், 1995.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு.விக்னேஷ்
உதவிப்பேராசிரியர்,
தமிழ் உயராய்வுத்துறை,
வி இ டி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி,
திண்டல், ஈரோடு – 12.

 

அச்சேறாத திருக்கொள்ளிக்காட்டுத் தலபுராணம் – ஓர் ஆய்வு : பேரூராதீனச் சுவடிகளை முன்வைத்து PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »