Volume : 06 Issue :03 Dr.R.Suresh
E-ISSN : 3048 – 5495 Assistant Professor
DoI No :
ABCD Index Journal
Peer Reviewed Journal
Abstract
This research article examines the poverty of the Panar community and the charitable excellence of Nalliyakkodan as portrayed in Sirupanatrupadai, one of the important works of the Sangam literary corpus. The Panars were traditional bards and musicians who depended largely on their artistic talents and the patronage of kings and chieftains for their livelihood. Sirupanatrupadai, composed by Nallur Nathathanar, presents the difficult socio-economic condition of a Panar and directs him towards Nalliyakkodan, a renowned patron celebrated for his generosity. The poem vividly portrays the hardships experienced by the Panar and contrasts them with the wealth, hospitality and munificence of Nalliyakkodan. His generosity is not merely an act of giving material wealth but also reflects compassion, social responsibility and respect for artists. The relationship between the Panar and the patron reveals the significant role played by patronage in sustaining artistic communities during the Sangam period. This study attempts to analyse the representation of poverty, artistic life, patronage, charity and social values in Sirupanatrupadai. It also highlights how Nalliyakkodan’s generosity transforms the condition of the needy Panar and establishes the cultural significance of the patron–artist relationship in Sangam society. Thus, Sirupanatrupadai serves as an important literary source for understanding the socio-economic life of Panars and the ethical ideals of generosity and hospitality in ancient Tamil society.
Keywords: Sirupanatrupadai, Panar, Poverty, Nalliyakkodan, Charity, Patronage, Sangam Literature, Tamil Society.
“சிறுபாணாற்றுப்படையில் பாணரின் வறுமையும் நல்லியக்கோடனின் கொடைச் சிறப்பும்”
ஆய்வுச் சுருக்கம்
சங்க இலக்கியங்களில் பாணர்களின் வாழ்க்கை நிலை, அவர்களின் கலைத்திறன், வறுமை, புரவலர்களை நாடிச் செல்லுதல் போன்ற செய்திகள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சிறுபாணாற்றுப்படை தனித்துவமான இடத்தைப் பெறுகிறது. இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இயற்றியது. சிறுபாணன் ஒருவன் தன் வறுமை நீங்கி வளம்பெற நல்லியக்கோடன் என்னும் வள்ளலை நாடிச் செல்லுமாறு மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துவதை மையமாகக் கொண்டுள்ளது இவ்வாய்வு பாணரின் வறுமை ஒருபுறமும், அதனைப் போக்கும் நல்லியக்கோடனின் அளவற்ற கொடை மறுபுறமும் இந்நூலில் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன. இவ்வாய்வு, பாணரின் சமூக–பொருளாதார நிலையும் நல்லியக்கோடனின் வள்ளன்மையும் எவ்வாறு எதிர்நிலைகளாகச் சித்திரிக்கப்படுகின்றன என்பதை ஆராய்கிறது.
திறவுச்சொற்கள்: சிறுபாணாற்றுப்படை, பாணர், வறுமை, நல்லியக்கோடன், கொடை, வள்ளல், சங்க இலக்கியம்.
முன்னுரை
சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் பாணர்கள் இசையையும் பாடலையும் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். மன்னர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள் ஆகியோரின் அரண்மனைகளையும் இல்லங்களையும் நாடிச் சென்று தமது கலைத்திறனை வெளிப்படுத்தி, அதற்குப் பரிசிலாகப் பொருளைப் பெற்றனர். பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை, பாணர்களின் வாழ்வியல் நிலையை அறிந்துகொள்ள முக்கியமான இலக்கியச் சான்றாக விளங்குகிறது. வறுமையில் வாடும் பாணன் ஒருவனை நல்லியக்கோடன் என்னும் வள்ளலிடம் செல்லுமாறு வழிகாட்டும் அமைப்பில் இந்நூல் அமைந்துள்ளது.
