Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home சிறுகதைகள் குடும்பச்சிறுகதைகள் லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான்

லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான்

லவ் பேர்ட்ஸ்-சிறுகதை -மு. முகமது ருக்மான்

    கொஞ்சும் குளிர் காற்று தரையில் படர்ந்தது. பறவைகள் விடியல் மகிழ்வில் ஒலி எழுப்பி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.


இரவுப்பொழுதில் ஆட்டோ ஓட்டிய களைப்பில் அல்லாபகஷ் மாமு கண் விழிக்க முடியாமல் காலை பஜர் தொழுகைக்கு எழுந்தார். மாமு எழுந்த அரவம் கேட்டு ஜெய்த்தூன் மாமியும் கண் விழித்தாள்.
 

சுபஹுத் தொழுகையை நிறைவு செய்து மாமு அஸ்ஸலாமு அலைக்கும்….. என்று கூறி வீட்டில் நுழைந்தார். ஏல நல்லா சூடா பால் காய்ச்சி எடுத்துட்டு வா! என்று மாமியிடம் சொன்னதும் மாமி இதோ கொண்டுவருகிறேன் என்று மாமு வரும் முன்பே  பால் காய்ச்ச தொடங்கியவள் ஆவி பறக்க
பால் செம்பினைக் கொடுத்தாள்.
 

ஐந்து வயது குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையை இழந்தவர் மாமு. சிறுவயதில் மதுரையில் கோரிப்பாளையத்தில்
குடியிருப்பைக் கொண்டவர். ஆதரவற்ற நிலையில் தன் உடன் பிறப்புகளான சகோதரிகளை நம்பி வாழ்க்கை நிலையை  திருச்சிக்கு நகர்த்தினார்.


மாமுக்கு சின்ன வயசுல இருந்து வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டம்.  அல்லல் பட்ட பாடு.ரிக்ஷா ஒட்டுவதிலிருந்து தியேட்டர்ல டீ காப்பி விக்கிறது வரைக்கும் எல்லா வேலையும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் நெறஞ்சமனசுசோட செய்தவர் மாமு. மாமுக்கு கோழி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். ஆடு, கோழி, வாத்து என்று ரகரகமாக  வளர்த்தார். மாமு வீட்டில் மீன் குழம்பு வைக்க வேண்டும் என்று சொன்னால் விரால் மீன், தேளி மீன் போன்றவற்றை வாங்கி வந்து ஓரிரு நாட்கள்  வளர்த்து அதை குழம்பிற்கு பயன்படுத்துவார். அப்படிப்பட்ட வகையில் இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டவர். நாச்சுவை கருதி உண்பதில் கெட்டிக்காரர்.
 

வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து கஷ்டத்தை பார்த்து வாழ்ந்த மாமு திருச்சிக்குத் திரும்பினார்.
மாமுவின் அக்கா அவள் தோழி  வீட்டிற்குச் செல்வது வழக்கம். அப்பொழுது அவர்  முதன் முதலாக  ஜெய்தூன் மாமியை ஒரு வேங்கை மரத்தடியில் கண்டதும் இருவருக்கும் காதல் வயப்பட்டது. மாமுவிற்கு வயது 16. மாமிக்கு வயது 14. இப்படிப்பட்ட பருவ காலத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.


காதலில் பல்வேறு தடைகள் வந்தபோதும் மாமு  ஒருபோதும் கைவிடுவதாக இல்லை அப்படிப்பட்ட பலமானதாக இருந்தது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல். பல சிக்கல்களுக்கு அப்பால் 50 ரூபாய் சீதனமும் ஒரு அண்டா சீரும் கொடுத்து மாமியை திருமணம் செய்து கொடுத்தார் மாமியின் தந்தை. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் மாமி. சோளம், கடலை,கம்பு,நெல், வாழை என்று பருவங்களுக்கு ஏற்ப விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவள். மாமியின் தந்தை ஏதோ ஒரு சூழலில் தன் நிலங்களை இழந்து ஏழ்மை நிலைக்கு ஆளானார். உடனே, துவரங்குறிச்சியில் இருந்தவர்கள் திருச்சியை நோக்கி குடிபெயர்ந்தனர்.


இருவரும் வேறு வேறு ஊரைச் சார்ந்துதான் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் கிருபை திருச்சியில் வைத்து இருமனதையும் ஒருமனமாக்கின்னான்.