பாணரின் வறுமை
பாணரின் வறுமை வெறும் பொருளாதாரக் குறைபாடாக மட்டும் காட்டப்படவில்லை. அவர்களின் உடை, உணவு, வாழ்விடம், பயணம் ஆகிய பல்வேறு வாழ்க்கைக் கூறுகளின் வழியாக வறுமை வெளிப்படுத்தப்படுகிறது. நல்லியக்கோடனின் வீரம், செல்வம், பெருமை முதலானவற்றைப் பாடிப் பரிசில் பெற்ற பாணன் தனது முந்தைய வறுமை நிலையைப் பரிசு பெறச் செல்லும் பாணனிடம் எடுத்துக் கூறுகிறான். மேலும் பரிசு பெற்ற பிறகு தான் அடைந்த செல்வ நிலையையும் அவனிடம் விளக்கிக் கூறுகிறான். மேலும் சிறுபாணன் நடந்து செல்லும் பாதை கொடியது. தன் பசியைப் போக்கிக்கொள்ள பரிசில் தருவோரை நோக்கி செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறான். இத்தகைய பாணனின் வறுமையை,
“திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
அழி பசி வருத்தம்” (அடிகள் 129-140)
என்ற பாடல் வரிகள்; நாய்கள் பொதுவாக குட்டிகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் ஈனும், ஆனால் இங்கோ அடுப்பங்கரையில் குட்டிகளை ஈன்று இருக்கிறதென்றால் பாணன் வீட்டில் சமைக்க அடுப்பங்கரைக்கு சென்று எவ்வளவு நாள் ஆகியிருக்கும் என்ற வறுமை நிலையை இதன் மூலம் அறியலாம். அந்த நாய் தன் குட்டிகள் மீது மிகுந்த அன்பும், பாசமும், பற்றும் வைத்திருந்தது. ஆனாலும் பிறந்து சில பொழுதே ஆன – கண்களைத் திறந்து பார்க்காத தன் இளம் குட்டிகளுக்குத் தேவையான பால் அந்நாயிடத்தில் இல்லை. அதனால் பால் குடிக்க வந்த தன் இளம் குட்டிகளைப் பால் கொடுக்காது துரத்தியது. அதனையும் மீறி நாய்க்குட்டிகள் தாயின் பால் மடியைப் பற்றி இழுத்தன. வலி தாங்காது நாய் அலறித் துடித்தது. இத்தகைய வீட்டில் கொடிய வறுமையில் நான் வாடினேன் என்று பரிசில் பெற்ற பாணன் வறுமையில் வாடும் பாணனிடம் கூறினான். மேலும்ஆம்பி என்றால் காளான் என்று பொருள். பாணன் வீட்டில் அடுப்புப் பற்ற வைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. இதனால் அடுக்களையில் (அடுப்பில்) காளான் முளைத்திருந்தது. இதனை அடுக்களை ஆம்பி பூத்தது என்ற அடி சுட்டுகிறதுஎன்று வறுமையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். வீட்டின் அமைப்பை சொல்லும்போது, மேல்கூரை இடிந்து விழுவது போல் உள்ளது, கரையான் பிடித்த சுவர், வீடெல்லாம் புழுதி, புழுதியிலே பூத்த காளான். இப்படிப்பட்ட வீட்டில் பசியில் வருந்தி ஒடுங்கிய வயிறும், வளையல் அணிந்த கையும் உடைய பாணனின் மனைவி. தன் கைவிரல் நகத்தால் குப்பையிலே முளைத்திருக்கிற கீரையை எடுத்து உப்பு கூட போட வழியில்லாமல் உணவு சமைக்கிறாள். இப்படிப்பட்ட உணவை உண்பதை மற்ற பெண்கள் பார்த்தால் நகைப்பு ஆகிவிடும் என்று கருதி வீதிக்கதவை அடைத்து வைத்துவிட்டு உப்பில்லாத குப்பைக் கீரையை சமைத்து சாப்பிட்டனர். இப்படிப்பட்ட வறுமை பாணர் சமூகத்தில் பரவலாக இருந்திருக்கிறது. அதைப் போக்குவதற்கு நல்லியக்கோடன் போன்ற வள்ளல்களும் இருந்துள்ளனர் என்று சிறுபாணாற்றுப்படை காட்டுகிறது
வறுமையும் கலைத்தொழிலும்
பாணரின் முக்கியமான வாழ்வாதாரம் இசையும் பாடலும் ஆகும். யாழை இசைத்து பாடும் பாணர்கள் தமது கலைத்திறனுக்கேற்ப அரசர்களிடமும் வள்ளல்களிடமும் பரிசில் பெற்றனர். மேலும் பழந்தமிழர் திணைவாழ்விற்கு ஏற்றவாறு குறிஞ்சிப்பண் பாலைப்பண் மருதப்பண் நெய்தல் பண் என வகுத்து பயன்படுத்தி வந்ததை உணரமுடிகிறது. இதனை
“வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்க” புறம்- 281
என்ற பாடலில் மகளிர் போரில் தம் கணவன் மார்களுக்கு ஏற்பட்டுள்ள புண்களை ஆற்றுவதற்கு யாழ் பல்லியம் போன்ற கருவிகளை இசைத்ததை காணமுடிகிறது. இந்நிலையில்தான் எங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு நல்லியக்கோடனிடம் சென்றோம். அவன் எங்களுக்குச் சுவையான உணவு படைத்து எங்கள் கடும்பசியைப் போக்கினான். இக்கொடிய பசி மீண்டும் வந்து எங்களுக்குத் துன்பம் தராத வகையில் மிகுந்த செல்வத்தையும், யானைகளையும், தேர்களையும் பரிசாக அள்ளி வழங்கினான். இத்தகைய வள்ளலின் அரண்மனையில் இருந்து இப்பொழுது நாங்கள் வந்து கொண்டு இருக்கிறோம்.
சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
யாம்அவண் நின்றும் வருதும்….(அடிகள் 142-143)
வறுமையில் வாடும் பாணனே! கொடிய வறுமையைப் போக்கும் நல்லியக்கோடனிடம் நீயும் செல்க. நீயும் உனது சுற்றமும் தயங்காமல் அம்மன்னனிடம் செல்லுங்கள். அங்ஙனம் சென்றால், “அவன் உங்களை அன்போடு வரவேற்பான். பரிசுப் பொருள்கள் பலவற்றை வழங்கி உங்கள் துன்பத்தைப் போக்குவான். எனவே தயங்காமல் செல்லுங்கள்” என்று பரிசு பெற்ற பாணன் வறிய பாணனை வழிப்படுத்தினான். பாணரின் வறுமை இருந்தபோதிலும் கலைத்திறனை அவர்கள் கைவிடவில்லை. கலை அவர்களுடைய அடையாளமாகவும் வாழ்வாதாரமாகவும் அமைந்திருந்தது. எனவே சிறுபாணாற்றுப்படை, “வறுமையிலும் கலைக்கான பற்றுறுதி” என்ற பண்பாட்டுச் செய்தியையும் எடுத்துரைக்கிறது.
நல்லியக்கோடன் – சிறந்த வள்ளல்
பாணரின் வறுமைக்கு எதிர்நிலையாக நல்லியக்கோடனின் கொடைச் சிறப்பு படைக்கப்படுகிறது. அவனிடம் செல்லும் பாணன் வெறுமையாகத் திரும்ப வேண்டியதில்லை என்ற நம்பிக்கையை ஆற்றுப்படுத்தப்படும் பாணனுக்கு ஆசிரியர் ஏற்படுத்துகிறார்.