காலப் பெருவெளி ஓட்டத்தில் மாமிக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.  தன்னுடைய அக்கா பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் நினைத்து பாதுகாத்து அரவணைத்து ஒற்றுமையுடன் வளர்த்து வந்தாள் மாமி.


ஒவ்வொரு மகன்களும் ஒவ்வொரு நிலைக்குச் சென்று வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை கடந்து வாழ்ந்து வந்தனர்.
 மாமு மிகவும் துடிப்பானவர். குடிப்பழக்கம் இல்லாத உத்தமர். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். திரையில் வெளியிடப்படும் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு அதிக ஆர்வம். ஒரு திரைப்படத்தை 10 முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பதைப் போல் அனுபவம் கொள்பவர் மாமு.


எத்தனையோ தொழில்கள் செய்து லாப நட்டங்களை அடைந்து பின் ஆட்டோ வாங்கி ஓட்டினார். தினமும் மாமிக்கும் மாமுக்கும் ஒரே அன்பு சண்டைதான் வீட்டில் நடக்கும்.
 ஒருநாள் மாமுக்கு காலை 11 மணியளவில் ஆட்டோ சவாரி வந்தது அலைபேசியில். அவரும் வெளியே கிளம்பத் தயாரானார்.


ஏ மாமு! நில்லுயா!


என்னடி!


ஏய் பால் வாங்க காசு குடுயா!


ஒரு நாளைக்கு எத்தனை தடவைடி கேட்ப?
 

உனக்குத்தான் பால் வாங்குறோம் நாங்களா குடிச்சுக் கொண்டே இருக்குறோம்!


காலையில மதியம் சாயங்காலம் நைட் என 4 நேரம் நீதான் டீ கேக்குற..
 இதுல தயிர் வேற கேட்கிற!


இந்தா ஐம்பது ரூபாய் புடி இன்னு 50 ரூபாய் கொடு!


இல்ல முடியாது 50 ரூபாய் வைத்து எல்லாத்தையும் வாங்கு!


என்று சொல்லிவிட்டு மாமு சவாரிக்கு கிளம்பினார். அன்புச் சண்டைக்குப் பஞ்சமே இல்லை வீட்டில். வீட்டிற்கு வரும் பேரப்பிள்ளைகளுக்கு ஒரே சிரிப்பு தான் இவர்களின் சண்டையைப் பார்த்து. மாமு விற்கு மொத்தம் பத்துப் பேர பிள்ளைகள். அதில் நான்காவது பெயரன் சென்னையில் புகழ் மிகு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான். மாமிக்கும் மாமுக்கும் அந்தப்பெயரன் என்றாலே தனிப் பிரியம் தான். சொல்லும் வேலைகளை தட்டாமல் முகம் சுளிக்காமல் செய்வதால் யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்.
காலங்கள் ஓட ஓட மாமாவிற்கு எழுபத்தி ஆறு வயதை நெருங்கிக் கொண்டே மூப்பருவம் அடைந்தார். இருப்பினும் மனதில் மட்டும் ஊக்கத்திற்கும் மன உறுதிக்கும் அளவே இல்லை. 76 வயதிலும் ஆட்டோ ஓட்டி தான் தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டார். காப்பாற்றினார். தன் பிள்ளைகளிடம் சென்று காசு கேட்க அவருக்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர் மாமு. ஒருநாள் காலையில் மாமு தயிர் வாங்க கடைக்குச் சென்று கொண்டிருந்தார். செப்பலை தத்தித்தத்திக் கொண்டு நடந்தார். அவ்வழியே காய்கறி வாங்க வந்த அவரின் நான்காவது பெயரன்  தன் பாட்டியாகிய ஜெய்த்தூன் மாமியிடம் 300 ரூபாய் கொடுத்து நல்ல செருப்பு மாமுவை வாங்கி   போடச்சொல்லு என்று சொல்லி விட்டு அவனும் சென்னைக்குப் புறப்பட்டான்.


15 நாட்கள் கடந்தன. ஒருநாள் திடீரென  மாமுவின் கண்கள் எல்லாம் மஞ்சள் நிறமாக மாறியது. மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தில் மாமுவிற்கு மஞ்சள் காமாலை இருப்பது உறுதியானது. நாட்டு மருந்து குடிக்கச் சென்றார். குடித்தும் பயனில்லை. எண்ணைய் தேய்த்துக் குளித்தும் பயனில்லை.  அடுத்த நாள் காலையில் திடீரென மயக்க நிலையை அடைந்து தலையை நிலத்தில் சாய்த்தார்.