“வருவிருந்து வைகளும் ஓம்புவான் வாழ்க்கை
பருவத்து பாழ்படுதல் இன்று” (குறள் -83)
நாள் தோறும் வரும் விருந்தினர்களைப் போற்றிப் பேணி வருபவரின் வாழ்க்கை எக்காலத்திலும் வறுமையால் பாதிக்கப்பட்டு கெட்டுப்போகாது என்ற உண்மை நிலையை திருக்குறளில் விருந்தோம்பல்லிருந்து அறியமுகிறது. நல்லியக்கோடன், இரவலர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வேண்டிய பொருள்களை வழங்கும் வள்ளலாகச் சித்திரிக்கப்படுகிறார். அவனுடைய கொடை என்பது பொருள் வழங்குதல் மட்டுமல்ல| இரவலரின் துயரைப் போக்கி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்கும் மனிதநேயச் செயலாகவும் விளங்குகிறது.
கொடைச் சிறப்பும் வள்ளல் மரபும்
சங்க இலக்கியத்தில் வள்ளன்மை அரசனின் முக்கியமான பண்பாகக் கருதப்பட்டது. புகழ், வீரத்துடன் இணைந்து கொடையும் மன்னனின் சிறப்பைக் காட்டியது. நல்லியக்கோடனின் கொடைச் சிறப்பு பாணர்களுக்கு மட்டும் உரியதாக இல்லாமல், தன்னை நாடி வரும் இரவலர்களின் தேவையை அறிந்து வழங்கும் பரந்த மனப்பான்மையாகக் காட்டப்படுகிறது. இத்தகைய சிறப்புகளையுடைய நல்லியக்கோடன் நல்ல பல பண்புகளைப் பெற்றிருந்தான். செய்ந்நன்றி உள்ளவர்களாகவும், சிற்றினம் சேராதவனாகவும், இன்முகம் உடையவனாகவும், அகமும், புறமும் இனியவனாகவும், எவருடனும் இனியவனாகவும், எவருடனும் நெருங்கிப் பழகுபவனாகவும் இருந்தான் என்று அறிஞர்களும் பாராட்டும் வண்ணமாகத் திகழ்ந்தான்.
”செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,
இன் முகம் உடைமையும், இனியன் ஆதலும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த|
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ் சினம் இன்மையும்,
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக் கூற்றத்து வயவர் ஏத்த” சிறுபாண். பாடல் (207 -212)
படை வீரர்கள் பாராட்டும் போது, இம்மன்னனிடம் பணிந்து போகிறவர்களுக்கு அருள்புரியும் படியாகவும், படைக்குள் புகுந்து பகை வீரர்களைப் நிலை குலையச் செய்தலும், தோற்கும் நிலையில் உள்ள படையை வெற்றி பெறச் செய்தலும் சிறந்த வலிமையும் உடையவனாக விளங்கினான். மகளிர் பாராட்டும் போது எந்த மகளிரும் விரும்பும் படியான தோற்றமும், எளிதில் எந்த மகளிருடனும் வயப்படாமல் இருத்தலும், மகளிரின் மனம் நினைத்ததை அப்படியே செய்வனவாகவும், விளங்கியதாக மகளிர் குறிப்பிடுகின்றனர்,
“கருதியது முடித்தலும் காமுறப்படுதலும்
ஒருவழிப்படாமையும்” சிறுபாண் பாடல் (213 -214)
என்ற வரிகள் இவ்வுண்மையை எடுத்தியம்பக் கூடியது. பரிசிலர் பாராட்டும் போது, நல்லியக்கோடன் சான்றோருடன் இருக்கும் போது அறிவுடையவனாகவும், அறியாமையோருடன் கூடி இருக்கும் போது மிக்க அறிவில்லாதவனாகவும், பரிசில் பெற வந்தவர்களின் உளமறிந்து பரிசு வழங்குவதிலும் எவ்விதப் பாகுபாடின்றி பலருக்கும் எவருக்கும் அளித்தலும், இவனது தனித் தன்மை வாய்ந்த குணங்கள் ஆகும்.
நல்லியக் கோடனின் விருந்தோம்பல்
”காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,
கா எரியூட்டிய கவர் கணைத் து¡ணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,” சிறுபாண் பாடல் (236-241)
நல்லியக்கோடனை எவரும் காணச் சென்றால் அவர்களின் மூங்கில் போன்ற ஆடையை உடுத்துவதற்குத் தருவான். பாம்பு கடித்து விஷம் ஏறும் அளவிற்குத் தரமான கள்ளினைத் தருவான். சமையல் கலையில் சிறந்த பீமன் எழுதிய சமையல் நூலினைக் கொண்டு சமைக்கப் பெற்ற அரிய வகை உணவுகளை வழங்குவான். சூரியனைப் போன்ற பொற்கிண்ணத்தில் உணவை வைத்துப் பரிமாறி, தானே அருகில் இருந்து உண்ணச் செய்வான்.
நல்லியக் கோடனின் கொடைச் சிறப்புகள்
நல்லியக்கோடனைக் காணச் செல்லும் எவரையும் காத்திருக்க வைக்காமல் விரைந்து பரிசில் வழங்கும் அருள் உள்ளம் படைத்தவன். போரில் வெற்றிபெற்று அதில் கிடைத்த பொருள்களைப் பரிசிலாகக் கொடுப்பதில் வல்லவன். படைவீரர்கள் கொண்டுவந்த அணிகலன்களைப் பாணர்களின் வறுமை நீங்கும் அளவிற்குக் கொடுத்தவன். சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த தேர்களைப் பரிசாக வழங்கிவிடுவான். குதிரைகளைப் பரிசலாகத் தருவது மட்டுமின்றி குதிரைகளை விட வேகமாகச் செல்லும் காளைகளையும், அக்காளைகளைச் செலுத்துகின்ற பாகனையும் கூடவே அனுப்பி வைப்பான். இவை மட்டுமின்றி அன்றைய பரிசில்களையும் கொடுத்து அன்றைக்கே அனுப்பி வைப்பான் முதல்நாளிலிருந்தது போலவே எல்லா நாள்களும் விருந்து உபசரிப்பதைத்
“தலைநாள் அன்ன புகலொடு வழிசிறந்து
புலநாள் நிற்பினும் பெறுகுவீர் நில்லாது” கூத்தராற்றுப்படை 565- 566
இவ்வாறு பதிவு செய்யப் பெற்றுள்ளது. இதனால் சிறுபாணாற்றுப்படையில் இரண்டு நிலைகள் தெளிவாக வெளிப்படுகின்றன:
பாணரின் நிலை நல்லியக்கோடனின் நிலை
வறுமை செல்வ வளம்
பரிசிலை எதிர்பார்த்தல் பரிசில் வழங்குதல்
வாழ்வாதாரத் தேவை கொடைத்திறன்
புரவலரை நாடுதல் இரவலரை வரவேற்றல்
துன்பம் துன்பம் போக்கும் தன்மை
வறுமையைப் போக்கும் கொடை
நல்லியக்கோடனின் கொடை பாணரின் உடனடித் தேவையை மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கையை முன்னேற்றக்கூடியதாக அமைகிறது. இதன் மூலம் செல்வத்தின் சமூகப் பயன்பாடு பற்றிய சங்ககாலச் சிந்தனை வெளிப்படுகிறது. செல்வம் தனக்காக மட்டும் சேர்த்து வைக்கப்பட வேண்டியதன்று| தன்னை நாடி வருபவர்களுக்கு வழங்குவதன் மூலமே அதன் மதிப்பு உயர்கிறது என்ற அறச்சிந்தனை இந்நூலில் வெளிப்படுகிறது.
பாணரும் புரவலரும்
பாணர்–புரவலர் உறவு சங்க இலக்கியத்தின் முக்கியமான சமூக உறவுகளில் ஒன்றாகும். பாணர் தமது கலை மூலம் புரவலனைப் புகழ்ந்தார்| புரவலன் தனது கொடையால் பாணரின் வாழ்க்கையை ஆதரித்தான். இந்த உறவு வெறும் பொருள் பரிமாற்றமாக அமையவில்லை. கலை – புகழ் – கொடை – சமூக உறவு ஆகிய நான்கு கூறுகளின் அடிப்படையில் இது அமைந்திருந்தது.
சமூக வரலாற்றுப் பார்வை
சிறுபாணாற்றுப்படையின் வழியாக சங்ககாலச் சமூகத்தில் நிலவிய சில பொருளாதாரச் சூழல்களை அறிய முடிகிறது. நிலையான வாழ்வாதாரம் இல்லாத கலைஞர்கள் புரவலர்களைச் சார்ந்திருந்தனர். அதே நேரத்தில், செல்வந்தர்களும் வள்ளல்களும் தமது செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்வது சமூக மதிப்பாகக் கருதப்பட்டது. எனவே இந்நூல் ஒரு பாணனைப் பற்றிய தனிப்பட்ட வரலாற்றை மட்டும் கூறாமல், சங்ககாலக் கலைஞர் வாழ்க்கை மற்றும் கொடைச் சமூகத்தின் வரலாற்றுப் பதிவாகவும் விளங்குகிறது.
முடிவுரை
சிறுபாணாற்றுப்படை, பாணரின் வறுமையையும் நல்லியக்கோடனின் வள்ளன்மையையும் எதிர்நிலைகளாக அமைத்து சங்ககாலச் சமூகத்தின் முக்கியமான பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்துகிறது. பாணரின் வறுமை அவர்களின் கலைத்திறன் குறைவினால் ஏற்பட்டதல்ல கலைத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த சமூகச் சூழலின் வெளிப்பாடாகும். இதற்கு மாறாக நல்லியக்கோடன், தன்னை நாடி வரும் இரவலரின் துயரைப் போக்கும் வள்ளலாகக் காட்டப்படுகிறார். அவரது கொடை, செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் உயர்ந்த மனிதநேயப் பண்பாக விளங்குகிறது. ஆகவே, “பாணரின் வறுமை – வள்ளலின் கொடை” என்ற இரு நிலைகளின் வழியாக சிறுபாணாற்றுப்படை சங்ககாலத் தமிழரின் சமூகப் பொருளாதார வாழ்க்கையையும், கலைஞர்களின் நிலையும், வள்ளன்மை சார்ந்த அறச்சிந்தனையையும் எடுத்துரைக்கும் முக்கியமான இலக்கியச் சான்றாகத் திகழ்கிறது.
அடிக்குறிப்புகள்
1.இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், சிறுபாணாற்றுப்படை, பத்துப்பாட்டு, சென்னை: உமா பதிப்பகம்,
2.நத்தத்தனார், சிறுபாணாற்றுப்படை, பாணரின் வறுமை நிலையை விளக்கும் பகுதிகள்,
3.மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை: சாகித்திய அகாதெமி,
4.சிறுபாணாற்றுப்படை, பாணரின் வாழ்க்கை மற்றும் யாழிசை தொடர்பான செய்திகள்,
5.மு. வரதராசனார், சங்க இலக்கியத்தில் பாணர் மரபு, சென்னை: பாரி நிலையம்,
6.சிறுபாணாற்றுப்படை, பாணர்–புரவலர் உறவு தொடர்பான செய்திகள்,
7.திருக்குறள் -மு.கருணாநிதி
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்.இரா.சுரேஸ்
உதவிப்பேராசிரியர்
மகேந்திரா பொறியியல் கல்லூர்
மல்லசமுத்திரம் நாமக்கல்.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