“மாமு…..மாமு…. என்னாச்சு  மாமு….. மாமு… என்று மாமி அலறினாள்.


கையில் காசு இல்லாத கடுமையான சூழலில் கூட மாமுவின்  மகன்கள் தனியார் மருத்துவமனையில் வைத்து
மருத்துவம் பார்த்தனர்.


மருத்துவர்களோ இருபத்தி நான்கு மணி நேரம் கழிந்தால் தான் எங்களால் எதுவும் சொல்ல முடியும் என்று கைவிரித்து விட்டனர்.


ஆறு மணி நேரம் சென்ற பிறகு மாமாவிற்கு விழிகள் திறந்தது. இயல்புநிலை அடைந்து வார்த்தைகள் குழறியது. இருப்பினும் ஓரிரு வார்த்தைகளை தெளிவாகவே பேசினார்.


காமாலையின் முதிர்ச்சி என்பது மூளையை அடைந்தது என்பதால் அன்றிரவே மாமு இயற்கை எய்தினார். ஊர் கூடி வீடு அழுதது. எங்கு நோக்கினும் அழுகை சத்தம் தான்.


ராஜநடை கொண்டு இறுதி ஊர்வலம் திருச்சி துருப்பு  பள்ளியில் நல்லடக்கம் செய்தனர்.


மாமு மாமியை காதல் திருமணம் செய்தவர். இவர்களின் அன்பு என்பது ஒரு பரஸ்பரம் கலந்தது. மாமு இறந்த அன்று முதலாக புலம்புவதை நிறுத்தவே இல்லை மாமி.


மாமுவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை மகன்கள் சிறப்பாக செய்தனர். காலவோட்டத்தில் மாமிக்கு மாமு போனதை நினைத்து உடல் நலம் சரியில்லாமல் போனது. எந்த நேரமும் அவரின் சிந்தனைதான்.  அவரைப் பற்றியே எந்நேரமும் பேச்சு. உண்ணும் சோறு உடலில் ஒட்டவில்லை. மாமியின் பிள்ளைகள் மாமியை கவனிக்காத கவனிப்பே இல்லை. இருப்பினும் அவள் மனமும் உடைந்து. அவர் இல்லை என்பதை மனம் ஏற்கவில்லை.


மாமு இறந்த நான்கே மாதங்களில் உண்ணாது, உறங்காது அவளும் இயற்கை  மரணம் அடைந்தாள்.மாமுவின் குடும்பத்தினர் மனதால் அடையாத துக்கமே இல்லை. ஒரு இழப்பு இருந்த இடத்தில் இரு இழப்பானது.  மாமி  இறந்தப் பின்பு அவளின் கண்கள் மட்டும் மூடாமல் இருந்தது. இமைகள் திறந்து கொண்டே இருந்தது. யாரைக் காணவேண்டும் ஆசை இருந்தது என்று யாராலுமே அறிய முடியவில்லை. மாமிக்கு எப்போதுமே குடும்பத்தில் பிடிவாதம் அதிகம். தன் எந்த ஒரு குழந்தையும் விட்டுத் தரமாட்டாள். தன்னுடைய வீட்டில் மீன் குழம்பு,கறி குழம்பு என்று ஏதேனும் ஒன்று செய்தாலும் கூட நான்கு பிள்ளைகளுக்கும் பங்கு போட்டு அனுப்பிவிடுவாள். இப்படிப்பட்ட பிள்ளை அன்பு கொண்டவள் இந்த மாமி.


மருமகள்மார்களை மகள் போல் அனுசரிக்கும் அன்பு கொண்டவள். இதைப் பார்த்து பொறாமைப்படும் பெண்களோ அத்தெருவில் ஏராளம். குடும்ப உறவுகளை நேசிக்கும் தன்மை கொண்ட மாமியும் மாமாவும் இனி உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்சில் கைகோர்ப்பார்கள்.


காலகட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மறுமை நாள் நெருங்கி கொண்டே இருக்கின்றது. அர்ஷின் நிழலைத் தேடி……

சிறுகதையின் ஆசிரியர்

திரு.  மு. முகமது ருக்மான்,


உதவிப்பேராசிரியர்,


முதுகலைத்தமிழ் & ஆய்வுத்துறை,


புதுக்கல்லூரி (தன்னாட்சி ),
சென்னை – 14.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »